பத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சற்குணா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 2,392 
 
 

பத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சற்குணா சொன்ன கன்னி ஒருத்தியின் கவலை தீர்ந்த கதை

“கேளாய்,போஜனே! ‘கிள்ளியூர், கிள்ளியூர்’ என்று சொல்லா நின்ற ஊரிலே, ‘கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம்’ என்று ஒரு பாக்கம் உண்டு. அந்தப் பாக்கத்திலே பழம் பெருமையோடு புதுப் பெருமையும் வாய்க்கப் பெற்றிருந்த தம்பதியர் இருவர் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தனர். ‘தாரா, தாரா’ என்று அவர்களுக்கு ஒரே பெண்; சர்வ லட்சணங்களும் பொருந்தியிருந்த அந்தப் பெண்ணாகப்பட்டவளை அவர்கள் கண்ணை இமை காப்பதுபோல் காத்து வந்தகாலை அவள் கன்னிப் பருவத்தை எய்த, அந்தக் கன்னி ‘காதல் விபத்து’க்கு உள்ளாவதற்கு முன்னால் அவளுக்குக் கலியாணத்தைச் செய்து வைத்துவிட வேண்டுமே என்று அவளுடைய தாயும் தந்தையும் கவலை கொண்டு, அந்தக் கவலையிலேயே மூழ்கி, அவளுக்கு மாப்பிள்ளை தேடும் முயற்சியில் முனைந்து நிற்பாராயினர்.

அங்ஙனம் முனைந்து நின்றகாலை, ‘பணக்காரனுக்குத் தான் என் பெண்ணைக் கொடுப்பேன்!’ என்று தாயாராகப் பட்டவள் சொல்ல, ‘முடியாது; படித்தவனுக்குத் தான் கொடுப்பேன்!’ என்று தகப்பனாராகப்பட்டவர் சொல்ல, ‘அது எப்படிக் கொடுப்பீர்கள், பார்த்துவிடுகிறேன்!’ என்று அவள் சூள் கொட்ட, ‘அது எப்படிக் கொடுப்பாய், பார்த்து விடுகிறேன்!’ என்று அவரும் சூள் கொட்டுவாராயினர்.

இப்படியாகத்தானே இவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டிருந்தகாலை, ‘இந்தப் போட்டியில் யார் யாரை எப்போது வெல்வது, தனக்கு எப்போது கலியாணம் ஆவது?’ என்பதாகத்தானே தாரா ‘யோசி, யோசி’ என்று யோசிப்பாளாயினள்.

இங்ஙனம் யோசித்துக்கொண்டிருந்தகாலை, ஒரு நாள் மாலை கடற்கரையில் யாரோ ஒரு காளை தன்னை ‘ஏதிலார் போலப் பொதுநோக்கு’ நோக்குவதைக் கண்ட தாரா, ‘இது ஒரு வேளை காதல் நோக்காயிருக்குமோ?’ என்று ஐயம் கொள்ள, அதுகாலை, ‘ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல், காதலார் கண்ணே உள’ என்ற குறட்பா அவள் நினைவுக்கு வர, ‘ஐயமில்லை, இது காதல் நோக்குத்தான்!’ என்பதாகத்தானே அந்தக் கன்னி தீர்மானித்து, ‘இப்படி ஏதாவது நடக்காதவரை தன் பெற்றோர் ஒன்றுபட்டுத் தனக்குக் கலியாணம் செய்து வைக்க மாட்டார்கள்!’ என்ற திடீர் முடிவுக்கு வந்தவளாய், ‘யானோக்குங்காலை நிலம் நோக்கும்; நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும்’ என்ற ‘வள்ளுவன் வழி’யை வழுவின்றிப் பின்பற்றி, அவளும் அவன் நோக்காதபோது அவனை நோக்கி, நோக்கும்போது நிலம் நோக்கி மெல்ல நகுவாளாயினள்.

கடல் அலைகளோடு தங்கள் ‘காதல் மக’ளை விளையாட விட்டுவிட்டுச் சற்றுத் தள்ளி உட்கார்ந்து அவள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவள் பெற்றோர் இந்தக் காட்சியைக் கண்டு திடுக்கிட்டு எழுந்து ஓடி, ‘என்னம்மா, என்ன?’ என்று பதட்டத்துடன் விசாரிக்க, ‘ஒன்றும் இல்லை, அப்பா! வந்து…வந்து…’ என்று அவள் மென்று விழுங்க, ‘இதென்ன வம்பு?’ என்று நினைத்த அப்பாவாகப்பட்டவர் துணிந்து அந்தக் காளையை நெருங்கி, ‘என்னப்பா, என்ன நடந்தது?’ என்று கேட்க, ‘ஒன்று மில்லை; தன் கையிலிருந்த கார் சாவியை அந்தப் பெண் இங்கே தவற விட்டுவிட்டாள். அதை எடுத்து அவளிடம் கொடுக்கலாமென்று நினைத்து அவளைப் பார்த்தேன்; அதற்குள்… அதற்குள்…’ என்று அவனும் மென்று விழுங்க, ‘அதற்குள் என்ன, வெட்கம் வந்துவிட்டதா?’ என்று அவர் சிரிக்க, ‘ஆமாம்’ என்பதுபோல் அவன் சற்றே நெளிய, ‘ஆண்கள் இப்படி வெட்கப்பட ஆரம்பித்துத்தானே பெண்கள் வெட்கப்படுவதையே விட்டுவிட்டார்கள்!’ என்று சொல்லிக் கொண்டே அவர் அவனிடமிருந்த சாவியை வாங்கிக் கொண்டு, ‘வாடி, போவோம்; வாம்மா, போவோம்!’ என்ற தம் மனைவியாகப்பட்டவளையும் மகளாகப்பட்டவளையும் அழைத்துக்கொண்டு, ‘காற்று வாங்கியது போதும்!’ என்று காரை நோக்கி விறுவிறுவென்று நடப்பாராயினர்.

வீட்டுக்கு வந்த தாரா, ‘வள்ளுவன் தன்னை இப்படியா கை விடுவான்?’ என்று எண்ணிப் ‘புஸ்ஸ்ஸ்’ என்று பெருமூச்சுவிட, அதைக் கவனித்த அவள் தகப்பனார், ‘இனி தாங்காது!’ என்று தம் மனைவியின் காதோடு காதாகக் கவலையோடு சொல்ல, ‘ஆமாம், தாங்காது!’ என்று அவளும் அவருடைய காதோடு காதாகக் கவலையோடு சொல்லிவிட்டு, ‘ஹா’லில் இருந்த ‘பே’னைத் தன் ‘கண்மணி’க்காக முழு வேகத்தில் முடுக்கி விடுவாளாயினள்.

‘மேலே என்ன செய்வது?’ என்றார் தகப்பனார்; ‘கலியாணம்தான்!’ என்றாள் தாயார். ‘அதற்குத்தான் நீ இடம் கொடுக்க மாட்டேன் என்கிறாயே?’ என்றார் அவர்; ‘நீங்கள் இடம் கொடுத்தால் நானும் இடம் கொடுப்பேன்!’ என்றாள் அவள். ‘இப்படியே போய்க் கொண்டிருந்தால் முடிவு?’ என்றார் தகப்பனார்; ‘இருக்கிறது’ என்றாள் தாயார். ‘எங்கே இருக்கிறது?’ என்றார் அவர்; ‘இருக்கவே இருக்கிறார் மிஸ்டர் விக்கிரமாதித்தர். அவரிடம் வேண்டுமானால் இந்த முடிவை விட்டுவிடுங்கள்; அதற்கு நான் கட்டுப்படத் தயார்!’ என்றாள் அவள். ‘சரி’ என்றார் தகப்பனார்; ‘உடனே போய் அவரை அழைத்து வாருங்கள்!’ என்றாள் தாயார்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர்கள் வீட்டுக்கு வந்த மிஸ்டர் விக்கிரமாதித்தர், ‘என்னம்மா, பணக்காரப் பையனைப் பார்த்து வைத்திருக்கிறீர்களா?’ என்று பெண்ணைப் பெற்றவளை விசாரிக்க, ‘ஆமாம்; பார்த்து வைத்திருக்கிறேன்!’ என்று அம்மையார் சொல்ல, ‘சரி, படித்த பையனைப் பார்த்து வைத்திருக்கிறீர்களா நீங்கள்?’ என்று அவர் அடுத்தாற்போல் பெண்ணைப் பெற்றவரைக் கேட்க, ஆமாம், பார்த்து வைத்திருக்கிறேன்!’ என்று அப்பனார் சொல்ல, ‘ரொம்ப சந்தோஷம்; உங்கள் வீட்டு வாசலில் நிற்கும் கூர்க்காவுக்கு அவர்கள் இருவரையும் தெரியுமா?’ என்று விக்கிரமாதித்தர் பின்னும் கேட்க, ‘தெரியாது!’ என்று அவர்கள் இருவரும் பின்னும் சொல்வாராயினர்.

‘அப்படியானால் ஒன்று செய்யுங்கள!’ என்றார் விக்கிரமாதித்தர்; ‘என்ன செய்ய வேண்டும்?’ என்றார் பெண்ணைப் பெற்றவர். ‘அவர்கள் இருவரையும் நாளை மாலை பெண் பார்க்க இங்கே வரச் சொல்லுங்கள். அவர்களில் யாருக்கு உங்கள் வீட்டுக் கூர்க்கா முதல் மரியாதை கொடுக்கிறானோ, அவனுக்கு உங்களுடைய பெண்ணைக் கலியாணம் செய்து வைத்து விடுங்கள்!’ என்றார் விக்கிரமாதித்தர்; ‘அப்படியே செய்கிறோம்’ என்றனர் தம்பதியர் இருவரும்.

‘சரி, நான் வருகிறேன்!’ என்று விக்கிரமாதித்தர் புறப்பட, ‘நாளை மாலை நீங்களும் இங்கே வந்துவிட வேண்டும்’ என்று அவர்கள் அவரைக் கேட்டுக்கொள்ள, ‘ஆஹா! அதற்கென்ன, வருகிறேன்!’ என்று சொல்லிவிட்டு, அவர் அவர்களிடமிருந்து விடை பெற்றுக்கொள்வாராயினர்.

சொன்னது சொன்னபடி மறுநாள் மாலை வந்த விக்கிரமாதித்தர், ‘என்ன, அவர்கள் வந்துவிட்டார்களா?’ என்று தம்பதியர் இருவரையும் விசாரிக்க, ‘இல்லை; நீங்கள் உட்காருங்கள். அவர்கள் இதோ வந்துவிடுவார்கள்’ என்று அவர்கள் அவரை உட்கார வைத்துவிட்டு, ‘நாங்கள் வாசலுக்குப் போய் அவர்களை வரவேற்று அழைத்து வருகிறோம்’ என்றுக் கிளம்ப, ‘அதுதான் கூடாது; முதலில் அந்தக் காரியத்தைக் கூர்க்கா செய்யட்டும்; பிறகு நீங்கள் செய்யலாம் என்று அவர் அவர்களையும் தம்முடன் உட்கார வைத்துக்கொண்டு வாசலை ‘நோக்கு, நோக்கு’ என்று நோக்குவாராயினர்.

பணக்காரப் பையன் காரில் வந்தான்; அவனுக்கும் அவன் காருக்கும் சேர்ந்தாற்போல் ஒரு ‘சல்யூட்’ அடித்து அவனை உள்ளே விட்டான் கூர்க்கா. அடுத்தாற்போல் படித்த பையன் கால் நடையாக வந்தான்; அவனை வாசலிலேயே நிறுத்தி, ‘நீ யார், எங்கே வந்தாய்?’ என்று அதே கூர்க்கா அவனை ஆதியோடந்தமாக விசாரிக்க ஆரம்பித்தான்.

அங்ஙனம் அவன் விசாரித்துக் கொண்டிருந்தகாலை வியப்பினால் விரிந்த கண்கள் விரிந்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்த தம்பதியர் பக்கம் விக்கிரமாதித்தர் திரும்பி, ‘இனிமேலும் நான் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்க, ‘இல்லை, பணக்காரப் பையனுக்கே நாங்கள் பெண்ணைக் கொடுத்துவிடுகிறோம்!’ என்று அவர்கள் சொல்ல, ‘மங்களம் உண்டாகட்டும்!’ என்று அவர் அவர்களை ஆசீர்வதித்துவிட்டு, அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வாராயினர்.”

பத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான சற்குணா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; இருபதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சுந்தரா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு…

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை.

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *