புதுமனை புகுவிழா

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 31,015 
 
 

“ஏன்டா கோபாலு,……பசு மாட்டுக்கு சொல்லிட்டு வந்துட்டே இல்லே…?
எப்போ ஓட்டிட்டு வரேன்னான்?”

வாசல் பந்தலில் வாழைமரம் கட்டுவதை மேற் பார்வை பார்த்துக்கொண்டே என்னைப் பார்த்துக் கத்தினார் மாமா.

“சொல்லிட்டேன் மாமா……. விடியக்காலை நாலு மணிக்கே மாட்டோட
வந்துடுறேன்னான். ஃபங்ஷன் அஞ்சு மணிக்குத்தானே ஆரம்பிக்குது மாமா…?”

“நோ..நோ…ராத்திரியே மாட்டை ஓட்டிக் கிட்டு வந்து கட்டிடச்சொல்லுடா!
விடியக்காத்தாள அவன எங்கே தேடிப் பிடிக்கறது? கிரஹப்பிரவே சத்துக்கு
பசுமாடு கேட்டா இப்படித்தான் பிகு பண்ணிப்பானுங்க!”

மாமாவுக்கு எந்த விஷயத்திலும் அட்வான்ஸாக இருக்கவேண்டும். அவர்
ரெயிலுக்கு முன்னதாக ரிஸர்வ் பண்ணியிருந்தால்கூட, நாலுமணி நேரம்
முன்னதாகவே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் போய் உட்கார்ந்துகொண்டு, ஸ்டேஷன்
மாஸ்டரை நச்சரித்துக்கொண்டேயிருப்பார். ஸ்டேஷன் பக்கம் இவரது தலையைக்
கண்டாலே டியூட்டியிலிருந்து லீவுபோட்டுவிட்டு வீட்டுக்கு ஓடும் ஸ்டேஷன்
மாஸ்டர்களும் உண்டு!

என் அண்ணன் கட்டிய வீட்டுக்கு நாளை விடியற்காலை கிரஹப்பிரவேசம். வேலைகள் எல்லாம் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. கிரஹப்பிரவேசத்துக்கான பொறுப்பை மாமாவின் தலையில் கட்டிவிட்டான் அண்ணன். ஒரு வாரம் முன்னதாகவே தன் குடும்பம் சகிதமாக வந்து இறங்கிய மாமா, வழக்கமான தன் அதிகாரத் தோரணையோடு எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தார்.

முகூர்த்த மாதமாகையால் புரோகிதம் செய்ய அய்யர் கிடைக்காமல் நான் ஒருவாரம் ஊரெல் லாம் தேடியலைந்து நான் பிடித்து வந்த அந்த அய்யரை, மாமா
‘இண்டர்வியூ” செய்ததில் பாவம், அந்த அய்யர் டென்ஷனாகிப்போய், கோபித்துக்
கொண்டு, துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு ஓடியே போய்விட்டார்!

‘எந்தெந்த மந்திரம் சொல்லி கடவுளரை ஆசீர் வாதத்துக்கு அழைக்கப்போகிறீர்?
சம்பந்தப் பட்டவர் ‘பிஸி” யாக இருந்தால், அதற்கு மாற்று ஏற்பாடு என்ன?
‘சீஃப் கெஸ்ட்’டான ‘வாஸ்து பகவானுக்கு’ தனியாக விசேஷ பூஜை உண்டா? ஒவ்வொரு தடவையும் ‘ஒண்ணே கால் ரூபா’ தட்சணை வைக்கச்சொல்லி அரிக்காமல், ஒட்டு மொத்தமாக எவ்வளவு வேண்டும்? – என்று பல கேள்விகளை அந்த புரோகிதரிடம் கேட்டு அவரைத் தொந்தரவு செய்தால் அவர் ஓடாமலா இருப்பார்?

நானும் அண்ணனும் போய் அவர் தாடையைப் பிடித்துக் கெஞ்சி மீண்டும் அழைத்து
வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!

இரவு மணி ஒன்பது ஆகிவிட்டது. சாப்பிட்டுவிட்டு கொஞ்சநேரம் மாமாவின்
பார்வையிலிருந்து மறைந்துபோய் படுக்கலாம் என்று நான் ஒதுங்கியபோது,
“ஏன்டி விமலா, கோபால் எங்கே போய்த்தொலஞ்சான்?” என்று அண்ணியிடம்
விசாரித்துக்கொண்டு வந்துவிட்டார் மாமா.

“கோமியத்துக்கு சொல்லியிருக்கானா? இந்த ஏரியா வுல அது கிடைக்கறது
கஷ்டம்னு அய்யர் சொன்னாரே ….ராத்திரியே போய் அத விசாரிச்சு வச்சுடச்
சொல்லு!”

பாதிச் சாப்பாட்டில் கையை அலம்பிக் கொண்டு மாமாவின் முன்னால் ஆஜரானேன்.

“தாசில்தார் வீட்டு மாமிக்கிட்ட சொல்லி யிருக்கேன். விடியக்காலை போய்
வாங்கிக்கலா முல்ல?” என்றேன்.

மாமா எதிலுமே ஒரு க்வாலிட்டி இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதக்காரர்.

‘பசுவானது நல்ல நேரத்துல, நல்ல திசையப் பாத்து நின்னு, ரிலீஸ் பண்ணுன
சுத்த கோமியமா இருக்கணும்! அதுவும் பொன்னிறமா, சுடச் சுட இருக்கணும்!’
என்று அவர் ஏதாவது கண்டிஷன் போடுவாரோ என்று நினைத்தேன். நல்லவேளை, அவர் அப்படி ஒன்றும் சொல்லாமல், “விடியறதுக்கு முந்தியே ஓடிப்போய் கோமியத்த வாங்கி வந்துடுடா. முதல்ல போற கோமியமா இருந்தா ரொம்ப விசேஷம்!” என்று மட்டும் கண்டிஷன் போட்டார்.

விடிகாலையில் அந்த மாட்டிற்கு ‘சிறுநீர் உபாதை’ ஏற்படும் நேரத்தை
எதிர்பார்த்து நானும் அந்த மாட்டுத் தொழுவத்திலா படுத்துக்
கிடக்கமுடியும்?

“நீபாட்டுக்கு தூங்கிடாதேடா! விடியற துக்கு முந்தியே புரோகிதருக்கு
வேண்டிய எல்லா அயிட்டங்களையும் ரெடி பண்ணி வெச்சிடணும்
…புரியுதா?”

நான் தூக்க அசதியால் கொட்டாவி விடுவதைப் பார்த்து, சரி சரி, நீ போய்ப்
படு! விடிகாலை முழிச்சுடு!” என்று எனக்கு விடுதலை கொடுத்தார்.

விடியற்காலை நான் விழித்தபோது, மாமாவின் சத்தம் கேட்டது.

தூங்கிக்கொண்டிருந்தவர்களையெல்லாம் எழுப்பி குளியலறைக்கு
விரட்டிக்கொண்டிருந்தார்.

அவர் பார்வையில் படாமல் நழுவிவிட எண்ணி, முகம் அலம்பிக்கொண்டு, தெருவில் இறங்கியபோது……..

“என்னடா கோபாலு, இப்பத்தான் எழுந்திருச்சியா? போய் அந்த கோமிய வேலைய முதல்ல முடிச்சிட்டு வா!” என்று என்னைப் பிடித்துக்கொண்டார்.

“இத பாருடா…..இருட்டுல அந்த கொட்டில்ல வித்தியாசம் தெரியாம நீ எருமை,
காளை எதுகிட்டேயாச்சும் பிடிச்சுட்டு வந்து தொலையாதே!” என்ற அட்வைஸ்
வேறு!

தாசில்தார் வீட்டை அடைந்து, அந்த விடியற்காலை நேரத்தில் கதவைத் தட்டி
அவர்களை எழுப்பியபோது, தாசில்தார் மாமா ஒரு கையில் டார்ச் லைட்டும்,
மற்றொரு கையில் ஒரு தடிக்கம்பு சகிதமாக வந்து கதவைத் திறந்தார். அந்த
ஏரியாவில் ‘திருட பகவான்கள்’ திருவுலா வரும் நேரம் அது ஆகையால், ஒவ்வொரு
வீட்டிலும் இந்த முன் ஜாக்கிரதை வழக்கமான ஒன்று.

தூக்கமயக்கத்தில் என்னை அடையாளம் கண்டு கொள்ளாமல், இசகு பிசகாக அவர் என் மீது ஒரு போடு போட்டுவிட்டாரென்றால்……
……கிரஹப்பிரவேசத்துக்கு இருக்க வேண்டிய நான், ஆஸ்பத்திரி பிரவேசமோ,
எனது விதியின் கொடுமை ரொம்ப மோசமாக இருக்கும் பட்சத்தில் ‘எம லோகப்
பிரவேசமோ’ அல்லவா போகவேண்டியிருக்கும் என்ற அச்சத்தில், “மாமா!….நான்
நடராஜ் தம்பி கோபால் வந்துருக்கேன்” என்று முன்ஜாக்கிரதையாக குரல்
கொடுத்தேன்.

அவர் முகத்தில் தூக்கக்களையும், எரிச்சலின் சாயலும் படர்ந்திருந்ததை
அந்த மங்கிய வெளிச்சத்திலும் கண்டுகொண்டேன்.

தலையைச் சொறிந்தவாறு உள்ளே போனார். பெட்ரூமிலிருந்த மாமியுடன் ஏதோ பேசிவிட்டு, கையில் ஒரு பாட்டிலுடன் வந்தவர், அதை என் கையில் தந்தார்.

‘ராத்திரியே பிடிச்சு வச்சிட்டாங்க போலிருக்கு! பரவாயில்லை,
அவசரத்துக்கு இதுவாவது கிடைத்ததே! கோமியப் பிரச்னை தீர்ந்ததில் எனக்கு
திருப்தி. இருந்தாலும், மாமா ஒரு சந்தேகப்பிராணி. கோமியத்தின் நிறம்,
மணம் இவற்றில் சந்தேகப்பட்டு, ஏதாவது குறுக்கு விசாரணை செய்தால் என்ன
செய்வது?

……”இப்ப……இப்பத்தான் சுடச் சுட பிடிச்சது!” என்று ஓட்டல் சர்வர்
பாணியில் பொய் சொல்லி. அவர் வழுக்கைத் தலையில் அடித்துச் சத்தியம்
செய்யவேண்டும்.

தாசில்தார் மாமா கதவைச் சாத்தும் போது, “காலையில் மாமியை
அழைச்சுக்கிட்டு கணபதி ஹோமத்துக்கே வந்துடுங்க மாமா!” என்று அழைப்பு
விடுத்தேன்.

“காத்தாள நான் வந்துடுறேன்டா. மாமிக்கு உடம்பு சரியில்லே. அவள
டாக்டர்கிட்ட அழைச்சிண்டு போகணும். நடராஜன்கிட்ட சொல்லிடு!”

அவரிடமிருந்து விடைபெற்று வீட்டுக்குத் திரும்பிய போது, மாமா சமையல்
கட்டில் நின்றுகொண்டு சுடச் சுட காபியை உறிஞ்சிகொண்டிருந்தார், அவருக்குப் பயந்து ஒவ்வொரு வேலையையும் நான் செய்து வந்தாலும், அவரிடமிருந்து கிடைத்த ஏச்சுக் களினால் மனம் புழுங்கிக் கொண்டிருந்தேன்.

அவர் ஊருக்குப் போவதற்குள், ஒருநால் அவர் குடைமிளகாய் மூக்கு உடைந்து
போகும்படி ஒரு ‘நோஸ்கட்” நிகழ்ச்சியை நடத்திக்காட்ட வேண்டும் என்பது என்
திட்டம்.

புது வீட்டுக்குள் நுழையவிட ஒரு பசுவும் கன்றும் கொண்டுவருவதற்காக நான்
மாடாய் அலைந்து, கடைசியில் ஒரு மாட்டுக் காரனைப் பிடித்தேன். அவனிடம்
பேரம் பேசி அவனை முந்திய நாள் இரவே மாடு, கன்றுடன் வந்து
கொல்லைப்புறத்தில் படுக்கச் சொல்லிவிட்டார் மாமா.

‘தண்ணியடித்துவிட்டு’ படுத்த அவனை விடியற் காலையில் நான் தண்ணியை அவன் மூஞ்சியில் அடித்து எழுப்ப வேண்டியாகிவிட்டது! ‘புதுமனைப் புகுவிழா’
நிகழ்ச் சிகள் நடந்து கொண்டிருந்தன. பசுவும், கன்றும் வீட்டுக்குள்
நுழையும்போது அது நடுவீட்டில் சாணம் போட்டால்தான் ‘மங்களகர’
மாய் இருக்கும் என்று மாமா கண்டிஷன்போட, மாட்டுக்காரன் அவரிடம் சண்டைக்கு
வந்து விட்டான்!

சரியான தீவனமின்றி கருவாடாய்க் காட்சியளித்த பரிதாபத்துக்குரிய அந்த
கோமாதா, மூச்சுவிடவே திராணியற்ற நிலையில் தள்ளாடியவாறு நிற்கும்போது, அது சாணம் போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என எனக்குப் புரிந்தது.

மாமாவோ “சாணச் சம்பிரதாய”த்தில் பிடிவாதமாய் நின்றார். மாட்டுக்காரனை
தனியே அழைத்துப்போய் அவனிடம் பேசினேன். அவனோ ஒரு ‘தண்ணி கேஸ்’. மாமாவின்மேல் அவனுக் கிருந்த கோபத்துக்கு, அவரை மிதித்து, ‘வரட்டி’
தட்டிவிட்டுத்தான் போவான் என்று புரிந்தது! அவனை சமாதானப்படுத்தி,
எனக்குத் தோன்றிய ஒரு ஐடியாவை அவனிடம் சொல்ல. அவனும் சம்மதித்தான்.

‘இன்ஸ்டண்ட்’ சாணத்துடன் கூடிய ஒரு பாலிதீன் பையை மாட்டின் பின்புறம் –
வாலுக்குக் கீழே மறைவாகக் கட்டிவிடவேண்டியது. (மாமாவின் பார்வைக்குப்
படாமல் தான்!) மாடு, வீட்டுக்குள் நுழையும்போது, மாட்டுக்காரன் மாட்டைத்
தட்டிக் கொடுப்பதுபோல் அந்த சாணப்பையை நசுக்கி, சாணம் வீடெங்கும்
பீச்சியடிக்குமாறு செய்ய வேண்டியது. இதுதான் எங்கள் திட்டம்!

அப்படியே எல்லாம் நடந்து, பீச்சியடிக் கப்பட்ட சாணமானது, ஹாலில்
உட்கார்ந்திருந்த பட்டுச்சேலைப் பெண் மணிகள் மேலெல் லாம் “சாண அபிஷேகம்’
செய்துவிட்டது!

சாணத்தால் ஏற்பட்ட நாணத்தால் அவர்கள் ஓடி ஒளிந்த காட்சியும் விழாவுக்கு
களைகட்டியது!

புரோகிதரின் பக்கத்திலேயே மாமா உட்கார்ந்து கொண்டு அவரை “பெண்டு”
எடுத்துக் கொண்டி ருந்தார்.

கிரஹப்பிரவேசம் சுபமாய் முடிந்தது. தனது ஏற்பாடு களைப் பற்றிப்
பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார் மாமா. காலையிலேயே
வருவதாகச் சொன்ன அந்த தாசில் தார் மாமா ஏன் நிகழ்ச்சிக்கே வராமலிருந்து
விட்டார் என்று புரியாமல் குழம்பினேன். அந்த குண்டு மாமிக்கு உடம்புக்கு
ஏதேனும் கோளாறு ஆகிவிட்டதோ?

மறுநாள். மதுரை மாமாவை ரயிலேற்றிவிட்டு நான் வீட்டுக்குத்
திரும்பிக்கொண்டிருந்தபோது, வழியில் பார்த்த தாசில்தார் மாமாவைக்
கேட்டேன்: “என்ன மாமா, ஃபங்ஷனுக்கு வராமலேயே இருந்துட்டீங்க?”

“வரமுடியாமப் போச்சுடா!….மாமிய டாக்டர்கிட்ட கூட்டிண்டு போகணும்னு
சொன்னேனில்லியோ….” என்று சொல்லி அவர் நிறுத்த, “என்ன மாமா ஆச்சு?”
என்று பட படப்புடன் கேட்டேன். அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்குத் தலை
சுற்றியது!

டாக்டரின் க்ளினிக்கில் மாமியின் “லேப் டெஸ்ட் ரிஸல்ட்”டைப்
பார்த்துவிட்டு அந்த டாக்டரே மூர்ச்சையாகி விழுந்துவிட்டாராம்! மாமிக்கு
இது “தலைச்சன் ஈற்று” என்றும், வீட்டுக் கால்நடைகளை எளிதில் தாக்கும்
‘கோமாரி நோய்’ அவளைப் பீடித்திருப்பதாகவும், இந்த தலைச்சன்
கன்றுக்குட்டியை மாமி பிரசவிப்பதே ரொம்பக் கடினம் என்றும் அந்த ரிஸல்ட்’
டில் இருந்ததைப் பார்த்த டாக்டர் மயக்கமுற்று விழுந்ததில்
ஆச்சரியமில்லையே!

நடந்ததை மாமா விளக்கினார். “கோபாலு, நேத்திக்கு காத்தாள இருட்டுல நான்
உங்கிட்ட பாட்டிலை மாத்திக் குடுத்துத் தொலச்சிட்டேன்! அதுல இருந்தது
மாமியோட டெஸ்ட்டுக்காக பிடிச்சு வெச்சதுப்பா! ‘தன்னோடது’ன்னு மாமி அந்த
பசுவோட கோமிய பாட்டிலை லேப்’ல குடுத்துட்டதால இவ்வளவு
கோளாறு!…மன்னிச்சுடுடா!” எனக்குத் தலை சுற்றியது! அப்படியானால்……

மதுரை மாமா பக்திசிரத்தையுடன், இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு,
புரோகிதர் கொடுத்த கோமிய தீர்த்தத்தை பவ்யமாக வாங்கி, தன் தலையில்
தெளித்துக் கொண்டு, வாயிலும் ஊற்றிக்கொண்டாரே….அது…… அது……?

– ஜூன் 2009

Print Friendly, PDF & Email

2 thoughts on “புதுமனை புகுவிழா

  1. அருமை அருமை..

    /‘பசுவானது நல்ல நேரத்துல, நல்ல திசையப் பாத்து நின்னு, ரிலீஸ் பண்ணுன
    சுத்த கோமியமா இருக்கணும்! அதுவும் பொன்னிறமா, சுடச் சுட இருக்கணும்/
    இந்த வரிகள படிச்சதுமே எனக்கு சிரிப்ப அடக்கவே முடியலங்க

  2. சூப்பர் மாமே கதை i லைக் இட் வெரி மச். சுபெறப்பே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *