“அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் 123****678 வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது, தயவுசெய்து உங்கள் கே-ஒய்-சி (KYC-உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) புதுப்பிக்கவும். ttps://abcdefhxjv9ikkh.web.app இணைப்பைக் கிளிக் செய்க” என்று மர்ம போன் நம்பரிலிருந்து குறுந்செய்தி (SMS) வந்தால் மிகுந்த எச்சரிக்கைத் தேவை. ஆர்வக்கோளாறால் தட்டி விட்டால் நம் பணம் ‘ஸ்வாகா’ ஆகி விடும். தினமும் நிறைய அன்பர்கள் மேலே கண்ட குறுந்செய்தி-யில் போலுள்ள லிங்க்-யை தட்டிப் பணத்தை இழந்து பரிதவிக்கிறார்கள் என்று செய்தித்தாளில் வந்துக் கொண்டிருப்பது வருத்தப்பட வேண்டியதொன்று.
வங்கிகள் RBI (ரிசர்வ் வங்கி) வகுத்துள்ள நடைமுறைகளை கவனிக்காமல் எல்லோருக்கும் ‘KYC-அப்டேட்’ என்று அவ்வப்போது வாடிக்கையாளர்களை மிரட்டுகின்றன. வாடிக்கையாளர்கள் மிரள்கிறார்கள்.
என் சொந்த அனுபவத்தில் நடந்த ஒன்றை கூறுகிறேன். என் நெருங்கிய உறவினர் அரசுத்துறை வங்கி மூலம் குடும்ப பென்ஷன் பெறுபவர். வங்கியிலிருந்து KYC புதுப்பிக்கக் கோரி இரண்டு முறை குறுந்செய்தி வந்தன. வங்கியில் அவரைப் பற்றிய சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களில் எந்த மாற்றமும் இல்லை. வங்கி வலைத்தளத்தை ஆராய்ந்தால் ஒரு தகவல் கிடைத்தது. வாடிக்கையாளரின் தகவல்கள் மாற்றமில்லை என்றால் “ஈமெயில் அல்லது SMS வழியாக நாமே RE-KYC (KYC புதுப்பித்தல்) செலுத்தலாம்” என்று தெரிய வந்தது.
அதன்படியே நானும், ஈமெயில் சமர்ப்பித்தும், அடுத்த வாரத்தில், வங்கி கிளையின் ஆபீசர் என்று ஒருவர் மொபைல் நம்பர் மூலம் தொடர்பு கொண்டு KYC சமர்ப்பிக்க கேட்டார். மொபைலில் கேட்டால் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்ற பின், அவர் வங்கி அலுவலக ஈமெயில் மூலம் கேட்டுக் கொண்டார். நாங்களும், ஆதார், பாண் நகல் இணைத்து அனுப்பி ஒரு வாரம் ஆகவில்லை. திரும்ப வங்கியிலிருந்து இன்னொரு ஆபீசர் திரும்ப KYC சமர்ப்பிக்க வேண்டினார். நாங்களும் பழைய கதையை திரும்ப ரீ-பிளே (ஒப்புவித்தல்) செய்தோம்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், பதிவிறக்கம் செய்யப்பட்ட ஈ-ஆதார் ஒரு சில ஆபீசர் ஒப்புக்கொள்வதில்லை என்பது தான். “சார், உங்க ஒரிஜினல் ஆதார் கொடுங்க” என்றே கேட்கிறார்கள்.
KYC பற்றிய RBI மாஸ்டர் சுற்றறிக்கை சொல்வது என்ன? “அதிக ரிஸ்க் (RISK) வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், நடுத்தர ரிஸ்க் வாடிக்கையாளர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், குறைந்த ரிஸ்க் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறையும் அவ்வப்போது புதுப்பித்தல் மேற்கொள்ளப்படும்“ (இணையதளத்தில் தமிழாக்கம் செய்யப்பட்டது).
பென்ஷன்தாரரின் இந்த குறிப்பிட்ட வங்கி கணக்கில் மாத பென்ஷன் வரும், காலாண்டு வட்டி வரும். அரசின் பொங்கல் போனஸ் இருக்கும். அவ்வப்போது கழித்தல்கள் உண்டு. வாழ்நாள் சான்றிதழும் தவறாமல் ஜீவன்- பிரமான் செயலி மூலம் சமர்ப்பிக்கிறார். RBI-யின் வழிகாட்டுதல் படி, இந்த பென்ஷன்தாரர், குறைந்த ரிஸ்க் வாடிக்கையாளர்.
ஆனால், வங்கிகள் நடைமுறையில் RBI-யின் மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை காற்றில் பறக்க விட்டு, மிக அதிக பணவர்த்தனை நடக்கும் கணக்குகளையும் குறைவான பணவர்த்தனை கணக்குகளையும் ஒரே மாதிரியாக கையாளுகின்றன. முதலில், வங்கிகள் RBIன் வழிகாட்டலைப் பின்பற்றி வாடிக்கையாளர்களை வகைப்படுத்த வேண்டும். குறைந்தப்பட்சம் வருடம்தோறும் வாழ்நாள் சான்றிதழ் கொடுக்கும் வாடிக்கையாளர்களை KYC என்ற கூத்திலிருந்து விடுவிப்பார்களா? வங்கிகளின் மனித ஆற்றலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் வீணாகிறது. இதில் அகப்பட்டு திண்டாடுவது நடுத்தர சாமான்ய மக்களே.
ஏமாற்று பேர்வழிகள் வங்கிகளின் இத்தகைய செயல்களை தங்களுக்கு சாதகமாக திருப்பிக் கொள்கின்றன. ஒருபுறம் ஏமாற்றுதலுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளும் வங்கிகள், தங்கள் செயல் முறைகளையும் பரிசிலிக்குமா?.
டீமேட், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவைக்கும் KYC கேட்பது முன்னமே இருக்கிறது. ஜனவரி முதல் வண்டி இன்சூரன்ஸ் கட்ட
சென்றால் KYC வேண்டும் என்கிறார்கள். நகைக் கடைகாரர்கள் வாடிக்கையாளரிடம் KYC கேட்க உத்திரவிட வேண்டும். தங்கக்கடத்தல் குறைய வாய்ப்பு உண்டு. ஒன்றே தேசம், ஒரே ஆதார், ஒரே பான் (PAN) போல் ஒருவருக்கு ஒரு பேங்க் அக்கௌன்ட், ஒரு செல்போன் நம்பர் வந்தால் நன்றாயிருக்கும்.
KYC அவசியம் தான், ஆனால், மொபைல் மூலம் லிங்க் என்பதில் தான் பிரச்சினை ஆகிறது. வேறு ஏதாவது தீர்வு உண்டா?.
போன வாரம் ஒரு அன்பர் கையில் பச்சை குத்தியிருந்தது. கவனித்துப் பார்த்தால் எல்லாமே நம்பர்கள். என்ன சார் இதெல்லாம் என்று கேட்க, ‘என்ன சார் பண்றது. ஆதார், பாண்-னு எல்லா நம்பரையும் போட்டு வச்சுட்டேன்” என்றார்.
என் வீட்டு ஓனர் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் (NRI). பத்து வருஷமா அவர் பிளாட்டில் தான் குடியிருக்கேன். போன வாரம் அவர் “என்ன சார், எல்லா இடத்திலும் KYC-ன்னு அடிபடுதே. நீங்களும் எனக்கு KYC ஒன்னு அனுப்பிடுங்களேன்” என்றார். நானும் பதிலுக்கு ‘நோ ப்ராபளம். நீங்களும் எனக்கு KYC அனுப்புங்க சார்!’ என்றேன். சரிக்கு சமம் அல்லவா.
பிரசுரமானது: 11-ஏப்ரல்-2023 MYVIKATAN.COM