எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஒருவேளை இருந்திருப்பின் (இப்படி ஒருவேளை என்று சிந்திப்பதில் நான் பழக்கப்பட்டுவிட்டேன்) நான் இதைத்தான் வேண்டியிருப்பேன்.
கடவுளே அந்த காமன் மேன் ஊருக்குள் குண்டு வைத்துவிட்டு போன் செய்வதற்கு என்னை தேர்ந்தெடுக்கக் கூடாது. ஒருவேளை என்னை தேர்ந்தெடுத்திருந்தால், கடவுளே நான் அன்று விடுமுறையில் வெளிநாடு சென்றிருக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு வெளிநாட்டிற்கு சென்றிருக்கவில்லையெனில் கடவுளே அவனுக்கு டவர் கிடைக்காமல் போய்விட வேண்டும்.
துரதிஷ்டவசமாக ஒருவேளை டவர் சரியாக கிடைத்துவிட்டால், அன்று மழைபெய்ய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருக்க வேண்டும். நிச்சயமாக அந்த மொட்டைமாடியில் கொட்டும் மழையில் முன் யோசனை இல்லாத அந்த காமன் மேனால் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஆனால் எல்லாம் நிகழ்ந்துவிட்டது. அவன் எனது நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம் என அனைத்திலும் புகுந்து குழப்பிவிட்டான். அவன் வந்தானா? வரப்போகிறானா? வருவானா? என்று சரியாக புரியவில்லை.
எனது காக்கி யூனிபார்மின், கால்சட்டைப் பகுதியில் நான் மட்டுமே உணரக் கூடிய எனது தொடைகளின் நடுக்கத்தை புறக்கணித்துவிட்டு நிதானித்து யோசித்ததில், சில விஷயங்கள் நியாபகத்திற்கு வந்தது.
ஆம் நான் தான் நிச்சயமாக, சத்தியமாக, சந்தேகத்திற்கு இடமில்லாமல் சென்னை நகரத்துக் கமிஷனர் மிஸ்டர் மாறார். அதில் எந்த குழப்பமும் இல்லை. பயம் என்ற வார்த்தைக்கு எதிராக பல வருடங்களாக பெற்ற பயிற்சியின் விளைவாக எனது முகத்தில் ஒரு துளி கூட சலனத்தை காண முடியாது.
‘இந்த தொப்பைய வச்சுகிட்டு உன்னால் எப்படி அக்யூஸ்ட்ட புடிக்க முடியும்” அப்படின்னு எந்தவொரு போலிஸ் கான்ஸ்டபிளையும், வாய்விட்டு திட்டமுடியாத சூழ்நிலையில் தான் என் உடல் திறன் உள்ளது. இது தான் வெகு எதார்த்தம் என்கிற போர்வைக்குள் சுலபமாக என்னைத் திணித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில், என்னை நான் கமிஷனராக நினைத்துக் கொள்வதில் தாழ்வு மனப்பான்மை கொள்ளத் தேவையில்லை என பல லட்சம் முறை எனக்கு நானே சொல்லிக் கொண்டதால், எனக்கு இப்பொழுது ஒரு வித அசட்டுத் தைரியம் வந்துவிட்டது. நானும் ஒரு கமிஷனர் என்று விரைப்பாக சொல்லிக் கொள்வதில். பின் அந்த சுருங்கிப் போன காக்கி உடையைப் பற்றி யாரும் கண்டு கொள்ள வேண்டாம்.
நிகழ்ந்து போன எனது அன்றைய தினத்தைப் பற்றியும், அவனைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். அன்று அதிகாலை எனக்கு அவனிடமிருந்து போன்கால் வந்தது. சென்னை நகரின் 5 முக்கியமான இடங்களில் வெடிகுண்டுகளை வைத்திருக்கிறானாம். அவனிடம் படிப்படியாக பேச்சு கொடுத்து விசாரித்துப் பார்த்ததில் என்னை ஒரு இடத்தில் ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டான். எனக்கு பொறையேறிப் போன அந்த விஸயம் என்னவெனில், இன்டர்நெட்டில் பார்த்து அந்த வெடிகுண்டுகளை தயாரித்தேன் என்று அவன் சொன்னது தான். கடவுளே இந்த விஷயத்தை யாருக்கும் தெரியாமல் அப்படியே அமுக்கி விட வேண்டும். இல்லையென்றால் விஷயம் விபரீதமாகிவிடும். பின் வெடிகுண்டு முருகேஷன் கூட விபரீதமாக என்னிடம் விளையாட ஆரம்பித்துவிடுவான்.
இப்பொழுதும் என்னுடைய ஞாபகத்தில் உறுத்திக்கொண்டே இருக்கும் விஷயம் இதுதான். நான் கடைசியாக அவனிடம் கேட்க நினைத்தேன். அவன் ஏன் ஒரு கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தின் மொட்டைமாடியை தேர்ந்தெடுத்தான் என்று. பதற்றத்தை மறைக்க வேண்டும் என்ற பதற்றத்தில் அதைப் பற்றி மறந்துவிட்டேன். ஒரு வேளை மழை வந்திருந்தால் ஆட்டம் பாதியில் நின்றிருக்குமே. அவன் ஏன் ஒரு பாதுகாப்பான அறையை தேர்ந்தெடுக்கவில்லை. அது குறைந்தபட்சம் வெயில் கொடுமையிலிருந்தாவது அவனைக் காப்பற்றியிருக்கும்.
கட்டி முடிக்கப்படாத அந்த கட்டடத்தை பாதியில் நிறுத்திவிட்டு பாதுகாப்புக்குக் கூட ஆட்களை போடாமல் அநாதையாக விட்டுச் சென்ற அந்த முதலாளியை தேடிக் கொண்டிருக்கிறேன். அவன் நியாயமான காரணம் எதையாவது கூறுவானேயானால், ஏதேனும் பரிசளிக்கலாம் என்றிருக்கிறேன். ஏனெனில் என் மண்டை குழம்பிவிடாமல் இருக்க அந்த பதில் உதவக் கூடும்.
பின் அந்த தம் கட்டும் பெண் நடாஷாவைப் பற்றி கூற வேண்டும், கடவுளே அவள் வாய் வழியாக புகையை உள்ளிழுத்து மூக்கு வழியாக வெளியிடுகிறாள். எனக்கு மூச்சு முட்டுகிறது. நான் அவளிடம் இவ்வாறு கூறினேன். மீடியாவில் ரிப்போர்ட்டராக இருக்கும் ஒரு பெண் தம் அடிப்பவளாக இருக்க வேண்டும் என்ற இமேஜ் கட்டாயமில்லை என்று, அதற்கு அவள் கூறுகிறாள் ‘அதைப் பற்றி நான் முடிவெடுக்க முடியாது. அதைப் பற்றி அவனிடம் போய் கேள் என்கிறாள்” என்ன கொடுமை இது.
நான் சத்தியமாக நினைத்துì கூட பார்க்கவில்லை. அவளை மிரட்டியவுடன் அவள் பயந்துவிடுவாள் என்று. அவள் என்னைப் பார்த்து பயந்துவிட்டாள். கடவுளே வெகு நாட்களுக்குப் பின் என் மிரட்டலுக்கு பயந்திருக்கிறாள் ஒரு பெண். என் மனைவியைப் பற்றி என்ன சொல்வது. அவளைப் பார்த்துதான் பயப்படாமல் வசனம் பேசுவதைக் கற்றுக் கொண்டேன். இப்பொழுது எதற்கு அவளைப் பற்றி. நினைவுகளுக்குத்தான் எவ்வளவு சக்தி. அவளைப் பற்றி நினைத்தவுடன் எனது கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. அந்த காமன் மேன் மட்டும் 5 நிமிடம், 10 நிமிடம் என்று எனக்கு நேரம் குறிக்காமல் இருந்திருப்பானேயானால், அவளை இன்னும் சிறிது மிரட்டி சந்தோஷம் அடைந்திருப்பேன். அவள் என்னைப் பார்த்து பயப்படுகிறாள். இது போன்ற நிகழ்ச்சி எப்பொழுதாவது ஒருமுறை தான் வாழ்க்கையில் நடக்கும், ஆனால் அதையும் யாராவது வந்து கெடுத்து விடுவார்கள்.
மேலும் இந்த விஷயம் சற்று உÚத்தலாக இருக்கிறது. ஊருக்குள் ஒருவன் வெடிகுண்டு வைத்துக் கொண்டிருக்கிறான். ஒரே ஒரு கேமராமேன் ஒரே ஒரு நிருபர், (அவளும் சாவகாசமாக தம் அடித்துக் கொண்டு), ஒரே ஒரு சேனல். என்ன கொடுமை இது. இப்படியெல்லாம் கருமித்தனமாக இருந்தால் எனது முகம் எப்படி 10, 15 சேனலில் தெரியும். நான் எப்படி பேட்டி கொடுக்க முடியும். புரிந்து கொள்ளாத புரொடியூசர், சாரி பொதுமக்களுக்கு மத்தியில் இந்த கமிஷ்னர் வேஷத்தை போட்டுக் கொண்டு நான் படும் அவஸ்தை இருக்கிறதே அது எனக்குத்தான் தெரியும்.
இதற்கு நடுவில் அந்த ஆரிப் வேறு, அவனுக்கு மனதிற்குள் சாமிபட விக்ரம் என்று நினைப்பு, பார்ப்பவர்களையெல்லாம் அடித்துì கொன்றுவிடுகிறான். அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக் கொண்டு ஜேம்ஸ் பாண்ட் படம் பார்ப்பவனையெல்லாம் போலீஸ்காரனாக்கினால் இப்படித்தான்.
ஆனால் அவனிடம் ஒருவித நுண்மையான நகைச்சுவைத் திறன் உள்ளது. அதைப் புரிந்து கொள்ள அவனைப் போன்றே நுண்மையான நகைச்சுவைத் திறன் உங்களுக்கும் வேண்டும், அந்த காமன் மேனுக்கு ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து கடத்தியவன் ஒருவன் எங்களிடம் சிக்கினான். அவனிடமிருந்து உண்மையை வரவழைக்க வேண்டும் என்று இந்த ஆரிப்பிடம் வேலையை ஒப்படைத்திருந்தேன். அவனும் வலி தாங்குவதற்காக கொக்கைன் என்ற போதை மருந்து எடுத்துக் கொண்டு வந்திருந்தான். கொடுமை என்னவெனில் ஆரிப் செய்த காமெடியை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம். அவன் அதை சகித்துக் கொள்ள முடியாமல் அனைத்து உண்மைகளையும் சொல்லி விட்டானாம். எத்தனையோ லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்களில் அவன் அடி வாங்கியிருக்கிறானாம். ஆனால் ஆரிப் செய்த காமெடியை பார்க்க சகிக்க முடியவில்லையாம். இது என்ன புதுவிதமான டார்ச்சர் என்று என்னிடம் சண்டை பிடிக்கிறான் அவன். அவனுக்கு மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறதாம். வசனம் பேசி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது அவனை இப்படி பிடித்து வந்து காமெடி பண்ணியது அவனுக்குô பிடிக்க வில்லையாம். அவனை ஒரு அடி கூடி அடிக்காமல் அவமானப் படுத்தி விட்டானாம் அந்த ஆரிப். ஆனால் என்னால் பொÚத்துக் கொள்ள முடியாதது அவன் கூறிய அந்த ஒரு வார்த்தைதான், கொக்கைனின் தாக்கம் குறைவதற்காக அவனுக்கு ஊசி போட வந்த மருத்துவரைப் பார்த்து அவன் கூறினான். ‘ஸடெர்லைட் பண்ணிருக்கிங்களா” அப்படின்னு. கடவுளே…….. அவன் உண்மையிலேயே மணிரத்தினம் படத்தில் நடிக்கத் தகுதி உடையவன் தான்.
இப்பொழுதெல்லாம் அதைப்பற்றி யோசிக்க நேரம் இல்லை. ஆனால் சேதுவை பற்றி சொல்லியாக வேண்டும். அவன் அவ்வளவு சிரிப்புக்குரியவன் இல்லை. அவனால் அதை சற்று குறைத்துக் கொள்ள முடியும். சில மணி நேரங்களுக்கு முன் அவன் செய்த செயல் இருக்கிறதே. அதை இப்பொழுது தான் கேள்விப்பட்டேன். ரோட்டில் சிவனேயென்று லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்த, ட்ராபிக் போலீசிடம் போய் சண்டை பிடித்திருக்கிறான் அந்த சேது. அந்த காவல்துறை அதிகாரி சற்று குழம்பிப் போனார். எதற்காக இந்த மனிதன் இப்படி சண்டைபிடிக்கிறான் என்று. ஆம் அந்த அன்பளிப்பு கொடுத்துக்கொண்டிருந்தவர் கூட சற்று குழம்பிப் போயிருந்ததாக கேள்விப்பட்டேன். அன்பளிப்பு கொடுப்பதும், வாங்குவதும் பணப்பரிமாற்றத்துக்கு நாம் கண்டுபிடித்த சுலபமான வழி அல்லவா. அதைப் போய் ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்.
இது வரை வரலாற்றிலேயே நடக்காத அந்த செயலை அதுவும் ட்ராபிக் போலீசிடம் இருந்து 100 ரூபாயை வாங்கி, லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டி வந்தவனிடம் கொடுத்து விட்டானாம். நல்லவேளை அங்கு யாரும் கை தட்டவில்லையாம். அந்த சேது உலக வழக்கைத் தெரிந்தே கொள்ள அவனது சம்பளத்தை பாதியாக குறைக்கலாம் என்றிருக்கிறேன். அவனது அழகான மனைவிக்கு ஹேர் ஸ்ட்ரெய்ட் பண்ணுவதற்கே அவனது சம்பளம் போதாமல் போக வேண்டும். அப்பொழுது தான் அவனுக்குத் தெரியும் அன்பளிப்பின் அருமை. போகிற போக்கில் அவன் அந்த ட்ராபிக் போலீசைô பார்த்து ‘100 ரூபாய் போட்டுக் கொடு அப்பொழுதுதான் தொப்பை குறையும் என்று கூறினானாம்’. நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனுக்கு அட்வைஸ் செய்வது. எனக்கு என்ன 6 பேக்ஸ் வயிறா இருக்கிறது. அவனுக்குத் தொப்பை வராது என்ற தைரியத்தில் திட்டியிருக்கிறான். ராஸ்கல். சரி இதை இதோடு விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.
அந்த காமன்மேன் கேட்ட 4 தீவிரவாதிகளையும் அழைத்து வருவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. பெங்கéரில் இருக்கும் அந்த தீவிரவாதியைì கேட்டால், கர்நாடகா கவர்ன்மென்ட் காவிரி பிரச்சனையையெல்லாம் இழுக்கிறது. இதெல்லாம் யாருக்குத் தெரியப் போகிறது. அடுத்த முறை அந்த காமன் மேன் சீட் குலுக்கிப் போடும் போது அனைத்து தீவிரவாதிகளும் தமிழ்நாட்டு ஜெயிலில் இருக்க வேண்டும் கடவுளே. அந்த அஹமத்துல்லா இருக்கிறானே அவன் ஏன் முதுகில் பிளேட் வைத்தவன் போல் உட்கார்ந்திருக்கிறான் என்று கேட்டால் முறைத்துப் பார்க்கிறான். இவனை தீவிரவாதி என்று சொன்னால், எங்கள் வீட்டிற்கு எதிர்த்தாற்போல் இருக்கும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பையன் சிரிக்கிறான். அந்த காமன் மேன் அவசரப்பட்டுவிட்டான். இவனையெல்லாம் கொள்வதற்கு ஒரு ஜீப்பை வெடிக்கச்செய்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.
எனக்கு முன்பே தகவல் வந்தது, அநாதையாக வெடிகுண்டை தாங்கி நிற்கும் அந்த ஜீப்பைப் பற்றி. அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்று நான் வழக்கம் போல் சும்மா விட்டுவிட்டேன். அப்படித்தானே இருந்தாக வேண்டும். எதிர்கேள்வியெல்லாம் கேட்காமல் சொல்வதை மட்டும் கேளுங்கள். அந்த காமன் மேன் அந்த ஜீப்பை எப்பொழுது நிறுத்தியிருக்கலாம் என்று யோசித்துப் பார்த்தேன். அது அந்த ஐந்து காஸ்ட்லியான, அழகான, பைகளை சென்னை நகரின் 5 முக்கிய இடங்களில் வைத்த கையோடு அந்த ஜீப்பையும் அவர் அங்கு ஓட்டிச் சென்று நிறுத்தியிருக்கலாம். அந்த இடத்தில் தான் யாரும் இல்லையே, யார் அவரை கேள்வி கேட்டிருக்கப் போகிறார்கள். எனது இப்பொழுதைய டவுட் அந்த ஜீப்பைப் பற்றியது இல்லை. அந்த ஐந்து பைகளை எதற்கு வைத்தார் என்றுதான். அவர் எந்த வெடிகுண்டுகளையம் வைக்கவில்லை என்று என்னிடம் சொன்னபின் நான் அந்தì கேள்வியை அவரிடம் கேட்க மறந்துவிட்டேன். யாரை ஏமாற்றுவதற்காக அந்த 5 பைகளை வைத்தார் என்றுதான் தெரியவில்லை.
ஆனால்,……….. ஆனால்……………. அவன்……. அவன்……….அவர் ……….. கசிந்துருகி கூறிய கதையை, அல்லது உண்மைச் சம்பவத்தை கேட்ட பின் என் இதயம் நெகிழ்ந்துவிட்டது. அவரை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் அவரது கதையைì கேட்டுவிட்டு பின்வாங்கிவிட நான் மட்டும் வழக்கம் போல் எதையும் தாங்கும் இதயத்தை பெற்றிருப்பதாக காட்டிக்கொண்டு, குறிக்கோளிலிருந்து சற்றும் விÄகாமல் அவர் இருக்கும் இடத்தை தேடிச் சென்றேன். சரி. அவன்ன்ன்ன் இருக்கும் இடத்தை தேடிச் சென்றேன். (ஆயிரம் தான் இருந்தாலும் அவன் ஒரு அக்யூஸ்ட். நான் ஒரு கமிஷனர். அதை நீங்கள் இல்லை நான் தயவு செய்து மறந்து விடக்கூடாது என்று என்னிடமே கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்)
வழக்கமாக அக்யூஸ்ட் இருக்கும் இடம் தெரிந்துவிட்டால், காக்கிச் சட்டையை கழற்றி எறிந்துவிட்டு, சாவகாசமாக சவரம் செய்துவிட்டு, குளித்து முழுகி, பிரெஸ்ஸாக புதுச்சொக்காய், போட்டுக் கொண்டுதான் செல்வேன். ஆனால் இன்று ரொம்ப அவசரம் என்பதால், பேண்ட் சட்டையை மட்டும் மாற்றிக் கொண்டுவிட்டு கிளம்பிவிட்டேன். அவன் இருக்கும் இடம் நோக்கி.
அங்கு
கமிஷனர் : எக்ஸ்கியூஸ்மி. என் வாட்ச் நின்னு போச்சு, டைம் என்னன்னு சொல்ல முடியுமா?
கா.மேன் : 6:10
கமிஷனர் : உங்க பை ரொம்ப கனமா இருக்கிற மாதிரி இருக்கு
கா.மேன் : யா, அப்கோர்ஸ்
கமிஷனர் : இல்ல. கனமா இருந்தா வீட்டுக்கு கொண்டுவந்துவிடலாம்னு…..
கா.மேன் : இல்ல வீடு பக்கத்துலதான்.
கமிஷனர் : அப்ப வேண்டாமா?
கா. மேன் : நோ தாங்ஸ்.
பின் அக்யூஸ்டை பார்த்து இப்படியெல்லாம் கேள்வி கேட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தால் வேலையை விட்டு தூக்காமல் என்ன செய்வார்கள்