பி.சிவசாமி

 

தமிழ் நாட்டின் தஞ்சை மாவட்டத்திலுள்ள இராங்கியன் விடுதி எனும் ஊரில் 20.06.1943ஆம் ஆண்டு பிறந்த திரு. பி. சிவசாமி, தொடக்கக் கல்வியை சிங்கையிலுள்ள இராமகிருஷ்ணா பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியிலும் பெற்றார்.

தொழில்

பொதுக் கல்விச் சான்றிதழ் “ஓ” நிலை தேர்ச்சி பெற்ற இவர் கடந்த 32 ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். தற்போது மெக்பர்சன் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இவருக்கு தமிழுடன் ஆங்கிலம், மலாய் ஆகிய மொழிகளும் தெரியும்.

பொறுப்புகள்

சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் பொருளாளராக 1972 முதல் 1994 வரை மாறி, மாறிப் பணியாற்றியிருக்கிறார். 1980களில் கரம்பக்குடி தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலாளராகவும் சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் செயலவை உறுப்பினராகவும் செயலாற்றியிருக்கிறார். 1990களில் தமிழர் சங்க உறுப்பினராக இருந்த இவர் 1995 முதல் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக உறுப்பினராக இருந்து வருகிறார்.

சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்க 25ஆம் ஆண்டு வெள்ளி விழா மலர் பொறுப்புக் குழுவின் செயலாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

பகுத்தறிவுக் கொள்கைப் பிடிப்புள்ள திரு. சிவசாமி இன்றுவரை அக்கொள்கை வழியில் செயல்பட்டு வருகிறார்.

இலக்கியப் பணி

1958ல் எழுதத் தொடங்கிய இவர் சிறுகதை, கட்டுரை முதலான துறைகளில் கூடிய ஆர்வம் செலுத்திவந்தார். நச்சினார்க்கினியர் எனும் புனைபெயரிலும் எழுதும் இவரது முதல் கட்டுரை தமிழ் முரசு மாணவர் மணிமன்றத்தில் வெளிவந்தது. தொடர்ந்து இவரது படைப்புகள் சிங்கப்பூர், மலேசியா சிற்றிதழ்களிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இவரின் கட்டுரைகள் சிங்கப்பூர் தமிழ் இளைஞர் மன்றத்தின் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

வெளியிட்டுள்ள நூல்

  • “தனிமரம்” எனும் சிறுகதைத் தொகுப்பை இவர் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரின் தேசிய நாள் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் தொடர்பில் வெளியிடப்பட்ட 25 தமிழ் நூல்களில் இவருடைய இந்த நூலும் ஒன்று.

பெற்ற பரிசுகள்

இலக்கியப் போட்டிகளின் இவர் பல பரிசில்களைப் பெற்றுள்ளார். தேசியத் தொழிற் சங்கக் காங்கிரஸ் நடத்திய கட்டுரை/கதைப் போட்டிகளிலும் மலேசியாவில் தமிழர் திருநாள் குழுக்கள் நடத்திய போட்டிகளிலும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பொங்கல் திருநாளை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளிலும் சிங்கப்பூர் நாளிதழ்கள், தேசிய நூலகம் போன்றவை நடத்திய கட்டுரை, சிறுகதைப் போட்டிகளிலும் பல பரிசுகளை திரு. சிவசாமி வென்றுள்ளார்.

ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்புகள் – தனிமரம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1990, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.

நான், 1943-ல் ஜூன் திங்கள் 20 ஆம் நாள் தமிழ்நாட்டில் பிறந்தேன். திரு.பிரமையா என்பவரும் திருமதி சிட்டுமணி என்பவரும் என் பெற்றோர்கள். தங்கம்மாள், செல்வம், சந்திரபோஸ் என்பவர்களே என் உடன் பிறப்புக்கள்,

வறுமை வாட்டிய போது. “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பதற்கொப்ப வந்தவர்களில் என் தந்தையும் ஒருவர். அவர் 1956-ல் என்னை சிங்கப்பூருக்கு வரவழைத்தார்.

தமிழ்ப் பள்ளிகளில் படிக்க வைத்தார். உமறுப்புலவர் உயர்நிலைப் பள்ளியில் 1964 ஆம் ஆண்டு பொதுக்கல்விச் சான்றிதழ் தேர்வு எழுதினேன். மாணவப் பருவத்திலேயே பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கெடுத்தேன்.

1967-ல் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினேன். அதே ஆண்டில் செல்வி சந்திராளை வாழ்க்கைத்துணைவியாகக் கைப்பிடித் தேன். அவரும் 1967 முதல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மணிமாறன், இளமாறன், அன்புமலர் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூவரும் படித்து வருகின்றனர்.

சான்றோர்களின் நூல்களை விரும்பிப் படித்தாலும் திருக்குறளை வாழ்க்கை வழிகாட்டி நூலாகப் பயன்படுத்தி வருகிறேன்.

‘நீங்கள் ஒழுங்காக வாழுங்கள்’ என்பதற்கு முன் ‘நான் ஒழுங்காக வாழ வேண்டும்’ என்பதும், ‘உங்கள் பிள்ளைகளை முறையோடு வளர்த்து வாருங்கள்’ என்று சொல்வதற்கு முன் ‘என் பிள்ளைகளைச் சரியாக வளர்க்க வேண்டும்’ என்பதும் என் போக்காகும்.

மற்ற இன மக்கள் மதிக்கத்தக்க நிலையில் தமிழர்கள் வாழவேண் டும் என்பது என் அவா. நம் சிங்கப்பூருக்குச் சிறிதளவாவது தமிழர்களோடு சேர்ந்து அதன் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் எண்ணமாகும். தமிழர்களுக்கு என்று எல்லா வசதிகளும் நிறைந்த ஒரு பெரிய கட்டிடம் கட்டவேண்டும் என்பதே என் கனவாகும்.

என்னை வளர்த்து, இவ்வுலகத்தில் பகுத்தறிவோடு வாழச் செய்து விட்டு 8.11.87-ல் இயற்கை எய்திய என் அன்புத் தந்தைக்கு இந்நூலைக் காணிக்கை ஆக்குவதே என் பேராவாகும்.

ஆசிரியரின் முகவுரை – தனிமரம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1990, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.

மாணவ பருவத்திலிருந்தே எழுதவேண்டும் என்ற துடிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. எனினும் தொகுத்து வைக்கத் தவறினேன். நண்பர்களின் அறிவுரைக்குப் பின் சிறுகதைகளைத் தொகுத்துக் கொண்டிருந்தேன்.

இத்தருணத்தில் ‘சிங்கப்பூருக்கு நமது படைப்புக்கள்’ என்ற தலை யங்கத்தோடு அருமை நண்பர் டாக்டர் அ.வீரமணி அவர்களின் மடல் கிடைத்தது. அதன் விளைவே உங்கள் கைகளில் தவழ்கின்ற இந்நூலாகும்.

“அழுது அழுது நமது கண்களில் உள்ள நீர் எல்லாம் வற்றிவிட்டது. இனிமேல் ஆனந்தத்திற்காகக் கூட அழக்கடாது” என்றார் விவேகானந்தர். அந்த அடிப்படையில் பொழுதுபோக்கிற்காக எழுதுகின்ற சிறுகதையில் கூடச் சமுதாயத்திற்குத் தேவையான நல்ல கருத்து இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதி வருகிறேன்.

‘தனி மரம்’ என்ற சிறுகதையில் கற்பனையோ, புதுமையோ இல்லையே என்று எண்ணினேன். ஆனால் அந்தச் சிறுகதையைத் தான் பலரும் பாராட்டினார்கள். அவர்கள் எல்லோருக்கும் என் நன்றி உரித்தாகுக.

அன்றாடம் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளைச் சிறுகதையாக எழுதுவ தைவிட ‘எப்படி வாழ வேண்டும்?’ என்ற எதிர்பார்ப்பிலே ஆர்வம் கொண்டு எழுதுகிறேன். அப்படி எழுதுவதால் சிறுகதையில் கட்டுரை வாசம் வீசுகிறது என்று நண்பர்களில் சிலர் கூறியுள்ளனர். இனிவரும் கதைகள் நண்பர்களின் கூற்றைக் கருத்தில் கொண்டு அமைக்க முயல் வேன்.

‘நீங்களும் சொல்லுங்கள்’ என்ற கதையைப் பற்றி வாசகர் மன்றத்தில் ‘தமிழ் முரசு’ நாளிதழில் ஒருவர் விமர்சித்து எழுதியிருந்தார். அவருக்கும் என் நன்றி. அக்கதை உருவான கதை இதுதான்.

முதியோர் இல்லத்திற்கு அடிக்கடி செல்லவேண்டிய நிலை ஏற்பட் டது. அப்போது முதியோர்கள் அனுபவித்த தனிமை வேதனையை முழுமையாக உணர்ந்தேன். மணமாகாமல் வாழ்கின்ற பெண்களின் எதிர்கால வாழ்வை எண்ணிப் பார்த்தேன். அக்கம்பக்கம் பார்க்கின்ற ஆண்களையும் கவனித்தேன். அதன் நிமித்தமாக உருவானதே ‘நீங்களும் சொல்லுங்கள்’ என்ற கதையாகும்.

சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களை எழுத முயற்சித்துள்ளேன். இதில் காணும் குறை நிறைகளைத் தெரிவித்தால் எனக்குப் பேருதவியாக இருக்கும்

குடியரசின் 25வது ஆண்டு நிறைவினையொட்டி ‘இந்தியர் பண் பாட்டு மாதம்’ என்ற குழுவிற்குப் பொறுப்பேற்றுள்ளவர்களுக்கும், குறிப்பாக டாக்டர் அ.வீரமணி அவர்களுக்கும், எனது சிறுகதைகளை வெளியிட்டு ஊக்கமூட்டிய தமிழ் முரசிற்கும், முரசொலிக்கும் கதைகளைப் பற்றிக் கருத்துக் கூறிய நண்பர்களுக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

19.12.1989

அன்பன், பி.சிவசாமி

3-B Marlene Ave Singapore 556606

தொலைபேசி: 4871886 (இல்) 7463282 (இல்)