இறப்பதற்கு இன்னும் எத்தனை மணி நேரங்கள்?

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: November 13, 2023
பார்வையிட்டோர்: 5,625 
 
 

நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். ஆனாலும் என் கொலஸ்ட்ராலைக் குறைக்க முடியவில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் என்னுடைய மோசமான உணவுப் பழக்கம் தான். HLD கடிகாரத்தைப் பெறுமாறு என் மருத்துவர் பரிந்துரைத்தார். HLD என்பது Hours Left to Die ன் சுருக்கம். நீங்கள் இறப்பதற்கு இன்னும் உத்தேசமாக எத்தனை மணி நேரங்கள் உள்ளன என்பதைக் காட்டுமாம் HLD கடிகாரம். அவருடைய நோயாளிகள் பலருக்கு அந்தக் கடிகாரம் ஒரு பெரும் வரப் பிரசாதமாக இருந்ததாக என் மருத்துவர் கூறினார் – மரணத்தின் தொடர்ச்சியான நினைவூட்டல் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவில் பெரிய மாற்றங்களைச் செய்ய அவர்களை கட்டாயப்படுத்தியதாம்.

மணிக்கட்டைத் தொட்டுக் கொண்டிருக்கும் அந்தக் கடிகாரம் நம் உடலுக்குள் ஏற்படும் நுண்ணிய மாற்றங்களை உள் வாங்கி சாப்ட்வேரின் சாகசத்தினால் ஒரு புதிய HLD எண்ணை ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை கணக்கிடுகிறது. அது ஒரு உத்தேசமான எண் தான். கடிகாரம் 7,300 என்று கணக்கிட்டால் 7,300 மணி நேரம் கழித்து (அதாவது பத்து மாதம்) நீங்கள் நிச்சயமாக இறந்து போவீர்கள் என்றில்லை. நீங்கள் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வாழ்க்கையை தொடர்ந்தீர்கள் என்றால் பத்து மாதத்தில் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அந்தக் கடிகாரத்தை வாங்கி உபயோகிக்க ஆரம்பித்தேன். HLD எண்ணை அதிகமாக வைத்திருக்க சிறு சிறு மாற்றங்களைச் செய்ய முயற்சித்தேன். HLD எண் ஒரு நாள் ஏறி இன்னொரு நாள் இறங்கி, என்னுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. நான் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ததால் கடந்த வாரம் எனது எண்ணிக்கை அதிகரித்து 39,834ஐ எட்டியது. ஆனால் இந்த வாரம் எல்லாம் தலை கீழ். எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் மூன்று விருந்துகளில் இஷ்டத்திற்கு சாப்பிட்டு, ஒரு நாள் போக்கர் விளையாடப்போய் தூக்கம் கெட்டு… நேற்று காலை அது 21,567ல் தொடங்கியது, ஆனால் இரவில் 16,349 ஆகக் குறைந்தது. குமட்டலும், ஒரு மாதிரியான வயிற்று வலியும் சேர்ந்து இரவு முழுவதும் என் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டே இருந்தது.

இன்று காலை வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்து விட்டேன். வயிற்று வலி போன இடம் தெரியவில்லை. இரவு தூக்கம் கெட்ட அறிகுறி எதுவும் இல்லாமல் மிகுந்த புத்துணர்ச்சியுடன் பிரீயாக உணர்ந்தேன். கட்டிலை விட்டு இறங்கி, வீட்டு காலணிகளை அணிந்தபடி, HLD கடிகாரத்தைப் பார்க்கிறேன்.

அது ஏன் மைனஸ் 2.46 என்று காட்டுகிறது? ஒருவேளை சாப்ட்வேர் கோளாறாக இருக்கலாம்… கடிகாரத்தை ஆப் செய்து மறுபடி ஆன் செய்து பார்க்க வேண்டும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *