ரா…ரா…சரசுக்கு ராரா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 8, 2022
பார்வையிட்டோர்: 7,100 
 
 

மூணு தடவ காலிங் பெல் அடிச்சப்புறம்தான் சொர்க்கவாசலே தொறந்தது..

ஒரு நிமிஷம் அப்படியே பேயக்கண்டவன்மாதிரி அரண்டு போய் நின்னுட்டேன்..

“ராரா..சரசுக்கு ராரா..செந்தக்கு சீறா…”

இரண்டு கையை நீட்டி அபிநயம் பிடிக்கிறாரே…இது சந்திரமுகியா ? இல்ல…சச்சு மாமியா….?

கண்ணுல மை அப்பிக் கெடந்ததது…மூக்கில புல்லுக்கு…காதுல ஜிமிக்கி…!

மறுபடியும் ரா.ரா…’

வா..வா..ன்னு உள்ள கூப்பிடறார் போல இருக்கு…

மூச்சைப்பிடிச்சிண்டு உள்ள எட்டிப்பார்த்தேன்…வேற வீட்டுக்குள்ள தெரியாம நொழஞ்சுட்டோமோ…?

அப்படியிருந்தாலும் சந்த்ரமுகி எங்கேந்து வந்தா..?

சரி..இனிமே இங்க நின்னா ஆபத்துன்னு திரும்பும்போது மீண்டும் மாமியின் குரல்..

சீக்கிரம் இங்கேருந்து தப்பிச்சாகணும்….!

“டேய்…. உமாபதி.. என்னடா பயந்துண்டு ஒடற….அது எங்கம்மா சச்சுதாண்டா…! சந்த்ரமுகியா மாறிட்டா…!

வா..வா…உள்ள வா….”

நல்லவேளை, இவனும் ரா..ரா..ன்னு கூப்பிடாம இருந்தானே….

“ஏண்டா..நாகராஜா..? இதுவா சச்சு மாமி..இது என்ன வேஷம்…?

மாடில தொங்கு தொங்குன்னு குதிக்கிற சத்தம் கேட்டுது.. பர்வதம் தான் பயந்துபோய் , ‘மேல பாட்டிக்கு என்னாச்சோ , ஏதாச்சோ ? போய்ப் பாருங்கோன்னு ‘தள்ளிவிட்டா…

நல்ல தூக்கக் கலக்கம் வேறயா…பயந்துட்டேண்டா…..சாரிடா..”

“நீ எதுக்குடா சாரி கேக்கணும்.. எம்மேல தான் தப்பு…குடிவரதுக்கு முன்னாலேயே உங்கிட்ட எங்கம்மாவப் பத்தி விவரமா சொல்லியிருக்கணும்…மறச்சது என் தப்புதான்….”

எனக்கு ஒண்ணுமே புரியல..ஏதாவது பெரிய குண்டாத் தூக்கி தலைல போடப்போறானோ…?

“உமாபதி… உங்கிட்ட கொஞ்சம் பேசணும்..நாளைக்கு பத்து மணிக்குமேல நானே உன் வீட்டுக்கு வரேனே…! அம்மாவுக்கு முன்னாடி பேச வேண்டாம்னு பாக்கறேன்….”

கதை பெரிசா இருக்கும் போல இருக்கே.!

“சரிடா..ரா… ரா…!சாரி..வா…நோ ப்ராப்ளம் “

பிரச்சனை இருக்குன்னுதானே வரான்..என்னவோ ‘ நோ ப்ராப்ளம்னு ‘ உளற்றேன் பாருங்கோ…

இப்போ கீழ போனதும் பர்வதம் பிலுபிலுன்னு பிடிச்சுப்பாளே..இப்போ சொல்றதா..இல்ல நாளைக்கு சொல்றதா..?

***

“நம்முதுன்னு சொல்லிக்க ஒரு பத்தடி நெலம் இருந்தா நம்மள யாரும் கழுத்த பிடிச்சு தள்ளமுடியாது …எத்தன தடவ சொன்னாலும் புரிய மாட்டேங்கறதே..! “

“பத்தடியா..? ஆறடின்னு சொன்னாலும் அர்த்தம் இருக்கு. !”

“உங்களவிட கம்மியா சம்பாதிக்கறவா எல்லோரும் கடனோ உடனோ வாங்கி ஐஞ்சாறு கிரவுண்டில வீடு கட்றாளே..! பையனும் துபாய்ல கைநிறைய சம்பாதிக்கிறான்..கேட்டா உதவி பண்ணமாட்டானா…? செத்தாலும் சொந்த வீட்லதான் சாகணும்…!”

“பர்வதம் நாலு கோடில வீட்டு கட்டினவன்கூட ஆஸ்பத்திரிலதான் சாகறான்..! வீட்ல பாத்து பாத்து பாத்ரூம்ல பத்து குழாய் , கிச்சனல எட்டு குழாய்னு வச்சு கட்டியவன் பாதிபேர் வாயில குழாய் , மூக்கில ட்யூப் , ஒண்ணுக்கு போக ட்யூபுன்னு ஐ.சி.யூ.ல உயிர விடறான்..! இப்பபோய் பெரிசா இழுத்து விட்டுக்கணமான்னு யோசிக்கிறேன்..”

இதெல்லாம் பர்வதம் முடிவ மாத்திடுமா என்ன?

சொன்னபடி அடையாறுல இரண்டு பெட்ரூம் ஃப்ளாட்..

ஆனா அதோட நின்னிருக்கலாம்..

இந்த அம்மாமார்களுக்கே ஒரு தனி சுபாவம்..புத்ர பாசம்…!

குழந்தைகள் எம்.பி.ஏ.., சி.ஏ. ன்னு படிச்சு பெரிய கம்பெனில கோடி கோடியாக சம்பளம் வாங்கினாலும் என்னவோ நடுத்தெருவுல நிக்கற மாதிரி , பொண்ணுக்கு ஒரு வீடு , பிள்ளைக்கு ஒரு வீடு , அதுவும் தங்க வீட்டு பக்கத்திலேயே வாங்கிப் போட்டாத்தான் நிம்மதி பெருமூச்சே வரும்…!

பையன் அன்டார்ட்டிகால இருப்பான்..என்னவோ வாராவாரம் வந்து தங்குவான்னு நெனப்பு..

எங்களுக்கு நல்ல வேளை அரவிந்த் ஒருத்தன் தான்..

அவனுக்கும் மாடில ஒரு ஃப்ளாட் வாங்கி போட்டே ஆகணும்ன்னு ஒத்தக்கால்ல நின்னு சாதிச்சுட்டாளே…

முதலதடவ கிரகப்பிரவேசத்துக்கு வந்தவன் மூணு நாள் தான் லீவுன்னு கெளம்பிட்டான்.

அடுத்த வருஷம் நேரா பெண்டாட்டி வீட்ல இறங்கிட்டான்.. மாமனாருக்கு அறுபதாம் கல்யாணம்..

இங்க வந்து ஒரே நாள் தங்கினான்..

அடுத்த வருஷம் சுலோ தம்பி பூணல்.

ஜஸ்ட் எட்டிப்பாத்தவன்தான்…

அடுத்த வருஷம் அவன் மட்டும்.. ஆஃபீஸ் மீட்டிங்.. தாஜ் ஹோட்டல்ல ரூம்..!

பூட்டின வீட்டுக்கு பெருக்கி தொடைக்க ஆள் , பெயின்டிங் , என்னென்னவோ செலவு..

அரவிந்த் சொல்லிட்டான்..

“அப்பா.இனிமே வந்தா சுலோ வீட்லயோ , இல்ல நம்மாத்திலேயோ தங்கிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்.குழந்தைகளும் வரப்போறதில்ல… எனக்கும் பசங்களுக்கு காலேஜ் செலவு , அது இதுன்னு ஏறிப்போச்சு..பேசாம மேல் ஃப்ளாட்ட வித்துடுங்கோ..இல்லையானா குடி வச்சிடுங்கோ…!”

இரண்டு மூணு குடித்தனம் வச்சு வீடு பாழானதுதான் மிச்சம்..

அப்போதான் ஆபத்பாந்தவன் மாதிரி வந்தான் நாகராஜன்…என்னோட ஆத்ம நண்பன்..பள்ளிக்கூடத்திலேயிருந்து ஒண்ணா படிச்சவன்…மகா சாது..யோக்யன்…

குடி வரும்போது சொன்னது இன்னமும் நன்னா நெனவு இருக்கு…

***

“ஹலோ.. உமாபதி இருக்கானா…?”

இப்படி பாசமா ஒருமையில கூப்பிட்டது யாரா இருக்கும்..?

“ஆமா.. உமாபதி தான் பேசறேன்…நீங்க..நீ…யாரு….?”

“டேய்.. நான் நாகராஜன்டா…நாகு…..! உன்னோட சிதம்பரம் கலைமகள் ஸ்கூல்ல பன்னிரண்டு வருஷம் ஒண்ணா படிச்ச நாகு….”

“டேய் நாகு …. உன்ன மறக்க முடியுமா…? எனக்கு இப்பவே உன்ன பாக்கணும் போல இருக்குடா. எங்க இருக்க…? “

“நான் சென்னைல தான் இருக்கேன்..உங்க வீட்டு அட்ரஸ் கூட தெரியும்..நாளைக்கு காலம்பற வரேண்டா..! உனக்கு ஓக்கேயா.?”

“என்னோட அட்ரஸ்.. உனக்கு எப்படி..?”

“எல்லாம் நேர்ல சொல்றேன்.”

***

நாகராஜன் அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் இருந்தான்..எப்போதுமே சீரான உடல்வாகு. கருப்பும் வெள்ளையும் கலந்து முடிகூட அடர்த்தியாகத்தான் இருந்தது.

நான் என் தலையைத் தடவி பார்த்துக் கொண்டேன்.ஒரு முடியாவது அகப்படுவேனா என்றது.

தொப்பையைத்தடவினால் ‘இதோ..இதோ..’ என்று முன்னால் வந்து நின்றது..

பர்வதம் மேல் கோபமாய் வந்தது.

“என்ன..? குருவி கொறிக்கறமாதிரி..? இன்னும் கொஞ்சம் உருளைக்கிழங்கு கறி வைக்கிறேன்.. வரவர நன்னாவே சாப்பிட மாட்டேங்கறேள்…”

ம்ம்ம்..இப்போ டூ லேட்…

நாகராஜனுக்கு அவசரமாய் குடியிருக்க வீடு வேணுமாம்… முன்னால் இங்க குடியிருந்த வேணுகோபாலோட சம்பந்தி இவனுக்கு க்ளோஸ் ஃப்ரண்டாம்..

நாகராஜன் மனைவி போய்ச் சேர்ந்து பத்து வருஷம் ஆச்சு… குழந்தைகள் இல்லை…

எண்பது வயசு அம்மா…

அம்மாவால ஒரு தொந்தரவு இல்ல…(!)

இப்ப இருக்கிற வீட்ட உடனே காலி பண்ண சொல்லிட்டானாம்…(?).

பர்வதம் எல்லாத்தையும் கேட்டுண்டு தான் இருந்தா…

“பாவம்…மாமி எனக்கும் ஒரு தொணையா இருப்பா…உடனே சரின்னு சொல்லுங்கோ…மேல யாராவது இருந்தா நமக்கும் சேஃப்டி தானே…!”

நாகராஜனின் அம்மா சச்சு மாமியை உடனே தனது அம்மாவாய் சுவீகரித்து கொண்டாள் பர்வதம்….

வந்து ஒரு மாசம் ஆகியிருக்கும்…

நாகராஜன் சொன்னபடி ஒரு தொந்தரவும் இல்லை…

அப்புறம்தான் திரை விலகி திரைப்படம் தொடங்கியது…

***

“பர்வதம்… நாகராஜன் சொன்னது சரிதான்..மேல யாரும் குடியிருக்கிற சத்தமே இல்லயே…. இப்போதான் எனக்கு நிம்மதியாக இருக்கு..”

“ஒண்ணு கவனிச்சேளா.. ? காலமே பத்துமணிக்கு தெனம் தெனம் அம்மாவும் பிள்ளையும் ஆட்டோல ஏறி போறா..பத்து நிமிஷத்துல உங்க ஃப்ரண்ட் மட்டும் திரும்பி வரா.
ஒரு இரண்டுமணி வாக்ல மாமி தனியா ஆட்டோல வந்து இறங்கறா…!”

“ஏதாவது கோவிலுக்கு போறாளோ என்னவோ….?”

“தெனமுமா…?”

“ஏன்? போகக்கூடாதா…? ஏதாவது வேண்டுதலா இருக்கும்….!”

“சரி அத விடுங்கோ…நாலு மணிக்கு மேல சினிமா பாட்டு… மாமிதான் பாடறா போல இருக்கு…! அத்தனையும் அந்தக் கால சிவாஜி, பத்மினி பாட்டு….!

“முல்லை மலர் மேலே…மொய்க்கும் வண்டு போலே…”

“இப்பிடியா பாடறா..கேக்க சகிக்கலயே…”

“என்ன சந்தடி சாக்கில கலாட்டா பண்ணாட்டா உங்களுக்கு தூக்கம் வராதே…!? மாமி நன்னாவே பாடறா..! அப்புறம் ஆறுமணிக்கு மேல் நடக்குற கூத்த கேளுங்கோ.. ஜல் ஜல்னு சலங்கை சத்தம்…..”

“மாமி டான்ஸும் ஆடறாளா…? சொன்னதோட நிறுத்திக்கோ….நீ வேற ஆடிக்காட்ட வேண்டாம்..

“சரி..விடு..சச்சு மாமிக்கு பொழுது போல போலருக்கு…”

“இருங்கோ ! இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு…ராத்திரி மூணு மணிக்கு ‘ டக்.டக்..னு சத்தம்.. ஒரு மணிநேரம்….”

“வயசானா தூக்கம் வராது…என்னமோ பண்ணிட்டு போறா… நமக்கு தொந்தரவு இல்லாதவரைக்கும் ஓக்கே..! டாண்ணு ஒண்ணாந்தேதி வாடகை வரது.. நமக்கு ஒரு செலவு வைக்கறதில்ல…இவாளவிட நல்ல குடித்தனக்காரா கெடைக்க மாட்டா….”

அப்போதுதான் அந்த மேற்படி ‘ ரா..ரா..’ சம்பவம்…

கொஞ்சம் கவலை பிடித்துக் கொண்டது..

சரி பார்க்கலாம்… நாகராஜன் என்னதான் சொல்லப்போறான்….?

***

“வா..நாகராஜா.. பர்வதம் நேத்து ராத்திரி பூரா தானும் தூங்காம , என்னையும் தூங்க விடல…அத்தன வம்பு வேண்டியிருக்கு.! “

“இல்ல ..உமா….எனக்கே யாருகிட்டையாவது சொல்லலேன்னா தலையே வெடிச்சுடும் போல இருக்கு…

“இருங்கோ ..சூடா ஒரு காப்பி போட்டுண்டு வரேன்.. உங்களுக்கும் தான்.முறைக்காதீங்கோ….!நான் வரதுக்குள்ள ஆரம்பிச்சுடாதீங்கோ…”

“உமா…எங்கம்மாவ சின்ன வயசுல நீங்க பாத்ததில்லையே….!”

“நாங்க எப்படிடா பாக்க முடியும்….? சொல்லு….”

“பத்மினி இவ பக்கத்துல கூட நிக்க முடியாது….!”

“சரி.. கொஞ்சம் தள்ளி நின்னா போறது….!

“எந்த பத்மினி..? சினிமா நடிகையா…?”

பர்வதத்துக்கு பொறுமையே இல்ல..

“அவளேதாண்டா….அத்தன அழகா இருப்பா.. சரியான சினிமா பைத்தியம் வேற. ! சிவாஜி , பத்மினி நடிச்ச படம்னா முதல் நாள் , முதல் ஷோ போயாகணும்..அப்பா பாவம்..ஒண்ணுமே சொல்லாம டிக்கெட் வாங்கிடுவா..!

அவ அழகுல மயங்கி தானே கல்யாணம் பண்ணிண்டா… எல்லாத்துக்கும் ‘ சரி..சரி.. தான்.”

“எப்படிடா இந்த சினிமா பைத்தியம் பிடிச்சுது…?”

“இரு.. அதுக்குதான் வரேன்..

பதினாறு, பதினேழு வயசில ஒரு தடவை யாரோ சொந்தக்கார மாமா ஒரு சிவாஜி படத்தோட ஷுட்டிங்குக்கு கூட்டிண்டு போயிருக்கா..’ ‘ திருவிளையாடல் ‘ னு நியாபகம். அப்போ சிவாஜிய நேர்ல பாத்து அப்படியே மயங்கிட்டா போல இருக்கு..அன்னிக்கின்னு பாத்து நிறைய பொண்கள் சிவாஜி நடந்து வரும்போது பூ தூவற சீன்..இவ அழகா அங்க நிக்கற பாத்த டைரக்டர், ‘இந்த பொண்ணையும் போட்டுக்கோங்க ‘ ன்னு சொல்லியிருக்கா..முன்னாடி பத்மினி வேற டான்ஸ் ஆட ரெடியா நிக்கறா…”

அன்னிக்கு பிடிச்சுது சினிமா பைத்தியம்..சிவாஜி , பத்மினி பைத்தியம்..! கல்யாணத்துக்கு ஒரே கண்டிஷன்..பத்மினி , சிவாஜி படத்துக்கு முதல் நாள் , முதல் ஷோ டிக்கெட் புக் பண்ணித்தரதா இருந்தாதான் கல்யாணம்..! அப்பா.பாவம்..வசமா மாட்டிண்டா….இப்ப நான்….”

“சச்சு மாமி நிஜமாலுமே இந்த வயசிலேயே இத்தனை அழகா இருக்காளே ! அப்போ எப்படி இருந்திருப்பா….?”

பர்வதத்துக்கு பத்மினியையே நேர்ல பாத்த சந்தோஷம்…

“அது சரி..நாகு…! காலம்பற இரண்டு பேரும் ஆட்டோல….!”

“இரு.. அதுக்குத்தான் வரேன்..தினமும் காலம்பற எட்டு மணிக்குள்ள சாப்பிட்டுட்டு , கையில மொளகாப்பொடி தடவின இட்லி , கொஞ்சம் நொறுக்கு தீனி கட்டிண்டு இவள ஒரு புது சினிமா ரீலீஸ் ஆன தியேட்டருக்கு டிக்கெட் வாங்கி உக்கார வச்சிடணும்…படம் முடிஞ்சதும் எங்க ஆட்டோக்காரன் ரெடியா இருப்பான்..நேரா கபாலி தியேட்டர்.. நிச்சயம் ஒரு பழைய படம் ஓடும்.. அங்க இறக்கி விடுவான்..அங்கேயே கொண்டு வந்தத சாப்பிட்டுட்டு , படம் முடிஞ்சதும் ஆட்டோல ஏறி வீட்டுக்கு வந்துடுவா..ஒரு டம்ளர் மோரக் குடிச்சுட்டு நாலு மணி வரைக்கும் தூக்கம்..! அப்புறம் பழைய சினிமா பாட்டு…அதுக்கப்புறம் தான் நீ பாத்த ‘ ரா..ரா..”

“என்னடா சொல்ற…?”

“ஆமாண்டா ! நன்னா மேக்கப் போட்டுண்டு ஒரு நா சந்ரமுகி , ஒரு நா அவ்வை ஷண்முகி….ஏன் கேக்கற….”

“பாவண்டா நீ.. ரொம்ப பொறுமதான்…”

“ஆமா மாமா… ராத்திரி ‘ டொக்.. டொக்…’னு சத்தம்…?”

“அதுதான் பெரிய இம்சை…மூணு மணிக்கு முழிப்பு வந்துடும்.. ஃபிரிட்ஜில இருக்கிற காயெல்லாம் எடுத்து வச்சுண்டு நறுக்க ஆரம்பிச்சுடுவா… காய்கறி வாங்கி மாளாது…

ஆறுமணிக்கு சமச்சாகணுமாம்…”

“ஏதாவது டாக்டர் கிட்ட காட்டினா என்ன…?”

“காட்டாம இருப்பேனா…! அவர் எல்லாம் டெஸ்ட் பண்ணிட்டு..,

“ஒண்ணுமே இல்ல..ஷீ இஸ் எ சூப்பர் உமன்..கவலைய விடுங்கோ.. எனக்கு இப்படி ஒரு அம்மா இல்லையேன்னு பொறாமையா இருக்கு…எத்தன பேரால இப்படி வாழ்க்கைய அனுபவிக்க முடியும்….யூ ஆர் எ லக்கி ஃபெல்லோ ‘ ங்றார்டா….”

“சரி விடு….மத்தவாளுக்கு தொந்தரவு தராம இருக்காளே….”

“நீ வேற….அது இன்னொரு கத….

உங்களுக்கு பொறும இருந்தா மீதிக் கதய கேக்கலாமா….?

***

“சனி , ஞாயிறு அம்மாவுக்கு ஹாலிடே…எனக்கு விடுதலை..ஆனா வேற விதமான தமாஷா…!

அம்மாவ பக்கத்துல இருக்கிற பார்க்குக் கொண்டு விடணும்..அங்க நிறைய குட்டிப் பசங்க சைக்கிள் விட பழகிண்டிருக்கும்..அவா கிட்ட கெஞ்சி கூத்தாடி சைக்கிள் வாங்கி நாலு ரவுண்டாவது ஒட்டணும்…இல்லைனா பக்கத்து சைக்கிள் ரிக்க்ஷாக்காரன பிடுங்கி எடுத்து எலியட்ஸ் பீச்சுல இரண்டு ரவுண்டு ஓட்டுவா…

“இதோ ! ரிக்க்ஷா மாமி வந்தாச்சுன்னு நாலு வாலு பசங்க பின்னாலேயே வரும்..எனக்கு சமயத்தில அவமானமா இருக்கும்…ஆனா திட்டினா காதுல போட்டுண்டாதானே….!”

“சாரிடா..இது கொஞ்சம் ஓவர் தான்..”

“ஒருநா வீட்டுக்காரரோட பைக்ல சாவிய மறந்து வச்சுட்டு போய்ட்டார்..அவ்வை ஷண்முகி ஸ்டைல்ல பைக்கை கெளப்பிண்டு போய்ட்டா…அவா பைக்க காணம்னு போலீஸ் கம்ளெயின்ட் வேற கொடுத்துட்டா..அப்புறமா ஒரு போலீஸ் ..

“சார்.. ஒரு மாமிய பைக்கோட பிடிச்சிருக்கோம்.. பாருங்க..உங்களோடதான்னு…”

“ஓஹோ.. இதுதான் வீட்ட காலி பண்ண காரணமா…? மனசுல நெனச்சுண்டேன்…

“உமாபதி.. பாவண்டா எங்கம்மா…மனசுல ஒண்ணும் கெடையாது… கொஞ்சம் விவரம் போறல….தயவு பண்ணி காலி பண்ண சொல்லிடாதடா…. ப்ளீஸ்டா…”

***

“பர்வதம்..உனக்கு என்ன தோணறது…மாமி இங்கேயே இருந்துட்டு போட்டுமே….!”

“அதுல என்ன சந்தேகம்..மனசுல விஷமும் உதட்டுல தேனும் வச்சுண்டு இருக்கறவா நடுவுல குழந்தமாதிரி , உள்ளையும் , வெளிலேயும் ஒரே மாதிரி இருகற மனுஷாள பாக்கறதே அபூர்வம்..அந்த டாக்டர் சொன்ன மாதிரி “ஷீ இஸ் எ சூப்பர் உமன்.உங்க நண்பர் ஒரு லக்கி மேன்….மாமி எங்கேயும் போகக் கூடாது…”

கண்களைத் துடைத்துக் கொண்டாள்..

***

ரா ரா…..
சரசக்கு ரா ரா…..
ரா ரா…..
செந்தக்கு சீறா…..
ப்ராணமே நீதிரா…..
ஏழுகோ ராதறா…..
சுவாசலோ சுவாசமை ரா ரா….

“கொஞ்சம் இருங்கோ… மாமிதான் ஆடறா…”

சச்சு மாமிதான்…! இப்போ ஒரு பயமும் இல்ல.ஒருநா போய் பாக்கணும்…. முதல் ஷோ.. முதல் வரிசைல….!

Print Friendly, PDF & Email
இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ' சரசா சூரி' எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்... நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை , வாழ்வில் எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்..பெரிய குடும்பத்தில் பிறந்ததால் உறவுகளின் பெருமை அறிந்தவள்.சிறுவயதிலேயே நான்கு சகோதரிகள் இணைந்து' ஜாங்கிரி' எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தியது மகிழ்ச்சியான அனுபவம்..என்னுடைய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *