கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 13,091 
 

“வாரும் தோழரே, அன்றைய உமது உதவிக்கு மிகவும் நன்றி. என்னுடைய இத்தனை காலம்வரை எனக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதேயில்லை. அன்று யாரோ ஒருவன் செத்துப்போன எதையோ என்னருகில் போட்டுப்போய்விட்டான். அதனால் அப்படியாகிவிட்டது. உம்மைப் பார்க்கும்போதே தென்னிந்தியன் என்று தெரிகிறது. அதனால் சொல்லுகிறேன். இந்திராகாந்தியை எனக்குத் தெரியும்; போனில் அவரோடு பேசியிருக்கிறேன். இந்தியா வருமாறு என்னை அழைத்தார்; பாஸ்போர்ட் இல்லை! இருந்தால் போகலாம். பாஸ்போர்ட் எடுப்பதற்குக் காசு வேண்டும்; அதைவிட இரண்டு ரொட்டி பரோட்டா சாப்பிட வேண்டும். பசிக்கிறது; ஏதாவது உதவி செய்ய முடியுமா?” என்றார் அவர் ஆங்கிலத்தில். நீண்ட போருக்குப்பின் நிலைதடுமாறி எல்லை தாண்டி எங்கோ சென்றுவிட்டிருந்த மாமன்னனொருவன் பிச்சையெடுப்பதை ஒத்திருந்தது அவரது பாவனை!

“என்ன, நம்பவில்லையா? ஸம்சயாத்மா விநச்யதி! நம்பிக்கைவையும் தோழரே. நம்பாவிட்டால் எதுவும் இல்லை. எதை நம்பவில்லை நீர், இந்திராகாந்தியையா இல்லை எனக்குப் பசிப்பதையா? இந்திரா காந்தியை நம்பு. அவர் உங்களனைவரையும் காப்பாற்றுவார். இரண்டு வெள்ளி கொடும்; என்னை நான் காப்பாற்றுவேன்!” சொல்லிவிட்டு என்னைக் கூர்ந்து பார்க்கிறார் அவர்.

கருத்த செவ்விய முகம். மலைச்சரடுகளைப் போலக் கன்னக்கதுப்புகள். கிழட்டு உதடுக்க பருத்த விதைக் கொட்டைகளையொத்த தாடைகள். சாணக்கியமா குசேத்தியமா என்றறியத்தராது முகிழ்ந்து நிரந்தரித்திருக்கும் குறுஞ்சிரிப்பு. சக்கரவாளத்தைப் பிளந்து சூரியக்கோளமாய்த் துலங்கியிருக்கும் விழிகள்.’ மென்னி தெறிக்கும் மிடறு. குறுவாளின் கூர்மைகொண்ட பேச்சு. நீண்டு வளர்ந்து சுருள்சுருளாய் அப்பிக்கிடக்கும் கொடியாய் முன்தலையிலிருந்து கிளம்பி வலதுபுறம் தழுவியிருக்கும் மயிர்வளையங்கள். கரிய குன்றாய் முகத்திலிருந்து எழும்பியிருக்கும் மூக்கு. இத்தகைய முகவரைவும் இவற்றிற்குப் பாத்தியப்படாததாய்க் குள்ள உருவமும் கட்டுடலாய் இருந்திருந்து இப்போது தளர்ந்துபோன உடலும்கொண்ட எழுபது – எண்பது வயதிருக்கும் அவரை அன்று மீண்டும் பார்த்தேன்.

சிங்கப்பூரின் ‘புகித்பாதோக்’கில் இருந்து ‘உட்லாண்ட்ஸ்’க்கு வந்து ஆறுமாதங்களில் முதன்முறையாய் மேற்குநோக்கிச் சவலைநடையை அன்றைய மாலையில் போட்டேன். கிரீச்கிரீச்சென்று இராகப்புள் இசையாடி உகளித்து என்முன்னே ஓட, தூரத்து கனத்த மழையின் சரீரத்தைச் சுமந்துவந்த சிற்றோடை சிலேடையாய் ஆலோலம் பாடி நழுவியோடிக்கொண்டிருந்தது. மேற்கில் அற்கன் வெங்கதிர்கழித்து செங்கதிரால் அஸ்தகிரிமலையைத் துழாவிக்கொண்டிருந்தான். கைப்பொழுது காணும் நேரம். மாலைவருவதாலோ என்னவோ வெட்கத்துடன் சூரியப்பிரபைகளை அணிந்து சோலைக்கும் சாலைக்குமிடையே நெகிழ்ந்துகிடந்தது தடாகம். சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் ஜோஹுருக்குச் செல்லும் அச்சாலையில் மாலையறிவித்தலைச் சொல்லிச் சர்சர்ரென்று விரைந்துகொண்டிருந்தன வாகனங்கள். இதற்கெல்லாம் பழகிய ஒரு பாம்பைப் போல வளைந்து நெளிந்து கிடந்தது சாலை.

நீர்க்கரையின் ஓரத்தில் ஓங்கி வளர்ந்திருந்த கொன்னை மரங்களில் பொங்கும் மஞ்சளாய்ப் பொன்னிறத்தில் குவியல்குவியலாய்த் தொங்கின கொன்னை மலர்கள். விரிந்தவற்றில் கருக்கருவாள்போலப் பூவின் நடுக்காம்பு வளைந்தும் குவிந்தவை பூமியை நோக்கி இறங்கியும் ஆவாரம் பூக்களை ஒத்திருந்தன அவை. வண்டுகள் முகமுகெனத்து அவற்றில் அதும்பிக் கிடந்தன. குத்துச்செடிகளாய்ச் சிறுமரங்களாய்க் குவிந்தும் பரம்பியும் நீண்டும் கிடந்த அச்சோலையின் இடதுபுறத்தில் குப்பென்று மலர்ந்திருந்த சம்பா மலர்கள் (பிராங்கிபனி) கவனத்தைக் கவர்ந்தன. சம்பாச்செடிகள் ‘ஹவாய்’ தீவுகளைப் பிறப்பிடமாய்க்கொண்டவை. செழித்துக்கிடந்த அதற்குப் பின்னே சரசரப்பு. கண்களால் ஊடுருவினேன். இயற்கையின் அரவணைப்பில் இன்ப சில்மிஷத்துடன் ஒரு ஜோடி. பெண்ணின் முகம் படர்ந்து இந்தோனேசியாவையும் ஆணின் முகம் மீசையில்லாமல் பங்களாதேசத்தையும் குறிப்புணர்த்தியன. இயற்கையைப் பிரிக்க எவரால் முடியும்? எதற்கும் இயலாத முதுமையுற்ற ஒரு மிருகத்தின் நடையைப் போலிருந்தது என் நடை. எனக்கே நகைப்புத் தட்டியது.

சில அடிகள் நகர்ந்தபின் தூரத்தில் மூன்று வாலிபர்களோ வாலிபிகளோ அமர்ந்திருந்தது தெரிந்தது. அருகில் செல்லச்செல்ல விநோதமாகப் பார்க்க முனைந்தார்கள். சீட்டுகள் கைமாறின. ஆட்டம் எனது வருகையால் தடைபடுவதாக நான் உணரும்போது ஒரு பயம் வந்தது. மெதுவாகப் பாதையை மாற்றினேன். காட்டுச்செடியைப் போல முடிகள் தலையிலிருந்து தொங்கிவழிந்தன. சவரஞ்செய்யப்படாத முகத்தில் ஒழுங்கற்ற முடிகள் முளைத்தும் கிளைத்தும் கிடந்தன. மூவரும் ஆண்களென்பதும் அருகிலே சென்ற பின்னரே தெரிந்தது. இந்தோனேசியர்களாய் இருக்கக்கூடும். கண்பாய்ச்சலில் கனற்சி கடுகடுத்தது. உள்ளங்கையிலிருந்ததை ஆட்காட்டி விரலால் சுருட்டி வாயில் திணித்துக்கொண்டார்கள். இனந்தெரியாது அங்கெழும்பிய குரோதத்தை எலும்பைக் கவ்வுவதைப் போலக் கவ்விக்கொண்டு வாலை இடுக்கிப் பம்மித் தம்மிட்டு நாய்க்குட்டி நகர்வதைப் போல நகர்ந்தேன்.

நீர்க்கரையின் ஓரத்தில் மெதுவாய் நான் நடந்துகொண்டிருந்தேன். ஈரித்த தென்னல் சிலுசிலுத்தது. தூரத்தில் விளக்குகள் எரியத்தொடங்கியிருந்தன. இன்னும் இருட்டவில்லை. முதல்நாள் இங்கு வரும்போதே இத்தனை அனுபவங்களா? அருகிலிருந்த குரங்கு ‘என் வாய்க்குள் ஏதாவது போடேன்’ என்றது. இல்லை, ‘அடேய் . . . என் வாய்க்குள் மட்டுந்தான் போடணும் புரியுதா’ என்றது. சோலையின் வடமுனையை நெருங்கிவிட்டிருந்த நேரம். மனிதவாடைகள் அருகில் இல்லை. காட்டுமரங்களுக்குள்ளும் செடிகளுக்குள்ளும் பயணப்பட்டிருந்த ஓடை சலசலத்தது. சிறிதுநேரம் அமர்ந்திருக்கலாம் எனத் தோன்றிய வேளையில்தான் அந்த வினோதச் சத்தம் எனக்குக் கேட்டது.

சிங்கப்பூரில் பூனைகள் இல்லாத இடம் ஏது? முதலில் அம்முனகல், குட்டிபோட்ட பூனை தன் குட்டிகளுடனான மியாவ்மியாவெனதாகப் பட்டது. பிறகு ஞாளியின் அல்லது நரியின் சிறு ஊளையிடுதலைப் போலிருந்தது. குளிரால் நடுங்கும் குரலைப் போன்ற லேசான அரவம் குழப்பத்தை உண்டுபண்ண எழுந்து நடக்கலாமா என யோசித்த வேளை செடிகளுக்குள்ளே அதைப் பார்த்தேன். திடுக்கிட்ட இதயத்தை ஆசுவாசப்படுத்த சிலநொடிகள் ஆயின.

உள்ளே மயங்கிய நிலையில் போர்வையோடு ஒருவர் கிடந்தார். ‘யாரது?’ என்று கேட்கலாமா என்று நினைத்தபோதும் சுற்றுமுற்றும் யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்தேன். யாரும் இல்லை. யாரும் அங்கு வருவதற்கான சூழலும் இல்லை. அந்தச் செடியை நோக்கி நடந்தேன். சில நிமிடங்கள் விக்கித்து நிற்க, நான் வந்தது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். தலையை மெதுவாக அசைத்தார். அருகில் போனேன். தலையும் உடலும் ஒருசேரத் துடித்துக்கொண்டிருந்தன. என்ன செய்வது?

நெற்றியில் கை வைத்தேன்; கொதித்தது. கொஞ்சம் தள்ளியிருந்த இந்தோனேசியர்களை உதவிக்குக் கூப்பிடலாமோ? திடுமென அவர்களது வெறுப்பலைகள் நினைவுக்குவர வேண்டாம் என்றபோதே அப்பெரியவர் எனது கையைத் தொட்டு அருகில் காண்பித்தார். அங்கே பளுப்பாய் ஏதோ ஒரு எண்ணெய், அதை எடுத்துத் தடவும்படி சைகையால் சொன்னார்; நெற்றியில் தடவினேன். சில வினாடிகளுக்குப் பிறகு பெரியவர் கொஞ்சம் ஆசுவாசமானவராய்த் தோன்றினார்.

இந்தியர்களுக்கும் பர்மியர்களுக்கும் பொதுவான முகத்தைக் கொண்டிருந்தார் அவர். குரல் நடுங்கியது. போர்வையை நண்டுக்கால்களைப் போலிருந்த விரல்கள் இறுக்கியிருந்தன.

போர்வைக்குள்ளேயே உடலைக் குறுக்கியிருந்தார். அருகில் சில பிளாஸ்டிக் பாட்டில்கள்; நசுங்கிக் கிடந்தன சாப்பாடு கட்டியிருந்த தாள்கள். பக்கத்தில் செடியினுள்ளே வளைத்து அமைக்கப்பட்டிருந்த ஒரு படுக்கை வெளியிலிருந்து எப்படிப் பார்த்தாலும் தெரியாததாய் உள்ளே அழுந்திக்கிடந்தது அவ்விடம். நீண்ட நாள் இருப்பிடத்திற்கான அறிகுறிகள் தென்பட்டன. மூக்கில் மக்கலும் மொச்சையும் கலந்து பரவின. ஏதோ ஒன்று புத்திக்குள் இடறி எழ முயலும்போது, ‘தெரிமா கஸி’ என்றார் தேய்ந்த குரலில். ‘இட்ஸ் ஓகே’ என்றவாறு எழுந்தேன். அனைத்திலும் ஒரு அவசரம் தெரிந்தது. அதுவே சங்கடமாகவும் இருந்தது. வேகவேகமாய்க் குடியிருப்பை நோக்கி நடந்தேன். அன்றிரவு நீண்ட நேரம் தூங்கவில்லை.

இதோ இன்றைய அந்திப்பொழுது அன்றைய தினத்திற்குப் பிறகு இன்று உட்லாண்ட்ஸ் நந்தவனத்தை மீண்டும் வலம்வருகிறேன். அவ்விடத்தை நெருங்க நெருங்கத் திகிலாகிறது. சுற்றுமுற்றும் யாரும் இல்லை. அங்கு ஒருவர் வசிக்கிறார் என்றால் எவரும் நம்புவது கடினம். அத்தகு அடர்ந்த வனமாய் இருக்கிறது அவ்விடம். லேசான பயத்தோடு அவ்விடத்தைக் கடக்கிறேன். உள்ளிருந்து ‘விஷ்க்விஷ்க்’ என அழைக்கும் ஒலி. நுழைவாயிலைத் தேடுகிறேன். அப்படியொன்று இருந்தால்தானே கண்ணில்படும்? இரு குத்துச்செடிகளை விலக்கிவிட்டு அவர் கைகாட்டுகிறார். அதனையொட்டிய செடிக்குள் புகுகிறேன். செடிகளுக்கிடையே முளைத்து நிற்கும் ஒரு கரும்பாறையைப் போல அங்கு நிற்கிறார் அவர்.

“இந்திராகாந்தியை உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“இந்திராகாந்தியைத் தெரியாதவர்கள் யாரும் இருப்பார்களா? ‘வானரசேனா’ தெரியுமா? உனக்கெங்க தெரிந்திருக்கப்போகிறது! அலஹாபாத்திற்கு நானும் காம்ரேட்டும் போயிருந்தோம். ஜெயிலுக்குப் போய்விட்டு வந்த பிறகு காம்ரேட் அப்போ கல்கத்தாவின் மேயராயிருந்தார். சுவராஜ் பத்திரிகையையும் நடத்தினார். ஐரோப்பா செல்லும்முன் நேருவைச் சந்தித்துவிட்டு வரத் திட்டம். நேரு வீட்டிற்கு நேரே செல்ல முடியாத சூழ்நிலை. எங்கும் ஆங்கிலப்படைகள், கழுகுகளாய்க் கண்காணிப்பில் திரிகின்றன. மாறு வேடங்களில் அவர் வீட்டிற்குள் செல்கிறோம். அப்போதுதான் இந்திரா பிரியதர்ஷினியைப் பார்த்தோம். பத்துப்பதினைந்து வயதிருக்கும். துருதுருவென்ற கண்கள். ஞான ஒளிவீசும் முகம். காம்ரேட்டிடம் சொன்னேன். இப்பெண்ணை நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று.”

தலை சுற்றியது எனக்கு. “திருமணமா? இந்திராகாந்தியையா?”

“ஆமாம். காம்ரேட் சொன்னார். நீங்கள் இப்படிச் சொல்வதால் ஏதோ ஒரு அரியகுணம் இப்பெண்ணிடம் இருப்பதாய் ஒத்துக்கொள்வேன், ஆனால் செல்வச்சீமானின் ஒரே மகள் இவர். இதை அவரிடமோ சிறியவரான இப்பெண்ணிடமோ பேசுவது இப்போதைக்குச் சரியாகாது. கவலையை விடுங்கள். இப்போது பணியைப் பார்ப்போம். ஐரோப்பா சென்றுவிட்டு வந்த பிறகு எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளலாம் என்றார்.”

“பிறகு என்னானது?”

“என்னாகும்? அவருடன் கிளம்பி, பர்மா வந்து அங்கிருந்து மலாயா வந்து பிறகு சிங்கப்புரா வந்துவிட்டேன் நான். அவர் ஐரோப்பா சென்றுவிட்டார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சிங்கப்புராவில் வைத்து ‘இந்தியன் நேஷனல் ஆர்மி’யை ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேர். பினாங்கிலிருந்து பி. கே. மேனன், கோலாலம் பூரிலிருந்து நம்பியார், ராகவன் மற்றும் ஜோஹூரிலிருந்து புத்தம்ன்னு பல தலைவர்கள்; ராஷ்பிஹாரி உணர்ச்சிப்பூர்வமாய்ப் பேசுகிறார். கேப்டன் மோகன்சிங் வழிநடத்துகிறார். கட்டுக்கடங்காத கூட்டம்; பேரர் பார்க் மைதானத்தில்! காம்ரேட் உரையாற்றுகிறார். ஒரு மனிதக்கடலே திரண்டு எழுந்துவருவதைப் போல ஆர்ப்பாட்டம்; ஜெய் ஹிண்ட்! ஜெய் ஹிண்ட்ன்னு எங்கும் தலைகள். ஆஸாத் ஹிந்த்ன்னு உயரே பறக்குற கொடிகள்; காம்ரேட் சொன்னார், நாம் ஜெயித்துவிடுவோம் என்று. அன்றுதான் நாங்கள் மிகவும் மகிழ்வாக இருந்தோம்.”

“அதற்குப் பிறகு என்னானது?”

“என்னாகும்? அன்று இரவு மட்டும் நால்வரை நான் கொலைசெய்தேன்.”

“கொலையா?”

“துறைமுகத்தில் வேலை செய்துகொண்டிருந்தான் ராஜன். நாலைந்துபேர்களுக்குத் தலைவனைப் போல இருந்தான். இந்தியன் நேஷனல் ஆர்மியைப் பற்றி ஒரு வாக்குவாதம் வந்தது. நாங்களெல்லாம் ஏன் அதில் சேர வேண்டும் என்றான். காம்ரேட்டுக்கு அருகில் நிற்பவன் நான். என்னிடமே அப்படிச் சொன்னால்?”

“உடனே கொலை செய்துவிட்டீர்களா?”

“இல்லை. அதற்குப் பின் அந்த நான்கு பேரையும் சிங்கப்புராவில் காணவில்லை என்று சொன்னார்கள்.”

“??!!”

“சரி, இந்திராகாந்தியிடம் எப்போது பேசினீர்கள்?”

“நேற்று; ராமேஷ்வரம் அருகே ஒரு பாலத்தில் போய்க்கொண்டிருந்த ரயில் கடலில் மூழ்கியதல்லவா? அதனால் அவரை அழைத்து எனது வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டேன்.”

“நேற்றா?”

“ஆமாம்.”

“இந்தியாவில் ஏதேனும் ஒரு வருத்தமான நிகழ்வு என்றால் நான் இந்திராகாந்தியிடம் மட்டுமே பேச முயல்வேன். வேறு யாரிடமும் அவ்வளவு பழக்கம் இல்லை.”

“வேறு யாரிடமும் பேசமாட்டீர் களா?”

“சிலமுறை கேப்டன் லட்சுமியுடன் பேச நினைத்தேன், தொடர்பு எண் கிடைக்கவில்லை.”

“தமிழ்நாட்டில் யாரையாவது தெரியுமா?”

“ராமசாமி நாயக்கர் மலாயா ரப்பர்த் தோட்டங்களுக்கு வந்தபோது பேசினேன். வேறு யாரையும் தெரியாது. எனக்குத் தமிழ் மொழியும் தெரியாது.”

“சிங்கப்பூர், மலேசியாவில் இருந்தும் கற்றுக்கொள்ளவில்லையா?”

“கற்றுக்கொண்டு என்னாகப் போகிறது? ராணி இருந்திருந்தால் கற்றிருக்கலாம்.”

“ராணி என்பவர் யார்?”

“இந்திராகாந்தியின் தங்கை போலவே இருப்பாள். பினாங்கில் ராமநாதச் செட்டியார் வீட்டில் அவரது குழந்தையைப் பார்த்துக்கொள்ள காரைக்குடியிலிருந்து வந்திருந்தாள்.”

“இப்போது எங்கே அவர்?”

“தெரியவில்லை. சப்பானியப் படைகள் ஆங்கிலேயப் படைகளிடம் சரணடைந்தபோது மலாயாக் காட்டுக்குள்ளே சந்தித்தோம். பிறகு தினமும் அவளைத் தேடுகிறேன். கண்டுபிடிக்க முடியவில்லை.”

“உங்களுக்குத் திருமணம் ஆகவில்லையா?”

“இல்லை. என்னைப் போன்றவர்களுக்குத் திருமணம் சரிவராது.”

“ஏன்?”

“நான் ஐ.என்.ஏவில் இருப்பவன். யோகஸ்த குரு கர்மாணிகளுக்குத் திருமணம் தேவை இல்லை. என்னுடைய காம்ரேட் அவர்களையும் நான் பார்த்துக்கொள்ள வேண்டும்.”

“யார் உங்களுடைய காம்ரேட்?”

“காம்ரேட்டைத் தெரியாத நீயெல்லாம் இந்தியன் என்று சொல்லாதே!”

“ஏன் எனக்கு அவரைத் தெரிய வேண்டும்?”

“இங்கிருந்து எழுந்து போய்விடு.” உக்கிரமான சிறுத்தையின் முகத்தைப் போலிருந்தது அவரது முகம்.

“மன்னிக்கவும். அவரை நான் பார்க்க முடியுமா?”

“முடியாது. அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்.”

“எங்கிருக்கிறார் இப்போது?”

“சொல்ல முடியாது. சீனப் படைகளுக்கும் ஆங்கிலேயப் படைகளுக்கும் நீ காட்டிக்கொடுத்துவிடலாம்.”

“இல்லை. நான் அப்படிச் செய்யமாட்டேன்.”

“சரி, நாளை வா.”

“நாளை எத்தனை மணிக்கு?”

“மாலை 5:12க்கு”

“5:12க்கா? ஏன் அந்நேரம்?”

“அதுதான் அவருக்குப் பிடித்த நேரம். அப்போதுதான் கண் திறப்பார்.”

“ஏன், அப்படி?”

“அப்படித்தான்.”

“சரி, நாளை வருகிறேன்.”

“வா, இப்போது இரண்டு வெள்ளி கொடு; இல்லாவிட்டால் பரவாயில்லை. ஐந்து, பத்தானாலும் இருப்பதைக் கொடுத்துவிட்டுப்போ. நல்ல சிக்கன் முர்தபா சாப்பிட்டு நாளாகிறது. ‘தெரிமா கஸி’; தாங்க்ஸ்.”

Print Friendly, PDF & Email

1 thought on “5:12 PM

  1. எம்.கே.குமார் அவர்களே!உங்கள் நகைச்சுவை கதையினை காலம்கடந்து இன்றுதான் படித்தேன்.கதைசொன்னவர் யார் என்று படத்ததும்புரிந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *