முறுக்கிக் கொண்டார் அப்புசாமி

1
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 13,177 
 
 

பா.மு கழக அங்கத்தினர்கள் ஸ்பெஷல் பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு சாத்தனூர்க்கு உல்லாச பயணம் புறப்பட்டு போயிருந்தனர் சீதாப்பாட்டி பிரசிடெண்டாயிற்றே. கூடப் போகாமல் இருப்பாளா? அப்புசாமியின் காப்பிச் செலவுக்குக் காசு வைக்காமல் போய்விட்டாள்.

அப்புசாமி பல்லை கடித்துக்கொண்டு காப்பி போட தொடங்கினார். இரண்டாவது நிமிடமே கட்டை விரலைச் சுட்டுக்கொண்டு, சிறிது மெக்ஸிகோ நடனம் ஆடித் தீர்த்தார்.

வயிறு பசிக்கவும் வலை பீரோவை திறந்து பார்த்தார். எட்டணா சில்லறை மட்டும் ஒரு டப்பாவில் போட்டுவைத்திருந்தது. ஒரு மசால் தோசை அரை ரூபாய் விற்கிறதாம். என்னத்துக்காகும் இந்த ஐம்பது பைசா!

ஆத்திரத்துடன் வாசல் வழியே விட்டெறிந்தார், அடுத்த கணம், ”ஆ!” என்றொரு குரல் கேட்டது.

அப்புசாமி, பதறிப்போனவராய் பார்த்தார்.

அவர் வீசிய காசால் மண்டையில் அடிப்பட்டவராகத் தலையைக் கையில் பிடித்துக்கொண்டு ஒரு கொடுவால் மீசைக்காரர் நின்றிருந்தார்… அவர் பெயர் லிங்கப்பா.

தேனாம்பேட்டையிலுள்ள ஒரு பணக்கார சுப்பையாவின் காரியதரிசி.
சுப்பையாவின் ஒரே மகள் காத்தாயிக்கு கல்யாணம். ”பட்டணத்திலே பெஸ்ட்டாக யார் கல்யாணப் பலகாரம் செய்கிறவர்களோ, அவர்களைப் போய் பார்த்து ஆயிரம் அல்லது இரண்டாயிரம் என்றாலும் அட்வான்ஸ் குடுத்துவிட்டு வாரும் சீக்கிரம்!” என்று கட்டளைப் போட்டிருந்தார் சுப்பயா.

காரியதரசி லிங்கப்பா ஒரு இடத்துக்குப் பத்து இடமாக விசாரித்ததில், எல்லோருமாக ஒருமுகமாக நுங்கம்பாக்கத்தில் ஒரு அம்மாள் பெயரைச் சிபாரிசு செய்தார்கள்.

”சீதையம்மாள் என்று பெயர். சாதாரணச் சமையல் ஆள் என்று நினைக்க வேண்டாம். ரொம்ப ரொம்ப பெரிய இடத்துக் கல்யாணத்துக்தான் அந்த அம்மாள் பலகாரம் செய்வது வழக்கம். மலேயா, சிங்கப்பூர், ஜப்பான் முதலிய இடங்களுக்கெல்லாம் கூடப் போய் தமிழ்நாடு முறுக்கு தினுசுகளைச் செய்து கொடுத்து அகில உலக புகழ் பெற்றவளாக்கும். மிகவும் வசதியான நிலையில் இருப்பவள். ரேட் கொள்ளையா இருக்கும்,”என்று சொன்னார்கள்.

”ரேட்டைப் பற்றி என்ன?” என்று காரியதரிசி லிங்கப்பா தனது கொடுவாள் மீசையை வருடிக்கொண்டு காரில் விர்ரென்று சீதையம்மாளைத் தேடிக்கொண்டு கிளம்பினார்.

”சீதையம்மாள் வீடு எது?” என்று லிங்கப்பா கேட்டதற்கு வழியோடு போன யாரோ ஒருத்தர், ”அடுத்த தெரிவிலே இருக்காங்க, சீதாப்பாட்டினு கேட்டா யாரும் சொல்வாங்க,”என்று சொல்லிவிட்டார். அவர் நேரா சீதாப்பாட்டி வீட்டுக்கு வந்து விட்டார்.அப்போதுதான் டங்கென்று ஒரு நாணயம் அவர் தலையில் வந்து விழுந்தது.

”அடடே உங்க மேலே காசு பட்டுவிட்டதா? என் காசுதான். ஆத்திரத்தில் விட்டெறிந்துவிட்டேன். இப்போ அதைத் தேடி எடுத்தால்தான் டிபன். என் தலையெலுத்தைப் பாருங்கள், இப்படிப்பட்ட மனைவியைக் கட்டிக்கொண்டு…” என்று அங்கலாய்த்தார் அப்புசாமி.

”உங்க மனைவி மாதிரி ஒரு அம்மா இனி பிறந்துதானுங்க வரவேண்டும். அட!அட! அவர்களைப் புகழாதவங்க இல்லை. வெளியூர்காரங்களெல்லாம் பாராட்டினர். இல்லாட்டா நான் ஏன் வீடுதேடி வர்றேன்?” என்றார் லிங்கப்பா, அடிப்பட்ட வலியையும் மறந்து.

அப்புசாமிக்குக் சுடச்சுட இஞ்சி கஷாயத்தை ஊற்றிய மாதிரி இருந்தது.
சீதையைத் தேடிக்கொண்டு வந்து இப்படி ஒரு புகழ் மாலையா?செத்தும் கெடுத்தான் திருவாழத்தான் என் பதைப் போல,அவள் ஊரிலே இல்லாதபோதும் அவளுக்குப் புகழுரைகளா?

வந்தவர் அம்மா இல்லீங்களா?” என்றார்.

”சாத்தனூர் இல்லே,சாத்தனூர்!அங்கே போயிருக்கிறாங்க உல்லாச பயணம்….”

”ஓஅப்படியா?’ ‘திடுக்கிட்டார் வந்தவர். ”எப்போ வருவாங்க?”

”யாருக்குத்தெரியும்? ஆமாம் எதற்காக இவ்வளவு அக்கறையாகக் கேட்கறீங்க சீதைப்பத்தி?”

”வேறு எதுக்குங்க தேடிவரப் போறேன்? வருகிற மாசம் நாலாம் தேதி எஜமானர் பொண்ணுக்கு கல்யாணம். அம்மாவைத்தான் பெரிசாக நம்பியிருக்கிறேன். எல்லா விஷயத்துக்கும் உங்களைப் பார்த்துப் பேசி அட்வான்ஸையும் கொடுத்துட்டுப் போகலாம்ணுதான் வந்தேன்.”

”அட்வான்ஸ்!”அப்புசாமி விழித்தார். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் என்ன சம்பந்தம்?

”எதற்கு அட்வான்ஸ் தரப்போறீங்க?”

”வேறு எதற்குங்க முறுக்கு, அதிரசம், இன்னும் மீதி கல்யாண பட்சணங்கள் செய்வதற்குதான்.”

தன்னைப்போல யாரும் பேத்த முடியாது என்று தருக்கிக் கிடந்த அப்புசாமி அயர்ந்து போய்விட்டார். ஆசாமி என்ன இப்படிப் பேத்துகிறான் என்று.

”அட்வான்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள் முதலில். அம்மா இல்லாட்டி என்ன? வந்ததும் சொல்லுங்க.” என்று நூறு ரூபாய் நோட்டு ஒன்றை அப்புசாமியின் கைக்கு எதிராக நீட்டினார் லிங்கப்பா.

அப்புசாமி அட்வான்ஸை வாங்கிச் சட்டைப்பையில் போட்டுக்கொண்டார்.

”அவள் வந்தவுடன் சொல்லிவிடறேன். ரொம்பச் சந்தோஷம்,”விடை கொடுத்தார்.

கைக்கு நூறு ருபாய் வந்ததும்,ஆனந்தம் தாங்கவில்லை, நுறு ரூபாய்க்குத் திடீர் எஜமானராகியதும்,புது ரத்தம் பாய்ந்தது போலிருந்தது.

‘அடி அற்ப சீதே! எட்டணாவை வைத்துவிட்டுப் போனாயே என் செலவுக்கு!எப்படித் தானாக நூறு ரூபாய் தேடிவந்தது பார்த்தாயா? இனி இந்த நூறு ரூபாய் நரி தின்ன கொக்கரக்கோதான்!’என்று சீட்டி அடித்தவாறு தன் சினேகிதர்களான பீமாராவையும், ரசக்குண்டுவையும் தேடிக்கொண்டு கிளம்பினார்.

உல்லாசப் பயணத்திலிருந்து திரும்பி வந்து பல நாள் ஆகியும் கூட, அப்புசாமி நடந்த விஷயத்தையோ, அட்வான்ஸ் மோசடியையோ பற்றி வாய்திறக்கவில்லை.

கைமுறுக்கு அட்வான்ஸ் ஊழலிலிருந்து எப்படித் தப்புவது என்று திணரிக் கொண்டிருந்தார்

நாள் நெருங்க நெருங்க, அவரைக் கவலைகள் பிடித்துத் தின்ன ஆரம்பித்துவிட்டன. கொடுவால் மீசைக்காரன் எப்போது வந்து விசயத்தை உடைக்கப் போறானோ? எங்காவது தலைமறைவா ஓடி ஒளிந்துவிடலாமென்றால் சீதை அல்லவா பாஸ்போட் வழங்கித் தொலைக்க வேண்டும்?

அன்றைக்கு சீதாப் பாட்டி பா.மு. கழகத்திலிருந்து வீட்டுக்கு வந்தால், போர்டிகோவில் ஒரு கார் நின்றுக்கொண்டிருந்தது. யாருடைக் கார் அது என்று தனக்குள் யோசித்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள். அவள் கண்ட காட்சி அவளை மெய் சிலிர்க்க வைத்தது.

அப்புசாமி சாஷ்டாங்கமாக ஒரு கொடுவால் மீசைக்காரரை நமஸ்காரம் செய்து, அன்னாருடைய காலைப்பிடித்துக் கொண்டிருந்தார்.டிப்ளமாடிக்காக ஓர் அழுத்தமான கனைப்பு கொடுத்தாள், வாசற்படி பக்கமிருந்து சீதாப்பாட்டி.

அப்புசாமி ”ஆ! சீதே! வந்திட்டியா.என்னக் காப்பாத்து சீதே…”என்று எழுந்து ஓடிவந்து சீதாப்பாட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டார்.

சீதாப்பாட்டி அவரைத் தட்டி கொடுத்து, ” பயப்படாதீங்கள். ஐ அம் ஹியர்… வாட் இஸ் த மாட்டர்?’என்று அபயம் கொடுத்த பிறகுதான், அவருக்கு உயிர் வந்தது.

சீதாப்பாட்டியைப் பார்த்ததும், ”கொண்டுவா முறுக்கை!”என்றார் மீசைக்காரர்.

”வாட் நான்ஸன்ஸ் ஆர் யூ டாக்கிங்…யார் நீங்கள்?ஹ¥ ஆர் யூ?” என்று கர்ஜித்தாள் சீதாப்பாட்டி. ”என்ன ‘கட்ஸ்’ இருந்தாள் இங்கே வீட்டுக்குள் வந்து என் ஹஸ்பண்டை மிரட்டுவீர்கள்?முறுக்காவது கிறுக்காவது.’

”நன்றாயிருக்கம்மா நீங்க பேசறது. கெளரவமா பெரிய இடத்து ‘முறுக்கம்மா’ ஆயிற்றே என்று வீடு தேடி வந்து அட்வான்ஸ் நூறு ரூபாய் கொடுத்தால், அதை வாங்கி முழுங்கிட்டு, முறுக்கு கிறுக்கு என்றா பேசுறீங்க!”

சீதாப்பாட்டிக்குச் சட்டென்று புரிந்தது. அடுத்த தெரு முறுக்கு சீத்தையம்மாவைத் தேடி தவறுதலாக இந்த நபர் இங்கே வந்திருக்கிறார். அப்புசாமி அவரைப் பயன்படுத்திக் கொண்டு விட்டார் போலும். ”டோண்ட் வொர்ரி” என்றாள் சீதாப்பாட்டி அமைதியாக. ”எல்லாப் பட்சணங்களுக்கும் யார் அட்வான்ஸ் வாங்கினார்களோ அவரே வந்து செய்து தருவார். ப்ளீஸ்… உங்கள் அட்ரஸைக் கொடுத்துவிட்டு போங்கள்”

”சீதே..” அப்புசாமி திணறினார்.

”இவரா …இவரா வந்து பலகாரம் பண்ணுவார்?” லிங்கப்பா திகைத்தார்.

சீதாப்பாட்டி சிரித்தாள் அலட்சியமாக. ”யூ டோண்ட் நோ ஹிம். கல்யாண பலகாரம் செய்வதற்கென்றே அவதாரம் பண்ணினவராக்கும் இவர். இவர்தான் என் குரு. இவரிடம்தான் நான் கற்றுக்கொண்டதெல்லாம். ரொம்ப அடக்கமானவர். அதனால் இப்படி நடுங்குகிறார். ஐ ஷல் ஸீ இட் இஸ் டன்… நீங்கள் போய் வாருங்கள்.”

அவர் போனதும், சீதாப்பாட்டியின் பார்வை அப்புசாமியின் மேல் பாய்ந்தது. ”எவ்வளவு நாளாக இந்தமாதிரி ·ப்ராட்? வேர் இஸ் தட் மணி? மேசை மீது வையுங்கள் ”என்றாள்.

அப்புசாமி பூசை மணியைக் கொண்டுவந்து பவ்யமாக வைத்தார்.

”ஐ ஸே, கரன்ஸி!” என்று சீதாப்பாட்டி அதட்டிய அதட்டலில், அப்புசாமி இரண்டு கைகளையும் மேலே தூக்கினார்.

”சீதே… நீ சொல்றதை நான் செய்கிறேன். ரூபாய்க்கு ஒரு தோப்புக்கரணமா. நூறு போட்டுவிடட்டுமா?”

சீறினாள் சீதாப்பாட்டி: ”ஹ¥ வான்ட்ஸ் யுவர் அக்ளி பஸ்கீஸ்? உங்களை எப்படி டீல் பண்ணுவதென்பது எனக்குத் தெரியும்.
பி ப்ரபேர்ட்…”

விடியற்காலை நாலு மணி. ‘சரக்’ என்று அப்புசாமியின் துப்பட்டி பறிமுதலாயிற்று.

” ஓ! நீயா சீதே! காப்பி சாப்பிடுவதற்காக நான் சமையலறைக்கு வரணுமா? என் சமர்த்துக் கண்ணில்லையா, கொண்டு வந்துடுடா மணி!” என்று செல்லம் கொஞ்சினார் அப்புசாமி.

“காப்பி வேறு எக்ஸ்பக்ட் பண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? சீக்கிரம் வந்து அரிசியை இடியுங்கள்! நைட்டே ஊறப்போட்டு விட்டேன்,” என்று உறுமினாள் சீதாப்பாட்டி.

அப்புசாமி புரியாதவரைப்போல, ”அரிசியை இடிக்கிறதா? எதற்குச் சீதே?” என்றார்.

”வாயை மூடிக்கொண்டு ஒபே மை ஆர்டர்ஸ்… எடுத்துக் கொள்ளுங்கள்அந்த
உலக்கையை!”

”எதற்குச் சீதே இதெல்லாம்?”

”இதுதான் உங்கள் கொழுப்பு கரைவதற்கான எக்ஸ்ர்ஸைஸ்கள்! சீக்கிரம் நைஸாக அரிசியை இடிக்கணும். மிஷின் தோற்றுப் போகணும்.”

”சீதே! இது அநியாயம், அக்கிரமம். என்னைப் பார்த்தா உலக்கை போடச் சொல்கிறாய்?”

”எஸ்…..”என்ற சீதாப்பாட்டியின் கண்களில் கறாரும் கண்டிப்பும்…கொப்பளித்தன.

”என்ன சீதே…மாவு எதற்கு? எதற்கு இதை இடிக்கச் சொல்கிறாய்?”

”எதற்காக? யுவர் குட் ஸெல்·ப் இஸ் கோஸ்ட் டு மேக் கல்யாண முறுக்கு! முறுக்கு
செய்ய உங்களுக்கு ட்ரெயினிங் தரப் போகிறேன். ஒருவாரம்.”

அப்புசாமிக்கு உலக்கையைப் பார்த்ததும் அழுகை அழுகையாக வந்தது.

”க்விக்! சீக்கிரம் ஆகட்டும்… உலக்கையை எடுங்கள். டோன்ட் ஹோல்ட் இட். ஸ்ட்ரெய்ட்… கொஞ்சம் சாய்வாக …கரெக்ட்…இடியுங்கள்!” என்று அதட்டினால் சீதாப்பாட்டி. ஒரு வாரத்துக்கு முறுக்குப் பயிற்சியில் சிக்கிய அப்புசாமி படாதபாடு பட்டுவிட்டார். அப்படியும், முழுசாக ஒரு வட்ட முறுக்கு செய்ய அவரால் முடியவில்லை.

குறிப்பிட்ட தினம். கல்யாண வீட்டுக் ஆள் காரில் வந்தான். ஈவு இறக்கமில்லாமல் சீதாப்பாட்டி அப்புசாமியை ஏற்றுமதி பண்ணி விட்டாள்.

அப்புசாமி வியர்த்து வழியக் கல்யாண வீட்டில் சமையல் கட்டில் நின்று கொண்டிருந்தார். எப்படி அடி உதை படாமல் இந்த வீட்டிலிருந்து வெளியேறுவது? இந்த லட்சணத்தில், ” எஜமானர் ஒரு ஸாம்பிள் முறுக்கு கொண்டு வரச் சொல்கிறார்!” என்று ஆள் வேறு வந்து விட்டது.

அப்புசாமி மாவைப் பிசைய, மாவு அவர் வயிற்றைப் பிசைந்தது. கொதிக்கும் எண்ணெயில் குதித்து விடலாமா என்று கூடப் பார்த்தார்: ஆனால் எண்ணெய் போதுமான அளவு சூடாகவில்லை.

கார் ஸ்டேரிங்கை ஒடிப்பது போல கஷ்டப்பட்டு ஒரு பெரிய முறுக்குக்கு மாவை வளைத்துக் கொண்டிருந்தார் அப்புசாமி. ”ஏண்டாப்பா, நீ என்ன கைமுறுக்கு பண்ணுகிறாயா, கால் முறுக்கா? கண்ணராவியாக இப்படியா முறுக்குச் சுற்றுவது?” என்ற குரல் கேட்டுத் திரும்பினார்.

எங்கோ கேட்ட குரல்; மிகவும் பழக்கமானது மாதிரி இருந்தது.

திரும்பிப் பார்த்தால் கீதாப்பாட்டி!

அண்ணலும் நோக்கினன்… அவளும் நோக்கினள்.

”யாரு! கீதா மாமியா?” என்று அப்புசாமியின் வாய்பிளந்தது. சீதாப்பாட்டியின் பரம வைரியும், எதிரியும் ஏற்கெனவே பல தடவை சீதாவிடம் மோதி வெற்றிக் கண்டவளுமான கீதாப்பாட்டிதான் அது.

”யாரு! அப்பு சாமி மாமாவா! அடப் பாவமே!” என்று ஆச்சரியப்பட்ட கீதாப்பாட்டி அடுத்த கணம், ”ஐயோ பாவமே! உங்களுக்கா இந்தக் கதி! வீடும் வாசலும் காரும் சைக்களுமாய் ஓகோன்னு இருந்துட்டு, இப்போது பரிசாரகமா பண்ணுகிறீர்கள்– அதுவும் பண்ணத் தெரியாமல்?”

அப்புசாமி முழங்காலிலிருந்த மாவை பிய்த்துக்கொண்டே, ” அதை ஏன் கேட்றீர்கள்? இன்னும் கார், மோர், வீடு, என் பொண்டாட்டி சீதை எல்லோரும் அப்படியே முழுசாக இருக்கிறார்கள்! என் தலையிலே எழுத்து இப்படி வந்து முறுக்கு சுற்றுகிறேன்.”

”என்ன ஒரு கொழுப்பும் திமிரும் உங்க பொண்டாட்டிக்கு இருக்கணும்? நீங்க இப்படி முறுக்குச் சுற்றி சம்பாதிச்சுதான் அவளுக்கு குடித்தனம் நடக்கணுமா? மூஞ்சிலே கொட்டிக் கொள்கிற மாவைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளட்டுமே… அநியாயம்… அக்கிரமம்… கைத்தடியிலே நாலு போடறதில்லையா ஒரு ஆம்பிளை… நகருங்கோ சொல்கிறேன்… முறுக்கு சமாசாரத்தைப்பற்றி இனிக் கவலையை விடுங்கள் நான் பார்த்துக்கறேன். ஐயோ பாவம். நறநறன்னு இந்த மாவைப் போட்டா முறுக்கு வெடிச்சு மூஞ்சியெல்லாம் போயிருக்குமே…. நான் எல்லாக் காரியத்தையும் பண்ணிவிடட்டுமா உங்களுக்கா?”

”கீதா மாமி!” என்றார் அப்புசாமி, தழு தழுக்க. உங்களைத் தெய்வம்தான் கொண்டுவந்து விட்டுருக்குது. எப்படி நீங்க இந்த கல்யாண வீட்டுக்கு வந்தீர்கள்?”

”இந்த வீட்டுக்காரர்களுடைய கரும்பு மில்லெல்லாம் எங்க கிராமத்து பக்கம்தானே. ஊர் பூரா பத்திரிகை வைத்து அழைத்தார்கள். என்னை நேரிலேயே வந்துக் கூப்பிட்டுப் போனார்கள். கல்யாண சமையலுக்கு உதவி செய்ய. நகருங்கோ, போய்க் கையை நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். ஒரு காப்பிப் போட்டுத் தர்ரேன். குடிச்சிட்டு அக்கடா என்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.”

”கீதே!”என்றார் அப்புசாமி உணர்ச்சிப் பரவசமாக.

ஆனால் கீதாப்பாட்டியின் உள்நோக்கம் அவருக்கு எங்கே தெரியப் போகிறது? தான் செய்கிற ஒவ்வொரு முறுக்கையும் அதிரசத்தையும் கீதாப்பாட்டி கரெக்டாக எண்ணி, அதிலே எத்தனை இழைகள் இருக்கிறதோ அதையும் கூட எண்ணி, அதற்கு கூலி வசூலிக்கப் போகிறாள் என்பதை அப்புசாமி அறியமாட்டார்.

மாலையில் சீட்டி அடித்துக் கொண்டு, உல்லாசமாக உடம்பெல்லாம் பல்லாக ஒரே ஆனந்தமாக வீட்டுக்கு வந்தார் அப்புசாமி.

சோபா மீது ஜிங் என்று ஏறிப் படுத்துக்கொண்டவர், ”எண்ண எண்ண இனிக்குது… ஏது ஏதோ நடக்குது என்றுப் பாடத் தொடங்கினார் உல்லாசமாக.

சீதாப்பாட்டி திடுக்கிட்டுப் போனாள்.

”ஏன் கிழவி வாயைப் பிளந்துக் கொண்டு நின்னுட்டே? அடி உதை பட்டுக் கொண்டு வராமல், சீட்டி அடித்துக் கொண்டு வருகிறேனே என்று வாயை பிளந்துட்டியா? ஒரே புகழ் மாலைகள்தான். இந்தா உன் கழுத்திலே ஒரு முறுக்கை மாட்டிக் கொள்!” என்று அப்புசாமி ஒரு பெரிய முறுக்கை சீதாப் பாட்டியின் கழுத்தில் மாட்டினார். ” நீங்க …நீங்க… செய்ததா ?” விக்கித்துப் போனாள் சீதாப்பாட்டி.

”நான் ஏன் செய்கிறேன்! குரு மகராஜி கீதா மாதாகீ ஜேய்! அனாதைக்கு அபயம் கொடுத்த கீதா தேவி வாழ்க!” அப்புசாமி கூறினார்.

சீதாப்பாட்டிக்கு, கீதா என்று கேட்டதும் மெய் சிலிர்த்தது. ”வாட் டிட் யூ ஸே! என்ன பேர் சொன்னீர்கள்?”

”சொல்லட்டுமா! குரு மகராஜி கீதா மதாகி ஜேய் என்றேன்! அபயம் கொடுத்த கீதாப்பாட்டி அடியோடு வாழ்க என்றேன்!”

”கீதா!” சீதாப் பாட்டி பல்லை நறநறத்தாள். உடம்பெல்லாம் அவளுக்கு வியர்த்தது. ”யூ மீன் தட் ரெச்சட் ஓல்ட் வுமன்.”

அப்புசாமிக்கு ஆனந்தம் தாங்கவில்லை, பாட்டியின் பதற்றத்தைப் பார்த்து.

”ஆமாம் ஆமாம் என் கைகேயி! உன் பிரியமான சினேகிதி கீதாப் பாட்டியைத்தான் வாழ்த்திக் கொண்டிருக்கிறேன். கல்யாண வீட்டில் கையையும் மாவையும் பிசைந்து கொண்டு நின்றிருந்தேன். கடவுள், கடவுள் என்கிறார்களே–அது உயரமான ஒல்லிக் கிழவியாக உருவெடுத்து அங்கே வந்தது. பார்த்தால், கீதாப் பாட்டி. அவ்வளவுதான்! அதோ வந்து கொண்டிருக்கும் கை கொடுத்த தெய்வத்தை…முறுக்கைக் கொடுத்த தெய்வத்தை பார். பார்…பார்…எனக்காக தன் கரிய நீண்ட மேனி, மேலும் கரியடைய முறுக்குகள் செய்து அடுக்கியத் திருவுருவத்தைப் பார்!”

சீதாப் பாட்டி கண்கள் ஆத்திரத்தாலும், வியப்பாலும் விரிய வாசலைப் பார்த்தாள். படு தைரியமாக கீதாப்பாட்டி வாசற் படி ஏறி உள்ளே வந்து கொண்டிருந்தாள்.

அப்புசாமி , ”வாருங்கள் மாமி, வாருங்கள்.” என்று விரைந்து முன்னே ஓடிச் சென்று வரவேற்றிருப்பார், சீதாப்பாட்டியின் கை அவருக்கு ‘வாக்குவம் பிரேக்’ போடாதிருந்தாள்.

வந்தவளை வா என்று சீதாப் பாட்டி சொல்லவில்லை.

ஆனால் கீதாப் பாட்டி அதிகாரம் செய்து வரவேற்பை வேண்டினாள். ” ஏண்டியம்மா சீதே! வந்தவளை வாவென்று சொன்னால் உனக்கென்ன வாய் முத்தா உதிர்ந்துவிடும்? வீட்டுக்காரர் பாவம் வயசானவர்–அவருக்குத் சொத்தில்லையா, சுதந்திரமில்லையா, மனுஷயசகாயம் இல்லையா? அவர் இப்படி நாலு கல்யாண வீட்டிலே கையைச் சுட்டுக் கொண்டு பரிசாரகம் பண்ணிப் பிழைக்கிற மாதிரி நடுரோட்டில் விட்டுடியா! உன்னைக் கேட்பார் இல்லை என்று நினைக்துக் கொண்டிருக்கிறாயா? கேட்பதற்க்குதான் என்னைக் கடவுளே இங்கு அனுப்பிவிட்டார்!”

”ஷட் அப்!” சீறினாள் சீதாப் பாட்டி, ”ஒழுங்கா வெளியே போய்விடுங்கள். இது பூரா பூரா எங்க ·பேமலி மேட்டர்!

”எந்த எலி மாட்டரா இருந்தா என்ன,எந்தப் பெருச்சாளி மாட்டரா இருந்தாள் எனக்கென்ன? நான் எத்தனை முறுக்கு எத்தனை இழை சுற்றினேனோ அத்தனைக்கும் எனக்குக் கூலி வந்தாகணும். நீ படிச்சு கிழிச்சவளாச்சேனு பேப்பரிலேயே போட்டுக் கொண்டு வந்து விட்டேன். உங்க வீட்டுக்காரர் என் காலைப்பிடித்துக் கொண்டு கெஞ்சினதற்காக வேணும்னா, ஒரு ரூபா கம்மிப் பண்ணிக்கொள். ஏழு நெளியிலே எழுப்பதோரு முறுக்கு, ஐந்து நெளியிலே நூறு முறுக்கு, மூன்று நெளியிலே முன்னூறு, எழுபத்தோரு அதிரசம், ஸ்வீட் நானூறு எல்லாமாகச் சேர்த்து முன்னூறு ரூபா எனக்குச் சேரணும். தெரிந்ததா? உன் வீட்டுப் படி நான் ஏன் ஏறணும் இல்லாட்டா? கடன்காரியாக்கும் நீ? வசூலுக்காக நான் வந்திருக்கிறேனாக்கும்…”

”ஓ! மை குட்னஸ்! முன்னூறு ரூபா பில்லா!”

“பில்லோ வைக்கோலோ!பணத்தை முன்னே எண்ணி வை கீழே!” கீதாப்பாட்டி வாசற்ப்படியில் நின்று கொண்டு கீச்சிட்டாள். அப்புசாமியை எரிப்பதுபோல் பார்த்துவிட்டு, சீதாப்பாட்டி பணத்தை ஓர் உறையில் போட்டு, கீதாப் பாட்டியிடம் வீசிப் போட்டாள்.

“லட்சுமியை தூக்கியா எறியிறே? எல்லாம் பறி போய் நட்ட நடு ரோட்டிலே நிற்கப் போறே பார்,” என்று ஆசிர்வதித்து விட்டு கீதாப் பாட்டி நகர்ந்தாள்.

கீதாப் பாட்டி போனதும் அப்புசாமி, “ஹ ஹ! ஒரு வேடிக்கை பார்த்தாயா?” என்று சிரித்தார். “உன் புருஷன் எப்படி கல்யாண வீட்டிலிருந்து அடி உதை வாங்காமல் வந்தான் பார்த்தாயா? அவர்கள் என்னை கரும்பு பிழிகிற மாதிரி பிழிந்து விடுவார்கள், அது இது என்றாயே எப்படிக் கடைசியில் மாலைப் போட்டு அனுப்பினார்கள் பார்த்தாயா? இந்த அப்புசாமி மீது ஒரு பயல் கை வைக்க முடியாது!” என்று பெருமைப்பட்டார்.

சீதாப்பாட்டி அப்புசாமியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன அப்படி வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாய்? ஹி ஹி! எனக்கு கூச்சமாயிருகிறது!”

“ஷட் அப்!” என்று சீறின சீதாப்பாட்டி, “கெட் அப்·பர்ஸ்ட்!” என்று கூவினாள்.”எப்படி உங்களிடமிருந்து அந்த நஷ்டத்தை ரெகவர் பண்ணுவதென்பது எனக்கு தெரிந்து விட்டது. நம் வீட்டிலே பெரிய கூடையாக இருக்கிறதல்லவா? அதை எடுத்துக்கொண்டு வாருங்கள் சொல்கிறேன் க்விக்!”

“எதுக்கு சீதே கூடை?” அப்புசாமி குழம்பினார். “ஏதாவது மாஜிக் செய்யப் போகிறாயா?”

“எஸ்! மாஜிக்தான்! ஆனால் செய்யப்போரது நீங்கள்! இடம் மெரினா பீச்.”

“சீதே… நீ சொல்கிறது புரியவில்லையே… எனக்கு என்ன மாஜிக் தெரியும்? மாஜிக் பண்ணி முன்னூறு ரூபாய் சம்பாத்துக் கொடு என்கிறாயா?”

“நோ… நோ நம்ம வீட்லே நீங்கள் முறுக்கு டிரெய்னிங் எடுத்துக் கொண்டபோது செய்த ஏராளமான முறுக்கு ஸ்க்ரேப்ஸ் அப்படியே இருக்கிறது. அதையெல்லாம் எடுத்துப்போய் பீச்லே தினமும் கொஞ்சமாய் விற்றுக் கொண்டு வாருங்கள்! கல்யாண வீட்லே உங்களுக்கு குடுத்த ரிவார்டை, பீச்சிலே உங்களிடம் முறுக்கு வாங்கிறவர்கள் கட்டாயம் கொடுப்பார்கள்! கெட் ரெடி…த்ரீ ஓ கிளாக் ஆகப்போகிறது!”

“சீதே” என்று அப்புசாமி மீண்டும் கருணை மனு கொடுத்துப் பார்த்தார்.

“இந்த வீட்டிலே என்ட்டர் ஆகணும்னு அபிப்பிராயமிருந்தால், முறுக்கை பீச்சிலே விற்றுவிட்டு வாருங்கள். லெட் மீ ஸீ…எந்த கிழவி வந்து எங்களை இப்போ ஸேவ் பண்ணுகிறாள் என்று!”

“முறுக்கேய்… தேங்காய்ப் பால் முறுக்கேய்… கை… முறுக்கேய்… கால்முறுக்கேய்…” என்று அப்புசாமி கடற்கரையில் குரல் எழுப்பிக் கொண்டு, வியர்த்து விறுவிறுக்கச் சென்று கொண்டிருந்தார்.

“அம்மா!அம்மா! கால் முறுக்குமா, வாங்கிக் குடுமா!” என்று ஒரு குழந்தை தாயாரிடம் கேட்டது.

அப்புசாமி முறுக்குக் கூடையை இறக்கினார். “என்ன இது, முறுக்கெல்லாம் இப்படி உடைந்திருக்கிறது,” என்றாள் கூடையை இறக்கச் சொன்ன பெண்மணி.

“கால் முறுக்கு என்றுதானே சொன்னேன். முக்கால் முறுக்கு உடைந்து விட்டது! ஹி ஹி! பார்த்து போனி பண்ணுங்கமா. சீதேக் கிழவி பொல்லாதவள்…எட்டணா துட்டாவது கொண்டு போய்க் கொடுக்காட்டி வாட்டி வதைத்து விடுவாள்…”

“யாரது சீதாக் கிழவி?” என்றாள் அந்தப் பெண்.

“அதை ஏன் கேட்கிறீங்க? அது ஒரு பிடாரி! நீங்க முறுக்கு துட்டை சீக்கிரம் எடுங்க தின்னுப் பாக்கறதுக்கு முன்னாடி!” என்று கேட்டு, ஐந்து நயா பைசாவை வாங்கிக்கொண்டு, “முறுக்கேய் என்று கத்தியவாறு அடுத்த கிராக்கி தேடியும், இந்தக் கிராக்கியிடமிருந்து தப்பிப்பதற்க்கும் ஓடத் தொடங்கினார் அப்புசாமி.

Print Friendly, PDF & Email

1 thought on “முறுக்கிக் கொண்டார் அப்புசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *