உபதேசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 21, 2023
பார்வையிட்டோர்: 1,405 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நேற்று மாலதி நாட்டிலிருந்து திரும்பியிருப்பாள். அவளிடம் நாட்டுப் புதினங்களைக் கேட்க வேண்டும். மனசு அவாப்பட்டது. நேற்றே தொலைபேசியில் அழைத்திருக்கலாம். பயண அலுப்புகளின் மத்தியில் என் தொல்லை வேறு அவளுக்கு வேண்டாம், என்று நினைத்துப் பொறுமை காத்தேன்.

என்னை விடப் பத்து வருடங்கள் இளையவளானாலும் நட்போடு பழகக் கூடியவள். நான் எனது சிறு குழந்தைகளுடன் ஜேர்மனிய வாழ்க்கையை ஆரம்பித்த சில காலப் பொழுதுக்குள், ஒரு நாள் ஸ்ருட்கார்ட் புகையிரத நிலையத்தில் அவளை முதல் முதலாகச் சந்தித்தேன். அப்போதுதான் திருமணமாகி அவளும், அவள் கணவனும் கல்யாணக்களை கலையாத புத்தம் புதுத் தம்பதிகளாய் தெரிந்தார்கள்.

அவளது பேச்சும், அவளிடம் இருந்த நாட்டுப் பற்றும், முதற் சந்திப்பிலேயே என்னுள் அவள்பால் ஓர் பிடிமானத்தை ஏற்படுத்தி விட்டது. தொடர்ந்த ஓரிரு முறைகளிலான சந்திப்பில் வயது வித்தியாசம் பாராது நாங்கள் நட்பாகி விட்டோம்.

தமிழ்ப் பெண்களைக் காணுவதே அரிதான அந்தக் காலகட்டத்தில், அவள் எனக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகவே தெரிந்தாள். அதனால் தூரம் என்றும் பார்க்காமல் மாதம் ஒரு முறையாவது பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு, ரெயின் ஏறி அவளைச் சந்தித்து வருவேன்.

எனது பிள்ளைகளுடன் அவள் பேசும் விதமே எனக்கு மகிழ்வூட்டுவதாக இருக்கும். உறவுகள் என்று சொல்லிக் கொள்ள ஒருவரும் இல்லாத அந்நிய தேசத்தில், அவள் ஒரு மாமியாய், சித்தியாய்.. நின்று என் பிள்ளைகளுக்குப் புத்திமதிகள் சொல்லும் போது ஒரு நெருக்கமான உறவு கிடைத்து விட்டதான உணர்வில் மனம் நிறைவேன்.

எனது மகனுக்கு அவளை நன்கு பிடிக்கும். “மாலதி அக்கா! மாலதி அக்கா!” என்று அன்போடு பழகுவான். அவளும் அவனோடு அன்பாகப் பழகுவாள். எப்போதும் நாட்டைப் பற்றியே பேசுவாள். “நாங்கள் எல்லாரும் எப்பிடியாவது நாட்டுக்குப் போயிடோணும்” என்பாள். ஏதாவது அந்தரம், அவசரம் என்று வந்தால் கூட நம்பி அவளிடந்தான் எனது பிள்ளைகளை விட்டுச் செல்வேன்.

என்னோடு பேசும் போதெல்லாம் “அக்கா, எனக்குப் பிள்ளையள் பிறந்தால், ஒரு பத்துப், பன்னிரண்டு வயசுக்கு மேலை அதுகளை இந்த நாட்டிலை வைச்சிருக்க மாட்டன். எப்பிடியாவது எங்கடை நாட்டுக்குக் கூட்டிக் கொண்டு போடுவன். இங்கை இருந்தால் பிள்ளையள் கெட்டுப் போடுங்கள். நீங்களும் உங்கடை பிள்ளையளை பிறந்தநாள் விழா, அது இதெண்டு சொல்லி ஜேர்மன் பிள்ளையளின்ரை வீடுகளுக்கோ அல்லது வேறை ஜேர்மன் களியாட்டங்களுக்கோ விட்டிடாதைங்கோ” என்பாள்.

எனது பிள்ளைகள் வளர்ந்து கொண்டு வரும் போது அவள் சொன்னது போல வளர்ப்பது என்பது கடினமான காரியமாகவே இருந்தது. வகுப்புப் பிள்ளைகளின் பிறந்தநாள் விழாக்களுக்கோ, அல்லது எமது நகரில் நடைபெறும் களியாட்டங்களுக்கோ என் பிள்ளைகள் செல்வதை என்னால் தடுக்க முடியவில்லை. பத்துப் பன்னிரண்டு வயது வந்ததும், அவர்களது படிப்பைக் குழப்பிக் கொண்டு, ஒரு சுமூக நிலைக்கு வராத எனது நாட்டுக்கு ஓடவும் முடியவில்லை.

அதன் பின்னான பொழுதுகளில் மாலதி என்னை அடிக்கடி கண்டித்தாள். “நீங்களக்கா, பிள்ளையளுக்கு அளவுக்கு மிஞ்சி இடம் குடுக்கிறிங்கள். இப்ப இந்த வயசிலை இப்பிடி ஜேர்மன் பிள்ளையளின்ரை வீடுகளுக்கு விட்டிங்கள் எண்டால், நாளைக்கு 14, 15 வயசு வரக்கை டிஸ்கோவுக்கும் விட வேண்டி வரும்” என்பாள்.

ஒரு தரம் எனது மூத்தவன் சினிமாப் பாடல் ஒன்றை மிகவும் ரசித்துக் கேட்ட போது, அவள் அவளது கணவனோடு சேர்ந்து “பாருங்கோ அக்கா… இவன் கேட்கிற பாட்டை! இவனக்கா மெதுமெதுவா நாட்டை மறக்கிறான். எல்லாம் நீங்கள் குடுக்கிற இடந்தான்..” எனக் கடிந்தாள்.

இன்னொரு தரம், மைக்கல் ஜக்சனின் பாட்டு ஒன்று தொலைக்காட்சியில் போன போது, தொலைக்காட்சியின் சத்தத்தையும் கூட்டி விட்டு, உடம்பை நெளித்து நெளித்து ஒரு ரசனையுடன் அவன் ஆடிய போது, அவள் போட்ட கூச்சலில் நானே ஆடிப் போய் விட்டேன்.

அவளது இந்த உபதேசங்கள் எமக்கிடையேயான நட்புக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காத போதும், அவள் சொல்வது போல என்னால் என் பிள்ளைகளை வளர்க்க முடியவில்லை என்பதால் அவளிடம் அடிக்கடி செல்வதை நான் தவிர்த்துக் கொண்டேன்.

இந்த இடையில் அவளுக்கும் ஒவ்வொன்றாக மூன்று குழந்தைகள் பிறந்து விட்டார்கள். அந்த சந்தோசங்களில் கலந்தும், அடிக்கடி தொலைபேசியில் கதைத்தும் எங்களுக்குள்ளான உறவைத் தொலைத்து விடாது காத்து வந்தேன்.

ஆனாலும் காலப் போக்கில் ஐரோப்பிய அவசரங்களுக்குள் தொலைபேசும் இடைவெளிகள் கூட நீண்டு கொண்டே போயின. அவளது பிள்ளைகளும் வளர்ந்து கொண்டிருக்கும் போது அவளுக்கான அவளுடைய நேரங்களும் குறுகிப் போயின. நேரடிச் சந்திப்புகள் மிகவும் அரிதாக, இப்படித்தான் ஏதாவதொரு விடயம் சாட்டாக வரும் போது தொலைபேசிக் கொண்டோம்.

இப்போது அவள் நாட்டுக்குப் போய் வந்தது சாட்டாகி விட்டது. அழைத்தேன். தொலைபேசியின் சில தரச் சிணுங்கல்களுக்குப் பின்பே இணைப்பில் வந்தாள். கொஞ்சம் களைப்பாக இருந்தாள். பயண அலுப்பு இன்னும் தீரவில்லை என்பது தெரிந்தது. பின்னணியில் “சுற்றிச் சுற்றி வந்தீக…” படையப்பா படப் பாட்டு சத்தமாகக் கேட்டது.

“கொஞ்சம் சத்தத்தைக் குறை” என்று திரும்பிக் கத்தி விட்டு, “இவன் சஞ்சுதன் அக்கா, படையப்பா பாட்டுப் போடாமல் சாப்பிட மாட்டான். ஒரு நாளைக்கு மூண்டு தரத்துக்;குக் குறையாமல் எங்கடை வீட்டை படையப்பா ஓடுது.” சலிப்படைந்த பாவனையுடன் பேசினாலும் அதைச் சொல்லும் போது ஏதோ ஒரு பெருமிதம் அவள் குரலில் ஒலித்தது.

“எப்பிடி நாடு இருக்கு?” நான்தான் ஆவலோடு கேட்டேன்.

“சா.. அதையேன் கேட்கிறிங்கள் அக்கா? ஒரே இலையான்.. வெய்யில்.. சீ.. எண்டு போச்சுது.”

தொடர்ந்து நிறையவே கதைத்தோம்.

“இனி எப்ப நாட்டுப் பக்கம் போற ஐடியா?”

“நாட்டுக்கோ..! இதுதான் கடைசியும் முதலும். இந்தப் பிள்ளையளாலை அதைத் தாங்கேலாது. பாவம் பிள்ளையள். அந்த வெய்யிலும்.. இலையானும்.. காய்ஞ்சு போய்க் கிடக்கு எல்லாம். இதுக்குள்ளை நுளம்பு வேறை. இதுகளுக்கு அந்த நாடு ஒத்து வராது. இனி அந்தப் பக்கமே போறேல்லை எண்டு தீர்மானிச்சிட்டன்.” பேசுவது மாலதிதானா? மனசு வினாவியது. அதற்கு மேல் எனக்குப் பேச்சே வரவில்லை.

– 4.11.2004, மனஓசை, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2007, @சந்திரவதனா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *