ஆஸ்தானபுரம் நாடக சபை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை நாடகம்
கதைப்பதிவு: April 16, 2023
பார்வையிட்டோர்: 5,643 
 
 

(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடக பாத்திரங்கள் 

தேசராஜன் – ஆஸ்தானபுர அரசன்

ஹேமல்தா – தேசராஜன் மனைவி

லட்சுமி சந்திரன் – ஹம்சிகையின் காதலன்

ஹம்சிகா – லட்சுமி சந்திரன் காதலி 

தாமத்ரையன் – ஹைரம்பி காதலன் 

ஹைரம்பி – தாமத்ரையன் காதலி 

பிலந்தரன் – ஆஸ்தானபுரம் தர்பார் பக்க்ஷி

கோணாசு, சிசுநாகன், பாதம் நாய்க்கன் – ஆஸ்தானபுரம் நாடக சபை நடிகர்கள். 

தம்பட்டன், தர்மலிங்கன், குட்டி சைத்தான் – ஓர் சிறு யட்சினி 

கதை நிகழிடம் – ஆஸ்தானபுரத்திலும், அடுத்த காட்டிலும்.


ஆஸ்தானபுரம் நாடக சபை 

முதல் அங்கம் 

முதற் காட்சி 

இடம் – கோணாசு வீட்டில் ஓர் அறை. 

கோணாசு, சிசுநாகன், பாதம் நாய்க்கன், புளுவன், தம்பட்டன், தர்மலிங்கன் வருகிறார்கள். 

கோ: நம்பொ ஜமெயெல்லாம் வந்து சேர்ந்திருக்குதா? 

பா: அடே, நீ அல்லாரையும் மொத்தமா கூப்பிடரது நல்லது – ஒல்வொருத்தரா – அந்த பொஸ்தகத்துலே எய்தி யிருக்கிற பிரகாரம். 

கோ: நம்ப ராஜா வூட்லே கண்ணாலம் ஆவப்போவுதே- அண்ணைக்கிராத்திரிக்கி, நம்ப கூத்தாடணும் இண்ணு நம்ப ஊரு ஆஸ்தானபுரம்- முழுதலும் தேடி – நம்ப தான் சரியானவங்க, இண்ணு நேமிச்சி இருக்கிராங்க நம்ப பேரெல்லாம் இதுலே எய்தி யிருக்குது – 
[சுருளை எடுக்கிறான்.]

பா: என்னடா, எய்வெடுத்தவனா யிருக்கரான்! வெவ காரத்தெ ஒயுங்கா நடத்தவேணாமா? – மொதல்லே என்னா கூத்து இண்ணு தெரிவி – அப்பறம் நாடக பாத்தரங்களை யெல்லாம் அறிவி- கடைசியிலெ வெவ காரத்தெ தெருவி! 

கோ: அது நியாயம் தான் – நம்ப ஆடப்போர கூத்து – ரொம்ப சோககரமான கல்யாணம் – பெருமீசனுக்கும் திரிசூலிக் – அப்பறம் அவங்கரெண்டுபேரும் ரொம்ப வேடிக்கையா செத்து பூடராங்க! 

பா: நல்ல கதையாச்சுதே அது!- நான் கேட்டிருக்கிறேன்- கடைசியிலே பலே ஜோக்காயிருக்கும்! அடே கோணாசு பத்தா, அந்த பெட்டியிலே யிருக்கர பேரை யெல்லாம் ஒவ்வொரு வேஷமா படிச்சிகினுவா – அடே பசங்களா, நீங்கள்ளாம் வரிசையா நில்லுங்க. 

கோ: நானு ஒருத்தன் ஒருத்தம் பேரா கூப்பிட்டுகினு வர்ரேன் – ஆஜர் சொல்லிகினு வாங்க – கைக்களவன் – பாதம் நாய்க்கன். 

பா: ஆஜர்! – எனக்கு என்னா வேஷம் இண்ணு சொல்லி வுட்டு – அப்புறம் போ, 

கோ: பாதம் நாய்க்கா – உனக்கு பெருமீசன் வேஷம் கொடுத்திருக்குது. 

பா: அவன் யார்டா பெருமீசன்? அவன் என்னா ஷோக் பேர்வழியா, தடபுடல் ஆசாமியா? 

கோ: பலே ஷோக் பேர்வழி! ஒரு பொம்பளே பேர்லே ஆசெ பட்டு, தன்னையே கொண்ணுகினு செத்து பூடரான்!

பா: ஆனா – ஆந்த வெஷத்தெ சரியா ஆடரது இண்ணா ரொம்ப அழணுமே! – நானு அந்த வேஷங் கட்டி அழரத்தே பாத்தாங்கண் அப்படியெ நாடகத்தே பாக்கரவங்கல்லாம் அழுது அழுது டுமான்ஜி பூடமாட்டாங்களா? கண்லெ இருந்து வர்ர ஜலமெல்லாம் வெள்ளமா போகாதா? கண்லெ கொஞ்சம் வெங்காயத்தெ தீட்டிவுடனும்! – ஒண்ணு தீர்ந்தது – அப்புறம் – ஆனாலும் என் வழியெல்லாம் தடபுடல் ஆசாமி தான்! ஒரு பீமசேனன் வேஷம் கட்டனேண்ணா, புலி கிலி, பூனெ கீனே! – எது வந்தாலும் கிழிச்சி எறிஞ்சிட மாட்டனா! 

மலையோடு மலையைத் தாக்கி! 
மண்ணோடு மண்ணைப் பொடியாக்கி!
வெண்ணெயை வெட்டி, வில்லாக வளைத்து 
சூரியன் ரதத்தைச் சுழலும்படிச் செய்து!
அண்டரண்ட பயிரண்டங்களையும் 
அனைத்தையும் முண்டமாக்குவேன்! – 

எப்டி?- பலே ஜோக்காயில்லே! – இது பீமசேனன் வேஷம் – வீரரசம்! – சிங்காரரசம் சோககரமாயிருக்கணும் – உம் – அப்பறம், மத்தவங்க வேஷத்தெ யெல்லாம் சொல்லிகினு போ. 

கோ: பிராந்திப் புளுவன் – துத்தி. 

பு: ஆஜெர், கோணாசு பத்தர். 

கோ: புளுவா.நீ திரிசூலியெ எடுத்துக்கணும். 

பு: திரிசூலி யாரது? ரெண்டாவது ராஜபார்ட்டா? 

கோ: அயன் இஸ்திரிபார்ட் – அயன் ராஜபார்ட் பொஞ்சாதி. அடடெ! தூ; எனக்கு பொம்மனாட்டி வேஷம் வாணாம்பா – எனக்கு மீசெவருதப்பா! 

கோ: அது பரவாயில்லேடாப்பா. அத்தெ முக்காடுபோட்டு கினு மறைச்சிகனாபோச்சி! கொரலே மாத்திரம்- பொம்மனாட்டி கொரல்மாதிரி மாத்திக்கணும். 

பா: அப்படி மூஞ்செ மறைச்சிகர தானா, அந்த வேஷம்கூட நானு எடுத்துகரனே! தடபுடலா சின்ன கொரல்லெ பேசுவனே! – திரிசூலி! திரிசூலி! ஹா! என் கண்ணாளா பெருமீசையே! – உன் கண்ணாட்டி திரிசூலி! – பெண்ணே! கண்ணே! மண்ணே! மணியே! 

கோ: அதெல்லாம் ஒதவாதப்பா! நீ பெருமீசன் வேஷந்தான் எடுத்துக்கணும். – புளுவா நீ திரிசூலி. 

பா: சரி – அப்புறம்போ. 

கோ: ரம்பெதர்மலிங்கம் – தையக்காரன். 

தம்: இதோ ஆஜெர், கோணாசுபத்தரே. 

கோ: ரம்பெதர்மலிங்கம்,நீ திரிசூலியின் தாயாரை எடுத்துக்கணும் – தமாஷ் தம்பட்டன் – கலாய் பூசரவன்.

தம்: ஆஜெர் – கோணாஸ்பத்தரே, 

கோ: நீ வந்து பெருமீசன் தகப்பன் -நானு திரிசூலியின் தகப்பன் – தகரவேலை சிசுநாகன் – நீ சிங்கவேஷம்- அவ்வளவு தான் – பாத்திரங்களெல்லாம் சரியாபோச்சி இண்ணு நெனைக்கரேன். 

சி: சிங்கம் பேசவேண்டிய பேச்செல்லாம் நீ எழுதி உட்டை யாப்பா? எழுதியானா, உன்னெ இப்பவே கேட்டுக்க ரெம்பா, அத்தெ இப்பவே குடுத்தூடு எங்கிட்ட, எனக்கு குருட்டு பாடம் பண்ண சீக்கிரம் வராது. 

கோ: நீ குருட்டுபாடம் பண்ணாமலே அத்தெ சொல்லிவுட லாம் – ஏனிண்ணா,நீ பேசவேண்டியதெல்லாம், சும்மா கர்ஜிக்க வேண்டியதுதான். 

பா: அப்படியானா அந்த சிங்க வேஷம் கூட நான் கட்ட ரனே! நண்ணா கர்ஜிப்பேனே நான்! அத்தெ கேக்ரவங் கல்லாம் சும்மா டுமான்ஜி பூடமாட்டாங்களா ; நானு சும்மா கர்ஜிச்சேனிண்ணா – சும்மா! மகாராஜா மறு படியும் இவன் கர்ஜிக்கட்டும் மறுபடியும் இவன் கர்ஜிக்கட்டும்! – இண்ணு சொல்லமாட்டாரா! 

கோ: அப்படி நீ கர்ஜிச்செ இண்ணா, மகாராணி அந்தப்புற இஸ்திரிங்கல்லாம் பயந்துபூட மாட்டாங்களா!- அப் பறம் நம்பளுக்கெல்லாம் கழுத்துக்கு கவுறுதான்!

மற்றவர்கள்: அப்ப நம்பல்லாம் சாவ வேண்டியதுதான்! 

பா: என்னடாபசங்களா! – ராஜ இஸ்திரிங்களெயெல்லாம் பயப்பட வைச்சா நம்ப ஜமெயெல்லாம் தூக்கிலே போடுவாங்க இண்ணு எனக்கு தெரியாதா என்னா! என் கொரலெ கம்பீரப் படுத்திகினு, மாடப் பொறாவே போலே குடு குடு குடு குடு இண்ணு கூவ மாட்டனா! சும்மா குயில்மாதிரி கூவமாட்டனா!

கோ: அதெல்லாம் ஒதவாது, நீ பெருமீசன் வேஷம்தான் போடணும். பெருமீசன் அயன் ராஜபார்ட்டு ரொம்ப அழகாயிருக்கணும், மம்மதனெபோல இருக்கணும், அத்தொட்டு அந்த வேஷம் நீ தான் எடுத்துகணும்.

பா: சரி, அப்படியே ஆகட்டும். அந்த வேஷத்துக்கு நானு என்னா டோபா போட்டுகணும்?

கோ: ஏன்? உனக்கு எந்த டோபா போட்டுக்க இஷ்டமோ அத்தெ போட்டுக்கோ. 

பா: சுருள் சுருளாயிருக்குதே, அந்த டோபா போட்டுக லாமா? நீட்டா யிருக்கர டோபா போட்டுகலாமா? சும்மா அப்படி பாதி கத்திரிச்ச டோபா போட்டுக இல்லாப்போனா,கரடியாட்டம் இருக்குதே அத்தெ போட்டுகலாமா? இல்லாப்போனா, நெருக்கமா வெட்டி யிருக்குதே அத்தெ போட்டுகலாமா? 

கோ: நெருக்கமா வெட்டியிருக்கர டோபா போட்டுக்கனெ இண்ணா, ஜெயில்லே இருந்து இப்பதான் உன்னெ உட்டூட்டாங்க இண்ணு நெனச்சிகிவாங்க, பாக்கரவங்கல்லாம்! – அது மாத்திரம் வாணாம். இந்தாங்க டாப்பா – உங்க பாகங்கல்லாம் – உங்களே கேட்டுக்க ரேன், வேண்டிகரேன்- தயவு பண்ணி நாளெராத் திரிக்குள்ளோ குருட்டுப்பாடம் பண்ணிகினு, அரம னெக்கி பின்னாலே ஒரு காடு மாதிரி இருக்குதே – பட் டணத்துக்கு ஒரு கல்லுக்கு அப்பறம் – அங்கே வந்து சேருங்கோ – நெலா வெளிச்சத்துலே – அங்கே ஒத் திகே நடத்துவோம். பட்டணத்துக்குள்ளே, ஒத்திகே நடத்தினா,கும்பல் கூடிப்பூடும் – நம்ப சமாசாரம் எல் லாம் தெரிஞ்சி பூடும். இதுக்குள்ள நம்ப கூத்துக்கு வேண்டிய சாமான்களுக்கெல்லாம். ஒரு ஜாப்தா போடரேன், வந்து சேர்ரத்துக்கு மறந்து பூடா தைங்க பத்திரண்டாப்பா. 

பா: அப்படியே சேர்ரோம் – அங்கே நம்போ ரகசியமாயும் தைரியமாயும் ஒத்திகெ பண்ணலாம் அல்லாரும் கொஞ்சம் கஷ்டம் எடுத்துகோங்கடாப்பா – எல்லாம் சும்மா ஜோக்காயிருக்கணும் – போய் வாங்க! 

கோ: அங்கே பெரிய அரசமரம் இருக்குதெ அங்கெ சந்திப்போம். 

பா: அப்படியே சரியாயிருந்தா சரிகெ தலெகுட்டெ! இல்லா போனா தலெமொட்டெ! [போகிறார்கள்.] 

காட்சி முடிகிறது. 


இரண்டாம் காட்சி 

இடம் – வனப்பிரதேசம். காலம்–இரவு. 

கோணாசு பத்தன் சிசுநாகன், பாதம் நாய்க்கன், புளுவன், தம்பட்டன். தர்மலிங்கன் வருகிறார்கள். 

பா: எல்லாரும் வந்தூட்டமாடா? 

கோ: சரி சரி! – இது நம்ப ஒத்திகெ பண்ண சரியான இடம். பச்சிண்ணு இருக்குதே, இந்த இஸ்தலம் தான் நம்ப நாடவமேடே – இந்த மூங்கில் பொதார், நம்ப வேஷம் போட்டுகிற இடம்-ராஜா எதிர்லே எப்படி ஆடு வோமோ அப்படியே ஆடிப்பாக்கலாம். 

பா: [கனைத்துக்கொண்டு) கோணாசு பத்தா. 

கோ: என்ன சொல்ரே அப்பா, பாதம் நாய்க்கா? 

பா: இந்த பெருமீசன் திரிசூலி நாடகத்துலே செல வெவ காரங்க இருக்குது, அது ஓரத்தருக்கும் புடிக்காது மொதல்லெ, இந்த பெருமீசன் கத்தியெ இழுக்கணும் தன்னையே கொண்ணுகிறத்துக்கு, இத்தெ பாத்து ராஜ இஸ்திரிங்கல்லா பொறுக்க மாட்டாங்க – இதுக்கு என்னா ஜவாப் சொல்ரே?  

தம்: எப்பாடி! ரொம்ப பயம்! அது கூடவே கூடாது.

தர்: மத்ததெல்லாம் ஆடி முடிஞ்ச உடனே, அந்த கொண்ணு கிரத்தெ மாத்திரம் உட்டூடணும்.

பா: அப்படி வேண்டவே வேண்டாம் – எல்லாத்தையும் சரிப்படுத்த நானு ஒரு யுக்தி – யோசனெ, பண்ணி யிருக்கிறேன். எனக்கு ஒரு முன்ஓரெ எழுதிக் கொடுத் தூடு – அந்த முன் ஒரெ என்னா சொல்லணும் இண்ணா நாங்க கத்திங்களாலெ ஒரு கெடுதியும் செய்யரதில்ல- பெருமீசன் வாஸ்தவமா கொல்லப் படலெ – இத்தெபத்தி அவுங்களுக்கு சந்தேகமே இல்லாதிருக்கரத்துக்கு – பெருமீசனாகிய நான் பெரு மீசன் அல்ல – தரி நெய்யர பாதம் நாய்க்கன்- இண்ணு சொல்லிடணும். அதனாலே அவுங்க பய மெல்லாம் பறந்து பூடும், 

கோ: சரி, அப்படியே ஒரு முன்ஒரெ எழுதரது – இத்தெ ஒரு தருவா எழுதி வுடரது. 

பா:  வேணாம் வேணாம்–இத்தெ ஒரு விருத்தமா எழுதிபுடு.

தம்: ஆமாம் – அதெல்லாம் இருக்கட்டும் – இந்த சிங் கத்தெ பாத்து பொம்மனாட்டிங்கல்லாம் பயப்பட மாட்டாங்களா?  

தர்: அதுக்கு சந்தேகமில்லெ – எனக்கென்னமோ பயமா யிருக்குது – நான் சொல்ரனே பாருங்க. 

பா: ஆசாமிங்களே! இந்த வெவகாரத்தெ இப்பொ நண்ணா ஓசனே பண்ணணும் – அப்பப்பா! பொம்மனாட்டிங்க நடுவுலே ஒரு சிங்கத்தெ கொண்டாரது இண்ணா, அது சாதாரணமான வெவகாரம் அல்லா, ரொம்ப பயங்கரமான வெவகாரம்! இந்த ஒலகத் துலே இருக்கர பயங்கரமான பச்சி ஜாதிங்கள்ளெ யெல்லாம், உயிரோடிருக்கர சிங்கந் தான் ரொம்ப பயங்கரமானது! இத்தெ பத்தி நாம்ப ரொம்ப ஓசனெ பண்ணணும்.  

தம்: அத்தொட்டு, இன்னொரு முன்ஒரெ எழுதி, இவன் சிங்கம் அல்லா இண்ணு சொல்லிவுடணும். 

பா: தூ தூ தூ! அப்படி வேணாம்பா – அவன் இன் னாண்ணு அவன் பேரெ சொல்லிடனும்- சிங்கத்துங் கழுத்துங் கீழே அவன் மூஞ்சி பாதி தெரியணும். அவன் அந்த வழியா – இந்தப் பிரகாரம் தெரிவிக்க ணும் – “அம்மா,பாருங்களேன்!-ராஜ இஸ்திரியிங் களே! நீங்க பயப்படக் கூடாது- நடுங்கக் கூடாது. இண்ணு ஓங்களே கேட்டுகரேன் – வேண்டிக்கரேன் – நானு வாஸ்தவமான சிங்கமா இங்கெ வந்திருக்க ரேண்ணு நீங்க நெனச்சா என் உசிரே கொடுக்க ரேன் – உங்களுக்கு பதிலா – எம்பேர்லெ கொஞ்சம் தயவு பண்ணுங்க – நானு சிங்கம் கிங்கம் ஒண்ணுமல்லா – மத்தவங்களே போலே நானும் ஒரு மனுசன் தான்!, இண்ணு – அப்பறம் தான் இன்னான் இண்ணு தம் பேரே சொல்லணும் அதாவது ‘நானு தவலெ சொம்பு செப்பனிடர சிசுநாகன் இண்ணு சொல்லிடட்டும். 

கோ: சரி – அப்படியே செய்யரது- ஆனாலும் ரெண்டு கஷ் டமான சமாசாரங்க இருக்குது. நம்ப ஆடர மண்ட பத்துக்குள்ளே நெலாவெ கொண்டுவரணும்- ஏநிண்ணா பெருமீசனும் திரிசூலியும் நெலவு வெளிச்சத்துலேதான் சந்திக்கராங்க. 

தம்: நம்ப நாடவம் ஆடர நண்ணு நெலா இருக்குதா? 

பா: பஞ்சாங்கம்! பஞ்சாங்கம்! பாருங்க பஞ்சாங்கம் எடுத்து? அதுலே பாருங்க நெலா இருக்குதா இண்ணு – பாருங்க அதுலே நெலாவே. 

கோ: [பார்த்து] ஆமாம் – அண்ணைக்கி நெலா இருக்குது. 

பா: சரியாபோச்சி – அந்த மண்டபத்துலே நம்ப ஆடர் எடத்துக்கு மேலே ஒரு பெரிய ஜன்னலே தெறந்து வைச்சூட்டா போச்சி – அந்த வழியா நெலா வந்தூடுது நம்ப ஆடர எடத்துக்கு! 

கோ: அப்படியாவது செய்யலாம் – இல்லாப்போனா ஒருத்தன், ஒரு கையிலே ஒரு மொசலும், இன்னொரு கையிலே ஒரு வௌக்கையும் எடுத்துகுனு வந்து இவன் நெலாவுக்கு பதிலா வந்தான் – இவன்தான் சந்திரன்! இன்ணு சொல்லிடணும்- அப்பறம் – இன் னொண்ணு கஷ்டம் இருக்குது – அந்த பெரிய மண்ட பத்திலே ஒரு மதில் செவுரு இருக்கணும் – ஏனிண்ணா – பெருமீசனும் திரிசூலியும் – நம்ப கதெ பிரகாரம்- அந்த மதில் செர்ல இருக்கர ஓட்ட வழியாதான் பேசராங்க. 

தம்: செவுத்தே நம்போ கொண்டார் முடியாது – முடி யவே முடியாது – நீ என்னாப்பா சொல்லரே பாதம் நாயக்கரே? 

பா: நம்பள்ளே யாராவது ஒருத்தன் குட்டிச்செவுரு மாதிரி வேஷம் போட்டுகணும் – அவ்வளவுதான்! அவன் கையிலே ஒரு செங்கல்லு, களிமண்ணு, சுண்ணாம்பு, என்னமானா வைச்சிகினு இருந்தா, அவனெ எல்லா ரும் குட்டிச்செவுரு இண்ணு நெனைச்சிவாங்க, அவன் ரெண்டு வெரலுங்களே இப்படி வைச்சிகினா- அந்த துவாரத்தும் வழியா பெருமீசனும் திரிசூலியும் ரகசியம் பேசராங்க. 

கோ: அப்படியான – அல்லாம் சரியாபோச்சி – வாங்க எல் லாரும் உக்காருங்க – எல்லா மவனுங்களும் ஒக்காந்து ஒத்திகெ ஆரம்பிங்க – பெருமீசா – நீ ஆரம்பி – நீ பேசி – ஆனவுடனே அந்த மூங்கல் பொதுருக்குள்ளே பூடு. ஒவ்வொருத்தரும் பேசவேண்டியது முடிஞ்சவுடனே – அதுக்குள்ள பூடனும்.- அவன் அவன் பாடம் பிரகாரம். 

பின்புறமாக குட்டிசைத்தான் வருகிறது. 

கு:  [ஒரு புறமாக] நம்முடைய அரசி படுத்துக்கொண்டு தூங்குகிற இடத்தருகில் யார் இந்த தடியாம்பிள்ளை கள் எல்லாம்! என்ன செய்கிறார்கள் இவர்களெல் லாம்? – ஓகோ! நாடகமா ஆடப்போகிறார்கள்? நான் இங்கே மறைந்திருந்து பார்க்கிரேன், சமயம் வாய்த்தால் நானும் ஒரு நாடக பாத்திரமாகச் சேர்ந்து கொள்ளுகிறேன். 

கோ: ஆரம்பி சீக்கிரம், பெருமீசா – திரிசூலி, நீ எதிரில் நில்லு. 

பா:  திரிசூலி! அழுகிய புஷ்பங்களைத் தோற்கடிக்கும்- உன்வாயினின்றும் வரும் நாறுமணமானது –  

கோ: நறுமணமானது – நறுமணமானது!  

பா:  நறு – மானமானது – என்மனதை அப்படியே மயங் கச் செய்கிறது – ஆயினும் பொறு!- அதோ ஒரு சப் தம் கேட்கிறது. இங்குதான் சற்று இரு, நான்போய் அது இன்ன தென்று பார்த்து வந்து உனக்குத்தெரி விக்கிறேன். 

[போகிறான்.] 

கு: [ஒரு புறமாக] இந்த மாதிரி பெருமீசன் வேஷம் நான் இதுவரையில் பார்த்ததேயில்லை. [மறைகிறது.) 

பு: நானு இப்பொ பேசணுமா? 

கோ: ஆமாம் – நீ பேசணும். அவன் ஏதோ ஒரு சத்தத்தெ கேட்டு, அது இன்னதுண்ணு தெரிஞ்சிகினுவர போயிருக்கரான், தெரியலெ? 

பு: (பாடுகிறான்) தேடரும் ஜோதி தெருவெலாம் பிரகாசிக்கும் காடரும் கவினுடை நாடெலாம் புகழ்ந்திடும் ஓடரும் துரகம் போன்ற உத்தம வீரனே ஈடு ஜொடே யில்லாத என்தன் புராண நாத்தா! உம்மை நான் நாய்க்கர் கோயிலில் சந்திக்கிறேன்.

கோ: நாயனார் கோயிலில்- நாய்க்கர் கோயிலல்லாடாப்பா! – அதிருக்கட்டும், இன்னொரு வரியேகூட இப்பவே சொல்லூட்டையெ என்னா? அத்தெ பெருமீசன் திரும்பிவந்து கேட்ட பிப்பாடு சொல்லணும் – எல்லாத்தையும் ஒண்ணா சேத்து ஒப்பிச்சூடரையே என்னா?- வாடாப்பா பெருமீசா! நீ வரவேண்டிய வார்த்தெ சொல்லியாச்சீ!- வா வா – கடைசி ரெண்டடி இன்னொருதரம் சொல்லப்பா நீ. 

பு: (பாடுகிறான்) 

“ஓடரும் துரகம் போன்ற உத்தம வீரனே 
ஈடு ஜொடே யில்லாத என்தன் புராணநாத்தா!
இன்னம் வரலையே – ஒரு பாட்டு பாடரேன் ஆனா- 
[பாடுகிறான்] 
“உன் மூஞ்சியைக்காண இருகண்கள் போதாதே”. 

பாதம் நாய்க்கன் கழுதை தலையுடள் வருகிறான்.

பா: இதோ வந்து விட்டேன்! இஷ்டப்படியே புராண நாயகி! 

கோ: இதென்னடா இது! – ஐஐயோ! பிசாசு! பிசாசு! – நம் பல்லாம் ஓடிப்பூடலாம் வாங்க! வாங்கடாப்பா! 

[பாதம் நாய்க்கன் தவிர மற்றவர்கள் ஓடிப் போகின்றனர்]. 

கு: நான் இவர்களைத் தொடர்கிறேன் – ஓட்டக் குதிரை போலும் வேட்டை நாய் போலும் காட்டுப் பன்றி போலும் தலையிலாக் கரடிபோலும் 

கனைத்தும் கத்தியும் 
உளைத்தும் உறுமியும் 
கல்லிலும் முள்ளிலும் 
புதரிலும் பொழிலிலும் 
விரட்டி விரட்டி புறட்டித் துறத்துகிறேன்! 

[மறைகிறது] 

பா:  ஏன் இவங்கெல்லாம் ஓடிப்போனாங்க? என்னெ பயப் படத்தரத்துக்காவ இவங்கெல்லாம் என்னமோ குட்ர யுக்தி பண்ணியிருக்காங்க! 

தம்பட்டன் மெல்ல திரும்பி வருகிறான். 

தம்: ஐயோ! பாதம் நாய்க்கரே!- என்னா இது! இப்படி மாறி பூட்டைங்களே!- இதென்னா இது! உங்க தலெ மேலே? 

பா: என் தலெமேலெ – என் தலெ இருக்குது! – உன் கழுத்துமேலெ இருக்கர கழுதெ மூஞ்சி அல்லா! 

[தம்பட்டன் ஓடிப் போகிறான்.] 

கோணாசு மெல்ல திரும்பி வருகிறான். 

கோ: ஐயோ! பாதம் நாய்க்கா! யாரோ மந்திரவாதி உன் ரூபத்தே மாத்தி உட்டான்! [ஓடிப்போகிறான்] 

பா: இந்தப் படுக்காளிப் பசங்கல்லாம் என்னெ ஏமாத்தப் பாக்கராங்க! என்னெ அசல் கழுதெ ஆக்கப் பாக்க ராங்க! நானு பயந்து பூடுவேண்ணு நினைச்சிகினு இருக்கராங்க!- இந்த எடத்தெ வுட்டு நானு நகரப் போரதில்லே, அவுங்க என்னா ஓணும்ணாலும் செய்து கட்டும் – இங்கே இப்டி ஓலாத்திகினே பாடிகினு இருக்கரேன் – அத்தெ அவுங்ககேட்டு. இதுக்கல் லாம் பயப்படமாட்டேன் இண்ணு, அவுங்களுக்குத் தெரியட்டும்!  [பாடுகிறான்] 

மயில்கள் பாடட்டும், குயில்கள் ஆடட்டும்
மான்கள் வாடட்டும், மலர்கள் ஓடட்டும்
ஒயிலாக நடந்துமே, ஒழுங்காய் கை வீசியே
உத்தமியே உன்னிடம், ஓடிநான் வருவேனே. 
[படுத்து உறங்கி விடுகிறான்.] 

குட்டிசைத்தான் மறுபடி வருகிறது. 

கு: இத் தலையை எடுத்துவிட்டு, இவனை எழுப்பிவிட்டு, நாம் புறப்பட்டு விடுவோம். (அங்ஙனமே செய்கிறது]

பா: [கண் விழித்து] என் பாகம் வரும்போது சொல்லுங் கப்பா – நானு வர்ரேன் – நான் வரவேண்டிய எடம் “மிகவும் பிரியமான பெருமீசனே!” – ஐயோ ! – என்னாடா இது? – கோணாசு பத்தார் துத்தி புளுவா! -தகரக்கடெ தம்பட்டா!- தர்மலிங்கம்! – அடே என் சாமிமலே!- என்னெ இங்கே உட்டூட்டு ஓடிப் பூட்டாங்க எல்லாரும்! நான் தூங்கட்டுண்ணு!- தூக்கத்திலே நானு என்னானா அதிசயங்க பாத்தென்! நானு கனவு கண்டேனா? அத்தெ இன்னது இண்ணு சொல்ல எங்கப்பென் மவனாலேயும் முடி யாது! அத்தெ கண்ணாலே சொல்ரத்துக்கு கழுதை யாலே கூட முடியாது.நானு என்னமோ மாறி அத்தெ மனுஷனாலே சொல்லவே முடியாதிண்ணா!- நானு ஒரு – என் தலெமேலெ ஒரு – என் தலெமேலெ என்னா இருந்ததிண்ணு எந்த மடையனாலேயும் சொல்ல முடியாது! – என்ன ஆச்சரியம்! எந்த மனுஷ னும் கண்ணாலே கேட்டிருக்க மாட்டான்! காதாலெ பாத்திருக்க மாட்டான்! கையாலே நெனைக்கவே முடி யாது! மனசுனாலே தொடகூட முடியாது, அது என்னா கனவு இண்ணு! இந்த கனவெபத்தி, கோணுசு பத்தன் கிட்ட சொல்லி ஒரு பாட்டு எழுதச் சொல்ரேன் – “பாதம் நாய்க்கன் கனவு பாட்டு”  – அதுக்கு, ண்ணு பேர் வைக்கரேன்; நாடகத்துங் கடைசி யிலே இத்தெ பாடரேன் — ராஜாவுக்கு எதிர்லெ அயன் ஸ்திரிபார்ட் எறந்து போனவுடனே நானு இத்தெ பாடனா. ரொம்ப சரியா யிருக்கும் – சொகுசா – யிருக்கும்! – ஷோக்காயிருக்கும்! – [போகிறான்.] 

காட்சி முடிகிறது. 


நான்காவது காட்சி 

இடம் — கோணாசுபத்தன் வீடு. 

கோணாசு,புளுவன், தம்பட்டன், தர்மலிங்கன் வருகிறார்கள். 

கோ: பாதம் நாய்க்கன் வூட்டுக்கு ஆளெ அனுப்பிச்சையா? அவன் திரும்பி வூட்டுக்கு வந்தூட்டானா? 

தர்: அவன் சேதியே ஒண்ணும் தெரியலே, அவன் என்னமோ மாயமா பூட்டான், சந்தேகமில்லெ. 

பு: அவன் வராமெபோனா நாடகம் தீந்துது!- நடத்தவே முடியாது! – முடியுமா அப்பா? 

கோ. முடியவே முடியாது! அவனெப்போலே பெருமீசன் வேஷம் கட்ட இந்த ஆஸ்தானபுரத்திலேயே ஒருத் தரும் கெடையாது. 

பு: வாஸ்தவம், தொழிலாளிங்களுக்குள்ளே அவனெப் போலே புத்திசாலி இந்த ஆஸ்தானபுரத்திலேயே கெடையாது. 

தர்: ஆமாம் – அவனெபோலே ஒடம்பு டீக்கான ஆசாமி யாரும் கெடையாது, பாட ஆரம்பிச்சாண்ணா – காவாய்தான்! 

கோ: கவாய் இண்ணு சொல்லப்பா- காவாயிண்ணா ரொம்ப தப்பான அர்த்தம். 

சிசுநாகன் வருகிறான். 

சி: அண்ணமாருங்களே! ராஜா கோயில்லேயிருந்து திரும்பி வர்ராரு. அவரோடேகூட இன்னம் ரெண்டு மூணு பேருக்குக்கூட கலியாணமாச்சி. நம்ப கூத்து மாத்திரம் நடந்திருந்தா – நம்பல்லாம் பணக்காருங் களா ஆயி இருப்போம்! 

பு: ஐயோ! பாதம் நாய்க்கா! உன் ஆயுசுவரைக்கும் தெனம் ஆறுகாசு கெடைச்சி இருக்குமே அப்பா வுனக்கு! கொறைஞ்ச பட்சம் ஆறுகாசு ஆவது கெடைச்சிருக்கும். எங்கப்பாணே நான் சொல்ரேன் – பெருமீசன் வேஷம் போடரத்துக்காக தினம் ஆறு காசு கொடுத்திருப்பாரு ராஜா! அவ்வளவு கொடுத் தாலும் அவனுக்கு தகுமப்பா! பெருமீசன் வேஷம் போடரது இண்ணா தினம் ஆறு காசுக்கு கொறைச் சலா வாங்கலாமா? 

பாதம் நாய்க்கன் வருகிறான். 

பா: எங்கேடா இந்தப் பசங்கள்ளாம்? எங்கே இந்த சினேகிதருங்கல்லாம்? 

கோ: பாதம் நாய்க்கா! பா தம் நாய்க்கா! – நம்ப அதிஷ் டமே அதிஷ்டம்! – நல்லநாளுடா நம்பளுக்கு! 

பா:  அடெ பசங்களா ! – ரொம்ப ஆச்சரியமான சமாசாரம் ஒங்களுக்கெல்லாம் நானு சொல்லவேண்டிய திருக் குது! – ஆனா அது இன்னாதுண்ணு என்னெகேக்கா தைங்க! இப்பொ சொல்லவேமாட்டேன் எங்கப் பாணே!- நானு நடந்ததெல்லாம் அப்படியே சொல்லி கினு வர்ரேன் கேளுங்க. 

கோ: கொஞ்ச சொல்லப்பா கேப்போம் என் ராஜா பாதம் நாய்க்கா! 

பா: இப்போ ஒரு வார்த்தையும் சொல்லமாட்டேன்- இப்போ நானு ஓங்களுக்கு சொல்லப்போரதெல்லாம் – நம்ப ராஜா சாப்பிட்டாச்சி இண்ணுதான்! மின்னே உங்க வேஷ சாமான்களெ யெல்லாம் மூட்டெகட்டிங்க – தாடி மீசெங்களுக்கெல்லாம் கவு றுங்க சரியாயிருக்கட்டும், நெஜாருங்களுக் கெல்லாம் நாடா சரியாயிருக்கட்டும். எல்லாரும் அரமனெக்கி வந்து சேருங்க வுடனே- அவன் அவன் பாடத்தெ சரியா படிச்சிகினு ஏனிண்ணா- சுருக்கி சொல்லிவுட ரேன், நம்ப ராஜா நம்ப நாடகத்தெ கேக்க பிரியப் பட்டிருக்கராரு. திரிசூலிக்கு பொடவெ கிழிச்சலில் லாமே யிருக்கட்டும். சிங்க வேஷம் போட்டுக்கிறவன் நெகத்தெ வெட்டிகவாணாம் – ஏனிண்ணா நெகங்க சிங்க நெகம் போலே நீளமாயிருக்கணும் – செநேகிதருங்களே! கொஞ்சம் தயவுபண்ணி – இண்ணைக்கு மாத்தி ரம்- வெங்காயம் வெள்ளெப்பூண்டு சாப்பிடாதைங்க, நம்ப பேசரப்பொ நல்ல வாசனேவரணும்,அப்பதான் அவுங்கல்லாம் நல்லகூத்து இண்ணு சொல்லுவாங்க கப்சப்! பேசாதைங்க! இப்பொ போங்க! போங்க! அரமனைக்கி சீக்கிரம் வாங்க! வாங்க! 

[எல்லோரும் போகிறார்கள்.] 

காட்சி முடிகிறது. 


ஐந்தாம் காட்சி 

இடம் – தேசராஜன் அரண்மனை. 

தேசராஜன், ஹேமலதா, லட்சுமிசந்திரன்,ஹம்சிகா, தாமத்ரையன், ஹைரம்பி, பிலந்தரன், சேவகர்கள் வருகிறார்கள். 

தே: மணவினை முடிந்தபின், மணவிருந்தும் ஆயது; இனி நாம் மணப் பள்ளிக்குட் புகுமுன், தற் காலத்தை எவ் விதம் சந்தோஷத்துடன் கழிப்போம்? வேடிக்கை வினோதங்களை யெல்லாம் ஏற்படுத்தும் நமது மந்திரி பேராநந்த அதிகாரி பிலந்தரன்,எங்கே?இக்கடிந்து செல்லும் காலத்தைக் கழுப்பதற்கு, கதை, நாடகம், கேளிக்கை, ஏதேனும் இல்லையா? கூப்பிடு பிலந்தரரை.

பி: இதோ காத்திருக்கிறேன் மன்னர் மன்னனே. 

தே: இன்று சாயங்காலம் பொழுதினைக் கடிதினில் கழிப்ப தற்கு, என்ன வினோதம் ஏற்படுத்தி யிருக்கிறீர்? என்ன சங்கீதம்? என்ன கச்சேரி? 

பி: சித்தமாயிருக்கும் வினோதங்களின் அட்டவணை இதோ இருக்கிறது. இதைப் படித்து மஹாராஜா அவர்கள் எதை முதலில் பார்க்க விரும்புகிறார்களோ தெரிவிக்க வேண்டுகிறேன். [ஒரு கடிதத்தைக் கொடுக்கிறார்.] 

தே: [படித்துக் கொண்டே] “தேசிங்கராஜன் கதை, தம்பட் டத்துடன் தராமங்கலம் வாலிபனால் பாடப்படும்’- இது வேண்டாம், இதை என் காதலிக்கு நான் என் முன்னோர்களைப்பற்றிக் கூறிய பொழுது சொல்லி யிருக்கிறேன் – [படிக்கிறார்] “விளமர் நகரத்துக் கூட்டத் தார் வெறி யாட்டம்’- இதை நான் இந் நாட்டை ஜெயித்து பட்டம் கட்டுக் கொண்ட காலத்தில்,இள வயதிலேயே பார்த்திருக்கிறேன். (படிக்கிறார்) “ஹரிச் சந்திர நாடகம் – மயான காண்டம் – பிள்ளையை உதைக்கிற பாகம் – இது மிகவும் சோககரமானது – கலியாணச் சடங்குகள் காலத்தில் பார்க்கத் தக்கதல்ல [படிக்கிறார்] “நீண்ட சுருக்கமான காட்சி – பெருமீசன் திரிசூலியின் காதல் – சோக்கர மான சந்தோஷம்!” – சந்தோஷம் சோககரமானது! நீண்டது சுருக்கமானது!- அதாவது கொதிக்கும்படி யான பனிநீர்! ஆச்சரியமான ஆலங்கட்டி மழைநீர்! இந்த எதிர் மொழிகளின் ஒருமைப்பாட்டை நாம் எப்படி கண்டறிவது! 

பி: மஹாராஜா, இந்த நாடகத்தில் சுமார் பத்து வசனங் கள் தானிருக்கின்றன. இதைப் பார்க்கிலும் சுருக்க மான கதையை நான் கண்டதில்லை – ஆயினும் இதில் இருக்கும் இந்த பத்து வசனங்களே அதிகமானவை! ஆகவே இது அதிக நீளம்தான் – ஏனெனில், கதை முழுவதிலும் ஒரு வார்த்தையும் பொறுத்தமானதா யில்லை! ஒரு நடிகனாவது தக்கபடி யில்லை! சோக்கர மானது என்பதென்னவோ மெய்தான் – ஏனெனில், பெருமீசன் இதில் தற்கொலை செய்து கொள்ளுகிறான், அதை அவர்கள் ஒத்திகை செய்தபொழுது நான் பார்த்தபொழுது என் கண்களினின்றும் கண்ணீர் தாரை தாரையாக வந்தது! – சிரிப்பினால்! இவ்வாறு நான் ஆநந்த பாஷ்பம் என்றும் சொரிந்ததில்லை!  

தே: இதை ஆடும் நடிகர்கள் யார்?

பி: நமது ஆஸ்தான புரத்தில் வேலை செய்யும் தொழிலாளி கள். அவர்கள் இது வரையில் தங்கள் மூளைகளுக்கு வேலையே கொடுத்தவர்களல்ல – தங்களுடைய கலியா ணச் சடங்கிற்காக, அவர்கள் மூளைகளுக்கு கஷ்டம் கொடுத்திருக்கிறார்கள். 

தே: ஆனால் அதைக் கேட்போம் நாம். 

பி: மஹாராஜா, தாங்கள் பார்க்கும்படியாக அவ்வளவு உசிதமாயிராது. அதை நான் முற்றிலும் கேட்டிருக் கிறேன். அது ஒன்றுக்குமே உதவாதது – இவ்வுல கில் அவர்கள் உங்கள் மனதை ஏதோ திர்ப்தி செய்ய வேண்டுமென்று கஷ்டப்பட்டு இகை ஒத்திகை செய் திருக்கிறார்கள்.என்பதினால் மாத்திரம்,உங்கள் மனம் சந்தோஷமடைவதானால், தாங்கள் பார்க்கலாம் இதை. 

தே: நான் கட்டாயமாய் இக் கூத்தைக் கேட்கிறேன் பேதமையானது கடமையைச் செலுத்துவதானால் அதல பெருங் குற்றம் ஒன்றும் இராது- போய் அவர் களை அழைத்து வாரும் – நீங்கள் எல்லோரும் உட்காருங்கள்.  

[பிலந்திரன் போகிறார்]

ஹே: அவர்கள் ஏதோ கஷ்டப்பட்டுக் கற்றதை நாம் நகைப்பதற்காகப் காண்போம் என்பது, என் மனதிற்குப்பிடிக்கவில்லை. 

தே: என் பிரியே! நாம் அப்படி ஒன்றும் செய்வதை நீ பார்க்கமாட்டாய். 

ஹே: அவர்தான் கூறினாரே, அவர்கள் ஒன்றும் சரியாகச் செய்ய முடியாதென்று. 

தே: ஒன்றும் சரியாகச் செய்யாததற்காக நாம் அவர்களுக்கு வந்தனம் அளித்தால், அது நமது பெருங் கரு ணையை அதிகமாய்க் காட்டும். அவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டு நாம் நகைத்த போதிலும், அவர் கள் நமக்காக இவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொண்டார்களே யென்று நாம் சந்தோஷப் படுவோம்.  

பிலந்திரன் மறுபடியும் வருகிறார். 

பி: மஹாராஜா அவர்கள் பராக்! சூத்திரதாரன் வருகிறான். 

தே: வரச்சொல் விரைவில். 

கோணாசுபத்தன் சூத்திரதாரனாக வருகிறான் 

கோ: [படிக்கிறான்] 
பாலர்களாகிய நாங்கள் -ஏதோ எங்களுக்குத்தெரிந்த
தையாடிக் கட்டுகிறோம தைப்பெரியமனசு
பண்ணி நீங்கள் – ஏற்றுக்கொள்ளவேண்
டுகிறோம் – நாங்கள் ஆடும் ஆட்டத்தில் குற்றமே –
தேனுமிருந்தால் கனவான்களே நீங்கள் அன்
னப்பட்சியைப்போல் – பாலைப்பிரித்து நீரை உட்கொள் 
வீர்களென்று பிரார்த்திக்கிறோம தைப்பார்க்கநீங்
கள் வந்திருக்கிறது எங்களுக்கு மிகவும் திர்ப்தி யைத் தருகிறது நாங்கள் உடனே நாடகத்தை ஆரம் பிக்கப் போகிறோமாகையால் நீங்கள் சந்தோஷப் படுவீர் 
கள் சபையோர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன் 
நானே. 

தே: இவனுடைய உபாத்தியாயர் -சுக்குமி, ளகுதி, பிலி என்று பிரிக்கக் கற்பித்திருக்க வேண்டும். 

ல: அர்த்தத்தை அறியாது எழுத்துக்களைக் கூட்டிப் படிக்கும் பள்ளிக்கூடத்துப் பையன் போல் படித்து விட்டான். 

தே: பிறகு என்ன? 

பெருமீசன், திரிசூலி,மண்சுவர், நிலாவெளிச்சம் சிங்கம் வருகிறார்கள். 

கோ: கனவான்களே! இது என்ன காட்சி யென்று நீங்கள் ஆச்சரியப்படக் கூடும். ஆயினும் உண்மையை உரைத் திட்டால் அந்த ஆச்சரியம் போய்விடும். 

இவனை அறிய விரும்பினால் இவன் பெருமீசன் தான். கட்டழகியாகிய திரிசூலி கட்டாயமாய் இவள் தான். கல்லும் மண்ணும் கையில் வைத்திருக்கும் 

இம்மனிதன் மண் சுவர் காதலனையும் காதலியையும் கருணையின்றி பிரித்த குட்டிச்சுவர். 

இந்தக் குட்டிக் சுவரில் ஒரு துவாரமிருக்கிறது அதன் வழியாக காதலர்கள் பேசவேண்டி வருகிறது இதைக்கேட்டு நீங்கள் ஆச்சரியப்படக்கூடாது ஏனென்றால் எங்களுக்கு வேறு வழி கிடையாது. முயலையும் விளக்கையும் வைத்துக்கொண்டிருக்கும் இவன் நிலா சந்திரன் – நாயனார் சமாதியருகில் காதலர் கள் சந்திக்கச் செய்தார்கள் தந்திரம். 

இந்த பயங்கரமான மிருகம் ஒரு சிங்கம் 

அது முதலில் வந்த திரிசூலியை செய்தது பங்கம் அவள் ஓடும்பொழுது அவிழ்ந்து விழுந்தது அவள் முக்காடு அதைச் சிங்கம் வாயினால் கிழித்து செய்தது ரத்தக்காடு. பிறகு காதலனாகிய பெருமீசன் அங்கே வருகிறான். 

காதலியின் துணியில் ரத்தம் படிந்திருப்பதைக் காண்கிறான், 

உடனே வருத்தப் படுகிறான்
தன் கத்தியை உருவுகிறான். 
திடீரென்று குத்திக் கொள்கிறான்
படார் என்று கீழே விழுகிறான் 
சடார் என்று உயிர் போகிறான்! 
பிறகு மா மரத்தின் பின் ஒளிந்திருந்த மாது திரிசூலி 
சட் என்று ஓடி வந்தாள் 
பட்டென்று பிடுங்கினாள் கத்தியை 
வெட் என்று மார்பில் குத்திக்கொண்டாள்.
உடனே உயிர் போய் விடுகிறது 
கதையும் உடனே முடிவாகிறது! 

இதை இனி, சிங்கம், நெலாவெளிச்சம், மண்ணாங்கட் டிச்சுவர், காதலர்கள், இதையெல்லாம் நடித்துக் காட்டுவார்கள், உங்களுக்கெல்லாம் தெரிவிப்பார்கள்!

[சூத்திரதாரன், பெருமீசன், திரிசூலி,சிங்கம், நெலா போகின்றனர்.] 

தே: இந்த சிங்கம் ஒருவேளை பேசினாலும் பேசும் போலிருக்கிறதே! 

தா: அரசே! அதில் ஒன்றும் ஆச்சரிய மிராது. அநேகம் கழுதைகள் கத்தும் பொழுது ஒரு சிங்கம் பேசக் கூடாதா என்ன? 

மண்சுவர்: [பாடுகிறான்]
நான் தகரக்கடை தம்பட்டன்
ஜாதியில் அசல் அம்பட்டன்
தற்காலம் கதையில் மண் சுவர்
காதலர்கள் சந்திக்கும் குட்டிச் சுவர்
என் மத்தியில் இருக்கிறது ஒரு ஓட்டை
அதுதான் காதலர்கள் பேசப்பாட்டை
என்கைலிலிருப்பது மண்ணாலான செங்கல்
அதனால் நான் மண் சுவரென அறியுங்கள்
ஓட்டையின் இருபுறம் நின்று அவசியம்
காதலர்கள் பேசவேண்டியது ரகசியம்! 

தே: இதைவிட எந்த மண்ணாங்கட்டியாவது, நன்றாய்ப் பேசுமா? 

தா: ஏதோ கேட்டால் குட்டிச்சுவர் என்கிறார்களே – அக் காரணம் பற்றிதான் காதலர்கள் இங்கு வரப்போகிறார்கள் போலிருக்கிறது. 

தே: பொறுங்கள்! பெருமீசன் சுவரருகில் வருகிறான். 

பெருமீசன் குட்டிச் சுவரிடம் வருகிறான். 

பெ: வெளிச்சமில்லா இருளே – கருப்பாயிருக்கும் – பொருளே! கருப்பாயிருக்கும் பொருட்டே – கவின் பெரும் இருட்டே! 

திரிசூலி சொன்னதை மறந்தனளே! 
என்னைக் கைவிட்டுத் துறந்தனளே! 

அழகிய செங்கல் சுவரே! அழகிய மண்சுவரே! 
எங்கள் இருவர் நிலங்களுக்கும் இடையில் இருக்கும்
கற்சுவரே! உன் பிளவைக் கொஞ்சம் காட்டு – இதோ
பாடுகிறேன் ஒரு பாட்டு. 
[சுவர் இரண்டு விரல்களைக் காட்டுறது.] 

பெ: [பாடுகிறான்] 
ஹா! உனக்கு கோடி வந்தனம் 
என் இருகையால் தந்தனம் 
ஹா! என் காதலியைக் காணேனே 
மோசம் தான் போனேனே! 
மட்டி சாம்பிராணியாகிய குட்டிச்சுவரே! 
என்மதியை மயக்கிட உனக்கென்ன பவுரே! 

தே:  குட்டிச்சுவருக்கு புத்தி யிருப்பதானால், திட்டவேண்டும் திருப்பி. 

பெ: அப்படி கூடாதுங்க மஹராஜா! என்னபவுரே, என்று நான் சொன்னவுடன், திரிசூலி வரவேணுங்க இப்போ வரப்போரா பாருங்க!அவளை நான் இந்த சுவத்தின் பிளவு வழியாகப் பார்க்கப் போகிறேன்- நான் சொன்னபடியே நடக்கப் போகிறது பாருங்க! – அதோ அவள் வர்ராள்! (திரிசூலி வருகிறாள்.) 

தி: சுவரே! சுவரே! குட்டிச்சுவரே! மண்ணாங்கட்டிச் சுவரே! என்காதலனிடமிருந்து விண்டு. உன்னை நான் கட்டிக் கொண்டு, எத்தனைமுறை அழுவேனோ, என்னை நீ அறியாயோ! கல்லாலும் மண்ணாங்கட்டி யாலும் கட்டப்பட்ட உன்னை – என்கனி வாயால் எத் தனை முறை முத்த மிட்டிருக்கிறேன் பின்னை! 

பெ:  ஒரு இனியகுரல் என் கண்ணிற்படுகிறது
ஓட்டையருகில் ஓடிப்பார்க்கிறேன்.
என்காதலியின் கருவிழிகள் – என்காதில்
படுகிறவாவென்று நாடிப் பார்க்கிறேன், திரிசூலி! 

தி: நீர்தான் என் காதலன் என்று நான் நினைக்கிறேன்.  

பெ: ஆம் நான் உன் காதலனே! நீ என்ன நினைத்த போதி லும் அரைச்சந்திரன் பொய் பேச மாட்டான் வாதிலும்! 

தி: அப்படியே நான் உன் சந்திரமதி 
அடி யாளைக் கொன்றாலும் தலைவிதி!  

பெ:  பரமசைவமாகிய நான் பார்வதியைவிட்டுப் பிரியேன்.

தி: பார்வதியாகிய நான் பரமசைவத்தை விட்டுப் பிரியேன். 

பெ: இந்தப் பிளவின் வழியாக எனக்கொரு முத்தம் தருவாயாக! 

தி:  இந்த மண்ணாங்கட்டியை முத்தம் கொடுக்கிறது என்தன் வாய் நிரம்ப களிமண் வருகிறது! 

பெ: நாயினாவின் சமாதியருகில் உடனே என்னை வந்து சேர்!

தி: உயிர் வந்தாலும் போனாலும் அப்படியே செய்கிறேன் பார்! [பெருமீசனும் திரிசூலியும் போகிறார்கள்.] 

சுவர். செவுராகிய என் வேலை முடிந்தது! ஆகவே இது வீட்டுக்கு நடந்தது! [போகிறது] 

தே: சுவர் தான் போய்விட்டதே, இனி காதலர்கள் இங் கேயே தாராளமாய்ச் சந்திக்கலாமே? 

ஹே: இதைப்பார்க்கிலும் ஆபாசமான நாடகத்தை நான் பார்த்ததேயில்லை! 

தே: இதோ இரண்டு சிரேஷ்டமான மிருகங்கள் வருகின்றன – சிங்கமும் மனிதனும்! 

சிங்கமும், நெலவும் வருகின்றன.

சி:

மாது சிரோமணிகளே
மனமிளகிய நாரீமணிகளே! 
பயங்கரமான சிறிய 
தரையினில் ஓடும் பெரிய
சுண்டெலியினைக்கண்டு 
சும்மா பயந்திடும்- சீமாட்டிகளே!
அங்கமெல்லாம் நடுங்கிட கர்ஜிக்கும்
சிங்கத்தின் சப்தத்தினைக் கேட்டு
ஒருகால் நீங்கள் பயப்படாதபடி
இதைச் சொல்கிறேன் இப்படி- 
என் மேலிருப்பது சிங்கத்தின் தலை 
இதை வாங்கினேன் கொடுத்து அதிக விலை!
சிங்கமல்ல எனக்கு அச்சன் 
நான் சிசுநாகத் தச்சன்! 
வாஸ்தவமாக வந்தால் சிங்கமாய் 
என் உயிர் உடனே போம் பங்கமாய்! 

தே:  இந்த சிங்கம் மிகவும் சாதுவான ஜந்து – பழிபாவத் திற்கு மிகவும் அஞ்சுவது! 

ல்: தைரியத்தில் இந்த அரி – நரிதான். 

தே: குள்ளநரிக்கு – உள்ள தைரிய முடையது! – அதிருக்கட்டும் – இனி நிலவு சொல்வதைக் கேட்போம். 

நெலா: இந்த விளக்கானது சந்திரபிம்பம், நான் அந்த சந்திரனைத் தாங்கும் கம்பம்.  

தே:  அப்படியானால் இவன்தான் பரமசிவம் – ஆனால் இந்த விளக்காகிய சந்திரனைத் தலையில் தரிக்கவேண்டும்- கையில் தரிக்கலாகாது. 

தா: அந்த விளக்கிலிருக்கும் மெழுகுவத்தி உருகி அவன் தலையில் விழுந்தால் என்ன செய்வான் பாவம்! 

ஹே: இந்த சந்திரனைப் பார்க்க என்மனம் பிடிக்கவில்லை – இவனைச் சீக்கிரம் போகச் சொல்லுங்கள். 

தே: அது மரியாதையாகாது அவன் பேசுவதை யெல் லாம் நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும். 

ல: அப்பா சந்திரனே! பேசு – நீ பேசவேண்டியதை யெல் லாம் சீக்கிரம்! 

நெலா: நான் பேசவேண்டிய தெல்லாம் –  இந்த விளக்கு நெலாதான் அதைப் பிடிக்கும் மனிதன் நான் 

தா:  சரியான வேலையாள்! – பொறுங்கள்! – இதோ திரி சூலி வருகிறாள். 

திரிசூலி மறுபடி வருகிறாள். 

தி: இது தான் நாயினா சமாதி!-என் பிராணநாத்! எங்கே? 

சிங்கம். ஒஒஒஒஒ 

[கர்ஜிக்கிறது-திரிசூலி ஓடிப்போய் விடுகிறாள்.] 

தா: நன்றாய்க் கர்ஜித்தது சிங்கம்! 

தே: நன்றாய் ஓடினாள் திரிசூலி! 

ஹே: நன்றாய்ப் பிரகாசித்தது நெலா!- நிலவு என்ன சந்தோஷமாய்க் காய்கிறது பருங்கள்!  
[சிங்கம் திரிசூலியின் அங்க வஸ்திரத்தைக் கிழித்தெறிந்து விட்டுப் போகிறது.] 

தே:  அழிப்பது எலியைப்போல், கிழித்தது துணியை சிங்கம்! 

தா: கிழித்துவிட்டுத் துணியை மறைத்து விட்டது சிங்கம்!  

ல்: ஆதலால் காதலன் பெருமீசன் கடிந்து வருகிறான்! 

பெருமீசன் மறுபடி வருகிறான். 

பெ: அழகிய நெலாவே! சூரியன் போன்ற உன் கிரணங் களுக்கு வந்தனம், இவ்வளவு பிரகாசமாய் பிரகாசிப்ப தற்காக நமஸ்காரம் தந்தனம். கிருபையுடன் ஜொலிக் கின்ற உன் கிரணங்களின் ஒளி, என் காதலியின் முகத்தைப் பார்க்கக் காட்டும் எனக்கு வழி. 

பொறு ! இதுவென்ன கோரம்! 
நான் காண்பதென்ன கடூரம்!
ஹா! இருதயத்திற் பாரம்!
எப்படி நேர்ந்ததிக்குரூரம்? 

ஹா! கண்ணின்மணியே – காதற்கிளியே!
உன் ஆடையானது சுத்தம்
படிந்திருக்கிறது ரத்தம்!
யமனே! நீ விரைவாய் 
என் அருகில் வருவாய்! 

என்னைக் கொன்று தின்று மென்றுவிடுவாய்!

தே: இதைப்பார்த்து, உடனே தன் ஆப்த நண்பன் மடிந்த தாக ஒருவன் கேள்விப்படுவானாயின் – அவனுக்கு துக்கம் வராமலிருக்குமா? 

ஹே: ஐயோ! பாபம்! இவனைப்பார்த்தால் எனக்கு பரிதாபமாயிருக்கிறது. 

பெ: சிவமே! இந்த சிங்கத்தை யேன் படைத்தாய்! என் காதலியைக் கொல்லவோ நினைத்தாய்! 

இவ்வளவு – இல்லை இல்லை!- இப்படிப்பட்ட அழகிய பெண்மணியை 

எந்த சென்மத்தில் 
எந்த வுலகத்தில் 
எந்த தேசத்தில் 
எந்த ஊரில் 

நான் மறுபடியும் காணப் போகிறேன்! 

கண்ணீரே! நீ சொரிவாய்! 
கத்தியே! நீ வெளிவருவாய்! 
என் மார்பிற்குள் புகுவாய்! 

ஏ ஏ! இந்தபக்கம் அல்லா – இந்தப்பக்ம்தான் இருதயம் இருக்கிறது – ஆகவே – [மறுபடியும் குத்திக்கொண்டு] 

நான் மாள்கிறேன்! 
மடிகிறேன்! 
சாகிறேன்! 

இதோ நான் என்னைக்குத்திக் கொள்கிறேன் 
இதோ நான் கொன்று கொள்கிறேன்! 
என் உயிர் போய்விட்டது! 
ஆகாயத்தில் பறந்து விட்டது! 
சுவர்க்கம் புகுந்து விட்டது! 

சூரியன் இருண்டு விட்டது சந்திரன் மருண்டு விட்டது!  [நெலா போகிறது] 

என் உயிர் போய்விட்டது!  [சாகிறான்] 

ல: ஐயோ! பவம்! எவ்வளவு கஷ்டப்பட்டு மடிந்தான்! 

தே: ஆனால் ஒரு சிட்டிகை மூக்குத்தூள் போட்டால், எழுந்து உட்கார்ந்து கொள்வான்! 

ஹே: திரிசூலி வருவதற்குள்ளாக நிலவு மறைந்து விட்டதே! அவள் எப்படி தன் காதலனைக் காண்பாள்? 

தே: நட்சத்திரங்களின் வெளிச்சத்தினால்!- இதோ வரு கிறாள் – அவளது துக்கத்துடன் நாடகத்தின் சோகம் தீரும். 

திரிசூலி மறுபடியும் வருகிறாள். 

ஹே: இப்படிப்பட்ட பெருமீசனுக்காக அவள் அவ்வளவு துக்கம் காட்டல், தகாதென்று நினைக்கிறேன்.- அவள் அழுகை சுருக்கமாயிருக்குமாக! 

தா: பெருமீசன் கெட்டிக்காரனா, திரிசூலி கெட்டிக்காரியா, என்று நம்மால் சொல்வது மிகவும் கடினமாம். இப்படிப்பட்ட ஜன்மங்களை ஈசன் சிருஷ்டித்தாரே!  

ல: தன் கடைக் கண்ணினால் அவள் தன் காதலனைக் கண்டு விட்டாள்! இனி கணமும் தாமதிக்க மாட்டாள்! 

தி: கண் உறங்குறீரா, என் காதலனே! –
மடிந்து விட்டாரா! இதென்ன பாதகமே!
எழுந்திருமே பிராண நாதா! 
உமது களி வாயால் பேசலா காதா!  

கோ: [உள்ளிருந்து] கனிவாயால்! கனிவாயால்! 

தி: உமது கருமையான அதரத்தையும்
சிவந்த கண்களையும் 
வில்லைப்போல் வளைந்திருக்கும் – மூக்கையும் – 

கோ: (உள்ளிருந்து] புருவத்தையும்! புருவத்தையும்! – 

தி: நான் எந்த ஜன்மத்தில் காணப்போகிறேன் – [திரும்பி ] அப்புறம் என்னாப்பா? 

கோ: (உள்ளிருந்து] பாட்டு!பாட்டு!-முகாரியிலெ விருத்தம். 

தி: எனக்கு தொண்டே கட்டிகினு இருக்குதப்பா. 

கோ: [உள்ளிருந்து] ஆனா வசனமா சொல்லிவுடு. 

தி:  பாதகம் என்றும் பாராமல் நீதான்
காதலனைக் கொன்றுவிட்ட கட்கமே!
ஆதலால் என் உயிரை அபகரிப்பாய்! 
சாதலுக்கு நான் சற்று மஞ்சேனே? 
(பெருமீசன் கத்தியின் உரையால் குத்திக்கொள்கிறாள்.]

தே: இப்படி சாவதற்கு ஒருவரும் அஞ்சவே வேண்டாம்.

பெ: [எழுந்து தன் கத்தியைக் கொடுத்து] இத்தாலெ குத்தி கடா தடியா! 

தி: இதோ கத்தி வருகிறது! 
நான் சாகிறது 
என் உயிர் போகிறது! (சாகிறாள்.) 

ஹே: பெருமீசன் தான் எழுந்து விட்டானே!  அவனை உடனே கலியாணம் பண்ணிக்கொள்ளக் கூடாதா பாவம்! 

தே: இனி நெலாவும் சிங்கமும் இவர்களைப் புதைக்கவேண்டும் போலும். 

தா: மண்சுவர் கூட! 

பா:  (எழுந்திருந்து] இல்லைங்க! அப்படி இல்லைங்க!- இந்த ரெண்டு குடும்பத்தையும் பிரித்த செவுரு பூட்டு துங்க இனி நாந்திபாடி – அப்பறம் மங்களம் பாடணும்.

ல: இரண்டு பெயர் இறந்ததற்காக ஒரு நாந்தியாவது பாட வெண்டாமா?  

தே: செ! நாந்தி வேண்டாம் – நீங்கள் தான் சந்தோஷமாய் மடிந்து விட்டீர்களே! இதற்கு நாந்தி என்னத்திற்கு? – 
மங்களம் பாடுங்கள் எல்லோரும்! 

[நடிகர்கள் மங்களம் பாடுகிறார்கள்.] 

காட்சி முடிகிறது. 

நாடகம் முற்றிற்று.

– மூன்று நகைச்சுவை நாடகங்கள், முதற் பதிப்பு: 1956, ப.சம்பந்த முதலியார் பி.ஏ, பி.எல்., சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *