விஜயாநகர் காலனியின் மூன்றாவது தெருவில் ஒரு பச்சை நிற வீடு இருக்கிறது. நீங்கள் இதுவரை அந்த வீட்டை கவனித்திருக்கவில்லையென்றாலும் கூட அடுத்த முறை அவ்வழியாகப் போகும் போது அங்கிருக்கும் நாயை பார்த்துவிட்டு வாருங்கள். செம்மி நிற நாட்டு நாய் அது. பெரும்பாலும் வாயில் நீர் ஒழுக தெருவில் போகிறவர்கள் வருகிறவர்களை பார்த்துக் கொண்டிருக்கும்.
***
அப்பொழுது கணேசனுக்கு படிப்பு மண்டையில் ஏறவில்லை என்று அவனது ஆத்தா ஏறாத கோயில்களே சுற்றுவட்டாரத்தில் இல்லை. அவள் ஏறியதில் கோயில் படிக்கட்டுகள் வேண்டுமானாலும் தேய்ந்திருக்கலாம் ஆனால் கணேசன் அப்படியேதான் இருந்தான். ’நாலும் மூணும் தெரியாத மொட்டை சைபர்’ என்றுதான் கணேசனின் கணக்கு அறிவை சுற்றுவட்டாரத்தில் கிண்டல் செய்வார்கள். ஏழாம் வகுப்பு படிக்கும் போதே கணேசன் கஞ்சா பிடித்ததாக தெரிந்த போது அவனது அப்பா ஒரு வாளித் தண்ணீரை தலையோடு ஊற்றிக் கொண்டு ஈரத்துணியோடு திண்ணையில் சாய்ந்துவிட்டார். அதன் பிறகும் கணேசன் பெரிதாக கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பல வருடங்களுக்கு அவனது அம்மா பாடுபட்டு சோறு போட்டாள். அவளும் படுத்த படுக்கையான போதுதான் கணேசனுக்கு பிழைத்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆரம்பத்தில் மூன்று வேளை சோற்றுக்கு வழி செய்தால் போதும் என்றுதான் நினைத்தான். ஆனால் கணேசனுடன் பால்யகாலத்தில் இருந்து கூடவே சுற்றிய வெள்ளையன் கோடிக்கணக்கில் சம்பாதிக்க சில பல ஐடியாக்களை அள்ளி வீசினான்.
’நீ சினிமாவில் நடிக்கலாம்’ என்று உசுப்பேற்றினான் ஆனால் தன்னை ரணகளப்படுத்திக்கொள்ள விரும்பாத கணேசன் வேறு சில யோசனைகளில் விழுந்த போது ’உனக்கு ஆன்மிகம் சரியா வரும்டா ’ என்றான் வெள்ளையன். கணேசனுக்கும் அந்த யோசனை மிகப் பிடித்துப்போனது. அப்பொழுதெல்லாம் குறும்புக்கார பையன்கள் ஃபங்க் முடி என்று சடை மாதிரி முடி வளர்ப்பார்கள். கணேசனும் வளர்த்து வைத்திருந்தான். அந்த முடி ஸ்டைல் சாமியார் வேஷத்துக்கு பொருத்தமானதாக இருந்தது. மீசை தாடியை மழித்துவிட்டு நெற்றியில் விபூதி கொஞ்சம் பூசி ருத்திராட்சத்தை அணிந்துகொண்டதிலிருந்து கணேசன் சுவாமிஜி ஆகிவிட்டான். கணேசன் என்ற பெயர் சாமியார்களுக்கு பொருத்தமானதாக இல்லை என்பதால் ‘ஆனந்தா’ என்று முடியும் பெயரை சல்லடை போட்டுத் தேடி சுத்தானந்தா என்று வைத்துக் கொண்டான்.
அதன் பிறகாக ஆசிரமம், நடிகைகள், வெளிநாட்டு பக்தர்கள் என்று சகல செளபாக்கியத்துடன் வெகு சீக்கிரத்தில் சுத்தானந்தா சுவாமிஜி மிகப்பிரபலம் ஆகிவிட்டார். பிரபல பத்திரிக்கைகளில் “அண்டாவைத் திற” “குண்டாவை மூடு” என தொடர் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். தமிழ்நாடு,கர்நாடகா மட்டுமில்லாமல் அமெரிக்கா, சிங்கப்பூர்,மலேசியா என எட்டுத்திக்கும் கடை விரித்த சுவாமிஜியை தமிழின் பிரபல எழுத்தாளர் தலையில் தூக்கிக் கொண்டாடினார். சுகபோகமான வாழ்க்கையில் ஏகப்பட்ட வெளிநாட்டு பக்தர்களை- குறிப்பாக பக்தைகளைச் சேர்த்து வைத்திருக்கிறார் சுத்தானந்தா. வெளிநாட்டினர் சுவாமிஜியை விளிக்கும் போது “சு”னாவுக்கு பதிலாக “சூ”னா போட்டு அழைத்துவிடும் கண்றாவியான பிரச்சினையைத் தவிர சுவாமிஜிக்கு வேறு எந்த வருத்தமும் இல்லை.
சுவாமிஜியின் அரசியல் பலமும், பண பலமும் அவரை உசுப்பேற்றிக் கொண்டேயிருந்த போதுதான் அந்தச் சோதனை நிகழ்ந்தது, ஆட்டோ டிரைவரான ”கூலிங்கிளாஸ்”ராக்கிமுத்துவின் முகத்தில் விழிக்க வேண்டிய துர்பாக்கியம் சுவாமிஜிக்கு நேர்ந்துவிட்டது. தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற எந்நேரமும் கூலிங்கிளாஸ் அணிந்திருப்பதால் அவனுக்கு “கூலிங்கிளாஸ்” ராக்கிமுத்து என்ற பெயர் வந்துவிட்டது. ராக்கிமுத்துவுக்கு வாய்த்துடுக்கு ஜாஸ்தி. சுத்தம் செய்யப்படாத பொதுக்கழிப்பறை ஒன்று அவன் வாய்க்குள் இருப்பதாக அவனைச் சுற்றிலும் இருப்பவர்கள் சொல்வார்கள். நாறிய வார்த்தைகளை தயவு தாட்சண்யம் பார்க்காமல் உமிழ்ந்துவிடும் அவனிடம் யாரும் வம்பு வளர்ப்பதில்லை.
தனது ஆட்டோவில் சுத்தானந்தாவின் ஆசிரமத்திற்கு எதையோ எடுத்துச் சென்றவன் மடத்தினுள் சுவாமிஜி எதையோ வெறித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். அப்பொழுது சுவாமிஜி இரண்டு விஷயங்களால் உலகப் புகழ் பெற்றவராகியிருந்தார். ஒன்று டச் ஹீலிங் எனப்படும் நோய் தீர்க்கும் தொடுமுறை. அதாவது உடலில் ஏதேனும் குறையிருப்பின் பிரச்சினையுள்ள உறுப்பின் மீது சுவாமிஜி கை வைத்தால் நோய் நீங்கிவிடுமாம். இன்னொன்று சுவாமிஜியின் சாபம் பலிப்பது. செல்வமும் சகல சந்தோஷங்களும் பெற்று வாழக் கடவது என்றோ அல்லது நாசமாகப் போகக் கடவது என்றோ ஆசிர்வதிக்கும் போது “கடவது” என்ற சொல்லைச் சொல்லும் போது யாரைப் பார்க்கிறாரோ அவருக்கு அது பலித்துவிடுகிறதாம்.
இந்தச் சூழலில்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க சுவாமிஜி- ராக்கிமுத்து சந்திப்பு நிகழ்ந்தது. வெறித்துக் கொண்டிருந்த சுவாமிஜியிடம் “சுவாமி என் நண்பனுக்கு நெஞ்சுவலி. நீங்க சரி பண்ணிடுவீங்களா ” என்றான், “நெஞ்சு வலியென்றால் யாம் நெஞ்சு மீது கை வைத்து மந்திரம் ஜெபிப்போம்” என்றார் சுவாமிஜி. சுவாமிஜி சொன்ன தொனியில் தென்பட்ட தெனாவெட்டில் கடுப்பான ராக்கி முத்து “நெஞ்சுவலிக்கு நெஞ்சு. அப்படீன்னா கு…..என்று இழுத்து குதிங்காலில் வலியென்றால் சாமானியர்களின் குதிங்காலை எல்லாம் சுவாமிஜி தொடலாமா?” என்றான். அவனது நக்கலில் டென்ஷனான சுவாமிஜி கோபத்தின் உச்சியில் “மார்கழியில் இணை கிடைக்காத தெருநாயாகக் கடவது” என்று சாபமிட்டார். ஆனால் பாருங்கள் ராக்கிமுத்துவின் நல்ல நேரத்தையும் சுவாமிஜியின் கெட்ட நேரத்தையும். “கடவது” என்று சொல்லும் போது ராக்கி முத்து அணிந்திருந்த கூலிங்கிளாஸில் தெரிந்த தன் முகத்தையே பார்த்துவிட்டார் சுவாமிஜி.
அடுத்த வினாடி நாயாகிவிட்ட சுவாமிஜியின் மீது துளியளவும் கடுப்பு தீராத ராக்கிமுத்து நாட்டு வைத்தியரிடம் இழுத்துச் சென்றான். வைத்தியரிடம் நாய்க்கு வெதர் எடுக்க வேண்டும் என்றான். இது விலங்குகளுக்கான குடும்பக்கட்டுப்பாட்டு முறை. குடும்பக்கட்டுப்பாட்டு முறை என்பதைவிடவும் ஆண்மையை நசுக்குதல். அவன் நாயின் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்துக்கொள்ள விரைப்பை உடலோடு ஒட்டும் இடத்தில் சுத்தி போன்ற ஒரு கட்டையால் ஓங்கித் தட்டி நரம்பைத் துண்டித்துவிட்டார் வைத்தியர். இனி அந்த நாய் ஒரு பெண் நாயைக் கூட தேடிச் செல்லாது அல்லது செல்ல முடியாது.
அந்த நாயைத்தான் தன் வீட்டில் கட்டி சோறு போட்டுக்கொண்டிருக்கிறான் ராக்கிமுத்து. அவ்வப்பொழுது சாட்டையை சுழற்றி விளாசவும் தவறுவதில்லை. முதலில் சிலிர்த்த நாய் தற்போது ராக்கிமுத்துவைக் கண்டால் வாலைச் சுருட்டிக் கொள்கிறது. இப்பொழுதும்”பிரபல சாமியார் சுத்தானந்தாவைக் காணவில்லை” என்ற சன் டிவியின் செய்தியை நாவைத் தொங்கப்போட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது விஜயாநகர் காலனியின் மூன்றாவது தெருவில் உள்ள பச்சைவீட்டு நாய்.
– மே 8, 2012