வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

 

வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். திகம்பரச் சாமியார் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். 1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார்.

தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்துறையும், நீதிமுறையும் உருவாக்கப்பட்டதை ஒட்டி குற்றங்களை காவலர் நவீன முறையில் துப்பறிவதன் மீது வாசகர்களின் ஆர்வம் உருவாகியது. தொடக்ககால தமிழ் பொதுவாசிப்பு எழுத்துக்கள் பெரும்பாலும் துப்பறியும் மர்மக் கதைகளாகவே அமைந்தன. துப்பறியும் நாவல் முன்னோடிகளான ஜே.ஆர். ரங்கராஜூ, ஆரணி குப்புசாமி முதலியார் வரிசையில் அதிக நாவல்களை எழுதியவர் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் தன் கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் என்னும் நூலில் திகம்பர சாமியார் என்னும் கதாபாத்திரத்தை உருவாக்கி அறிமுகம் செய்தார். . காவலதிகாரியான அவர் சாமியாராக துப்பறிபவர். திகம்பரச் சாமியார் தோன்றும் துப்பறியும் நாவல்களான மேனகா’, ‘மாய சுந்தரி’, ‘மருங்காபுரி மாயக் கொலை’, ‘மரணபுரத்தின் மர்மம்’, ‘முத்துலக்ஷ்மி அல்லது வெடிகுண்டு மர்மம்’, ‘திரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும் பிரவேசம்’, ‘நீலலோசனி அல்லது கனவில் மணந்த கட்டழகி’ ஆகியவை வடுவூர் துரைசாமி ஐயங்காருக்கு புகழை அளித்தன.

வடுவூரார் துப்பறியும் நாவல்களை வெளியிடுவதற்காகவே மனோரஞ்சனி என்னும் வார இதழை நடத்தினார்.வடுவூரார் சுதேசமித்திரன் இதழிலும் சில தொடர்களை எழுதியிருக்கிறார். அவற்றுள் ‘காங்கிரஸ் கமலம் அல்லது ஆணென்று அணைய அகப்பட்டது பெண் புதையல்’ என்னும் தொடரும் ஒன்று என க.நா.சுப்ரமணியம் தனது ’இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார். சுதேசமித்திரனில் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எழுதிய மற்றுமொரு தொடர், ’மோகனாங்கி அல்லது திவான் திருமலைராயன் ஸாகஸம்’ என்பதாகும். இது நாயக்கர் காலகட்ட பின்னணியைக் கொண்ட வரலாற்றுத் தொடர்.

நாவல்கள்

  • பாலாமணி அல்லது பக்காத் திருடன் – இரண்டு பாகங்கள்
  • விலாஸவதி
  • கலியாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த விந்தை
  • மரணபுரத்தின் மர்மம் அல்லது லீலாவதியின் மூடுமந்திரம்
  • டாக்டர் சோணாசலம்
  • நங்கை மடவன்னம்
  • பாவாடைச் சாமியார்
  • முத்துலக்ஷ்மி அல்லது வெடிகுண்டு மர்மம்
  • பச்சைக்காளி அல்லது பணத்தைக் காத்த பயங்கரப் பேய்
  • மருங்காபுரி மாயக் கொலை
  • திரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும் பிரவேசம்
  • இருமன மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி
  • சோமசுந்தரம் அல்லது தோலிருக்கச் சுளைமுழுங்கி
  • சௌந்திரகோகிலம் – நான்கு பாகங்கள்
  • நீலலோசனி அல்லது கனவில் மணந்த கட்டழகி
  • பூஞ்சோலையம்மாள்
  • பூர்ண சந்திரோதயம் – ஐந்து பாகங்கள்
  • மாயாவினோதப் பரதேசி – மூன்று பாகங்கள்
  • மேனகா – இரண்டு பாகங்கள்
  • வித்தியாசாகரம்
  • சொக்கன் செட்டி
  • லக்ஷ்மீகாந்தம்
  • துரைராஜா
  • கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் – இரண்டு பாகங்கள்
  • சமய சஞ்சீவி அல்லது பகையாளி குடியை உறவாடிக் கெடு
  • பிச்சு முத்துக் கோனான்
  • ஸதாநந்த போதக சாமியார்
  • தங்கம்மாள் அல்லது தீரபுருஷனின் தியாக கம்பீரம்
  • வசந்த மல்லிகா
  • சிவராமகிருஷ்ணன்
  • மிஸ்டர் பூச்சாண்டி எம்மே! அல்லது நீக்கு பெப்பே! நீ தாத்தாக்குப் பெப்பே!
  • சிங்கார சூரியோதயம் அல்லது திருட்டில் நவமணிகள்
  • நவநீதம் அல்லது நவ நாகரீக பரிபவம்
  • மதன கல்யாணி – மூன்று பாகங்கள்
  • திடும்பிரவேச மகாஜாலப் பரதேசியார் அல்லது புஷ்பாங்கி இரண்டு பாகங்கள்
  • கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமகளும்
  • காங்கிரஸ் கமலம் அல்லது ஆணென்று அணைய அகப்பட்டது பெண் புதையல்
  • புதையல்
  • திகம்பரசாமியார் பால்யலீலை
  • தில்லை நாயகி அல்லது திகம்பர சாமியார் அந்தரத்யானம்
  • திவான் லொடபடசிங் பகதூர்
  • பன்னியூர் படாடோப சர்மா அல்லது மயன் திருநடன மதிமயக்கம்
  • மன்மதபுரியின் மூடு மந்திரம் அல்லது திகம்பர சாமியார் திருநடன வைபவம்
  • மாய சுந்தரி
  • மிஸிஸ் லைலா மோகினி அல்லது மயன் ஜாலம்
  • லக்ஷ்மிகாந்தம்
  • வித்யா சாகரம்
  • துரைக்கண்ணம்மாள் அல்லது திருசங்கு சாஸ்திரியார்

நாடகங்கள்

  • சுந்தராங்கி
  • வஸந்தகோகிலம்
  • மங்கையர் பகட்டு
  • மாணிக்கவாசகர்
  • திலோத்தமை
  • இராஜேந்திர மோகனா அல்லது காதலின் மகத்துவம்
  • காட்டி ராஜன்

திவான் லொடபடசிங் பகதூர், முதற் பதிப்பு: 2006, ஜெனரல் பப்ளிஷ்ர்ஸ், சென்னை.

வடுவூரார் தமிழ் இலக்கிய வரலாறு 

வடுவூர் துரைசாமி ஐயங்கார்: 1880-1942. தஞ்சை மாவட்ட மன்னார்குடி வட்டம். தந்தை கிருஷ்ண ஐயங் கார். பி.ஏ.பட்டம் பெற்று தாசில்தாராக விளங்கி, எழுத்துச் செல்வாக்கால் வேலையை விட்டவர். தம் நாவல்களைத் தாமே அச்சிட ஓர் அச்சகமும் ‘மனோ ரஞ்சனி’ (19) என்ற மாத இதழும் தொடங்கி மாதம் ஒரு கதை நூல் என எழுதிக் குவித்தவர். கலைமகள் கம்பெனி, விற்பனை நிலையமாகும். 

நடுத்தர உயரம், ஒல்லியான உடல், கருத்த மேனி, கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு, அங்க வஸ்திரம், பஞ்சகச்சம், தலையில், குல்லா, காலில் கட் ஷூ, கையில் தடி, நெற்றியில் எப்போதும் திரு மண், வாய் நிறைய வெற்றிலை (பெரிய வாய்), புகை யிலை, தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார் இளமை யோடிருக்க. மொத்தத்தில் கை நிறைய சம்பாதித்த கவலை இல்லாத உல்லாச மனிதர். இவர் மாடிக்கு ஜே.ஆர்.ரங்கராஜு, ஆரணியார், பம்மல் சம்பந்த முதலியார், வை.மு.கோ., எஸ்.எஸ். வாசன் வந்து போவர்

மனைவி நாமகிரி அம்மாள். மக்கள் விஜயராக வன், ரங்கநாயகி, கிருஷ்ணசாமி. மூத்த மகன் மனைவி புஷ்பவல்லி; புதுப்பேட்டை கார்ப்பரேஷன் பள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வு; ஒரு பெண்ணும் பிள்ளையும் ரங்கநாயகிக்கு நான்கு மகள்களும், ஒரு பிள்ளை ரகுவும் நேவியில் காப்டன். வடுவூராரின் நவீனம் ‘மைனர் ராஜாமணி’ சினிமாவாக வந்து திரை யிட்டதும் ஒரு சமூகத்தை இழிவு செய்வதாக வழக்கு தொடர்ந்து நிறுத்தப்பட்டது. இந்த அதிர்ச்சி, அவ மானம் தாங்காது குருதிக் கொதிப்பால் மாண்டார்! 

இந்த நூற்றாண்டின் தொடக்க 30 ஆண்டுகளில் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களைத் தம் துப்பறியும் கதைகளால் பிணித்தவர். புத்தகம் படிக் கும் பழக்கத்தை ஏற்படுத்தி, பரந்த ஓர் வாசக உல கினைப் படைத்துக் கொண்ட பெருமையர் Reynolds போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியதோடு, சொந்தமாகவும் படைத்துள்ளார். இவர் படைப்பில் சிறந்ததாக மேனகா, கும்பகோணம் வக்கீல் குறிப் பிடத்தக்கன; படமாகவும் வந்தவை. வாசகர்களின் நாடித் துடிப்பறிந்து ஈர்க்கும் இனிய வசனமும் அழகு வருணனைகளும் அனைவரையும் அள்ளின

திகைப்பூட்டும் திருப்பங்கள், சுவைமிகு நிகழ்ச்சி கள், ஆவலைத் தூண்டும் விறுவிறுப்பும், படிக்கப் படிக்க மகிழ்வூட்டும் நடையும், நகைச்சுவை நெளிய நல்ல நல்ல நவீனங்களைப் படைத்துள்ளார். 

வெறும் மர்ம நாவல் என ஒதுக்க முடியாத அள வுக்கு வைணவத் தலங்களையும், வேற்று மதத்தின ரும் கூடி வாழும் வகையும், சமூகக் குறை நீக்கமும் கொண்டும் விளங்குகின்றன. திகம்பர சாமியார் துப்பறி யும் பாத்திரம் நினைவில் நிற்கும். நாவல் வரலாற்றில் சுவடு பதித்தவர் வடுவூரார் என்பதை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. 

– நன்றி தமிழ் இலக்கிய வரலாறு 

இலக்கிய சாதனையாளர்கள் 

முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் கல்கி என்கிற எழுத்தாளர் தமிழ் வாசகர்கள் எண்ணிக்கையை அதி கரிக்க ஆவன செய்ததுபோல இருபதுகளில் தமிழ் வாச கர்கள் பரம்பரையை உருவாக்க முயன்றவர்கள் என்று ஜே.ஆர்.ரங்கராஜு என்பவரையும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரையும் சொல்ல வேண்டும். 

இந்த விஷயத்தைக் கல்கி தெரிந்து செய்தார் என் றும், முன்னிருவரும் தாங்களும் அறியாமலே வாசகர் பெருக்கத்துக்குக் காரணமாக இருந்தார்கள் என்றும் சொல்ல வேண்டும். 

ஜே.ஆர். ரங்கராஜுவின் ஐந்தாறு நாவல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றாக 1916 முதல் 1923 வரை யில் வெளிவந்தன. பிரஸ் சொந்தக்காரரான ரங்கராஜு பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டு ஒவ்வொரு ஐநூறு பிரதி களையும் ஒரு பதிப்பாகக் குறிப்பிட்டு 10 பதிப்புகள் வரை தன் நாவல்களை வெளியிட்டார். ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, ஆனந்தகிருஷ்ணன் என்று ஒவ்வொரு நாவலும் வெளியாகும்போது மிகவும் பர பரப்பாக வாசகர்கள் வாங்கிப் படித்தனர். வரதராஜன் என்று இரண்டு பாகங்கள் வெளிவரும் வரையில் ஒன்றும் தடங்கல் இல்லை. ‘வரதராஜனின் பல பகுதிகள் இலக் கியத் திருட்டு’ என்று கேஸ் போட்டு, மேலே எதுவும் எழுதிப் பிரசுரிக்கக் கூடாது என்றும், ஆறு மாதம் ஜெயில் வாசம் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் என் றும் கோர்ட் அவருக்குத் தண்டனை விதித்தது என்று எண்ணுகிறேன். ஜெயிலில் இருந்து விட்டு எழுதுவதை நிறுத்தி விட்டார் ரங்கராஜு. இவரை எழுத்தாளர் சங்கம் ஒன்று 40களின் ஆரம்பத்தில் கல்கி தலைமையில் ஏற்பட்ட போது முதல் கூட்டத்துக்கு வரவழைத்து நான் சந்தித்திருக்கிறேன். தாடி வளர்த்துக் கொண்டு நாமம் போட்டுக் கொண்டு (வைஷ்ணவ நாயுடு அவர் என்று எண்ணு கிறேன்) பார்ப்பதற்குக் கம்பீரமாக இருந்தார். 

ரங்கராஜுவுக்கு அடுத்து வாசகர்களின் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தவர் என்று வடுவூர் துரைசாமி ஐயங் கார் என்பவரைச் சொல்ல வேண்டும். 1923,24 முதல் 27 வரையில் தஞ்சையில் கல்யாண சுந்தரம் ஹைஸ்கூலில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது பச்சை, மஞ்சள், சிவப்பு அட்டையில் டெமி சைஸில் அவர்கள் நாவல்கள் ஒவ்வொன்றாக அப்பாவுக்குத் தெரியாமல் ரெயில்வே ஸ்டேஷன் ஹிக்கின்பாதம்ஸில் வாங்கிப் படித்த நினை விருக்கிறது. படித்துவிட்டு வீட்டுக்கு எடுத்துப் போனால் அப்பா சண்டை பிடிப்பாரென்று அப்போது மேல வீதியில் தெற்குக் கோடியில் இருந்த ஒரு லைப்ரரிக்கு இனாமாகப் புஸ்தகத்தைக் கொடுத்து விடுவேன். இப்படிப் படித்த நாவல்கள் என்று கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலை மகளும், வஸந்த கோகிலம், பூரண சந்திரோதயம்,விலாஸ் வதி, திகம்பர சாமியார், மேனகா இவை நினைவுக்கு வருகின்றன.ஒரு நாவல் கலைப் பிரக்ஞையுடன், சுலப மாகப் படிக்கக் கூடிய நடையுடன், விரஸமான விஷயங் களையும்கூட அதிக விரஸம் தட்டாமல் எழுதுவதில் சிரத்தையுடன் எழுதிய வடுவூரார் உண்மையிலேயே இலக் கியப் பிரக்ஞை உடையவர் என்பதில் சந்தேகத்துக்கிடமே இல்லை. 

ரெயினால்ட்ஸின் மட்டமான நாவல்களைத் தழுவி எழுதினார் பெரும்பாலும் என்றாலும் அவர் விக்டர் ஹ்யூகோவின் Les Miserables என்கிற நாவலை அற்புத மாகத் தமிழில் தழுவி எழுதியிருக்கிறார். முதநூலைப் போலவே கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமக ளும் என்கிற நாவல் அமைந்திருப்பதாகச் சொன்னால் அதில் தறவில்லை. 

அதே போல கிரேக்க புராணக் கதையான Eros and Psyche கதையை வஸந்த கோகிலம் என்கிற நாவலாகச் செய்திருக்கிறார். 

இன்று தமிழில் சரித்திர நாவல்கள் ஏராளமாக எழுதப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் முன்னோடி யாகக் கல்கியைக் கருதுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், இதே அளவில் இன்று எழுதப்படுகிற சரித்திர நாவலாசிரியர்களுக்கு முன்னோடியாக 1924-ல் வெளி வந்த வடுவூராரின் விலாஸவதி என்பதைத்தான் சொல்ல முடியும். அது வெளிவந்த சமயத்தில் மிகவும் பரவ லாகப் பேசப்பட்டதுடன் படிக்கவும் பட்டது. மூன்று ஆண்டுகளில் ஐந்து பதிப்புகள் வந்ததாக ஒரு தகவல் படித்திருக்கிறேன். 

வடுவூராரின் ஆரம்பக் காலத்திய நாவல்கள் எல் லாம் மாதாந்திரப் பத்திரிகையாக வெளிவந்த மனோரஞ் சிதம் (அல்லது மனோரஞ்சனியா?) என்கிற பத்திரிகை யில் வெளிவந்ததாகச் சொல்வார்கள். இந்தப் பத்திரி கையைப் பார்த்திருப்பதாக எனக்கு நினைவில்லை. அந்தப் பத்திரிகையை முன்மாதிரியாகக் கொண்டுதான் வை.மு. கோதைநாயகி அம்மாள் தனது ஜகன்மோகினி நாவல் பத்திரிகையைத் தொடங்கியதாகவும் சொல்வார்கள். 

இன்னொரு விஷயமும் அப்போது பரவலாகப் பேசப்பட்ட விஷயம் நினைவுக்கு வருகிறது. வை.மு. கோதைநாயகியின் முதல் நாவலான வைதேகியின் முதல் பாதியை வடுவூரார் எழுதி, முன்மாதிரியாகத் தந்த தாகவும் அதைப் பின்பற்றி முடித்து விட்டு வெற்றிகர மான வை.மு.கோ.துப்பறியும் நாவல்களிலிருந்து அவர் தனி பிராண்டான சமூக நாவல்களுக்கு நகர்ந்தார் என்றும் சொல்லுவார்கள். 

1930-ல் என்று எண்ணுகிறேன். பைகிராப்ட்ஸ் ரோடு கோடியில் மரினா பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே வேங்கடரங்கம் பிள்ளை தெரு பைகிராப்ட்ஸ் ரோடைச் சந்திக்கிற இடத்தில் இருந்த வீட்டை வாங்கி வடுவூரார் புதுப்பித்து வடுவூர் ஹவுஸ் என்று பெயரிட்டு கிரஹப் பிரவேசம் நடத்தியபோது, மாலையில் பாண்ட் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் சென்னையில் இருந்தேன். வீட்டைப் பார்த்து வைத்துக் கொண்டு ஒரு வாரம் கழித்து, அவரைப் பார்க்கப் போனேன். அந்த ஒரு தடவை மட்டுமே அவரை நான் சந்தித்திருக்கிறேன். 

என்ன பேசினோம் என்று நினைவில்லை. ஆனால், பேச்சு பூராவும் தன் பக்கத்தில் அவர் நாவல்களைப் பற்றி யும், அவருடைய தழுவல் முறைகளைப் பற்றியும் அவர் நடையைப் பற்றிய வரையிலும்தான் என்று நான் நினைவு கூர்கிறேன்.தன் நாவல்களில் பெரும் பகுதி தழுவல்கள் தான் என்று அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால், மேனகா வும் திலோத்தமை என்று ஒரு ஐந்து அங்க நாடகமும் தன் சொந்த எழுத்து என்று சொல்லி, எனக்கு திலோத்தமா ஒரு பிரதி அன்பளிப்பாக அளித்தார். அதை வெகுநாள் நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். 

அதைத் தவிர அவர் பேசிய விஷயங்களிலே முக்கிய மானதாக ஒன்று நினைவுக்கு வருகிறது. எகிப்தில் தலை முறை தலைமுறையாக ஃபாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்கிற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை அய்யங்கார் கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதையெல்லாம் சொல்லித்தாதன் ஒரு நூல் எழுதிக் கொண் டிருப்பதாகவும் சொன்னார். இந்தச் சரித்திர உண்மையில் இருந்த அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக ஆங்கிலத்தில் Long Missing Links என்று ஒரு 900 பக்க நூல் எழுதி அதைத் தன் சொந்தச் செலவிலேயே அச்சிட்டு விற்க முயன்றார். புஸ்தகம் விற்கவில்லை. அச்சுக் கும், பேப்பருக்கும் ஆன கடனை புதுசாக வாங்கிய வீட்டை விற்று அடைத்து விட்டு, பேசாமல் கிராமத்துக்குப் போய்விட்டார் என்று எண்ணுகிறேன். இந்தப் புஸ்தகமும் என்னிடம் வெகு நாள் இருந்தது. 

‘காங்கிரஸ் கமலம்’ அல்லது ‘ஆணென்று அணைய அகப்பட்ட பெண் புதையல்’ என்கிற நாவலை சுதேச மித்திரனில் தொடராக எழுதி வெளியிட்டார். இதுதான் பழைய வடுவூர் பாணியில் அவர் கடைசி முயற்சி என்று எண்ணுகிறேன். அதற்குப் பிறகு அவர் முப்பதுகளில் பழைய வேகத்தையோ சாதனையையோ எட்டவில்லை. மாசத்துக்கு ஒரு நாவல் என்று எழுதி, நாவலுக்கு நூறு ரூபாய் என்று கூலி வாங்கிக் கொண்டு ஏழெட்டு ஆண்டு கள் இருந்து பிறகு இறந்து விட்டார் என்று எண்ணுகிறேன். 

சேலம் பட்டுக் கரை வேஷ்டியும், காதில் பால் வீசும் வைரக் கடுக்கனும், நெற்றியில் ஒரு சிவப்பு ஸ்ரீ சூர்ணக் கோடுமாகவும் நான் பார்த்த வடுவூர் துரைசாமி ஐயங்காரை என்னால் இன்றுகூட நினைவுகூர முடிகிறது. தமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்படவில்லை; புரிந்து கொள்ளப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

நன்றி – இலக்கியச் சாதனையாளர்கள் – க.நா.சு.