கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2024
பார்வையிட்டோர்: 197 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெளிக்கதவைத் திறந்துகொண்டு யாரோ உள்ளே வரும் சத்தம் கேட்டது. “ராகவன் இருக்கிறாரா?” என்ற குரலும் காதில் விழுந்தது. ஹால் பக்கம் போனேன். சுமார் முப்பது வயசு இருக்கலாம். ஆனால் இன்னும் மிக இளைஞராகவே காணப் பட்டார். தூய்மையான கதர் அணிந்திருந்தார். மிகவும் அடக்க ஒடுக்கம்.”இருக்கிறார். நீங்கள் யார்?” என்றேன். 

“கோபாலன் வந்திருக்கிறதாகச் சொல்லுங்கள்” என்றார் எங்கேயோ பார்த்துக்கொண்டு. “சற்று உட்காருங்கள். ஸ்நானம் செய்துகொண்டிருக்கிறார்; சீக்கிரம் வந்துவிடுவார்” என்று சொல்லிவிட்டு அண்ணாவிடம் தகவலைச் சொன்னேன். 

“கோபாலனா? சுற்று உட்காரச் சொல், ஸரோஜா; இதோ ஆயிற்று” என்றார் அண்ணா உள்ளேயிருந்து. 

ஹாலில் உட்கார்ந்துகொண்டு அங்கவஸ்திரத்தின் நுனியால் விசிறிக்கொண்டிருந்தார் வந்தவர். நான்போய் ஹாலிலுள்ள விசிறியின் ஸ்விட்சைப் போட்டுவிட்டுக் காபி தயார் செய்யப் போய்விட்டேன். 

ஜலப்பிராணியான அண்ணாகூட அன்றைக்குச் சீக்கிரம் ஸ்நானத்தை முடித்துக்கொண்டு ஹால் பக்கம் போனது தெரிந்தது. பங்குனி பிறந்துவிட்டால் அண்ணா நினைத்த போதெல்லாம் ஸ்நானம் செய்துகொண்டே இருப்பார்.கோடை ஆரம்பித்துவிட்டது என்பதற்கு எங்கள் வீட்டில் அதுதான் அடையாளம். 

”யார் அது வந்திருக்கிறது?” என்றாள் மன்னி. 

“யாரோ புதிதாய் இருக்கிறது. ஆனால் அண்ணா அவசரப் படுகிறதைப் பார்த்தால் ரொம்பச் சிநேகம்போல் தோன்றுகிறது. 

“ஆபீஸ் மனுஷ்யரா?” 

“ஆபீஸ் தோரணையாகத் தெரியவில்லை. பார்த்தால் காங்கிரஸ் காரர், வடக்கத்தியார்போல் இருக்கிறது. ஆனால் தமிழ்தான் நல்ல நம் தேசத்துத் தமிழ்” என்றேன். 

“அப்படியானால் கொஞ்சம்டிபனும் சேர்த்துப் பண்ணுகிறது தானே?’ என்றாள் மன்னி, சிரித்துக்கொண்டே. அவள் குழந்தையைக் கவனித்துக்கொண்டிருந்ததால் நானே சீக்கிரம் ஏதோ சிற்றுண்டியும் தயார் செய்தேன். என்றாலும் மன்னியைப் போல் அவ்வளவு செவ்வையாக ‘டிபன்’ பண்ண வராது எனக்கு. 


இது நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால் ஒன்று நன்றாக நினைவிருக்கிறது. நான் டிபன் கொண்டுபோய் வைத்தபொழுது ஒரு க்ஷணம் கோபாலன் கண்களை உயர்த்தி என்னைப் பார்த்தார். அவர் முகத்தில் சட்டென்று ஏதோ மாறுதல் ஏற்பட்டது. சமாளித்துக்கொண்டார். இருந்தாலும் அந்தப் பார்வையின் அர்த்தம் என்ன என்பது எனக்கு அப்பொழுது விளங்கவில்லை. ஏதோ புதிராக இருந்தது. இன்று அண்ணா மறுபடி அவர் பேச்சு எடுத்ததில்தான் தெரிந்துகொண்டேன். 

“அன்றைக்குக் கோபாலன் வந்திருந்தானே, நினைவிருக்கிறதா, ஸரோஜா?” என்றார் ராத்திரி சாப்பிட உட்கார்ந்ததும். 

“யார், உங்கள் சகபாடி என்று சொன்னீர்களே, அண்ணா, அவர்தாமே? நினைவிருக்கிறது. அவருக்கு என்ன?” என்றேன். 

“ஆமாம். அன்று ஏன் அவரைச் சாப்பிடக் கூட்டிக்கொண்டு வரவில்லை?” என்றாள் மன்னி; “அவருக்கும் சேர்த்துச் சமைத்து வைத்துக் காத்துக்கொண்டிருந்தேன். நான் தூங்கிப்போன பிறகு தான் வந்தீர்கள். அப்படியே ஒரு வார்த்தையும் சொல்லாமலா வந்தவரோடு பேசிக்கொண்டே போய்விடுவார்கள்?” 

“அது தப்புத்தான்,காமு. ஆனால் ஐந்து நிமிஷத்தில் வந்து விடலாம் என்று போனேன். நேரம் ஆகிவிட்டது … அதற்கப் புறம் நாலைந்து தடவை அவனை இங்கே அழைத்தேன். வாசல் வரையில் பேசிக்கொண்டே வருகிறான். உள்ளே மாத்திரம் வராமல் ஏதோ சாக்குச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறான். என்ன காரணம் என்று தெரியவில்லை.” 

“அவர் வீட்டிற்கு நீங்கள் போவதில்லை என்ற மனஸ் தாபமோ? அவர் எங்கே இருக்கிறார்? என்று கேட்டாள் மன்னி. 

“அவனுக்கு வீடு என்று கிடையாது. தன்னுடைய பாங்கி யின் கிளை ஒன்று இந்த ஊரில் திறந்து வைத்தான். தலைமைக் காரியாலயத்தைவிடச் சீக்கிரம் இது பிரபலமாகப் போகவே, இங்கே, தானே நேரில் அதைக் கவனித்துக்கொள்ள வந்திருக்கிறான்”. 

“அவர், ஏன், இந்த ஊரில் இன்னும் குடித்தனம் வைக்க வில்லையா?” என்றாள் மன்னி. 

“அதைத்தான் சொல்ல வாயெடுத்தேன். அவன் சுத்த ஏகாங்கி. பால்யத்திலேயே அவனுக்குக் கல்யாணம் ஆகியிருந்தது. ஆனால் காலேஜில் படித்த கடைசி வருஷம் அந்தப் பெண் செத்துப் போய்விட்டாள். அதற்கப்புறம் அவனிடம் யாரும் கல்யாணப் பேச்சை எடுப்பதற்கு அவன் விடுகிறதில்லை. அவனைக் கட்டாயப் படுத்த அவன் வீட்டில் பெரியவர்களும் இல்லை ; கிட்டின பந்துக்களும் இல்லை.” 

“நீங்கள் தாம் ஏதோ தூரத்து உறவு என்றீர்களே. நீங்க ளாவது பிரயத்தனம் செய்து அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொள்ளக்கூடாதா? பாங்கி வைத்திருக்கிறார் என்கிறீர்கள். அவ்வளவு பணத்தையும் அவரே ஒண்டியாய் எப்படிச் செலவு பண்ணுவார், பாவம்!” என்றாள் மன்னி. மன்னி பேச ஆரம்பித்து விட்டால் நான் மத்தியில் வாய் திறப்பதில்லை.அவள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அண்ணா திணறுவதைப் பார்த்து ஒவ்வொரு சமயம் எனக்கே சிரிப்பு வரும். 

“நீ விளையாட்டுக்குச் சொன்னாலும், காமு, வாஸ்தவம் என்னவோ அதுதான். ஆனால் கோபாலன் மற்றவர்களைப்போல் அல்ல. மகா சங்கோசி அநாவசியமாய் ஒருவரோடு பேச மாட்டான். நூறு மணி அந்தரங்கமாக ஒரு சிநேகிதனோடு பேசினாலும் அந்தச் சிநேகிதனுடைய குடும்ப விஷயங்களைப் பற்றிப் பிரஸ்தாபிக்கமாட்டான். அவனையும் யாரும் எதுவும் கேட்கத் தயங்குவார்கள். அப்படி அலாதி ஸ்வபாவம்.” 

“எப்பொழுதோ செத்துப்போன பெண்டாட்டிக்கு இன்ன மும் துக்கம் கொண்டாடுகிறார்போல இருக்கிறது! அவள் முகங் கூட அவருக்கு மறந்து போயிருக்குமே. 

“அவன் துக்கம் ஒன்றும் கொண்டாடுவதாகத் தெரியவில்லை. ரொம்பச் சிரிப்பும் குதூகலமும் நிறைந்த ஸ்வபாவம் அவனுடை யது. ஆனால் எல்லாருக்கும் அது தெரியாது.நெருங்கிப் பழகினால், பழகுகிற ஒவ்வோரிடத்தில் அண்ணன் தம்பிகளைவிட அன்னியோன்னியமாக இருப்பான். மிருதுவாக, ஹாஸ்யமாக, அவன் பேசுகிறதே போதும். அலுக்காமல் கேட்டு ரஸித்துக் கொண்டே இருக்கலாம். அப்படி ஓரிரண்டு குடும்பத்திற்குமேல் யாரும் அவனைத் தெரிந்து கொண்டிருக்கமாட்டார்கள்.” 

“அப்படிப் பழகும் வீடுகளில் எங்கேயும் அவருக்குத் தகுந்த பெண் ஒருத்திகூடக் கிடைக்கவில்லையா?’ அவருக்கு என்ன, படித்த பெண்ணாக வேண்டுமா? அல்லது கர்நாடக மரப்பாச்சி தான் பிடிக்குமா,எப்படி? “

இப்படிக் கேட்டுக்கொண்டே மன்னி என் பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருக்க விசேஷ முயற்சி செய்தது எனக்குத் தெளி வாகத் தெரிந்தது. இருந்தாலும் அவள் ஜாடையாகச் சொன்னதை அண்ணா கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் அவர் ஏதாவது சொல்லியிருப்பார். இதற்குள் அவர் சாப்பாடு முடிந்துவிட்டது. எழுந்திருந்து கையலம்பிக்கொண்டு வந்து மறுபடி உட்கார்ந்து கொண்டார். நாங்கள் சாப்பிடும்பொழுது அவரும் ஒவ்வொரு சமயம் இப்படிக் கூட இருப்பதுண்டு. குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. 

“கோபாலனுக்கு ஏதோ தனிப் போக்கு. எங்கள் இரண்டு பேருக்கும் வயசிலும் வித்தியாசம், படிப்பிலும் வித்தியாசம். என்னைவிட இரண்டு மூன்று வயசு பெரியவன். ஹாஸ்டலில் சேர்ந்து இருந்ததனால்தான் மற்றப் பேரைவிட என்னிடம் அவனுக்குப் பழக்கம் ஜாஸ்தி. அவனுக்கு உயர்ந்த லக்ஷ்யங்கள் உண்டு. அந்தக் காலத்தில் இளையவனான எனக்கு அவனே ஒரு லக்ஷ்ய புருஷனாகக்கூடத் தோன்றினான். அவ்வளவு அபூர்வ குணம். காரியத்தில் தீரன். இருந்தாலும் இருதயம் ஒரு பெண்ணி னுடைய இருதயம்போல இளகியது.ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு அவனிடம் எனக்குத் தோன்றிய மதிப்பு இன்றுவரை அதிகரித்திருக்கிறதே ஒழியக் குறையவில்லை. 

“அதெல்லாம் நான் கேட்கவில்லை. அவர் என்ன சந்நியாசி யாகப் போய்விடப் போகிறாரா? அல்லது மறுபடி கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாரா? நீங்கள் வர்ணிக்கிற குணம் எல்லாம் நான் கேட்கவில்லை. மூத்தாளை ஒன்றும் அப்படிப் படுத்தினதாகக் காணோம் ஆகையினால் ராக்ஷஸ கணத்தில் சேரவில்லை; ஒன்று. குழந்தை இருக்கிறதோ? இல்லை; இரண்டு. வயசு முப்பதிற்குள் தான் அல்லவா? அடுத்த சமாசாரம்: அவலக்ஷணம் அல்லவே! நான் அன்றைக்குப் பார்க்கவில்லை; அதனால் தான் கேட்டேன். எல்லாவற்றிற்கும் மேல் பணம் இருக்கிறது. என்ன, இந்த ஆனிக்குள்ளாவது கல்யாணத்தை முடிக்கப் போகிறீர்களா, இல்லையா?”

அண்ணாவிற்கே என்ன சொல்வதென்று தெரியவில்லை. “இதோ பார், காமு: இவனை உன் பிள்ளை மாதிரி நினைத்துக்கொண்டு சட்டம் போடுகிறாயே எனக்கு! அவ்வளவு பொறுப்பு நான் ஏற்க முடியுமா? அவனோடு எவ்வளவு ஜாக்கிர தையாகப் பழகுகிறேன், தெரியுமா? ஒன்றும் கவனிக்காதவன் போல்தான் இருப்பான். கடைசியில் ஏதாவது அவன் மனசிற்கு விகல்பமாகப் படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்புறம் நம்மோடு பேசமாட்டான். நம் கண்ணில்கூடப் படமாட்டான். 

“அவ்வளவு முரடு. ஆட்டி வைக்கிறதற்கு ஓர் அகமுடை யாள் வேணும். அப்பொழுது எல்லாம் பதமாய்ப் போய்விடும்.” 

மன்னியின் வார்த்தைகள் ஆணித்தரமே தவிர அவள் பேசு கிறது குழையக் குழைய இருக்கும். சம்பந்தம் இல்லாத சில்ல ை றை விஷயங்களைப்பற்றிக் கூடப் பிரமாதமாக ஜோடித்துக் கொண்டு. போவதும், முக்கியமான சமாசாரங்களை ஏதோ சர்வ சாதா ரணமாகப் பைஸல்’ செய்துவிடுவதும் அவளுடைய ஹாஸ் யத்தின் சுபாவம். மேலாகக் கவனிப்பவர்களுக்கு அவள் ஹாஸ்யம் முதலில் பிடிபடாது. இந்த மூன்று வருஷத்திற்குள் அண்ணாவின் தன்மையே மாறிப் போனதற்கு மன்னிதான் காரணம். முன்பெல்லாம் அண்ணா அசாத்திய முன் கோபி. அம்மாகூடச் சமயத்தில் ஏதாவது அவனிடம் சொல்லப் பயப் படுவாள். இப்பொழுது மன்னியின் சிகித்ஸை முறை அப்படியே பலித்துவிட்டது. ஆளே வேறு ஆகிவிட்டார். ஆனால் எல்லோ ருக்குமே அந்த மாதிரி மந்திரி கிடைத்துவிடுகிறதா? 

“நான் ஸரோஜாவை என்ன கேட்க வந்தேன் என்றால், அன்று நான் ஸ்நானம் செய்து கொண்டிருந்தேன் அல்லவா? நான் வருவதற்கு முன்னே என்ன நடந்தது? ஏன் அவன் மறுபடி நம் வீட்டிற்குள் நுழையாமல் ஏமாற்றுகிறான்?”

“ஒன்றும் நடக்கவில்லை. வந்தவரை நான் உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டேன். பிறகு டிபன் கொண்டு வைக்க வந்ததுதான். சற்றைக்கெல்லாந்தான் நீங்கள் இரண்டு பேருமே வெளியே புறப்பட்டுவிட்டீர்களே, அண்ணா” என்றேன். 

“அதெல்லாம் என்ன கேள்வி? இந்த வருஷம் நம் அகத்திலே கல்யாணமே கிடையாது. நான் கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டு எத்தனையோ நாளாயிற்று. அவர் வீட்டிலேதான் பெரியவர்கள் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். சாப்பாட்டுத் திட்டம் கல்யாண நிர்வாகம் என்னுடையதாக இருக்கட்டும். ஏன்? முழுவதுமே வேண்டுமானாலும் என்னிடம் ஒப்பித்துவிடச் சொல்லுங்கள். எப்படி நடத்துகிறேன் பாருங்கள்!” 

“உன்னோடு பேச என்னால் ஆகாது காமு. கோபாலனைப் பார்த்தால் காணாமல்போனது எதையோ தேடுகிறவன் போல ஒவ்வொரு சமயம் எனக்குத் தோன்றும். கேவலம் அழகையோ படிப்பையோ கண்டு மயங்கிப் போகிறவன் அல்ல அவன். அவனைத் திருப்தி செய்கிறது கஷ்டம். நீ என்ன என்றால், முகூர்த்தம் வைத்தானது போல் சமையல்காரனைப் பிடித்து நாளைக்கே அட்வான்ஸ் கொடுப்பதைப்பற்றிப் பேசுகிறாய். அவன் இஷ்டப்பட்டிருந்தால் எப்பொழுதோ கல்யாணம் ஆகியிருக்கும்! “

எங்கள் சாப்பாடு முடிந்து ஹால் பக்கம் வந்தோம். அண்ணா சீக்கிரம் படுத்துக்கொள்ளப் போய்விடுவார். அதற்குள் பேச்சுச் சுவாரஸ்யத்தினால் நாங்களும் ஹாலில் வந்து உட்கார்ந்துகொண் டோம். சில்லறைக் காரியங்களை அப்புறம் செய்துகொண்டால் போகிறது. 

“உங்களுக்கு என்ன ஆனாலும் கல் நெஞ்சு. உடனோடொத் தவர் கிளப்புச் சமையலோ சமையல்காரன் சமையலோ சாப்பிட்டுக்கொண்டு அவஸ்தைப் படுகிறார். நீங்கள் மாத்திரம் ஹாய்யாக அகத்தில் சப்புக் கொட்டிக்கொண்டு சாப்பிட்டு வந்தால் போதுமா? நல்ல சிநேகம் வேண்டியிருக்கிறது! நாளை புதன்கிழமை, ஸ்ரீராம நவமி. அவரை இங்கே எப்படியாவது சாப்பிட அழைத்துக் கொண்டுவர வேண்டியது உங்கள் பொறுப்பு. அப்புறம் நான் பார்த்துக் கொள்கிறேன். என்ன, நினைவிருக்குமா?” 


இன்று ஸ்ரீராம நவமி. மன்னி பத்து மணி மட்டும் சமைய லறையை விட்டு வெளியில் வரவேயில்லை. நான் சிற்றாளாகச் சுற்றுக் காரியமெல்லாம் பார்த்து வந்தேன். மணி பதினொன் றடித்தது. எல்லாம் திருத்தமாக ஏற்பாடு செய்தாயிற்று. கடைசி வரையில் அவர் வருவார் என்ற நம்பிக்கை இல்லாததால் அண்ணா அவரை அழைத்துவரப் பாங்கிற்கே போனார்.பாங்கி மாடியிலேயே அவர் ஜாகையாம். 

இரண்டு பேரும் அதோ வந்துவிட்டார்கள். ஹாலில் வந்து உட்கார்ந்ததும் நான் போனேன். “இலை போட்டாயிற்றே” ” என்றேன். 

‘சரி’ என்றார் அண்ணா. கோபாலன் ஒன்றுமே பேசவில்லை. என் பக்கம் திரும்பவும் இல்லை. “போவோமே என்று சொல்லி அண்ணா அவருக்குக் கால் அலம்ப ஜலம் கொடுத்து உள்ளே அழைத்துவந்தார். 

பூஜை முன்பே ஆகிவிட்டது. இலையில் அவர்கள் உட்கார்ந் ததும், மன்னி பாயஸம் எடுத்துக்கொண்டு வந்தாள். நான் அசப்பில் அவரைக் கவனிக்க முடிந்தது. திடுக்கிட்டவர்போல் ஒருதரம் அவளைப் பார்த்தார். அவ்வளவுதான். அண்ணாவும் அப்பொழுது அவர் பக்கம் திரும்பி இங்கிலீஷில் அவளை முதலில் அறிமுகம் செய்து வைத்தார். இதுதான் மிஸஸ் ராகவன், கோபு. இன்கம்ப்ளீட் இண்டர்மீடியேட், இண்டர்மீடியெட் இன்கம்ப்ளீட்டாகப் போனதற்கு நான்தான் ஜவாப்தாரி. அந்தக் குற்றத்திற்கு இன்னும் தண்டனை அனுபவிக்கிறேன், கோபு. புருஷனைவிட மனைவி கெட்டிக்காரி என்று பெயர் எடுக்கப் புருஷன் இடம் கொடுக்கமாட்டானாம். அதனால்தான் அவள் படிப்பை நிறுத்திவிடச் சொன்னேனாம். என் பொறாமையைப் பற்றி எப்பொழுதாவது ஒருதரம் அவள் சொல்லிக் காட்டாமல் இருப்பதில்லை.”

மன்னி, பரிமாறிக்கொண்டிருந்தவள், லேசாகச் சிரித்தாள். கோபாலன் அதைக் கவனித்தார். அவர் முகத்திலும் கொஞ்சம் சிரிப்பு உதயமாயிற்று. ஆனால் அதே க்ஷணம் அவர் என் பக்கம் திரும்பினாற்போல் இருந்தது. மோர்க்குழம்புடன் நான் வந்து கொண்டிருந்தேன். அவர் தலை நிமிரவில்லை. ஆனால் புருவத்தைச் சுளித்துக்கொண்டிருந்தார். முன் மாதிரியே ஏதோ சந்தேகம், வேதனை, ஆச்சரியம், எல்லாம் கலந்த பாவனை முகத்தில் தோன்றி யது. முகமும் சிவந்தது. அடுத்த க்ஷணம் எப்பொழுதும்போல் ஆகிவிட்டது. 

அடுத்தாற்போல் அண்ணா என்னைப்பற்றிப் பேச்சு எடுத்தார். ஏனோ நம்முள் தீவிர தேசீயவாதிகள்கூடச் சில சமயம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துவைக்க இங்கிலீஷ்தான் உபயோகிக் கிறார்கள்? அறிமுகம் செய்விப்பதற்குத் தகுந்த வார்த்தைகள் தமிழில் இல்லையா? ஆனால் இந்தத் தடவை அண்ணா ஸஹஜமான தமிழில்தான் பேசினார். நான கட்டிக்கொண்டிருந்த கதர் புடைவைக்கு இங்கிலீஷ் பொருத்தம் இல்லை என்று அவர் மனசில் பட்டதோ, என்னவோ? 

“கோபு, இவளைத்தான் முன்பே பார்த்திருக்கிறாயே.என் தங்கை, ஸரோஜா; பார்த்தால் சுத்த நாட்டுப்புறமாயில்லை? நிரக்ஷரகுக்ஷி என்றால் இவளுக்குத்தான் தகும். ஒரு வார்த்தை அனாவசியமாகப் பேசமாட்டாள். ஆனால் பி.ஏ. ஆனர்ஸ். அதிலேயும் ‘லிட்ரேச்சர்’ பரீக்ஷை எழுதி முடிந்ததும் நேரே எங்களுக்கு ஒத்தாசைக்கு வரவேணும் என்று இங்கே வந்திருக்கிறாள். ‘ரிஸல்ட்’ வரும் வரையிலாவது இங்கேதான் இருப்பாள். அப்புறம், அவள் நினைக்கிறபடி, ‘பஸ்ட் க்லாஸ் வந்துவிட்டால் ஏது,இப்பொழுது பேசும் ஓரிரண்டு வார்த்தை கூட நம்மோடு பேசுவாளோ மாட்டாளோ! வீட்டில் காமுவுக்கும் எனக்கும் வருகிற சண்டைக்கெல்லாம் இவள்தான் காரணம். அவ்வளவு திரிசமம்.” 

அண்ணா இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை இப்பொழுது அடக்க முடியவில்லை. கட கடவென்று சிரித்தார். கோபாலனும் அதில் கலந்துகொள்வார் என்றுதான் அண்ணா எதிர்பார்த்தார். கோபாலன் ஏதோ பேச வாய் எடுத்தார். ஒன்றும் பேசாமலே இருந்துவிட்டார். 

அவர்கள் சாப்பிட்டு ஹாலிற்குப் போன பிறகு, அதாவது நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபொழுதுதான், முதல் முதல் கோபாலனுடைய கலகலப்பான குரல் எங்கள் காதில் விழுந்தது; ”அப்படியா? எனக்குத் தெரியாதே” என்றார். பிறகு இருவரும் வெகு ஸஹஜமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். புறப்படும் பொழுதுகூடக் கோபாலன் உள்ளே வந்து எங்களிடம் சொல்லிக் கொண்டு போனார். ஆளே இப்பொழுது வேறு என்று தோன்றி யது. முகத்தில் அவ்வளவு பிரகாசம்! 


இன்று ‘ரிஸல்ட்’ வந்தது. சிநேகிதர்கள் கடிதங்களுங்கூட. எங்கிருந்தும் வாழ்த்துகள். 

சாயந்தரமாகக் கோபாலன் வந்தார். அவர் இப்பொழுது தினம் வருகிறார். அவர் வந்ததும் ராஜுவைக் கையில் எடுத்துக் கொள்வார். ராஜுவின் வாயிலிருந்து புதிது புதிதான அர்த்த மில்லாத தொனிகள் கிளம்பும். அதற்கெல்லாம் அவர் தூண்டுதல் தான் முக்கியமான காரணம்.அவர் குரல் கேட்டுவிட்டால் போதும். மன்னி மடியில்கூடத் தரிக்கமாட்டான். கையைக் காலை உதைத்துக் கொண்டு பக்ஷிகளைப்போல ஏதோ கத்துவான். குழந்தையின் மழலைக்கு ஒத்து அவர் பேசுவது, கேட்க ஆனந்தமாயிருக்கும். 

நித்தியம் அஸ்தமன நேரம் வரை, அரை மைல் ஒரு மைல் சாலையோடு வெளியே எங்களை உலாவ அழைத்துச் செல்வார். குழந்தை அவர் கையில் இருக்கும். ஏதாவது பேசிக்கொண்டே மெள்ளப் போய்வருவோம். எங்களைத் தவிர மற்ற எல்லாவற் றையும் பற்றிப் பேசிக்கொள்வோம். 

இன்று மன்னி, கூடவரச் சௌகரியப்படவில்லை. எனக்கு வீட்டில் இருப்புக் கொள்ளாததால் வெளியில் அவருடன் புறப்பட்டேன். கால்போன வழியே வெகு தூரம் போனோம். தாழ்ந்த, மிருதுவான குரலில் அவர் பேசிக்கொண்டே வந்தார். அவ்வளவையும் நான் அமுதமாகப் பருகினேன். மாலை வேளையும், பக்ஷிகள் மேலே இரைந்துகொண்டே கூட்டை நோக்கிப் பறப் பதும், மரங்களின் உச்சியில் பொழிந்து தங்கிய பொன் கிரணக் கிரீடமும், நாள் முழுவதும் அயர்ந்துகிடந்த காற்று விழித் தெழுந்து விர்ரென்று வீசியதும், சாலையின் அமைதியும் எல்லாம் அனுகுணமாக இருந்தன. அன்று அவரே வெகு நேரம் பேசிக் கொண்டு வந்தார். 

தாம் வெகு நாள் தேடிய வஸ்து இப்பொழுதுதான் புதையலைப் போலத் தமக்குக் கிடைத்ததென்று சொன்னார். பெண்களில் இரண்டு விதந்தான் அவர் கண்களில் எங்கும் பட்டனவாம். தலையைக் குனிந்துகொண்டு கால் கட்டைவிரலைக் கவனித்துக்கொண்டே போகிறவர்கள் ஒரு தினுஸு. இவர்கள் கண்கள் மாத்திரம் எல்லாவற்றையும் கிரகித்துக்கொண்டுதான் வரும். தனிமையில், அல்லது மற்றப் பெண்களோடு பேசுவதற்கு நகை, புடைவை, முதலிய நாலைந்து விஷயங்களைத் தவிர வேறொன்றும் இவர்களுக்குத் தெரியாது. 

மற்றொரு வகை, அரை குறைப் படிப்பாம். யாரையும் வெறிச்சென்று கூசாமல் பார்ப்பது; தெரிந்த இங்கிலீஷ் எல்லாம் கொட்டி வலிய எந்தச் சம்பாஷணையிலும் கலந்துகொள்வது; இதுதான் இவர்கள் அடையாளமாம். வாழ்க்கையின் அடிப் படையான ஆத்ம உணர்ச்சி முதலியன வர்களின் நவநாகரிக் வாழ்க்கையில் இடம் பெறவில்லையாம். 

படிப்பு,அதோடு அமரிக்கை, அடக்கம்: இவற்றைத்தான் அவர் இத்தனை நாள் தேடிக்கொண்டிருந்தாராம். உயிர் தழைக்கச் செய்யும் உண்மை உணர்ச்சி வெள்ளம் எங்கே வற்றாது பெருகு கிறது என்றும் கவனித்துவந்தாராம். தனக்குத் தெரிந்ததை வெளிக்காட்ட வேண்டும் என்ற எண்ணமில்லாமல், பிறருடைய மனப்பான்மையை’ முதலில் சட்டென்று கிரகிக்கும் சூக்ஷ்ம உணர்ச்சி கிடைக்குமா?’எங்காவது என்று ஏங்கிப்போயிருந்தா ராம். அழகை விட முகத்திலுள்ள குறுகுறுப்பு முக்கியம், அதையும் விட ஒரு பெண்ணின் கண்களிலுள்ள நேரான, திடமான, தெளிந்த பார்வை முக்கியம் என்பது அவர் கருத்தாம். என்னை அழகு என்றும் சொல்ல முடியாது, அழகு இல்லை என்றும் சொல்ல முடியாது; அப்பேர்ப்பட்ட நிலைதான் உயர்ந்தது என்று சொன்னார். “ஆத்மாவின் அழகு நடையுடை பாவனை ஒவ்வொன் றிலும் பிரதிபலிப்பதைவிடக் கண்களில்தான் அதிகம் ஒளிர் கிறது; அம்மாதிரியான கண்களுக்குத்தான் நான் இப்பொழுது அடிமையாகிவிட்டேன்!” என்று என்னவெல்லாமோ சொன்னார் 

உலக அனுபவம் வாய்ந்த அவருடைய சொல் ஒவ்வொன்றும் கண்யமாயும் ஆழ்ந்த பொருள் உடையதாயும் இருந்தது. வீடு திரும்பினபொழுது அங்கே வேறு விருந்தினர்கள் வந்திருந்தது தெரிந்தது. எல்லோரும் சாப்பிட்டான பிறகு நான் வந்தவர் களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுத்து அவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். அண்ணாவும் மன்னியும் கோபாலனை வழியனுப்பிவிட்டு வந்தார்கள். 

ஆனால் அன்றிலிருந்து மன்னிக்கு என்னோடு அதிகம் பேச ஒழிகிறதில்லை. அவள்தான் கல்யாண திட்டத்தில் முனைந்திருக் கிறா ளே! ஜவுளிக் கடை, பாத்திரக்கடை முதல் சமையல் ஏற்பாடு வரை எல்லாவற்றிற்கும் அவளே சர்வாதிகாரியல்லவா? 


இன்னும் நான்கே நாள் பாக்கி. இன்று வீட்டில் சீக்கிரமாக மூவரும் படுத்துக்கொண்டுவிட்டோம். அலைச்சலும் ஆயாஸமும் அதிகம் மன்னிக்கு. இருந்தாலும் அண்ணா ஏதோ சொல்லிக் கொண்டே வந்தார். மன்னியின் குரல் கடைசியில் எழுந்தது. ஐயோ, இவ்வளவு அசடாகவா உங்கள் தங்கைக்கு வாய்க்க வேணும்? ஒரு வீட்டிற்குப் போனால் அங்கே எத்தனையோ பேர் இருப்பார்கள்.”

“இல்லை,இல்லை. அன்று உன்னைக் கோபு பார்க்கவேயில்லை. ஸரோஜாவை மாத்திரந்தான் பார்த்தான். அவன் அப்படி முதலில் நினைத்ததில் தப்பில்லை. ஆனால் இரண்டாம் தடவை வந்தானே,சாப்பிடக் கூப்பிட்டிருந்தோமே, நினைவிருக்கிறதா?” 

“நினைவில்லாமல் என்ன? நான் பண்ணின பிடிவாதந்தான் அது. அன்றைக்கே நான் இரண்டு பேருக்கும் முடிச்சுப் போட்டு விட்டேன். என் திட்டப்படியே நடந்ததா இல்லையா? துளியாவது பிசகு உண்டா, சொல்லுங்கள்.” 

“அதெல்லாம் சரி; உன் சமர்த்து யாருக்கு வரும்? இன்னொன்று அல்லவா சொல்லவந்தேன்: சாப்பிடும்பொழுது ஸரோஜா என் தங்கை என்று நான் சொன்ன பிறகுகூட அவன் கலக்கம் தீரவில்லையாம். கல்யாணம் ஆகியிருக்கும் என்றே நினைத்தானாம். அன்றைக்கு ஹாலில் நானாகச் சொல்லாமல் போனால் இன்றுவரை கூட அப்படியே நினைத்துத்தான் வேதனைப் பட்டுக்கொண்டிருப்பான். வீட்டு வழி மறுபடி வந்திருக்க மாட்டான்.” 

“ஒரு பெண்ணைப் பார்த்தால் கல்யாணம் ஆனதும் ஆகாததும் கூடவா தெரியாமல் போய்விடும்?” 

“நெற்றியில் என்ன எழுதி ஒட்டியிருக்கிறதா? அதுவும் நீங்கள் எல்லோரும் இப்பொழுது ஒரேவிதமாக வேறு புடைவை உடுக்கிறீர்கள்; எப்படித் தெரியும்? நான் உன்னை முதலில் காலேஜ் எக்ஸிபிஷனில் பார்த்தபோது என்ன நினைத்தேன் தெரியுமா? மற்றப் பெண்களைவிட ஒரு முழம் உயரமாகக்கூட இருந்தாய் நீ!” 

“ஐயோ, போதுமே! புருஷர்களெல்லாம், ஆனாலும் இவ்வளவு அசடாயிருக்க வேண்டாம். அதிலும் உங்கள் சிநேகிதர் முழு அசடு, வடிகட்டின அசடு” என்றாள் அழுத்தம் திருத்தமாக. 

நான் ‘களுக்’கென்று என்னை அறியாமல் சிரித்துவிட்டேன். மன்னி காதில் விழுந்திருக்கும். தர்க்கம் அதோடு நின்றுவிட்டது.

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *