லா.ச.ராமாமிர்தம்

 

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்திலிருந்தே எழுதி வந்தவர். இவர், தனது 92வது பிறந்த நாளில் இறந்தார்.

நாவல்கள்

  • புத்ர (1965)
  • அபிதா (1970)
  • கல்சிரிக்கிறது
  • பிராயச்சித்தம்
  • கழுகு
  • கேரளத்தில் எங்கோ

சிறுகதைகள்

  • இதழ்கள் (1959)
  • ஜனனி (1957)
  • பச்சைக் கனவு (1961)
  • கங்கா (1962)
  • அஞ்சலி (1963)
  • அலைகள் (1964)
  • தயா (1966)
  • மீனோட்டம்
  • உத்தராயணம்
  • நேசம்
  • புற்று
  • துளசி
  • என் பிரியமுள்ள சினேகிதனுக்கு
  • அவள்
  • த்வனி
  • அலைகள்

நான் – அலைகள் ஓய்வதில்லை – டிசம்பர் 2001

அவனவன் வாழ்க்கை வெறும் தகவல் சேகரிப்பு அல்ல. தான் தான் தனியாக மற்ற உயிர்களினின்று, தன்னைத் தனக்கு இஷ்டமோ இல்லையோ தனி முறையில் இயங்கிக் கொண்டு, புதுப்புது உறவுகளைக் கண்டு கொண்டு ஜன்மா என்கிற அந்தஸ்துக்குத் தன் வழியில் மெருகு சேர்த்துக் கொண்டு தன் வேளை வந்ததும் மடியும், அல்ல மறுபடியும் தோன்ற மறையும் உயிர்த்தாது. இந்த முறையில் வாழ்வின் விவரம் சரித்ர வ்யாபகம் பெறுகிறது. ஆனால் இந்தப் பக்கங்களில் எனக்கு அனுமதித்திருக்கும், அல்லது நான் எடுத்துக் கொண்டிருக்கும் இடவிலாசம், விசாலத்துள் சற்றுக் கணிசமேயான என் ஆயுசின் விவரங்களை முழுக்க வும் திணிக்க இயலாது. ஆகவே ஆங்காங்கே என் வாழ்க்கை யின் திருப்புமுனைகளாக வாய்த்த சம்பவங்களை, சந்திப்பு களை எண்ணச் சிதர்களை, உரசல்களை தருணங்களைத் தொட்டுக்காட்டி, அடுத்த கட்டத்துக்குச் செல்கிறேன். இப்படி யும் ஒரு கண்ணோட்டம், எடைக்கனம், கோர்வை கிடைக்கும் என்கிற எதிர்நோக்கில் இதோ……. 

ஆறு அறிவுடன் பிறவியெடுத்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சரித்ர புருஷன்/சரித்ர ஸ்திரி. மனித பரம்பரையின் சரித்ரத்துக்குத் தன் பங்கைச் சேர்க்க வந்திருக் கிறான்/வந்திருக்கிறாள். 

என் ஸஹ பிறவிகளினின்று நான் வித்யாசமானவன். என் முத்திரையைப் பதித்துவிட்டுச் செல்லவே இங்கு வந்திருக்கிறேன். நான் இல்லாமல் இப்புவனத்துக்கு அதன் முழுமையில்லை, என எண்ணுவது ப்ரக்ஞையின் இயல்பு. 


என் பெற்றோர்கள் எனக்காகத் தவங்கிடந்து, நோன்புகள் நோற்று, அருமையாய்ப் பிறந்தவன் நான். 


அக்டோபர் 30, 1916இல் பெங்களூரில் பிறந்தேன். நீலம் பூரித்து, சலனமற்ற கட்டையாகத்தான் விழுந்தேனாம். என்னைத் தலைகீழாகப் பிடித்து சப்பையில் இரண்டு அறை அறைந்து ஆட்டின பின்னர்தான் குழந்தை வீறிட்டதாம். அப்படியும் கழுதைப் பாலைப் புகட்டினார்களாம். கழுதைப் பால் நெருப்பு. அத்தனை ‘சில்’லில் விழுந்த குழந்தைக்குச் சுயச்சூடு வர அந்த நெருப்பு வேண்டியிருந்ததாம். வெகு நாட்கள் ‘கழுதைப் பாலைக் குடிச்சுதாம்; அழுத மூஞ்சி சிரிச்சதாம்,’ என்று என்னைக் கேலி பண்ணி மற்ற குழந்தைகள் அழவிட்டுக் கொண்டிருக்கும். 


மதமதவென்று கொழுக்கட்டையாக வளர்ந்தேனாம். அத்தனையும் தாய்ப்பால். செக்கச் செவேலென்று அப்படி ஒரு சிவப்பு. கன்னங்களுக்கு மேல் கண்கள் பொத்தான்கள். பூனைக்கண். 

என் பழைய சிவப்பு உதிர்ந்துவிட்டது என்று சொல் கிறார்கள். ஏன் உதிராது? வயதாகவில்லை? ஆயினும் என்னைப் பற்றித் தனிப்புத்தகம் எழுதியிருக்கும் Dr. Gabrialla Eichinger Ferroluzzi, அதில் என்னை Fair complexioned எனத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடும்படி எழுதியிருப்பின் என் நிறத்தின் தன்மையை யூகித்துக் கொள்ளுங்கோளேன். 


இம்மாதிரிப் பொடி விவரங்கள் இந்த வரலாற்றில் அங்கங்கு தோன்றுகையில் “இந்த மனிதனுக்கு இந்த வயதில் இவ்வளவு தற்பெருமையா?” என்று உங்களுள் கேலி எழக் கூடும். ஏழட்டுமே. ஆனால் இவை தத்ரூபத்துக்கு முயற்சிக் கும் உண்மை நகாசுகள். சில சமயங்கள் எழுதும் வாகில் தாமாகவே வீழ்ந்து விடுகின்றன. இவைகளுக்கு நான் மன்னிப்புக் கோரப் போவதில்லை. 


நாங்கள் ஏழ்மையான குடும்பம் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமையே படுகிறேன். என் முன்னோர் களும், என் பெற்றோர்களும் பட்டினி பார்த்தவர்கள். நான் அவர்கள் மாதிரி கஷ்டப்படவில்லை. ஆனாலும் வறுமை என்னென்று எனக்கு நன்கு தெரியும். 


நாட்டின் நிலைமை ஒன்றும் மிக்க மாறிவிடவில்லை. ஸ்வதந்தரம் கிடைத்து ஐம்பது வருடங்களுக்கு மேலாகியும் பட்டினிச் சாவுகளைப் பற்றிச் செய்தி படிக்கிறோம். என்ன சுதந்திரக் கொண்டாட்டம் வேண்டியிருக்கிறது, தலை குனிவதைத் தவிர? 


பத்துப் பாத்திரம் தேய்க்க வரும் வேலைக்காரியின் புருஷனுக்கு சர்க்கரை வியாதி கண்டிருக்கிறது. ஆஸ்பத்திரி யிலிருந்து வீட்டுக்கு எடுத்துப் போகச் சொல்லிவிட்டார்கள். கேஸ் முற்றிப் போய்விட்டது. அவளுக்கு வேலைக்கு ஒழுங்காய் வரவே முடியவில்லை. என் மனைவிக்கு அவள் வேலை தடைபடுகிறது. அவரவர்க்கு அவரவர் கஷ்டம். ஆம், ஏழைகளுக்கு இம்மாதிரி ராஜ வியாதி ஏன் வருகிறது? அவளுக்கு எவ்வளவு உதவி செய்யும் நிலையில் நானிருக் கிறேன்? பார்க்கப் போனால் நாம் எல்லோரும் உதட்டால் அனுதாபப்படுவதோடு சரிதானே? ‘ஆஷாட பூதிகள்’. ஆனால் எப்படியும் மனம் தத்தளிக்கிறது. இது குற்ற உணர்வு. 


ராமாமிருதம். என் பெயரில் மூன்று தலைமுறைகள் வாஸம் வீசுகின்றன. அமிர்தம் அய்யர்; இந்தக் குடும்பத்தின் ஸ்தாபகர் என்பதைத் தவிர அவரைப் பற்றி வேறு தகவல் தெரியாது. முன்னூறு முன்னூற்று ஐம்பது வருடங்கள் ஆகியிருக்குமா? 

ராமஸ்வாமி அய்யர். என் பாட்டனார். லால்குடி போர்டு ஸ்கூல் தமிழ்ப் பண்டிதர். 

இவ்விருவருக்குமிடையே எத்தனை அமிர்தமய்யர்கள், ராமஸ்வாமிகள் நிகழ்ந்தனரோ? 

என் பெற்றோர்கள் ராமேஸ்வர தரிசனம் பண்ணி நான் பிறந்த அருமை வேறு. 


தாத்தா வரகவி. அவருக்கு பதினைந்து, பதினாறு வயதில், பிள்ளையார் அவர் வாயில் கற்கண்டு போட்ட தாய்க் கனாக் கண்டாராம். மறுநாள் காலையிலிருந்து கவிதையாகக் கொட்ட ஆரம்பித்து விட்டதாம். அவர் பாட்டுக்களைப் படித்திருக்கிறேன். அச்சு வெட்கும் முத்து முத்து எழுத்து. கறுப்பு மசியில் பெரிய நோட்புக்கில் எழுதி வைத்திருந்தார். 

குலதெய்வத்தை ஒரு சமயம் தோத்தரித்து 
ஒரு சமயம் கெஞ்சி 
ஒரு சமயம் தாஜா பண்ணி 
ஒரு சமயம் அதட்டி 
ஒரு சமயம் திட்டி 

ஆனால் எப்பவும் அவைகளினூடே ஒரு மூர்க்கமான பரிவுடன் தண்ணொளி வீசிக் கொண்டிருக்கும். 


லால்குடி எனும் திருத்தவத்துறை பாடல் பெற்ற ஸ்தலம். ஸ்வாமி சப்தரிஷீசன், அம்பாள் ப்ரவர்த்த ஸ்ரீமதி, அல்ல வெறும் ஸ்ரீமதி, தமிழில் பெருந்திரு. பெருந்திருதான் எங்கள் குலதெய்வம். லால்குடியில் வீட்டுக்கு வீடு ஒரு சப்தரிஷிக்கோ, ஒரு ஸ்ரீமதிக்கோ பஞ்சமில்லை. 

என் தகப்பனார் பெயர் ஸ்ப்தரிஷீசன். 

அம்மா பெயர் ஸ்ரீமதி. 


முன்னோர் காலத்திலிருந்தே எங்கள் குலதெய்வத்துக்கு தினசரி வாழ்க்கையிலேயே மாறாத பங்கு எப்படியோ உண்டு என்று நான் சொல்லாவிடின் என் எழுத்துக்கே முழுமையில்லை. 


பெருந்திரு மேல் என் மூதாதையரின் வழி வழி மூர்க்கப் பாசம் (பக்தியென்று எப்படிச் சொல்வது, அதைவிட நெருக்கமானது.) அதன் பாதையில், என் முறை வந்ததும், என் விதியின் போக்குக்கேற்றவாறு தாய்ப் பாசமாகவும், எழுத்தின் மேல் தீவிரமாய் மாறியதோ என்னவோ! எப்படி யும் அவள்தான், பரம்பரையின் நம்பகமாய், நம்பகத்தின் உருவகமாய் என் எழுத்தில் அங்கங்கு மிளிர்கிறாள். 

என் எழுத்தில் Mysticism மலிந்து கிடப்பதற்கு இந்தப் பரம்பரை வாசனைதான் காரணமாயிருக்கக்கூடும். 


நான் இங்கு இனி, பெருந்திருவைத் தனியாய்க் குறிப்பிடப் போவதில்லை. அவள் என்றுதான் அழைக்கப் போகிறேன். நிம்மதி. அவள் எனில் அம்பாளின் எல்லா ஸ்வரூபங்களுமாவாள். புவனத்தின் ஸகல ஜீவராசிகளை யும் ஆளும் தாய்மைக்கு மறுசொல் ஆவாள். சர்ச்சைகள், சந்தேகங்களுக்கு இடமற்ற அர்ச்சனை புஷ்பம், கூடவே அர்ச்சிக்கும் சன்னிதானமும் அவள்தான். என் எழுத்தின் ரகஸ்யமும் இதுதான். வெளிச்சமும் இதுதான். 

அவள். 

தாத்தா தன் பதினாலு வயதிலிருந்தே பொடி போடுவார். 

தாத்தா வரித்தகழிபோல் நெட்டையாய், நிமிர்ந்து, ஜ்வாலைச் சிவப்பில் இருப்பார். 

தாத்தாவுக்குத் தன் பதினைந்து ரூபாய் ‘சம்பளத் தில்’ பெரிய கூட்டு சம்சாரத்தில் சின்ன வீடு உண்டு. 

‘தக்னூண்டு சாமிக்குத் துக்குணுண்டு நாமம்.’ தாத்தா இரவு பாலுஞ்சாதம் சாப்பிடுவார். 

அம்மா எவ்வளவோ ஜாடை காட்டினாலும் நெற்றியில் நெத்தினாலும் நகர மாட்டேன். கலத்திலிருந்து வாய்க்கு ஒவ்வொரு கவளத்தையும் பார்த்துக் கொண்டிருப்பேன், ‘வயித்தை வலிக்கிறதே, இதுகளைத் தூங்க வைக்கப் படாதா?” என்று திட்டிக் கொண்டே, என் வாயில் இரண்டு ஊட்டுவார். என்ன ருசி! என்ன ருசி! 

இந்த உச்சிஷ்ட ப்ரஸாதமும் சேர்ந்துதான் என் எழுத்து. 


பிள்ளைகளுடன் இருக்கப் பட்டிணம் வந்தார். பத்து, பதினைந்து நாட்களுக்கு மேல் தாத்தா தங்கமாட்டார். பெருந்திரு தரிசனம் இல்லாமல், அதற்கு மேல் அவரால் இருக்க முடியாது. 


அடுத்த வேளை சோற்றுக்கு வழி எங்கே என்று தெரியாது. கால் ரூபாயோ, கால் ஸ்பூன் கடுகோ அடுத்த வீட்டில் கடன் வாங்க ஆணாகட்டும், பெண்டிராகட்டும் படியிறங்க மாட்டார்கள். ஒரு காலை மறுகால் மேல் மடித்துப் போட்டு வயிறு பள்ளமாய்க் குழியும்-ஆனால் அவன் என்ன கிழிச்சுட்டான் இவன் என்ன சாதிச்சுட்டான். அவனைக் கேட்கணுமோ, நம்மையேதான் அவளுக்குக் கொடுத்துட்டோமே, பிச்சை வேறு கேக்கணுமோ? மாட்டேன். 

எல்லோரும் ராவணன் கக்ஷி. 
ஒரு வரட்டு வீறாப்பு. 
தெய்வத்தையே சேவகனாகப் பாவிக்கும் ஒரு
முரட்டு சகஜம். 
யதார்த்தத்துடன் ஒட்டாத ஒரு அசட்டு அதீதம். 
அதே சமயத்தில் பெருந்திரு மேல் அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை. 
இந்த சத்துக்களும் சேர்ந்துதான் ராமாம்ருத ஸாரம், லா.ச.ராவின் ‘தேடல் தத்துவம்’. 

ஒரு ஆதாரத்துக்கு இருபது வயது என்று வகுத்துக் கொண்டேனே தவிர, என் பதினாறு, பதினேழு வயதிலேயே எழுதத் தொடங்கி விட்டேன். இங்கிலீஷில் தான் ஆரம்பம். விளையாட்டாய் என் நண்பனும், நானும் ஆளுக்கு ஒரு கதை எழுதுவதென ஆரம்பித்து நான் என்னுடையதை முதலில் முடித்து நோட்புக்கை தூக்கியெறிந்து மறந்தும் போய்விட்டேன். ஆனால் அவன் அதை எடுத்துக் கொண்டு போய் Short Story என்கிற ஆங்கிலப் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்த மஞ்சேரி எஸ். ஈஸ்வரனிடம் கொடுத்து விட்டான். அவன் மூலம் அவர் என்னை வரவழைத்து, “கதை நன்றாக இருக்கிறது. என் பத்திரிகையில் வெளி யிடப் போகிறேன். சன்மானம் எதிர்பார்க்காதே. கொஞ்சம் டாகுர் ஜாடை அடிக்கிறது. நல்ல நடை” ஒரு பதினேழு வயது பையனுக்கு முதல்கதையே- வெளிவருகிறது- அதுவும் அத்தனைப் பாராட்டுடன்-என்றால் வேறென்ன வேண்டும்? 

ஆனால் இங்கிலீஷில் மார்க்கெட் இல்லை. Short Storyயும் நின்றுவிட்டது. தமிழுக்குத் தாவும் அவசியம் ஏற்பட்டுவிட்டது. 

அங்கும் முதல் கதையே அப்போது செத்துப் பிழைத்துக் கொண்டிருந்த மணிக்கொடியில் வந்தது. என் மூன்றாவது கதையுடன் மணிக்கொடியும் மூடிக் கொண்டது. ஆனால் என் கதைப்பாணி, அதன் நடை எல்லாம் சேர்ந்து தமிழ்ச் சிறுகதையில் ஒரு புதுக்குரலாக, இனம் கண்டு கொள்வோ ரால் பாராட்டப்பட்டேன். 


ஆங்கிலத்தில் மஞ்சேரி எஸ். ஈஸ்வரன் என்னைக் கண்டுபிடித்ததாகச் சொல்லிக் கொள்வார். அப்படியானால் தமிழுக்கு என்னைத் தி.ஜ.ர. தந்தார். தி.ஜ.ரவைப் பற்றிக் கேள்விப்பட்டவரேனும் இந்நாளில் எத்தனைபேர் இருக் கின்றனர்? கலைமகள் ஆபீஸில் மஞ்சரிப் (Reader’s Digest மாதிரி) பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். என்னை எழுத முதுகைத் தட்டிக் கொடுத்தவரே அவர்தான். அதற்கு முன் சக்தி பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது, ‘நீ எதை எழுதியேனும் கொண்டுவாடா நான் போடுகிறேன்.’ இப்படி யார் சொல்வார்கள்? 

தி.ஜ.ர. என் மான்ஸ் குரு. 

யாருக்கும் அவரவர் துறையில் குரு வேண்டும். குருவிடம் தினம் பாடம் கேட்கிறேனா இல்லையோ, தினம் சொல்லிக் கொடுக்க அவரிடம் பாடம் இருக்கிறதோ இல்லையோ, குரு என்கிற சொல்லே துணை. மாதா, பிதா, குரு, ஓம் இந்த இரண்டு அக்ஷர மந்திரங்களுக்கு மிஞ்சின துணையில்லை. 

ஏன் தமிழிலேனும் எழுதித்தான் ஆக வேண்டுமா? என்பாடு அப்போது அப்படி ரூ 5/ ரூ 10/- ஸன்மான மென்கிற பெயரில் அந்தப் பிச்சைக் காசு (அதற்கு எத்தனை முறை போய்த் தலையைச் சொறிய வேண்டும்! “இன்று போய் நாளை வா!”) குடும்பத்துக்கு வேணுமே! S.S.L.C. படித்துவிட்டு வேலையுமில்லை. வாரத்துக்கொரு முறையேனும் எழுத வேண்டாமா?’-ஒரு சிற்றப்பா இரைவார். 

எப்படியோ பதினெட்டு இருபது வயதில் ஒரு இடத்தில் தொற்றிக் கொண்டு, பிறகு இடங்கள் மாறி 1941இல் வங்கி யில் நிலைத்து 1976இல் பஞ்சாப் நேஷனல் வங்கி தென்காசி கிளை மானேஜராக ஓய்வு பெற்று, என் உத்யோகப் பருவத் தைப் படிப்பதற்கேனும், சுருக்க முடித்துக் கொள்கிறேன். ஆனால், உத்யோகமில்லாமல், என் எழுத்தை மட்டும் நம்பி யிருந்தேனெனில் என் மேல் புல் முளைத்திருக்கும். என் நாளில் அப்படி எழுத்தின் மேல் ஆசையால் அதற்கே பலி யானவர் உண்டு. எழுத்தின் இந்த மறுபக்கத்தை விஸ்தரித் துக் கொண்டே போக எனக்கு விருப்பமில்லை. பார்த்ததே போதும். 

இப்போது நிலைமை எவ்வளவோ மேல். ஆனால் அதையும் விவரிக்கப் போவதில்லை. நான் உண்டு, குடும்பத் துக்கு என் கடமை என் உத்யோகம். என் தவத்துக்கு என் எழுத்து உண்டு என்று எனக்கு வாய்த்ததிற்கு நான் எவ்வளவோ புண்ணியம் செய்தவன். 

ஆனால் வாசக கவனம் என் மேல் பதிவதற்கு எழுத்துடன் பலநாட்கள் உழன்றேன். விமர்சகர்களின் பார்வை என் மேல் எப்பவும் ப்ரியமாயிருந்தது என்று சொல்வதற்கில்லை. “ராமாமிருதமா? அவருக்கு வக்கிரப் பார்வைன்னா! எதையும் வாசல்வழியாகப் பார்க்க மாட்டாரே! ஜலதாரை வழியாகத்தான் அவருக்குப் பார்க்கத் தெரியும்!” 

“அவர் என்ன ஒரே கதையைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்!” 

“ஆமாம் எழுதுவது என்ன புரிகிறது! தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் வருகிறது!” 

“ஏண்டா, குழந்தையையோ உயிரோடு படைத்து விட்டாய். உருவம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்க முடியாதா?” தி.ஜ.ரவிடம் லேசான நக்கல் உண்டு. அவருடைய விமர்சனம் மிக்க நுட்பமாகத்தானிருக்கும். 


யார் என்ன வேணுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டும். போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற் றட்டும். என் எழுத்து எவ்வழி அவ்வழி தான் என் வழி (ரஜினி டயலாக் மாதிரி இல்லை?) நான் யாருக்காவும் எழுத வில்லை. எனக்காகவே எழுதிக் கொள்கிறேன் என்று என் பக்கங்களில், பேட்டிகளில் பன்முறை தெரிவித்திருக்கிறேன். 

ஆனால் நான் அர்ப்பணித்துக் கொண்ட எழுத்தாளன் அல்ல. ஆனால் எதைச் செய்தாலும் நன்றாகச் செய்ய வேண்டும் எனும் ஆர்வமும் அதற்குரிய உழைப்பும் என் இயல்பிலேயே உண்டு. எழுத்தின் வெற்றிக்கு Hemingway மூன்று கட்டாயங்கள் விதிக்கிறான். 

“a bit of inspiration 
lot of hard work 
a bit of luck.” 

இருபது வருடங்கள் கெட்டவனுமில்லை;
இருபது வருடங்கள் வாழ்ந்தவனுமில்லை. 

லலிதா ஸஹஸ்ர நாமத்தில் “தருண்யை நம” என்று ஒரு நாமாவளி வருகிறது. யானைக்கு முன் மணியோசை போல, சில கதைகள் வெளியான பிறகு கலைமகளில், “யோகம்”, “ஜனனி”, “பிரளயம்” அடுத்தடுத்து வெளிப் பட்டதும் (வாசகர்களும், விமர்சகர்களும் வெடுக்கென நிமிர்ந்து உட்கார்ந்ததும் லா.ச.ராவுக்கு எழுத்துலகில் தனிப் பிறை கிடைச்சாச்சு. 


இந்தப் பிறை சற்று விநோதமானது. லா.ச.ராவுக்கு முன்னோடி கிடையாது. லா.ச.ராவைப் பின்பற்றவும் முடியாது. லா.ச.ராவிற்குப் பின்னாலும் கிடையாது. 

லா.ச.ராவின் விஷயம், வெளியீடு, நடை, சொல்லாட்சி, தனித்வம் லா.ச.ராவோடு போய்விடும். 

காத்திருந்த தவம் பலித்ததம்மா-தவத்துக்கே ஒரு அகந்தை உண்டு. 


ஆனால், நான் எழுதியவையெல்லாம் இலக்கியமாகுமா என்று காலம்தான் நிர்ணயிக்க வேண்டும். 

அதைப்பற்றி நான் கவலைப்பட முடியாது. கவலைப் பட்டுத்தான் ஆகவேண்டியது என்ன? சற்று சூழல் மாற மாற (டி.வி. Internet, Jet யுகம், மக்களின் மறதி) எதுவுமே நிலையில்லை என்பதை உணர்கிறோம். 

கடைசியில் இவ்வளவு எழுதினேன். ரஸிகர்கள் இன்றும் வீட்டுக்கு வந்து போயிக் கொண்டுதான் இருக் கின்றனர். ஆனால் என்னத்தைச் சாதித்தோம் என்கிற அசதி தான் தோன்றுகிறது. 

அன்றன்று அந்தந்த நிமிஷத்தை நினைவுடன் முழுமை யுடன் வாழ்ந்தாயா? சந்தோஷப்பட்டுக் கொள். 

ஆனால் சாதித்தவரை சாதித்ததுதான் பிறந்ததற்கு. அவரவர் வழியில் அவரவர் பங்கு. 

வாழ்க்கை தன் கப்பத்தை வாங்காது விடாது. ஆகையால் அதை முழுமனதுடன் செய்து அதனிடம் கொடுத்துவிடு. 


ஜூலை 1, 1946 எனக்குத் திருமணம் நடந்தது. திருமணம், வாழ்க்கையிலேயே ஒரு பெரிய திருப்புமுனை. எனக்கு நடந்த திருமணத்தைச் சொல்கிறேன். அன்றைய சம்பிரதாயங்களை அடையாளம் தெரியாதபடி இப்போது மாறிவிட்டன, என்று சொல்லிவிட்டு மேலே போகிறேன். உடல் ஆரோக்கியத்துக்கே ஒரு தனி அழகு உண்டு. என் மனைவியாகப் போகிறவள் அதில் நன்கு செழித்திருந்தாள். அதில் எனக்கும் குறைவில்லை. 

நாங்கள் ஒற்றுமையான ஜோடி என்று சொல்ல முடியாது. என் அம்மா, அப்பாவையும் சொல்ல முடியாது. முள் முனை ஆடிக் கொண்டேதான் இருக்கும். அப்படித் தான் இருக்க வேண்டும். கணவன் மனைவியினிடையே காதல் சாத்தியமில்லை, கூடாது. காதல் என்பது உண்டு. அது ஒரு தஹிப்பு. உயிருடன் சுட்டெரித்துக் கொண்டே யிருக்கும் தஹிப்பு. மாட்டிக் கொள்ளாதே. ஆனால் அதில் விதியின் சம்பந்தமுண்டு. அதை என்னென்று ஒவ்வொரு வனும் அறிய வேண்டும். ஆனால் அதைப் பட்டவர்க்கும் அதனால் பலனில்லை. அது சிவபெருமானின் நெற்றிக்கண். அதனருள் உன் மேல் பட்டு சுட்டெரிந்து கொண்டேயிரு. It is better to have loved and lost than never to have loved at all. 


அனுபவ ரீதியில் காவியங்கள் கவைக்குதவாதவை. ஆனால் உலகின் நடப்புக்கு பரஸ்பர மனித உறவுக்கு அவை அத்யாவசியமானவை. அதனால்தான் உலகில் பாஷைக்குப் பாஷை பக்தி, பிராணி, மனிதன் என்று சஹல ஜீவன் களிலும் காவிய அம்சம் பரிமளிக்கிறது. 


ஆண், பெண், சிசு என்கிற திரிமூர்த்தத்தின் அடிப்படையில்தான் உலகம் இயங்குகிறது. அதன் அடிப்படை யில்தான் குடும்பம் என்கிற பல்வேறு உறவுகளின் விஹாசம். இதைத்தான் என் மூதாதையர் வாழ்க்கையின் பல்வேறு வண்ணங்களில் தெய்வம் எனும் முனைப்பில் கண்டனர். அதுவும் ஒரு உறவுதான். என் எழுத்தில் இதனால்தான் இதைப்பற்றி அதிகம் காண்கிறீர்கள். என் மூதாதையர் யாவுமே அதீதமானவர்கள். நான் அவர்களின் சரித்ரீகன் ஆதலால், எழுதுவதற்குத் தனியாக விஷயங்களைத் தேடிக் கொண்டு போகும் தேவை எனக்கு இல்லாமல் போய் விட்டது. 


ஆச்சு எங்களுக்குக் கல்யாணம் நடந்து 55 வருடங் களுக்கு மேலாகிவிட்டன. நல்லது பொல்லாது, சண்டையோ பூசலோ, இத்தனை வருடங்களுப் பின் என்ன தெரிகிறது? எது எப்படியோ, இனி உனக்கு நான், எனக்கு நீ. மிஞ்சியது இந்த பரஸ்பரம். இதுவே போதும். இதுவே பேறு. 


இந்தக் குடும்பத்தின் ஒரு கட்டத்தில் மரணம் சற்று அதிகமாகப் புகுந்து விளையாடி விட்டது. ‘உங்கள் எழுத்தில் சாவைப் பற்றி அதிகம் வருகிறது. இது அனுதாபத்திலா, குற்றமா? எது மனதில் ஆழமாய்ப் பதிகிறதோ அதைப்பற்றித் தானே எழுத முடியும்? இதற்கு வேறு நியாயம், நியதி, சமாதானம் என்று தனி உண்டோ? அதைக் கல்பித்தே னானால், அது என் குற்றம். தெய்வம், விதி என்று புரியாதன மேல் பழிபோட முயற்சி. 

உலகில் நீ வாழ, முன்னேற, உனக்குச் சிந்தனையும் அதற்குத் துணை எழுத்து என்றும் கொடுத்திருக்கிறது. 

எழுத்து அறிவித்தவன் இறைவனாவான். 

சிந்தனை யார் பிறப்பித்தது என்று இறைவனே இன்னமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறான். 

அவனன்றி ஓர் அணுவும் அசையாது. 

ஸர்வந்தர்யாமி ஆனால் அவன் இன்னமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறான் எதை? எதற்கு? சிந்திப்பதுக்கென்றே தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபத்தில் அவனை உட்கார்த்தியாகி விட்டது. உன் நினைப்புக்கு அவனை எழுப்பக் கையைச் சொடுக்கிவிட்டுப் போங்கள். 


எழுதுகையில் சந்தோஷமாய்த் தானிருக்கிறது. நான் எழுதும் முறையில் அந்த நேரத்துக்கு எழுதும் விஷயத்தைத் தவிர மற்றவை எனக்கு நினைப்பிருப்பதில்லை. அக்கப் போர்கள், கோபங்கள், குரோதங்கள் நெஞ்சில் அலைவ தில்லை. மனதைக் கெடுப்பதில்லை. 

தவமென்பதே என்ன? ஒரு எண்ணம் ஒரே எண்ண மாய் அப்யாசத்தில் அதை மாற்றும் வீர்யத்தில், அதுவே என நிரம்பி வழியும் அதன் ஒருமைப்பாடுதான் தவம். எனக்கு, என்னுடையது என ஒன்றை ஒருமையாக்குவது லேசல்ல. 

ஆகவே, எப்படியோ வருடங்கள் உருண்டோ, தத்தியோ, அங்கப்ரதக்ஷணம் பண்ணியோ ஓடிவிட்டன. (இப்படி ஒரு காலத்து நடை. அப்படி ஒன்றும் எட்டின காலமுமில்லை. இன்னமும் உபயோகத்திலிருக்கிறது ஆனால் எனக்குத் தெரியாமலில்லை. குற்றமுள்ள நெஞ்சு கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் காலம் அஸ்தமித்து விடுமா?) இதோ விளிம்பில் நிற்கிறேன். இனி இப்பவோ, எப்பவோ அந்தண்டை என்னவோ? ஆனால் அறுபத்திஐந்து வருடங் களுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். எதற்காக? அவசியமுமில்லை. என் கை எப்போதுமே வேகமில்லை. 

நான் மெதுவாக எழுதுபவன். ஆனால் எழுதிக் கொண்டே யிருப்பவன். 


எழுத என்ன இருக்கிறது? ஸர்வ ஜீவ கர்த்தாவாய் சூரியனைத் தாண்டி அறியவோ எழுதவோ என்ன இருக் கிறது? அப்படியும் எழுதுபவர் எழுதிக் கொண்டுதானிருக் கின்றனர். எழுதினதைப் படிப்பதற்கு யாரேனும் ஒருத்தனே னும் இருக்கிறான். அவனும் இல்லாவிடில், ஏற்கனவே சொல்லிவிட்டேனே, எனக்கு நான் இருக்கிறேன். 


பார்த்ததையே பார்த்து 
சாப்பிட்டதையே சாப்பிட்டு 
பேசினதையே பேசி 
எண்ணியதையே எண்ணி 
சே! 


நாம் யாருமே எண்ணங்கள் தாம். எண்ணம் என்று ஜனித்த பிறகு நமக்கு அழிவேயில்லை. அருவத்தில், ஆகாயத் தில், காலநேமியில், ஸ்தூலத்தில் மாட்டிக் கொள்ளும் வரை, காலம், இடம் தாண்டி எந்த நிபந்தனையுமற்று இல்லை, இருக்கிறேன் என்கிற சந்தேகங்கள் கூட அற்று ப்ரக்ஞையின் முழுமையில் சஞ்சரிக்கிறோம். இப்படித் தவிர நம்மைப் பற்றி வேறெப்படியும் நினைக்கத் தோன்றவில்லை அல்லது இப்படியும் நினைக்கக் கூடும் அல்லவா? 


எண்ணங்கள் அழகிய பூக்கள். பூக்கள் நிர்மாலியங் களாகி இதழ்கள் வாடி வதங்கி உதிர்ந்தபின். அவைகள் வாழ்ந்ததன் பலனாய், பயனாய், எஞ்சி கமழும் மணங்கள். 


என் பையல் பருவம் காஞ்சிபுரத்தருகே அய்யன் பேட்டை என்கிற கிராமத்தில் கழிந்தது. ஆசையுடன் என் நினைப்பில் அதைக் காப்பாற்றி வைத்திருக்கும் கஸ்தூரிப் பெட்டி. 

அங்கு என் தகப்பனார் இருபது வருடங்களுக்கு மேல் பள்ளிக்கூட ஹெட்மாஸ்டர். கடைசிப் பத்து வருடங்கள் போஸ்ட் மாஸ்டரும் கூட. ஆகையால் ஏகப்பட்ட மரியாதை. ஆனால் அம்மாமேல் தான் அவர்களுக்குப் பக்தி, பிரியம் எல்லாம். ‘ஊருக்கே மகாலச்சுமி வந்திருக்காங்க. இவங்க வந்ததிலிருந்து நம்ம பேட்டைக்கே களை கட்டிப் போச்சு, என்ன மனசு! அவங்க எண்ணம் போலவே அவங்க குடும்பமும் நல்லாயிருக்கணும்.” 


“போணிக்கு உங்கிட்டத்தான் வந்திருக்கேன். என்ன வாங்கிட்டியா? அதனாலென்ன கூடையை சும்மாத் தொடு போதும். கூடையைக் காலியாத் தலையில் மாட்டிக்கிட்டு சோத்து வேளைக்கு வீட்டுக்குப் போயிருப்பேன். நான் போய்த்தான் சோத்துப்பானையை அடுப்பிலே ஏத்தணும். என்னவோ இன்னி நிலைமை அப்பிடி, மருமவ இந்தத் தடவை ரொம்பத் தள்ளாமையாயிட்டா. அதென்ன அஞ்சாந் தடவை வாங்கிட்டத்துக்கே அப்பிடி? நானு, என் மாமியார் பன்னென்டு, பதினாறுன்னு பெக்கல்லே! எல்லாரும் காத்திரமாத்தானே இருக்காங்க?” 

“நாளைக்கு நீ அழைச்சுண்டு வா. நான் பார்த்து என்னன்னு சொல்றேன்.” 

“ஆமாம்மா, நீ சொல்றதுதான் ரோசனை: எனக்கு ஏன் தோணல்லே? நீ எங்க படி மிதிச்சாலே பத்தாதா? ஒரு தடவை அதன் வவுத்தை தடவினேன்னா, உசிருக்கு உசிர் வந்துடும். 


“டேய் முருவா என்னடா பண்றே? ஐயர் வீட்டுக்கு புதுப்பச்சரிசியும், பொங்கப்பானையும் அனுப்பிச்சாமா? கீரைத்தண்டு, அவரைக்காய் புத்தம்புதுசா, அங்கே தானேடா பொங்கலுக்கு எல்லாம் மொதல்லே போவணும்? இந்தத் தடவை தண்டு தொடை தடுமனுக்கு வந்திருக்குது. துவரை நம்ம வயல் வரப்புலே முளைச்சுதுன்னு சொல்லு-” 

கள்ளம் கபடு அற்ற மக்கள். 
உழைப்பைத் தவிர வேறு நேரம் அறியாதவர்கள்.
மத்தியானம் மாவு சோறும் பழையதும். 
இரவுதான் ரஜமும் எள்ளுத் துவையலும். 

அம்மா அவர்களுக்கு ஏதேனும் கொடுத்தால், பெண் முன்றானையில், ஆண் மேல் சவுக்கத்தில் ஏந்திக் கொள்வார். 

சாயந்தரம் ஞானமணி சாமியார் கோவிலில் விளக்கு வைக்க எண்ணை ஏந்திப் போவார். 

அவங்க அவங்களுக்கு அவங்க காரியம்னும் வகுக் காமலே வகுப்பட்டுத் தாமாகவே சக்கரங்கள் ஒழுங்காய் உருண்டு போகும். 

காசு காண அரிது. வண்ணான், நாவிதன், உழுவோன், தொழில்காரர் யாவருக்கும் களத்து மேட்டில் வருடாவருடம் அளக்கும் நெல்தான் கூலி. 

ஆனால் எல்லோருக்கும் போதுமளவுக்குப் பூமாதேவி வளமாய்க் கொடுத்துக் கொண்டுதானேயிருந்தாள்! 

சில்லரை, பையன் என் கண்ணுக்கே தெரிந்ததே! 


அப்பாவுக்கு மருந்திலிருந்து மந்திராலோசனைக்கு அம்மாதான். 

எதையேனும் கொத்திக் கிளறி நட்டுத் தண்ணீர் பாய்ச்சி, பூவோ காயோ எதையேனும் உருவாக்கிக் கொண் டிருப்பாள். கை சும்மாயிருக்காது. வீட்டில் கொல்லைப்புறம் பெரிசு. ஏன் வீடு முழுக்கவே கொல்லைப்புறம்தான். 

சாயங்காலம் தன் பிரஜைகளைப் பாலிப்பது போல் ஒவ்வொரு செடிக்கும் எதிரே சற்று நேரம் தயங்கி நின்று தாண்டிப் போவாள். அவளைக் கண்டு செடிகள் படபட வென்று அடித்துக் கொள்ளும். அப்பொழுதென்று மாலைக் காற்று கிளம்புமா? இல்லை, அம்மாவுக்கும் செடிகளுக்கு மிடையே ஏதோ பாஷையிருந்தது. தொற்றிக் கொள்ளத் தெரியாமல் தத்தளிக்கும் அவரைக் கொடியைப் பந்தலில் இடம் பண்ணிக் கொடுத்துவிட்டுப் போவாள். 


அம்மா, செக்கச் செவேலென்று
சற்றுப் பூசினாற் போல் 
சற்றுத் தழைந்திருப்பாள்
காமதேனு. 


ஊர் தாண்டி, வாய்க்கால் தாண்டி, பிரும்மாண்டமான மைதானத்தின் மேடு தாழ்வுகளின் வளைவுகள் தாண்டின தும், கண்ணுக்குக் குளுமையாக ஒரே வயல்பச்சைதான். இடையிடையே ஏற்றக் கிணறுகள், வயற்பச்சையுடன் வானீலம் இழைவதே அலுக்காத ப்ரமிப்பு. கதிர்களைக் காலைக் காற்றும், மதியக் காற்றும், மாலைக் காற்றும், ஊடுருவுகையில் பூமி பெருமூச்செறிவது மயிர்க் கூச்செறி யும். ஒன்றும் புரியாது. ஆனால் புரியாமலும் இருக்காது. நான் சின்னப் பையன் தானே! ஏதோ பிரம்மாண்டமான அர்த்தம் என்னை அழுத்துகையில், ஏதோ பெரிய துக்கமும் அதனூடே ஏதோ சிரிப்பின் கிண்கிணியும் தொண்டையை அடைக்கிறது. 

“என்ன ராமு, அழுவரே உடனே சிரிக்கறே.’ 
கைகளை விரிக்கிறேன். பேசவரல்லியே! 


நாலு தென்னைகளுக்கு நடுவே ஒரு கிணறு பதுங்கி யிருக்கிறது. அதற்கே இந்த வெய்யில்போல். இதன் தண் ணீரைக் குடித்திருக்கிறேன். கற்கண்டு. முருகன் வானரம் போல் மரத்தில் ஏறி இரண்டு மூன்று இளநீரைப் பறித்துப் போடுகிறான். அவன் கைக்கு எங்கிருந்து கத்தி வந்தது? இங்கேயே சொருகி வைத்திருக்கிறான்கள். ஒருத்தரும் எடுக்க மாட்டான் போலும். சீவிப் பொத்துக் கொடுக்கிறான். இந்த ருசி பட்டணத்தில் எங்கே வரும்? 

அதேபோல், நடுவயலில், அப்போதுதான் பறித்துவந்த பச்சை வேர்க்கடலையை வைக்கோலில் பொசுக்கி: 

“துண்ணு துண்ணு, இதெல்லாம் உனக்குப் பட்டணத் தில் கிடைக்குமா பாரு!” என்று கேலியும் பிரியமும் சேர்ந்து கலவையில் கேட்பான். 

முருவா, நீ இன்னும் உயிரோடு இருப்பியா? அப்பவே நீ என்னை விட ரெண்டு வயது மூத்தவன். ஆனால் வயசை வெச்சு ஆயுசை அளக்கிறது தப்பு. அப்படியே நீ உயிரோடு இருந்தாலும் நீயும் நானும் இன்னும் எத்தினி நாளிருக்க முடியும்? சித்தரபுத்தன் நம்ம சீட்டை எடுத்தாச்சு, என்னால் நடக்கவே முடியல்லே முருவா! இத்தனைக்கும் வாதம் இல்லே. 


வயல் வரப்புங்களுக்கு இந்தாண்டை மைதானத்துள் சந்தவெளி அம்மன் இருக்கா, அம்மன் என்னவோ சின்னது தான், ஆனால் பவர் ஜாஸ்தி. ஊருக்குக் காவல் தெய்வம். சுத்தி மதில்கட்டி நடுவுலே சூரியனுக்கும் மழைக்கும் நட்சத்ரத்துக்கும் துறந்து விட்டிருக்கு. அது ஒரு மகாத்மியமாம்! 

என்ன வேடிக்கைன்னா அவளுக்கு எதிரே மதிலுக்கு வெளியே பிரம்மாண்டமா ரெண்டு ராக்ஷஸ சிலைங்க- ஒன்று ஆண், மத்தது பெண். கையில் நெட்டுக்குத்தா கத்தியோட குந்திட்டிருக்குதுங்க. அதுங்க பின்னாலே அதுங்க சைஸுக்கு ஏத்த மாதிரி குதிரைங்க. சந்தளி அம்மனுக்கு வேலைக்காரங்களாம். 

நடுப்பகல்லே அங்கே யாரும் போவ மாட்டாங்களாம். அடிச்சுப் போட்டுடுமாம். ஒத்தன் ரத்தம் கக்கிச் செத்துக் கிடந்தானாம். பூசாரி கூட அவன் பூசையை அவசரமா முடிச்சுகிட்டு வந்துடுவானாம். 


இந்த மாதிரி நினைவுகள், கற்பனைகள், நம்பிக்கைகள், வயதின் ஒவ்வொரு கட்டத்துக்கும், சோதனைகளுக்கும், சம்பவங்களுக்கும் ஏற்றவாறு அவைகளால் மாற்றி யமைக்கப்பட்ட தெளிவுகள், புதுக்குழப்பங்கள், இன்னும் நான் சொல்ல விட்டவை எல்லாம் சேர்ந்து பிசையலில் உருவானதுதான் லா.ச.ராவின் தமிழ்-ஏன் லா.ச.ராவின் தன்மையே-லா.ச.ராவே. 

இவைகளினூடே எங்கள் பெருந்திருப் பாட்டியின் எல்லையற்ற பொறுமையும் கருணையும் எங்களைக் காக்கின்றன. அந்தப் பரம்பரை எண்ணத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

நம்பிக்கைக்கு என்ன பெயர் கொடுத்தால் என்ன? முதலில் நம்பிக்கை என்பது எது என்று திட்டவட்டமாக விரிக்க முடிகிறதோ? ஆனால் அது இல்லாமல் வாழ முடிகிறதோ? 

மூன்று வருடங்களுக்கு முன் நடந்த என் சதாபிஷேகத்தி னின்று இரண்டு நினைவுகள் பிதுங்குகின்றன. 

ஒன்று:- ஜபித்த குடம் ஜலத்தையும் என் தலை மேல் கொட்டினதும், சேகர் அவசர அவசரமாய் என் தலையைத் துவட்டினது. “இதே சாக்காக அப்பாவுக்கு மண்டைச் சளியோ மார்ச்சளியோ பிடித்துக்கொண்டு விட்டால்? அதனால்தான் எனக்கு இந்தச் சடங்குகளில் நம்பிக்கை யில்லை. ஆனால் நீங்கள் இரண்டுபேரும் எங்கே சொன்ன தைக் கேட்கிறீர்கள்?” 

அடுத்து:- 

அம்பாள் ஸன்னிதானத்தில் மூன்றாவது தாலியைக் கட்டுவதாகத் தீர்மானம். என் இஷ்டம் அதுதான். 

குடும்பம் ஸன்னிதானத்துக்கெதிரே, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காகப் போட்டிருக்கும் கிராதியண்டை குழுமிவிட்டது. இங்கு ஏதோ விசேஷம் நடக்கப்போகிறது என்று நெரிசல் வேறே. கர்ப்பக்ருஹத்தின் அறையிருளில் அவள் உருவத்தில் எல்லைக்கோடுகள் தெரிந்தும் தெரியா ததுமாய்……. 

குருக்களுக்கு ஏற்கனவே ஏகப்பட்ட வேலை. என்னிடம் அவசரமாய் வருகிறார். 

“மாங்கல்ய தாரணத்தை முதல்லே முடிச்சுண்டுடு வோமா, இன்னும் பத்து நிமிஷத்துலே எமகண்டம் வரது. அபிஷேகம், அர்ச்சனைக்கு யமகண்டம், ராகுகாலம் எல்லாம் கிடையாது.” 

“நீங்கள் சொல்றபடியே.” 

எழுந்து நிற்கிறேன். மாங்கல்யத்தைச் சரடுடன்-இது வரை அம்மன் பாதத்தில் வைத்திருந்ததை எடுத்து என்னிடம் கொடுக்கிறார். 

கையில் கோவில் மணியை ஆட்டிக்கொண்டு மாங்கல்ய தாரண மந்திரத்தைச் சொல்கிறார். சொல்லி வைத்ற் போல் நகார், ஆலயமணி, மேளம், ஜாலர் எல்லாம் சோந்து முழங்குகின்றன (குருக்களின் சூழ்ச்சியாகவே இருக்கலாம்- அல்லது சிவன் கோவிலில் தற்செயலாய் பஞ்சமுக தீபாராதனையாகவும் இருக்கலாம்.) உடல் சிலிர்க்கிறது. 

ஹைமவதி கொசுவம் வைத்துக் கட்டிக்கொண்டு நறுக் கென்று திகழ்கிறாள். அவள் ஒன்றும் தலைகுனியவில்லை. முகம் ஒன்றும் சிரிப்பில் இல்லை. என்ன புதுமணப் பெண்ணா? அதெல்லாம் இந்த சமயத்துக்குப் பாந்தமாயு மிருக்காது. கண்கள் மட்டும் சற்றுத் தாழ்ந்திருக்கின்றன. ஐம்பத்து ஐந்து வருடங்களின் மணவாழ்க்கையில் அவள் வெற்றியின் ஸான்னியத்தில் ப்ரகாசிக்கிறாள். 

எங்கள் பெண் காயத்ரி, தாலியின் மூன்றாம் முடிச்சை- நாத்தனார் முடிச்சைப் போடுகிறாள். 

அந்த சமயத்தில், அம்பாள், அவளுடைய மர்மப் புன்னகை மாறாமல் இந்த வைபவத்தைப் பார்க்க, ப்ரபை யிலிருந்து இரண்டு அடி முன் நடந்து விட்டாற்போல் 

அந்த அரையிருளில் வெளிச்சமாகிறாள். இதெல்லாம் ப்ரமைதான்; பகல் வெளிச்சத்தின் ‘ஜாலக்’தான். அப்பவே தெரியல்லியா? ஆனால் சமயத்தின் ரஸவாதமும் கலந்து தானே இருக்கிறது! 

காலம், வயது எல்லாம் பொய். வாழ்க்கையில் சமயங்கள் தாம் உண்டு. அவைகளில் தான் வாழ்கிறோம். அவைகளுக்காகத்தான் வாழ்கிறோம். 

என் வாழ்க்கையின் பவனியை இந்தக் கட்டத்திலேயே நிறுத்திக் கொள்ளட்டுமா?

– அலைகள் ஓய்வதில்லை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, வானதி பதிப்பகம், சென்னை.


சொல் – கங்கா (சிறுகதைகள்) – நவம்பர் 1962

என் சிறுவயதில், என் தகப்பனார், காஞ்சிபுரத்துக் கருகே ஒரு கிராமப் பள்ளிக்கூடத்தின் ஹெட்மாஸ்டர். நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் எதிர் வீட்டிலேயே இருந்தார். நந்திக்கு எண்ணெய்க் காப்பிட் டாற்போல் பெரிய சரீரம், பளபளக்கும் கறுப்பு.சுபாவ மான வழக்கத்துக்கு மாறாக தான் அனுட்டித்த சைவத்தில் செருக்கு. அறப்பளீசுர சதகம்,தேவாரம், பட்டினத்தார் பாடல், திருவாசகம், திருவண்ணாமலைப் பதிகம், அருணகிரி அந்தாதி, அருட்பா, குறள், நாலடியார் வாயி லிருந்து அப்படி அப்படியே கொட்டும். எங்கிருந்துதான் அந்த ஞாபகசக்தியோ? பேசாத சமயங்களில் ரேழித் திண்ணையில், சுவரில் சாய்ந்தபடி, சுட்டு விரலால் காற்றில் ஏதோ வரைந்து கொண்டிருப்பார். 

முதலியார் சுபாவம் நேரிடையாக, சுபாவம் நேரிடையாக, வெளிச்சமாகப் பேசமாட்டார். எதையுமே சொல்லில் ஒளித்துப் பேசுவார். 

“ராமாபரம் (வேணுமென்றுதான் அப்படி அழைக் கிறாரோ?) நீ பிராம்மணப் பிள்ளையாயிருக்கிறாயே, நீ உயர்ந்த குலமாச்சே! நாம் இங்கே வந்திருக்கிறோமே இந்த உலகத்தில், எதற்காக என்று சொல்வாயா? 

எனக்கு அப்போ வயது பத்து, பன்னிரண்டிருக்குமா? ஆனால் என்னைப் பெரிய மனிதனாகப் பாவித்து, இதே கேள்வியைப் பலமுறை, பலவிதங்களில், மாதக்கணக்கில் கேட்டுவிட்டுப் பிறகு தானே ஒரு நாள்; “என் கேள்விக்கு என்ன பதில் தெரியுமா? ‘உருவேறத் திருவேறும்’ இதற் குத்தான் வந்திருக்கிறோம், இதுதான் பதில், இதுதான் பாடம், இதுதான் விஷயம், என்ன நான் சொல்வது யுரியுதா?” இல்லை; 

ஆனால் விடமாட்டார். “திருப்பிச் சொல்லு, எங்கே திருப்பிச் சொல்லு!” 

அப்படியே ஒப்பிப்பேன். 

பிறகு கொஞ்ச நாள் கழித்து, திடீரென, “என்ன, ராமாபரம் நினைவிருக்குதா?” என்று அதட்டுவார். நான் பயந்து, தலையை ஆட்டுவேன். 

ஆனால் விளக்கமாட்டார். 

அவர் பக்திமானும் இல்லை. 

ஒழிந்த வேளைக்கு கோர்ட்டில் சாக்ஷி சொல்வது தான் அவர் பிழைப்பு. 

ஆனால் அவர் சொன்ன சூத்ரம் இன்னும் என்னைச் சீண்டிக் கொண்டிருக்கிறது. புரியப் புரிய அதன் சீண்டல் அதிகரிக்கின்றது. 


என் மதிப்பிற்குரிய ஒரு எழுத்தாள நண்பர் எனக்குக் “கோவில் மாடு” என்று பெயர் வைத்திருக்கிறார். 

‘ஓ ராமாமிருதமா,சரிதான். எழுதிக்கொண்டேயிருப் பார், சிந்தனையோ சொல்லோ, இஷ்டமோ தடைப் பட்டால் அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர்பாட்டுக்குப் போய்க் கொண்டேயிருப்பார். இஷ்டத் துக்கு எங்கேயோ One Way Traffic. அவர் விலகமாட்டார். எதிராளிதான் ஒதுங்கவேண்டும். பிறகு நாளோ, மாதமோ, வருடமோ, தடைப்பட்ட சொல் தட்டிய பின்தான் விட்ட இடத்திலிருந்து தொட்டுத் தொடர்வார். யார் கவலையும் கிடையாது. கோவில் மாடு! கோவில் மாடு! இப்படியே இவர் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்!! 

எனக்கு உவகை பொங்குகிறது. 

இன்னொரு எழுத்தாள நண்பருக்கு என்மேல் ஒரு குறை: 

“என்ன அவர் வெளியுலகத்துக்கே வரமாட்டேன் என்கிறாரே!” எங்களுக்கிடையே இன்னொரு சர்ச்சை: “எழுத்தாளன் யாருக்காக எழுதுகிறான்?” 

நான் ‘தனக்காக’ என்கிறேன். 

அவர், “பிறருக்காக” என்கிறார். “தனக்காக அவன் எழுதிக் கொள்வதாயிருந்தால் அவன் எழுதவேண்டிய அவசியமே என்ன இருக்கிறது? அப்படியே எழுதினாலும் அவன் தன் பெட்டிக்குள்ளேயே வைத்துக்கொண்டு, அழகு பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கலாமே!” 

அவர் பின் கூறியது வாஸ்தவந்தானோ என்றுஎனக்கு தோன்றுகிறது. ஒரோரு கதை, எழுதி முடித்தபிறகு அதை விட்டுப் பிரிய மனம் வருவதில்லை. நான் அறியாமலே அதைக் கருவுற்ற நாள் முதலாய் அது அதன் தன்மையில் என்னில் இழைந்திருந்தது. சூல் கண்ட நேரம் ஒருவரி லிருந்து ஒருவர் விடுபட ஒருவரோடொருவர் போராடுகை யிலேயே ஒருவரையொருவர் புரிந்துகொண்டோம். புரிந்து கொண்ட பின் சேர்ந்திருக்க இயற்கையில்லை. பிரிந்து தான் போவோம்: கருவுற்றதைப் பெற்றுத்தான் ஆக வேண்டும் பெற்றது பிரிந்துதான் போகும். 

யாருக்காக எழுதுகிறேன்? 

யாருக்காகக் கருவுற்றேன்? 

இரண்டும் ஒரே கேள்விதான். அந்தக் கேள்விக்கு ஒரே யதில்தான். ஆனால் இந்தக் கேள்வி நேர்வதுண்டு: 

“நானா இதை எழுதினேன்? என்னிடமிருந்தா இது வெளிப்பட்டது? இந்த பூதம் என்னுள் எப்படி இத்தனை நாள் ஒளிந்து கொண்டிருந்தது?” வாசகனின் வியப்பு இன்னொரு வகையில்: 

“எப்படி எனக்கு நேர்ந்ததெல்லாம் இந்தக் கதையில் நேர்ந்திருக்கிறது? எனக்குக்கூட தெரியாதபடி என்னுள் பூட்டி வைத்திருந்த என் அந்தரங்கங்கள் எப்படி இங்கு அம்பலமாயின? எனக்கு எழுத வராததனால் நான் எழுதாத குறை. ஆனால் இவை என் எண்ணங்கள், என் வேதனைகள், என் வேட்கைகள், நான் என் ஆபாசங்கள் என்று அஞ்சி என் நெஞ்சுக்குள் மறைத்ததெல்லாம் இங்கு எழுத்தில் கண்ட பின் உண்மையில் அவை என் ஆத்ம தாபம் என்று இப்போதுதான் தெரிகிறது” என்று கன்னத் தில் கண்ணீர் குளிரத் தலை நிமிர்கையில், எழுத்து, இருவ ருக்குமிடையில் ஊமைச் சிரிப்பு சிரிக்கின்றது. 

அதற்குத் தெரியும், இருவர் கதையும் ஒரு கதைதான். உலகக் குடும்பத்தின் ஒரே கதை என்று. 

அதற்குத் தெரியும் தான் சுண்டியது ஒரு தந்திதான். சொல்வதெல்லாம் ஒரு சொல்தான் என்று: உருவேற்றி ஏற்றி, திருவேறி, ஆகாயத்தையும் தன் சிமிழில் அடக்கிக் கொண்டு, இன்னும் இடம் கிடைக்கும் சொல். முதலியார் சொன்னது இப்போது புரிகிறது. 

எத்தனை விதங்களில் எழுதினாலும், நான் எழுதுவது நான் என் பிறவியுடன் கொண்டு வந்திருக்கும் என கதை தான்; உலகில் -அது உள் உலகமோ வெளியுலகமோ, அதில் நடக்கும் அத்தனையிலும், அத்தனையாவும் எனக்குக் கிட்டுவது என் நோக்குத்தான். ஆகையால் நான் எனக்காகவே வாழ்ந்தாலும் சரி, யாருக்காக அழுதாலும் சரி, அப்படி என் நோக்கில் நான்தான் இயங்குகிறேன், என் நோக்கில் நான் காண்பவர், காணாதவர் எல்லோரும் என் உலகில் என் கதையுடன் பிணைக்கப்பட்டவரே, என் கதையின் பாத்திரங்களால், அவர்கள் ப்ரவேசங்களில் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் வேளைகளில் தான், நெடு நாளைய பிரிவின் பின் சந்திக்கும் பரபரப்பு பரிமளம், ஜபமாலையின் நெருடலில் ஒவ்வொரு மணியும் தன் முறை வந்ததும், தான் தனி மணி என அதன் மேல் உருவேறிய நாமத்தில் தன் பிரக்ஞையை அடையும் புது விழிப்பு. 


சொல் என்று ஒரு வார்த்தை இப்போது இங்கு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. நான் சொல் என் கையில். வெறும் அவ்வார்த்தையைக் குறிக்கவில்லை. ஒவ்வொரு வார்த்தையின் பீட்டலிலிருந்து எழும் மனிதத்தன்மையின் கீதம், பிந்துவின் சீறல். வீசியெறிந்த பிடிநெல்லினின்று வயல் நிறைந்த விளைச்சலைச் சொல்கிறேன். 

வாயில் வந்ததெல்லாம் பேச்சு, எழுதியதெல்லாம் எழுத்து என்று சமயத்தைப் பணம் பண்ணும் மேடை எழுத் தாளர்களுக்கு என் பாஷை பிடிக்காது. அதனாலேயே அவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்யவும் மாட் டார்கள். நான் சொல்வது அவர்களுக்குத் தேவையு மில்லை; அவர்களை விட என் அனுபவத்தில், வாசகர் களே என்னை நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். 

நான் என்னைப் பாடிக் கொள்கையில் உண்மையில் மரபைத்தான் பாடிக் கொண்டிருக்கிறேன். என் பிறவி யுடன் கொண்டு வந்த என் கதையைச் சொல்கையில், உயிரின் சாசனத்தை என் சகோதரர்களின் நெஞ்சில் நித்தியமாய் செதுக்கிக் கொண்டிருக்கிறேன். இதுவே என் விதி, என் விதியே என் பெருமிதம். இதுதான் நான் தேடும் என் சொல். என் சொல்தான் என் உள. 

நான் தேடும் பொருளோ, நயமோ தரும் சொல் கிட்ட, ஒரொரு பக்கத்தை, பதினெட்டு, இருபத்திதேழு. தடவைகள் எழுத நான் அலுத்ததில்லை. 

தேடியலைந்த போதெல்லாம் கண்ணாமூச்சியாடி விட்டு, சொல் என்னை நள்ளிரவில் தானே தட்டி யெழுப்பியிருக்கிறது. ஒரு சமயம் கனவில், பாழும் சுவரில் ஒரு கரிக் கட்டி தானாகவே ஒரு வாக்கியத் தொடரை எழுதி அடியெடுத்துக் கொடுத்தது. சம்பந்தா சம்பந்தமற்றவை போன்று வார்த்தைகள் மூளையுள் வேளையில்லா வேளை களில் மீன் குட்டிகள் போல், பல வர்ணங்களில் நீந்திக் காண்பிக்கும். சில சமயங்களில் நான் தேடிய சொல், அதே சொல், நான் தேடிய அதே உருவில், காத்திருந்தாற் போல், நடுத் தெருவில் நான் போய்க் கொண்டிருக்கையில் யார் வாயிலிருந்தேனும் உதிரும். 

“நீ ஒன்றும் கழற்றிவிடவில்லை. என் கட்டியக்காரன். தான் சொன்னதை நீ சொல்” என்று அது எனக்கு உணர்த்துகிறது. 

இன்னமும் என் கதைகளின் சில முதல் நகல்களைப் வத்திரமாய் வைத்திருக்கிறேன்; நவராத்திரிக்கு சுண்டல் கட்ட; எனக்கு ஆபீஸுக்கு டிபன் மடிக்க, அரைத்துக் காகிதக் கூடை செய்ய, வென்னீரடுப்பு எரிக்க என் மனைவி அவைகளின் மேல் கண்ணாயிருக்கிறாள். நிறுத்துப் போட்டால் பொய்த் தராசிலும் பணமாகும். ஆனால் எனக்கு அவைகளை விட்டுப் பிரிய மனமில்லை. அடிபட்ட மிருகம் மறைவிடமாய், சாகவோ தேறவோ படுத்துத் தன் காயங்களை நக்கிக் கொள்வது போல், தேடிச் சலித்து மனம் சோர்ந்த சமயங்களில்,என் முதல் நகல்களைப் புரட்டிப் பார்ப்பது உண்டு. ஒவ்வொன்றும் ஒரு ரணகளம், இக் குப்பைகள் என் இதயத்தில் வெடித்த யாளங்கள். அத்தனையும் என் ரத்தம். நான் சொல்லைத் தேடும் சான்று. இவைகளில் என் மூலமாய் வெளிப் பட்டிருக்கும் சொற்கள், பொருள்கள், செயல்கள் எல்லாம், அப்பக்கங்களுள் கடைசியாகப் பேனா முனையில் கிடைத்த கதையில் சேராவிட்டாலும், ஒன்று கூட வீணில்லை: அவை, அவைகளின் தனித்தனிக் கதையில். தம் தம் இடங்களில் பதியத் தம் தம் வேளை களுக்குக் காத்திருக்கின்றன. இது என் அனுபவம். 

நெஞ்சில் திடம் ஊறுவது உணருகிறேன். மறுபடியும் என் தேடலில் முனைகிறேன். 

கிரேக்க இதிகாசத்தில், கடவுளரின் கோபத்துக்கிலக் காகி விட்ட ஒரு வீரனின் கதை வருகின்றது. பாலையில் அவனை சங்கிலியால் ஒரு பாறையுடன் பிணைத்துப் போட்டிருக்கிறது. பகல் எல்லாம் ஒரு கழுகு அவன் தோள்மேல் அமர்ந்து அவன் உடலைக் கிழித்து மாமிசத்தைக் குடைந்து தின்று விட்டு அந்தி வேளைக்குப் பறந்து போய் விடுகிறது. இரவில், அவனுக்கு குறைந்த சதை வளர்ந்து விடுகிறது. விடிந்ததும் மறுபடியும் கழுகு தன் இரைக்கு வந்து விடுகிறது. 

சொல்லின் தன்மையும் இப்படித்தான். என் தோள் மேல் அமர்ந்து அது என்னைக் கொத்துகையிலேயே என்னின் புதுப்பித்தலை உணர்கிறேன். நடந்து கொண் டிருப்பதுதான் திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருக் கிறது. இத்தனை கதைகள் எழுதியதும், இனி எழுதப் போவது எத்தனை யானாலும், அத்தனையும் நித்தியத் துவத்தின் ஒரே கதையின் பல அத்தியாயங்கள்தான். அத்தனையும் ஒன்றாக்க எனக்கு சக்தியோ ஆயுளோ போதாது. என்னால் முடிந்தது ஒரு சொல்தான். அச்சொல்லின் உருவேற்றல் தான். 

இதுவே என் தீர்ப்பாளர்களுக்கு என் சொல் என்னை, சொல்லச் செய்யும் வாக்குமூலம். 

4-11-1962 
லா. ச. ராமாமிருதம் 

மறு சந்திப்பு – கங்கா (சிறுகதைகள்) – நவம்பர் 1962

கரையோரம், உட்கார்ந்த வண்ணம், சிந்தா நதியில் காகிதக் கப்பல்கள் விட்டுக் கொண்டிருக்கிறேன். புத்த கத்தையொட்டித்தான் இவ்வெண்ணம் தோன்றியதானா லும், இன்றும் எப்பவும், யாவரும் வேறென்ன செய்து கொண்டிருக்கிறோம்? 

என் எதிரே, கரையோரம், சிற்றலைகள் தவழ்கின்றன என் பார்வையுள் அடைத்த விஸ்தீரணத்தில், நதிஅகலம், ஏரிபோலத் தோன்றுகிறது. பிரம்மாண்டமான அகலம், நீளம், எதிர்க்கரை அதோ, அதோ எங்கோ. ஆனால் இனி நான் அங்கு போய்ச் சேரப்போவதில்லை. சேர வேணும் எனும் வேகமும் இல்லை. என்றேனும் ஒரு நாள் என் வேலையில், குறுக்கே நடக்கத் தோன்றி, நடுவழியில் எனக்குரிய ஆழத்தில் கவிழ்ந்த என் கப்பல்களோடு, அமிழ்ந்து, அமரத்வம் அடைந்துவிடுவேன். 

எதிர் நீச்சலுக்கு எனக்கு இனி நேரமில்லை உள்ள பூர்வமாக மட்டுமன்று. உடல் நிலையே தெரிந்துகொண்டு விட்டது. 

கரையோரமாக நடந்தும், இடையிடையே சுழலோடு நீந்தியும், என் வேளை ஏறக்குறைய கழிந்துவிட்டது. ஆனால் என் வேளையுள் இதுவரை நான் வந்திருக்கும் தூரம் ? 

இந்தச் சிற்றலைகளுக்குத் தான் தெரியும். அவை என்னைப் பார்த்துச் சிரிக்கின்றன. 

ஏளனம்? தாயன்பிலா? ‘சரி போ, ஏதோ உன்னால் முடிந்தவரை-‘ என்கிற சலுகையிலா? 

அவை தாம் அறியும். 


இத் தொகுதியை, இரண்டாம் பதிப்பில், ஏறக்குறைய முப்பத்திஎட்டு வருட இடைவேளைக்குப் பிறகு காண்கையில், பெருமிதம் உள்பொங்கும் அதேசமயம், லேசான விசனமும் ஏடு படர்கிறது. 

இதில் அடங்கியிருக்கும் கதைகள், தொகுதிக்கும் முன் ஐந்தாறு வருடங்களில் எழுதப்பட்டவை. ஆகவே இவைகள் ஒவ்வொன்றுக்கும் நாற்பதுவயது தாண்டியதே. மனிதனின் இன்றைய சராசரி வயதில் பாதிக்கு மேலானவை, என் குழந்தைகள். ஆனால் நீங்கள் வளர்த் தவை: இவை குழந்தைகளில்லை. பெற்ற ஆர்வத்தில் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொள்ளலாம். 

அப்படித்தான் இப்போது பார்க்கிறேன். 

எழுத்தாளனுக்குத் தாயகம் இருக்கலாம், ஆனால் எழுத்துக்குக் கிடையாது, எழுத்து ஒரு எடுப்பார் கைப் பிள்ளை என்று வேறு இடத்தில் எழுதியிருக்கிறேன். 

எங்கெங்கோ, எப்படியெப்படியோ வளர்ந்தாலும் இவை நோஞ்சான்களல்ல. நன்றாக செழிப்பாகவே, தாமாவே வளர்ந்திருக்கின்றன. இல்லாவிடில் ‘கங்கா’, ருக்ஷேத்ரம், ‘கஸ்தூரி’, ‘விடிவெள்ளி’. ‘தீக்குளி’ என்று இவை இன்னும் பேசப்படுமா? ‘சொல்’ எனும் முன்னுரை தன் வழியில் தனி பிரசித்தி அடைந்துவிட்டது-வேண் டாம். இனியுமா சுயபுராணம், இனியுமா இவைகளுக்கு என் அரவணைப்பு? 

ஆனால் ஒன்று. ஒரு குடும்பத்தின் பெண்டு பிள்ளைகள் எங்கெங்கு சிதறியிருந்தாலும், ஒரு விசேஷ தினத்தன்று-தீபாவளி, வருடப்பிறப்பு, வீட்டுப் பெரிய வனுக்கு ஏதோ விழாவென்று குடும்பம் ஒன்று கூடும்போது அந்த மறு சந்திப்பின் மகிழ்ச்சியே தனிதான். குழந்தைகள் வருகிறார்கள். அணைக்க இருகைகள் போதவில்லையே! ஏடுகளிடையே அமுக்கி வைத்திருந்த தாழம்பூவின் மணம் கமகமக்கிறது. குழ. கதிரேசன் இந்தச் சமயத்தை ஏற்படுத்தி அதன் 

மஹிமையைத் தட்டிக்கொண்டு போய் விட்டார். அதுவும் சரிதான். ஸாஹித்ய அகாதெமி விருது கிடைத்திருக்கும் இந்தச் சமயத்தில், இரண்டாம் பதிப்பை வெளியிட்டிருக்கும் ஐந்திணைக்கு நன்றி. 

எல்லாரும் பண்டிகையில் பங்குகொள்ள வாருங்கள் நீங்கள் வளர்த்த குழந்தைகள். 

Plot. 242, 1, கிருஷ்ணன் தெரு. ஞானமூர்த்தி நகர் அம்பத்தூர் சென்னை-600 053

லா. ச. ராமாமிருதம்
15-6-1990 

– கங்கா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1962, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.