கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: February 13, 2023
பார்வையிட்டோர்: 5,099 
 

அத்தியாயம்:௫ | அத்தியாயம்:௬ | அத்தியாயம்: ௭

ஸ்சோன்வர்ட்ஸின் கோபம்

கப்பலை நோக்கி மெதுவாக நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். அதைப் பற்றி விவாதித்துக் கொண்டும் திட்டமிட்டுக் கொண்டும் சென்று கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று ஏற்பட்ட பெரிய சந்தேகமே இல்லாத ஒரு வெடிச் சத்தத்தினால் கலவரமடைந்தோம்.

“யூ-33 கப்பலில் ஏற்பட்ட வெடிதான் அது.” என்றான் வான் ஸ்சோன்வர்ட்ஸ்.

“எப்படி நடந்திருக்கும்” என்று கேள்வி எழுப்பினான் ஓல்சன்.

“அவர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்.” என்று பதில் சொன்னேன் நான். “நாம்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அந்த மானைக் கீழே போடுங்கள்.” என்று அவர்களுக்கு உத்தரவிட்டு “என்னைப் பின் தொடருங்கள்” என்று கூறி விட்டு வேகமாக துறை முகத்தை நோக்கிச் சென்றேன்.

கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் ஓடினோம். அதுவரை வேறெந்தச் சத்தமும் கேட்கவில்லை. அதன் பின் வேகத்தைக் குறைத்து மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். கூண்டிலடைத்தது போல் அந்தக் கப்பலின் குறுகிய இடத்தில் அவ்வளவு நாட்கள் இருந்ததால் எங்களுக்கு உடம்பில் தெம்பு குறைந்து விட்டது. மூச்சிரைக்க வேகமான நடையில் முன்னேறிக் கப்பலுக்கு ஒரு மைல் தொலைவில் நாங்கள் பார்த்த காட்சி எங்களை அப்படியே குத்துக்கற்களாய் நிற்க வைத்தது. இந்தப் பகுதிக்கு சம்பந்தம் இல்லாத சில கனமான மூங்கில்களைக் கடந்து சென்றோம். பின் சட்டென்று ஒரு சமவெளிக்குள் நுழைந்தோம். அதன் நடுவில் நாங்கள் கண்ட ஒரு கூட்டம் எவ்வளவு தைரியமான ஆளையும் ஒரு நிமிடம் யோசிக்க வைத்து விடும். அங்கே கிட்டத்தட்ட ஒரு 500 மனிதர்களைப் போன்ற பல உயிரினங்கள் நின்று கொண்டிருந்தன. மனிதக் குரங்குகளும் கொரில்லாக்களும் இருந்தன. அவைகளை எனக்கு அடையாளம் காண்பது ஒன்றும் சிரமம் இல்லை. ஆனால் இன்னும் நிறைய தெரியாத உயிரினங்கள் இருந்தன. அவைகள் மனிதர்களா இல்லை குரங்குகளா என்று சொல்வது மிகவும் கடினமாக இருந்தது. சில விலங்குகள் நாங்கள் கேப்ரோனாவின் கடல் சுவரில் பார்த்த இறந்த உடல் போன்று இருந்தன. இன்னும் சில அவைகளுக்குத் தாழ்ந்தவை. கிட்டத்தட்ட மனிதக் குரங்குகள் போல் இருந்தன. இன்னும் சில அப்படியே மனிதனைப் போன்று இருந்தன. நேராக நிமிர்ந்து நின்று முடி கம்மியாக நல்ல அமைப்பான தலைகளுடன்.

அந்தக் கூட்டத்தில் ஒன்று மட்டும் தனித்துத் தெரிந்தது. அதன் தலைவனாக இருக்கக்கூடும். அது கிட்டத்தட்ட நியாண்டர்தால் மனிதன் போலவே இருந்தது. அதே போன்ற குண்டான உடம்பு. அதன் மேல் முன்னோக்கி முதுகைப் போலவே வளைந்த பெரிய தலை. கால்களை விடச் சிறிய கைகள். கால்கள் இன்றைய மனிதர்களை விடச் சிறியதாய் இருந்தன. முழங்கால்கள் வளைந்திருந்தன எப்போதும் நிமிராமல். இந்த உருவமும் இதை விடத் தாழ்ந்த ஆனாலும் மனிதக் குரங்குகளுக்கு மேலான இன்னும் ஒன்றிரண்டு உயிரினங்களும் கைகளில் கனமான உருட்டுக் கட்டைகள் வைத்திருந்தன. மற்றவைகள் தங்கள் உடல் வலிமையை மட்டுமே நம்பி இருந்தன. எல்லோருமே ஆண்கள்தான். அனைவரும் ஆடை உடுத்தி இருக்கவில்லை. தலைவனிடம் கூட ஆபரணம் போன்ற எதுவும் இல்லை.

அவைகள் எங்களைப் பார்த்ததும் தங்கள் கூரிய கோரைப் பற்களைக் காட்டி மெலிதான உறுமலோடு முறைத்துப் பார்த்தன. நான் அவைகளின் மேல் துப்பாக்கிகளை ரொம்ப அவசியம் என்றால் தவிர பயன்படுத்த விரும்பவில்லை. அதனால் அவைகளைக் கடந்து செல்ல முயற்சித்தேன். என் எண்ணத்தைப் புரிந்தது போல் நியாண்டர்தால் மனிதன் அதனை எங்களின் கோழைத்தனம் என்று எண்ணி விட்டான் போல் தெரிந்தது. காட்டுச் சத்தத்துடன் எங்களை நோக்கி ஓடி வந்தான் அவனுடைய தடியை தலை மேல் சுத்திக் கொண்டே. அனைவரும் அவனைப் பின் தொடர்ந்து ஓடி வந்தனர். ஒரு நிமிடத்தில் எங்களைச் சூழ்ந்து விட்டிருப்பார்கள். அதனால் அவர்களைச் சுட உத்தரவிட்டேன். முதல் சூட்டிலேயே ஆறு பேர் சாய்ந்து விட்டனர் அந்த நியாண்டர்தால் மனிதனையும் சேர்த்து. மற்றவர்கள் அனைவரும் ஒரு கணம் யோசித்து மரங்களை நோக்கித் தெறித்து ஓடினர். சில உயிரினங்கள் வெகு லாவகமாக கிளைகளில் ஏறின மற்றைய உயிரினங்கள் மரத்தின் அடியில் சுருண்டு விழுந்தன எங்கள் குண்டுகளுக்கு பலியானதால். வான் ஸ்சோன்வர்ட்ஸ் நான் இருவருமே கவனித்தோம். கிட்டத்தட்ட மனிதன் போலிருந்த சில உயிரினங்களும் லாவகமாகக் கிளைகளில் குரங்குகள் போல் ஏறின. இன்னும் சில மனிதன் போன்று இருந்த உயிரினங்கள் கொரில்லாக்கள் போல் தரையிலேயே பாதுகாப்புத் தேடின.

நாங்கள் ஆய்ந்து பார்த்ததில் 5 எதிரிகள் இறந்திருந்தனர். நியாண்டர்தாலைத் தவிர. அவனது தடித்த மண்டை ஓட்டில் சிராய்த்ததால் அவன் அதிர்ச்சியாகி இருக்கிறான். நாங்கள் அவனை எங்களுடன் கப்பலுக்கு எடுத்துச் செல்லலாம் என்று எண்ணினோம். அதனால் அவனது கைகளை வார்களினால் பின் புறமாகக் கட்டினோம். அவன் கழுத்தில் ஒரு பட்டையைக் கட்டினோம். அவன் சுய நினைவு திரும்புவதற்குள். இவர்களை எல்லாம் திசை திருப்புவதற்காகத்தான் கப்பலில் இருந்தவர்கள் சுட்டிருக்கிறார்கள் என்று புரிந்து விட்டதால் நாங்கள் விட்டு வந்த மானின் உடலை நோக்கிச் சென்றோம். ஆனால் அங்கு மானைக் காணவில்லை.

திரும்பிச் செல்லும் வழியில் நானும் விட்லியும் மற்றவர்களை ஒரு நூறடி தூரம் முந்திச் சென்றோம் எதாவது இரை மாட்டாதா என்றெண்ணி. எங்கள் முதல் வேட்டை எங்களுக்குக் கிடைக்காத ஏமாற்றத்தில் வெறுத்துப் போய் இருந்தோம். நானும் விட்லியும் மிக கவனமாக அடியெடுத்து வைத்து முன்னேறினோம். மற்றவர்கள் எங்களுடன் இல்லாததால் நாங்கள் இரண்டு பெரிய மறிமான்களை வேட்டை ஆடினோம் கப்பலுக்கு ஒரு அரை மைல் தூரம் இருக்கும் போது. எங்கள் வேட்டைப் பொருட்கள் மற்றும் கைதி கிடைத்த மகிழ்ச்சியில் கப்பலுக்குத் திரும்பினோம். அங்கு எல்லோரும் பாதுகாப்பாக இருந்தார்கள். கரையின் வட திசையில் கிட்டத்தட்ட இருபது காட்டு உயிரினங்களின் சடலங்கள் கிடந்தன. அவைகள் நாங்கள் இல்லாதபோது ப்ராட்லி மற்றும் அவனது கூட்டாளிகளைத் தாக்கிய கூட்டமாகும். அதன் மீதிக் கூட்டத்தைத்தான் நாங்கள் ஏற்கெனவே விரட்டி இருந்தோம்.

நாங்கள் அந்தக் காட்டு மனிதக் குரங்குகளுக்கு ஒரு பாடம் கற்பித்து விட்டோம் என்றுதான் எண்ணி இருந்தோம். அதனால் பிற்காலத்தில் பாதுகாப்பாக இருப்போம் என்று நினைத்திருந்தோம். குறைந்த பட்சம் அவைகளிடம் இருந்தாவது ஆபத்து வராது என்று நினைத்திருந்தோம். இருந்தாலும் எங்கள் கவனத்தை ஒரு மயிரிழை கூடக் குறைத்து விடக் கூடாது என்றும் முடிவெடுத்து இருந்தோம். ஏனெனில் இந்தப் புதிய உலகில் இன்னும் தெரியாத ஏகப்பட்ட பயங்கரங்கள் நிறைந்துள்ளன.

மறு நாள் காலை நாங்கள் எங்கள் கூடார வேலைகளை ஆரம்பித்தோம். ப்ராட்லி நான் வான் ஸ்சோன்வர்ட்ஸ் ஓல்சன் மற்றும் லா ர்யூ முதல் நாள் இரவில் அதைப் பற்றி விவாதித்து தேவையான திட்டங்களை வரைந்திருந்தோம். அதற்காக எங்கள் ஆட்களை வேலை செய்ய முடுக்கி விட்டோம் மரங்களை வெட்டுவதற்கு. ஜர்ரா எனப்படும் எந்தவித பருவத்தையும் தாங்கக்கூடிய கடினமான காட்டு மூங்கில்களை இதற்காகத் தேர்ந்தெடுத்தோம். அவைகள் அங்கு நிறைய வளர்ந்திருந்தன. பாதிப் பேர் வேலை பார்க்க மீதிப் பேர் காவல் காத்தனர். ஒவ்வொரு மணி நேரமும் மாற்றிக் கொண்டோம். நண்பகல் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்டோம். ஓல்சன் இப்போது எங்களை மேற்பார்வை பார்க்க நான் ப்ராட்லி வான் ஸ்சோன்வர்ட்ஸ் லா ர்யூ அனைவரும் மூங்கில்களை அடுக்கிக் கூடங்களின் வெளிப்புறச் சுவர்களையும் மேற் கூரைகளையும் உருவாக்கினோம். பகல் பொழுது முடிந்த பின் நிறைய மூங்கில் கழிகளைப் பிணைத்திருந்தோம் மறுநாள் கூடாரங்கள் செய்யத் தயாராய். நாங்கள் மிகவும் களைத்திருந்தோம். கூடாரங்கள் அடுக்கப்பட்டவுடன் கிட்டத்தட்ட விழுந்து விட்டோம். வான் ஸ்சோன்வர்ட்ஸ் தவிர. அவனுக்கு இந்த மாதிரி உடல் உழைப்பெல்லாம் பழக்கமில்லை. ஏன் என்று கேட்பதற்கும் நான் விரும்ப வில்லை. ஏனெனில் இது முழுக்க முழுக்க சுய விருப்பத்தின் பேரில்தான் நடந்தது. அவன் மத்தியானம் முழுவதும் ஜர்ரா மரத்தில் இருந்து கத்தி செய்து கொண்டிருந்தான். பின் லா ர்யூவிடம் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அவனை இவள் ஒரு மனிதனாகக் கூட மதிக்கவில்லை.

நேற்றுப் பார்த்த காட்டு மனிதர்களை நாங்கள் இன்று பார்க்கவில்லை. ஒரே ஒரு முறை மட்டுமே கேப்ரோனாவின் குடிகளால் ஆபத்து வந்தது. ஒரு பயங்கரமான பறவை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. சில குண்டு மழை பொழிந்தவுடன் பறந்து சென்று விட்டது. அது டெரோடாக்ட்டில் போல இருந்தது. அதன் பிரமாண்ட தோற்றமும் மூர்க்கமான விதமும் மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இன்னொரு சம்பவமும் நடந்தது. ஆற்றில் எங்களைத் தாக்கிய பல்லிகளை விட மோசம் என்றுதான் நான் சொல்வேன். இரண்டு ஜெர்மானியர்கள் விழுந்து கிடந்த மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள். வான் ஸ்சோன்வர்ட்ஸ் அவனுடைய கத்தி வேலையை முடித்திருந்தான். நாங்கள் இருவரும் அவர்கள் அருகே சென்றோம்.

அதில் ஒருவன் தான் வெட்டிய கிளையின் பகுதியைத் தூக்கிப் பின் புறம் எறிந்தான். அவனது போறாத காலம். அது நேராக வான் ஸ்சோன்வர்ட்ஸின் மூஞ்சியில் அடித்து விட்டது. நிச்சயம் அவனுக்கு வலித்திருக்காது. ஏனெனில் சிறு காயம் கூட ஏற்படவில்லை. இருந்தாலும் அவன் பயங்கர கோபத்தோடு கத்தினான். “இங்கே பாருங்கள்” என்று பலமாகக் கத்தினான். அந்த மாலுமிகள் உடனே விறைப்பானார்கள். அவர்களது அதிகாரியை நோக்கினார்கள். குதி கால்களை ஒன்றாக்கி சல்யூட் வைத்தார்கள். “பன்னி” என்று கர்ஜித்தான் வான். பின் அவனது மூஞ்சியில் ஓங்கி ஒரு குத்து விட்டான். அவன் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. நான் உடனே வான் ஸ்சோன்வர்ட்ஸை பிடித்துக் கொண்டேன். இன்னொரு அடி கொடுக்கு முன் அவனை அங்கிருந்து இழுத்துத் தள்ளி நிறுத்தினேன். ஆனால் அவன் என்னை ஒரு குச்சியை எடுத்து அடிக்க ஓங்கினான். அது இறங்கு முன் நான் அவனது வயிற்றில் எனது துப்பாக்கி முனையை அழுத்தினேன். நான் அந்தத் துப்பாக்கி விசையை அழுத்த எந்தக் காரணத்தையும் தேட மாட்டேன் என்பதை அவன் என் கண்களில் கண்டு கொண்டான். அவன் ஆட்கள் போலவும் எல்லா ரௌடிகள் போலவும் அவன் மனதளவில் கோழையாய் இருந்தான். அவன் குச்சியைக் கீழே போட்டுவிட்டுத் திரும்பிச் செல்ல எத்தனித்தான். ஆனால் நான் அவனைப் பிடித்து இழுத்து இது போல் இனி எப்போதும் நடக்கக் கூடாது என்று எச்சரித்தேன் அவனது ஆட்கள் முன்பே. யாரும் அடிபடக் கூடாது. நாம் ஏற்படுத்தி இருக்கும் நீதிமன்றத்தைக் கூட்டாமல் சட்டங்களைப் பின் பற்றாமல் யாரும் தண்டிக்கப்படக் கூடாது. அவ்வளவு நேரமும் அந்த ஜெர்மன் மாலுமி அப்படியே அசையாமல் விறைப்பாக நின்றான். அவனது முக பாவங்களில் இருந்து அவனுக்கு மிகவும் பிடிக்காதது எது என்று கண்டு பிடிக்க முடியவில்லை. அவனது அதிகாரி அவன் முகத்தில் அறைந்ததா இல்லை நான் அந்த கைசர் சந்ததிக்கு எடுத்துக் கொண்டிருக்கும் போதனையா? நான் சொல்லும் வரை அவன் அசையவே இல்லை. “நீ உனது அறைக்குச் சென்று உன் காயத்திற்கு மருந்து இட்டுக் கொள்.” என்றேன். பின் எனக்கு சல்யூட் அடித்து விட்டு அதே விறைப்புடன் யூ-33 கப்பலை நோக்கிச் சென்றான்.

பொழுது சாயும் நேரத்திற்கு முன் வளைகுடாவில் இன்னும் உள்ளே போய்க் கரையில் இருந்து நூறடி தள்ளி நங்கூரம் பாய்ச்சினேன். அங்குதான் இன்னும் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆட்கள் இரவு முழுவதும் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டும் என்று விவரித்தேன். ஓல்சனை அந்த இரவுப் பணியின் தலைமை அதிகாரியாக நியமித்தேன். அவனது போர்வைகளையும் தேவையான அனைத்தையும் மேல் தளத்திற்கு எடுத்து வரச் சொன்னேன். அன்றிரவு நாங்கள் முதல் கேப்ரோனா மறிமானின் கறியைச் சுவைத்தோம். பச்சைக் காய்கறிக் கலவையும் சாப்பிட்டோம். சமையல்காரர் ஓடைக்குப் பக்கத்தில் கிடைத்தவை என்று சொன்னார். வான் ஸ்சோன்வர்ட்ஸ் முழுவதும் அமைதியாகவும் கடுகடுப்பாகவும் இருந்தான்.

சாப்பாடு முடிந்ததும் நாங்கள் அனைவரும் மேல் தளத்திற்குச் சென்று கேப்ரோனா இரவின் பழக்கமில்லாத காட்சிகளைக் கண்டோம் வான் ஸ்சோன்வர்ட்ஸ் தவிர. கேட்பதை விடக் காண்பது குறைவாகவே இருந்தன. நிலத்தின் உள் இருந்த பெரிய ஏரியின் பின்னால் இருந்து மிருகங்களின் சீற்றங்களும் கூக்குரல்களும் கேட்டபடி இருந்தன. எங்களுக்கு மேலே பிரமாண்டமான இறக்கைகளின் சிறகடிக்கும் சத்தங்கள் கேட்டன. கரையில் இருந்து வெப்ப மண்டலக் காடுகளின் பலவகையான குரல்கள் கேட்டவண்ணம் இருந்தன. அவைதான் பேலியோசோயிக் மீசோசோயிக் காலங்களில் இதே போன்ற கதகதப்பான வெப்ப மண்டலத்தில் ஒலித்திருக்க வேண்டும். ஆனால் இங்கே அந்தக் காலங்களைத் தாண்டிய குரல்களும் கலந்திருந்தன. சிறுத்தையின் சீற்றம் சிங்கத்தின் கர்ஜனை நரியின் ஊளை இடி போன்ற உறுமல் இவை அனைத்தும் என்றுமே பூமியில் கேட்கப்படாதவை. ஆனால் இன்று நாங்கள் இவைகளைச் சந்திக்கும் தருணம் வந்திருக்கிறது.

எண்ணெய் ஊற்று

ஒவ்வொருவராகத் தங்கள் அறைக்குச் செல்ல ஆரம்பித்தனர். இறுதியில் நானும் அவளும் மட்டுமே தனித்திருந்தோம். நான் மேலே இருப்பதால் ஓல்சனையும் சிறிது நேரம் நான் கீழே செல்ல அனுமதித்திருந்தேன். லா ர்யூ மிகவும் அமைதியாய் இருந்தாள். பதில் தேவைப்படும் என் அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாய்ப் பதில் சொல்லியவண்ணம் இருந்தாள். அவள் நன்றாக இருக்கிறாளா என்று கேட்டேன்.

“ஆம்” என்று பதிலளித்தாள். ஆனால் இங்கு நிலவும் மோசமான நிகழ்வுகளால் நான் மிகவும் கலங்கி போயிருக்கிறேன். நான் மிகவும் சிறுமையாக உணர்கிறேன். இங்கு உலவும் பல்வேறு விதமான மூர்க்கத்தனமான கொடூரமான உயிரினங்களின் முன்னே நான் ரொம்பச் சின்னதாக உணர்கிறேன். உயிர் என்பது எவ்வளவு மலிவானது மதிப்பற்றது என்பதை இங்கு உணர்கிறேன். வாழ்க்கை என்பது ஒரு நகைச்சுவை, ஒரு கொடூரமான இறுக்கமான, நகைச்சுவை போல் இருக்கிறது. நீங்கள் ஒரு சிரிக்கத்தக்க பொருளாகவோ பயமுறுத்தும் பொருளாகவோ நீங்கள் சந்திக்கும் உயிரின் வலிமையைப் பொறுத்து இருக்கிறீர்கள். ஆனால் எந்தக் கணமும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. தொட்டிலில் இருந்து சுடுகாட்டுக்குத் தவ்வக்கூடிய ஒரு சின்ன சிரிக்கத்தக்க உயிர் நீங்கள். ஆம், அது நம் தவறுதான். நாமே நமக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துக் கொள்கிறோம். ஆனால் கேப்ரோனாதான் அதற்கு நல்ல மருந்து கொடுக்க முடியும்.” அவள் சற்று நிறுத்திச் சிரிக்க ஆரம்பித்தாள்.

“நீ ஒரு அழகான தத்துவத்தைச் சொல்லி இருக்கிறாய்” என்றேன் நான். “மனித நெஞ்சுக்குள் ஒரு ஏக்கத்தை நிறைக்கிறது. அது மிகவும் திருப்திகரமாகவும் முழுமையாகவும் இருக்கிறது. மேன்மை அடையச் செய்கிறது. முதல் மனிதன் இவைகளை எல்லாம் தாண்டி வெற்றிகரமாக வந்திருந்தான் என்றால் எவ்வளவு உன்னதமான நிலையை அடைந்திருப்பான்.”

“எனக்கு முரண் பிடிக்காது” என்றாள். “அது ஒரு சின்ன உயிரைக் குறிக்கிறது”

“‘தொட்டிலில் இருந்து சுடுகாட்டுக்குத் தவ்வக்கூடிய ஒரு சின்ன சிரிக்கத்தக்க உயிர்’ இதிலிருந்து வேறென்ன மாதிரியான உயிர் வரும் என்று நீ எதிர் பார்க்கிறாய்” என்று வினவினேன். “அப்படியே இருந்தாலும் பெரிய வித்தியாசமில்லை. உனக்கு என்ன பிடிக்கும் அல்லது பிடிக்காது? நீ இங்கு இருக்கப்போவது கொஞ்ச காலம்தான். நீ ரொம்பக் கவலை படக் கூடாது.”

அவள் ஒரு சின்னப் புன்னகையோடு என்னைப் பார்த்தாள். “நான் ரொம்பப் பயந்திருக்கிறேன் சோகமாயிருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனக்கு வீட்டைப் பற்றிய நினைப்பாகவே இருக்கிறது. தனிமையாக உணர்கிறேன்.” அவள் அதை முடிக்கும் போது கிட்டத்தட்ட அழுது விட்டாள். அப்படி அவள் என்னிடம் பேசியது இதுதான் முதல்முறை. என்னையும் அறியாமல் நான் கம்பியில் வைத்திருந்த அவள் கை மீது என் கையை வைத்தேன்.

“உன் நிலைமை எவ்வளவு துன்பமானதென்று எனக்குத் தெரியும். ஆனால் நீ தனியாய் இருக்கிறாய் என்று எண்ண வேண்டாம். இங்கு ஒருவன் இருக்கிறான் இந்த உலகில் உனக்காக எதையும் செய்வதற்கு.” என்றேன் அப்பாவியாக. அவள் கையை விடுவிக்கவில்லை. கன்னங்களில் வழியும் கண்ணீரோடு என்னைப் பார்த்தாள். அவள் உதடுகள் உச்சரிக்கத் துடித்த நன்றிகளை அவள் கண்களில் காண முடிந்தது. பின் நிலவொளி வீசும் வினோதமான அந்த நிலப்பரப்பைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள். அவளது புதுவிதமான தத்துவங்கள் அவள் காதுகளில் ரீங்கரிக்க அவள் தனக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டாள் என்பது தெரிந்தது. நான் அவளை என் கைகளில் எடுத்து எவ்வளவு தூரம் காதலிக்கிறேன் என்பதைத் தெரிவிக்க நினைத்தேன். அதனால் அவளது கையைக் கம்பியில் இருந்து மெதுவாக எடுத்து அவளை என் பக்கம் இழுக்க ஆரம்பித்த அந்த நொடியில் தான் ஓல்சன் தனது படுக்கை மற்றும் விரிப்புகளை எடுத்துக்கொண்டு மடத்தனமாக மேல் தளத்தில் நுழைந்தான்.

மறுநாள் காலை நாங்கள் வெகு மும்முரமாக வேலை செய்ய ஆரம்பித்தோம். வேலை ரொம்ப நன்றாக முன்னேறியது. அந்த நியாண்டர்தால் மனிதனை ரொம்பவே கவனிக்க வேண்டியதாய் இருந்தது. அவனை எப்போதும் கம்பிகளுக்குப் பின்னே வைக்க வேண்டி இருந்தது. அவனை நெருங்கும் போதெல்லாம் அவன் மிகவும் காட்டானாகி விடுகிறான். ஆனால் கொஞ்ச நாள் கழித்து அவனும் பழகி விட்டான். அவனுக்கு ஏதேனும் மொழி இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முயற்சி செய்தோம். லிஸ் அவனுடன் பேச ரொம்ப நேரம் செலவழித்தாள். அவனுக்கு வரைந்து காண்பித்தாள். ஆனால் அதில் எந்தவித முன்னேற்றமும் கிட்டவில்லை. எங்களுக்குக் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகியது எல்லாக் கூடாரங்களையும் கட்டி முடிக்க. அவைகளை ஒரு குளிர்ந்த நீரோடைக்கு அருகில் கட்டி இருந்தோம் துறை முகத்தில் இருந்து இரண்டு மைல் தொலைவில்.

வேலி கட்டுவதில் ஒரு சின்ன மாற்றம் செய்தோம். அருகில் ஒரு கடல் பாறை கண்டோம். அதிலிருந்து நிறைய தட்டையான கட்டுமானக் கற்கள் கிடைத்தன. எனவே கூடாரங்களைச் சுற்றிலும் கற்சுவர்களை எழுப்பினோம். அது ஒரு சதுர வடிவில் இருந்தது. ஒவ்வொரு மூலையிலும் ஒரு கோட்டையும் கோபுரமும் இருந்தது. அங்கிருந்து எந்தப் பக்கமும் சுடுவதற்கு வசதியாக இருந்தது. அது வெளிப்புறத்தில் 135 சதுர அடியாக இருந்தது. மூன்றடி அகலமுள்ள கீழ்ச் சுவர். மேலே அது ஒன்றரை அடி அகலமாக இருந்தது. பதினைந்தடி உயரம் இருந்தது. அந்தச் சுவரைக் கட்ட நீண்ட நாட்கள் ஆயிற்று. நாங்கள் அனைவரும் அதைக் கட்ட உதவி செய்தோம் வான் ஸ்சோன்வர்ட்ஸ் தவிர. எங்களுக்குள் துப்பாக்கி முனையில் ஒப்பந்தம் ஏற்பட்ட அந்தச் சம்பவத்திற்குப் பின் அவன் என்னிடம் ஒரு வார்த்தை பேச வில்லை வேலை சம்பந்தமான பேச்சைத் தவிர. நாங்கள் தற்போது வேலையை முடித்திருந்தோம். இறுதிக் கட்ட வேலை இன்று நடந்து கொண்டிருந்தது. நான் கட்டட வேலையை ஒரு வாரத்திற்கு முன் விட்டுவிட்டு எங்களுக்கு நடந்த வினோதமான அனுபவங்களைத் தொகுத்து எழுதிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு சில சின்னத் தவறுகள் இருக்கலாம். ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்து விட்டதால் என்றென்று நடந்தன என்பதில் சில குழப்பங்கள் வந்தன. இருந்தாலும் அவை மிகவும் சிறு தவறுகள்தான்.

நான் எழுதிய கடைசிச் சில பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது லிஸ் நியாண்டர்தால் மனிதனுக்கு மொழி இருப்பதைக் கண்டுபிடித்து விட்டாள் என்பதை எழுத விட்டுவிட்டது தெரிந்தது. அவள் அதைப் பேசவும் தெரிந்து கொண்டாள். ஓரளவு நானும்தான். அவன் பெயர் யாம் என்று அவன் சொன்னான். இந்த நாட்டின் பெயர் கேஸ்பக் என்று சொன்னான். இது எவ்வளவு பெரிது என்று கேட்டதற்கு தன் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி எல்லாவற்றையும் அடக்கியது என்பது போல் காட்டினான். அது கிட்டத்தட்ட இந்த அண்டம் முழுவதும் அடங்கும். அவன் இப்போது சொல்வதை புரிந்து கொள்வதால் நாங்கள் அவனை விட்டு விடலாம் என்று நினைத்தோம். அவன் தங்கள் ஆட்கள் எங்களை இனிமேல் தாக்க விட மாட்டேன் என்று சொன்னான். அவன் எங்களை காலுக்கள் என்று அழைத்தான். அவனும் இன்னும் கொஞ்ச காலத்தில் ஒரு காலுவாகி விடுவேன் என்றும் சொன்னான். அவன் என்ன சொல்ல வருகிறான் என்று முற்றிலும் புரியவில்லை. வடக்கில் இன்னும் நிறைய காலுக்கள் இருக்கிறார்கள் என்றும் அவனும் ஒரு காலு ஆனபின் அவர்களோடு சேர்ந்து இருக்கப் போவதாகச் சொன்னான்.

யாம் எங்களோடு நேற்று வேட்டையாட வந்தான். நாங்கள் சுட்ட மான்கள் வெகு எளிதாக கீழே விழுவதைப் பார்த்து மிகவும் ஆச்சர்யமடைந்தான். நாங்கள் மிகவும் செழிப்பான இடத்தில் வாழ்ந்து வந்திருக்கிறோம். யாம் எங்களுக்குப் பழங்கள் கிழங்குகள் மூலிகைகள் அனைத்தும் காண்பித்தான். வாரத்திற்கு இருமுறை புத்தம் புது இறைச்சியை நோக்கிச் சென்றோம். அதில் கொஞ்சமே கொஞ்சம் சேமித்து வைத்தோம். ஏனெனில் நாளை என்ன நடக்கும் என்று தெரியாது. எங்களுக்குத் தெரிந்த ஒரே உலர்த்தும் முறை புகைதான். இரண்டு தானிய வகைகளில் நிறைய அளவு உலர்த்தி வைத்திருந்தோம். அவைகள் சில மைல் தொலைவில் தெற்கில் நிறைய விளைகின்றன. அதில் ஒன்று பெரிய இந்திய மக்காச் சோளம். ஆண்டு முழுவதும் விளையக் கூடிய பெரிய தானியம். ஐம்பது அறுபது அடிகள் கூட வளரும். அதன் கருதுகள் கிட்டத்தட்ட ஒரு மனிதனின் உடம்பைப் போலவும் அதன் மணிகள் உள்ளங்கை அளவு இருக்கும். அதைச் சேமித்து வைக்க எங்களுக்கு இரண்டாவது கிடங்கு தேவை பட்டது.

செப்டம்பர் 3, 1916: இன்றிலிருந்து சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னால் இதே கப்பலில் இருந்து வந்த ஒரு வெடிக்கண்ணி அமைதியாகப் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்கக் கப்பலில் இருந்த என் வாழ்வை இப்போது கேஸ்பக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. எங்களது விதியை ஏற்றுக் கொண்டு நாங்கள் எங்கள் வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருந்தோம். வெளி உலகை இனிமேல் எவரும் பார்க்க முடியாது என்ற முடிவுக்கு அனைவரும் வந்து விட்டோம். எங்களைப் போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்று யாம் திரும்பத் திரும்ப வலியுறுத்தியதால் எங்களில் சிலருக்குத் தேடிப் பார்க்க வேண்டும் என்று தீராத ஆவல் ஊற்றெடுத்தது. ப்ராட்லியின் கீழ் சில பேரை நான் சென்ற வாரம் அனுப்பினேன். யாம் ஒரு சுதந்திர மனிதன் ஆகி விட்டபடியால் அவனும் அவர்களுடன் சென்றான். அவர்கள் மேற்கில் 25 மைல் தூரம் சென்றார்கள். செல்லும் வழியில் கொடூரமான விலங்குகளும் பல்லிகளும் குறுக்கிட்டன. ஆனால் மனிதர்கள் போன்ற உயிரினங்கள் எதுவும் தென்படவே இல்லை. ப்ராட்லியின் வாக்கு மூலம் இங்கே:

முதல் நாள் பதினைந்து மைல் தூரம் சென்றோம். தெற்கு நோக்கிப் பாயும் ஒரு பெரிய நீரோடையின் கரையில் தங்கினோம். வேட்டைக்கு நிறைய விலங்குகள் இருந்தன. இதற்கு முன் அவைகளை கேஸ்பக்கில் பார்த்ததில்லை. கூடாரம் அமைக்க ஆரம்பிக்கு முன் முடி நிறைந்த காண்டா மிருகம் ஒன்று எங்களைத் தாக்க வந்தது. ப்ளெஸ்ஸர் அதை ஒரே குண்டில் வீழ்த்தி விட்டான். எங்களுக்கு மாலைச் நேர சிற்றுண்டியாக காண்டாமிருகக் கறி கிடைத்தது. யாம் அதை ஏடிஸ் என்றான். கோட்டையை விட்டுக் கிளம்பியதில் இருந்து கூடாரம் வரும் வரை எங்களுக்கு ஒரே தொடர்ச்சியான சண்டைதான். ஒரு மனிதனின் மனதில் இவ்வளவு எண்ணற்ற மாமிசம் உண்ணும் விலங்குகளைக் காண்பதரிது. அதே போல் அவைகளின் உணவுகளும் கணக்கிலடங்கா.

இரண்டாவது நாள் அந்தப் பாறை அடிவாரத்தில் 10 மைல் தூரம் நடந்தோம்.

அடிவாரத்தில் இருக்கும் அடர்ந்த காடு வழியாகப் பயணித்தோம். மனிதன் போன்ற உயிரினங்களைப் பார்த்தோம். ஒரு கூட்டத்தில் கீழ் நிலையில் இருக்கும் மனிதக் குரங்குகள் இருந்தன. அதில் ஒரு வெள்ளை மனிதன் இருந்தான் என்று நமது ஆட்களில் சிலர் அடித்துச் சொன்னார்கள். முதலில் அவர்கள் எங்களைத் தாக்க நினைத்தார்கள். ஆனால் நமது துப்பாக்கிக் குண்டுகள் பொழிந்ததைப் பார்த்ததும் மனதை மாற்றி விட்டார்கள். அந்த மலைப்பாதையை எங்களால் முடிந்த அளவு அளந்து விட்டோம். மலை உச்சி மிகவும் செங்குத்தாக இருந்தது. கை பிடிக்கும் அளவோ இல்லை கால் வைக்கவோ உடைந்தோ துருத்திக் கொண்டோ எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் அனைவரும் ஏமாந்துவிட்டோம். கடல் பரப்பையும் வெளி உலகையும் பார்க்கலாம் என்ற எங்கள் எண்ணத்தில் மண் விழுந்து விட்டது. அந்தப் பக்கம் எதாவது கப்பல் வந்தால் அவர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்றும் எண்ணி இருந்தோம். எங்கள் தேடல் ஒரே ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்க உதவியது. அதன் மதிப்பு மிகவும் கம்மிதான். இந்தப் பள்ளம் ஒரு காலத்தில் முழுவதும் தண்ணீர் சூழ்ந்திருந்தது. அதற்கான அசைக்க முடியாத காரணம் அந்த மலைப் பாறைகளின் முகங்களிலேயே இருக்கிறது.

திரும்பி வருவதற்கு இரண்டு நாள் ஆகியது. வரும் வழியும் அதே போன்ற சாகச அனுபவங்கள் கிடைத்தன. நாங்கள் அனைவரும் சாகசங்களுக்குப் பழகி விட்டோம். அது கிட்டத்தட்ட சலித்து விட்டது. எங்களுக்கு எந்தவித இழப்போ இல்லை சுகவீனமோ ஏற்படவில்லை.

ப்ராட்லியின் அறிக்கையைப் படித்தவுடன் எனக்குப் புன்னகைக்கத் தோன்றியது. அந்த நான்கு நாட்களில் ஒரு ஆப்பிரிக்க வேட்டைக்காரனின் வாழ்நாள் அனுபவங்களை விட அதிகமாய் அனுபவித்து விட்டான் என்பதில் ஐயமில்லை. இருந்தும் அவைகளைச் சில வரிகளில் சொல்லி விட்டான். ஆம் எங்களுக்குச் சாகசங்கள் பழகி விட்டன. யாராவது ஒருவராவது ஒரு தடவையாவது சாவைச் சந்திக்காமல் ஒரு நாள் கூடக் கழிவதில்லை. யாம் எங்களுக்குச் சில வித்தைகள் கற்றுக் கொடுத்தான். அது மிகவும் லாபகரமானதாக இருந்தது. எங்கள் குண்டுகளையும் சேமிக்க உதவியது. அதனால் அதை உணவிற்கோ அல்லது தற்காப்பிற்கோ மட்டுமே பயன்படுத்தலாம். பறக்கும் பெரிய பல்லிகள் தாக்கினால் பெரிய மரங்களின் அடியில் ஒளிந்து கொள்கிறோம். நிலத்தின் விலங்குகள் துரத்தும் போது மரத்தின் மேல் ஏறிக் கொள்கிறோம். டைனோசர்களின் மூளையிலோ தண்டுவடத்திலோ சுட்ட இரண்டு நிமிடமும் இதயத்தைச் சுட்ட ஐந்து நிமிடங்களும் அவைகளைத் திரும்பவும் சுடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டோம். அவைகள் இறந்து விழுவதற்கு நேரம் ஆகிறது. வேறெந்த இடத்திலும் அவைகளைச் சுடுவது பயனற்றது. அவைகள் அதைக் கண்டு கொள்வதுமில்லை. அந்த அடிகள் அவைகளைக் காயப்படுத்துவதுமில்லை. கொல்வதுமில்லை.

செப்டம்பர் 7, 1916: நான் கடைசியாக எழுதிய பின் நிறைய நடந்து விட்டது. ப்ராட்லி இன்னொரு தேடுதல் வேட்டைக்குக் கிளம்பி விட்டான் மலைப்பாறை நோக்கி. அவன் திரும்பி வரப் பல வாரங்கள் ஆகுமாம். அந்த அடிவாரத்தில் இருந்து மலையை அளப்பதற்கு வேறெதாவது வழி இருக்கிறதா என்று பார்க்கப் போயிருக்கிறான். அவனுடன் சிங்க்ளர் ப்ராடி ஜேம்ஸ் டிப்பெட் ஆகியோரும் சென்றார்கள். யாம் திடீரென்று காணவில்லை. அவன் சென்று மூன்று நாட்கள் ஆகி இருக்கும். ஆனால் மிகவும் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் ஸ்சோன்வர்ட்ஸும் ஓல்சனும் ஒரு 15 மைல் தூரத்தில் மணற் கல் பாறைகள் தாண்டி ஒரு இடத்தில் எண்ணெய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். ஓல்சன் சொன்னான் அங்கு ஒரு எண்ணெய் ஊற்று இருக்கிறது என்று. ஸ்சோன்வர்ட்ஸ் அதைச் சுத்திகரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான் என்றும் சொன்னான். அவன் அதில் வெற்றி கண்டுவிட்டால் நாம் கேஸ்பக்கை விட்டு வெளியேறி நம் உலகைக் காண ஒரு வழி கிடைத்து விடும். அதை என்னால் நம்ப முடியவில்லை. சுவர்க்கத்தை கண்டது போல் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தோம். நாம் ஏமாறக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள்.

நான் லிஸ்ஸிடம் என் காதலைப் பற்றிப் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்து கூற முயற்சி செய்தேன். ஆனால் அவள் காது கொடுத்துக் கேட்கவில்லை.

– தொடரும்…

தமிழாக்கம்: சு.சோமு, Translation of the book ‘The Land That Time Forgot’ by Edgar Rice Burroughs
வெளியான மாதம்/ஆண்டு: May 2017 in kdp.amazon.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *