கடிகாரக் குருவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2024
பார்வையிட்டோர்: 1,845 
 
 

முதல் வரி எழுதப்படு முன்பே, முழுசாக நடந்து முடிந்து விட்ட சம்பவத்தைதான் இப்போது சொல்லப் போகிறேன். அதற்கு முந்தின நாள்வரை இருந்த ராகவனே வேறு. மறுநாளில் ஒவ்வொரு காலுக்கும் வெவ்வேறு ரகச் செருப்புகளை அணிந்து அலுவலகம் செல்கிற அளவு மோசமாகிவிட்டது. மனநிலை, உண்மையில். இதை எழுதுகிற நான் இந்தச் சம்பவத்துக்குள் இல்லை. அது நடந்து இருபது வருடமாகிவிட்டது என்பதோடு, நடந்தது ராமநாதபுரத்தில், நான் இருப்பது சென்னையில்.

இதில் இன்னொரு விசித்திரத்தைக் கவனித்தீர்களா. சம்பவத்துக்குச் சம்பந்தப்பட்ட நான் இதனுள் இல்லை. ஆனால், வரிகள் நகர நகர, வாசிக்கிறவராகிய நீங்கள் இதன் அங்கமாகிக் கொண்டே வருவது புலனாகிறதா. பூச்சியைப் பிடிக்க நீள்கிற தவளையின் நாக்கு போல, ஏதோ ஒரு வரி நீண்டு உங்களை உள்ளே இழுத்துக் கொள்கிறது. பிறகு, உங்கள் சுற்றுச் சூழ்நிலை கவனத்திலிருந்து நீங்கி விடுகிறது.

கொஞ்சம் குழப்பமாகப் பேசுகிறேன், இல்லையா. பொறுங்கள். தயவு செய்யுங்கள். இந்த வரிகளுக்கு நான் பொறுப்பில்லை. சௌரிராஜன். அவன் தான் காரணம். நிம்மதியாகப் பெண்களை வேடிக்கை பார்த்துக் கொண்டும், மைதுனச் சித்திரங்களுக்கு உபகரணங்களாக அவர்களை ரகசியமாய்ப் பயன்படுத்திக் கொண்டும், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை பாக்கெட்டுக்கள் சிகரெட் குடித்துக் கொண்டும். டி.ஏ. அர்சியர்ஸ், நடிகர் ரஜினிகாந்தின் உடல் நலக்குறைவு, விடுப்புக் காலத்தை சமர்ப்பித்து ஈடு வாங்கிக் கொள்வதற்கான தகுதி இந்த வருடம் எனக்கு உண்டா என்பது போன்ற எளிமையான ஆனால் முக்கியமான கவலைகளைப் பட்டுக் கொண்டும் இருந்தவன்தான் நான். அந்த ஒரு ராத்திரிக்குப் பிறகு, என் யோசனையின் தடம் மாறி விட்டது.

குழப்பமான வாக்கியங்களைச் சுமந்து திரியும் கூடையாகி விட்டேன். நடைமுறைத் தர்க்கத்துக்குட்பட்டு நடக்கும் எதையுமே நடைமுறைத் தர்க்கத்துக்குட்பட்டதாகப் பார்க்கவியலாத வியாதியஸ்தனாகி விட்டேன். வாக்கியங்களில் குழப்பமும், ஒருவிதமான சுழற்தன்மையும் பெருகி, சாதாரணமாக,

ஒரு வில்ஸ் குடுங்க.

என்று சொல்வது கூட மாபெரும் தத்துவப் பிரச்சினையாகி விட்டது. டாக்டர் சீனிவாசன் போத்தி எம்.டி., அட்டிவான் தெரப்பிக்கு என்னை அறிமுகம் செய்திருக்கிறார். தூக்கம் ஒரு பிரச்சினையாக இல்லை இப்போது. என்ன, பகல்பொழுதுகளில் கொஞ்சம் மந்தமாக இருக்கிறேன் என்று மற்றவர்கள் சொல்கிறார்கள்.

அவர்களுக்கு வேறு வேலை என்ன. கட்டின வீடுகளுக்குக் குற்றம் சொல்கிறவர்கள். மன அழற்சிக்கான அல்லோபதி மாத்திரிகளை வருஷக் கணக்காகச் சாப்பிடுவது, தவறான பின் விளைவுகளை உண்டாக்க வாய்ப்பிருக்கிறது, மாற்று மருத்துவ முறை எதையாவது முயற்சிக்கலாமே என்று இரண்டு வருடங்களாகச் சொல்லி வருகிறார்கள், சண்முகம் போன்ற நண்பர்கள்.

இந்தச் சிக்கல் தீராதது. இப்போது சௌகரியமானதாக இருக்கிற ஒன்று, எதிர்காலத்தில் கேடு விளைவிப்பதாக ஆகிவிடுகிறது. இதற்கு நேர்மாறாகவும் நடக்க வாய்ப்பிருக்கிறது தான். இதில் நான் கவனிப்பது என்னவென்றால், எதிர்காலம் தானே நிகழ்காலம் ஆகிக்கொண்டே வருகிறது. ஆனால், மேற்சொன்ன விதத்தில், எதிர்காலமும் நிகழ்காலமும் ஒன்றுக்கொன்று விரோதமானவையாகத் தெரியவில்லையா? அல்லது, எதிர்காலம் என்றே நிகழ்காலத்திலிருந்துதான் கிளைக்கிறதோ….

பார்த்தீர்களா, மறுபடி ஆரம்பித்து விட்டது குழப்பம். நான் ஏற்கெனவே சொன்னேனே. சௌரிராஜன்தான் காரணம்.

இத்தனைக்கும் சௌரி என்னுடைய பலவருட நண்பன். சக ஊழியன், அறைத் தோழன், கல்லூரியில் ஒன்றாகப் பட்டப்படிப்பு முடித்து வெளிவந்தவர்கள் நாங்கள். நான் வணிகவியல் அவன் விலங்கியல். எங்கள் நட்பு உருவானதும் ஒரு ஆபூர்வ சந்தர்ப்பத்தில்தான். அறிவியல் மாணவர்களுக்கும், மானுட – கலையில் மாணவர்களுக்கும் நிகழ்ந்த கோஷ்டிக் கலவரமொன்று, அந்த நாட்களில் மதுரை வட்டார நாளிதழ்களில் மிகவும் விசேஷமாகப் பேசப்பட்டது. பதினைந்து மாணவர்களுக்கு எலும்புகள் முறியவும், அவர்களில் நால்வருக்கு நிரந்தர ஊனம் ஏற்படவும், நூற்று இருபத்தெட்டு மாணவர்கள் தன் பெற்றோருடன் முதல்வரையும் தாளாளரையும் நேர்முகமாகச் சந்திக்க வரவேண்டும் என்று பதிவுத் தபால்கள் பறக்கவும், மூன்று மாணவர்கள் கல்லூரியை விட்டு நீக்கப்படவும் காரணமான கலவுரம் அது.

விசாரணை துவங்குவதற்கு முன்னரே, மாணவர்களுக்குள் திரைமறைவுச் சமரசம் ஏற்பட்டு விட்டது. மாணவர்களின் நட்பு ரீதியிலான சிறு தகராறு நடந்துகொண்டிருக்கும்போது, கல்லூரிக்குள் உருட்டுக்கட்டைகளுடன் ஓடிவந்த அந்நியர்களே ரத்தக்காயங்களுக்குக் காரணம்; மாணவ சமுதாயம் தன்னுடைய ஒற்றுமையில் உறுதியாக இருக்கிறது என்று எலும்பு முறிவுக்கான நபர்களே வாக்குமூலம் கொடுத்த பிறகும், தம்மையும், சமரசத்தையும் மறந்து நாளிதழ் நிருபரிடம் நடந்ததை நடந்தபடியே சொன்ன மாணவர்கள் மூவர் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டனர். இதை மிகுந்த மனவருத்தத்தோடு துரதிர்ஷ்ட வசமாகச் செய்ய வேண்டியதாகிவிட்டது என்று தாளாளர் மனம் வெதும்பிப் பேட்டியளித்தார். நீக்கப்பட்ட மாணவர்கள் பேட்டி அளித்திருந்த அதே இதழில்.

பாருங்கள், இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்ததைக் கூறுவதாகத் தொடங்கிவிட்டு, இருபத்தேழு வருடம் முன்பு நடந்ததை விலாவாரியாகக் கூறிக்கொண்டிருக்கிறேன். இது ஒரு விதமான காலக் குழப்பம்தானே. சௌரிதான் காரணம்… மொத்தத்தில் நானும் சௌரியும் ஒரே இலையில் சாப்பிடக் கூடியவர்கள். தேவைப்பட்டால் ஒரே கழிவரையையும் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்கள். அவன் செய்தது என்ன, அவனுக்கு நடந்தது என்ன, அதன் காரணமாக எனக்கு நடந்தது என்ன என்கிற மாதிரி சங்கதிகளெல்லாம் மூட்டம் போட்ட காய்கள் மாதிரி ரொம்ப காலமாக உள்ளே குமைந்து கொண்டிருக்கின்றன. டாக்டர் போத்தி சொல்லியிருக்கிறார்.

திரும்பத் திரும்ப ஞாபகம் வந்து தொந்தரவு தர்ற விஷயங்களை, ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கடகடகடன்னு எளுதுங்க. ஒரு தடவையோ, ரெண்டு தடவையோ படிச்சுச் பாத்துட்டுக் கிளிச்சுப் போட்ருங்க. மனசைக் காலி பண்ணிக்
கிறதுக்கு இது ஒரு வழி.

அப்படி நினைத்துத்தான் எழுதினேன். இதை மெனக் கெட்டு எழுதியதைக் கிழித்தெறிவானேன் என்று யோசித்த போது உங்கள் ஞாபகம் வந்தது. சில வரிகளையும் சில வார்த்தைகளையும் மட்டும் மாற்றியமைத்திருக்கிறேன்……

சின்னக்கனி காம்ப்ளக்ஸ் மூன்றாவது மாடியில் நாங்கள் – அது தான், நானும் சௌரியும் – இருந்த போது நடந்தது இது. எங்கள் அறையில் ஒரு சுவர்க்கடிகாரம் இருந்தது. ஒரு மணி நேரத்துக்கொருமுறை, கடிகாரத்தின் அடிப்பாகத்திலுள்ள கூடு திறந்து மரக்குருவி ஒன்று வெளியே எட்டிப் பார்க்கும்

குக்….குக்…குக்..

என்று சப்தம் கொடுத்துவிட்டுக் கூட்டுக்குள் திரும்ப போய்விடும். கூடு மூடிக்கொள்ளும்.

என் பெரிய மாமா வடக்கே பட்டாளத்திலிருந்த போது வாங்கி வந்தது அந்தக் கடிகாரம். பழம் பொருள் பிரியர் அவர். எங்கெங்கோ ஏலங்களில் போய் குடுவையையோ, முக்காலியையோ, தாம்பூலம் துப்பும் கூளாம்பியையோ ஏக விலை கொடுத்து வாங்கி வருவார். அம்மா ஆசைப்பட்டாள் என்று இந்தக் கடிகாரத்தை அவளுக்கு அன்பளித்தார். வடக்கே ஏதோ ஒரு சமஸ்தானத்துக்குள் அடங்கிய ஜமீன்தாரின் சொத்துக்கள் ஏலம் வந்த போது வாங்கினாராம். ஏலத்துக்கு வந்தவற்றில் வாங்கக் கூடிய விலையில் இருந்தது இந்த ஒன்றுமட்டும் தான் என்றார் மாமா. அம்மா, மாமா, இருவருமே செத்துப் போய்விட்டார்கள். கடிகாரமும், குருவியும் துடிப்போடு என் அரையில் இயங்கிக் கொண்டிருந்தன. அறைத்தோழன் சௌரிக்கு இந்த குருவியைப் பிடிக்காது.

ரொம்பக் கத்துதுடா என்பான்.

அந்தக் குருவி கழுகாக மாறிவிடாதா, அந்தப் பயல் சௌரியைக் கண்ணை நோண்டி விடாதா என்று தோன்றியது. அன்று ஓயாத புலம்பல் மனதில் ஒடிக்கொண்டிருந்த முன்னிரவு அது. அன்று சாயங்காலம் நடந்ததைச் சொன்னால்தான் ஏன் இவ்வளவு வேதனைக்கு ஆளானேன் என்பது புரியும்.

சௌரிக்கும் எனக்கும் இடையில் ரகசியங்கள் கிடையாது. மிக முக்கியமான ரகசியம் ஒன்று என்னிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது என்பது, அன்று அவனுடைய நாட்குறிப்பை எடுத்துப் படிக்கும்வரை எனக்குத் தெரியாது. என் உடன் பிறந்த தங்கையும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்தபோது அது வெறும் ரகசியம் மட்டுமில்லை, பயங்கரம் என்றும் தோன்றியது.

வருஷக் கணக்காகத் தோன்றாத ஒரு குறுகுறுப்பு அன்றைக்கு மட்டும் தோன்றியது ஏன் என்று புரியவில்லை நண்பன்தான் என்றாலும் அவடைய பற்பசையையோ ஷவரக் க்ரீமையோ கூடத் தொடாத நான், அவனது நாட்குறிப்பைப் படிக்கிற உந்துதலை எவ்விதம் பெற்றேன் என்பது புரியவில்லை எத்தனையோ பெண்களின் கண்களையும் உதடுகளையும் கண்ணங்களையும் கூந்தலையும் முலைகளையும் மோவாய்க் கட்டகளையும் புட்டங்களையும் பற்றி அபிப்பிராயங்கள் பகிர்ந்து கொண்ட நண்பன், என்னுடைய தங்கையின் மார்பைப் பற்றி வாயித்து எழுதிய நாட்குறிப்பு என்னைக் கொலை வெறிக்கு ஆளாக்கிய மர்மம் புரியவில்லை ஆறுமாதத்துக்கு முன்னால் என் வீட்டுக்கு அவன் வந்த அந்தச் சனியன் பிடித்த அக்டோபர் ஆறு ஏன் அத்தனை அழுத்தமாக எனக்கு ஞாபமிருந்தது என்பதும் புரியவில்லை. மனிதர்கள் இறக்கும்போது, உடல் மட்டுமே அழிகிற நாம்; ஞாபங்கள் காற்று வெளியில் பரமாணுத் துகள்களாகப் பத்திரமாக இருக்கின்றனவாம். இதிலிருந்து தெரிவது என்ன, ஞாபங்கள் ஒரு போதும் அழிவதில்லை.

அவன் மூஞ்சியில் முழிக்கப் பிடிக்காமல், கதவை வெறுமனே சாத்திவிட்டு, உறங்கத் தலைப்பட்டேன். உறக்கம்தான் வரவில்லை.

சௌரி வருகிறான். துவாலையைத் தோளில் போட்டுக் கொண்டு, கதவை ஓசையெழாமல் முடிவிட்டு, குளியலறைக்குப் போகிறான். பற்பசை, சோப்பு இவற்றின் கலவையான மணம் அறைக்குள் பரவி, அவன் திரும்பி வந்துவிட்டதைக் குறிப்பு உணர்த்துகிறது.

அறைவாசலுக்கு அருகிலுள்ள மேஜை நாற்காலியில் உட்கார்ந்து படிக்கத் தொடங்குகிறான். சனியன் பிடித்தவன். மேலேந்தின கூழாங்கற்களாமே….. கருமையின் கவின்மிகு கதிர்வீச்சாமே…. காம்புகளின் காந்த ஈர்ப்பாமே… நண்பனின் தங்கை மேல் கௌரவமான அபிப்பிராயம் இல்லை. தலைகாணி தலைகாணியாய்ப் புஸ்தங்கள் என்ன வேண்டிக் கிடக்கிறது. நடு ராத்திரிவரை படிப்பதென்ன வேண்டிக்கிடக்கிறது. நாளைக்குச் சொல்லிவிட வேண்டும்.

பத்து மணிக்கெல்லாம் விளக்கை அணைச்சுடுறா. தூக்கம் வரமாட்டேங்குது. சொல்லி விட வேண்டியதுதான். வேறு அறை பார்த்துக் கொண்டு போவதானால் போகட்டுமே. அல்லது நான் கூட வேறு அறை பார்த்துக் கொள்ளலாம்.

அந்தப் பச்சை அட்டைத் தலைகாணியைத் தான் படிக்கிறான். சும்மாப் புரட்டிப் பார்த்தபோது, புத்தகம் ஆரம்பிக்கும் பக்கத்தில் ஒரு பாலைவனம் பற்றி நெடுக வர்ணித்திருந்தது. மணற் கடல் என்கிற மாதிரிச் சொற்றொடர்கள்….. சாவதானமான காற்று மணற் புயலாக மாறும் சாத்தியக் கூறுகள், ஒட்டகங்களில் பயணிக்கும் யாத்திரைக் குழுக்கள்… அபூர்வமாகத் தட்டுப்படும் பேரீச்சை மரச் சோலைகள்… உஷ்ணம் குளிர் இரண்டினுடையவும் அதீத உச்சநிலைகள்… ஆங்கிலப் புத்தகம்.

எப்போதோ தூங்கிவிட்டிருக்கிறேன். புரண்டு படுத்திருபேன் போல, லேசாக உறக்கம் கலைந்ததில், கண்களின் அரைத் திறப்பு வழி நான் பார்த்தது என்ன என்கிறீர்களா?

சௌரி, சௌரிராஜன், என் அறைத் தோழன், என் மாஜி நண்பன், திறந்திருந்த அந்தப் பச்சை அட்டைப் புத்தகத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தான். முதுகுத் தண்டு வெடவெடத்தது எனக்கு.

உடல் முழுக்க நடுங்க, கண்களை அகலத் திறந்து பார்க்கிறேன். வெற்று நாற்காலி. மல்லாந்து கிடக்கும் புத்தகம். திறந்து கிடக்கும் கதவு. அறைக்கு வெளியே தாழ்வாரத்தில் அடர்ந்திருக்கும் இருள். நிசப்தம் ரகசியமாக அறைக்குள் வந்துபோகும் முன்னிரவுக் காற்று.

ஒரு கணம் ஏக்கமாக இருந்தது. என்ன இருந்தாலும் நண்பனில்லையா. உடனடியாகத் தோன்றிவிட்டது. நட்பை விடவும் ரத்தபந்தம் உசத்தியானது. Blood is thicker than water …… சண்டாளன். பாலைவனத்துக்குள் நுழைத்திருக்கிறான் பொசுங்கிச் சாகட்டும்.

அறைவாசலுக்கு எதிர்புறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டேன்…

ராகவன் என்னுடைய நெருங்கிய நண்பன் தான். ஆனாலும் அவன் சொல்வதை நீங்கள் முழுக்க நம்ப வேண்டியதில்லை என்றே சொல்வேன். கொஞ்சம் ஊதிப் பெரிதாக்கித்தான் எதையுமே அவனால் சொல்ல முடியும் என்பதோடு, மேற்படி நிகழ்வு அவன் பெரும் தொந்தரவுக்கு ஆளாகியிருந்தபோது நடந்தது. ஆகவே, அறுபது முதல் எழுபது சதவிகிதம் தள்ளுபடி செய்துவிடலாம். என்றாலும், தன் தரப்பைப் பொதுவில் வைத்துவிட்டான் அவன் என்பதால், என் தரப்பை நானும் கூறித்தான் ஆக வேண்டும். இப்போதே இங்கேயே. சொற்களுக்கு அர்த்தம் உரைக்கும் அகராதியிலேயே எதிர்ச் சொற்களும் இருக்கிற மாதிரி.

அத்தியந்த நண்பர்கள் என்பதாலேயே ஒரே அறையில் தங்கியிருந்தோம் நாங்கள் இருவரும். ஆனால், அவன் பிரஸ்தாபித்தானே, அந்த இரவு கவியும் வரை. மறுநாள் காலையில், தான் வேறு அறைக்கு மாற்றிச் செல்வதாகத் தெரிவித்தான் ராகவன். நானும் மறுக்கவில்லை.

ஏனென்றால், அந்த நாட்களில் அவனுடைய நடத்தையில் சில மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருந்தன. பாதி செருகிய கண்களில் வெறுமை கூடியிருந்தது. ஒழுகும் மூக்கைப் பற்றிப் பிரச்ஞையில்லாதவனாய் இருந்தான். வெட்டிச் சீராக்கப்படாத தலைமுடி நிரந்தரமாகக் கலைந்து கிடந்தது. எரிந்து முடிகிற சிகரெட்டிலிருந்து அடுத்த சிகரெட்டைப் பற்றவைத்தான். டீயோ, காப்பியோ, எப்போது குடித்தாலும் இரண்டு கோப்பைகள் வாங்கிக் குடித்தான். எதைப் பேசினாலும் இரண்டிரண்டு தடவைகள் சொன்னான். உச்சமாக மழைத்தண்ணீர் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று சொல்லி. ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரையிலிருந்து வழியும் அழுக்கு நீரைக் கையிலேந்திக் குடித்தான். மொத்தத்தில், அழுத்தமான ஏதோ ஒன்று நடப்பதற்காகக் காத்திருப்பவன் போல இருந்தான். அது நடந்துவிட்டால் போதும். சுவாதீனம் முழுக்கப் பிறழ்ந்துவிடும்.

அந்த ஒரு புத்தகத்துக்குள் நான் நுழைந்து விட்டதாகச் சந்தேகப்பட்டானில்லையா, அது எனக்கு அப்போது தெரியாது. சற்றுப் பிற்பாடு தெரிய வந்தபோது ராகவனை நினைத்து மிகவும் கவலையும் வேதனையும் பட்டேன். அவனை ஏதோ பீடித்திருக்கிறது என்பது போக, புத்தகத்துக்குள் நுழைவதைப் பார்த்து மிரண்டிருக்கிறானே, பாவம், என்று தோன்றியது. புத்தகத்துக்குள் மட்டுமில்லை, ஓவியங்களுக்குள் கூட நான் நுழைந்திருக்கிறேன். ஸால்வடார் மாலியின் ஓவியம் ஒன்று. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பருந்தின் பார்வையில் சித்திரிப்பது. சிலுவையேற்றம் நடந்த அந்தப் பிராந்தியத்தில், அந்த நாளில் சென்று இருக்காமல் அந்த ஓவியத்தைப் பார்க்க முடிந்ததில்லை எனக்கு.

சொல்லப் போனால், ஒலியினூடாகச் செல்வது கூட சாத்தியம்தான். ஸரோட் கச்சேரி ஒன்றை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வெளியில் வந்த போதுதான் தெரிந்தது. அத்தனை நேரமும் நான் இருந்தது. இசை அரங்கத்தில் அல்ல, இசைத்தவரின் மனோதர்மத்துக்குள் என்று. சில பேருக்கு இவையெல்லாம் பொழுதுபோக்குகள். வேறு சிலருக்கு பிரயாண மார்க்கங்கள்.

ஆக, நான் புத்தகத்துக்குள் நுழைந்ததை ராகவன் பார்த்தது சரிதான். ஆனால், நான் நுழைந்த இடம் பற்றி அவன் கூறியது சரியில்லை. உண்மையில் நான் போனது பாலைவனத்துக்கு அல்ல. அடர்ந்த வனம். சம்பல் பள்ளத்தாக்குக்கு. சென்று நூற்றாண்டின் ஆரம்பத்தில்.

மனிதகுல வரலாற்றில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றிய தொகுப்பு அந்தப் புத்தகம். நிர்வாணமாகக் கால்பந்து விறையாட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், ஏர் நுகத்தில் பூட்டி ஊழப் பயன்படுத்தப்பட்டவர்கள், ருதுவான மாத்திரத்தில் பிறப்புறுப்பை முட்டித் தைக்கப் பட்டவர்கள், நூற்றிச் சொச்சமாவது ராணியாக அந்தப்புரத்தில் அலிகளின் காவலில் இருந்த அரசிகள், மேலாடை இன்றி ஒட்டகப் பந்தயத்தில் ஓட்டுநர்களாகப் பணிக்கப்பட்டவர்கள், விருந்தினர்களுக்கு உபசாரமாகப் படைக்கப்பட்டவர்கள், சந்தைகளில் நிறுத்தி ஏலம் விடப்பட்டவர்கள்…. உறவியல் ரீதியாகப் பெண்கள் தரும் இதத்தை அனுபவித்தவாறே, உடலியல் ரீதியாக அவர்கள் சிறுமைப்படுத்தப்பட்டதைச் சொல்லும் மானுடவியல் வரலாறு அந்தப் புத்தகம்.

சென்ற தடவை போலவே, பழுப்பேறிய செம்மண் தரையாக விரிந்த வனத்தினுள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தேன். நல்ல கோடை, வெய்யலில் தோள் பொசுங்குகிறது. இலை உதிர்ந்த கிளைகளை, இறைஞ்சும் கைகளாக ஆகாயம் நோக்கி விரித்திருந்த மரங்கள், வியாதி பீடித்த சருமம் போலப் பாளம் பாளமாக வெடித்திருந்த மரப் பட்டைகள். கருகி நின்ற குட்டைச் செடிகள். புதிய இடத்தில் அறியாத்தன்மைக்குள் காரணம் தெரியாமல் பகல் முழுக்க நடந்து கொண்டேயிருக்கிறேன்.

அந்தி கவியும் நேரத்தில், மனிதர் வாழ்ந்திருந்த இடம் என்பதற்கு ஒரே சாட்சியம் போல, சிதிலமாகியிருந்த குட்டிச் சுவர்த் தொகுப்பு ஒன்று கண்ணில் பட்டது. கூரையும் கதவுகளும் இல்லாது பகுக்கப்பட்ட வெற்று வெளிப் பாத்திகள், மேகம் போல நிறைந்திருந்த நிசப்தம். பீதியூட்டிய அமானுஷ்யம். அதைக் கூட்டும் வகையில், சுவருக்குப் பின்னாலிருந்து விசிக்கும் ஒலி கேட்டது. அவ்வப்போது மூக்கை உறிஞ்சியவாறு கேவும் பெண் குரல்.

அந்த முன்னால் வீட்டின் நிலைவாசலைப் தயங்கித் தயங்கித் தாண்டி நுழைந்தேன்.

அவள் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள். முன்பு பார்த்த அதே நிலையில். வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்களை உடல் முழுவதும் பூட்டியிருந்தாள். பல வருஷங்கள் ஆகி விட்டன என்பதால், ஆடை எதும் உடுத்தியிருந்தாளா என்று ஞாபகமில்லை இப்போது. வெள்ளி மினுங்கிய இடங்கள் போக மற்ற இடங்களில் பளபளக்கும் அட்டைக் கறுப்பு நிறத்தவளாக இருந்தாள் என்பது மட்டும் நினைவிருக்கிறது.

நான் வரும் ஓசை கேட்டுத் தலை நிமிர்ந்தாள். மாலை மாலையாகப் புதிய கண்ணீர்த்தலைகள் கன்னத்தில் வழிந்திறங்கின. பல நூற்றாண்டுகளாகத் தேங்கிய துயரம் வெளியேறுவதாகப் பட்டது எனக்கு. மாற்றவியலாத நியதிபோல. இந்த முறையும் கேட்டேன்.

யாரம்மா நீ? இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாய்.

நான் ஸவிதா …. இங்கிருந்து ஐம்பது கல் தொலைவில் உள்ள ஜமீனைச் சேர்ந்தவள்.

இந்த இடத்தில் என்ன செய்கிறாய்?

ஒளிந்திருக்கிறேன்.

என்ன?

ஆமாம். நான் குற்றம் இழைத்தவள்தான். ஆனால், குற்றவாளியல்ல.

பின்னே?

முழுக்கச் சொன்னால் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்,

மூச்சிரைக்கச் சொல்லத் தொடங்கினாள்.

….ஐயா எங்கள் ஜமீனில் நாலாயிரம் குடும்பங்கள் இருந்தன. ஜமீந்தார் மிகவும் நல்லவர். வாழ்க்கை நடத்துவதற்கான வசதிகள் எதிலும்குறை வைக்காவர். ஆனால், உடம்புக்கு மாத்திரம் வசதிகள் இருந்தால் போதுமா. மனதுக்கு வசதியில்லாத இடம் நகரமாகத் தோன்றாதா? ஒரு விசித்திரமான வியாதி ஜமீந்தாருக்கு.

எங்கள் ஜமீனில் திருமணமாகும் எந்தப் பெண்ணுக்கும் முதலிரவு ஜமீந்தாருடன் தான் நடக்க வேண்டும். ஜமீந்தார் கடவுளின் அவதாரம் என்பதால் அவருக்குத்தான் முதல் படையலாம். வெகு விசேஷமான சன்மானங்கள் எல்லாம் வழங்குவார்தான். அவற்றை அனுபவிப்பதற்கான மனோ நிம்மதி மட்டும் இல்லாமல் போய்விடும்.

என்னுடைய திருமணத்தன்றும் சாயங்காலம் ஊரே திரண்டது. ஷெனாயும் பக்வாஜூம் ஒலிக்க ஊர்வலமாய் நடந்து, என்னை ஜமீன் அரண்மனை வாசலில் கொண்டு நிறுத்தியது.

முதல் தவையாக ஒரு ஆடவனின் முழுமையான ஸ்பரிஸத்துக்கு ஆயத்தமாகும் பெண்ணுக்கு இயல்பாகவே இருக்கும் பயத்தோடு, உபரியான வெறுப்பும் எங்கள் ஊர்ப்பெண்களுக்கு இருக்கும். என் விஷயத்தில் கூடுதலான அச்சமும் கலந்திருந்தது. என் குடும்பத்தை ஜமீந்தாருக்குப் பிடிக்காது. காரணம், இறந்துவிட்ட என் அண்ணன்.

அவனுடைய புது மனைவியை ஜமீனுக்கு அனுப்ப வேண்டி வந்தபோது, ஜமீந்தாரை எதிர்த்துப் பேசிவிட்டான் அவன்.

போன மாதம் உங்கள் மகளுக்குத் திருமணம் நடந்ததே, முதல் ராத்திரியை உங்களுடன்தான் கழித்தாளா அவள்?

என்று கூடியிருந்த ஜனங்கள் முன்னிலையில் கேட்டு விட்டான். பதறித் துடித்துவிட்டது. ஊர் உச்சகதியில் எழும்பிய கூச்சல்கள் அடங்கிய பின், ஊர் ஜனங்களே அவனுடைய மனைவியைத் பறித்துப்கொண்டுபோய் ஜமீந்தாரிடம் ஒப்படைத்தார்கள். மறுவாரமே திருட்டுப் பட்டம் கட்டிக் கொன்றுவிட்டார்கள் என் அண்ணனை….

பெருமூச்சு விட்டான். வெள்ளிச் சரங்களுக்குக் கீழ் மதர்த்த மார்புகள் ஏறித் தாழ்ந்தன. துயரத்திலும் எத்னை வடிவாகத் தெரிகிறாள் என்று நினைத்துக் கொண்டேன். அவள் தொடர்ந்தாள்.

….. என்னவெல்லாம் பட வேண்டியிருக்கமோ என்ற கிலேசத்துடனே அந்த அறைக்குள் நுழைந்தேன். ஜமீந்தாரின் படுக்கையறை எங்கள் ஊரின் கதிரடிக்கும் பொட்டல் போல விஸ்தாரமாயிருந்தது. அரக்கு நிறத் திரைச் சீரைகள். அரக்கு நிற வெல்வெட் படுக்கை விரிப்பின் மேல் வாசனைப் பூக்கள் இறைந்திருந்தன. சாம்பிராணிப் புகையின் நறுமணம் மயக்கியது. ஒரச் சுவரின் அருகில் தயங்கி நின்றிருந்தவளின் தலைக்கு மேல் குருவியொன்று கத்தும் சப்தம் கேட்டது. திடுக்கிட்டு அண்ணாந்து பார்த்தேன். விசித்திரமான கடிகாரம் ஒன்றின் கீழ்ப் பகுதியில் உள்ள கூட்டிலிருந்து வெளிவந்து ஒசையெழுப்பிவிட்டு உள்ளே சென்று மறைந்தது அந்த மரக்குருவி.

ஜமீந்தார் தனியாக வரவில்லை. அவருடைய மெய்க் காப்பாளன் போல உடனிருக்கும் மல்லன் ஒருவனுடன் வந்தார். விரோதியின் குடும்பத்துப் பெண்ணாம் நான். என்னைத் தீண்டுவதே பாவமாம். மல்லன்தான் என்னை ஆளப் போகிறான். அதிகாரம் கைக்கேறிவிட்டால், அவமானப் படுத்துவதற்கு எத்தனை நூதனமான யுக்திகளெல்லாம் தோன்றுகின்றன பாருங்கள்?

நிர்க்கதி என்று சொல்வார்களே, அதை முழுமையாக அனுபவித்தேன் அன்று, பெண்ணாகப் பிறந்ததை, அந்த ஜமீனில் பிறந்ததை, என் அண்ணனுக்குத் தங்கையாக பிறந்ததை, கடவுள் என்ற ஒருவர் இல்லாத உலகத்தில் பிறந்ததை நினைத்து என் மனம் மறுகிக் கொண்டிருக்க, மல்லனின் கைகளில் என் உடல் ஆட்பட்டுக் கிடந்தது. மனதில் ஒடிய எண்ணங்கள் கண்ணீராய் வழிவதை, உடல் வலியின் விளைவு என்றெண்ணிக் குதூகலித்தனர் என்னைக் கையாண்ட மல்லனும் பொறுமையாய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஜமீந்தாரும்.

முதல் சுற்று முடிந்ததும் என் கையால் மது ஊற்றிக் கொடுக்கச் சொன்னார்கள். மிதமிஞ்சிக் குடித்தார்கள். கிறங்கிச் சாய்ந்தார்கள்.

ஐயா, வனத்தினுள் போய் சுள்ளி பொறுக்கியும், காட்டுப்பழங்களை உதிர்த்துப் பொறுக்கியும் ஜீவனம் நடத்தும் சமூகத்தைச் சேர்ந்தவள் நான். பத்துப் பதினைந்து பெண்களாகச் சேர்ந்துதான் போவோம் எப்போதும், காட்டுப் பன்றிகளும், முள்ளம்பன்றிகளும், ஓநாய்களும், கரடிகளும் எங்களைக் கடந்து போவதைச் சர்வசாதரணமாகப் பார்த்திருக்கிறேன். ஒரு தடவை புலியைக் கூடப் பார்த்துண்டு. நின்று, நிதானமாய் எங்களை வெறித்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டது. அத்தனை ஜீவராசிகளிடமும் தப்பியவள், என் இனப் பிராணிகளிடம் சிக்கிக் கிழிபட நேர்ந்ததே என்று துக்கம் மேலிட்டது எனக்குள்.

அப்போதுதான் அந்த முடிவெடுத்தேன். நான் பட்ட கஷ்டம் வேறு யாருமே படக்கூடாது இனி.

பழங்கள் வெட்டுவதற்காக மேஜை மேல் வைத்திருந்த குறுங்கத்தியை எடுத்துக் கிறங்கிக் கிடந்த ஜமீந்தாரின் குரல்வளையில் பாய்ச்சினேன். சத்தம் கேட்டு எழ முடியாமல் போதையில் புரண்ட மல்லனின் ஆணுறுப்பைத் துண்டித்து வீசினேன்.

நல்லவேளை. யாரும் பார்க்கவில்லை. நடந்து செல்லும் வழியாக ரகசியமாக வெளியேறினேன். என் ஊரை விட்டு. என் வனத்தை விட்டு என் காலத்தை விட்டு.

என் ஊர்ப் பெண்கள் என்னைக் காவல் தேவதையாக்கி வழிபடுகிறார்களாம். என் திருமணம் நடந்த நாளில் விரதம் இருந்து படையல் வைக்கிறார்களாம் ஊரில் பாதிப் பெண் குழந்தைகளுக்கு என் பெயர்தான் இடப்பட்டிருக்கிறதாம். காற்றில் வருகின்றன சேதிகள். எனினும் நான் கொலையாளிதானே. இதோ ஒளிந்திருக்கிறேன். காட்டிக் கொடுத்துவிட மாட்டீர்களே..

சௌரீ….. சௌரீ…..

முதலில் யார் என்று புரியவில்லை சௌரிராஜனுக்கு. வாசலைப் பார்த்தான். தூங்கிக் கொண்டிருக்கும் ராகவனைப் பார்த்தான். மறுபடி புத்தகத்துள்குள் ஆழ்ந்தான்.

நாலைந்து தடவை கூப்பிட்டுப் பார்த்தும் பலனில்லாமல் போனதால் மறுபடியும் அறிமுகப்படுத்திக் கொண்டேன்..

சௌரீ…. நான் தான் குருவி. கடிகாரக் குருவி பேசுகிறேன்….

அவன் கண்களில் மிரட்சி. புத்தகத்தைக் சடுதியாக மூடினான்.

என்ன, நம்ப முடியவில்லையா.

தலையை லேசாகக் குனிந்து கொண்டவன், மெதுவாகச் சொன்னான்.

ஆமாம்.

என்னப்பா இது, ஓவியத்துக்குள் நுழையலாம், மரக்குருவி பேசச் கூடாதாக்கும். அசட்டுத்தனமாகச் சிரித்தான்.

நீ பேசுவாய் என்று எதிர்பார்க்கவில்லை.

சரிவிடு. எதிர்பார்த்துத்தான் நடக்கிறதா எல்லாம்?

என்ன சொல்கிறாய்?

இதோ தூங்குகிறானே உன் சினேகிதன். அவன் உன் மேல் ஆத்திரமாக இருக்கிறான்.

அடடே ஏன்?

சாயங்காலம் உன் டைரியை எடுத்துப் படித்து விட்டான்.

அதற்கு நானல்லவா கோபித்துக்கொள்ள வேண்டும்?

அதில் அவன் தங்கையைப் பற்றித் தாறுமாறாக எழுதியிருக்கிறாயாம்.

அடக் கடவுளே. அந்தப் பெண்ணைப் பற்றி நான் ஏன் ஏழுதவேண்டும்?

உனக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிகிறது. ராகவனுக்குத் தெரியவில்லையே…

எந்தத் தேதியிலாம்?

அக்டோபர் ஆறு.

சௌரிராஜன் அக்டோபர் ஆறு ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றான். அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதற்கு மேல் ஒன்றும் பெயரிவில்லை.

என்னப்பா குழம்புகிறாய்! அன்றுதானே ராகவன் வீட்டுக்குப் போனது? அங்கிருந்து ஹ’க்கின் பாதம்ஸ் போகவில்லை?

அட, ஆமாம்….. அதுசரி, உனக்கெப்படித் தெரிகிறது இதெல்லாம்?

எனக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது சௌரி.

சௌரி சிரித்தான்.

கடவுள் மாதிரியாக்கும் நீ?

வைத்துக் கொள்ளேன். ஒருமையில் சொல்லாதே. மாபெரும் கூட்டத்தின் பிரதிநிதிதான் நான்.

ஓஹோ.

உங்களுக்கு வால் கழன்று, ரோமம் உதிர்ந்து, பல் உள்ளடங்கி, இப்போதைய வடிவத்துக்கு நீங்கள் வந்திருக்கிற மாதிரி எங்களுக்கும் வளர்ச்சிப் பாதை ஒன்று உண்டு. என்னுடைய கொள்ளுப் பாட்டனின் பாட்டன் மணல் நிரப்பின குடுவையாய் இருந்தார். அவருடைய ஒன்றுவிட்ட தம்பி, நீர் சொட்டுகையில் சுழலும் சக்கரமாய் இருந்தார். அவருடைய தாத்தா, மைதானத்தின் நடுவில் நட்டுவைத்த கம்பமாய் இருந்ததாய்ச் சொல்வார்கள்.

குருவிகளைப் பற்றியா சொல்கிறாய்?

அட கிறுக்கா. குருவியென்றால் உணவு கொள்ளவும், உயிர்பெருக்கவும் மாட்டோமா?

சௌரி கொஞ்சநேரம் அமைதியாய் இருந்தான். பிறகு கேட்டான்.

போகட்டும். அவன் படித்த குறிப்பில் என்ன எழுதியிருந்தேனாம்?

மேலேந்தின கூழாங்கற்கள்…. கருமையின் கவின்மிகு கதிர்வீச்சு… காம்புகளின் காந்த ஈர்ப்பு….

அடப்பாவி. அது அவன் தங்கையைப் பற்றிய வர்ணனை என்றா நினைக்கிறான்.

ஸவிதாவை முதல் தடவை பார்த்த போது எழுதியதல்லவா அது?

ராகவனைத் திரும்பிப் பார்த்தான் சௌரிராஜன். சந்தேகத்தைத் தலையணையாய் வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறானே என்று தோன்றியிருக்கும். தூக்கத்தில் வெகுளி பூண்ட முகத்தைப் பார்க்கப் பாவமாய் இருந்ததோ என்னவோ.

அது கிடக்கட்டும்…. வாதைப்படும் ஒரு பெண்ணைச் சந்தித்ததை எழுதும்போது, இப்படியா அவள் உடம்பைப் பார்த்துக் கிறங்குவது?

அட, வேணுமென்றா கிறங்குகிறோம். இதைப் சொல்கிறாய். ஒரு தடவை இடுகாட்டுக்ப் போயிருக்கிறேன். சாயங்காலம். மனம் முழுக்கத் துயரம் நிரம்பியிருக்கிறிது. இடுகாட்டு அரசமரத்திலிருந்து சிலுசிலுவென்று காற்று வீசியது. உடம்புக்கு எவ்வளவு இதமாய் இருந்தது என்கிறாய்…. என் சிநேகிதன் ஒருத்தன் கவிதை எழுதியிருக்கிறான்…..

கண்ணீர் உருளும்
பெண்ணின் கன்னம்
அழைக்கிறது என்னை
முத்தமிட….

தொடர்ந்து, ஆதங்கத்துடன் கேட்டான்.

அது சரி, உனக்குத்தான் தெரிகிறதே. நீயாவது அவனிடம் விளக்கியிருக்கக் கூடாதா?

நான் பேசுவது எல்லாருக்கும் கேட்காதே. கேட்பவருக்கெல்லாம் புரியவும் செய்யாதே.

ரொம்ப மர்மமாகப் பேசுகிறாய்.

நிஜ வாழ்வு இன்னும் மர்மமானது சௌரி.

அப்படியா.

ஆமாம். அந்தப் பெண் ஸவிதா, தான் செய்த கொலைகளை யாருமே பார்க்கவில்லை என்கிறாளே, நீயும் நம்புகிறாய் தானே?

ஆமாம்.

அதுதான் இல்லை. நான் பார்த்தேன் …. குக்… குக்… குக்………..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *