ஷுகர் 103 மில்லி கிராம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 43,554 
 
 

ஷுகர் 103 மில்லி கிராம்ஷுகர் 103 மில்லி கிராம்2சனிக்கிழமை என்று யார் முட்டாள்தனமாகப் பெயர் வைத்தார்கள்? சந்தோஷக்கிழமை என்று வைத்திருக்க வேண்டும். அதிலும் இந்த சென்னைக்கு வந்து, பல ‘மன்னார் அண்டு மன்னார்’ கம்ப்யூட்டர் கம்பெனி களில் வேலை பார்த்த பிறகு, சனிக்கிழமை மட்டும்தான் நமக்குக் கை, கால், மூளை தவிர்த்து மற்ற சில உறுப்பு களும் இருப்பதே தெரியும். அப்படி ஓர் இனிய சனிக்கிழமை காலைப்பொழுதில் ஏ.சி. குளிரில் போர்வைக்குள் புதைந்திருந்தபோது தான் அந்த அசம்பாவிதம்…

”என்னங்க… எந்திரிங்க… மறந்தாச்சா?” என என் சகதர்மிணி அவள் இடது காலால் என் காலை மிதித்து உசுப்ப, ”ஏண்டி… இன்னைக்கு ஒரு நாளாவது தூங்குறேனே…” என்றேன் மிதமான குரலில்.

”ம்… கிளம்புங்க. லேபுக்குப் போகணும். இன்னைக்கு மாஸ்டர் செக்கப் உங்களுக்கு.”

நிஜத்தில் போர்வையையும் கனவில் தீபிகா படுகோனையும் உதறிவிட்டு எழுந்து, ”எதுக்கு? நான் நல்லாத்தானே இருக்கேன்!” என்றேன்.

”எல்லாம் எனக்குத் தெரியும். கிளம்புங்க” என்றாள் முன் தூங்கிப் பின் எழும் என் இனிய எதிரி.

நேற்று மாண்புமிகு மாமனார் வந்து போனப்பவே நினைச்சேன், ஏதோ சதித் திட்டம் அரங்கேறுதுன்னு. காணாக் குறைக்கு இவளோட எல்.கே.ஜி. ஃப்ரெண்ட் (அதுக்கப்புறம் அவ படிச்சாளான்னே தெரியாது!) ‘சேட்டிலைட் சாரதா’ வேற வந்து போயிருக்கா. ‘சரி… ப்ளட் டெஸ்ட் தானே போய்ட்டு வந்துடலாம்’ எனக் கிளம்பினேன்.

”காரை ஸ்டார்ட் பண்ணுங்க… வர்றேன்!”

குளிக்காமல், முகத்தில் பேஸ்மென்ட் போட்டு, பட்டி பார்த்து, க்ரீம் பூசி எதை எதையோ தெளித்துக்கொண்டு அவள் வண்டியில் ஏறியபோது எனக்குக் கிறக்கமாக வந்தது.

”என்னங்க… என்னாச்சு?”

”ஒண்ணுமில்ல… வெறும் வயிறுல்ல, அதான் புரட்டுது. போற வழியில கிருஷ்ணாபவன்ல காபி குடிச்சிட்டுப் போவோமா?”

”பச்சத் தண்ணிகூடக் குடிக்கக் கூடாதுனு டாக்டர் சொல்லிஇருக்கார்.”

”எந்த டாக்டர்?”

”எங்க ஃபேமிலி டாக்டர் ரங்க சுந்தரம்.”

”யாரு? அந்த ஃபேமிலியே டாக்டர் கூட்டமா இருக்குமே… அந்த ஃபேமிலி டாக்டரா?”

”டாக்டரை அப்படில்லாம் சொல்லாதீங்க. உங்க ஃபேமிலியைவிடக் குறைச்சுதான் அவங்க கொள்ளை அடிக்கிறாங்க. போன வாரம் என் லெஃப்ட் ஐப்ரோல முடி கொட்டுதுனு அவங்களைப் பார்க்கப் போனேன். அப்ப நீங்க ஒருநாள் ‘சுச்சா’ போறப்ப கஷ்டமா இருக்குனு சொன்னீங்கள்ல… அதைப் பத்திக் கேட்டேன். எதுக்கும் ஒரு தடவை மாஸ்டர் செக்கப் பண்ணிடுங்களேன்னார்.”

அவள் காட்டிய கலர் கலரான பேப்பரில் அத்தனை பாக்ஸிலும் டிக் செய்து, அந்த டாக்டர் நூத்துக்கு நூறு வாங்க முயற்சித்திருந்தார்.

”சார் பேரு… அப்பாயின்ட்மென்ட் இருக்கா?” ரொம்ப அழகாக இருந்த அந்த இளம் வரவேற்பாளினி கேட்டாள்.

”நேத்து போன்லயே அப்பாயின்ட்மென்ட் போட்டாச்சு. தில்லை நாயகம்னு இருக்கும் பாருங்க” என்றாள் என் இனிய எதிரி.

‘சதித் திட்டம் நேற்றே அமலுக்கு வந்து விட்டதுபோல’ என்று நினைத்துக்கொண்டே, நட்சத்திர ஹோட்டல் மாதிரியான அந்தப் பரிசோதனைக் கூடத்தின் வரவேற்பறையில் உட்காரச் சென்றேன். ”சார்… நீங்க உள்ளே போகலாம்!” என அந்த வரவேற்பாளினி சொல்ல, என் மனைவியோ, ”ஏங்க… நீங்க உள்ளே போய் எல்லா டெஸ்ட்டையும் எடுங்க. நான் எதிர்த்தாப்புல இருக்குற ஹோட்டல்ல சாம்பார் இட்லி சாப்பிட்டுட்டு வந்துர்றேன்” என்று அக்கறையாகக் கிளம்பினாள்.

அதன் பிறகு நடந்தவை அனைத்தும் அடடடா… சொல்லி மாளாது. சின்னக் குப்பியில் சுமாராக அரை லிட்டர் ரத்தத்தைச் சிரித்துக்கொண்டே என் உடம்பில் இருந்து உறிஞ்சினார்கள். நான் சுதாரிக்கும் முன், ”சட்டையைக் கழட்டுங்க… எக்ஸ்ரே எடுக்கணும்” எனச் சொல்லி எக்ஸ்ரே எடுத்தார்கள். அது முடிந்ததும் ”அந்தக் கட்டில்ல மல்லாக்கப் படுங்க” என வலுக்கட்டாயமாகப் படுக்கவைத்து, ஏதோ விளக்கெண்ணெய்போல ஒன்றை வயிற்றில் தடவி, ஸ்கேன் செய்து, அப்புறம் ஈ.சி.ஜி. எடுத்து, ”வாங்க… அந்த மெஷின்ல இருக்கிற ரப்பர் பட்டையில ஏறுங்க” என்று ஏற்றி விட்டு, அதன் மேல் ஓடச் சொன்னார்கள்.

”இது டிரெட்மில்தானே?” என்று நான் அதி மேதாவிபோல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்.

”அது எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டுவிட்டு என்னை நுட்பமாகப் பார்த்தாள் நர்ஸ்.

”உடம்பைக் குறைக்கிறேன்னு சொல்லி, என் வீட்டம்மா நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என் கிரெடிட் கார்டுல இதை வாங்கியிருக்கா. இப்போ என் ஜட்டி, பனியன்லாம் அதுலதான் காயப்போடுறேன்… அவ்வளவு லேசுல மறந்துருவேனா என்ன?” என்றேன். எல்லாம் முடிந்தபோது பசி வயிற்றைக் கிள்ளியது. அப்போது பக்கத்தில் ஏதோ பழைய பீரோவை நகர்த்துவதுபோல ஒரு சத்தம் வந்தது. திரும்பிப் பார்த்தால் நாலு பிளேட் சாம்பார் இட்லியைச் சாப்பிட்டுவிட்டு, என் மனைவி சாதனா சர்ஹம் குரலில் ஏப்பம்விட்ட திகில் சத்தம் அது.

”ஏங்க… எல்லாம் முடிஞ்சுதா?”

”இன்னும் கொஞ்ச நேரமானா ‘எல்லாமே முடிஞ்சிருக்கும்’. ஏண்டி, சுச்சா போறதுக்குக் கஷ்டமா இருக்குறதுக்கு இவ்வளவு டெஸ்ட்டா? ரங்க சுந்தரம் டி.வி-யில நடுராத்திரியில் வர்ற டாக்டரா என்ன?”

”ம்ஹூம்… எங்க டாக்டர் ‘தரோவா’ செக் பண்ணாம க்ரோசின் மாத்திரைகூடக் கொடுக்க மாட்டார். டெஸ்ட் ரிசல்ட்ல ஏதாவது சிக்கல் இருந்தா, நாளைக்கு நீங்க வரணும். எதுக்கும் இருக்கட்டுமேனு நாளைக்கும் ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கேன். அது மட்டும் இல்லீங்க… எல்லாம் நல்லபடியா இருந்தா, எங்க ஊர் அம்மன் கோயிலுக்கு உங்களை அழைச்சுட்டு வந்து மண் சோறு சாப்பிடவைக்கிறதா வேண்டிஇருக்கேன்.”

”நான் சாப்பிடணுமா? நீ போய்க் கொட்டிக்க வேண்டியதுதானே. மண் சோறு சாப்பிட்டா, அருள் கிடைக்காதுடி. அமீபியாஸிஸ்தான் கிடைக்கும்!”

எனக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. நான் புலம்புவதைக் கொஞ்சமும் காதில் வாங்கிக்கொள்ளாமல், ஏ.சி. குமிழை அதிகபட்சப் புள்ளிக்குத் திருப்பிவைத்தாள். எவ்வளவு கோபம் வந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாத ஒரே ஜீவராசி, மனைவிதான்.

கல்லூரியில் கண்டிப்பாகப் பலருக்கும் வருகிற மனோவியாதியான காதல் எனக்கும் தொற்றி, காதலித்துக் கல்யாணம் செய்தவன் நான். அதோடு தொலைந்தவன்தான். அரேஞ்ச்டு மேரேஜ் என்றால்கூட ‘மேனுஃபேக்சர் டிஃபெக்ட்’ என்று சொல்லி, இரு வீட்டாரையும் அழைத்து, பஞ்சா யத்து செய்து சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடலாம். ஆனால், ஸ்டோலன் பிராப்பர்ட்டியில் அந்த ஷரத்துகள்கூடக் கிடையாதே!

மாலையே இமெயிலில் அந்த தண்டக் கருமாந்திர டெஸ்ட் ரிசல்ட் வீட்டுக்கே வந்து சேர, ரொம்பப் பெருமையாக அதை பிரின்ட் எடுத்துவைத்துக்கொண்டு மறுநாளுக்குக் காத்திருக்கத் தொடங்கினாள் என் மனைவி. எனக்கு அப்போதே ஏதோ நோய் தாக்கியதுபோல உதறத் தொடங்கியது உடம்பு. தாடிகூடக் கொஞ்சம் வேகமாக வளர்ந்ததுபோல கண்ணாடியைப் பார்த்தபோது தெரிந்தது.

”எனக்கு ஏதாச்சும் வந்திருந்தா என்னடி பண்றது? எனக்குப் பயமா இருக்கு. அந்த டாக்டரை அடுத்த வாரம் பார்க்கலாமே!”

”ஒண்ணும் பயப்படாதீங்க. அஞ்சு வருஷமா கட்டின மெடிக்கல் இன்ஷூரன்ஸ் தேமேனு கிடக்கு. பைபாஸ் சர்ஜரியில இருந்து கிட்னி டிரான்ஸ்பிளான்ட் வரைக்கும் கவர் ஆகுதாம். எது வந்தாலும் பார்த்துரலாம்” என்று முடித்தபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

”அடிப்பாவி… இன்ஷூரன்ஸ் க்ளைமை செல்லுபடியாக்க நான்தான் சோதனைச் சுண்டெலியா?”

கார்ப்பரேட் அலுவலகம்போல இருந்த அந்தக் கட்டடத்தை மருத்துவமனை என்று நம்புவதற்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ‘ஃபேமிலியே’ டாக்டர் இப்போது இன்னும் வளர்ந்திருந்தார்.

”கிரவுண்ட் ஃப்ளோர்ல நம்ம ஃபேமிலி டாக்டர். முதல் மாடில பையன் டயபடாலஜிஸ்ட், ரெண்டாவது மாடியில மருமகள் கைனகாலஜிஸ்ட்…”

”ஏன், மச்சினன் எவனும் இல்லையா?”

”இருக்காரே… கீழே கார் பார்க்கிங்ல பிசியோதெரபி க்ளினிக் பார்த்தீங்கள்ல… அது மச்சினனோடதுதான். எவ்வளவு இன்டெலிஜென்ட் ஃபேமிலி தெரியுமா?” என்று பெருமிதத்தில் அவள் முகம் பிரகாசிக்க, டாக்டர் அறை வர சரியாக இருந்தது.

”குட்மார்னிங் டாக்டர்!” என்று என் மனைவி சொல்ல,

”வாம்மா வா… எல்லா டெஸ்ட்டையும் பண்ணிட்டியா? நான் சொன்ன லேப்லதானே பண்ணினே?” என்று கேட்டுக்கொண்டே, பரிசோதனை ரிப்போர்ட்டில் தன் பெயர் இருக்கிறதா, இனிஷியல் சரியாகப் போட்டிருக்கிறானா என்றெல்லாம் பார்த்துவிட்டு, ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டபடி ஒரு மனக் கணக்குப் போட்டுக்கொண்டார்.

பின்னர் தேர்வுத் தாளைத் திருத்துவதுபோல உன்னிப்பாக ரிப்போர்ட்டைப் படிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அவர் முகம் பளீர் என மலர்ந்த அதே நொடியில், உதடுகள் மட்டும் அதீத வருத்தத்துடன் ”அச்சச்சோ!” என்று உச்சரித்தன.

இந்தச் சூழ்நிலையில் ரியாக்ட் செய்வதற்கென்றே இந்த மருத்துவர்கள் பல வருடம் விடாமல் பிராக்டீஸ் செய்வார்கள்போல!

”யாரு… இவர்தான் உங்க வீட்டுக்காரரா? ஒண்ணுக்குப் போறப்ப எரியுதுனு சொன்னியே… இவருக்குத்தானே?” என கோர்ட் குமாஸ்தா ரேஞ்சில் நின்றிருந்த என்னைப் பார்த்துக் கேட்டார்.

நான் ”யெஸ் சார்…” என்றவன், ”என்ன சார்… எல்லாம் சரியா இருக்கா?” என்றேன்.

”என்னத்த சரியா இருக்கு? ஷ§கர் ஏகத்துக்கு எகிறி நிக்குதே!”

”ஷ§கரா… எனக்கா..?” எனக்குத் தரை கால்களுக்குக் கீழே லேசாக நகர்வதுபோல் இருந்தது.

”பின்னே… பக்கத்து வீட்டுக்காரருக்கா? ஃபாஸ்ட்டிங்ல 103 இருக்கு… ஷ§கர் வந்தாச்சு!” என்று ‘ஹைய்யா… கரன்ட் வந்தாச்சு’ ரேஞ்சில் அவர் சொன்னார்.

”சார்… 110-க்கு மேலதானே ஷ§கர்… இன்னும் ஏழு பாக்கி இருக்கே..?” என்றேன்.

”ஹலோ… இங்க நீங்க டாக்டரா… இல்ல… நான் டாக்டரா? இப்பல்லாம் அந்த யூனிட்டைக் குறைச்சாச்சு. நூத்துக்கு மேல இருந்தாலே ஷ§கர் வர ஆரம்பிச்சாச்சுனு அர்த்தம். ஐ.ஜி.டி-னு பேரு. தெரியுமா?” அவர் பேனாவை ஆட்டி ஆட்டிச் சொன்னார். இப்படியெல்லாம்கூட அளவைக் குறைப்பார்களா? நான் பத்தாவது படிக்கும்போது 120 என்றார்கள். என் அப்பாவை அழைத்துச் சென்றபோது 110; இப்போ இன்னும் கீழேயா?

”சரி… இந்த மாத்திரையை ஆரம்பிங்க. சுச்சா எரிச்சலும் ஷ§கராலதான் இருக்கும். அப்படியே மேலே போய் என் பையன் டயபடாலஜிஸ்ட்… யு.கே-வுக்குப் போய் சர்க்கரை நோய்க் குப் படிச்சிட்டு வந்திருக்கான். அவன் உங்களை தரோவா செக் பண்ணி, சர்க்கரை அதிகரிக்காம இருக்க மருந்து தருவான்!” என்று சொல்லிவிட்டு… கதவைப் பார்த்து, ”நெக்ஸ்ட்…” என்றார்.

என்னது… இன்னொரு தரோவாவா? எனக்கு என்னவோ, ‘முதல்ல நாலு பேர் கும்முகும்முனு கும்முனாய்ங்க… அப்புறம் மீன்பாடி வண்டில போட்டு, இன்னொரு இடத்துக்கு அனுப்பிச்சாங்க… அங்க நாலு பேரு அடிஅடினு அடிச்சு வெளுத்துட்டு, அப்புறம் ஒரு ஆட்டோ புடிச்சு ஒரு முட்டுச் சந்துக்கு அனுப்பினாங்க’ என வடிவேலு சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

என் தீவிர யோசனையை ”தேங்க்ஸ் டாக்டர்…” என்று உற்சாகமாக வந்த என் மனைவியின் குரல் கலைத்தது.

‘இவ எதுக்கு டாக்டருக்கு தேங்க்ஸ் சொல்றா?’ என்று எனக்குள் வெறியேறும்போதே, ”பார்த்தீங்கள்ல… எங்க டாக்டர் எப்படி கரெக்ட்டாக் கண்டுபிடிச்சிட்டார்!” என்று பெருமிதப் பூரிப்பு உதிர்த்து ”வாங்க… மேல போகலாம்” என்று என்னை அழைத்துச் சென்றாள்.

”எனக்கென்னமோ பயமா இருக்குடி. எதுக்கும் செகண்ட் ஒப்பீனியன் யார்கிட்டயாவது வாங்கலாம். வேற எங்கேயாவது போவோமா?”

”அதெல்லாம் ஒண்ணும் வேணாம். எதுக்கு செகண்ட் ஒப்பீனியன்? சர்க்கரை நோய்தானே?” எனச் சொல்லி, அந்த ஜூனியர் டாக்டரிடம் சென்றாள்.

அவர் மெத்தப் படித்த மேதாவி தோற்றத்துடன் மணிரத்னம் பட ஹீரோபோல அழகாக இருந்தார். முழுதாக ஒரு வார்த்தைகூட வாய் திறந்து பேசவே இல்லை. ”ம்ம்ம்… ஹாங்…” என்று பந்தா காண்பித்துவிட்டு, மருந்துச் சீட்டில் எழுத ஆரம்பித்தார்.

”சரியாவே தூங்க மாட்டேங்கிறார் சார்!” என்று என் மனைவி இன்னொரு பிட்டைப் போட, உடனே நர்ஸை அழைத்து அடிஷனல் ஷீட் வாங்கி மருந்துகளை எழுதித் தள்ளினார். அப்புறம் ஒரு பிக் ஷாப்பர் பையில், 15 நாட்களுக்கான மருந்தை வாங்கிக்கொண்டு, நாங்கள் வீட்டுக்கு வந்தோம்.

உண்மையிலேயே அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு உருண்டு கவலையில் தோய்ந்து ஒருவழியாக அதிகாலையில் அசந்து தூங்கியபோது,

”என்னங்க… எழுந்திருங்க” என்று அதே இடது காலால் என்னைக் கிட்டத்தட்ட எத்தினாள் என் இனிய எதிரி.

”ஏண்டி… இன்னைக்கு என்ன? அதான் நேத்தே எல்லாமும் முடிஞ்சுபோச்சே!”

”இன்னைல இருந்து நீங்க வாக்கிங் போறீங்க… வாக் போயிட்டுத் திரும்பி வர்றப்ப பால் பாக்கெட் வாங்கிட்டு வந்துடுங்க. இன்னிலேர்ந்து வீட்டு வாசல்ல பால் பாக்கெட் கொண்டாந்து போட வேண்டாம்னு சொல்லிட்டேன். ஒரு கமிட்மென்ட் இருந்தாதான் நீங்க தினமும் வாக்கிங் போவீங்க… கிளம்புங்க” என்றாள்.

தெரு நாய்களில் சில என்னைப் பார்த்து முறைத்தன. சில நாய்கள் குரைத்தன. இவற்றுக்கு இடையில் புகுந்து டவுசர் போட்ட திருடன் போல ஊரைச் சுற்றிவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தால், நிலவரம் கலவரமாக இருந்தது.

”இது என்ன சிகைக்காய் பவுடர்? இன்னைக்கு நான் தலைக்குக் குளிக்கல…”

”இது மூலிகைப் பவுடர். குளிக்கிறதுக்கு இல்லை. இதை சாப்பாட்டுக்கு முன்னாடி போட்டுக்கிட்டா, பின்னாடி இன்சுலின் போட வேண்டாம். நேத்து நெட்ல படிச்சேன்!” என்றாள். பாத்திரம் கழுவும் சபீனா பவுடர் மாதிரியே இருந்த அந்தப் பொடியை ரொம்பக் கஷ்டப்பட்டு, விக்கி விழுங்க முற்பட்டபோது, உடனே குடிக்க ஒரு குவளையில் தண்ணி கொடுத்தாள். அவசரமாக அதை கபக் கபக் என்று குடித்தேன். ‘உவ்வேய்..!’ – அது தண்ணி இல்லை.

”என்ன கருமாந்திரம்டி இது?”

”ம்… இது ஆவாரை கஷாயம். இனிமே தண்ணிக்குப் பதில் இதைத்தான் நீங்க குடிக் கணும்.”

என் உலகம் ஒரே நாளில் புரட்டிப் போடப் பட்டுவிட்டது. கொள்ளு சட்னி, குதிரை வாலி இட்லி, அருகம்புல் ஜூஸ் என்று நாளும் பொழுதும் புலர… எனக்குப் பின் பக்கம் லேசாக வால் முளைத்து, கால் பாதத்தில் குளம்பு வளர்வது போல இருந்தது.

”மாப்ள… சுச்சா போறப்ப எரிச்சல் வந்தா சின்னதா ஒரு கட்டிங் போடு. அட்லீஸ்ட் ஒரு டின் பீர்கூடச் சாப்பிடாம… என்னடா நீ சாமி யாராட்டம். அடப் போடா!” என உடன் பணி புரியும் சகாக்கள் எனக்குத் தூபம் போட்டுச் சென்றனர்.

‘கூகுள்’ பண்ணினால் ஷ§கருக்குச் சரியான மருந்து சிக்காதா என்ன? இணையம் திறந்து சர்க்கரையைக் குறைப்பதற்கான வழிகளைத் தேடத் துவங்கியபோதுதான், அந்த அழைப்பு வந்தது. மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வதற்குச் சென்றிருந்த லேபில் பார்த்த வரவேற்பாளினி லைனில் வந்தாள். இவள் எதற்கு எனக்கு போன் செய்கிறாள்? பில்லில் சேர்க்க மறந்துபோன, செவன் தவுசண்டை உடனே வந்து கட்டுங்கள் என்பாளோ என்று நான் சிந்தனைகளைப் பறக்கவிட்டபோது, என் நெஞ்சில் பால் வார்க்கும் அந்தச் செய்தியைச் சொன்னாள்.

”ரொம்ப ஸாரி சார். உங்க ஷ§கர் லெவல் 97தான். 103-னு தப்பா அனுப்பிட்டோம். இப்பதான் ரீசெக் பண்ணோம்!”

மனசு றெக்கை கட்டிக்கொண்டது. என் இனிய எதிரியே… இரு வருகிறேன். இன்று இரவு மைசூர்பாகில் தேன் குழைத்து நான் சாப்பிடாவிட்டால், என் பெயரை நான் மாற்றிக்கொள்கிறேன் என்று கொக்கரித்தபடி வீட்டுக்குக் கிளம்பினேன்.

”ஹலோ மிஸ்டர் ஃபேமிலி டாக்டர்… வர்றேன்டா… கையில சரியான ரிசல்ட்டோட, அந்த பிக் ஷாப்பர் நிறைய உன் குடும்பம் கொடுத்த மருந்தை எல்லாம் உன் முன்னாடி கொட்டி பணத்தைத் திரும்பி வாங்கலை… இரு!” மனசெல்லாம் பூரிப்புடன் கணினியை ஷட் டவுன் செய்யக்கூட மறந்து கிளம்பினேன்.

அப்போது கணினித்திரை கூகுளில், ‘ஒரு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் ஃபாஸ்ட்டிங் பிளட் ஷ§கர் 95-க்கு மேல் இருந்தாலே ஆரம்ப சர்க்கரை நோய்தான்’ என்று மின்னியதை நான் சத்தியமாகப் பார்க்கவில்லை!

– ஏப்ரல் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *