மேன் ஆஃப் தி மேட்ச் கிச்சா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 4,931 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எப்போதும் தூசு, தும்பட்டையோடு இறைந்து கிடக்கும் கிச்சாவின் களேபரமான சயன அறையின் ஓட்டு உத்தரத்தில், துளிக்கூடப் பொருத்தமில்லாமல் சேண்டிலியர் டைப்பில் காஸ்ட்லியான கண்ணாடி அலங்காரச் சரவிளக்கு ஒன்று உல்லாசமாகத் தொங்கிக் கொண்டிருந்தது.

அந்தச் சரவிளக்கின் அடியில் ‘மேன் ஆஃப் தி மாட்ச், கிச்சா. உபயம்: பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் – உலகக் கோப்பை என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த உலகக் கோப்பை உபயத்தைக் கிச்சாவிடம் காட்டி ‘இது இங்கே எப்படி?’ என்று ஈனஸ்வரத்தில் கேட்டேன்.

உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டம் தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பு, ஆட்டத்தின் விதிமுறைகள், பல அம்சங்களின் குறை நிறைகள் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு சரிசெய்ய அசாருதீன் தலைமையிலான இந்திய அணிக்கும் ஆலன் பார்டர் தலைமையிலான உலக அணிக்கும் இடையே ஒரு ‘டே அண்ட் நைட்’ போட்டி சிட்னி மைதானத்தில் நடத்தப்பட்டது. அந்த மாட்ச்சில் இந்திய அணியில் தான் விளையாடி, ஆல்ரவுண்டராக ஜமாய்த்து ஜெயித்துக் கொடுத்து, ‘மேன் ஆஃப் தி மாட்ச்’ அவார்டாக உத்தரத்துச் சரவிளக்கை டோனி கிரெய்கிடம் பெற்றுக் கொண்டதை கிச்சா அசால்ட்டாகக் கூறினான்.

ஆஸ்திரேலியா மட்டுமே அறிந்த அந்த சிட்னி ரகசியத்தை சிதம்பர ரகசியம் போல என் காதில் கிச்சா கூறியதே இனி கீழே தொடர்வது…

நான்கு மாதங்களுக்கு முன்பு திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் தொத்தலான கிச்சா டீமுக்கும் ‘பிராட்வே பிராட்மென்’ என்று சிலாகிக்கப்பட்ட கீழ கீர்த்திவாசன் டீமுக்கும் இடையே ஒரு கிரிக்கெட் மாட்ச் நடந்தது. அப்போது பேட் செய்ய வந்த கீர்த்திவாசன் கையில் மட்டையோடு கால்மணி நேரமாகச் சிங்கராச்சாரி தெருவில் காத்திருக்க, பந்து வீச்சில் வேகத்தைக் கூட்டுவதற்காகப் பார்த்தசாரதி கோயில் கோபுர வாசலிலிருந்து பெருமாள் உற்சவம் போலப் புறப்பட்டு நான்கு மாட வீதிகளையும் சுற்றி நுரை தப்ப ஓடி, இறுதியில் சிங்கராச்சாரி தெருவுக்கு வந்து கிச்சா பந்தைக் கோரமாக வீசியிருக்கிறான். அது கீர்த்திவாசன், விக்கெட் கீப்பர் போன்ற பலரையும் உதாசீனப்படுத்திவிட்டு தெருக்கோடியில் இருக்கும் நரசிம்மராவ் வீட்டு ரேழியில் தொங்கிய ஹைதர் அலி காலத்து அலங்காரச் சரவிளக்கின் மீது அதிரடியாக மோதி அந்தரத்திலேயே அதைச் சுக்குநூறாக்கியது. நல்லவேளை, செய்தி கேள்விப்பட்ட எச்சுமிப் பாட்டி, பேரனைக் காப்பாற்ற தலைதெறிக்க ஓடி வந்து, நரசிம்மராவிடம் நைச்சியமாகப் பேசி அவருக்கு வேறு நல்ல உசத்தியான சரவிளக்கு வாங்கித் தருவதாகக் கூறியிருக்கிறாள்.

சொன்ன சொல்லைத் தட்டாத பாட்டி, சரவிளக்கு வாங்கி வருமாறு பேரனை விரட்ட, பாட்டி சொல்லைத் தட்டாத பேரனும் உடனடியாக மவுண்ட் ரோட்டுக்கு சைக்கிளைத் தள்ளிக் கொண்டு ஓடினான். ஜீரோ வாட்ஸ் பல்பில் ஆரம்பித்து சோடியம் வேப்பர் வரையிலான எல்லா வகையறாக்களையும் விற்கும் ஒரு எலக்ட்ரிக்கல் டீலர் கடையில், ஒரு சரவிளக்கை நானூற்றுச் சொச்சத்துக்குக் கிச்சா வாங்கியபோது, கிச்சாவின் பாக்கெட்டில் பில்லோடு சேர்த்து ஒரு பரிசுக் கூப்பனையும் திணித்தார் கடையின் சொந்தக்காரர்.

பத்து நாட்கள் கழித்து ஒரு நாள் பிற்பகலில் எலெக்ட்ரிகல் கடையின் சொந்தக்காரர், தேவதூதன் போல கிச்சாவின் வீட்டில் பிரசன்னமாகி, ‘மிஸ்டர் கிச்சா, உங்கள் கூப்பனுக்கு குலுக்கலில் முதல் பரிசு விழுந்திருக்கிறது. உங்களையும் சேர்த்து இருவர், நீங்கள் விரும்பும் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குச் சென்று ஒரு வாரம் ஓட்டலில் தங்கி உல்லாசமாக எங்கள் செலவில் சுற்றிப் பார்ப்பதற்கான வசதிகளை எங்கள் நிறுவனம் செய்து தரும்…’ என்ற சேதியைக் கௌரவமாக கூற, கிச்சா தலை, கால், கை, மூக்கு, வாய் எதுவும் புரியாமல் துள்ளிக் குதித்தான்.

உலகக் கோப்பை கிரிக்கெட் மாட்ச்சை ஸ்டார் டி.வி. மூலமாகப் பார்ப்பதற்காக தான் போட்ட டிஷ்- ஆன்ட்டெனா மொட்டை மாடியில் தண்டச்சோறு தடிராமனாகப் படுத்துவிட்ட விரக்தியில் இருந்த கிச்சா, ஒருநாள் கிரிக்கெட் மாட்ச்சை நேரடியாகத் தரிசிக்க முடிவு செய்து, ‘ஆஸ்திரேலியாதான் போக வேண்டும்…’ என்று முடிவு செய்ய, எச்சுமிப் பாட்டியும் உடன் வரச் சம்மதித்தாள்.

அரிசி, உப்பு, புளி என்று ஒரு மினி மளிகைக் கடை, பிள்ளையார், பெருமாள், முருகர் என்று ஒரு படக்கடை. இப்படி வெயிட் தாங்காமல் விமானம் தாழ்வாகப் பறக்கவேண்டிய அளவுக்குப் பலவித பார்சல்களோடு கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கில் சூலம் இல்லாத ஒரு நல்ல நாளில் பாட்டியும் பேரனும் பிளேனில் புறப்பட்டு ஆஸ்திரேலியாவுக்குப் போனார்கள்.

சிட்னி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டல் அறையில் எச்சுமிப் பாட்டியை செட்டில் செய்துவிட்டு, கீழே இறங்கி ஆஸ்திரேலிய ரஸ்தாவுக்கு வந்தான் கிச்சா. கிரிக்கெட் மைதானத்துக்குப் போகிற வழியை, போகிற வருகிறவர்களிடம் எல்லாம் விசாரித்தான். ஒரு அரை மணி நேரம் கழித்து ஓட்டலுக்குத் திரும்பியவனுக்கு, நூற்றுக்கணக்கான அறைகள் கொண்ட அந்த ஓட்டலில் எந்த மாடியில் எந்த அறையில் எச்சுமிப் பாட்டியைக் குடிவைத்தோம் என்பது மறந்துவிட்டது. ‘பாட்டி, பாட்டி’ என்று ரயில்வே பிளாட்பாரத்தில் காபி, டீ விற்பவன் போல கூவியபடி உத்தேசமாக காரிடரில் உள்ள ஒவ்வொரு ரூமாகத் திறந்து பார்த்த கிச்சா, ஒன்றில் அசாருதீன், ஒன்றில் ஸ்ரீகாந்த், ஒன்றில் ரவி சாஸ்திரி, ஒன்றில் டெண்டுல்கர் என்று தான் கும்பிடப்போன கிரிக்கெட் தெய்வங்கள் குடியிருப்பதைப் பார்த்து சந்தோஷத்தில் பாட்டியைக் காணாமல் போக்கியதையே மறந்து விட்டான்.

கிச்சாவைப் பார்த்தவுடனேயே, ‘இது நம்ம ஆளு’ என்பதைப் புரிந்துகொண்டு ஸ்ரீகாந்த், அவனோடு பரிச்சயம் செய்துகொண்டு, டீமில் உள்ள மற்ற ஆட்டக்காரர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அதற்குள் கிச்சா இருக்கும் ஸ்ரீகாந்த் அறையைக் கண்டுபிடித்து வந்துவிட்டாள் எச்சுமிப் பாட்டி.

காரிடாரில் இந்திய கிரிக்கெட் வீரர்களை வரிசையாக நிற்க வைத்து, எலிசபெத் ராணி போல எச்சுமிப் பாட்டி கைகுலுக்கியபடி நடந்து வர, கூடவே நடந்துபோய் அவர்களைப் பாட்டிக்கு அறிமுகம் செய்வித்தான் கிச்சா.

ஸ்ரீகாந்த் மற்றும் ஸ்ரீநாத்தைப் பார்த்து, ‘இங்கே சாப்பாடு சரியில்லாம கஷ்டப்படறேளாமே? பேப்பர்ல படிச்சேன். நாங்க ஒரு வாரம் இங்கதான் இருப்போம். ராத்திரி எங்காத்து ரூமுக்கு வந்துடுங்கோ. சுண்டைக்கா வத்தக் குழம்பு, சுட்ட அப்பளம் பண்ணி ஜமாய்ச்சுடறேன்’ என்று கூறிய எச்சுமிப் பாட்டியை அனைவரும் – குறிப்பாக ஸ்ரீகாந்த்தும் ஸ்ரீநாத்தும் – அன்னபூரணியைப் பார்ப்பது போலப் பார்த்தார்கள்.

அன்று இரவு ஓட்டல் மொட்டை மாடியில் சிட்னி நிலா வெளிச்சத்தில் இந்திய வீரர்களை வட்டமாக உட்கார வைத்து நடுவில் அமர்ந்த எச்சுமிப் பாட்டி, வத்தக்குழம்பு சாதத்தைப் பிசைந்து உருட்டி உருட்டி ஸ்ரீகாந்த், காம்ப்ளி, கிரண் மோரே என்று வேகமாகப் பேர் சொல்லி காட்ச் ப்ராக்டீஸ் போல வீசி எறிய, வெளிநாடு வந்து நாக்கு செத்துப் போய்க் கிடக்கும் அனைவரும் டைவ் அடித்தெல்லாம் பிடித்து உண்டார்கள். பாட்டி எறிந்த சோத்து உருண்டையைக் கிச்சா மட்டும் கையால் பிடிக்காமல் வாயாலேயே ‘பைக்’கென்று பிடித்து உண்டது இந்திய அணியின் மானேஜரை வியக்க வைத்தது.

ஆலன் பார்டர் தலைமையிலான உலக, அணிக்கும் அசாருதீன் தலைமையிலான இந்திய அணிக்கும் மறுநாள் நடக்கவிருக்கும் ஒருநாள் மாட்ச்சுக்கு, இந்திய அணியில் சரியாகப் பத்து பேர்தான் இருந்தார்கள். அழைத்துப் போன மற்றவர்களுக்கு ஆளுக்கொரு உபாதையாம்.

இந்திய டீமின் அநாதரவான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு டீமில் இடம்பெற முடிவு செய்த கிச்சா அவர்களை ‘பைக்’ காட்ச்சால் வசீகரிக்க, அன்று இரவோடு இரவாகப் புது பிளேயர் கிச்சாவுக்காக, கருநீலத்தில் பாண்ட்டும் ஷர்ட்டும் தைக்கப்பட்டது. ஷர்ட்டின் முன்பக்கம் எல்லோருக்கும் போல இந்தியா என்று எழுத அனுமதித்த கிச்சா, பின்பக்கம் ‘வேங்கட ரமண வராக’ என்று ஆரம்பித்து ஐந்து நாள் மாட்ச் போல வெகுநேரம் கழித்து, ‘கோவிந்த முகுந்த கோபால கிருஷ்ணன்’ என்று முடியும் தன் முழுப்பெயரை எழுதுமாறு அடம்பிடிக்க, ஷர்ட்டில் எழுதியது போக, மீதி பெயரை பாண்ட்டில் எழுதி அப்படியும் முடியாமல் திணறினார்கள்.

மறுநாள் மாட்ச். டாஸ் போடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு இந்தியக் குழுவும், பார்டர், பூன், கூச், போதம், கிரேட்பாட்ச், லாரா என்று பிரமாண்டமான உலகக் குழுவும் தங்களை சுறுசுறுப்பாக்கிக் கொள்ள ‘கீப் ஃபிட்’ உடற்பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.

சிட்னி மைதானத்தின் ஓரத்தில் ஆசமனம் செய்துவிட்டுப் பத்மாசனத்தில் அமர்ந்து பிராணாயாமம் செய்ய ஆரம்பித்த கிச்சாவின் இரண்டு நாசித் துவாரங்களும் சிக்ஸராக விரிந்து, சிங்கிளாகச் சுருங்குவதை உலக அணியினர் முதலில் நக்கலாகப் பார்த்தார்கள். அடுத்து கிச்சா சிட்னி மைதானத்தை ஏழு தடவை சுற்றிவிட்டுக் கையோடு கையாக இரண்டு தடவை அங்கப்பிரதட்சணமும் செய்துவிட்டு வேர்த்தல், விறுவிறுத்தல் இல்லாமல் சர்வ சாதாரணமாக வருவதை அமானுஷ்யமான பீதியோடு பார்த்த உலக அணியினர், வியப்பில் தங்களை அறியாமல் மூக்கில் விரல் வைத்து பிராணாயாமம் போஸ் கொடுத்தார்கள்.

எச்சுமிப் பாட்டி மைதானத்திலேயே அடுப்பு மூட்டி, கொதிக்க வைத்த மோரில் சோம்பு, கிராம்பு, லவங்கம், மிளகு, ஏலம் என்று கையில் கிடைத்ததை எல்லாம் தாளித்துக் கொட்ட, திராவகம் போல கொப்பளித்த மோரை கிச்சா இரண்டு சொம்பு குடித்துவிட்டு சிட்னி சட்னி ஆகும் அளவுக்கு விட்ட கடுமையான ஏப்பத்தால் டி.வி. கவரேஜுக்காகக் கொடுக்கப்பட்ட ஸாடிலைட் இணைப்பு, உலகம் முழுவதும் ஒரு நிமிடம் துண்டிக்கப்பட்டது.

தன் வலதுகை ஆள்காட்டி விரலிலும் கட்டை விரலிலும் பிளாஸ்திரி போட்டிருந்ததால் டாஸ்கூடப் போட முடியாமல் அசாருதீன் தவித்தபோது, டாஸ் போடும்போதே தண்ணி காட்டி பார்டருக்குப் பாதி தோல்வியைத் தருவதாக ‘பாட்டி மீது சத்தியம்’ செய்து கிச்சா அந்த வாய்ப்பைப் பெற்றுக் கொண்டான்.

அசாருதீனை எதிர்பார்த்து பெவிலியன் வாசலில் காத்திருந்த ஆலன் பார்டர், டாஸ் போட வேண்டிய நாணயத்தை விரல் நுனியில் பாலன்ஸ் செய்து கொண்டு விரலுக்கு விரல் மாற்றியபடி வித்தை காட்டிக்கொண்டும் கிச்சா வருவதைப் பார்த்துப் பேய் முழி முழித்தார்.

டாஸ் போடக் கொடுத்த நாணயத்தை பார்டருக்குக் காட்டி விட்டு விரல் நரம்பு புடைக்க கிச்சா சுண்டி எறிய, அது வானில் பறந்து போய் மேகக் கூட்டங்களில் மறைந்து பத்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தது. இதனால் ஏற்பட்ட தாமதத்தை ஈடுகட்ட ஆட்ட விதிமுறையின்படி ஐம்பர் ஓவர் மாட்ச் நாற்பத்தெட்டு ஓவர் மாட்ச்சாகக் குறைக்கப்பட்டது. இனி வரவே வராது என்று நினைத்த ‘ஹெட் ஆர் டெயில்’ போடப்பட்ட நாணயம் ஆடி அசைந்து கீழே வருவது கண்டு பார்டர் அவசர அவசரமாக ‘டெயில்’ என்று கூற, அதற்குள் ‘பூவா, தலையா’ போட்டுப் பழக்கப்பட்ட கிச்சா, பூவை ஆங்கிலத்தில் ஃப்ளவர் என்று முந்திக்கொண்டு சொல்லிக் குழப்ப, அதனால் நிகழ்ந்த களேபரத்தில் டாஸ் இரண்டாம் தடவை போடப்பட்டது. இதனால் மறுபடியும் ஏற்பட்ட தாமதத்தை ஈடுகட்ட விதிமுறைப்படி மேலும் மூன்று ஓவர்கள் குறைக்கப்பட்டு, ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே ஐம்பது ஓவர் மாட்ச் நாற்பத்தைந்து ஓவர் மாட்ச்சாகச் சுருக்கப்பட்டது.

டாஸில் ஜெயித்த கிச்சா, அசாருதீன் அட்வைஸ்படி உலக அணியை முதலில் ஆடுமாறு பணித்தான்.

ஆட்டம் தொடங்கியதும் ஸ்லிப்பில் நிற்க வைக்கப்பட்ட கிச்சா, பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடும் மோடிமஸ்தான் இஷ்டத்துக்குச் சொல்வது போல ‘ஆஸ்மாமி கொண்டிமுறுக்கு ஜலோ தாஸ்மி சீல்மேஹடா படா ஹை’ என்று வாய்க்கு வந்த மந்திரத்தைச் சொல்லிவிட்டு கூச்சின் காதுபட ‘இதைச் சொன்னா எதிரி முட்டை முட்டையா கக்குவான்’ என்று சொல்ல, கூச் பயத்தில் பேச்சுமூச்சானதில் அவர் ஸ்டம்ப் பல்டி அடித்தது.

அடுத்ததாக போதம் ஆடும்போது ‘வல்ல பூதம் வலாஷ்டிகப் பூதம் அல்லல்படுத்தும் அடங்கா முனி பூதம்’ என்று கந்தர்சஷ்டிக் கவசத்தின் வரிகளைக் கிச்சா கூற, அதில் அடிக்கடி வரும் பூதம் அவர் காதில் போதம் என்று விழ, தனக்கு இந்த இந்திய மந்திரவாதி ஏதோ ப்ளாக் மாஜிக் செய்து சூன்யம் போடுவதாக நினைத்து பயந்ததில் ஒரு நோ-பாலுக்கு ஆடாமலேயே நெர்வஸாக ஓடி ரன் அவுட் ஆனார்.

இப்படிக் கிச்சாவால் இரண்டு விக்கெட் வீழ்ந்த சந்தோஷத்தில் அசாருதீன் அன்புப் பரிசாக அவனுக்கு பௌலிங் போட சான்ஸ் தந்தார்.

பந்து போடுவதற்கு முன்பாக அம்பயரிடம் கிச்சா தான் போட்டிருந்த ஸ்வெட்டர், ஷர்ட், உள்பனியன், தலையில் இருந்த தொப்பி, கழுத்திலும் கையிலும் போட்டிருந்த செயின், மாலைகள், மோதிரம், தாயத்து ரட்சைகள்… ஒவ்வொன்றாக நிதானமாகக் கழற்றித் தந்து அம்ப்பயரை ‘கோட்-ஸ்டாண்ட்’ ஆக்கினான். ஒவ்வொரு ஓவரும் தொடங்குவதற்கு முன் அவற்றையெல்லாம் கழற்றித் தருவதற்கும் ஓவர் முடிந்ததும் திரும்ப வாங்கிப் போடுவதற்கும் கிச்சா நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால் அதை ஈடுகட்ட, ஏற்கெனவே நாற்பத்தைந்து ஓவருக்குச் சுருங்கிய மாட்ச், முப்பத்தைந்து ஓவராக முடங்கியது.

எல்லா ஃபீல்டர்களையும் விக்கெட் கீப்பருக்குப் பின்னால் பத்ம வியூகமாக கிச்சா நிறுத்த, கிச்சாவின் இந்தத் தந்திரத்தின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்ற அநாவசியக் கவலையில், வந்தவுடனேயே டேவிட் பூன் காலில் வாங்கிக் கொண்டு எல்.பி.டபிள்யூ ஆனார்.

அடுத்து வந்த ஆலன் பார்டரைக் கறுவியபடி குரோதத்தோடு பந்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, பஸ், ஆட்டோ பிடித்து வந்து போடுமளவுக்கு வெகுதூரம் நடந்து போய்விட்டு, பிறகு கொஞ்சம் ஓட்டம், கொஞ்சம் நடை, கொஞ்சம் பாப்பாநொண்டி என்ற கணக்கில் அம்ப்பயருக்கு அருகே வந்ததும், கையில் பந்து இல்லாததைப் பார்த்து ‘ஸாரி சார்’ சொல்லிவிட்டு, பாக்கெட்டில் இருந்த பந்தை மறுபடி எடுத்து பழையபடி பெவிலியனை நோக்கிக் கிச்சா காசி யாத்திரை போலப் போக, அலுப்பில் மப்பாகிப் போன பார்டர், இருபது முறை பிட்ச் ஆகி இறுதியில் உருண்டு வந்த கிச்சாவின் ஒரு பந்தை காலில் வாங்கிக்கொண்டு, அம்ப்பயர் அவுட் சொல்வதற்குள், விட்டால் போதும் என்று அவஸ்தையில் ஸ்போர்ட்டிவ்வாக உள்ளே போனார்.

ஏற்கெனவே பச்சிலை, மருதாணி, மூலிகைகளை அரைத்து எச்சுமிப் பாட்டி தயாரித்துத் தந்த களிம்பை முகத்தில் அப்பிக்கொண்டு எல்லைப் பிடாரி போல இருந்த கிச்சாவைப் பார்த்துப் பயந்து போய் புதிய பாட்ஸ்மேன் வரலாமா என்று தீவிரமாக யோசித்து முடிப்பதற்குள் பேய் மழை வந்து ஆட்டம் நின்றது. அதுவரை பல்வேறு காரணங்களால் கழுதையாகத் தேய்ந்த ஓவர்கள் கட்டெறும்பாக இருபது ஓவருக்குச் சுருங்கியது.

பாட்டிங்கின்போது உலக அணியைக் கிச்சா வேறுவிதமாகப் பழிவாங்கினான். ஸ்ரீகாந்த் அடித்துவிட்டு ஒரு ரன் எடுப்பதற்குள், நாய் துரத்தலுக்குப் பயந்து பி.டி. உஷா கணக்கில் ஓடிப் பழக்கம் உள்ள கிச்சா ஒன்பது ரன்கள் எடுத்தான்.

யார் எடுத்த ரன்னைக் கணக்கில் காட்டுவது என்று தெரியாமல் குழம்பிய ஸ்கோர் போர்டு, சமரசமாக ஸ்ரீகாந்த் எடுத்த ஒரு ரன்னையும் கிச்சா ஓடிய ஒன்பது ரன்களையும் கூட்டி இரண்டால் வகுத்து ஆளுக்கு ஐந்து எனக் காட்டியது.

கடைசியாக இருபது ஓவரில் உலக அணி எடுத்த அதே ரன்களை இந்திய அணி எடுத்ததால் முடிவு சொல்ல முடியாத சூழ்நிலை உருவானது. எப்படியாவது கூட்டிக் கழித்து முடிவைச் சொல்வதில் ரோஷக்காரர்களான பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் நிறுவனத்தார், இறுதியாக இரண்டு அணியிலும் ஆடிய ஆட்டக்காரர்களின் வயது, வெயிட், உயரம், ரத்த அழுத்தம், பல்ஸ் ரேட் போன்ற புள்ளி விவரங்களை கம்ப்யூட்டரில் பலவந்தமாகப் போட்டுத் திணித்துக் கலக்கியதில், கிச்சாவுக்கு இருந்த அபூர்வமான ரத்த குரூப்பால் ஒரு பாயிண்ட் அதிகமாகக் கிடைக்க, இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது!

மூன்று விக்கெட்களும் ஐம்பது ரன்களும் எடுத்த கிச்சாவுக்கு ‘மேன் ஆஃப் தி மாட்ச் அவார்டும், அவனுக்குப் பக்க பலமாக இருந்த எச்சுமிப் பாட்டிக்கு ‘வுமன் ஆஃப் தி மாட்ச்’சும் வழங்கப்பட்டன. அந்த ஒரு வாரத்தில் கிச்சா ஆஸ்திரேலியாவில் கங்காருவுக்கு அடுத்தபடியாகப் பிரபலமானான்.

மீண்டும் ஒரு தடவை மிஸ்டர் கிச்சாவையும் அவன் வாங்கிய அலங்கார விளக்கு அவார்டையும் நம்ப முடியாமல் பார்த்துவிட்டு தெருவுக்கு வந்த என்னை நரசிம்மராவ் கூப்பிட்டுக் குசலம் விசாரித்தார். அவர் வீட்டு ரேழியில் தொங்கிய சரவிளக்கு, கிச்சா வீட்டு சரவிளக்கோடு ஒட்டிப் பிறந்த ‘சயாமிஸ் டுவின்ஸ்’ போல அச்சாக இருந்தது. நரசிம்மராவிடம் விசாரித்தபோது ‘என் வீட்டு விளக்கை உடைச்சதுக்குப் பதிலாக கிச்சா ஒரு சரவிளக்கு வாங்கப் போன போது ஏதோ பரிசு கூப்பன் தந்தார்களாம். அது குலுக்கல்ல நாப்பதாவது பரிசு விழுந்ததாம். அதுல கிச்சாவுக்கும் இதே மாதிரி இன்னொரு சரவிளக்கு பரிசாகத் தந்தாங்களாம்’ என்று கூறிவிட்டு உள்ளே போனார்.

என் காதில் கிச்சா பூ சுற்றியது புரிந்தது. இருந்தாலும், எனக்கென்னவோ இந்தியா ஒரு நாள் கிரிக்கெட் ஆடிய அழகைப் பார்த்ததில் நிஜமாகவே கிச்சாவை – அதிர்ஷ்ட கூப்பன் எதுவும் இல்லாமலேயே இந்திய டீமில் சேர்த்துக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது.

– மிஸ்டர் கிச்சா, முதற் பாதிப்பு: 2004, கிழக்கு பதிப்பகம், சென்னை.

கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 - 10 சூன் 2019)[3] தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார்.[4] அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *