யாரும் பார்க்காத பொழுது தெரியும் அவன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 12,086 
 

ஒருவனுக்குக் கோடி காசு இருக்கலாம்; கொஞ்சும் குழந்தை இருக்கலாம்; பிடித்தமான மனைவியோ, காதலியோ இருக்கலாம்; வாழ்க்கையில் விரும்பியது கிடைக்கலாம். ஆனால், உறக்கமற்ற இரவுக்காரனுக்கு நிம்மதி இருக்காது. தலையில் புண் வந்த மிருகம் போல அவதிப்பட வேண்டியதுதான். படுத்த பத்தாம் விநாடி குறட்டை ஒலியால் வீட்டைப் பெயர்க்கும் இவன், இன்றுதான் உறக்கமற்றுப் புரண்டான். அடிக்கடி பீரோவைத் திறந்து, அந்த பத்தாயிரம் ரூபாய் இருக்கிறதா என்று பார்த்தான். மீண்டும் முள் படுக்கையில் படுத்துக்கொண்டான்.

“தூங்காம அடிக்கடி எங்கே எழுந்து போறீங்க?” என தூக்கக் கலக்கத்திலும் மனைவி தெளிவாகக் கேட்க, வயிறு சரியில்லை என்றான். சாதாரணமாக வயிறு சரியில்லை என்றால், எல்லோரும் பாத்ரூம் போவார்கள். சிலர் வயிற்றைச் சமாதானம் செய்வதற்காக கஷாயம் போன்ற வஸ்துவைக் குடிக்கச் சமையலறைக்குச் செல்வார்கள். படுக்கை அறையில் இருக்கும் பீரோவை அடிக்கடி திறந்து பார்த்தால் வயிறு சரியாகிவிடும் என்கிற சூட்சுமத்தை அவள் இன்றுதான் கண்டாள்.

இவன், மறுநாள் காலையில் தன் கண்கள் இரண்டுக்கும் மிளகாய்ப் பொடி கலந்த சிவப்பு பெயின்ட் அடித்துக்கொண்டு எழுந்தான். வழக்கமான வேலைகள் ஓடவில்லை. சரியா தப்பா என்கிற கேள்வியே தலையைச் சுழற்றியது. பீரோவில் இருக்கும் அந்தப் பத்தாயிரத்தை நினைத்து நினைத்தே நொந்து போனான்.

விஷயம் என்னவென்றால், இவனுக்கு நேற்று சாயங்காலம் ஒரு பெட்டிக்கடையின் பக்கத்தில், ரூபாய் பத்தாயிரம் மஞ்சள் பை சகிதமாகக் கிடைத்தது. மசங்கலில் பணத்தை எடுத்ததை யாரும் பார்த்திருக்க நியாயமில்லை. பணத்தைத் தேடியும் யாரும் வரவில்லை. இப்போது சிக்கலே, அந்தப் பணத்தை என்ன செய்வது என்பதுதான். தொலைத்தவனைத் தேடிப் பிடித்துக் கொடுத்துவிடுவதா, இல்லை அமுக்கிக்கொள்வதா?

தவறிய ஒரு குழந்தையைக் கண்டெடுத்தால், அதைப் பெற்றவர்களிடம் ஒப்படைப்பது மனித குணம். அதுவே, ஒரு கோழியைக் கண்டெடுத்தால், உரியவர்களிடம் தராமல் அதைக் குழம்பு வைத்துச் சுவைப்பதும் மனித குணம்தான். ஆனால், பணத்தைக் கண்டெடுத்தால் என்ன செய்ய வேண்டும்?

இதற்குத் தீர்வு சொல்ல சரியான ஆள் பகவான்தாஸ்தான். பகவான் ஒரு விநோதப் பிறவி. வாழ்க்கையின் எல்லாப் புள்ளிகளுக்கும் ஒரு வியாக்கியானம், விளக்கம் வைத்திருப்பான். நாலு பேரை வார்த்தையால் மடக்கப் பலவும் தெரிந்துவைத்திருக்கும் பராக்கிரமன். தெரிந்த விஷயம் மட்டுமல்ல, செய்யும் தொழிலும் பலதுதான். ஆட்டோ வாங்கி ஓட்டுவான். அதை ஒரே மாதத்தில் விற்றுவிட்டு, சோப்புப் பவுடர் ஏஜென்ஸி எடுப்பான். அடுத்த மாசமே, ஆட்டுக் கால் சூப் விற்பான். நாள் முழுதும் நாயாக உழைப்பான். சாயங்காலம் சாமி கும்பிடுவான். ராத்திரியில் குவாட்டர் அடிப்பான். குடித்த பிறகு யாராவது சிக்கினால், நெத்தியடியாகத் தத்துவம் பேசுவான். பின்னர் வாந்தி எடுத்துவிட்டோ, எடுக்காமலோ தூங்குவான்.

இவன் போனபோது, பகவான் வாசற்படியில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தான். இவனைக் கண்டதும் பேப்பரை மடித்து வைத்துவிட்டு, ‘‘சொல்லு! அதிசயமா என்னைப் பார்க்க வந்திருக்கே! டீ அடிக்கிறியா? வீட்டுல ஒய்ஃப் இல்ல; போய்க் குடிப்போமா? காசு வெச்சிருக்கே இல்லே?” என்று கேட்டான். அடுத்தவன் பாக்கெட்டிலிருந்து பத்து ரூபாயைத் தனக்கென வெளியே வரவழைக்கும் வித்தை கற்ற ஞானவானான பகவானுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. வித்தியாசமாக ‘ஒய்ஃப் இல்லை’ என்கிறான்.

பணம் கண்டெடுத்ததை இவன் சொல்லவில்லை. சொன்னால் அவனுக்குப் பொறாமை வரும். பொறாமை வந்தால், பொய்யான அறிவுரை தருவான். அதனால் பேச்சை வேறு பக்கம் திருப்பி, விஷயத்துக்கு வர நினைத்தான். இருவரும் சேர்ந்து போய், கடையில் டீ குடித்தார்கள். அவனின் தற்போதைய தொழில், வரும்படி பற்றிப் பேசிவிட்டு, எதேச்சை போலக் கேட்டான்… ‘‘தாஸ், உனக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் கீழே கெடைக்குதுன்னு வெச்சுக்கோ. நீ கண்டெடுத்ததை யாரும் பார்க்கலே. தொலைச்சவன் யாருன்னும் தெரியலே. அந்தப் பத்தாயிரத்துல நீ மொத என்ன செலவு செய்வே, சொல்லு?’’

தாஸ§க்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. “பத்தாயிரமா, இவனே! மொத ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டலுக்குப் போயி நல்ல ஃபாரின் சரக்கா ஏத்திப்பேன். தினுசு தினுசா ஆர்டர் பண்ணிச் சாப்பிடுவேன். மூவாயிரம் ரூபா குளோஸ்!”. சொல்லும்போதே பகவான் கண்களில் போதை தெரிந்தது. ஒரு பேச்சுக்கே இத்தனை போதை என்றால், பத்தாயிரம் நிஜமாகக் கிடைத்திருந்தால், கிடைத்த இடத்திலேயே குடிகாரனாய்ச் சுருண்டு விழுந்திருப்பான் போல!

“மீதிக் காசை என்ன செய்வே?”

“மீதியா? நேரா கடைவீதிக்குப் போய் ஒஸ்தி டிரஸ் நாலு எடுப்பேன். சினிமா பாப்பேன். யாராவது ராத் தங்கலுக்கு வருவாங்களான்னு பாப்பேன். எப்படியும் கொஞ்சம் கையில மீதியாகும். அதுல அஞ்சு ரூபாயை தெரிஞ்ச சின்ன வயசுப் பிச்சைக்காரிக்கும், மீதியை அநாதை ஆசிரமத்துக்கும் தந்துடுவேன்.”

“சின்ன வயசுப் பிச்சைக்காரிக்கு எதுக்குக் காசு போடறேன்னு தெரியுது. அநாதை ஆசிரமத்துக்கு எதுக்குத் தருவே? அதையும் ஒரு ஒன் ஸ்டார் ஓட்டலுக்குப் போய் ஊத்திக்க வேண்டியதுதானே?’’

“அதெப்படி இவனே… அடுத்தவன் காசெடுத்து ஊத்தி ஏத்திக்கிட்ட பாவத்தை எப்படித் தொலைக்க? ஆயிரத்தை ஆசிரமத் துக்குத் தந்தா பாவம் கழுவிக்கும் இவனே… செய்யற தப்பைச் சரியா செய்யணும். பாவத்துல ஆரம்பிக்கிற வாழ்க்கை புண்ணியத்துல முடியணுங்கிறதுதான் பகவான்தாஸோட கொள்கை!” & தந்திரமான சாத்தானைப் போலப் பேசினான்.

“சரி, தாஸ்! குவாட்டர் அடிச்சு காசு மொத்தமும் செலவான பிறகு, தொலைச்சவன் வந்து அந்தக் காசைக் கேட்டா, நீ என்ன செய்வே?” & இவன் இப்படிக் கேட்டதும் பகவான்தாஸின் கற்பனை போதை பொசுக்கென்று இறங்கியது.

“ஆஹா… இன்னிக்கு உனக்கு லீவா? எனக்கு வேலை இருக்கு இவனே. பத்து வீட்டுக்கு ஊறுகாய் போடணும்!” & சொல்லிவிட்டு ஓடியவனைத் தடுத்து நிறுத்திக் கேட்டான்… ‘‘ஏழைபாழையோட காசுல குடிக்கிறது தப்பில்லையா, தாஸ்?’’

“எது தப்பு இவனே? பணத்துல எழுதியிருக்கா ஏழையோட பேரு? அந்தப் பணம் பணக்காரன் கையிலயும் இருந்திருக்கும்; ஏழை கையிலயும் இருந்திருக்கும். பணம் எப்பவும் யாரோடதும் இல்ல இவனே. தொலைச்சவன் தேம்பி அழுவான்னு நெனைச்சா தெம்பாக் குடிக்க முடியாது. இவனுங்க காசை மட்டுமா தொலைக்கிறானுங்க… வாழ்க்கையை, சந்தோஷத்தை, தன்மானத்தைனு எல்லாத்தையும்தான் தொலைக்கிறாங்க. அத்தனையும் மீட்டுட முடியுமா? அப்படிக் கிடைக்காத பொருள் தொலைஞ்சதா நெனைச்சுக்கட்டும். யோக்கியனுக்கு என்னிக்கும் சந்தோஷம் கிடைக்காது, தெரிஞ்சுக்கோ! ஆளை விடு. நான் ஊறுகாய் விக்கப் போறேன்’’ என்று அவன் போய்விட்டான்.

பகவான் தாஸ் பேசப் பேச அவனுக்கு சாத்தான் கொம்பு முட்டி வளர்ந்ததைக் கண்டான் இவன். அவன் பேச்சு அற்பத்தனமானது என்று நினைத்தான். மேலும் இவனின் சின்ன வயசு அனுபவம் வேறு பெரும் தலைவலியாக உறுத்த ஆரம்பித்தது.

அவன் அம்மா ரேஷன் அரிசி வாங்க வைத்திருந்த காசைத் தொலைத்துவிட்டு தலை விரித்துப்போட்டு நடுத்தெருவில் கத்தியபோது இவன் சிறுவன். அன்று அம்மா கத்திய பரிதாப ஓலம் இன்றும் காதில் ஊளையிடுகிறது. அது வெறும் பத்து ரூபாய்க் காசு. எடுத்த எவனும் திருப்பித் தரவே இல்லை. பத்தாயிரம் தொலைத் தவனும் இன்று அம்மா போல கதறத்தானே செய்வான்! அந்தப் பணம், பாட்டில் ரத்தம் ஏறிக்கொண்டு இருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்றத் தேவையான பணமாக இருக்கலாம். வருஷமெல்லாம் உழைத்து விளைந்ததை விற்றுக் கடனை அடைக்க ஒரு விவசாயி கொண்டு போன காசாகவும் இருக்கலாம். எப்படிப் பட்ட பணமாக இருந்தாலும், அதைச் செலவு செய்தால், அது பாவத்தின் பணமாகிவிடும். ஆனால், உள்ளே நப்பாசை நாய் வேறு விதமாகப் புத்தி சொன்னது. ஒருவேளை, அது கந்துவட்டிக்கார னுடையதாகவோ, ஒரு கோடீஸ்வரனின் அற்பக் காசாகவோ இருந்தால் செலவு செய்வதில் தப்பில்லையே?

இவன் ஒன்றும் காசுக்கு அல்லாடுபவன் இல்லை. மாசம் பத்தாயிரம் சம்பாதிக்கத்தான் செய்கிறான். ஆனால் என்ன பிரயோஜனம்? இவனுக்கென்று என்ன செலவு செய்துகொள்கிறான்?

ஒரு தடவை, பெரும் போதையில் நடுத்தெருவில் கிடந்த தாஸை எழுப்பி, “எதுக்கு தாஸ் இப்படிக் குடிச்சு உடம்பை அழிச்சுக்கிறே? ஒருத்தியக் கட்டிக்கிட்டு குடும்பம், குட்டின்னு உருப்படலாம்ல?’’ என்று யோக்கியனாக இவன் அறிவுரை சொன்னபோது, பகவான் தாஸ் திருப்பிக் கேட்டான்… ‘‘ழே இவனே! நீ மாசம் எவ்ழோ சம்பாதிப்பே? அதுல உன் சந்தோஷத்துக்குன்னு எத்தன காசு செழவழிப்ப, சொழ்ழு?”

இவன் யோசித்து, “ஏழாயிரம்” என்றான்.

“போடா கிழ்ழுக்கா! திங்கிழதும் துணி போடழதும் பொண்டாட்டி புள்ளைய வளக்கிழதும் கணக்குல வழாது. ஒழ்ழு குடி, ஒழ்ழு பீடி, ஒழ்ழு ஜோடி… உண்டா உனக்கு? உன் சந்தோஷத்துக்கு எத்தனை காசு செழவழிப்ப, அதச் சொழ்ழு?’’

இவனுக்குப் பகீர் என்றது. சொந்த சந்தோஷத்துக்குச் செய்வது எவ்வளவு செலவாகும்? பகவான் தாஸ் சொன்னது போல, ‘குடி & பீடி & ஜோடி’ பழக்கம் எதுவும் கிடையாது. எப்போதாவது ஒரு ஸ்வீட் பீடா தின்பான். அது மூணு ரூபாய். அதுதானா இவனுக்கு சொர்க்கம்?

ஒரு பேச்சுக்கு, ‘முந்நூறு ரூபாய் செலவழிப்பேன்’’ என்றான். தாஸ் வாயைக் கோணலாக வைத்துக் கொண்டு சிரித்தான். ‘‘அட கேனப் பயழே! உன் சந்தோஷம் கேவழம் முந்நூழு ழூபாய்லதானாடா இர்ருக்கு? இதுக்காடா மாடு மாதிழி ஒழைக்கிழே? அந்தக் காசை ழெண்டு நாள் பிச்சை எடுத்தா சம்பாதிக்க முடியாதாடா உன்னாழ? நான் பத்து காசு சம்பாதிச்சாலும், அது எஞ் சொந்த சொழ்க்கம்டா. நீ ஒரு சவம்டா! செத்த பொணம். எனக்கு அறிவு சொழ்ழாத. வுடு, என் வேட்டிய நானே கட்டிப்பேன். நீ போயி வாழ்ழ வழியப் பாழுடா எந் தங்கம்!’’ என்றான்.

அன்றிலிருந்து இவனுக்கு ஒரே நமைச்சல். ஒரு நாளாவது விரும்பியதைத் தின்று, பிடித்தவர்களோடு பேசி, பிடித்ததைச் செய்து, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று. ஆனால் முடியாது. ஒரு நாள் விடுமுறைவிட்டாலும், லேத்துப் பட்டரை வேலை ஊத்திக்கொள்ளும். எத்தனை காசு சம்பாதிக்கிறானோ அத்தனை காசுக்கும் சீட்டு, தவணை, வட்டி எனக் கடன்கள் இருக்கின்றன.

இப்போது அனாமத்தாக ஒரு பத்தாயிரம் ரூபாய் கத்தையாகக் கிடைத்ததும், இவனுக்கு அந்த நமைச்சல் ஒட்டிக்கொண்டது. மனசின் சாத்தான், செய்யும் தப்புக்கு துணையாக ஒரு ஆள், ஒரு சொல், ஒரு நியாயத்தைக் கண்டுபிடிக்க விரும்பியது. அதற்காகத்தான் பகவான் தாஸைப் பார்க்க வந்தான். அவனும் சாதகமாகத்தான் பேசினான் என்றாலும், இவனுக்கு உள்ளுக்குள் உறுத்தல் நீங்கவில்லை.

அடுத்து, சீதாராமனிடம் யோசனை கேட்டால் என்ன என்று தோன்றியது. சீதாராமன் ஒழுக்கமான வேலை பார்ப்பவன். ஒல்லியானவன். ஜனங்களுக்குப் பொதுவாக வரும் சில வியாதிகள் இருப்பவன். உலகத்தில் புது வியாதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால், அது தனக்கும் இருக்குமோ என்று டாக்டரிடம் ஓடுபவன். வியாதி இல்லை என்று சொன்னாலும், எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ஊசி போட்டுக்கொள்பவன். உடம்பில்தான் கொஞ்சம் வியாதி. ஆனால், அடுத்தவனுக்கு உதவும் மனசில் தங்கம்.

அவனிடமும் போய் அதே கேள்வியைக் கேட்டான் இவன்… ‘‘பத்தாயிரம் வழியில கிடைச்சா நீ மொதல்ல என்ன செலவு செய்வே சீதாராமா?’’

“அந்தக் காசை எடுத்துக்கிட்டு, ரங்கசாமி ஹார்ட் ஃபவுண்டேஷன் ஆஸ்பிடலுக்கு ஓடுவேன்!’’

இவனுக்குச் சந்தோஷமாகிவிட்டது. இதுதான் நல்ல ஆத்மாவின் பண்பு. புற்றுநோய்க்குத் தாயைப் பறிகொடுத்த ஒருவன் பணக்காரனான பிறகு, தாய் நினைவாக புற்று நோய் மருத்துவமனை ஆரம்பிப்பதில்லையா? அப்படித்தான், நோய் பல கண்ட ஒரு நல்ல மனுஷன், கிடைத்த பணத்தை ஓடிப் போய் ஒரு ஃபவுண்டேஷனுக்குத் தந்து, மற்ற நோயாளிகளுக்கு உதவ நினைப்பான்.

“ஆறாயிரம் கொடுத்து என் உடம்பு முழுசும் ஒருவாட்டி தரோவா செக் பண்ணிப்பேன்” என்று சீதாராமன் முடித்தபோது, இவனுக்கு மனசில் காற்று பிடுங்கிக்கொண்டது. “மீதி நாலாயிரத்தை என்ன செய்வே?” என்று சலிப்புடன் கேட்டான்.

“அதுக்கு நல்லா ட்ரீட்மென்ட் எடுத்துப்பேன்!”

இப்போது சீதாராமன் மீதும் கோபம் வந்தது. அவனிடமும், ‘காசு முழுசும் செலவான பிறகு தொலைச்சவன் வந்து கேட்டா என்ன செய்வே?’ என்று கேட்கத்தான் நினைத்தான். ஆனால், அவன் இதய நோயாளி. பாதியில் புட்டுக்குவான்.

ஒரு நல்லவன், ஒரு கெட்டவன்… ஆக இருவருமே கண்டெடுத்த பணத்தை உரியவனிடம் தருவது குறித்துப் பேசாததில் வருத்தம் இருந்தது இவனுக்கு. எதற்காக இப்படிக் கண்டெடுத்த பணத்தை வைத்துக்கொண்டு குமைந்து சாகிறோம் என்று குழப்பமாகவும் இருந்தது. ஒரு ஆட்டோ டிரைவர், பூ விற்கும் கிழவி லட்ச ரூபாய் பணத்தைக் கண்டெடுத்து நாணயமாகத் திருப்பித் தந்ததாய் பல செய்திகள் படித்த பிறகும், அப்படி ஒரு காசை ஏப்பம் விட ஒரு நியாயம் தேடி, கோர முகத்தோடு அலைகிறோம் என்பது மட்டும் உறைத்தது.

கழுத்தில் கத்தி வைத்து வழிப்பறி செய்யும் திருடனுக்கும், நகைக்காக முகத்தில் தலையணையை அழுத்திக் கொல்லும் குரூரமானவனுக்கும் தனக்கும் என்னதான் வித்தியாசம் இருக்கிறது என்று அசிங்கப்பட்டுக்கொண்டான். தன் மனசின் பாவம் ரத்தத்தில் கலந்ததாக எண்ணி வருத்தப்பட்டான். வாழ்வில் நிம்மதியாக இருக்க ஒரே வழி, காசை உரியவனிடம் சேர்ப்பிப்பதுதான் என்று உறுதியாகவும் இறுதியாகவும் முடிவெடுத்து, பணத்தைக் கண்டெடுத்த பெட்டிக் கடை அருகே போனான். ஒருவேளை, அந்தப் பெட்டிக் கடைக்காரருக்குத் தெரிந்திருக்கலாம். பணம் தொலைத்தவன் அங்குதான் அழுதபடி தேடியிருப்பான்.

கடைக்காரர் காய்ச்சல் வந்தவரைப் போலக் கடையில் உட்கார்ந்திருந்தார். வழக்கமாக, கடன் சொன்னாலும் சிரிக்கும் ஆசாமி அவர். “என்ன ஆச்சு கடக்கார்ரே… ஒடம்பு சரியில்லையா?”

அவர், “ப்ச்… இல்ல சார்! என்ன பொழப்போ… தொட்டது தொலங்கல. எல்லாக் காசையும் தொலைச்சு நஷ்டப்பட்டுக் கிடக்கேன். கடன்காரன் கழுத்துல கை வைக்கிறான். ஊரைக் காலி பண்ணிட்டுப் போலாமானு இருக்கேன்.”

“காசைத் தொலைச்சிட்டீங்களா… எவ்ளோ?”

“தொலைச்ச மாதிரிதான். விட்ட காசு திரும்பக் கிடைக்கவா போகுது? எவன் சார் யோக்கியம் இந்த உலகத்துல? நஷ்டமான காசுக்குக் கணக்கென்ன… வட்டியில கொஞ்சம் பொட்டியில கொஞ்சம்னு மொத்தமாப் போச்சு!”

“பத்தாயிரமா?”

“ம்… இருக்கும்!”

“கவலைய விடுங்க கடக்கார்ரே. நல்லவங்கள கடவுள் சோதிக்க மாட்டான். காசு என்கிட்டதான் இருக்கு.”

ஓர் அப்பாவி பெட்டிக் கடைக்காரரின் காசை தின்னப் பார்த்தோமே என்று வருந்தியபடி, வீட்டுக்கு ஓடினான். பீரோவைத் திறந்து, அந்தப் பத்தாயிரம் ரூபாயை அழுக்கு மஞ்சள் பையோடு கொண்டு வந்து கடைக்காரரிடம் தந்தான்.

கடைக்காரர் பரவசமாகி பணத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். முகமெல்லாம் மலர்ச்சியாகி, ஒரு ஆயிரம் ரூபாயை இவன் கையில் கொடுத்தார். நாள் முழுதும் இந்தப் பணம் படுத்தியபாட்டில் வேலைக்குப் போகாமல், இவனுக்கு ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம்தான். ஆனாலும், செய்த உதவிக்குக் காசு வாங்குவது தப்பென்று, “பரவாயில்ல பெரியவரே! இனியாச்சும் ஜாக்கிரதையா இருங்க” என்றான்.

வரும் வழியெல்லாம் அவன் மனசு கனமற்று மெல்லியதாக மிதந்து வந்தது. ஒரே நாளில் பெரும் பாவியாக இருந்தானே! கைக்கெட்டும் தூரத்தில்தான் மனிதர்களைச் சுற்றிப் பாவங்கள் அலைந்துகொண்டு இருக்கின்றன. ஒரு சின்ன சபலம்கூட ஒருவனைப் பாவச் சேற்றில் புதைத்துவிடும்! நல்லவன் ஆவதற்கும் சந்தர்ப்பங்கள் வெகு அருகிலேயே இருக்கின்றன. ‘என்னை நல்லவன் ஆக்கியதற்கு நன்றி கடவுளே!’ என்று நினைத்தபடி, வீட்டுக்குத் திரும்பி வந்தான்.

இவனுக்காகக் கசாப்புக் கடைக் கத்தியோடு இரண்டு பேர் வாசலிலேயே நின்றிருந்தார்கள். ஒருவன் இவனுக்கு ஏற்கெனவே தெரிந்த லைன்மேன். இன்னொருவன் புதியவன்.

“சார், நேத்து நீங்க பெட்டிக்கடை பக்கத்துல ஒரு பை எடுத்தீங்களே…அது இவரோடதாம். நீங்க எடுக்கும்போது நான் பார்த்தேன். உங்களோடதா இருக்கும்னு நெனைச்சேன். இந்த மனுஷன் பாவம், பத்தாயிரம் காணம்னு அழுது அலையுறதைப் பார்த்தேன். நீங்க நல்ல மனுசன்… தந்துடுவீங்கன்னு சொல்லிக் கூட்டியாந்தேன்!”

லைன்மேன் சொல்லச் சொல்ல, இவனுக்குத் தலை கிறுகிறுத்தது.

தலைதெறிக்க பெட்டிக்கடையை நோக்கி ஓடினான். ஒரு ஆட்டோவில் மொத்தச் சாமானையும் அள்ளிப் போட்டுக்கொண்டு, சற்று முன்தான் கடைக்காரர் போனதாகப் பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். ‘தெரியாத்தனமா ஆள் மாத்தி தந்துட்டேன்’ என்று சொன்னால், இவர்கள் நம்புவார்களா? ஆனாலும் சொன்னான். காசு தொலைத்தவனும் லைன்மேனும் பாதி நம்பினார்கள். ஆனாலும், ‘என் காசை எண்ணி வை’ என்றார்கள்.

மறுநாள், காசை எண்ணிக் கொடுத்தான்.

கடைக்காரனின் மேல் இவனுக்குக் கோபம் வந்தது. ஆனாலும் பணத்தை ஏப்பம்விட தானும் சபலப்பட்டதை நினைத்துப் பார்த்தான். இவன் நினைத்தான்; கடைக்காரன் செய்தான். பெரிய வித்தியாசம் இல்லையே!

சூறாவளி போல வந்து ஒரு நாள் இரவு தங்கிப்போன அந்த பத்தாயிரத்தின் ஒவ்வொரு ரூபாயும் ஒரு இரவாகி முள் படுக்கையாகக் குத்த ஆரம்பித்தது. அதன் பிறகு, அப்படி ஒரு நாளின் இரவில், இவன் தன் மனைவியிடம் கேட்டான்… “ஏஞ்செல்லம், உனக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் கீழே கெடைச்சா, அந்தக் காசுல நீ மொத என்ன செலவு செய்வே?”

அவள் இவனைக் கோபமாக முறைத்துப் பார்த்துவிட்டுச் சொன்னாள்… “கண்டிப்பா பீரோவுல புருஷனுக்குத் தெரியாம ஒளிச்சு வெச்சுட்டு, ராத்திரி பூரா திறந்து திறந்து பார்த்துட்டு இருக்க மாட்டேன்!”

– ஏப்ரல் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *