என் வயிற்றில் ஓர் எலி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 12,264 
 

பினாங்கில் அன்று கொஞ்சம் பிசு பிசுவென்று மழை தூறியவாறிருந்தது. நல்ல வேளை காரில் குடை இருக்கிறது. மல்லியை மழலைப் பள்ளியில் இறக்கிவிடும் போது நனையாமல் கொண்டு விட வேண்டும். மல்லி, என் மகன் வழிப் பேத்தி. பெற்றோர் இருவரும் காலை முதல் மாலை வரை முழு நேர வேலையில் இருப்பதால் அவளைக் குழந்தைகள் பள்ளியில் கொண்டு விடுவதும் திரும்பக் கொண்டு வருவதும் என் கடமைகள். காரை மெதுவாகத்தான் ஓட்டிப் போனேன். மல்லி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அந்த மௌனத்தைக் கலைக்க நானும் விரும்பவில்லை. குழந்தையோடு பேசிக் கொண்டே போவது தனி இன்பம்தான். ஆனால் வழக்கமாக இப்படிப்போகும் போது மல்லியின் வாயை நானும் கிளறுவதுண்டு.

“இன்னைக்கு எந்த பிரண்டோட சண்டை, மல்லி?”

“நான் சண்டை போட மாட்டேன் தாத்தா!”
“நேத்து அமீர் முடியப் பிடிச்சி இழுத்தீங்களாமே! அடிச்சிங்களாமே!”
“அவன்தான் முதல்ல என் முடியப் பிடிச்சி இழுத்தான்!”
“அப்ப டீச்சர்கிட்ட இல்ல சொல்லணும்! நீங்க எப்படி அடிக்கலாம்?”

“டீச்சர் அவன அடிக்க மாட்டாங்க! சும்மா ஏசுவாங்க!”
“அதனால?”

“அப்படி ரெண்டு போட்டாத்தான் சும்மா இருப்பான்!”
இப்படியாக ஏதாவது பேசியபடிதான் போவோம். ஆனால் மல்லியின் இன்றைய ஆழ்ந்த சிந்தனை நிஷ்டையைக் கலைக்க விரும்பவில்லை. மழையும் மேக மூட்டமும் வைப்பரின் மனோவசியப் படுத்தும் டக் டக் ஆட்டமும் எனக்கும் மௌனத்தோடு ரசிக்கத் தக்கவையாகத்தான் இருந்தன.
திடீரென மௌனம் கலைந்து மல்லி பேசினாள்: “என் வயித்திலியும் ஒரு எலி இருக்கு தாத்தா!”
“என்ன சொன்னிங்க மல்லி? வயித்தில எலியா?”

“ஆமா எலி. அதுக்கு தினசரி தீனி போடணும். இல்லன்னா வயித்தக் கடிக்கும்!”
இந்தத் தகவல் எனக்குப் புதிதாக இருந்தது. எங்கிருந்து இந்த “எலி” உருவகம் மல்லிக்குக் கிடைத்தது?

“எங்கேயாவது புஸ்தகத்தில கத படிச்சியாம்மா?” என்று கேட்டேன்.

“கத இல்ல தாத்தா! நெசமா ஒரு எலி இருக்கு! அதுக்கு தினசரி சாப்பாடு போடலன்னா வயித்தக் கடிக்கும்!”
ஒன்றும் விளங்கவில்லை. நான்கு வயதுக் குழந்தைக்குத்தான் எத்தனை கற்பனை? அதைப்பற்றி என்னைப் போன்ற கிழவர்களுக்கு என்ன தெரியும்? என் குழந்தைப் பருவ நினைவுகள், கற்பனைகள் எல்லாம் என்றோ துடைத்துப் போட்டது போல மறந்தாகி விட்டது. இப்போதெல்லாம் மத்தியானம் சாப்பிட்ட சாப்பாடு இரவில் நினைவுக்கு வருவதில்லை.

தனக்கு இஷ்டமான குழந்தைப் பருவத்தின் கற்பனையில் மல்லி குதூகலிக்கட்டும் என விட்டு விட்டேன். குழந்தையைப் பத்திரமாக பள்ளியில் இறக்கிவிட்டு வந்தேன்.

*** *** ***
மத்தியானம் மல்லியை மழலைப் பள்ளியிலிருந்து திரும்ப அழைத்து வரச் சென்றிருந்தேன். இன்னும் சில பிள்ளைகளோடு வெளியிலிருந்த பெஞ்சில் வீட்டுக்குச் செல்லத் தயாராக உட்கார்ந்திருந்தாள். காரிலிருந்து இறங்கி அதைக் கைப்பிடித்து அழைத்து வர உள்ளே போனேன். உடனிருந்த பிள்ளைகள் என்னைக் கண்டதும் “அங்கிள்! மல்லி ஹேஸ் அ மௌஸ் இன் ஹெர் ஸ்டமாக்” எனச் சேர்ந்து கத்தினார்கள். மல்லி அதை ஒன்றையும் பொருட்படுத்தாமல் எழுந்து என்னிடம் வந்தாள்.

உள்ளேயிருந்து ஆசிரியை ச்சே அமீனா எழுந்து வந்தார். “ஆமாம் அங்கிள்! இன்றைக்குப் பூராவும் எலிக் கதைதான். தன் வயிற்றில் மட்டுமல்ல, எல்லார் வயிற்றிலும் எலி இருக்கிறதென்று எல்லாக் குழந்தைகளிடமும் ஆர்ப்பாட்டம் பண்ணிவிட்டது” என்றார். தொடர்ந்து “நீங்கள் ஏதாவது எலிக்கதை சொன்னீர்களா?” என்றும் கேட்டார்.

“இல்லை ச்சே அமீனா! காலையில் மல்லிதான் என்னிடம் எலிக்கதை சொன்னாள். எப்படி இந்த எலியைப் பிடித்தாளோ, தெரியவில்லை!” என்றேன்.

“சில குழந்தைகளுக்குக் கற்பனை அதிகம்!” என்றார் ச்சே அமினா.
“அப்படித்தான் இருக்க வேண்டும்!” என்று அரைமனதோடு சொல்லிவிட்டு மல்லியைக் கைப்பிடித்து அழைத்துக் காருக்கு வந்தேன்.
“மல்லி ஹேஸ் அ மௌஸ் இன் ஹெர் ஸ்டமாக்” என்ற கோரஸ் பாட்டை பிள்ளைகள் பாடியவாறு இருந்தனர்.
காரில் ஏறி ஓட்டும்போது எனக்குக் கொஞ்சம் கவலை பற்றிக் கொண்டது. திருப்பி மல்லியைப் பார்த்தேன். அவள் பின்சீட்டில் உட்கார்ந்தவாறு சீட்பெல்டைப் போட்டுக் கொண்டு வெளியே வேடிக்கை பார்த்தவாறு இருந்தாள்.
இப்போது மழையும் இல்லை. வெயில் காயும் இந்த பிரகாசமான பகலில் மல்லியின் மௌனம் என்னைத் தொந்திரவு படுத்தியது.
“இன்னைக்குப் பள்ளிக்கூடம் எப்படி மல்லி?” என்று ஆரம்பித்தேன்.

“குட்” என்று சுருக்கமாகச் சொன்னாள்.
“ஏன் உன் ஃபிரண்ட்ஸ் எல்லாம் எலி பத்திப் பேசறாங்க?” என்று கேட்டேன். பதில் இல்லை.

“சொல்லம்மா? என்ன அது எலிக்கதை?” என்று உசுப்பினேன்.

“அவங்களுக்கெல்லாம் ஒன்ணும் தெரியாது தாத்தா! ரொம்ப ஸ்டுபிட்!”
“என்ன தெரியாது?”

“அதான் தாத்தா! உங்க வயித்தில இருக்கில்ல, ஒரு எலி. அந்த எலிதான் எல்லார் வயித்திலியும் இருக்குது”.

என் வயிற்றிலும் எலியா? எனக்கு மேலும் என்ன கேட்பது என்றுதெரியவில்லை. மேலும் விவரம் கேட்டால் குழந்தையின் எலி உருவகம் மேலும் வலுப்பட்டு விரிவடைந்து உறுதியடைந்து விடும் என்ற பயம் வந்துவிட்டது. மீதியிருந்த தூரம் கொஞ்சம் மனம் கலவரப்பட்டவாறு அமைதியாகக் காரை ஓட்டினேன்.

*** *** ***
எங்கள் அப்பார்ட்மெண்ட் சென்றடைந்து உடம்பு துடைத்து உடை மாற்றிச் சாப்பாட்டுக்கு உட்காரும் வரை மல்லி எலி பேச்சை எடுக்கவில்லை. “கறுப்பு ஆடே கறுப்பு ஆடே, கம்பளி நூல் வச்சிருக்கியா?” என்று பாடியவாறு இருந்தாள். பின்னர் அண்மையில் வாங்கிய வர்ணம் தீட்டும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வர்ணம் தீட்ட ஆரம்பித்தாள். பென் டென் என்னும் பத்து வயதுப் பையன் பல அமானுஷ்ய அவதாரங்கள் எடுத்து உலகத்தவரை வேற்றுக் கிரக கொடிய பிராணிகளிடமிருந்து காக்கும் டிவி சீரியலிலிருந்து உற்பத்தியான புத்தகம் அது. இங்கே பென் டென் நான்கு கைகளுடன் ஒரு கோர உருவம் பெற்றிருந்தான். ஒரு வேற்றுக் கிரகப் பிராணியை துவம்சம் செய்து கொண்டிருந்தான். எனக்குப் பார்க்க நம்முடைய நரசிங்க அவதாரத்தைக் காப்பியடித்தது போல இருந்தது.

பணிப்பெண் ஹயாத்தி ஊட்டிய சாப்பாட்டைச் சாப்பிட்டவாறு மல்லி தன் விருப்பம் போல வர்ணம் பூசிக் கொண்டிருந்தாள். கொடிய நான்கு கை மனிதன் பச்சை நிறம் பூசிக் கொண்டிருந்தான். வேற்றுக் கிரக பிராணிக்கு பழுப்பு நிறம். இதன் நியதிகள் பற்றியெல்லாம் மல்லியிடம் விவாதம் செய்ய முடியாது. “அது அப்படித்தான் தாத்தா! அப்படி இருந்தாதான் நல்லா இருக்கும்!” என என் வாயை அடைத்து விடுவாள்.
எப்படியும் மல்லி எலியை மறந்திருந்தது ஆறுதலாக இருந்தது. நான் அன்றைய பத்திரிக்கையை விரித்து வைத்துப் படிக்க ஆரம்பித்தேன்.
மல்லி திடீரெனக் கேட்டாள்: “தாத்தா உங்க எலி கடிச்சா உங்களுக்கு வயிறு வலிக்குமா இல்லையா?”

என் அமைதி பறி போனது. குழந்தைக்கு வயிற்றில் ஏதும் கோளாறாக இருக்கலாமோ என்னும் சந்தேகம் வந்தது.
“ஏன் மல்லி, உங்களுக்கு வயிறு வலிக்குதா?” என்று கேட்டேன்.

“இப்ப வலிக்கில! ஆனா சில சமயம் எலிக்கு ரொம்பப் பசியா இருந்தா ரொம்பக் கடிச்சா வலிக்கும்!”
என் மனக் கலவரம் அதிகமாயிற்று. மல்லி மீண்டும் மௌனமாகி தன் வர்ணம் தீட்டுதலைத் தொடர்ந்தாள்.
சாப்பாடு முடிந்து மல்லியைத் தூங்கப் போட்டாயிற்று. தூங்கும் முன் என்னிடம் “தாத்தா, எனக்கு இன்னைக்கு பென் டென் கதை சொல்லுங்க!” என்று கேட்டாள்.

“வேணாம் மல்லிக் கண்ணு! பென் டென்தான் ஒவ்வொரு நாளும் டிவில பாக்கிறிங்களே! அது போதும். தாத்தா உங்களுக்கு ஹனுமான் கத சொல்றேன்!” என்று ஹனுமான் கதையை முடிந்த அளவு நாடகம் போல் நடித்துக் காட்டினேன். வாலி வதையை அடைவதற்குள் குழந்தைக்குக் கண் கிறங்கிப் போயிற்று. குழந்தைக்குப் போத்தி விட்டு என் அறைக்கு வந்தேன்.

இந்த எலி உருவகம் ஏதோ குறியீடுகள் நிறைந்த பின்நவீனத்துவச் சிறுகதை போல என்னைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. மாதவனுக்குப் போன் செய்து கேட்கவேண்டும் என முடிவு செய்து கொண்டேன். டாக்டர் மாதவன் என் இளமைக்கால நண்பர். குழந்தை மருத்துவர். மல்லிக்கு எந்த உடற்குறை என்றாலும் அவரிடம்தான் கொண்டு செல்லுவோம். அன்பானவர். நிறைய நகைச்சுவை உணர்வுள்ள மனிதர். சொந்தமாக கிளினிக் வைத்து நடத்துகிறார்.
அவருடைய வரவேற்பாளரான கேதரீன் டானுக்குப் போன் செய்து அவர் ஓய்வாயிருக்கும் போது என்னைக் கூப்பிடச் சொன்னேன். ஒரு பதினைந்து நிமிடத்தில் மாதவன் கூப்பிட்டார்.
“என்ன விஷயம்பா? நீ இப்படியெல்லாம் வேள கெட்ட வேளையில கூப்பிடமாட்டியே!” என்றார்.

“மன்னிச்சிக்கோ மாதவன். கூப்பிட வேண்டிய கட்டாயம். பிசியா இருக்கியா?”

“என்னைக்கு பிசி இல்ல சொல்லு? குழந்தைகளுக்கான நோய் பெருகிக்கிட்டே போகுது. பெற்றோர்களுக்கு வருமானம் அதிகமாக அதிகமாக அவங்களே பல நோய்களைச் சொந்தமா கண்டுபிடிக்கிறாங்க. குழந்தை கொட்டாவி விட்டா கூட “என்னென்ன்னு பாருங்க டாக்டர்”னு வந்திர்ராங்க!”

“ஒங்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்!”
“ஓ யெஸ்! தெரியுமே!” என்றார் மாதவன்.
“தெரியுமா? எப்படி?”

“ஒனக்கு வயசு எழுபதாகப் போகுது! இரண்டாம் குழந்தைப் பருவம் வந்தாச்சு! அப்ப இனி உனக்கு குழந்தை டாக்டர்தானே வேணும்!” ஹா, ஹா எனச் சிரித்தார்.

“இல்ல மாதவன்! மல்லியப்பத்திதான்!”
“ஓகே. சொல்லு”
கொஞ்சம் தயங்கினேன். ‘இதுக்கா போன் பண்ணின? யூ சில்லி டோப்’ என்றும் அவர் என்னைக் கேலி செய்யக்கூடும். ஆனால் தொடங்கியாயிற்று. தொடரத்தான் வேண்டும்.

“இன்னைக்குக் காலையில இருந்து மல்லி தன்னோட வயித்தில ஒரு எலி இருக்குன்னு ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டே இருக்கு. வீட்டில மட்டும் இல்ல. பள்ளிக்கூடத்திலியும். எனக்குக் கொஞ்சம் கவலையா இருக்குப்பா!”
“வயித்த வலிக்குதாமா? காய்ச்சல் இருக்கா? அழுவுதா? சோகமா இருக்கா?”

“இல்ல. அதெல்லாம் ஒண்ணுமில்ல! நல்லாத்தான் இருக்கு! ஏதோ ஒரு ஜோக் மாதிரிதான் சொல்லுது!”
“அவ்வளவுதான! நீ ஏதாகிலும் எலிக்கறி குடுத்தியா?” ஹா ஹா என்று சிரித்தார்.

“சீச்சீ! எனக்குக் கவலையா இருக்குப்பா! நீ ஜோக் பண்ணாதே!” என்றேன்.
“இதோ பார்! இது ஒரு சிறுபிள்ளையோட கற்பனையாத்தான் இருக்கும். பெரிசு படுத்தாத! ரெண்டு நாள் பொறுத்துப் பார். அப்படியே தொடர்ந்து பேசினா கிளினிக்குக் கொண்டு வா. ஒரு பெரிய எலியப் பிடிச்சிக் காட்டி பயமுறுத்திக் குணப் படுத்திடலாம்!” ஹா ஹா என்று சிரித்தார்.
“சரி. ரொம்ப தேங்க்ஸ்” என்றேன்.
“கெல்வினுக்கு புலி; மல்லிக்கு எலி. அவ்வளவுதான். வீட்டில ‘கெல்வின் அண்ட் ஹோப்ஸ்’ புத்தகம் இருக்குமே! உன் மகன் அதுக்குப் பெரிய ரசிகனாச்சே! எடுத்துப் பார். உன் கவலையில பாதி தீர்ந்திடும்!” போனை வைத்து விட்டார்.

‘கெல்வின் அண்ட் ஹோப்ஸ்’. ஆமாம். எனக்கும் தெரியும். கார்ட்டூன் புத்தகம். கெல்வினுக்கும் நான்கு ஐந்து வயதுதான் இருக்கும். ஆனால் தான் பெரிய தத்துவவாதி என்று நினைப்பு. அவனுக்கு ஹோப்ஸ் என்ற ஒரு புலி பொம்மை உண்டு. அதை உண்மைப் புலியாக ஒரு சகாவாகக் கருதி எந்த நாளும் அதனுடனேயே பேசிக் கொண்டிருப்பான். அந்த உரையாடல்களிலேயே நகைச்சுவை மிளிரும். கெல்வினின் பெரிய பெரிய தத்துவங்களையெல்லாம் வேடிக்கையாக்கிச் சிறுமைப்படுத்துவது ஹோப்ஸின் வேலை.

போய் மகனின் நூலகத்தில் தேடி ஒரு புத்தகத்தை உருவி வந்தேன்.
பக்கம் பக்கமாக சதுரங்களில் கெல்வினின் தத்துவங்களும் அதற்கு ஹோப்ஸ் சொல்கின்ற நையாண்டி பதில்களும் விரிந்தன.
முதல் சதுரத்தில் கெல்வினும் ஹோப்ஸும் நடசத்திரங்கள் நிறைந்த இரவு ஆகாயத்தை பார்க்க வெளியே வருகிறார்கள். நிமிர்ந்து பார்க்கிறார்கள். கெல்வின் ஹோப்ஸுக்குக் காட்டுகிறான்: “அங்கே பார் வீனஸ். அப்புறம் மார்ஸ். அதோ ஜூபிட்டர்”. அடுத்த சதுரத்தில் கெல்வினின் முகம் தொங்கியிருக்கிறது. “நான்தான் இங்கே வந்து மாட்டிக் கொண்டேன்!” ஹோப்ஸ் பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்த சதுரங்களில் கெல்வின் தொடர்கிறான்: “இப்படி ஒரு தெளிவான இரவில்தான் இந்த அண்டம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பது தெரிகிறது”
“ஆதி மனிதன் இதையெல்லாம் பார்த்து என்ன நினைத்திருப்பான்?”

“தான் இந்தப் பேரண்டத்தில் சிறு தூசு என உணர்ந்திருப்பான். ஆனால் கிரகங்கள் பற்றியோ நட்சத்திரங்கள் பற்றியோ எரிநட்சத்திரம் பற்றியோ அவனுக்கு ஒன்றுமே புரிந்திருக்காது!”
“நினைத்துப் பார் ஹோப்ஸ். இந்த இரவு வேளை எவ்வளவு பெரியதாகவும் மர்மமானதாகவும் அவனுக்குத் தோன்றியிருக்கும்? அவன் அதிர்ந்து பயந்து போயிருப்பான், இல்லையா ஹோப்ஸ்?”

அடுத்த சதுரத்தில் ஹோப்ஸைக் காணவில்லை. “ஹோப்ஸ்! ஹோப்ஸ்!”
கெல்வினுக்கு இருட்டில் தனியாக நிற்கும் பயம் வந்து நடுங்கி நிற்கிறான். ஹோப்ஸ் இருட்டில் ஒளிந்திருந்து அவன் மேல் பாய்கிறது. “ஆஆஆ” என்று அலறுகிறான் ஹோப்ஸ். ‘வும்ப்’ என்று இருவரும் விழுகிறார்கள்.

ஹோப்ஸ் சிரித்துக் கொண்டே கூறுகிறது: “இப்படித்தான் ஆதிமனிதனுக்கு இருந்திருக்கும்! ஒரு கூர்ப்பல் உடைய புலிக்கு இரையாவது போல!”
கெல்வின் எரிச்சலுடன் கூறுகிறான். “இன்றையிலிருந்து இரவில் நான் பாட்டுக்கு வீட்டுக்குள்ளே இருந்து டிவி பார்க்கப் போகிறேன்!”
சிரித்துக் கொண்டே அடுத்த பக்கம் புரட்டினேன். மனசு லேசானது போல இருந்தது. இருந்தும் மல்லியின் மூளையில் எல்லாம் சரியாக இருக்கிறது என்ற நிம்மதி தோன்றவில்லை.
*** *** ***
மாலையில் மல்லியின் தாய் – என் மருமகள் – வீடு வந்தார். மல்லியைக் கொஞ்சிவிட்டுப் போய் உடை மாற்றிவரும் வரை காத்திருந்தேன். ஒரு தேநீர்க் கோப்பையோடு டிவி முன் அமர்ந்ததும் மெதுவாக ஆரம்பித்தேன். பெற்றோர்களுக்குக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும் அல்லவா?

“ஏம்மா, மல்லி இன்னிக்கு முழுக்கவும் கொஞ்சம் வேடிக்கையா பேசுது!”

நிமிர்ந்து பார்த்தார். “வேடிக்காயாவா? எப்படி மாமா?”

“இன்னிக்கு முழுக்க என் வயித்தில ஒரு எலி இருக்கு, எலி இருக்குன்னு சொல்லிக்கிடே இருக்கு! அது வயித்துல மட்டும் இல்ல! எல்லார் வயித்திலியும் எலி இருக்காம். பள்ளிகூடத்திலியும் அதுதான் பேச்சு. எனக்குக் கொஞ்சம் கவலையா இருக்கும்மா!” என்றேன்.

என் மருமகள் பளீரென்று வாய் விட்டுச் சிரித்தார். ஏன் மற்றவர்களுக்கு என் கவலை தோன்றுவதில்லை? ஏன் இது அவர்களுக்கு வேடிக்கையாகத் தெரிகிறது?

மகள் சொன்னார். “அது ஒன்ணும் இல்ல மாமா! நேத்து ராத்திரி நீங்க உங்க டயாபெட்டிஸ் மாத்திரை சாப்பிட்டத மல்லி பாத்திருக்கு. எங்கிட்ட வந்து ‘ஏன் தாத்தா ரூமுக்குள்ள இருந்து மூஞ்சத் தூக்கி வச்சி என்னமோ வாய்க்குள்ள போட்றாங்க’ன்னு கேட்டிச்சி! நாந்தான் தாத்தா வயித்தில ஒரு எலி இருக்கு! அதுக்குத் தீனி போட்றாருன்னு சொல்லி வச்சேன்!” என்றார்.

“ஏம்மா குழந்த கிட்ட அப்படிப் பொய் சொன்ன? என்று கேட்டேன்.

“மாத்திரைன்னா ஏன்னு கேக்கும். அப்புறம் சீக்குன்னா என்ன சீக்குன்னு கேக்கும். நாலு வயசு குழந்தைக் கிட்ட டயாபிட்டீஸ் நோயை விளக்க முடியுமா? அதுதான் ஒரு குறுக்கு வழியா அப்படிச் சொன்னேன்!”

நிம்மதியாகப் பெருமூச்சு விட்டேன். சிரிப்பில் கலந்து கொண்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *