ரிசப்ஷன் 2010

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 33,807 
 
 

ஆறரைக்கு ரிசப்ஷன் என்று ராமலிங்கத்தின் வி-மெயில் அறிவித்தது. ஏழரைக்கு ஏர்போர்ட்டில் ஒரு ஐகான் இருந்ததால், ஆறு பதினாலு நாற்பத்தேழுக்கே புறப்பட்டுவிட்டேன். ஹாலந்தில் இருந்து ட்யுலிப் மலர்க்கொத்து காரில் காத்திருந்தது. ராமலிங்கத்துக்குப் பிடித்த பானமான ‘மே 22’ ஒரு காஸ்க் கொள்ளை விலை கொடுத்து வாங்கி வைத்திருந்தேன். கல்யாணத்துக்குப் பொருந்தாத பரிசுப்பொருளோ என்று யோசித்தேன். வேறு என்ன கொடுப்பது?

எல்லாப் புத்தகங்களும் வலையில் உள்ளன. ராஜேஸ்வரியருகில் பார்க்கிங் இருப்பதாக ஜிபிஎஸ் சொன்னது. மாடி எண்ணை பைக் கணினி மனப்பாடம் செய்துகொண்டதற்கு அறிகுறியாக பீப்பியது. லிஃப்ட்டில் இறங்கி க-மண்டபத்தில் நுழையும்போது Aruna weds Ramalingam என்று பாலிமர் எழுத்துக்கள் பொருத்திக் கொண்டிருந்தார்கள். சீக்கிரம் வந்துவிட்டதால் மெள்ள நடந்தேன்.

மணமக்களின் மேடை காலியாக இருந்தது. ஆர்க்கெஸ்ட்ரா ஸின்தரானைச் சுருதி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரிசப்ஷன் பெண்கள் நீல ரோஜா மலர்களையும், லோ காலரி கல்கண்டையும் தட்டில் அமைத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி குஜராத்தி உடையில் சூப்பராக இருந்தாள். பழக்கதோஷத்தில் ”நீங்க ராமலிங்கத்துக்கு உறவா?” என்று கேட்டேன்.

”இல்லைங்க… நாங்க கன்ட்ரோல்ல டைனமிக்ஸ் ஹாஸ்டர்ஸ்ங்க..!”

போச்சுடா, ரோபாட்!

இப்போதெல்லாம் மனிதர்க ளுக்கும் இயந்திரங்களுக்கும் வேறுபாடே இல்லை. கன்னக்குழி கூட அப்படியே செய்கிறார்கள். உரித்துப் பார்த்தால்தான், அந்தரங்க முடி அக்ரிலிக் என்று தெரியும். ஒருமாதிரி லூபாயில் வாசனை வரும்.

அந்தப் பெண் ‘களுக்’ என்று சிரித்தாள். அதைப் பார்த்தால் கவியரசு கணிதாசன் சொன்னது போல, ”ஏமாந்த கவிஞர்கள் எழுநூறு கவிதை செய்வர்!”

ஏகதேசம் காலியாக இருந்த ஹாலில் போய் வீற்றேன்.

”ஹாய்ஸ்ஸ்ஸத்யா… என்ன இவ்வளவு சீக்கிரம்…?” என்றபடி வந்தான் ராமலிங்கம். கருநீல சூட் அணிந்து, ஸ்ப்ரே தெளித்து வாரி யிருந்தான். கல்யாணத்துக்கென்று முடியை வைக்கோல் நிறத்துக்கு மாற்றியிருந்தான். மூக்கைத் திருத் தியிருந்தான்.

”எங்கே, வாழ்க்கைப் படகில் உன்னோடு துடுப்புப் போடப் போகிற அருணா..?”

”அருணாவுக்குத்தான் காத்துக் கிட்டிருக்கேன். கமான்… வாழ்க் கைப் படகு, துடுப்பு… என்னடா ‘ரொமான்டிக்’காயிட்டிருக்கே..? நீயும் கல்யாணம் பண்ணிக்கணுமா..? அம்மாகிட்டே சொல்லவா?”

”ச்சே! ‘ராமலிங்கம் கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டானா’னு அம்மா ஆச்சரியப்பட்டுப் போயிட்டா. முதல்ல எப்ப சந்திச்சே..?”

”போன வாரம் நம்ம வெங்கி கல்யாணத்துல… லவ் அட் ஃபர்ஸ்ட் மில்லி செகண்ட்! ஒரே ரசனை, ஒரே சாப்பாடு, ஒரே கணிபாஷை எல்லாம். பிடித்த கவிஞர்கள்கூட ஒரே ஒரே… நூறாண்டு காலம் ப்ராஸ்தெட்டிக் வாழ்க்கை வாழ உத்தேசம்..! எக்ஸ்க்யூஸ் மி, அலங்காரமெல்லாம் ஆயிடுச்சுனு நினைக்கிறேன். நீ நேர்ல வர முடிஞ்சதுக்குச் சந்தோஷம். எல்லோரும் வி-மெயில்லயே நழுவறாங்க. ஒரு நிமிஷம்… அழைச்சுட்டு வந்துர்றேன்…”

மெள்ள மெள்ளக் கூட்டம் சேர ஆரம்பிக்க, ராமலிங்கம் அதில் மறைந்தான். வாசலை நோக்கி விரைந்தான். நான் அருணாவைப் பார்க்க ஆவலாகக் காத்திருந்தேன். ராமலிங்கத்தின் மனதைக் கவர்வது அத்தனை எளிதல்ல. எல்லாவற்றிலும் வித்தியாசமானவன். கணிமேதை. மேடைக்குச் செல்லும் முன், ஒரு முறை தெரிந்தான்.

கடிகாரம் ‘ஆறு நாற்பது முப்பது’ என்றது. ‘காலம் பொன்னானது’ என்று போதனை வேறு.

”ஷட் அப்..!” என்றேன்.

”ஏர்போர்ட்டில் ஏழரைக்கு இருந்தாகணும். ப்ளேன் லேட்டாவதில்லை. என் கடமை சொல்ல வேண்டியது…”

”வர வர உனக்குப் பிரசங்கம் அதிகமாகிவிட்டது. ஒரு நாள் உன் ஆக்ஸிலியரி மெமோரியை நோண்டிவிடப்போகிறேன்…”

”நஷ்டம் உனக்குத்தான்; நானூறு ஷா. இன்னும் தவணையே முடியவில்லை” என்றது.

ராமலிங்கம் நண்பர்கள் சூழ வந்தான். அவன் பின்னால் மறைந்திருந்த அருணாவைப் பார்த்தேன். கண்ணுக்கு மை தீட்டி, கன்னத்தில் சிவப்பு ஒத்தி, ஒரு வாட்டசாட்ட தேவதை போல…

வெயிட் எ மினிட்!

”அருணா… சொன்னேன் பார்த்தியா, இது என் அருமை நண்பன் சத்யா…”

நெருங்கினேன்.

”ஹாய், ஐம் அருணாசலம்!”

அவன் கைகுலுக்கல் மென்மையாக இருந்தது.

– 25-6-2000

3 thoughts on “ரிசப்ஷன் 2010

  1. ஷாக் வேல்யூ உள்ள கதை. ஒரு பாலினத் திருமண்ங்கள் இப்போது பல நாடுகளில் சாதரணமாகி விட்டதே!

  2. இக்கதை நகைச்சுவை பகுதியில் சேர்க்கப்படவேண்டியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *