கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: February 15, 2023
பார்வையிட்டோர்: 5,735 
 
 

அத்தியாயம்: ௬ | அத்தியாயம்: ௭ | அத்தியாயம்: ௮

காதல் நெருப்பு

அக்டோபர் 8, 1916: இதுதான் இந்தக் குறிப்பில் நான் எழுதவிருக்கும் கடைசிப் பதிவாக இருக்கும். இது எதாவது ஒரு நாகரிக மனிதன் கையில் கிடைக்கும் என்று வேண்டிக் கொள்கிறேன். என் உள் மனது என்ன சொல்கிறது என்றால் இதைத் என்னை தவிர வேறு யார் கண்ணிலும் படாது என்கிறது. அப்படியே பட்டாலும் அது எனக்குப் பயன்படாமலேதான் போகும். பறந்து விரிந்த பசிபிக் கடலை ஒட்டிய மலைப் பாறைகளின் மேல் நான் தனித்து இருக்கிறேன். குளிர்ந்த தென் காற்று என் எலும்பை உறைய வைக்கிறது. எனக்கு வெகு கீழே கேஸ்பக்கின் வெப்ப மண்டலத் தாவரங்கள் ஒரு பக்கமும் அண்டார்க்ட்டிக் கடலின் பனி மலைகள் இன்னொரு பக்கமும் இருப்பதைக் காண முடிகிறது. இப்பொது இந்தக் குறிப்புகளைக் கோட்டையில்-டைனோசர் கோட்டை என்று பெயர் வைத்திருக்கிறோம்- இருந்து கிளம்பும் வேளை நான் இதற்கென எடுத்து வந்த இந்த வெற்றிடக் குடுவையில் வைத்து அடைத்து இங்கிருந்து வெகு தூரத்திற்குப் பசிபிக் கடலில் வீசி எறிய முடியும். எந்தக் கடல் நீரோட்டம் கேஸ்பக் கரையை நனைக்கிறது என்று எனக்குத் தெரியாது. எனது குடுவையை யாராவது எடுப்பார்களா என்று என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. நாங்கள் எங்கிருக்கிறோம் என்ன கொடூரங்களை அனுபவிக்கிறோம் என்பதை வெளி உலகிற்குத் தெரியப்படுத்த ஒரு மனிதன் என்ன செய்ய முடியுமோ அதை அனைத்தையும் நான் செய்து விட்டேன்.

செப்டம்பர் 8 வாக்கில் நான் ஓல்சன் வான் ஸ்சோன்வர்ட்ஸ் மூவரும் எண்ணெய் ஊற்றுக்குச் சென்றோம். லிஸ்ஸும் எங்களுடன் வந்தாள். ஒரு அடிப்படைச் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் நாங்கள் எடுத்துச் சென்றிருந்தோம். நாங்கள் ஆற்றில் இன்னொரு 10 12 மைல் தூரம் சென்று அந்த எண்ணெய் ஓடையின் முகத் துவாரத்திற்கு அருகில் கப்பலை நிறுத்தினோம். அந்த ஓடை பெருமளவு எண்ணையைக் கடலில் கொட்டிக் கொண்டிருந்தது. இந்தப் பெரிய ஏரியை வேறு எப்படி அழைப்பதென்பது எனக்குப் புரியவில்லை. பின் நாங்கள் கரை ஏறி ஒரு 5 மைல் தொலைவு சென்றோம். அங்கு ஒரு சின்ன எண்ணெய் ஏரி இருந்தது. அதன் நடுவில் எண்ணெய் ஊறிக் கொண்டிருந்தது.

அந்த ஏரியின் கரையில் ஒரு சிறிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வான் ஸ்சோன்வர்ட்ஸிற்கு நாங்கள் உதவினோம். அது நன்றாக இயங்கும் வரை அவனுடன் இரு நாட்கள் வேலை செய்தோம். அதன் பின் டைனோசர் கோட்டைக்குத் திரும்பினோம் ப்ராட்லி எங்களைக் காணாத கவலையுடன் தேடி வந்து விடுவானோ என்ற அச்சத்தில். கோட்டையில் எங்களை இறக்கி விட்டு யூ-33 எண்ணெய்க் கிணறுக்குத் திரும்பி விட்டது. ஓல்சன் விட்லி வில்சன் லா ர்யூ நான் எல்லோரும் இறங்கி விட்டோம். வான் ஸ்சோன்வர்ட்ஸ் மற்றும் அவனது ஜெர்மன் கூட்டாளிகள் அனைவரும் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யக் கிளம்பி விட்டார்கள். மறு நாள் பிலெஸ்ஸர் மற்றும் இரண்டு ஜெர்மானியர்கள் கோட்டைக்கு வந்தார்கள். காட்டு மனிதர்கள் தங்களைத் தாக்கியதாகவும் பதில் தாக்குதலில் நிறைய குண்டுகள் செலவழிந்து விட்டதால் தங்களுக்கு குண்டுகள் தேவைப் படுவதாகவும் பிலெஸ்ஸர் சொன்னான். அதே போல் தங்களுக்கு உலர்ந்த இறைச்சியும் சோளமும் வேண்டும் என்றான் அவர்கள் சுத்திகரிப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருப்பதால் வேட்டையாட முடியவில்லை என்பதால். அவன் கேட்டதை எல்லாம் நான் கொடுத்து விட்டேன். அவன் செய்கைகளில் எந்தவித சந்தேகமும் படாமல். அதே நாள் அவர்கள் சுத்திகரிப்பு நிலையத்திற்குத் திரும்பி விட்டார்கள். முகாம் வாழ்வின் பல்வேறு கடமைகளில் நாங்கள் மூழ்கி விட்டோம்.

மூன்று நாட்கள் எந்த விதமான பெரிய மாற்றங்களும் நிகழவில்லை. ப்ராட்லி திரும்பவில்லை. வான் ஸ்சோன்வர்ட்ஸிடம் இருந்தும் எந்தவித பதிலுமில்லை. சாயந்திரம் நானும் லிஸ்ஸும் ஒரு கோட்டையின் மீது ஏறி இறுக்கமான மோசமான பழங்காலத்தின் கொடூர இரவு வாழ்வினைக் கவனித்துக் கொண்டிருந்தோம். ஒருமுறை கத்தி போன்ற பற்களையுடைய ஒரு மிருகம் கிட்டத்தட்ட அருகில் கத்தியது. உடன் அவள் என் அருகில் பயத்துடன் வந்தாள். அவள் உடல் என் மீது பட்டதும் இந்த மூன்று மாதங்களாய் அடக்கி வைத்திருந்த என் காதல் கட்டுக்களை உடைத்தது. அவளை என் கைகளில் சாய்த்து முகத்திலும் உதடுகளிலும் சரமாரியாக முத்த மழை பொழிந்தேன். அவள் தன்னை விடுவிக்க முயற்சி செய்யவில்லை. மாறாக அவளின் அன்புக் கரங்கள் என் கழுத்தைச் சுற்றி என் முகத்தை அவள் முகத்துக்கருகில் இழுத்துச் சென்றது.

“நீ என்னை காதலிக்கிறாயா, லிஸ்?” என்று அழுது கொண்டே கேட்டேன்.

ஆமாம் என்பது போல் அவள் தலை என் நெஞ்சில் மோதியது. “சொல். லிஸ். வார்த்தையில் சொல். நீ எவ்வளவு தூரம் என்னை காதலிக்கிறாய் என்று சொல்.” என்று கெஞ்சினேன்.

இனிமையாக மெலிதாக சன்னமான குரலில் சொன்னாள். “எண்ணிப் பார்க்க இயலாத அளவுக்கு உன்னைக் காதலிக்கிறேன்”

அப்போது என் இதயம் பேரானந்தத்தில் நிறைந்தது. அதை ஒவ்வொரு முறை நினைத்துப் பார்க்கும் போதும் அதே போல் நிறைக்கிறது. என் உயிர் பிரியும் வரையும் இதே போல் தொடரும். இனிமேல் நான் அவளைக் காணாமல் போக கூடும். நான் அவளை எவ்வளவு தூரம் நேசிக்கிறேன் என்பது அவளுக்குத் தெரியாமலும் இருக்கலாம். அவள் அதைக் கேள்விக்குள்ளாக்கலாம். சந்தேகப்படலாம். ஆனால் உண்மையாக சீராக காதல் நெருப்பில் என் இதயம் -“எண்ணிப் பார்க்க இயலாத அளவுக்கு உன்னைக் காதலிக்கிறேன்” என்று சொன்ன- அவளுக்காக எப்போதும் துடித்து கொண்டே இருக்கும்.

பாதுகாவலர்க்காக போடப்பட்டிருந்த அந்தச் சிறிய பலகையில் நாங்கள் நீண்ட நேரம் அமர்ந்திருந்தோம். ஒரு கோட்டைக்கு ஒருவர்க்கு மேல் காவல் தேவைப்படாது என்று நினைத்திருந்ததால் அந்த இருக்கை காலியாக இருந்தது. ஒரே நேரத்தில் கடலில் விசிறி அடிக்கப்பட்ட நேரத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் பழகிய போது ஏற்பட்ட புரிதலை விட அந்த இரண்டு மணி நேரத்தில் நாங்கள் எங்களை முழுமையாகப் புரிந்து கொண்டிருந்தோம். முதலில் இருந்தே அவள் என்னைத்தான் காதலித்ததாகவும் வான் ஸ்சோன்வர்ட்ஸை விரும்பவில்லை என்றும் சொன்னாள். அவளது அத்தையினால்தான் தங்களது நிச்சயதார்த்தம் சமூக காரணங்களுக்காக நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தாள்.

அதுதான் என் வாழ்வின் மிக மகிழ்ச்சியான மாலைப் பொழுது. இதே போல் வேறெதுவும் அமையாது. மகிழ்ச்சியின் உண்மையான குணத்தைப் போல அன்றும் அது முடிவுக்கு வந்து விட்டது. கோபுரத்தில் இருந்து இறங்கி அவளது அறைக்கு செல்லும் முன் மீண்டும் ஒரு முத்தம் கொடுத்தேன். பின் அவளது அறைக் கதவை பூட்டி கொண்டாள்.

கோட்டைத் தகர்ப்பு

நான் என் அறைக்குச் சென்றேன். அங்கு நாங்கள் கொன்ற ஒரு மிருகத்தின் கொழுப்பில் இருந்து தயாரித்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டேன். இறுதியில் உறக்கம் என்னைத் தழுவியது. மகிழ்ச்சியான கனவுகள் வந்தன. அதில் எதிர்காலம் பற்றிய திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தேன். இந்த காட்டுமிராண்டித்தனமான கேஸ்பக்கிலும் என்னவளை நான் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டுமே. நான் எழுந்தபோது நன்றாக விடிந்திருந்தது. இன்று வில்சனுக்குத்தான் சமையல் பொறுப்பு. அதனால் அவன் சமைத்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். நான் அந்த ஓடையில் குளிக்கலாம் என்றெண்ணி நாப்ஸுடன் சென்றேன். எப்போதும் போல் துப்பாக்கி மற்றும் சுழல் துப்பாக்கி இரண்டையும் எடுத்துச் சென்றேன். ஆடை களைந்து எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் நன்றாகக் குளித்தேன். அப்போது ஒரு கழுதைப் புலி வந்தது. முகாமிற்கு வடக்கில் உள்ள மணல் பாறைகளுக்குப் பக்கத்தில் இதே போல் நிறைய இருக்கின்றன. இந்த மிருகங்கள் மிகப் பெரியவை. மிகவும் மூர்க்கமானவை. அவைகள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்த குகைக் கழுதைப் புலி போலவே இருந்தன. அது நாப்ஸைத் துரத்தியது. கேப்ரோனாவின் அனுபவங்களில் இருந்து பலத்தை விடப் புத்தியை பயன்படுத்தத் தெரிந்திருந்தது அதற்கு. அதனால் நாப்ஸ் உடன் ஆற்றுக்குள் தவ்வி விட்டது எனதருகில். அது பின்னர் கோபமாகக் குரைத்துத் தன் வெறியைத் தீர்த்துக் கொண்டது. ஆனால் அது ஒரு பெரிய மத யானையைப் பார்த்துச் சிரிப்பது போன்றதாகும் அந்தக் கழுதைப் புலியைப் பொறுத்தவரை. அதன் பின் அந்த மிருகத்தை நான் சுட்டேன். நாப்ஸ் அதன் கறியைச் சுவைத்துக் கொண்டிருந்தது நான் உடை மாற்றிக் கொண்டிருக்கும் வேளை. அது பச்சைக் கறியை உண்ணப் பழகி இருந்தது எங்களுடன் பல முறை வேட்டையாடிய பழக்கத்தில். எப்போதும் அதற்கு மிச்சம் மீதியைக் கொடுப்போம்.

நாங்கள் திரும்பி வந்தபோது விட்லியும் ஓல்சனும் எழுந்து ஆடை மாற்றி இருந்தனர். நாங்கள் அனைவரும் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டோம். லிஸ் ஏன் இன்னும் வரவில்லை என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் அவள்தான் எப்போதும் முதலில் எழுபவள் இந்த முகாமிலேயே. அவளுக்கு எதாவது உடல் நலமில்லையோ என்ற பதட்டத்தில் ஒன்பது மணிக்கு அவள் அறைக் கதவைத் தட்டினேன். எந்தப் பதிலும் இல்லை. பிறகு என் முழு பலத்துடன் அறைக் கதவில் மோதினேன். கதவு உடைந்ததும் உள்ளே சென்று பார்த்தால் அவளைக் காணவில்லை. அவளது உடை நேற்றிரவு படுக்கைக்கு செல்லுமுன் போடப்பட்ட அதே இடத்தில இருந்தன. ஆனால் அவள் இல்லை. நான் பயந்து விட்டேன் என்று சொல்வது மடத்தனம். அவள் இந்த முகாமில் இல்லை என்பது புரிந்தாலும் ஒவ்வொரு சதுர அடியையும் அலசினேன். இருந்தாலும் பயனில்லை.

விட்லிதான் முதல் குறிப்பைக் கண்டுபிடித்தான். ஒரு பெரிய மனிதன் போன்ற கால் தடம் ஓடைக்கருகில். அந்தச் சகதியில் சிறு சண்டை நடந்ததற்கான தடயங்களும் இருந்தன.

பின் ஒரு சின்ன கைக்குட்டை வெளிப்புறச் சுவரில் இருந்தது. லிஸ் களவாடப்பட்டிருக்கிறாள் என்பது தெளிவாகப் புரிந்தது. மனிதக் குரங்குக் கூட்டத்தில் எதோ ஒன்று கூடாரத்தில் நுழைந்து லிஸ்ஸைக் கடத்திச் சென்று இருக்கிறது. கிடைத்த ஆதாரங்களை எல்லாம் பார்த்துத் திகைத்துப் பயந்து போய் இருந்த பொழுது, பெரிய ஏரியின் திசையில் இருந்து மெல்லக் கூடிக் கொண்டே செல்லும் ஒரு ஒலி கிரீச்சென்று முடிந்தது. நாங்கள் அனைவரும் மேலே பார்த்தோம் ஏனெனில் அந்த ஒலி எங்களுக்கு மேலேதான் வந்தது. சிறிது நேரத்தில் ஒரு பெரிய வெடிச் சத்தம் கேட்டது. எங்களைத் தூக்கி போட்டது. எழுந்து பார்க்கும் போது மேற்கு வாயிலின் பெரும்பகுதி சிதறிக் கிடந்தது. ஓல்சன்தான் தன் தூக்கக் கலக்கத்தில் இருந்து மீண்டு அங்கு என்ன நடந்தது என்பதை விளக்கினான்.

“வெடிகுண்டு” என்று கத்தினான். கேஸ்பக்கில் வேறெங்கும் வெடிகுண்டு கிடையாது நமது யூ-33 ஐ தவிர. அந்தக் கேவலமான ஜெர்மன் நாய்கள் நம் கோட்டையைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. வாங்க போகலாம்” என்று கத்தினான். பின் சுழல் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஏரியை நோக்கி ஓடினான். இரண்டு மைல்களுக்கு மேல் இருக்கும். இருந்தாலும் துறைமுகம் வரும்வரை நாங்கள் நிற்கவே இல்லை. அங்கு வந்த பின்னும் எங்களால் ஏரியைப் பார்க்க முடியவில்லை பாறைகள் நடுவில் இருந்ததால். வேகமாக துறை முகத்தின் கீழ் விளிம்பை நோக்கி ஓடினோம். தட்டுத்தடுமாறிப் பாறைகளில் ஏறி இறுதியில் ஏரியின் முழு வடிவமும் தெரியும் வரை சென்றோம். கரைக்கு மிக தூரத்தில் ஆற்றில் – அதன் வழியாகத்தான் இந்த ஏரியை அடைந்தோம்- யூ-33 – இன் மேல் புறம் தெரிந்தது. அதன் மேலிருந்து கரும்புகை எழுந்தது.

எண்ணெய்ச் சுத்திகரிப்பில் வெற்றி கண்டுவிட்டான் வான் ஸ்சோன்வர்ட்ஸ். அந்தக் கீழ்த்தரமான நாய் அவன் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையையும் மீறி விட்டது. இங்கு நம் விதியின் வழிக்கு விட்டு விட்டது. விட்டுச் செல்லும் வேளையில் நமக்குக் கொடுத்த அன்புப் பரிசுதான் இந்த வெடிகுண்டுத் தாக்குதல். இதை விட வேறு என்ன எதிர்பார்க்க முடியும் இந்த பிரஷ்யன் வான் ஸ்சோன்வர்ட்ஸிடமிருந்து.

ஓல்சன் விட்லி வில்சன் நான் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்று கொண்டிருந்தோம். அவன் இவ்வளவு நம்பிக்கைத் துரோகியாய் இருப்பான் என்று கொஞ்சம் கூட நினைத்திருக்கவில்லை. ஆனால் இப்போது அவன் செய்ததை எங்கள் கண்களாலேயே கண்டு கொண்டு விட்டோம். கோட்டைக்குத் திரும்பியவுடன் உடைந்த சுவர்கள் அதை நிரூபித்த வண்ணம் இருந்தன.

லிஸ்ஸைக் கடத்தியது யாராக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தோம், எவனாவது பிரஷியனா இல்லை மனிதக் குரங்கினமா? வான் ஸ்சோன்வர்ட்ஸ் பற்றித் தெரிந்து விட்டதால் அவன் செய்திருந்தால் கூட நாங்கள் ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டோம். ஆனால் ஓடைக்குப் பக்கத்தில் இருக்கும் காலடித் தடங்களை வைத்துப் பார்க்கும் போது என்னவளைக் கடத்திச் சென்றது கேப்ரோனாவின் வளர்ச்சி அடையாத மனிதன் ஒருவன்தான் என்பது கண் கூடாகத் தெரிகிறது.

அதுதான் நடந்திருக்கிறது என்று முழுமையாக நம்பிக்கை வந்தவுடன் நான் அவளைப் பின் தொடர்ந்து சென்று காப்பாற்றுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். ஓல்சன் விட்லி வில்சன் மூவரும் என்னுடன் வருவதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் இங்கே தேவைப்படுவதாக நான் சொன்னேன். ப்ராட்லியும் அவனது ஆட்களும் காணவில்லை. ஜெர்மானியர்களும் சென்று விட்டனர். அதனால் நமது படையை முடிந்த அளவு பாதுகாக்க வேண்டும் என்றேன்.

– தொடரும்…

தமிழாக்கம்: சு.சோமு, Translation of the book ‘The Land That Time Forgot’ by Edgar Rice Burroughs
வெளியான மாதம்/ஆண்டு: May 2017 in kdp.amazon.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *