அந்நியன் என ஒருவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2023
பார்வையிட்டோர்: 1,052 
 
 

எதிர்ச்சாரியில் சைக்கிளை வைத்துவிட்டு திரும்பும்போது மழைபெய்து ஓய்ந்திருந்த அந்த மாலை வெய்யிலின் மினுமினுப்பில் நாகேஸ்வரன் கோயிலின் கோபுரம் பொன்னிறமாக தங்கத்தில் குளித்ததுபோல மின்னிக் கொண்டிருந்தது. அதன் பின்புறத்தில் அசைப்போட்ட எருமைக‌ள்போல கருப்பும் செம்பழுப்புமான மேகங்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. எதிர்ச்சாரியில் ஒருகடை எப்போதும் மூடியே கிடக்கும், அதன் வாசலில் சைக்கிளைக் காசு கொடுக்காமல் வைத்துவிட‌ முடியும். கோபுரத்தின் வலப்புற ஓரமாக தனது பிய்ந்த ரப்பர் செருப்பை வைத்தான் ரவி. மேலுள்ள வெள்ளைநிறம் தேய்ந்த நீலநிறம் ஆங்காங்கே தெரியும் செருப்பை யாரும் எடுக்கப் போவதில்லை. கோபுரத்தை பார்த்தபடி நடந்தபோது காலில், கீழே பாவப்பட்ட‌ கருமையான கருங்கற்களின் தோய்ந்த பள்ளத்தில் இருந்த மழைநீர் இடறியது. குளிர்ச்சிக்காக வேண்டுமென்றே மழைநீரை எத்திவிட்டபடியே சென்றான். இடப்பக்கம் இருந்த செருப்பு வைக்கும் அறையும், பூ விற்கும் கடைகளும் அவனை அழைப்பதும், கண்டுகொள்வதும் இல்லை. வலப்பக்கம் இருக்கும் பிச்சைக்காரர்கள் அவனிடம் கேட்க எதுவும் இருப்பதில்லை என்பதால் அவசரமில்லாமல் நிதானமாக உள்ளே சென்றான்.

கோபுர முற்றத்தை கடக்கும்போது அந்த பெரியவர் இருக்கிறாரா என்று ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டே சென்றான். இன்றைய மழையில் அவர் வந்திருக்கமாட்டார். கோபுரத்தை தாண்டியதும் இடப்பக்கம் விநாயகர், துர்க்கை சன்னிதிகளில் எறும்புகள் உணவைச் சுற்றி வட்டமிடுவதுபோல‌ ஒரு மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. வெளியில் நின்றிருந்த காரில் வந்திருந்த சற்று வசதியுடைய குடும்பம் ஒன்று அந்த சந்நிதியை சுற்றி வந்துகொண்டிருந்தது. தாழ்வாக இருந்த கருவறை தூரத்தில் அமைதியாக தியானத்தில் இருப்பதுபோல இருட்டில் மூழ்கியிருந்தது. ஒரு முறை கண்களை மூடி உதட்டிற்கும் நெஞ்சிற்குமாக கையை ஆட்டிக்கொண்டான். வலப்பக்கத்தில் சில மண்டபங்கள் இருந்தன. அவற்றில் சிலவற்றைத் தாண்டி கடைசியாக இருந்த ஒரு மண்டபத்திற்கு சென்றான். மழைப்பெய்து ஓய்ந்து‌ வெய்யில் சாய்வாக நீளநிழல்களாக விழுந்து அனைத்தையும் ஓவியம் போல பாராங்கல் தரையில் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது. மாலை வெய்யில் எப்போதும் லேசாகத் தலைவலிக்கச் செய்துவிடும். பின் படிக்க இடைச்சலாக இருக்கும். புத்தகத்தால் இடப்பக்க முகத்தை மூடியபடியே வந்தான். கடைசி மண்டபத்தை ஒட்டி நிழல்படுமிடமாகத் தேடி அமர்ந்தபோது சைக்கிள் மிதித்து வந்த களைப்பு நீங்கி சற்று நிதானமாக இருந்தது.

புத்தகத்தைப் பிரித்து அடையாளத்திற்கு வைத்திருந்த காய்ந்த இலையிருந்த பக்கத்திற்கு வந்தபோதுதான் கவனித்தான் சற்று தொலைவில் அந்த பெரியவர் அமர்ந்திருக்கிறார் என்பதை. கவனிக்காமல் அமர்ந்துவிட்டதை சங்கடமாக உணர்ந்தான். வெவ்வேறு இடங்களில் அமரும் அவன் ரொம்பநாள் கழிந்து இந்த பக்கம் வந்திருக்கிறான். இங்கு கோயிலில் யாரும் அருகருகே அமர்வதில்லை. ஒருவர் மற்றொருவரை இடைஞ்சல் செய்யாமல் இருக்கும் உத்தி. எழ முயற்சித்தான். ஏதோ ஒன்றை நிறுத்துவதுபோல அவசரமாக கையைக் காட்டி பரவாயில்லை என்பதுபோல தலையை அசைத்தார்.

அவர் உட்கார்ந்திருந்த பகுதி சுற்றிக் காய்ந்து மற்ற பகுதிக‌ள் ஈரமாக இருந்தன‌. மழை ஆரம்பித்தபோது வந்திருப்பார் அதாவது மதியத்திலோ அல்லது காலையிலோ வந்திருக்க வேண்டும். கோபுர முற்றத்துக் குளுமை நிறைந்த‌ வலது திண்ணையில் எப்போதும் அமர்ந்திருப்பார். பிச்சைகாரர் என முதலில் நினைத்திருந்தான். ஆனால் இல்லை என்றும் சொல்லமுடியாது. யாரிடமும் யாசகம் என்று கேட்கமாட்டார். கடந்து செல்லும் நபர்களிடம் ம்.. என்று அடித்தொண்டையில் வேறு எங்கோ பார்த்தபடி அல்லது உள்ளங்கைகளில் எதையோ கண்டுபிடித்தவர் மாதிரி தேடிக்கொண்டு கனைப்பார். எல்லோரிடமும் அவர் சத்தங்களை எழுப்புவதில்லை. யாரிடம் அப்படி கேட்கவேண்டும் என்று அவருக்கு தெரிந்திருந்தது. அவன் முதலில் ஒருமுறை வந்தபோது அப்படி ஒலி எழுப்பினார். அப்புறம் அதை அவன் கேட்டதில்லை. கடந்து செல்பவர்கள் பொதுவாக மிகச் சிலரே அவர் காசு கேட்கிறார் என்று புரிந்துகொள்வார்கள். திரும்பிபோகும்போது அவர் பக்கத்தில் காசுகளைப் போட்டுவிட்டு செல்வார்கள். பிச்சை கேட்பதில் இருக்கும் சங்கடம் அவருக்கு இருந்தது ஆனால் அதில் அவர் வெட்கப்படவில்லை எனத் தோன்றியது.

பக்கத்தைத் திருப்பி மெதுவாகப் படிக்க ஆரம்பித்தான். மேற்கிலிருந்து ஆற்றின் நிதானத்துடன் வந்த‌ காற்று சுழித்து பின் வேகமெடுத்தது வடப்பக்கமாக‌ கடந்து சென்றது. அவன் உதட்டசைவு வேகத்துடன் பின்னால் இருந்த ஒரு பெரிய அரசமரம் விட்டுவிட்டு சலசலத்துக்கொண்டிருந்தது. கிழவிபோல தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கும் அதன் அருகில் பெரிய இலைகள் கொண்ட மற்றொரு மரம் எந்த சலசலப்புமின்றி அதை வேடிக்கைப் பார்ப்பதுபோல‌ அமைதியாக நின்றிருந்தது. பொத் என்று ஒரு தடித்த இலை ஒன்று அதிலிருந்து அவன் முன்னே வந்து விழுந்ததும் கவனம் இதுவரை புத்தகத்தில் நிலை பெறவில்லை என அறிந்தான். அவனையும் அறியாமல் திரும்பி பார்த்துக்கொண்டான். படிப்பவனை தொந்தரவு செய்யக்கூடாது என்று குனிந்து அமர்ந்திருந்தார் பெரியவர். கைவிரல்களில் இலைகாம்பை சுருளவிட இலை அவர் கையை இடம்வலமாகச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தது.

சுமாராக துவைக்கப்பட்ட சட்டை வேட்டி அவரது மெல்லிய உடலை இறுகப் பிடித்திருக்கும். வேப்பமரப‌ட்டை போல சுருக்கங்களோடு உடைய‌ கழுத்தில் தலை லேசாக ஆடிக்கொண்டிருப்பது போலிருக்கும். அயன் செய்தவுடன் துணிகளிலிருந்து வரும் ஒரு வாசனைபோல் அவரிடம் வீச்சம் ஒன்று அடிக்கும். வயதானதால் இருக்கலாம். உதடுகள் மென்மையான‌ வெளுப்புடன், மூக்கு லேசாக‌ சிவந்து காணப்படும். மங்கிய ஆனால் ஓரங்களில் மட்டும் ஒளிரும் கண்கள். அவற்றில் பார்வை இருக்கிறதா என சந்தேகமாக இருக்கும். ஈக்களின் தாவல்போல எப்போதும் அவசரமாக சிமிட்டிக்கொள்வார். த‌ன் படிப்பை குலைத்துவிடக்கூடாது என்று கவனமாக மடிந்து அமர்ந்து இலையை கவனித்துக் கொண்டிருக்கும் அவரின் செய்கை ஒரு வகையில் அவனுக்குப் பெருமையாக இருந்தது. அவரிடமிருந்து கவனத்தை திருப்பி மீண்டும் வேகமாக பாடங்களைப் படிக்க ஆரம்பித்தான். விதிகளை அச்சுமாறாமல் எழுதவேண்டும் இல்லையென்றால் மதிப்பெண்கள் கிடைக்காது. உருப்போட்டு மண்டையில் ஏற்றி பின் மறக்கவேண்டிய கட்டாயம் இப்போது. சற்று தொலைவில் இருந்த மண்டபத்தில் ராஜு வந்துவிட்டிருந்தான். அவன் உதடுகளில் அசைவுகள் எதையோ அவசரமாக மெல்வதுபோலவும், வேகமாக ஓடவிடப்படும் சினிமாவில் உதட்டு அசைவுகள்போலவும் பார்க்க வேடிக்கையாக இருந்தது. தானும் அப்படி படிக்கிறேனோ என நினைத்து சட்டென சிரித்துவிட்டான். பெரியவர் கவனித்திருப்பார் என கூச்சத்தோடு அவரை பார்த்தான். நல்ல வேளை பெரியவர் கவனித்ததாக‌ தெரியவில்லை.

யாசகமாக கிடைக்கும் காசுகளை அன்று மாலை அல்லது இரவு தங்களுடன் வரும்போது டீக்குடிக்க பயன்படித்திக் கொள்வார். அவர் குடிக்கும் டீக்கு எப்போதும் அவர்தான் காசு கொடுப்பார். டயமண்ட் டாக்கீஸ் இறக்கத்தில் இருந்த ஒரு சின்ன நூலகத்தில் அடிக்கடி அவரைக் காணலாம். வேகமாக அங்குமிங்கும் அலைந்துகொண்டிருப்பார். யாருக்காவது புத்தகம் பேப்பர் எடுத்து கொடுப்பதில், பிரிந்து கிடக்கும் பேப்பர்களை ஒழுங்காக அடுக்கி மேலே கல்லை வைப்பதில் என்று அது தனக்கு இடப்பட்ட வேலைபோல‌ கவனமாக‌ ஈடுபட்டிருப்பார்.

சிறுகோபுரத்தின் நிழல் ஏறிவருவதைக் கவனித்துக்கொண்டிருந்தான். அது எதிர் மதில் சுவரை அடைந்தபின் அங்கு சென்று அமர்ந்துக்கொள்ள முடியும். சூரியன் மங்கியபின் மேலேயுள்ள ஹாலஜன் விளக்கு எரிய ஆரம்பித்துவிடும். சிலநாட்களுக்கு முன்பு பின்னால் இருந்த ஒரு மண்டபத்தில் படித்துக் கொண்டிருந்த‌ போது திடீரென கரெண்ட் போய்விட்டது, ஒரே இருட்டு. அவனும் ராஜுவும் பேச ஆரம்பித்தவுடன் இருட்டில் அவர்களுடன் பேச்சில் ஒருவர் கலந்து கொண்டார். எல்லாவற்றிற்கும் சாதகமாக‌ இருவார்த்தை, எதிராக இருவார்தை என்று ஒரு சின்ன பொதுமாதிரி ஒன்றை வைத்திருந்தார். எல்லா விஷயமும் அவருக்குத் தெரிந்திருந்தது அல்லது தனக்குத் தெரியாத பகுதி எதிராளிக்கு தெரியும் என்பதுபோல பேச்சை முடித்து ‘உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே’ என்பதுமாதிரி ஆவலாக‌ எதிராளியை பேசவைக்கும் ஒரு பாவனையும் கொண்டிருந்தார். சரி என்று சீக்கிரம் முடித்துவிட்டு டீ குடிக்க செல்லலாம் என முடிவெடுத்து வெளிவந்தபோது அவரும் கூடவே வந்தார். வெளிச்சத்தில் வந்தபோதுதான் தெரிந்தது அவர் கோபுர முற்றத்தில் எப்போதும் அமர்ந்திருக்கும் பெரியவர் என்று. அவருக்கு பெரியவர் என்று பெயர் வைத்தது ராஜுதான். ஆனால் ராஜுவுக்கு அவரைப் பிடிக்கவில்லை, தொந்தரவாக, பல் இடுக்கில் ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற ஒரு பொருளாக‌, எப்படியும் அவரை கழற்றிவிடவேண்டும் என நினைத்தான். ஆனால் அதற்கெல்லாம் அவர் புரியாதவர் போன்றோ அல்லது நிஜமாகவே அப்படிதான் என்பதுபோலோ நடந்துகொண்டார்.

நல்லெண்ணம் கொண்ட ஒரு முதிய முனிவர்போல நடக்கும் அவரின் செய்கைகள் பல வேடிக்கையாக அர்த்தமற்று இருப்பதாக‌ தோன்றும். அவர் இல்லாத சம‌யங்களில் அவரைப்பற்றி கிண்டல் அடித்து கொள்வதில் ஒரு இன்பம் இருக்கவே செய்தது. வீட்டு தோட்டத்தில் வளர்ந்தது என்று ஒரு நாள் மாங்காய்களையும், படிப்பவர்களுக்கு உகந்தது என்று மற்றொரு நாள் மயிலிறகுகளையும் என்று கொண்டுவந்து கொடுப்பார். வேண்டாம் என மறுக்க விடாமல் வைத்துவிட்டு போய்விடுவார். மாங்காய்களை அவர் முன் சாப்பிட சங்கடமாக இருந்தாலும் காய் சுவையாக இருந்தது. ஆனால் ராஜு சங்கடமில்லாமல்உடனே தின்று தண்ணீர் குடிக்க ஓடினான்.

கிழக்குக் கோபுரத்தை பறவைகள் சுற்றிவரும் வேகத்தை கவனித்துக் கொண்டிருந்தான். தனக்கு முன்பு தரையில் சில சிட்டுக்குருவிகள் தத்தித் தத்தி வந்துகொண்டிருந்தன‌. அவற்றின் தொடர் இரைச்சலுடன் சட்டென பறந்து பெரிய இலை கொண்ட மரத்தில் சென்றமர்ந்தன. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அவனுக்கு நல்ல மார்க்குகளால் மட்டுமே அடுத்த படிப்பை தொடரமுடியும். குறைவான மதிப்பெண்களைப் பெற்றால் இன்று இருக்கும் குடும்ப சூழ்நிலையில் அப்பா நண்பர்களின் கடையில் வேலைக்கு அனுப்பிவிடுவார் என்கிற கலக்கம் நாளெல்லாம் இருந்தது.

ஆனால் பெரியவர் அப்போதைய எஸ்எஸ்எல்சி படித்திருந்தார். ஒரு பிரபலமான லாரி கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். நான்கு பெண்கள் மூன்று பையன்கள். மிகச்‌சுமாரான வருமானம்தான். தான் நேர்மையாக,‌ நியாயமாக‌ மனசாட்சிபடி இருந்ததால் பெரியதாக சம்பாதிக்க முடியவில்லை என்று அடிக்கடி கூறிக்கொள்வார். தன் வேலைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் அந்த வயதினருக்கே உரிய அழுத்தத்துடன் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சிகொள்வார். த‌ன் பெரிய குடும்பத்தை நடத்தியது அவர் மனைவி என்றும், அவளாலே தன் குடும்பம் நிலைத்து நின்றதாக அவளின் சாமர்த்தியமே தன் குடும்பத்தை காத்ததாகவும்‌ ஒவ்வொரு பேச்சிலும் சொல்லிக்கொள்வார். ஆனால் அவள் தற்போது காசநோயில் கஷ்டப்படுவதாகவும் வார்த்தையின் கடைசியில் கூறிவிடுவார்.

மாலை வெய்யிலின் ஊடே மீண்டும் மழைத்தூறல்கள் விழுந்தன. நூல்வாயல் புடவைக்குப் பின்னால் தெரியும் அசைவுகள் போல உருவங்கள் மங்கலாயின‌. சற்று நகர்ந்து பின்னால் அமர்ந்துகொண்டான். பெரியவரும் பின்னால் வந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். மீண்டும் படிக்க ஆரம்பித்தான் ஆனால் அது பாவனையாகவே இருந்தது. அவருக்கு பயந்தே படிப்பதுபோலிருந்தது. அவருக்கு ஏன் பயப்படவேண்டும் என உள்மனம் கேள்வி கேட்டாலும் இரண்டு பக்கங்களாவது முடித்துவிட வேண்டும் என அவசரப்பட்டான், ஆனால் அவரைப் பற்றிய எண்ணங்கள் அலைகழித்தபடியே இருந்தன‌. பெரியவர் கொஞ்சம் கொஞ்சமாகதான் அவர்களுடன் நெருக்கமானார். மூன்று மகன்களில் ஒருவர் வளைகுடா நாடுகளில் ஒன்றில் இருக்கிறார். ஒருவர் கும்பகோணத்திலும் மற்றவர் சென்னையிலும் இருக்கிறார்கள். பெண்களில் ஒருவரைத்தவிர மற்றவர்களை இங்கேயே கட்டிகொடுத்திருக்கிறார். வெளியில் பார்ப்பதோடு சரி அவர் வீட்டிற்கு வந்தாலும் பேச்சோடு முடிந்துவிடும். பணம் அல்லது உதவிஎன எதுவும் அவர்கள் கொடுப்பதில்லை. மகன் அல்லது மகளுக்கு குடும்பம் என்று வந்ததும் அவரின் மருமகனோ, மருமகளோ தன் குடுப்பத்தைக் கவனிப்பதை விரும்புவதில்லை, பணத்தையும் கொடுப்பதை தடுத்துவிடுகின்றனர் என்பார். ஆனால் அதை அவர் குறையாக சொன்னதேயில்லை. மிகச் சாதரணமாக அது பரவாயில்லை என்பது போல் சொல்வார் மிககுறைந்த பென்சன் பணம் ஒன்றைத் தவிர அவருக்கு வருமான‌ம் இல்லை. ஏழு பிள்ளைகள் இருந்தும் கிட்டதட்ட பிச்சை பெரும் நிலையில்தான் இருக்கிறார். ஒருவரும் கவனிக்கத் தயாராக இல்லாத நிலை. அவனுக்கு இது உறுத்தலாக ஆக தன் மனம் நினைத்த ஏதோ ஒன்றை இழந்தவனாக, யோசித்துக்கொண்டு இருந்தான்.

ஒரு அந்நியனைப் போல பிள்ளைகளால் எப்படி இப்படி நினைக்க முடிகிறது எனபதை பலவாறு யோசித்து, தன் முதிரா அறிவால் ஒருவேளை புரிந்து கொள்ள முடியவில்லையோ எனவும் நினைத்துக் கொள்வான். தன் அம்மாவையும் அப்பாவையும் இம்மாதிரியான ஒரு நிலைக்கு விட்டுவிடகூடாது என வெள்ளேந்தியான அவரின் பேச்சுகளின்போது நினைத்துக் கொள்வான்.ஆனால் காலமெனும் சுழல் எப்படியும் இழுத்து செல்லும் என பெரியவர் கூறிய வார்த்தைகளையும் கூடவே நினைத்துக் கொள்வான்.

என்றாவது ஒருநாள் தங்களிடம் பெரிதாக காசு கேட்கப் போகிறார், அதற்கான பாவனைதான் இதெல்லாம் என்பான் ராஜூ. அவர் பேசுவதெல்லாம் நம்மை அவர்பால் கவனிக்க வைக்கத்தான் உண்மையில்லை என்பான். சில நேரங்களில் ராஜூ சொல்வது உண்மை என நினைத்துக் கொள்வான். ஆனால் அவரைப் பார்த்ததும் அந்நினைப்புகள் மாறிவிடும். அவரிடம் கேட்க நிறைய கேள்விகள் அவனிடம் இருந்தன. உடனே கேட்டு அவர் சங்கடப்பட வேண்டாம் என நினைத்து விட்டுவிடுவான். எல்லா கேள்விகளுக்கும் அவரிடம் பதில்கள் இருக்கும். மிக சாமர்த்தியமாக சமாளிக்கும் திறன் கொண்டவராக தெரிந்தார். இக்கேள்விகளை தன் மனதில் விதைக்கவே அவர் இத்தனை பாடுபடுகிறார் என்று கூட அவன் நினைத்தான்.

அவரின் பிச்சைகேட்கும் செயல்கள் அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்த கவுரவமற்ற செயலை மறைக்க அவர் செய்யும் செயல்களாக தோன்றியது அவரது பேச்சு. அதை ஒரு கவுரமான‌ யாசகமாக மாற்றிக்கொண்டும் அவர் செயல்படும் விதம் ஒரு தேர்ந்த மனிதர் மேல் ஏற்படும் பொறாமைபோல எரிச்சலையே ஏற்ப்படுத்தியது. அவரின் ஒவ்வொரு அசைவுகளிலும் தன்னை கவனிக்கச் செய்யும் உத்தியில் அவர் வெற்றிப் பெற்றவராகத் தெரிந்தார்.

ராஜூ பக்கத்தில் வந்து தோளை தொட்டதும் நிதானித்து திரும்பிபார்த்தான். டீ குடிக்க போகலாம் என்ற போதுதான் இருட்டிவிட்டிருப்பதை கவனித்தான். குடித்துவிட்டு திரும்பவந்து தொடர வேண்டும் அல்லது வீட்டிற்குதான் செல்லவேண்டும். போகலாம் போகலாம் என்று அவரும் கிளம்பினார்.

மக்கள் தொகை பெருக்கம், ரோடுகளின் பராமரிப்பின்மை, தயாரிப்புகளின் தரமின்மை என பலவாற்றையும் பேசிக்கொண்டே வந்தார். டீ குடிக்க ஆரம்பித்தபோதுதான் இன்று கேட்டு விட வேண்டும் என நினைத்தான். ‘ஏன் உங்க பிள்ளைங்க யாரும் உங்கள கவனிக்கிறதில்ல’ என்று அவன் சொன்னதும், டீயின் ரசிப்பையும் மீறி உற்சாகம் பொங்க பேச ஆரம்பித்தார்.

‘நம்ம வாழ்க்கதான் முடிஞ்சு போச்சுல்ல; அவங்க வாழ்க்க ஆரம்பத்துல இருக்கிறதால‌ அப்படிதான் இருக்கும்’ என்றார்.

அவன் உற்றுகவனிப்பதைகூட அறிந்தவராக தன்னை அவர் காட்டிக் கொள்ளவில்லை. வேகமாக செல்லும் ஒரு வாகனத்தை உற்றுகவனிப்பதாக இருந்தார். அடுத்த கேள்வி அவரை மடக்கும்விதமாக‌ இருக்கவேண்டும் என யோசிக்க ஆரம்பித்தான். ‘நேர்மையாவும் அடக்கமாவும் இருக்குறீங்க நீங்க,‌ உங்கள மாதிரி உங்க பிள்ளைகளும் இருக்கனும்ல‌’ ரோட்டில் சென்று கொண்டிருந்த மனிதர்களைக் கவனித்து அவன் கூறியதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதுபோல காணப்பட்டார். ‘அப்ப அவங்களுக்கும் இந்த நிலமை வராதுன்னு சொல்ல முடியாதுல்ல, அது தெரிஞ்சுதானே இருக்கும்‌‌’ என்று முடித்தான்.

புத்திசாலித்தனமான கேள்வியாக அவனுக்கு தோன்றினாலும் இந்த நிலைமை என்று குறிப்பிட்டது அவரது சுயமரியாதையை பாதிக்கும் என அவனுக்கு தோன்றியது, ஆனால் எதையும் கவனிக்காததுபோல், ஒரு வாய்குடித்த டீயை நிதானமாக‌ உதட்டை ஈரப்படுத்தி, சின்ன ஏப்பம்போல் ஒரு முறை நெஞ்சை ஏற்றி இறக்கி கொண்டார்.

‘சாமர்த்தியம் இல்லாதவனையும் நேர்மையானவன்னு கூடத்தான் சொல்லுவாங்க, துணிவில்லாதவனையும் அடக்கமானவன்னு கூடத்தான் சொல்லுவாங்க, அது ஒரு சின்ன விசயம்தானே, இல்லையா’ என்ன நான் சொல்றது என்பதுபோல‌ வேறு எங்கோ வேடிக்கைப்பார்க்கும் ராஜூவையும் கலந்துகொள்ள அவன் தொடையையும் தொட்டு அதைச் சொன்னார். ஆனால் ராஜூ அவரை கவனித்துவிட்டு ரவியைப் பார்த்தான்.

‘அவங்ககிட்ட அன்பு பாசம் இல்லாம இல்ல. செய்ய நிறைய மனசு இருக்கு, ஆனா அவங்களுக்கு குடும்பம், குட்டிங்கனு ஆன பிறகு, அதெல்லாம் செய்ய முடியறதில்லை; இதெல்லாம் இயற்கைதான். நீங்களே உங்க வயசுல புரிஞ்சுப்பீங்க பாருங்க’ என்றார். அதன்பின் அவர் கூறிய எதுவும் அவன் காதில் விழவில்லை. நீண்ட ஒரு உரைபோல பேசிக்கொண்டே போனார். ஏதோ ஒரு பெரிய மேடைப்பேச்சை முடித்து சாதனை செய்துவிட்ட மகிழ்ச்சியில் அவர் முகம் அந்த சின்ன ஒளி இடைவெளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

அதிகம் தன்னைக் காட்டிக்கொள்ள நினைக்கும் ஒரு பரபரப்பு விருப்பிபோல தன்னைக் காட்டிக் கொள்வதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் அவனை ஒரு கட்டத்தில் வெறுப்படைய வைத்தது. வேண்டுமென்றே தான் இதுவரை பெற்ற அனுபவங்களை மனிதர்களை மடக்கு உத்திகளில் சிலவற்றை தெரிந்துவைத்து ந‌ம்மை போன்றவர்களிடம் அதுவும் மிக சிறியவனான தன்னை அவர்பால் ஈர்க்க அவர் செய்யும் உத்தியென்று நினைத்து அவரிடம் சற்று கோபமாக சீண்டி தன்னை வெளிக்காட்ட நினைத்தான்.

ஆனால் ஒவ்வொரு கேள்வியின் சமயமும் அவர் வேறு ஏதோ யோசனையில் இருப்பவராக அதே சமயம் மிகுந்த ஆர்வத்துடனும் பதிலளிதார். அன்று ஏற்ப்பட்ட அவனின் அலைகழிப்பிற்கு கடைசிவரை விடை கிடைக்கவில்லை என்பது அவனுக்கு வருத்தமாக இருந்தது. மீண்டும் சென்று படிக்க ஆரம்பிப்பது பெரிய அவஸ்தையாக அவரை அறையவேண்டும்போல் அவனுக்கு தோன்றியது. போகும்போது ராஜூவிடம் ‘நாளைலேந்து வேறு இடத்துல போய் படிப்போம்டா’ என்று கூறி தன் கோபத்தை தனித்துக்கொண்டான். ராஜூ புரியாதவனாக அவனைப் பார்த்தான்.

பதினைந்து ஆண்டுகள். படிப்பை முடித்து, சிரமமான சின்ன வேலையில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தங்கைகளைக் கட்டிக் கொடுத்து தன் குடும்பத்தை மேலே உயர்த்தி, பின் திருமணம் ஆகி முதல் குழந்தை மஞ்சுவிற்கு பிறந்தபோது, மருத்துவமனையில் அவசரமாக அம்மா தூக்கிவந்து காட்டிய குழந்தையின் சிவந்த உதடுகள், இறுக மூடிய கண்கள், குளிரில் நடுங்கும் கைகள், எதையோ பற்ற முயற்சிக்கும் விரல்கள் என்று தன் முந்தைய வாழ்க்கைக்கு அருமருந்தாக‌ அதன் அசைவுகளை பார்த்துக்கொண்டே இருக்க தோன்றியது அவனுக்கு. உதட்டில் புன்சிரிப்புடன் ஆண் குழந்தை பிறந்த சந்தோசத்தில் செவிலிப் பெண்களுக்கு கேட்ட பணத்தைக் கொடுத்தான். ஆனால் அம்மாவுக்கு சரியாக குழந்தையை கவனிக்க‌, கையாள‌த் தெரியவில்லை என்று வெறுப்பை கோபமாக வெளிப்படுத்தினான்.

– சொல்வனம், இதழ்-108, ஜூன் 30, 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *