பிடிவாதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 29, 2024
பார்வையிட்டோர்: 5,187 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முத்துக்குமர செட்டியார் தம் உறவினரின் முகத்தைச் சற்று ஆச்சரியத்துடன் நோக்கினார். அவர் கூறியதை இவரால் சரிவரக் கிரகிக்க முடியவில்லை. தமது கேள்விக்கு இவ்வித விடை கிடைக்குமென்றும் அவர் எதிர்பார்க்கவில்லை.

“என்ன?”என்று மறுபடியும் கேட்டார்.

“நான் போன காரியம் பலிக்கவில்லை. அவ்வளவுதான். அவள் வர மாட்டாளாம். அவளுடைய சிற்றப்பாவாகிய உன் மாமன் அவளைக் கட்டாயப்படுத்த மாட்டேன் என்று சொல்லிவிட்டார். ‘அவளாகப் போவதென்றால் போகட்டும்; எனக்குச் சந்தோஷம். அவள் மாட்டேன் என்றால் நான் ஒன்றும் சொல்லமாட்டேன்’ என்று சொல்லிவிட்டார்.”

“ஏன் வரமாட்டாளாம்?”

“நான் ஏதோ இங்கே என் வேலையைச் செய்து கொண்டு திருப்தியாக இருக்கிறேன். இதை விட்டுவிட்டு எதற்காக வரவேணும்?” என்று கேட்டாளாம்.

“எதற்காக வரவேணுமா? புருஷன் வீட்டிற்கு மனைவி வருவது ஒழுங்குதானே! எதற்காக வரணும்னு கேட்பானேன்?”

செட்டியாரின் அத்தான் மெளனமாக இருந்தார். அவருக்கு அபிராமியைத் தாம் சந்தித்த சமயம் அவள் கூறிய வார்த்தைகள், ஆணி போன்ற அழுத்தமான வார்த்தைகள் ஞாபகம் வந்தன.

“புருஷன் வீட்டிற்கு மனைவி வருவது ஒழுங்கு அல்லவா?” என்ற இதே வார்த்தையை அவரும் அபிராமியைக் கேட்டிருந்தார்.

“புருஷன் என்பவன் யார்? பெண்டாட்டியை ரட்சித்துக் காப்பவன் புருஷன். பத்து வருஷமாகத் திரும்பிப் பாராமல் இருந்துவிட்ட பிறகு இப்பொழுது புருஷன் முறை எங்கிருந்து வந்தது?” என்று அவளுடைய நயமான குரலில் அவள் எதிர்க் கேள்வி கேட்டாள். அவளுடைய முகத்தில் கோபம் தாபம் எதுவும் இல்லை. நிதானமும் தன்னடக்கமுமே இருந்தன. ஒரு நியாயாதிபதி கேட்பது போன்ற, உணர்ச்சியில்லாமல் கேட்கப்பட்ட அந்தக் கேள்விக்கு அவரால் விடை கூறவே இயலவில்லை.

“என்னவோ அறியாப் பிள்ளையாக இருந்துவிட்டான். இப்போது திருந்தி இருக்கிறான். ரொம்ப நல்லவன்; குணசாலி. தப்புத் தண்டா வேலை எதுவும் செய்யமாட்டான். அவன் கிட்ட எல்லாருக்கும் மதிப்பு ஜாஸ்தி” என்று இவர் மேன்மேலும் முணுமுணுத்துக்கொண்டே போனார். அபிராமி அவரைத் தடுக்கவே இல்லை. அவர் சொல்வதை மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவர் முடித்ததும், “இது வரையில் அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு அவரிடம் மதிப்பை உண்டாக்கவில்லை. நானும் மதிக்கும்படி அவர் நடந்து கொண்டால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்” என்றாள். அவள் முகத்தில் சிறியதான ஒரு புன்சிரிப்புத் தோன்றி மறைந்துவிட்டது.

“புருஷர் சற்று ஏறுமாறாக இருந்தாலும் பெண்கள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். தெரியாதவன், செல்லப்பிள்ளையாக வளர்ந்தவன்; போனால் போகிறது என்று பொறுத்துக்கொள். நீ எவ்வளவோ படித்திருக்கிறாய். எல்லாம் தெரிந்துகொண்டிருக்கிறாய். அவன் இப்போது உன்னைப் பார்க்கவில்லை. பார்த்தால் உன் சாமர்த்தியத்தைக் கண்டு உன் அடிமை ஆகிவிடுவான். பெட்டிப் பாம்பாக இருப்பான்” என்று அவர் மேன்மேலும் கூறினார்.

இச் சமயம் அபிராமி களுக்கென்று சிரித்துவிட்டாள். “சபாஷ், அத்தான். தூதுக்கு நீங்கள் மிகவும் ஏற்றவர்” என்று கூறிவிட்டு எழுந்து கைகளைக் கூப்பி, “என்னை மன்னிக்க வேண்டும். எனக்குப் பள்ளிக்கூடம் போக நேரமாகிவிட்டது” என்று சொல்லி மறு பேச்சில்லாமல் போய் விட்டாள். அவளைத் தடுத்து நிறுத்திப் பேச அத்தானுக்குத் தைரியமில்லை. அவள் தன்னைக் கேலி செய்கிறாள் என்று இவருக்குக் கலக்கம் உண்டாயிற்று. இதனால் அந்தச் சம்பாஷணையின் தொடக்கத்தில் இருந்த சொற்பத் தைரியமும் போய்விட்டது. மறு ரெயிலில் புறப்பட்டுச் சென்னை வந்து சேர்ந்தார்.

***

“ஏன் வரமாட்டேன் என்கிறாள்? சொல்லுங்கள்” என்று செட்டியார் தம் அத்தை மகனை மறுபடியும் வற்புறுத்திக் கேட்டார்.

“அவள் என்னவோ சொல்கிறாள்.”

“என்ன சொல்லுகிறாள்?”

“அதெல்லாம் உனக்கு எதுக்கு அப்பா? அவள் பெரிய இஸ்கூலிலே வாத்தியாரம்மாவாக இருக்கா; அதை விட்டு வர இஷ்டமில்லையோ என்னவோ!”

“அந்தக் காரணமா சொன்னாள்?”

“நான் இங்கே திருப்தியாக இருக்கிறேன்னு சொன்னா! அப்புறம்…” என்று தயங்கினார் செட்டியார்.

“அப்புறம் என்ன?”

அத்தான் நல்ல மனசு படைத்தவர். அபிராமி கூறியதை முத்து விடம் சொன்னால் வருத்தப்படப் போகிறானே என்று இதுவரையில் சரியான விடையைச் சொல்லாமல் தட்டிக் கழித்து வந்தார். இப்பொழுது முத்து கட்டாயப்படுத்தவே, “என்னவோ, அவள் மதிக்கும்படி நீ இதுவரையில் நடந்து கொள்ளவில்லையாம். அப்படிச் செய்தால் வருகிறேன் என்கிறாள்” என்றாள். இதைக் கூறிவிட்டு முத்துவின் கோபம் அதிகமாகி விடப்போகிறதே என்று பயந்து தயக்கத்துடன் அவர் முகத்தை நோக்கினார்.

முத்துவின் கோபம் அதிகமாகவில்லை. அதற்கு மாறாக அது தணிந்து விட்டதோ என்றுகூட அத்தானுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. ஒரு சிரிப்புக்கூட அவர் கண்களில் தோன்றி மறைவதை அத்தான் கவனித்தார். என்ன ஆச்சரியம்! இவ்வார்த்தைகளை அபிராமி கூறிய சமயம் அவள் கண்களில் எவ்விதப் பிரகாசம் இருந்ததோ அதே மாதிரிப் பிரகாசம் இப்பொழுது முத்துவின் கண்களில் தோன்றி மறைவதை ஒன்றும் அறியாத அப்பாவியான அத்தான் கவனித்து வியந்தார்.

முத்துவின் அடுத்த வார்த்தைகள் அவருடைய கோபம் இன்னும் தணியவில்லை என்பதைக் காண்பித்தன.

“சரி, புரிந்துகொண்டேன். இனிமேல் அவளைப்பற்றி என்னிடம் பேசாதீர்கள்” என்றார்.

“பார்க்க என்ன வோ நல்லாத்தான் இருக்கா. நகை ஒண்ணும் பூட்டிக்கலே. கிறிஸ்துவச்சி மாதிரி ஆயிட்டா. ஆனால்…”

“போதும், அவள் பேச்சே வேண்டாம்.”

அத்தான் வாயை மூடிக்கொண்டார்.

***

அபிராமியின் வார்த்தைகள் செட்டியாரின் மனத்தில் பலவித உணர்ச்சிகளை உண்டாக்கின. தம்மை அவமரியாதை செய்வதற்கென்று மாத்திரம் கூறப்பட்ட வார்த்தைகள் அல்ல அவை, தம்மைச் சண்டைக்குத் தூண்டும் வார்த்தைகள் என்பதை இவர் சட்டென்று புரிந்து கொண்டார். ஆனால் அதுவே இவருக்கு ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. ‘மூன்பு இருந்த அபிராமியா இவள்? இந்தப் புது அபிராமியை அறிய வேண்டும்’ என்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது.

முன்பு இருந்த அபிராமியை இவர் தமது ஞாபகத்திற்குக் கொண்டு வர முயன்றார்.

இவருக்குப் பால்ய வயசிலேயே விவாகம் ஆயிற்று. இவருடைய தகப்பனாருக்கு மிக நெருங்கிய நண்பர் கறுப்பண்ணச் செட்டியார் என்பவர் தாம் வளர்த்துவந்த தாய் தந்தையற்ற அபிராமியை மிகப் பணக்காரரின் ஒரே பிள்ளையாகிய இவருக்கு விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று பெண்ணிற்கு எட்டு வயசு முதல் முனைந்து கொண்டிருந்தார். பெண்ணிற்குப் பதினான்கு வயசில் கல்யாணமும் நிச்சயமாயிற்று. “பெண் சிவப்பாக இருக்கிறது; நிறைய நகை போட்டிருக்கிறாள்; அது போதும் நமக்கு” என்று இவருடைய தகப்பனார் கூறிவிட்டார். விவாகம் விமரிசையாக நடந்தேறிற்று.

இவருக்குப் பெண் பிடிக்கவில்லை. மிகச் செல்வமாக வளர்க்கப்பட்ட அபிராமிக்குச் சரீரமும் சற்றுப் பலவீனமானது. மழை என்றால் ஜுரம், வெயில் என்றால் தலைவலி. ஆகையால் அவளைப் பள்ளிக்கூடங்கூடச் சரியாக அனுப்பாமல் அவளுக்குக் கமல நகைகள் செய்து போடுவதிலேயே கருத்துடன் கறுப்பண்ணர் இருந்துவிட்டார் என்பதை முத்துக்குமாரர் அறிந்தார்.

முத்து தம் மனைவியுடன் பத்தே தினம் பழகினார். அவளுக்குப் பேசத் தெரியவில்லை. சிரிக்கத் தெரியவில்லை. இவர் சற்றுக் கடுத்தால் அழ ஆரம்பித்துவிடுவாள். இவரிடம் பயப்பட்டு நடுங்கினாள். சரியான தேகவளர்ச்சி பெறாத அவளை அவள் அணிந்திருந்த கமல நகைகள் ஒரு பொம்மையைப்போல் காண்பித்தன.

வெறுப்புற்ற செட்டியார் மனைவியை உதறிவிட்டுச் சென்னைக்குப் போய்விட்டார். அப்போது இவருக்கு வயசு பதினெட்டு. பிற்பாடு தகப்பனார் எவ்வளவு மன்றாடியும் அவளைப் பார்க்க மறுத்துவிட்டார். வேறு விவாகம் செய்யவும் மறுத்தார். அதற்குமேல் இரண்டு வருஷத்தில் தகப்பனார் மரிக்கவே அவருடைய தொந்தரவும் நின்றது.

காலேஜில் இவர் நன்றாகப் படித்து முதல் வகுப்பில் தேறினார். மேல் படிப்பிற்கு இங்கிலாந்து போகுமாறு காலேஜ் உபாத்தியாயர்கள் கூறவே, அவ்விதமே சென்று அங்கே நாலைந்து வருஷங்கள் படித்துத் தேறித் தம் தேசம் திரும்பிவந்தார். அதற்குமேல் சென்னையிலேயே தம் பாடமாகிய ரசாயனத்தில் ஆராய்ச்சி செய்வதற்கு ஒரு ரசாயனசாலை ஏற்படுத்திக்கொண்டு விஞ்ஞான ஆராய்ச்சியில் முனைந்தார். அவ்வித வேலையில் மேன்மேலும் பற்று ஏற்படவே இதர விஷயங்களின் தொந்தரவு அவருக்குப் பிடிக்கவில்லை. வீட்டைக் கவனிப்பது, தகப்பனார் வைத்துச் சென்ற சொத்துக்களைக் கவனிப்பது எல்லாம் யார்? மேலும் நாலைந்து மணி நேரம் ஆராய்ச்சி செய்துவிட்டு வெளியே வந்தால் வீட்டில் வேறு எவரும் இல்லாமல் தாம் ஏகாங்கியாய் இருப்பது இவருக்கு அருசியை உண்டாக்கிற்று. வேறு மானிடர் தோழமையை அவர் மனம் நாடிற்று. நண்பர்களை அடிக்கடி அழைத்துத் தம் வீட்டிலேயே வைத்துக்கொள்ள அவர் முயன்றார். ஆனால் அவர்களுக்கு இவருடைய ஆராய்ச்சி விஷயங்களில் சிறிதும் பற்று இல்லாமையால் சீக்கிரமே போய்விடுவார்கள்.

இவ்விதம் இருக்கையில் தான் அவருக்குத் தம் மனைவியைப்பற்றி அடிக்கடி சிந்தை உண்டாயிற்று. அவள் விஷயத்தில் தாம் நடந்து கொண்டது தவறோ என்று கூடச் சந்தேகிக்கலானார். ‘அவள் இங்கு வந்து இருந்தால் வீட்டுத் தொல்லை இல்லாமல் இருக்கலாம்; நமது வேலைக்கும் இடையூறு இருக்காது’ என்ற எண்ணத்துடன் வயோதிகரான அத்தானை அழைத்து இந்தத் தூது வேலைக்கு இசையுமாறு செய்தார். அப்பொழுது தான் அத்தானின் மூலம் தம் மனைவி படித்துத் தேறித் தம்முடைய ஊரிலேயே ஒரு பள்ளிக்கூடம் அமைத்துக்கொண்டு ஓர் உபாத்தியாயினியாக இருக்கிறாள் என்பதை அறிந்தார்.

தாம் அழைத்ததும் அவள் வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். அவள் வராதது மாத்திரம் அல்ல. அவளுடைய வார்த்தைகள் இவரைத் திடுக்குறச் செய்தன. முன் இருந்த அபிராமியா இவள்!

அத்தான் வந்து போன பிறகு இரண்டு தினங்கள் வரையில் செட்டியார் சும்மா இருந்தார். அதற்குமேல் யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் திடீரென்று ஒரு நாள் மாலை ரெயிலேறிச் செட்டி நாடு சென்றார்.

இவர் தம் மாமன் வீடு சென்ற சமயம் பகல் மணி பதினொன்று இருக்கும். ஸ்டேஷனிலிருந்து ஒரு வாடகை வண்டியில் வந்திருந்தார். வாசலில் எவரும் இல்லை. உள்ளே கூடத்தில் ஓர் ஊஞ்சல் பலகையில் கறுப்பண்ணர் படுத்திருந்தார். இவரைக் கண்டதும் எழுந்து உற்று நோக்கியவாறே. “யார், தெரியல்லியே!” என்றார்.

முத்துக்குமாரருக்குக் கறுப்பண்ணரைப் பார்த்த போது நெஞ்சம் உருகியது. முன்பு விவாக சமயத்தில் அவருக்கு இருந்த உற்சாகமும், ஆசையும், தமக்குப் பெரிய இடத்து மாப்பிள்ளை கிடைத்துவிட்டார் என்ற பெருமையும் என்ன! இந்தப் பத்து வருஷத்தில் இவ்வளவு மாறுதலா?

“நான் தான் முத்து” என்றார். ஆனால் இவர் அந்த வார்த்தையைக் கூறுவதற்கு முன்பே கறுப்பண்ணர் இவரை அடையாளம் கண்டுகொண்டார். மிகப் படபடப்புடன், “வா, வா, உட்காரு” என்று கூறித் தம் மனைவியிடம் தெரிவிப்பதற்காக அவசரமாக நான்கு அடி எடுத்து வைத்தவர். தொப்பென்று விழுந்துவிட்டார். முத்து அவரைத் தூக்கி எடுத்து ஊஞ்சலில் மெதுவாகப் படுக்கவைத்தார்.

அவர் படுக்க மாட்டேன் என்று எழுந்து உட்கார்ந்து கொண்டு, “ப்பா, முத்து, வந்தாயா. வந்தாயா?” என்று உணர்ச்சி மிகுதியால் வாய் குழறக் கூறினார்.

முத்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தார்.

இதற்குள் கறுப்பண்ணரின் மனைவி மீனாக்ஷி உள்ளேயிருந்து வந்து தன் கணவர் பக்கத்தில் மருமகப்பிள்ளை உட்கார்ந்திருப்பதைக் கண்டு பிரமித்து நின்றாள். கிழவனார், “காபி கொண்டு வா” என்று அவளை அதட்டினார். அவள் சந்தோஷ மிகுதியால் பேச முடியாமல் உள்ளே சென்றாள்.

அவர்களுக்குத் தாம் தீங்கே செய்திருக்கவும் அவ்விருவரும் எல்லாவற்றையும் மறந்து தம்மிடம் காண்பித்த அன்பைக் கண்டு முத்துவின் மனம் உருகிற்று. இருந்தும் தாம் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து, “என் காரியஸ்தனைப் பார்க்க வந்தேன். இன்றே திரும்பிப் போக வேண்டும்” என்றார். கிழவனார் முகம் குன்றிற்று. முத்துவைக் கண்டதும் அபிராமியை நேரில் அழைக்க: வந்திருக்கிறார் என்ற ஆசை அவருடைய உள்ளத்தில் எழுந்தது. ஆனால் இவ்வார்த்தைகள் அதை அடக்கின. கிழவனாரின் ஏமாற்றத்தை முத்து, கவனிக்காமல் இல்லை. இருந்தும் தமது மிருதுவான குரலில் தாம் பேசும் வழக்கப்படி, பதற்றமில்லாமல், தம் நிலம், அந்த ஊரில் இருக்கும் தம் வீடு, கணக்குப் பிள்ளையின் வேலைகள் முதலியவற்றைப் பற்றிச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். தகப்பனார் போன பிறகு தாம் இந்தப் பக்கமே வராமலிருந்ததனால் பல காரியங்கள் கெட்டிருப்பதைப்பற்றி வருத்தம் தெரிவித்தார். கறுப்பண்ணரின் குடும்ப க்ஷேமத்தை விசாரித் தார். மீனாக்ஷி காபி கொண்டுவந்தாள். முத்து கை கால்களைக் கழுவிக் கொண்டு காபி குடித்துவிட்டு, “சரி,நேரமாகிறது. நான் போய் வருகிறேன்” என்றார்.

பள்ளிக்கூடத்தில் இருந்த அபிராமியை அழைத்து வருமாறு ஆள் அனுப்பலாமா என்று மீனாக்ஷி கறுப்பண்ணரைக் காதோடு கேட்டாள். மூத்துக்குமாரருக்குப் பாம்புச் செவிபோலும்! “இல்லை, வேண்டாம்” என்று அதற்கு விடையைத் தாமே கூறிவிட்டார். கறுப்பண்ணரும் மீனாக்ஷியும் எதுவும் சொல்ல இயலவில்லை.

“போய் வருகிறேன். மறுபடியும் வந்தால் இங்கே வந்து பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு முத்துக்குமாரர் விடைபெற்றுச் சென்றார்.

கறுப்பண்ணரும் மீனாக்ஷியும் திரும்பத் திரும்ப மருமகன் வந்து போன விஷயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டனர். ஆனால் ஏன் வந்தார் என்பது மாத்திரம் புரியவில்லை. “என்ன மரியாதை, என்ன குணசாலி, பார்த்தாயா?” என்றார் கறுப்பண்ணர்.

“எவ்வளவு அழகாய்விட்டார்! முகத்திலே என்ன பவுசு! உயரமும் பருமனுமாக ஆகிவிட்டாரே?”என்றாள் மீனாக்ஷி.

“அபிராமி பிடிவாதம் செய்கிறாளே!” என்று வருத்தப்பட்டார் கறுப்பண்ணர்.

அபிராமி மாலையில் வந்ததும் இருவரும் நடந்தவற்றை விஸ்தரித்தார்கள். திரும்பத் திரும்ப அவர் குணத்தைப் புகழ்ந்தார்கள். மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அபிராமி அவர்கள் முடித்ததும், “போதும், அவர் பேச்சை இனி என் எதிரில் பேசாதீர்கள். பத்து வருஷகாலமாய் நான் கஷ்டப்பட்டதை என்னுடன் கூட இருந்து பார்த்துக்கொண்டிருந்தீர்கள். இப்போது ஒரு நாள் அவர் வந்து உங்களைப் பார்தது ஒரு சிரிப்புச் சிரித்தால் உடனே நல்லவர் ஆகிவிட்டாரா? நான் இந்த வீட்டில் இருக்க வேண்டுமானால் அவர் பேச்சை என் எதிரில் இனிப் பேசுவதில்லை என்று நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும். இல்லாவிடில் நான் இங்கே இருக்க மாட்டேன்” என்றாள். அபிராமியின் பிடிவாதத்தை இந்தப் பத்து வருஷங்களாக அவர்கள் நன்கு அறிவார்கள். ‘நான் படிக்க வேண்டும்; எனக்கு நல்ல வாத்தியாரம்மா வைத்துக் கொடுங்கள். இல்லாவிட்டால் நான் ஓடிப்போய்விடுவேன்’, ‘நான் சென்னையில் போய் வாத்தியாரம்மாளாகப் பயிற்சி பெறப்போகிறேன். போகத்தான் போகிறேன்’, ‘சென்னையிலிருந்து திரும்பி வந்ததும், நான் ஒரு பள்ளிக்கூடம் வைக்கப்போகிறேன்’. இப்படி ஒவ்வொன்றுக்கும் அவர்கள் விட்டுக் கொடுக்கும்படி ஆயிற்று. இந்த முறையும் இருவரும் ஒப்புக் கொள்ளும்படி ஆயிற்று.

இரண்டு வாரம் கழித்துச் செட்டியார் மறுபடியும் ஒரு தினம் திடீரென்று வந்தார். இந்த முறை வெறுங்கையுடன் வராமல் கறுப்பண்ணருக்கென்று ஒரு கூடை உயர்ந்த வகைப் பழங்களும், மீனாக்ஷிக்கு ரவிக்கைக்குப் பட்டுத் துணிகளும் வாங்கி வந்திருந்தார். மீனாக்ஷி சாப்பிட்டுவிட்டுப் போகவேண்டுமென்று வற்புறுத்தவே, சம்மதித்துச் சாப்பிட்டார். மீனாக்ஷியின் சமையலை வெகுவாய்ப் புகழ்ந்தார். கறுப்பண்ணரிடம் மிக விசுவாசத்துடன் பேசினதும் அல்லாமல் தம் நிலம், சொத்து இந்த விவகாரங்களில் எவ்வாறு நடந்துகொள்வது என்றெல்லாம் கறுப்பண்ணரைக் கேட்டார். அவருடைய அநுபவம் நிறைந்த வார்த்தைகள் தம் மனத்தில் ஆழமாகப் பதிவதாகவும் காண்பித்துக்கொண்டார்.

அன்றும் அபிராமி மாலையில் வீட்டுக்கு வருவதற்குள் இவர் ரெயிலேறி ஊருக்குப் போய்விட்டார்.

அபிராமியிடம் மீனாக்ஷி ரவிக்கைத் துணிகளையும் பழங்களையும் காண்பித்தாள். அவள் மௌனமாக இருக்கவே, தைரியம் பெற்று நடந்தவை முழுவதையும் சொன்னாள். கறுப்பண்ணரும் மருமகப்பிள்ளை, தம்மை யோசனை கேட்கவே முக்கியமாக வந்தார் என்றார். பாவம், அப்பாவிகளான அவ்விருவரும் சென்னையிலும் சீமையிலும் படித்துத் தேறின அந்தத் தந்திரக்காரச் செட்டியாரின் கையில் களிமண் போலவே ஆயினர் என்பதை அபிராமி உணர்ந்தாள். கோபமும் ஆத்திரமும் அவளுடைய் உள்ளத்தில் பொங்கி எழுந்தன. என்ன செய்வது? தன் சுற்றத்தாரை இவ்விதம் தான் இல்லாத சமயத்தில் வந்து வசப்படுத்திக்கொண்டு தன் காலின் கீழே பள்ளம் பறிக்கிறார் கணவர் என்பதை அவள் உணர்ந்தாள். பற்களை நறநறவென்று கடித்தாள்.

லேடி ஆறுமுகம் அதே ஊரில் பிறந்து வளர்ந்த பெண். முத்துக் குமாரரின் பந்து! அவர் சென்னையிலிருந்து செட்டிநாடு வழியாக ராமேசுவரம் போகப்போகிறதாக மறுதினம் பத்திரிகையில் அபிராமி படித்தாள். உடனே உட்கார்ந்து அவருக்குத் தமது பள்ளிக்கூடத்தின் வருஷக் கொண்டாட்டத்திற்குத் தலைமை வகிக்க வேண்டுமென்று மிக வணக்கமாய்க் கடிதம் எழுதினாள். ‘இந்த ஊர்ப் பெண்ணாகிய தங்களுடைய வரவு மாணவிகளுக்கு ஒரு பெரிய உத்சாகத்தை உண்டாக்கும். தங்கள் வாழ்க்கை அவர்களுக்கு ஓர் உன்னத லட்சியமாக இருப்பதுடன் வழி காட்டும் தீபச்சுடராகவும் இருக்கிறது’ என்றும் இன்னும் இதுபோன்ற சில மொழிகளையும் எழுதியிருந்தாள்.

முத்து, தம் மனைவியை நிராகரித்ததும், பிறகு அவள் சிரமப்பட்டுப் படித்துத் தேறித் தன் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் ஏற்படுத்தி நடத்தி வருவதும் லேடி ஆறுமுகத்துக்குத் தெரியும். அதைப்பற்றி அவருக்கு இதுவரையில் பட்சபாதமற்ற மனப்பான்மை இருந்து வந்தது. ‘யாருடைய தவனே, நமக்குத் தெரியாது. நாம் அவர்கள் செய்கையைக் கண்டனம் செய்யக்கூடாது’ என்று இருந்தார் அவர். ரத்த சம்பந்தத்தினால் முத்துவின் சார்பாகவே அவர் அநுதாபம் இருந்தது எனலாம். இந்தக் கடிதத்தைப் பார்த்ததும் அபிராமியின் சார்பாக அவருடைய அநுதாப முள் சாய ஆரம்பித்தது. அவர் மறு தபாலிலேயே தமது அங்கீகாரத்தை அனுப்பினார்.

லேடி ஆறுமுகத்தின் தலைமையின் கீழ்ப் பள்ளிக்கூட வருஷ விழா மிகச் சிறப்பாக நடந்தது. அபிராமி அந்த விசேஷத்திற்குக் குழந்தைகளின் பெற்றோர்களை மாத்திரமல்ல, ஊர்ப் பெரிய மனிதர் எல்லோரையுமே அழைத்திருந்தாள். லேடி ஆறுமுகத்தின் கீர்த்தியும் செல்வாக்கும் அதிகம். நம்ம ஊர்ப் பெண் ஸலூன் வண்டியில் வந்திருக்கிறாள் என்ற பெருமையே அவ்வூராருக்குப் போதுமானது. எல்லாரும் வந்திருந்து எல்லாவற்றிலும் பங்கெடுத்துக் கொண்டனர்.

அபிராமி, லேடி ஆறுமுகத்திற்கு உபசாரம் செய்தாள் என்று கூறுவது ரோஜாவை அது ஒரு புஷ்பம் என்று கூறுவது போன்ற வார்த்தையாகும். அவள் செய்ததை உபசாரம் என்பதும் சரியாகாது. வெளிப்பகட்டாக அவள் எதுவும் செய்யவில்லை. சகஜமாய் உறவினரும் கண்யமானவருமான ஓர் அதிதிக்குச் செய்வதையே தான் செய்வதாகக் காண்பித்தாள். அதற்கு மேற்பட்டதாகத் தன்னுடைய சந்தோஷத்தைக் காண்பிப்பதனாலும், சமயோசிதச் சொற்களாலும், லேடி ஆறுமுகம் மேடையில் நின்று பேசும்போது காது கொடுத்துக் கேட்கும் மரியாதையினாலும், பேச்சில் அந்த அந்த இடத்தில் அந்த அந்த ரஸபாவங்களைத் தான் பூரணமாக அநுபவிப்பதைக் காட்டும் முறை யினாலும், லேடி ஆறுமுகமே பெண்களுக்கெல்லாம் சிறந்த பெண்மணி; சீதை சாவித்திரி போன்றவர்களின் அவதாரம், ரம்பை திலோத்தமை யைத் தோற்கடிக்கும் அழகி, கருணைமிக்கவள், வள்ளல், கலை அரசி; அவளுடன் பேசுவதே ஓர் இன்பம்; அவளுடைய மேன்மைக் குணத்தினால் தான் அந்த ஊர்ப் பெண்கள் அவளுடன் சமமாகப் பழக அனுமதிக்கிறாள்’ என்றெல்லாம் தோன்றும்படி செய்தாள். பத்து வருஷம் உள்ளம் குமுறித் துன்பத்தின் மூலம் கற்றிருந்த தந்திரத்தை எல்லாம் அவள் அன்று உபயோகித்தாள்.

லேடி ஆறுமுகம் சென்னை சென்றதும் முதல் வேலையாக மோட்டாரில் ஏறி முத்துக்குமாரரைக் காணச் சென்றார்.

“வா, அக்கா , வெகு நாட்களாய் இந்தப் பக்கமே வருவதில்லையே!” என்று முத்து உபசரித்து அழைத்தார்.

“உன்னோடு சண்டை போட வந்திருக்கிறேன். அதென்ன? இவ்வளவு நல்ல பெண்! சாமர்த்தியசாலி! எத்தனையோ சவரணையாய்ப் பள்ளிக்கூடம் நடத்துகிறாள்! ஊரெல்லாம் நல்ல பேர். இங்கிலீஷ் படித்துப் பாஸ் செய்திருக்கிறாள். கண்ணுக்கு லட்சணமாக இருக்கிறாள்! அவளை ஒதுக்கி வைத்திருக்கிறாயே! இந்த அநியாயம் அடுக்குமா?” என்றார் லேடி.

“நீ அவளை எப்பொழுது பார்த்தாய்?” என்று புன்சிரிப்புடன் முத்து கேட்டார்.

“அவர்கள் பள்ளிக்கூட வருஷாந்தரக் கொண்டாட்டத்துக்கு என்னைக் கூப்பிட்டிருந்தாள்.”

“நீதான் அக்கிராசனம் வகித்தாயா?”

“ஆமாம்.”

“அதுதான் அவள் பட்சமாகப் பேசுகிறாய்” என்று சிரித்தார் முத்து.

“நான் ஒன்றும் அப்படிப் பட்சபாதமாகச் சொல்லவில்லை. அந்தப் பதவியினால் ஏமாந்தும் போகவில்லை. அக்கிராசனம் வகித்தால் என்ன குற்றம்?”

“அந்தப் பெருமையில் தான் உன் ரத்த சம்பந்தமுள்ள சொந்தத் தம்பியின் கட்சியை விட்டுவிட்டு அவள் சார்பாகப் பேசுகிறாய்.”

லேடிக்கு அசாத்தியக் கோபம் வந்துவிட்டது.

“போ, போ. நான் இதற்கு முன்னே பள்ளிக்கூடமும் கண்டதில்லை. அக்கிராசனமும் வகித்ததில்லையாக்கும்! வருஷத்திற்கு நூறு இடத்தில் அழைத்திருக்கிறார்கள். தங்கமான பெண், அவள் அருமை உனக்குத் தெரியவில்லையே என்று சொன்னால் இப்படிப் பேசுகிறாயே! முட்டாள், மட்டி, மடையன்!” என்று இரைந்துவிட்டு விர்ரென்று சென்று மோட்டாரில் ஏறிப் போய்விட்டார்.

அவள் கோபித்ததில் செட்டியாருக்கு வருத்தம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. தாம் கையாளும் தந்திரத்தையே அபிராமியும் இன்னும் திறமையுடன் கையாளுவதை உணர்ந்து அவர் மிகச் சந்தோஷப்பட்டதாகத் தோன்றியது.

மூன்றாவது முறை செட்டியார் கறுப்பண்ணரைப் பார்க்கப் போன சமயம் கறுப்பண்ணரின் தேகம் மிகத் துர்ப்பலமாக இருப்பதால் தம்முடன் சென்னைக்கு வந்து ஒரு மாதம் தங்கி வைத்தியம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். மீனாக்ஷியம்மாளிடம் தம் இரு கைகளையும் கூப்பி, “ஆச்சி, நீங்கள் வந்து இருந்து என் வீட்டை ஒழுங்கு செய்து கொடுத்தால் புண்ணியமாகும். சமையல்காரனின் சமையல் எனக்கு ருசிக்கவே இல்லை. அவன் யோக்கியமாக இருக்கிறானே என்று அவனைப் போகச் சொல்ல முடியவில்லை. ஆனால் சமையல் சுத்த மோசம்!” என்று கெஞ்சினார். அந்த முறையும் அபிராமியைப் பாராமலே போய் விட்டார். அபிராமியின் பேச்சையே எடுக்கவில்லை.

மருமகப்பிள்ளையின் வேண்டுகோளைக் கேட்டு மனம் கசிந்த மீனாக்ஷி, அபிராமி மாலை வீடு வந்ததும் கணவன் வீட்டிற்குப் போகுமாறு அவளுக்குப் பெரிய பிரசங்கம் செய்தாள். கறுப்பண்ணரையும் தன்னையும் அவர் சென்னைக்கு அழைத்திருப்பதைக் கூறினாள்.

அபிராமி பல்லைக் கடித்துக்கொண்டாள். தன் சார்பாக இருப்பவரைச் செட்டியார் கலைத்து வருவதை உணர்ந்தாள். கோபத்துடன், “உன் மருமகனார் சிரிப்பில் மயங்கிவிட்டாய். நான் அநுபவித்த அவமானமும் துக்கமும் உன் மனத்தை விட்டுக் கணத்தில் மறைந்து போய் விட்டன. அவர் இச்சகப் பேச்சைக் கேட்டு இப்போது என்னை இங்கே விட்டுப் பட்டணம் போகப் புறப்படுகிறாய். போ, போ, நன்றகப் போ; சிற்றப்பாவும் போகட்டும். பத்து நாள் கூட இருந்து பழகினால் அப்புறம் அவர் குணம் தெரியும்” என்று துடுக்காய்ப் பேசினாள்.

“குணத்துக்கு என்ன? அவர் குணத்தைப் பற்றி ஒருத்தரும் என் காது கேட்கத் தூஷிக்கவில்லை. எத்தனையோ தர்மம் பண்ணுகிறாராம். உன் பள்ளிக்கூடத்தைப்பற்றிக் கூடச் சொன்னேன். கவனமாகக் கேட்டார். ஹாஸ்டல் வேணுமென்று நீ சொல்வதைச் சொன்னேன்.. யோசித்துச் சொல்கிறேன் என்றார்” என்றாள் மீனாக்ஷி.

“போதும், அவர் தர்மம் வேண்டாம். அது இல்லாமலேயே இத்தனை நாள் காலம் தள்ளியாகிவிட்டது. அது போகட்டும். என்னை நேரிலே பார்க்காமல் என் முதுகுக்குப் பின்னால் உங்களை வந்து வசப்படுத்துவானேன்?” என்றாள் அபிராமி.

“நீதான் அவர் கூப்பிட்டால் போக மாட்டேன் என்றாயே. உன்னை எதற்காகப் பார்க்கிறது?” என்று மீனாக்ஷி திரும்பிக் கேட்டாள்.

மேலும் ஆவலுடன், “அடுத்த முறை வந்தால் இருந்து உன்னைப் பார்க்கச் சொல்லட்டுமா?” என்றாள்.

“ஒன்றும் வேண்டாம். அந்தமாதிரி அசட்டு வார்த்தை எதுவும் சொல்லாதே” என்று கண்டித்தாள் அபிராமி.

இரண்டு தினத்திற்கெல்லாம் அபிராமியின் பெயருக்கு, ‘பெண் கள் பாடசாலைத் தலைமை உபாத்தியாயினி” என்ற விலாசத்தோடு கடிதம் வந்தது. அதில் முத்துக்குமார செட்டியாரின் செக்கு ஒன்று பத்தாயிரம் ரூபாய்க்கு இருந்தது. கூட இருந்த கடிதத்தில் பெண்களின் ஹாஸ்டல் ஒன்று கட்டுவதற்கு நிதி தேவை என்று தாம் கேள்விப் பட்டதால் இந்தத் தொகையை அனுப்பத் துணிந்ததாகவும், அந்தப் பள்ளிக்கூடத்தின் விருத்தியில் தாம் மிகச் சந்தோஷிப்பதாகவும் எழுதியிருந்தது. கையெழுத்து முத்துக்குமாரன் என்று இருந்தது. முன் பின் அறிமுகமில்லாதவர்கள் எழுதக்கூடிய கடிதத்தின் தோரணை யிலே இருந்தது. இருந்தும் தன் கணவரின் அந்த முதல் கடிதத்தைப் படித்த சமயம் அபிராமிக்கு உடல் முழுவதும் மயிர்க்கூச்சு உண்டா யிற்று. சந்தோஷம் என்றே சொல்லலாம். இருந்தும் நாளுக்கு நாள் அவரே வெற்றி பெற்று வருவதைப்பற்றி அவளுக்கு ஆத்திரம் உண்டா யிற்று. செக்கைக் கிழித்து அவர் முகத்திலேயே எறிய வேண்டும்போல் இருந்தது. திருப்பி அனுப்பிவிடுவது என்று தீர்மானித்தாள். ஆனால் அன்று தபாலுக்கு நேரமாகிவிட்டபடியால் மறுநாள் பார்த்துக்கொள் வோம் என்று செக்கை உள்ளே வைத்துப் பூட்டினாள்.

இரவு சாப்பிட்டானதும் அபிராமி தன்னுடைய மேஜையருகில் உட்கார்ந்து தன் கணவருக்குத் தன்னுடைய முதல் கடிதத்தை எழுத ஆரம்பித்தாள்.

“பெண்களை அலட்சியம் செய்பவர்களிடமிருந்து நாங்கள் பணம் வாங்கிக் கொள்வதில்லை.”

“செக்கிற்கு வந்தனம். திருப்பி அனுப்பியிருக்கிறேன். அது இல்லாமலேயே எங்கள் வேலை நடக்கும்.”

“இவ்வளவு பெரிய தொகையை எதற்காக அனுப்பியிருக்கிறீர்கள்? பச்சாத்தாபமா? பாப பரிகாரமா?” என்று இவ்வாறு பல கடிதங்கள் எழுதி எழுதிக் கிழித்து எறிந்துவிட்டு இரவு இரண்டு மணிக்கு அலுப்புற்றவளாய்ப் படுக்கச் சென்றாள்.

மறுதினம் தபாலில் அபிராமி அனுப்பிய கடிதத்தில், “தங்கள் பெரிய நன்கொடைக்கு வந்தனம்” என்ற வார்த்தைகளே இருந்தன.

தன்னுடைய சொந்தக் காரணத்திற்காகப் பள்ளிக்கூடத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தக்கூடாது என்றே தான் அந்தச் செக்கை அங்கீகரிப்பதாக அபிராமி தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள். தன் கணவரின் தற்போதைய நற்குணத்தினால் தன் மனமும் கரைந்து வருவதை அவள் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை.

அபிராமிக்குத் தக்க துணையை ஏற்படுத்திவிட்டுக் கறுப்பண்ணரும் மீனாக்ஷியும் சென்னைக்கு மருமகப் பிள்ளையின் பங்களாவில் சுகவாசம் செய்யச் சென்றார்கள். அபிராமி பள்ளிக்கூடத்திற்கு ஹாஸ்டல் கட்டு வதில் முனைந்தாள். அந்த வேலைஅகப்பட்ட காரணமோ வேறு எதுவோ, அபிராமி இந்நாட்களில் புது உத்ஸாகத்துடனும் புது அழகுட னும் விளங்கினாள். முத்துக்குமாரரிடமிருந்து அவளுக்கு இப்பொழுது அடிக்கடி கடிதம் வரலாயிற்று. விஷயம் ஒன்றும் பெரிதல்ல. ஹாஸ்டல் வேலை எப்படி நடக்கிறது என்று விசாரிப்பார். கறுப்பண்ணர் சென்னை டாக்டரின் சிகிச்சையினால் தேர்ந்திருப்பதாக எழுதுவார். மீனாக்ஷியின் சமையலைப் புகழ்வார். அவ்வளவே. இருந்தும் ஆரம்பத்தில் நான்கு வரிகளே இருந்த கடிதங்கள் நாளடைவில் முத்துக்குமாரரின் அழகிய சிறு சிறு எழுத்துக்களில் இரண்டு மூன்று பக்கங்கள் கொண்டனவாக ஆகிவிட்டன.

அபிராமியும் விடை எழுதுவாள். பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளித்ததற்குச் சிறிதாகிலும் நன்றி காட்டவேண்டாமா என்று எண்ணுவாள். ஆனால் அவளும் கடிதத்தில் சொந்த விஷயம் எதையும் எழுத மாட்டாள். அவர் கேட்டிருப்பவற்றிற்கு விடை எழுதுவாள். அவ்வளவே. கட்டிடப் பிளான்களை அனுப்பி அவர் அபிப்பிராயத்தைக் கேட்பாள். சர்க்கார் அனுமதி சீக்கிரம் கிடைக்க உதவி கேட்பாள். அதில் தவறு எதுவும் இல்லை அல்லவா?

இது நிற்க. இடையிடையே இவளை வந்து பார்த்துப் போகும் அக்கம் பக்கத்தார் , “அம்மா, அபிராமி, தை பிறந்ததும் நீ பட்டணம் போகப் போகிறாயாமே! இந்தப் பள்ளிக்கூடம் என்ன ஆகும்? எங்கள் குழந்தைகளுக்கு நல்ல ஏற்பாடாகப் பண்ணிக் கொடுத்து விட்டுப் போ” என்று சொல்லலானார்கள்.

“இல்லவே இல்லை. நான் ஒன்றும் பட்டணம் போகப் போகிறதில்லை” என்று அபிராமி சாதிப்பாள்.

ஒரு முறை அங்கச்சி ஆச்சி , “போ , போ. சும்மா சொல்லாதே. மாப்பிள்ளையே நேரே நம்ம கிருஷ்ணன் கிட்டே சொன்ரைாம். என் பொண்டாட்டி தை பொறந்ததும் வரப்போறான்னு சொன்னாராம்” என்றாள்.

“கிருஷ்ணன் எதுக்காக அங்கே போனான்?” என்று அபிராமி கேட்டாள்.

“சும்மானாச்சியுந்தான் போனான். கறுப்பண்ணர் இருக்காரே, பார்த்தூட்டு வரலாம்னு போனான். நல்லா ஆயிட்டாராம் உங்க சித்தப்பா” என்றாள்.

செட்டியாரின் இந்தப் புதுத் தந்திரம் அபிராமிக்குக் கோபத்தை உண்டாக்கவில்லை. காரணம் என்னவோ!

இவ்விதம் கிருஷ்ணன் மாத்திரமல்ல; ராமன், கோபாலன், கோவிந்தன் என்று பட்டணம் போய்ச் செட்டியாரைப் பார்த்தவர்களிடமெல்லாம் அவர் இவ்விதம் தம் மனைவி தை மாதம் தம்மிடம் வரப்போவதாகப் பிரசாரம் செய்வதைக் கண்ட அபிராமி அதே ராமன், கோவிந்தன், கோபாலன் முதலியவர்களிடம் தான் தன் பள்ளிக்கூடத்தை விட்டு ஒரு நாளும் பிரியப் போகிறதில்லை என்பதை அழுத்தமாகக் கூறிவிட்டு, அதற்கு மேற்பட்டுப் பரிகாச வார்த்தையாக, “நான் அங்கே போகப் போகிறதில்லை. அவரே இங்கே இந்த ஊரில் வந்து இருக்கப் போகிறார்” என்றும் சொல்லிவைத்தாள்.

இவ்விஷயத்தை ராமன், கோவிந்தன், கோபாலன், கிருஷ்ணன் ஆகிய நண்பர்கள் மிகவும் சிரத்தையுடன் செட்டியார் காதில் படும்படி செய்தனர். அவர் அதற்கு விடை எதுவும் சொல்லவில்லை.

இரண்டு மாதம் கழித்து மீனாக்ஷியும் கறுப்பண்ணரும் ஊர் வந்து சேர்ந்தனர். இருவரும் புது யௌவனம் பெற்றவர்கள் மாதிரி ஆகியிருந்தனர். மருமகனார் பெருமையை மீனாக்ஷியம்மாளால் சொல்லி இயலவில்லை. அவருடைய மோட்டார், அவருடைய பங்களா, அவருடைய பவிசு, அவருடைய பணிவு, அவருடைய குணம், அவருடைய சாமர்த்தி யம், அவருடைய அடக்கம், அவருடைய அழகு என்று அவள் வாய் ஓயாமல் பிதற்றிக்கொண்டே இருப்பாள்.

அபிராமி இப்பொழுதெல்லாம் அவர்களைக் கண்டிப்பதை விட்டுவிட்டாள். அவரைப்பற்றி அவர்கள் பேசுவது தன் காதில் படவில்லை போல் இருந்துவிடுவாள். ஆனால் ஒரு வார்த்தை கேட்க மாத்திரம் அவளுடைய மனம் துடித்தது: தன் விஷயமாக அவர் என்ன செய்யப் போகிறார் என்பதே. சித்தி சிற்றப்பா இருவரும் அதைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.

ஹாஸ்டல் கட்டி முடிந்தாகிவிட்டது. கறுப்பண்ணரும் மீனாக்ஷியும் இங்கே வந்தாகிவிட்டது. இனி முத்துக்குமாரராகிலும் அபிராமியாகிலும் ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுதிக் கொள்ள அவசியமில்லை. செட்டியார் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டார். அவரிடமிருந்து கடிதம் வராதிருக்க இவள் மாத்திரம் எப்படி எழுதுவாள்? அபிராமியும் கடிதம் எழுதவில்லை. ஆனால் தபால்களை ஆவலுடன் பார்ப்பதை மாத்திரம் அவளால் நிறுத்த முடியவில்லை. “முழு முட்டாள் நான். ஒரு முறை மனத்தை அவருக்குக் கொடுத்து ஏமாந்தது போதாமல் மறுமுறையும் ஏமாந்து போக விரும்பும் ஜடம் நான்” என்று தன்னை நொந்து கொண்டு தன் வேலையில் முனைந்தாள்.

தை மாதம். முதல் வெள்ளிக்கிழமை. மாலை ஐந்து மணி. பள்ளிக் – கூட மாணவிகளை அம்மன் கோயிலுக்கு அனுப்பிவிட்டு, அபிராமி மாத்திரம் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த விளையாட்டு மைதானத்தில் ஒரு மரத்தடியில் பாயின் மேல் உட்கார்ந்து ஏதோ பாடத்தைத் திருத்திக்கொண்டு இருந்தாள்.

யாரோ வாசல் கேட்டைத் திறக்கும் சப்தம் கேட்டுத் தலை நிமிர்ந்தாள். உயரமான ஒரு புருஷர். தூரத்திலிருந்து யாரென்று அடையாளம் தெரியவில்லை. வேலையாள் ஓடிச்சென்று அவருடன் பேசிவிட்டு அவள் உட்கார்ந்திருக்கும் இடத்தைச் சுட்டிக் காண்பிப்பதையும், அவர் தன்னை நோக்கி வருவதையும் அபிராமி கண்டாள். அபிராமி கைப் புத்தகங்களை அடுக்கினாள்; அவர் வரும் நடையிலோ தோற்றத்திலோ, ஏதோ பழைய ஞாபகம் உண்டாயிற்று. மனம் மிகக் குழப்பமடைந்தது. எழுந்து நின்றாள். கால்கள் வெலவெலத்துப் போயின. நெஞ்சு படபட வென்று அடித்துக்கொண்டது.

“புது ஹாஸ்டலைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்” என்றார் முத்துக்குமாரர்.

அவர்தாம். பத்து வருஷத்தில் சற்று மாறியிருந்தார். ஆனால் அதே நிதானம். அதே மெதுவான பேச்சு. இன்னும் சற்று உயர்ந்து பருத்திருந்தார். மீசை முன்பைவிடப் பெரிதாகிவிட்டிருந்தது. அபிராமி தன் படபடப்பை அடக்கிக்கொண்டாள். அவர் யாரென்று தெரியாது போல் பாசாங்கு செய்யவில்லை. அவரைப் போலவே தானும் சகஜமாய், பள்ளிக்கூடத்திற்குப் பணம் அளிப்பவர்களுக்கென்று தான் பிரத்தியேகமாய்க் கையாளும் மரியாதைக் கவசத்தைப் பூண்டு அவரை அழைத்துச் சென்று ஹாஸ்டல் முழுவதையும் காண்பித்தாள்.

“எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் என் யோசனைகளையே முழுவதும் உபயோகித்திருக்கிற மாதிரி இருக்கிறதே!” என்றார் முத்து.

“ஆமாம்.”

“ஏன்? கடிதத்தில் கண்ட பிளான்களைப் பார்த்த பிறகு ஒன்றிரண்டு விஷயம் நான் சொன்ன முறை. தவறு, பிளானில் கண்டிருப்பது போல் செய்வது தான் நல்லது என்று எழுதியிருந்தேனே! அந்த மாதிரி செய்வதற்கென்ன?”

“என்னவோ, நீங்கள் எழுதின முறைதான் சரி என்று அவர்கள் சொன்னார்கள்” என்று முணுமுணுத்தாள் அபிராமி.

“எவர்கள்?” என்று அவ்விதம் சொன்னவர் பெயரைக் கேட்க மிக ஆவல் கொண்டவர் போலச் செட்டியார் அபிராமியைக் கூர்ந்து நோக்கினார். அபிராமியின் முகம் சிவந்தது.

“அவர்கள்” என்று தலையைத் திருப்பிக்கொண்டு பள்ளிக்கூடப் பக்கமாய்க் கையை ஆட்டி வைத்தாள். அங்கே எவரும் இருப்பதாகச் செட்டியாருக்குத் தெரியவில்லை.

எல்லாம் பார்வையிட்ட பின் மறுபடியும் இருவரும் மரத்தடிக்கு வந்து சேர்ந்தனர்.

“கட்டிடத்தின் திறப்பு விழா நடத்த வேண்டும். நீங்கள் வந்து நடத்திவைக்க வேண்டும்” என்றாள் அபிராமி.

“எப்பொழுது?”

“அடுத்த வாரம் வைத்துக்கொள்ளலாமென்று நினைத்தேன். உங்களுக்குச் சௌகரியப்படுமா?”

“உம்; யோசித்துச் சொல்லவேண்டும்” என்று கூறிவிட்டுச் செட்டியார் அபிராமியைப் பார்த்துப் புன் சிரிப்புடன் ஜேபியில் கையிட்டுப் பெரியதோர் சாவியை எடுத்து அபிராமியிடம் நீட்டினார்.

“இது என்ன?”

“எங்கள் வீட்டுத் திறப்பு விழா இன்றைக்குத்தான். அடுத்த வாரமல்ல. வந்து திறப்பாயோ? என்ன சொல்கிறாய்?!” என்று கூறி அபிராமியின் கண்களைச் சந்திக்க முயன்றார்.

அபிராமியின் கண்கள் பூமியை நோக்கின. அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. பிறகு சற்று நிதானம் பெற்று, தலை தூக்கி, “இன்றைக்கே எப்படிப் பட்டணம் போக முடியும்? ஏரோப்ளேன் ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?” என்றாள் அபிராமி.

“பட்டணம் போவதாக யார் சொன்னார்கள்? என்னைத்தான் அங்கிருந்து லேடி ஆறுமுகம் துரத்திவிட்டாளே!” என்று சிரித்தார் செட்டியார்.

“பின்?”

“பின் இந்த ஊர் தான். நீதான் ரொம்பப் பிடிவாதக்காரியாம்; இந்த ஊரை விட்டு வரமாட்டேனென்று பிடிவாதம் செய்கிறாயாமே! சரி, நமக்கென்ன, உன் இஷ்டப்படி நடப்போமென்று பட்டணம் வீட்டைக் காலி செய்து வந்துவிட்டேன்” என்றார் செட்டியார்.

***

நாலைந்து வருஷங்கள் ஆகிவிட்டன. இப்போது பட்டணத்து வீடு காலியாக இல்லை. அங்கே இரண்டு குழந்தைகள் கூடப் பங்களாத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தை ஒரு தேர்ந்த எல்.டி. நடத்துகிறார் என்று கேள்வி. ஆகையால் பிடிவாதம் யாருக்கு அதிகம்? கணவருக்கா மனைவிக்கா என்பது தெரிய வில்லை.

– நவம்பர், 1945

– கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *