பிச்ச காக்கா

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 27,289 
 
 

“பொழுதுபோக்கு அம்சங்களுக்கு எங்க ஊரை மிஞ்சவே முடியாது என்றிருந்த, ஒரு காலம் அது…”

சுன்னத்து கல்யாண வீட்டிலும், ஏனைய விசேஷ இன்னபிற கலை நிகழ்ச்சிகளிலும் இன்னிசைக் கச்சேரிகள் இடம்பெற்றுவந்த காலம்.

‘என்னமோ தாங்கள்’ எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ் என்பதை போன்ற நினைப்பில் தெருவுக்கு ஒரு ‘பஜனா குழுவும்’ இருந்து வந்தது.

ஆர்மோணிப் பெட்டி ஒன்று , ஒரு சோடி தபேலா, ஒரு கடம் , மற்றும் ஜால்ரா. அத்தோடு சேர்த்து
டிஜிட்டல் சவுண்ட் எபக்ட்டுக்காக! உலகத்திலயே இதுவரை எந்த ஒரு மியூசிஷியனும் பயண்படுத்தி பார்க்காத, வெற்றிலை மென்று எச்சில் துப்பும் பழைய படிக்கம், கூடுதல் டி.டீ எஸ் சவுண்டுக்காக வேண்டி வெற்றிலை பாக்கு போட்டு வைக்கும் மூத்தம்மாவின், பித்தளைலான வட்டா. அதுவும் இல்லாத பட்சத்தில் கையில் கிடைக்கும் அண்டா – குண்டா என இவ்வளவுதான் இவர்களது இன்ஸுருமெண்டாக இருந்து வந்தது.

ஒவ்வொரு இரவும் கச்சேரியும், பாட்டும், கூத்தும் என, ஊரே ஒரு ரணகளமாகி கொண்டிருந்தது. இதையும் ஒரு பார்ட் டைம் தொழிலாக்கிக் கொண்ட பஜனா குழுவும், காசும் பார்த்து வந்தனர்.

எங்க ஏரியாவில் ‘பிச்ச காக்கா’ என்ற ஒருத்தர் இருந்தார். என் நண்பனின் வீட்டுக்கு அருகாமையில்தான் அவரது வீடும் இருந்தது. அவருக்கென்று எந்தவொரு வேலை வெட்டியும் கிடையாது. மியூசிக் புரோக்ரம் எங்கெல்லாம் நடக்குதோ அங்கெல்லாம் பிச்ச காக்காவை காணலாம்!. அந்த அளவுக்கு நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி எல்லாம், அவருக்கு பஜனா பைத்தியம் ஊறிப்போய் கிடந்தது.

அவர் வயதில் பெரியவர் என்றாலும் எங்களுக்கு நெருக்கமான நண்பரும் கூட. கஷ்ட்டம் – நஷ்ட்டம் இன்பம் – துன்பம் என தன்னுடைய எல்லாவிதமான பிரச்சினைகளையும் எங்களோடவே அதிகமாக பகிர்ந்து கொள்வார் .

ஒருநாள் வழமைபோல் நானும், நண்பனும் பிச்ச காக்காவோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். அவருடைய தொழில் சம்மந்தமான விஷயங்களை பேசிக் கொண்டிருக்கும்போது நண்பனும், ஐடியா ஒன்றை தூக்கி போட்டான்.

“பிச்ச காக்கா… ஏன் நீங்க மியூசிக் குழு ஒன்றை ஸ்டார்ட் பன்னக்கூடாது…?”‘ என அவன் கேட்டான்.

அதற்கு அவரும்
“சூப்பர் ஐடியாடா… ஆனால் காசுக்கு எங்கடா போறது?” என கவலைப்பட்டு கொண்டார்.

எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. “பிச்ச காக்கா உங்களோட குடிசையிலுருந்து பக்கத்துல ஒரு துண்டு நிலம் சும்மாதானே கிடக்கு..? யாரையாவது புடிச்சு வித்த்துப்போட்டு மியூசிக் சாமாண்களை வாங்கிட்டாப் போச்சு ” என்றேன்.

அவ்வளவுதான் அடுத்த நாள் அந்த நிலத்தை விற்று, அவருக்கு நெருங்கிய பஜனா நண்பன் ஒருத்தனையும் கூட்டிக்கொண்டு போனவரு, புத்தம் புது மியூசிக் கருவிகளை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருந்தார்.

இது தெரியாமல் வழமைபோல் நானும் நண்பனும் பிச்ச காக்காவை பார்க்கலாம் என்று போனோம். “டமார்… டும்ம்… டமார் ” என ஒரே சத்தம்!.

குடிசைக்குள்ளே நுழைந்த எங்கள் இருவரையும் பார்த்ததும், பிச்ச காக்கா கடைவாய் பல்லு தெரியும் அளவிற்கு இழித்துக் கொண்டார்!.

“அட வாங்கடா… வந்து மியூசிக் போடுங்க” என்றார். ‘கிடைத்த வாய்ப்பை விடக் கூடாது’ என்று கண் சைகையில் ஆளாளுக்கு பேசிக்கொண்டே, நாங்களும் போய் குந்திக் கொண்டோம். கைக்கு வந்தபடி தபலாவில் போட்டு நானும் அடிக்க, பிச்ச காக்கா எலெக்ட்ரானிக் கீபோர்ட்டில் ஏதோ வாசிக்க நண்பனும் தன் பங்கிற்கு மைக்கை எடுத்து மைக்கேல் ஜாக்சனைப்போல் கதறியபடி பாட ஆரம்பித்தும் ஒரே கண்ராவியாக மாறிப்போனது அந்த இடம்.

பிச்சை காக்காவின், வாய் ஒரு பக்கவாட்டில் கோணிச் செல்வதையும் அடிக்கடி அவர் தலையை சொரிந்து கொண்டதையும் பார்த்துவிட்ட நாங்கள் இருவரும் “மனுஷன் கடுப்பாகிட்டாருபோல!” என புரிந்துகொண்டு அத்தோடு அந்த கருமத்தை நிறுத்திக் கொண்டோம்.

அந்த கொடூரமான சம்பவத்துக்கு பிறகு, மியூசிக் போடுவதற்காக வேண்டி, எங்களை ஒரு தடவையேனும் அவர் கூப்பிட்டதேயில்லை!.

தினமும் பிச்சை காக்காவின் குடிசையருகே செல்லும் போதெல்லாம் “டம்” “டும்டும்” “ங்கியீயீ ” இந்த சத்தத்தை தவிர வேறெந்த நல்லதொரு மெட்டு சத்ததையும் நாங்கள் அதுவரை ஒரு தடவையேனும் கேட்டதேயில்லை.

இப்படியே சில மாதங்கள் கடந்து விட்டது. ஒருநாள் மதில் சுவற்றில் நானும், நண்பனும் பேசிக் கொண்டு இருந்தபோது, எலெக்ட்ரானிக் கீபோர்ட்டில் ராகம் வாசிக்க, பாட்டும் மியூசிக்மாக அமர்க்களத்தோடு பிச்ச
காக்காவின் குடிசை ஆடியது.

மதில் சுவற்றில் உற்கார்ந்திருந்த
நாங்கள் இருவரும் பாய்ந்து துள்ளி ஓடிச்சென்று குடிசையில் சின்னதாய் இருந்த ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டு நின்றோம், “பக்கத்து ஊரு பஜனா குழு பிச்ச காக்காவுக்கு ‘மியூசிக் பயிற்சி தருவதாக சொல்லிக்கொண்டு வந்துருக்கானுங்கபோல!” புதிய கருவிகள் கையில் கிடைத்ததும் ஆளாளுக்கு இஷ்டத்துக்கு போட்டு அடித்து துவைத்து தூள் கிளப்பிக் தங்களுடைய நீண்டநாள் வித்தையின் தாகத்தை தீர்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘என்னடா… பிச்ச காக்காவை காணோம்!?’ என்று தேடிப் பார்த்தால், தலையில் துண்டு ஒன்றை போட்டுக்கொண்டு மியூசிக் கருவிகளை, அவர்கள் கையாளும் விதத்தை சகிக்க முடியாமல் நிறுத்தச் சொல்லவும் முடியாமல் நற நறவென்று பற்களை கடித்துக்கொண்டே கண்கள் கலங்கியபடி கையில் இருந்த ஜால்ராவை வைத்து ‘டிங்க்… டிங்க்…’ என அடித்துக்கொண்டே ஒரு மூலையில் வேடிக்கை பார்த்தவாறு குந்தியிருந்தார்.

இந்த கூத்துக்களை பார்த்ததும் நாங்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்… யாதர்த்தமாக ஜன்னல் பக்கமாக திரும்பி பார்த்த அவர் நாங்கள் சிரிப்பதை பார்த்துவிட்டார். என்ன கடுப்பில் இருந்தாரோ தெரியவில்லை. எங்களை கண்டு கொண்டதும், “எதர்க்காக சிரித்தோம் என்று அவர் புரிந்துகொண்டு, ஆத்திரத்தில் அருகில் கிடந்த துடப்பத்தை எடுத்துக்கொண்டு அடிப்பதற்காக எங்களை துறத்தி வந்தார்.

அவரிடமிருந்து தப்பி பிழைத்து நாங்கள் ஒரு பக்கமா ஓடி சென்று விட்டோம். அந்த சம்பவத்துக்கு பிறகு பிச்ச காக்க எங்களுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டடார்.

ஒரு வருடத்திற்கு பிறகு, எங்களுடைய கிளப், மேஜிக் ஷோவோடு சேர்ந்து இசை கச்சேரி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தது. கிளப்பில், நானும் நண்பனும் மெம்பராக இருந்ததினால் செக்யூரிட்டி பணிக்காக வேண்டி எங்களையும் அதில் இனைத்துக் கொண்டார்கள்.

நாங்கள் இருவரும் “செக்யூரிட்டி பணியா!? அது கிடக்குது கழுத… மண்ணாங்கட்டி!” என சொல்லிக்கொண்டே மேடை அருகில் சென்று நின்றுகொண்டு நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து கொண்டிருந்தோம்.

நிகழ்ச்சியின் இடைவேளையில் அறிவிப்பாளர் மைக்கை எடுத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். “”ஸ்பீக்கர், லைட் செட் மற்றும் இசைக் கருவிகளுக்கும் நாடவேண்டிய ஒரே இடம் பிச்சை சவுண்ட்ஸ்…”” என இரண்டு முறை அவர் விளம்பரம் செய்தார்.

இதை கேட்டதும் நானும், நண்பனும் ஆளாளுக்கு மூஞ்ச மூஞ்சைப் பார்த்துக்கொண்டோம். பிச்ச காக்காவை தேடி மேடையின் பின்னாடி சென்றோம்.

கால் மேல் கால் போட்டு ஒரு சேரில் உற்கார்ந்து கொண்டிருந்தார் பிச்ச காக்கா. காதில் தயிர் சட்டியின் அளவிலான பெரியதொரு இயர் செட் ஒன்றை மாட்டியபடி, சவுண்ட் ஆம்புளியர் பாக்ஸில் அங்கும் இங்கும் தலையை அசைத்து கொண்டே ஏதோ சவுண்ட் எஞ்சினியராட்டம் நோண்டிக் கொண்டிருந்தார்.

நானும் நண்பனும், பிச்ச காக்காவின் ‘டெக்கினிக்கல் எடிட்டிங்!’ சிஸ்டத்தை நீண்ட நேரம் கண் இமைக்காமல் வாயை பிழந்துகொண்டு பார்த்துக் கொண்டிருந்தோம், திரும்பி பார்த்த அவர் ஹி…ஹி… என சிரித்துக்கொண்டே “வாங்கடா” என கை அசைத்து கூப்பிட்டார். நண்பன் கீழே கிடந்த வயர் முறுக்குகளை கவனிகாமல் காலை எடுத்து வைத்துதான் தாமதம் வயரில் கால் மாட்டிவிட, பிச்ச காக்காவில் போய் எகிறி விழுந்தான்.

பிச்ச காக்காவும் தட்டுத்தடுமாறி சப்போர்ட்டுக்கு ஒன்றும் கிடைக்காமல்போக ஆம்புளியர் சவுண்ட் பாக்ஸை எட்டி பிடித்தவர் ‘டமார்’ என்று குப்புற விழுந்துவிட்டார். ஸ்டேடியத்தில் பாட்டு கச்சேரி போய்க் கொண்டிக்கும்போதே இந்த அசம்பாவிதம் நடைபெற்றதால் நடுவில் “பிச்சை சவுண்ட் சிஸ்டம்… பிச்சை சவுண்ட் சிஸ்டம் ” என்றபடி ரெக்கார்டு பண்ணி வைத்துருந்த அந்த ஓடியோ கிராக்காகி மறுபடி மறுபடியும் நிறுத்தாமல் ஒலித்துக் கொண்டது.
எழுந்து கொண்ட பிச்ச காக்கா ஆம்புளியர் பாக்ஸ் முதல் எல்லா சாதனங்களிலும் கையை விட்டு தட்டி தட்டிப் பார்த்தார். அது அப்படியே ஒலித்து கொண்டிருந்தது.
பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அது நிண்டபாடில்லை. இறுதியில் என்ன பண்ணுவதென்று புரியாமல், ஆத்திரமடைந்த அவர் அங்கங்கு செல்லும் மொத்த வயர்களையும் பிடிங்கிவிட்டார். ஸ்பீக்கருக்கு போகின்ற சவுண்ட் முதலில் கட்டாகியது. அடுத்து மேடை மற்றும் அதை சுற்றிய பகுதி எங்கும் இருளில் மூழ்கியது!…

பார்வையாளர் கூட்டம் கொய்யோ மொய்யோனு ஒரு கட்டத்தில் கலவரமாக, நானும் நண்பனும் அடித்து பிடித்து மதில் ஒன்றில் ஏறி தாவி ஓடிச் சென்று விட்டோம்.

இருளில் “டோர்ச் லைட் எடுத்து, பிச்ச காக்கா எங்கள் இருவரையும்தான் முதலில் தேடியுள்ளார்” என பின்னர் கேள்விப்பட்டு கொண்டோம்.

அந்த சம்பவத்தினால், நாங்கள் இருவரும் அவருடைய குடிசை பக்கம் போவதையும் நிறுத்தியதுமல்லாமல் அவரின் கண்ணில் படாமலும் இருந்துவிட்டோம்.

சில காலத்தின் பின்னர் நானும் வெளிநாடு சென்றுவிட்டேன். நண்பனும் வேறு பகுதிக்கு குடும்பத்தோடு சென்று செட்டிலாகிட்டான்.

சுமார் ஆரு வருடங்களுக்குப் பின்னர், பிச்ச காக்காவின் வீட்டுக்கு நண்பனும்,நானும போகின்ற சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது.

திண்ணையில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் அவர் “காக்கா… சுகமா இருக்கீங்கலா?” என தயக்கத்தோடு கேட்டான் நண்பன் “அட… இருக்கேன்டா… வாங்கடா” என எங்கள் இருவரையும் கூப்பிட்டு உற்கார வைத்தார்.

சுகம் செய்தி கேட்டுக் கொண்டே பழைய கதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். இடையில்
“தொழிற்பாடு எப்படி காக்கா…? இப்ப என்ன பண்றீங்க? ” என கேட்டோம் .

“இப்போலாம் சவுண்ட் சிஸ்டமெல்லாம் யார்ரா கேட்கானுங்க… அதெல்லாம் விட்டு மிச்ச நாளாச்சிடா… நான் இப்போ வெள்ளாமை செய்யறதுல இறங்கிட்டேன்டா…” என்றார்

நீண்ட நேரம் பேசிவிட்டு “சரி காக்கா அப்போ நாங்க போயிட்டு வாறோம்…” என அவரிடமிருந்து விடைபெற்று இருவரும் வெளியேறி வரும்போது பிச்ச காக்காவின் கோழிக்கூட்டை பார்க்க நேர்ந்தது.

அதற்குள் அவரது ஒருசில மியூசிக் இன்ஸுருமெண்ட்ஸ், ஸ்பீக்கர் மற்றும் இதர பொருட்கள் மழையில் நனைந்து துருப்பிடித்து இத்துப்போய் காட்சியளித்தது…

“ஸ்பீக்கர் உள் நடுவில் எழுதப்பட்டிருந்த ‘பிச்சை சவுண்ட்ஸ்’ எனும் விளம்பர எழுத்து மட்டும் அழியாமல் அப்படியே இருந்தது…!.

Print Friendly, PDF & Email

1 thought on “பிச்ச காக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *