நாகதேவன் சோற்றுக்கடை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 41 
 
 

அந்த ஊரில் நாகதேவன் சோற்றுக் கடையை விட்டால் சாப்பிடுவதற்கு வேறு சோற்றுக்கடை கிடையாது. பல காலமாக அவன் ஒருவன் தான் அங்கே சோற்றுக்கடை வைத்து நடத்தி வந்தான். அந்தத் தொழிலில் அவனுக்கு அனுபவமும் பழக்கமும் நிறைய உண்டு என்பதை அங்கே ஒருமுறை சாப்பிட்டவர்களைத் தவிர மற்ற எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். நாகதேவன் மட்டும் சாப்பிட வருபவர்களையும் அவர்கள் செளகரியங்களையுமே கவனித்து வந்திருந்தானானால் இதுவரை அவன் இவ்வளவு பணம் சேர்த்திருக்க முடியாது! பணம் சேர்க்கும் ஆசை இல்லை என்றால் அவன் எதற்கு அந்தச் சோற்றுக் கடையைக் கட்டிக்கொண்டு அழப் போகிறான்? “அங்கே சாப்பிட்டால் அஜீரணம் கண்டிப்பாக வரும். கல்லும் நெல்லும் உமியும் கலவாத சோறு எப்படியிருக்கும் என்றே நாகதேவனுக்குத் தெரியாது! ஏறக்குறைய மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் காய்கறி வாங்குவது என்று அவன் சந்தைப் பக்கம் போவான். வாங்கிவந்த கறிகாய்களை அதற்குப் பிறகு ஆறு மாதம் வரை வைத்துக் கொண்டு கடையை நடத்திவிடுவான். ஆறு மாதமாக வாடி வதங்கும் கத்தரிக்காயை வைத்துக் கொண்டே சமாளிக்கும் வித்தை அவனுக்குத் தெரியும். அவன் காய்ச்சி ஊற்றுகின்ற புளிக்குழம்பைப் பற்றியோ கேட்கவே வேண்டாம் உப்பில்லாத கஞ்சி போலிருக்கும். காம்பு ஒடிந்து போன அந்த ஆதிகாலத்து அகப்பையைக் கையில் பிடித்துக் கொண்டு அவன் குழம்பை ஊற்றும்போது அது நழுவி இலையில் விழுந்துவிடுமோ என்று சாப்பிடுபவர் பயப்படும்படியாக இருக்கும்.

அவன் சமையல் செய்யும் பாத்திரங்களின் இலட்சணத்தைப் பற்றிக் கேள்விப்பட நேர்ந்தாலே போதும்! நீங்கள் மூர்ச்சை போட்டு மயங்கித் தலைச்சுற்றி விழுந்துவிடுவீர்கள். அவ்வளவு அழுக்கும் கரியும் கறையும் தழும்பேறிப் பல காலம் சேவை செய்துவரும் சின்னங்களோடு காட்சி தரும் அவை. இலையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே மூலையில் எங்கேயாவது ஒரு கழுநீர்ப் பானை நிறையக் கழுநீர் பாய்ந்து வர உருண்டுவிடும். உருண்டுவிட்ட கழுநீர்ப் பானையிலிருந்து வெள்ளம் போலப் பாய்ந்துவரும் நாற்றத்தோடு கூடிய பல நாள் புளித்து நுரை படர்ந்து தோன்றும் அழுக்கு நீர் நேரே சாப்பிடுபவர்கள் இலையை நோக்கிப் படை எடுக்கும். அது வரும் வேகத்தைப் பார்த்த எவரும் அதற்கு மேலும் பொறுமையாக இலையில் உட்கார்ந்து கொண்டிருப்பது நியாயமில்லை’ என்று எண்ணிக் கை யலம்பாமலே ஆற்றங்கரைப் பக்கம் ஓடிவிட வேண்டியதுதான். அப்படிச் செய்வதுதான் நியாயம். இல்லை யென்றால் அங்கிருந்து தப்பிப் பிழைப்பது துர்லபம்.

அங்குள்ள சட்டி பானைகளிலும் பதார்த்தங்களிலும் ஏன் நம்முடைய இலையிலும் உடம்பிலும் கூட ஈக்கள் – வரிசை வரிசையாக அணிவகுத்து அமர்ந்து மொய்க்கும் காட்சி நேர்த்தி யானது! தனிப்பட்ட ‘அழகு’ வாய்ந்தது! ‘மொலுமொலு’ என்ற ஈக்களின் அந்தச் சப்தத்தைத்தான் சொல்லுங்களேன்? என்ன குறை சொல்லமுடியும் அதன் இனிமையை? குடிக்கவோ கைகால் களைக் கழுவவோ தூய தண்ணீரை எதிர்பார்த்தால், அது நிச்சயமாக அப்படி எதிர்பார்ப்பவர்களுடைய தப்புதான். நாகதேவன் சோற்றுக் கடையில் அதெல்லாம் நடக்காது. ‘வேணுமானால் அந்தக் கழுநீரைப் போல அவ்வளவு மோசமாக இராது, கொஞ்சம் ‘சுமாரான தண்ணீர் கிடைக்கும். அங்கே யாருக்கும் தனிப்பட்ட சலுகைகள் என்று கிடையாது. எல்லோருக்கும் இதே நிலைதான். அந்த விஷயங்களில் எல்லாம் நாகதேவன் நிரம்பக் கண்டிப்பாக இருப்பான்.” இதுதான் நாகதேவன் சோற்றுக் கடை. இதன் தூய்மையைப் பற்றி இதற்கு மேல் இன்னும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் தனிப்பாடல் திரட்டில், அவன் கடைக்கும் விஜயம் செய்து ‘அனுபவித்த’ புலவர் ஒருவர் இவ்வளவு செய்திகளைத்தான் அதிகார பூர்வமாகக் கூறியிருக்கிறார். அதற்கு மேல் நான் கூறினால் நாகதேவனை அது பாதிக்குமல்லவா?

“வாயிலொன்று கல்லுமொன்று நெல்லுமான அன்னமும்
வாடலாக ஆறுமாதம் வைத்திருந்த கத்திரிக்
காயிலிட்ட கறியும் உப்பிலாத கஞ்சி யன்னமும்
காம்பு ஒடிந்த ஓரகப்பை கைப்பிடித்த வண்ணமும்
தூயதாகத் துலக்கலின்றி யழுக்கடைந்த பாத்திரம்
தூக்கியுள்ள அசுத்த நீர் துரத்தி வந்த நேர்த்தியும்
ஓயலின்றி ஈக்கள் வீழ்ந்து மொலுமொலென்ற சட்டியும்
உடன் கொணர்ந்த நாகதேவன் ஊண் மறப்பதில்லையே.”

அன்னம் = சோறு, வன்னம் = குழம்பு. வண்ணம் = காட்சி, துரத்தி = விரட்டி , ஊண் = உணவு.

இப்படி நாகதேவன் சோற்றுக் சடைச் சாப்பாடு தமக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததை அந்தப் புலவர் பாடும் போது அவர் மேல் நமக்கு அனுதாபந்தான் ஏற்படுகிறது.

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *