அமெரிக்காவிலிருந்து ஒரு பேராசிரியர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 8, 2023
பார்வையிட்டோர்: 1,717 
 
 

டில்லியில் மத்திய அரசாங்க உதவிக் காரியதரிசியாக உத்தியோகம் பார்க்கும் தன் மைத்துனன் கே.கிருஷ்ணமூர்த்தி என்னும் கே.கே.மூர்த்தியிடமிருந்து அன்று பகல் வேளையில் இரண்டாவது டெலிவரியில் கிடைத்த கடிதத்தை மற்ற எல்லாக் கடிதங்களையும் பிரித்துப் படித்த பின் கடைசியாகத்தான் பிரித்தார் கைலாசநாதன் காரணம்? பரஸ்பரம் க்ஷேம லாப விசாரணையைத் தவிர அதில் வேறு எதுவும் முக்கிய சமாசாரம் இராது என்ற அனுமானம்தான்.

அன்று வந்திருந்த கடிதத்தைப் பொறுத்த வரை அவருடைய அனுமானம் பொய்யாய்ப் போய் விட்டது. மைத்துனன் மூர்த்தி தன் பொறுப்பில் டில்லியிலிருந்து கிராமத்துக்கு அனுப்பி வைக்கப் போகிற ஒரு முக்கியமான விருந்தாளியைப் பற்றி கடிதத்தில் எழுதியிருந்தான்.

“நான் அமெரிக்கா போயிருந்த போது எனக்கு மிகவும் உதவியாயிருந்தவரும், ஆந்த்ரபாலஜிப் பேராசிரியருமான மிஸ்டர் ஜான்ஸன் தன் மனைவியுடன் இப்போது இந்நாட்டில் மூன்று மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்திருக்கிறார். தென்னிந்திய கிராம வாழ்க்கையை ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதப் போகிறார் அவர். கிராமத்தின் பழமையான வழக்கங்கள், பண்டிகைகள், ஆடல் பாடல்கள், மக்கள் இயல்பு எல்லாம் அவருக்குத் தெரிய வேண்டும். ‘உங்களுக்குத் தெரிந்த கிராமம் ஒன்றை எனக்குச் சொல்லுங்கள்’ என்று என்னைக் கேட்டார் அவர். நீங்கள் வேண்டிய ஒத்தாசையைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் நான், நம் அல்லிப்பட்டி கிராமத்தை அவருக்கு சிபாரிசு செய்திருக்கிறேன். உங்கள் சாதகமான பதிலை உடன் தந்தி மூலம் எனக்குத் தெரிவிக்கவும்” என்று எழுதியிருந்தான் மூர்த்தி. .

தாமதமில்லாமல் உடனே பதில் தந்தியைக் கொடுத்தார் கைலாசநாதன். இதில் அவருக்கு எந்த சிரமமும் இல்லை. அல்லிப்பட்டியின் எளிய சூழ்நிலையில் ஓர் அந்நிய நாட்டு விருந்தாளியை வாரக் கணக்கில் தங்க வைத்துக் கொள்வது எப்படி என்ற யோசனைதான் கொஞ்சம் மலைக்கச் செய்தது. ஆனால் ஒரு வார காலத்திற்குள் முடிந்த ஏற்பாடுகளைச் செய்து விடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அல்லிப்பட்டி மேஜர் பஞ்சாயத்தின் தலைவர் அவர்தான் என்பதாலும், ஊரின் முக்கியப் பிரமுகர் என்பதாலும் அவருக்கு நிறையச் செல்வாக்கு உண்டு அங்கே. அந்நிய நாட்டிலிருந்து ஒரு வெள்ளைக்காரர் மனைவியோடு வந்து தங்குவதற்கு ஏற்ற முறையில், தம் வீட்டு மாடி அறையைத் துப்புரவு செய்து, அந்த அறையோடு இணைந்தாற் போல் குளிக்கக் கொள்ள வசதி செய்தார் அவர், கிராமத்தில் முக்கியமானவர்களிடமும் அந்த விஷயத்தைப் பறை சாற்றி விட்டார்.

“நம்மூருக்கு ஒரு ஃபாரினர் புக் எழுதறத்துக்காக வரப்போறான். இங்கே நம் கிராமத்தோட கெளரவத்தைக் காப்பாத்தற மாதிரி நாம் நடந்துக்கணும்” என்று பெருமாள் கோவில் அர்ச்சகர், சிவன் கோவில் குருக்கள், வேளாளர் தெருப் பஞ்சாயத்து உறுப்பினர் வீரபத்திரபிள்ளை எல்லாரிடமும் சொல்லியிருந்தார் கைலாசநாதன். செய்தி கிராமம் முழுவதும் வேகமாகப் பரவிவிட்டது.

நாலைந்து நாட்களுக்குள் டில்லியிலிருந்து இரண்டாவது கடிதமும் வந்துவிட்டது.

1. ஆற்றங்கரையில் அரச மரத்தடியில் அந்தணர்கள் குழுவாக அமர்ந்து ஜபம் செய்யும் காட்சி.

2. வயலில் நாற்று நடும் பெண்கள் பாடும் கிராமீயப் பாட்டுக்கள். ஒரு கிராமீயக் கல்யாணம்.

3. கிராமத்துப் பெண்கள் கோலாட்டம் ஆடும் காட்சி, திருவிழாவின்போது பெருமாளுக்குப் பின், பிரபந்தம் சொல்லியபடி செல்லும் பிரபந்தம் சேவிப்பவர்களின் குரல்; சிவன் கோவிலில் ஒதுவார் பாடும் தேவாரம்.

4. கிராமத்தின் நெற்களம், வனபோஜனம், காமன் பண்டிகை போன்ற பொது விழாக்கள்.

இவ்வாறு பேராசிரியர் ஜான்சன் காணவும் ஒலிப்பதிவு செய்யவும் விரும்புகிற அயிட்டங்களை வரிசையாகக் குறித்தே அனுப்பியிருந்தான் மூர்த்தி. ஜான்சனையும் அவர் மனைவியையும் அல்லிப்பட்டி ஸ்டேஷனிலிருந்து கிராமத்துக்குள் எப்படி அழைத்து வருவது என்று யோசித்தார் கைலாசநாதன். ஸ்டேஷனிலிருந்து கிராமத்துக்கு இரண்டரை மைல் தொலைவு.அந்த வட்டாரத்தில் இரண்டு கார்கள்தான் உண்டு. இரண்டும் கலியான ஊர்வலங்களில் மாப்பிள்ளை அழைப்புக்காக வாடகைக்கு விடப்படும் கார்கள். கலியாண சீஸன் முடிந்ததும் பேட்ரி, டயர் எல்லாவற்றையும் கழற்றி ஓடாத காலங்களில் தேர்நிலையில் நிற்பதுபோல் நிற்க வைத்துவிடுவார்கள் அந்தப் பழைய கார்களின் சொந்தக்காரர்கள். இரண்டுமே இருபத்தைந்து வருஷத்துக்கு முற்பட்ட மாடல். அவற்றின் உரிமையாளர்களில் ஒருவரைச் சந்தித்துக் காரை ஓட்டத்துக்கு ரெடியாக்கச் சொல்லி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தார் கைலாசநாதன்.

ஜான்சன் தம்பதி அல்லிப்பட்டிக்கு வந்து சேருகிற தினத்தன்று காலையில் ஐந்து மணிக்கே எழுந்து தயாராகி விட்டார் அவர் பெட்டியில் மீதமிருந்த ஒரே சலவை வேஷ்டியையும் எடுத்தபோது அது நடுவாகக் கிழிந்திருந்தது. சட்டையில் வாழைத் தோட்டத்துக் கறைப் பட்டிருந்தது.

“நீங்களும் உங்க லட்சணமும்! இதைக் கட்டிண்டு போனா சிரிக்கப் போறா அம்பி போன தடவை லீவுக்கு வந்திருந்தப்போ இங்கே மறந்துவிட்டுப் போன சூட்டையும் கோட்டையும் சலவைக்குப் போட்டு வெச்சிருக்கேன். தட்டிச் சொல்லாம எடுத்து மாட்டிக்குங்கோ…” என்று வற்புறுத்தினாள் அவர் மனைவி.

முதலில் கைலாசநாதனுக்குக் கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. சாதாரணமாகக் கிராமத்தில் இருக்கிற நாட்களில் அவர் சட்டைகூடப் போடுவதில்லை. திடீரென்று இத்தனை நாள் அப்படி இருந்ததற்கு வட்டியும் முதலுமாக மாறுவது போல் சூட்டும் கோட்டும் போட நேர்ந்துவிட்டதை ஒரு மனம் ஏற்காவிட்டாலும் இன்னொரு மனத்தில் அவற்றைப் போட்டுக் கொள்ள வேண்டும் போல ஒரு நைப்பாசையும் இருந்தது.

இறுதியில் நைப்பாசையே வென்றது. கைலாசநாதன் சூட்டும் கோட்டுமாக மாப்பிள்ளைக் கோலத்தில் தயாரானபோது அந்த யோசனையை அவருக்குக் கூறிய அவர் மனைவிக்கே தன் கணவனுக்குத் திருஷ்டி கழிக்க வேண்டும் போலிருந்தது. அதைவிடப் பெரிய ஆச்சரியம் ஜான்சனை வரவேற்க ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி அவர் அழைத்திருந்த மற்றவர்களும் சூட்டுக் கோட்டோடு வந்ததுதான். ஒருவர்கூட அந்தக் கிராமத்தின் சகஜமான உடையில் இல்லை. எல்லார் கையிலும் மாலைகள், பூச்செண்டுகள் தயாராய் இருந்தன. நேற்று மாலைதான் ஒட்டத்திற்கு ஆயத்தம் செய்யப்பட்ட அந்தப் பழைய மாடல் ஃபோர்டு கார் நிலையத்தின் வெளியே நின்றது.

ரயில் வந்தது.முதல் வகுப்புப் பெட்டிகளை ஒவ்வொன்றாக நோட்டம் விட்டபின் வெள்ளை முகம் காணாமல் ஏமாற்றம் அடைந்தார் கைலாசநாதன். ஜான்சன் தம்பதி வரவில்லையோ என்று அவர்கள் தயங்கியபோது மல்லிகைப் பூப் போல் கிளாஸ்கோமல் வேஷ்டியும் பஞ்சக்கச்சமும் ஜிப்பாவும், கழுத்தில் துளசி மணிமாலையுமாக ஒரு வெள்ளைக்காரன் மூன்றாம் வகுப்பிலிருந்து இறங்கினான். அவனை அடுத்துக் காஞ்சிபுரம் பட்டுப் புடவையும், ரவிக்கையும் நெற்றியில் குங்குமத் திலகமுமாக ஒரு வெள்ளைக்காரியும் இறங்கினாள். “ஐ யாம் ஜான்சன்” என்று அவன் தன் மனைவியோடு அருகே வந்து கை கூப்பியபோது கைலாசநாதன் அவனோடு கை குலுக்க வலது கையை நீட்டிக் கொண்டிருந்தார். அவன் கைகுலுக்க முன்வராமல் வணங்கிக் கொண்டே “ஹேண்ட் ஷேக்கிங் இஸ் நாட் அன் இன்டியன்,கஸ்டம்” என்றான்.

கைலாசநாதன் முகத்தில் அசடு வழிய மாலையை அவனுக்கும் அவன் மனைவிக்கும் அணிவித்தார்.நூற்றுக்கு நூறு சதவீதம் இந்திய உடையில் வந்திருக்கும் வெளிநாட்டினரை அந்நிய உடையில் வரவேற்க வந்ததை எண்ணிக் கூசுவதற்குக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. எல்லார் முகத்திலும் விளக்கெண்ணெய் வழிந்தது. எல்லாரும் அறிமுகம் செய்து கொண்டனர். அதற்கேற்றாற்போல் காரில் போகும்போது சிரித்துக்கொண்டே.”இந்த உடையில் நீங்கள் மிகவும் செயற்கையாகத் தோன்றுகிறீர்களே? தினசரி நீங்கள் இதைத்தான் அணிவீர்களா?” என்று ஜான்சன் கேட்டபோது கைலாசநாதன் பதில் என்ற பெயரில் ஏதோ பூசி மெழுகினார். மாலையில் ஆற்றங்கரை அரசமரத்தடியில் அந்தணர்கள் ஜபம் செய்வதைக் காண அவனையும், அவன் மனைவியையும் அழைத்துப் போனார் கைலாசநாதன். சினி கேமரா, ஃபிளாஷ் பல்புகள், பேட்டரி சகிதம் ஒலிப்பதிவுச் சாதனங்களுடன் வந்தார்கள் அந்த விருந்தாளிகள். அல்லிப்பட்டியில் முறையாகப் படித்த சாஸ்திரிகள் இரண்டே இரண்டு பேர் தான் இருந்தனர். கூட்டமாக அரச மரத்தடியில் ஜபக்கோலத்தில் உட்காரச் செய்யப்பத்து பேராவது வேண்டுமே என்று அந்த இரண்டு சாஸ்திரிகளோடு, பஞ்சாயத்துப் போர்ட் ஹெட்கிளார்க் பரசுராமராவ், ஸெகண்டரி கிரேடு டீச்சர் நாராயணய்யங்கார், கோவில் மணியம் குப்புசாமி ஐயர், இன்னும் ஐந்தாறு சீட்டாட்ட மிராசுதார்கள் எல்லாரையும் திறந்த மார்போடு அமரச் செய்து ஒரு சினிமாவுக்கு ஸெட் தயார் செய்து நடிகர்களையும் உட்காரச் செய்வது போல் அமரச் செய்திருந்தார் கைலாசநாதன். நடுவே ஒரு பூர்ணகும்பமும் வைக்கப்பட்டிருந்தது. அந்தக்கூட்டத்தில் இருந்த இரண்டு நிஜமான சாஸ்திரிகளைத் தவிர வேறு யாருக்கும் எந்த மந்திரமும் தெரியாது. கூட்டத்தோடு கூட்டமாக எதையாவது முணுமுணுத்துவிடுங்கள்” என்று அவர்களுக்கு சொல்லி வைத்திருந்தார் கைலாசநாதன்.

ஜான்சன் தம்பிவந்ததும் ஜபம் ஆரம்பமாயிற்று.டேப்ரிக்கார்டரை ஒலிப்பதிவுக்கு உரியதாக இயக்கிவிட்டு, மனைவியிடம் படம் எடுக்கும் வேலையை ஒப்படைத்தபின், அமர்ந்திருந்தவர்களுக்கு அருகே வந்து உற்றுக் கேட்கத் தொடங்கினான் ஜான்சன்.

“நீங்களும் இதே வகுப்பைச் சேர்ந்தவர்தானே? உங்களுக்கு மட்டும் இந்த ஜபம், அநுஷ்டானம் எதுவுமே கிடையாதா?” என்று திடீரென்று ஜான்சன் தன் பக்கம் திரும்பிக் கேட்கவே கைலாசநாதனின் நிலைமை எக்கச்சக்கமாகப் போயிற்று. அவர் உடனே சட்டென்று தோன்றிய “ஐ யாம் நாட் எ புரோஹித்” என்ற வாக்கியத்தைக் கூறியவுடன், “புரோஹிதர்கள் மட்டும்தான் பிராமணர்களா?” என்று பதிலுக்கு மடக்கினான் ஜான்சன். ‘இதென்னடா வம்பாகப் போயிற்று’ என்று வேண்டா வெறுப்பாகச் சட்டையைக் கழற்றித் துண்டு போல் இடுப்பில் சுற்றிக் கொண்டு அவர்களோடு சேர்ந்து கைலாசநாதனும் சப்பணம் கூட்டி அரசமரத்தடியில் உட்கார்ந்தார்.

மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டே வெற்றிலைச் செல்லத்தைத் திறந்து சாங்கோபாங்கமா வெற்றிலை புகையிலை போடத் தொடங்கிய ஒருவரையும், பொடி மட்டையைத் தட்டிப்பொடி உறிஞ்சத் தொடங்கிய ஒருவரையும் சுட்டிக்காட்டி,”இது மாதிரிப் புனித காரியங்களின்போது புகையிலை போடுவது, பொடி போடுவது வழக்கமா?” என்று கேட்டான் ஜான்சன். அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. வெற்றிலையும் பொடி மட்டையும் உடனே மறைக்கப்பட்டன. தங்களைச் சுட்டிக்காட்டி அந்த வெள்ளைக்காரன் ஏதோ கேட்பதைக் கண்டு பயந்தனர் அவர்கள். அடுத்த சில நிமிஷங்களில் அவர்கள் உச்சரித்த மந்திரங்களைக் கூர்ந்து கேட்ட அவன், கைகள் இரண்டையும் உயர்த்தி நிறுத்தச் சொல்லி ஜாடை காட்டிவிட்டு டேப் ரிக்கார்டரையும் ஆஃப் செய்தான். சாஸ்திரிகள். இருவரையும் சுட்டிக்காட்டி, “இவர்கள் இருவரும்தான் புருஷஸூக்தம் சொல்கிறார்கள். மற்றவர்கள் எதையோ முணுமுணுக்கிறார்கள்… திஸ் இஸ் நாட் கரெக்” என்று இரைந்தான். இந்த வெள்ளைக்காரனுக்குப் புருஷஸூக்தம் எது, மற்றது எது என்றுகூடத் தெரிந்திருக்கிறதே! என்று அவர்களுக்கு ஆச்சரியமாகப் போயிற்று.

அடுத்த கணமே எப்படி ஒரு சீரான குரலில் சொல்லுவது என்று காட்டுவதற்காக அந்த வெள்ளைக்காரனே,

“ஸஹஸ்ர சீருஷாப் புருஷ” என்று ஸ்பஷ்டமான உச்சரிப்போடு தொடங்கிய போது அவர்களால் தங்கள் ஆச்சரியத்தை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை.

ஜபம் எல்லாம் முடிந்ததும் ஜான்சனின் அருகில் வந்து, “சாஸ்திரிகள் இருவருக்கும் இருபது இருபது ரூபாய் வீதமும், மற்றவர்கள் எல்லாருக்கும் தலைக்குப் பத்து பத்து ரூபாய் வீதமும் பணம் தரவேண்டும்” என்று கைலாசநாதன் ஆங்கிலத்தில் கேட்டபோது, “ஆச்சரியமாக இருக்கிறதே? இந்த ஜபதபங்களை எல்லாம் நீங்கள் தினசரி மாலை சுபாவமான அநுஷ்டானமாகச் செய்வீர்கள் என்றல்லாவா நான் கேள்விப்பட்டிருந்தேன்? ஞாயிறன்று நாங்கள் சர்ச்சுக்குப்போவது போல் இது உங்கள் அன்றாட வழக்கம் இல்லையா? இது எனக்காக மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டதோ? இந்த மாதிரி நான் எதிர்பார்க்கவில்லையே. பரவாயில்லை, இந்தாருங்கள்; கொடுத்து விட்டு மீதத்தைத் திருப்பித் தாருங்கள்” என்று ஒரு கத்தை ரூபாய் நோட்டுகளைக் கைலாசநாதனின் கையில் திணித்தான் ஜான்சன்.

அன்றிரவு அவன் அமெரிக்கனாயிற்றே என்ற எண்ணத்தில் யாரோ பெர்மிட் ஹோல்டரிடமிருந்து வாங்கிய வெளிநாட்டு மதுபானப்புட்டி ஒன்றையும் சிகரெட் பாக்கெட்டையும் கொண்டு போய்க் கொடுத்தார் கைலாசநாதன். அவன் சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டு, “நான் புகை பிடிப்பதுகூட இல்லை; மன்னிக்க வேண்டும். இந்தியாவில் மது வெறுக்கப்படுகிறது என்றும், மதுவிலக்கை அரசாங்கக் கொள்கையாக வைத்திருக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன் நான்.அவ்வாறிருந்தும் இது எப்படி சாத்தியம்’ என்று கேட்டான்.

கைலாசநாதன் ஏதோ சொல்லி மழுப்பினார்.

“யூ ஹாவ் நோ நாலட்ஜ் ஆஃப் சான்ஸ்கிரிட் யூ டோண்ட்நோ வேதாஸ் அண்ட் யூநெவர் மீட்யுவர் ப்ரீஸ்ட் தென் வாட் மேக்ஸ் யூ எ ஸெப்பரேட் அண்ட் எலிவேடட் ஸெக்ஷன் ஆஃப் தி ஸொஸைட்டி?” இப்படி அவன் கேட்டபோதும் அவர் சிரித்து மழுப்பத்தான் செய்தார்.

மறுநாள் நாற்று நடும் வயலில் பெண்கள் பாடிய பாட்டுக்களை ரெகார்ட் செய்யும் போதும் இப்படியே நடந்தது. அவற்றில் ஒன்றாவது கிராமத்தின் புராதனமான பாடலாக இல்லை.

“பவுடர் மணம் கமகமக்கப்
பல்லழகு ஜொலி ஜொலிக்க
நாற்று நடும் ரங்கம்மா
ஏற்றமிறைக்கும் வேளைக்குள்ளே
ஏரோப்ளேன் ஏறி வாரேன்
நாற்று நடும் வேளைக்குள்ளே
ராக்கெட்டில் பறந்து வாரேன்”

என்று பாடப்பட்ட ஒரு பாட்டை அதிலுள்ள வார்த்தைகளைக் கேட்டே அது புராதனமான கிராமீயப் பாட்டு இல்லை என்று கண்டுபிடித்து மறுத்துவிட்டாள் ஜான்சனின் மனைவி. அவள் மீண்டும் மீண்டும் துளைப்பதுபோல் கேட்ட பின்னே அந்தப் பாடல் சென்ற வருடம் ரிலீஸான ஒரு தமிழ்ப்படத்தில் வருவது என்ற உண்மையைக் கைலாசநாதன் ஒப்புக் கொண்டார்.

அதே தினம் மாலையில் ஜான்சன் காண்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலியான மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில், மாப்பிள்ளை, சூட்டு, கோட்டு, டை தரித்துக் காரில் அமர்ந்து வந்ததை ஜிப்பா பஞ்சகச்சத்தோடும், புடவை ரவிக்கையோடும் இருந்து கண்ட ஜான்சன் தம்பதி அதுபற்றிக் கைலாசநாதனை விசாரித்தனர். கைலாசநாதன் பதில் கூறினார்:-

“மாப்பிள்ளை ரொம்பவும் படித்தவரானால் இப்படி டிரஸ் தைத்துத் தர வேண்டியது அவசியம்!”

“ஓ! யூ கேன் ரெக்கன்னைஸ் அன் எஜுகேடட் மேன் பை ஹிஸ் டிரெஸ் ஒன்லி” என்று சிரித்துக்கொண்டே வினவினான் ஜான்சன்.

அடுத்தநாள் கோலாட்டத்துக்குச் சரியான கோல்கள் கிடைக்காததால் டஜன் கணக்கில் கலர்ப் பென்சில்களை விலைக்கு வாங்கிஅடிக்கச் சொல்லிப் பெண் குழந்தைகளிடம் கொடுத்திருந்தார் கைலாசம். கோலினால் எழும் இனிய நாதம் குச்சிகள் போன்ற பென்சிலால் எழாததாலும் அதிலும் நவீன சினிமாப்பாடல்களே பாடப்பட்டதாலும் ஜான்சன் திருப்தியடையவில்லை. பிரபந்தம் பாடுவதைக் கேட்ட அவன், பாடல்களின் சொற்கள் அதிகம் சிதைக்கப்பட்டு உச்சரிக்கப்படுவதைக் கண்டுபிடித்துச் சொன்னான். அவனுக்குத் தமிழும் நன்றாகத் தெரியும் என்பதை அப்போதுதான் கைலாசம் புரிந்து கொண்டார்.

“அமெரிக்கன் தானே ஒய் பத்து ரூபா கொடுத்தால் வறண்டா போயிடும்? லட்சம் லட்சமா டாலரைஅள்ளிண்டு புஸ்தகம் எழுத வந்திருக்கான். தரட்டுமே தந்தாக் குறைஞ்சா போயிடுவான்?” என்று முதல்நாள்.அரசமரத்தடி ஜபத்தின்போது அவனுக்குத் தமிழ் தெரியாதென்ற நினைப்பில் தான் இரைந்து கூறியதை அவன் புரிந்துகொண்டிருப்பானோ என்ற சந்தேகம் இப்போதுதான் கைலாசத்துக்கு வந்தது. இதை இந்த வெள்ளைக்காரன் டில்லியில் போய் மூர்த்தியிடம் சொல்லிவிடுவானோ என்றும் நினைத்துத் தயங்கியது அவர் மனம். பெருமாள் கோவிலில் தீர்த்தம், சடாரிக்குப் பின்பு துளசிக்குப் பதிலாக ரோஜா, பூ இதழ்களைக் கொடுத்ததும் “துளசி அல்லவா கொடுக்கப்பட வேண்டும்” என்று ஞாபகமாக அர்ச்சகரைக் கேட்டான் ஜான்சன்.

“மன்னிக்கணும்; கோயில் நந்தவனத்திலே இருந்த துளசிச்செடி எல்லாம் பட்டுப் போச்சு! அதனாலேதான்” என்றார் அர்ச்சகர். துளசி கிடைக்காத வைஷ்ணவக் கோயிலை நினைக்கவே வேதனையாக இருந்தது ஜான்சனுக்கு. அது அவனுடைய கடைசி ஏமாற்றம். அதுவே அவனது எல்லா ஏமாற்றங்களையும் உருவகம் செய்வதாகவும் அமைந்தது.

ஒரு மாதம் தங்குவதற்குத் திட்டமிட்டு வந்திருந்த ஜான்சனும் அவன் மனைவியும் நான்காம் நாளே அல்லிப்பட்டியை விட்டுப் புறப்பட்டு விட்டார்கள். அந்த நான்கு நாட்களில் பணம் நிறையச் செலவாகியிருந்தும் விஷய லாபம் சிறிதும் கிடைக்கவில்லை. பழையதான ஓர் இந்தியக் கிராமத்தை அவன் புரிந்து கொண்டிருந்த அளவுகூட அந்தக் கிராமத்தில் இருப்பவர்களே புரிந்து கொண்டிராதது அவனைத் திடுக்கிட வைத்தது. சென்னை நகரத்துக்குத் திரும்பி வந்ததும் அவன் இரண்டு விமானத் தபால்களை அவசர அவசரமாக எழுதினான். அவற்றில் ஒரு கடிதம் தான் எழுத இருக்கும் புத்தகத்தை வெளியிடப் போகும் அமெரிக்கப் பதிப்பாளருக்கு மற்றொன்று டில்லியிலுள்ள கே.கே.மூர்த்திக்கு.

அமெரிக்கப் பதிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில் “புத்தகத்தின் தலைப்பை ஸவுத் இன்டியன் வில்லேஜ் என்பதற்கு பதில் டீஜெனரேஷன் ஆஃப் எ ஸவுத் இன்டியன் வில்லேஜ்’ என்று தயை கூர்ந்து மாற்றிவிடவும்” என்று எழுதியிருந்தான். மூர்த்திக்கு எழுதிய கடிதத்திலோ, “உங்கள் கிராமத்துப் பெருமாள் கோயில் நந்தவனுக்குள் துளசிச் செடி பட்டுப் போனதைப் போல் பழைமையான பல விஷயங்களும் பட்டுப்போய்விட்டன.ஒரு கிராமத்தில் நதிவற்றலாம்; நாகரிகம் வற்றக் கூடாது. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வேதங்களையும் தமிழிலக்கியங்களையும் படித்து நான் அறிந்ததென் இந்தியக் கிராமத்தைப் பற்றி அந்தக் கிராமத்தில் இருப்பவர்களுக்கே என்னைப் போல் அந்நியன் ஒருவன் தான் ஞாபகமூட்ட வேண்டியிருக்கிறது” என்று எழுதியிருந்தான் அந்த வெளிநாட்டுப் பேராசிரியன்.

– கலைமகள், தீபாவளி மலர், 1970, நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *