பதினைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் அமிர்தா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 1,763 
 

பதினைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் அமிர்தா சொன்ன வஞ்சம் தீர்ந்த கதை

“கேளாய், போஜனே! படிப்பவர்களைவிட எழுது பவர்கள் அதிகமாகிவிட்ட இந்த காலத்திலும், ‘எழுத வேண்டும், எழுத வேண்டும் எழுத்தாளராக வேண்டும்’ என்று சிலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? அவர்களில் ஒருவர் எங்கள் ஊரிலே இருந்தார். பெயர் அழகப்பன். ‘அப்பா, அழகப்பா! வேறு எந்த ஆசை வேண்டுமானாலும் உனக்கு இருக்கட்டும்; நாங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் இந்த எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசை மட்டும் வேண்டாம். அது உன்னைப் பட்டினிப் போட்டுக் கொன்றுவிடும்!’ என்று அவருடைய பெற்றோர் அவரைப் பயமுறுத்திப் பார்த்தார்கள். அவர் கேட்கவில்லை; ‘அதெல்லாம் அந்தக் காலம்; இந்தக் காலத்தில் எழுத்தாளருக்குக் கிடைக்கும் வருமானம் வேறு யாருக்கும் கிடைப்பதில்லை!’ என்பதாகத்தானே அவர் துணிந்து, அந்தத் துறையில் முழுமூச்சுடன் இறங்குவாராயினர்.

‘அப்பா, அழகப்பா! எழுதும்போதே வருமானத்தை நினைவில் வைத்துக்கொண்டு எழுதுகிறாயே, அந்த எழுத்து எப்படி உருப்படும்? எழுத்து என்றால் அது இதயத்திலிருந்து வர வேண்டும்; வெறுங் கையிலிருந்து வரக்கூடாது!’ என்று அடுத்தாற்போல அவருடைய நண்பர்களில் சிலர் அறிவுறுத்த, ‘இரண்டும் பொய்! எழுத்து இதயத்திலிருந்தும் வருவதில்லை; கையிலிருந்தும் வருவதில்லை. அது பேனாவிலிருந்து வருகிறது!’ என்பதாகத்தானே. அவர்கள் சொன்னதையும் அவர் உடனே மறுத்துவிட்டு, மேலும் எழுதுவாராயினர்.

இந்த நிலையில், ‘எழுத்தாளன் என்பவன் தன்னால் உருவாவதும் இல்லை; பிறரால் உருவாக்கப்படுவதும் இல்லை. அவன் தானாகவே பிறக்கிறான்!’ என்று ஏதோ ஒரு பத்திரிகையில் வெளியாகியிருந்த துணுக்கு ஒன்று அவரை ஒரு கணம் துணுக்குற வைக்க, ‘ஆஆஆமாம், எழுத்தாளன் பிறக்கும்போதே பேனாவைக் கையில் பிடித்துக்கொண்டு பிறக்கிறானாக்கும்? சுத்த அபத்தம்!’ என்ற மறுகணமே அவர் அதையும் சமாளித்துக்கொண்டு, மேலும் மேலும் எழுதி, ‘குவி, குவி’ என்று குவிப்பாராயினர்.

கதை, கட்டுரை, நாவல், நாடகம், கவிதை-எதையும் விடவில்லை அவர்; பின்னால் அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தானோ என்னவோ, வகைக்கு நூறு எழுதி முடிக்கும் வரை அவர் ஓயவேயில்லை!

‘நூறு அவ்வளவு நல்ல எண் இல்லை; குறைந்த பட்சம் நூற்று ஒன்றாகவாவது எழுதி முடியுங்கள்!’ என்று அவருடைய ஆத்ம நண்பர்களில் ஒருவர் சொல்ல, ‘சரி’ என்று வகைக்கு ஒன்றாக மேலும் எழுதி, எல்லாவற்றையும் நூற்று ஒன்று, நூற்று ஒன்று என்று ஆக்கிய பின்னரே அவர் தம் பேனாவைக் கீழே வைப்பாராயினர்.

எல்லாம் முடிந்தது; அடுத்தாற்போல் அவர் எழுதியவை அச்சு வாகனம் ஏற வேண்டியதுதான் பாக்கி. அதற்காகத் தாம் எழுதியவற்றில் வகைக்கு இரண்டை எடுத்துக்கொண்டு அவர் ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்தின் மேலும் படையெடுக்க, அவருடைய படையெடுப்பைக் கண்டு அஞ்சியோ என்னவோ, ‘கதை, கட்டுரை எதுவும் நேரில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; தபால் மூலமே அனுப்ப வேண்டும்’ என்று எல்லாப் பத்திரிகைக்காரர்களும் ஒருவர் பின் ஒருவராக அறிவிப்பாராயினர்.

பார்த்தார் அழகப்பர்; ‘பயந்தாங்கொள்ளிகள், கோழைகள்!’ என்று அவர்களை மனமாறச் சபித்துக் கொண்டே, அவர்களுடைய விருப்பம்போல் தாம் எழுதியவற்றைத் தபாலிலேயே அனுப்பினார். என்ன காரணமோ தெரியவில்லை, சுவரில் எறிந்த பந்துபோல் அவை அவரிடமே திரும்பி வந்துகொண்டிருந்தன. ‘வரட்டும், வரட்டும்!’ என்று அவர் ஏதோ ஒரு வஞ்சத்துடன் அவற்றை வாங்கி வைத்துக் கொண்டிருக்க, ‘தபால் தலை வைத்து அனுப்பினால் அப்படித்தான் திரும்பி வரும். அது உங்கள் கதை பிரசுரமாகும் என்ற நம்பிக்கை உங்களுக்கே இல்லை என்று நீங்களே சொல்வதுபோல் இல்லையா? இனி தபால் தலை வைத்து அனுப்பாதீர்கள்!’ என்று ஒரு நாள் தபாற்காரர் தன் சிரமத்தைக் குறைத்துக் கொள்வதற்காகச் சொல்ல, அதை அப்படியே நம்பி, அன்றிலிருந்து அவர் தபால் தலை வைக்காமல் அனுப்ப, திரும்பி வருவது நின்றது; ஆனால் பிரசுரமாகாமல் கொன்றது!

‘கொன்றது’ என்றால் அவரை என்று நீங்கள் நினைத்துக் கொண்டு விடப் போகிறீர்கள்! அவரையல்ல; அவருடைய நம்பிக்கையை!

எல்லாப் பத்திரிகைக்காரர்களும் சேர்ந்து தம்மை எழுத்தாளராக விடாமல் செய்யும் இந்தச் சதியை எப்படி முறியடிப்பதென்று அவர் ஒரு நாள் யோசித்தார், யோசித்தார், அப்படி யோசித்தார். அந்த யோசனையின் முடிவில் தம்முடைய எழுத்தை அவர்கள் வடி கட்டுவதற்கு முன்னால் தாமே வடி கட்டி அனுப்பினால் என்ன என்று அவருக்குத் தோன்ற, அதன்படி எதை எழுதினாலும் அதை முதலில் அவர் தம் நண்பர்களுக்குப் படித்துக் காட்டி, அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்பாராயினர்.

இதனால் பல நண்பர்கள் அவரைக் கண்டதும் பயந்து ஓடி ஒளிய ஆரம்பிக்க, தப்பித்தவறி அகப்பட்டுக் கொண்ட சிலரும், அவர் தாம் எழுதியதைப் படித்துக் காட்டும் முன்னரே, ‘பேஷ், பேஷ்! சபாஷ், சபாஷ்!’ என்று சொல்லி விட்டு மெல்ல நழுவப் பார்க்க, அந்த பேஷும் சபாஷும் கூடத் தாம் எழுதிய கதைக்கா, கொடுத்த ‘டிப’னுக்கா என்று தெரியாமல் அவர் தவிக்க, அவர்களால் ‘பேஷ்’ போடப்பட்ட கதைகளும், ‘சபாஷ்’ போடப்பட்ட கட்டுரைகளும் கூடச் சீக்கிரமே திரும்பி வந்து, ‘சந்தேகம் வேண்டாம்; எல்லாம் ‘டிப’னுக்கே!’ என்பதை ஐயமற நிரூபித்து, அவருடைய தவிப்பைத் தீர்த்து வைத்தன.

ஆனாலும் அவர் தாம் மேற்கொண்ட முயற்சியைக் கைவிடவில்லை; ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சம்பந்தப்பட்டவர்கள் வைக்கத் தயங்கியபோது, ‘அவர்கள் என்ன வைப்பது, நாங்களே வைத்துக் கொள்கிறோம்’ என்று தங்கள் முகவரியோடு ‘தமிழ்நாடு’ என்ற பெயரையும் சிலர் சேர்த்து எழுதிக்கொண்டு வரவில்லையா? அதேமாதிரி ‘என்னை இந்தப் பத்திரிகையாளர்கள் எழுத்தாளராக்கா விட்டால் என்ன, என்னை நானே எழுத்தாளராக்கிக் கொள்கிறேன்!’ என்று அவரும் தம் பெயருக்குப் பின்னால் ‘அழகப்பன், எழுத்தாளர்’ என்று சேர்த்து எழுதினார். அத்துடன் அவர் நிற்கவில்லை; அதே முறையில் ‘பிளாஸ்டிக் போர்டு’ ஒன்றையும் தயார் செய்து, தம் வீட்டின் முகப்பில் மாட்டினார். அதற்குப் பின் அவர் எழுதும் கடிதங்கள், கொடுக்கும் ‘விசிட்டிங் கார்டு’கள் ஆகியவற்றிலெல்லாம்கூட அந்த முகவரி பார்ப்பவர்களின் கன்னத்தில் அறைவதுபோல் கொட்டை கொட்டையான எழுத்துக்களில் ‘பளீர், பளீர்’ எனத் தெறிக்கலாயிற்று.

இங்ஙனம் பிறரைப் பொருட்படுத்தாமல் அவர் தம்மைத்தாமே எழுத்தாளராக்கிக் கொண்டு வந்தகாலை, அவருடைய அத்தியந்த நண்பர்களில் ஒருவர், ‘இந்தக் காலத்தில் எதற்கும் சீருடை என்று ஒன்று உண்டு. அந்த முறையில் எழுத்தாளருக்கும் சீருடை என்று ஒன்று உண்டு, உண்டு. அந்தச் சீருடை ஜிப்பாவும் வேட்டியும்தான் என்று சில எழுத்தாளர்கள் சொல்லாமல் சொல்வது உண்டு, உண்டு, உண்டு!’ என்று சொல்ல, ‘இதோ, அவற்றை இன்றே அணிந்தேன்!’ என்று அவர் உடனே வேட்டியையும் ஜிப்பாவையும் வாங்கி அணிய, ‘அதெல்லாம் அந்த நாள் சீருடை; இந்த நாள் சீருடை டெரிலின் ஷர்ட்டும், டெரின் பாண்ட்டும் ஐயா, டெரின் பாண்ட்டும்!’ என்று இன்னொரு நண்பர் சொல்ல, ‘ஆமாம்! ஆமாம்; அதெல்லாம் பிற்போக்கு எழுத்தாளர் அணியும் சீருடை! நான் முற்போக்கு எழுத்தாளராக்கும்’ என்று அன்றே அவர் ஜிப்பாவையும் வேட்டியையும் களைந்து எறிந்துவிட்டு, டெரிலின் ஷர்ட்டும் டெரின் பாண்ட்டும் அணிவாராயினர்.

இப்படியாகத்தானே எழுதுவது ஒன்றைத் தவிர பாக்கி எல்லாவற்றிலும் வெற்றி கண்டு விட்ட அவர், ‘இனி நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று ஒரு நாள் தமக்குத் தாமே ஒரு கேள்வியைப் போட்டுக்கொண்டு, ‘எழுத்தாளர் சங்கத்தில் அங்கத்தினராக வேண்டும்!’ என்று அதற்குரிய பதிலையும் தமக்குத் தாமே சொல்லிக்கொண்டு, எழுத்தாளர் சங்கச் செயலரை அணுகித் தம்முடைய விருப்பத்தைத் தெரிவிக்க, அவர் தம் மகிழ்ச்சியை முதற்கண் தெரிவித்துக் கொண்டு, பழுத்துப் போன விண்ணப்பத் தாள் ஒன்றை எடுத்துப் படுபவ்வியமாக அவரிடம் நீட்டுவாராயினர்.

அதை வாங்கிப் பார்த்தார் அழகப்பர்; அதில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளில் ஒன்றே ஒன்றுக்கு மட்டும் என்ன எழுதுவது என்று தெரியவில்லை அவருக்கு. அதாகப்பட்டது, “இதுவரை தங்களால் எழுதப்பட்ட கதைகள் ஏதாவது எந்தப் பத்திரிகையிலாவது வெளியாகியிருக்கின்றனவா? வெளியாகியிருந்தால் அந்தப் பத்திரிகைகளில் இரண்டின் பெயர்களை இங்கே குறிப்பிடவும்’ என்பதே அது. ‘எழுத்தாளர் சங்கத்தில் அங்கத்தினராக வருபவர் உண்மையிலேயே எழுத்தாளரா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க இப்படி ஒரு சோதனையை இவர்கள் வைத்திருக்கிறார்கள் போல் இருக்கிறது! இதைவிட, இதுவரை நீர் எத்தனை கதைகள் எழுதியிருக்கிறீர் என்று கேட்டிருக்கக் கூடாதா? அப்படிக் கேட்டிருந்தால் வகைக்கு நூற்று ஒன்று என்று எழுதி, இவர்களை நான் மூர்ச்சை போட்டுக் கீழே விழ வைத்திருப்பேனே! இப்போது நான் இதற்கு என்னத்தைச் சொல்ல? என்னத்தை எழுத? பத்திரிகைகளில் வெளி வந்தால்தான் எழுத்தாளரா, இல்லாவிட்டால் எழுத்தாளர் இல்லையா? இது என்ன அநியாயம், இது என்ன அக்கிரமம்!’ என்று அவர் குமைய, செயலர் ‘என்ன விஷயம்?’ என்று குடைய, அழகப்பர் விண்ணப்பத் தாளில் தாம் கண்ட வேண்டாத கேள்வியைப் பற்றி அவரிடம் விவரிக்க, ‘பூ, இவ்வளவுதானே? அதற்குப் பயந்து இங்கே கட்ட வந்த சந்தாத் தொகையை நீங்கள் மீண்டும் உங்களுடைய சட்டைப் பைக்குள்ளே போட்டுக்கொண்டு போய் விடாதீர்கள்! ஆண்டுக்கொரு முறை விழா நடத்தி, அங்கத்தினர் அனைவருக்கும் ஒரு வேளை சாப்பாடாவது போட்டு அனுப்ப இந்தச் சங்கம் எப்படியாவது உயிர் வாழ வேண்டியிருக்கிறது. அதற்காகவாவது நீங்கள் செலுத்த வேண்டிய சந்தாத் தொகையைச் செலுத்தி, உடனே அங்கத்தினராகிவிட்டுப் போங்கள்!’ என்று செயலர் அபயம் அளிக்க, ‘அப்படியானால் என்னுடைய கதைகள் வெளியான பத்திரிகைகளில் இரண்டின் பெயர்கள்ளை இந்த விண்ணப்பத்தாளில் குறிப்பிடச் சொல்கிறீர்களே, அதற்கு நான் என்ன் செய்வது?’ என்று அழகப்பர் கடாவ, ‘கவலை வேண்டாம்; செத்துப் போன பத்திரிகைகள் எத்தனையோ இல்லையா? அவற்றில் இரண்டின் பெயர்களை எழுதிவிட்டுப் போங்கள்!’ என்று செயலர் அதற்கும் சட்டென ஒரு வழி காட்ட, ‘நன்றி!’ என்று அழகப்பர் அப்படியே எழுதி, கொடுக்க வேண்டியதையும் கொடுத்து, ‘என்னுடைய வளர்ச்சிக்கு இந்தச் சங்கம் ஏதாவது வழி காட்டுமா?’ என்று மெல்ல உசாவ, ‘சங்கம் இப்போது தன்னுடைய வளர்ச்சிக்கு வழிதேடிக் கொண்டிருக்கிறது. அந்த வழியைக் கண்ட பிறகுதான் அது எழுத்தாளர் வளர்ச்சிக்கு வழி காணும்!’ என்று செயலர் செப்ப, ‘அதுவரை என்னால் எழுதப்பட்டவை யெல்லாம் என்னிடமே இருக்க வேண்டியதுதானா?’ என்று அழகப்பர் பின்னும் கேட்க, ‘வேண்டாமே! அதிசய மோதிரம், அபூர்வ மூலிகை, ஆச்சரிய குண சிந்தாமணி என்பது போன்ற சரக்குகளின் விளம்பரத்துக்கும், வி.பி.பி. ஆர்டருக்கும் என்றே சில பத்திரிகைகள் இங்கே நடப்பது உண்டு. அவற்றுக்கு யார் என்ன எழுதி அனுப்பினாலும் அதை ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் அப்படியே அச்சுக்கு அனுப்பிவிடுவது உண்டு, உண்டு. அதனால் அவற்றில் உங்களைப் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்கள் தப்பாமல், தவறாமல் வருவதும் உண்டு, உண்டு, உண்டு. வாசகர்களைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப்படாமல், அவர்களுக்காகக் கொஞ்சங்கூட இரங்காமல் உங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கென்றே நடந்து வரும் அந்தப் பத்திரிகைகளுக்கு உங்களுடைய விஷய தானத்தை உண்மையிலேயே தானமாக எண்ணி அனுப்பி வையுங்கள்; தப்பாமல், தவறாமல் பிரசுரமாகும்!’ என்று செயலர் பின்னும் சொல்ல, ‘நன்றி, நன்றி!’ என்று ஒரு முறைக்கு இரு முறையாக நன்றி தெரிவித்துவிட்டு, ‘கண்டேன் கண்டேன், என்னுடைய லட்சியத்தை எட்டிப் பிடிக்க வழி கண்டேன்!’ என்று அழகப்பர் ஏறுபோல் அங்கிருந்து ‘ஏறு நடை’ நடந்து வருவாராயினர்.

செயலர் சொன்னது சொன்னபடி, விஷயத்தைத் தானமாகப் பெறுவதற்கென்றே நடந்துகொண்டிருந்த சில வி.பி.பி. பத்திரிகையாளர்களை அணுகி, அழகப்பர் தம்முடைய ‘விஷய தான’த்தைச் செய்ய, அவர்களும் ‘தானம் வாங்கக் கூசிடுவான், தருவது மேலெனப் பேசிடுவான்!’ என்னும் ‘தமிழன் தரும’த்தைச் சற்றே மறந்து அவற்றை வாங்கி வெளியிட, அதனால் தம் ஜன்மமே சாபல்யமுற்றது போன்று அவர் தலை நிமிர்ந்து நடப்பாராயினர்.

இங்ஙனமாகத்தானே தம்முடைய லட்சியத்தை எட்டிப் பிடித்து அவர், ஆரம்ப காலத்தில் தாம் எழுதி அனுப்பியவற்றை அப்படியே திருப்பி அனுப்பிய அத்தனை பத்திரிகை எழுத்தாளர்களையும் எப்படி மட்டம் தட்டுவது, எங்ஙனம் பழி தீர்த்துக் கொள்வது என்று அதி அதி அதி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த காலை, ‘அதற்குரிய ஒரே வழி நீங்கள் உடனே போய் மிஸ்டர் விக்கிரமாதித்தரைப் பார்ப்பதுதான்!’ என்று அவருடைய அருமை நண்பர்களில் ஒருவர் சொல்ல, ‘நல்ல வேளை. ஞாபகப்படுத்தினீர்கள்!’ என்று அவர் அக்கணமே சாட்சாத் விக்கிரமாதித்தரைத் தேடி ‘ஓடு, ஓடு’ என்று ஓடுவாராயினர்.

தமக்கு முன்னால் இறைக்க இறைக்க வந்து நின்ற அழகப்பரை நோக்கி, ‘யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று விக்கிரமாதித்தர் விசாரிக்க, ‘ஐயகோ! இன்னுமா என்னை ‘யார் நீங்கள்?’ என்று வாய் கூசாமல் கேட்கிறீர்கள்? என்னுடைய எழுத்தோவியங்கள்தான் இப்போது எத்தனையோ பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருக்கின்றனவே, அவற்றை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்று அழகப்பர் பதற, ‘பார்த்தேன், பார்த்தேன்; உங்கள் பெயர்?’ என்று விக்கிரமாதித்தர் மறு படியும் அவரை சோதனைக்குள்ளாக்க, ‘பார்த்த லட்சணமா என் பெயர் என்ன என்று கேட்கிறீர்கள்? அவமானம், அவமானம், ஓர் எழுத்தாளன் தன் பெயரைத் தானே சொல்லிக் கொள்வது போன்ற அவமானம் இந்த உலகத்தில் வேறு ஏதாவது உண்டா, உண்டா, உண்டா? ஆனாலும் சொல்கிறேன், சொல்லித் தொலைக்கிறேன்-என் பெயர், என் பெயர்-அடக், கடவுளே! இந்தச் சமயத்தில்தானா அது எனக்கே மறந்து போய்த் தொலைய வேண்டும்?-ஆ! வந்துவிட்டது, ஞாபகம் வந்துவிட்டது! அழகப்பன், அழகப்பன்!’ என்று ஒரு முறைக்கு இருமுறையாக அழகப்பர் தம் பெயரை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, ‘அழகப்பரா! இப்போது நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? வீட்டிலிருந்து வருகிறீர்களா? இல்லை, வேறு எங்கிருந்தாவது வருகிறீர்களா? ‘என்று கேட்டுக்கொண்டே விக்கிரமாதித்தர் அவரைச் சற்றே சந்தேகக் கண் கொண்டுபார்க்க, ‘நீங்கள் நினைப்பது சரி! என்னை ‘அங்கே’ அனுப்பி வைக்கத்தான் இங்குள்ள பத்திரிகையாளர்கள் அத்தனை பேரும் முயன்றார்கள். நல்ல வேளையாக எழுத்தாளர் சங்கச் செயலர் என்னைத் தடுத்தாட் கொண்டார்; அதிலிருந்து நான் தப்பிப் பிழைத்தேன். இப்போது என்னைப் பழி வாங்கிய அத்தனை பத்திரிகை எழுத்தாளர்களையும் உடனே நான் பழிக்கு பழி வாங்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் வழி காட்ட வேண்டும்!’ என்று அழகப்பர் தாம் வந்த விஷயத்துக்கு வர, ‘அது என்ன பிரமாதம்! அவர்களுடைய கொட்டத்தை அடக்க நீரும் ஒரு சங்கத்தை உடனே ஆரம்பித்துவிட வேண்டியது தான்!’ என்றார் விக்கிரமாதித்தர்; ‘என்ன சங்கம்?’ என்று கேட்டார் அழகப்பர். ‘எழுத்தாளர் சங்கம்தான்!’ என்றார் அவர்; ‘அதுதான் இருக்கிறதே!’ என்றார் இவர். ‘இருந்தால் என்ன? சென்னைக்கு ஒன்றாக இருந்த அதுதான் இப்போது ஜில்லாவுக்கு ஒன்றாகி, அதுவும் போதாதென்று நகரத்துக்கு ஒன்றாகி, அதுவும் போதாதென்று ஊருக்கு ஒன்றாகி, அதுவும் போதாதென்று தெருவுக்கு ஒன்றாய் ஆரம்பமாகிக் கொண்டிருக்கிறதே, நீரும் உம்முடைய தெருவில் ‘எழுத்தாளர் சங்கம்’ என்று ஒன்றை ஆரம்பியும்; அதற்கு உம்மையே தலைவராகப் போட்டுக் கொள்ளும். நீர் எப்பொழுது எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகி விடுகிறீரோ, அப்பொழுதே இந்த உலகத்திலுள்ள அத்தனை எழுத்தாளர்களுக்கும் இல்லையில்லை, இந்தத் தமிழகத்திலுள்ள அத்தனை எழுத்தாளர்களுக்கும் தலைவராகிவிடுகிறீர்! அப்புறம் என்ன, அவர்களெல்லாம் உமக்குத் தொண்டர்கள் தானே? இருந்து விட்டுப் போகட்டும்! போம் போம், போய் உடனே உங்கள் தெருவில் எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பியும். அது ஒன்றே அவர்களைப் பழி வாங்க உமக்குள்ள ஒரே வழி; அது ஒன்றே அவர்களை வஞ்சம் தீர்க்க உமக்குள்ள ஒரே வழி!’ என்று சொல்லிக்கொண்டே விக்கிரமாதித்தர் சட்டென்று எழுந்து கையைப் புட்டென்று அடித்துக் கூப்ப, அழகப்பரும் வேறு வழியின்றி எழுந்து பதிலுக்குக் கைகூப்பி விட்டு, அங்கிருந்து நகருவாராயினர்.”

பதினைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் அமிர்தா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நளைக்கு வாருங்கள்; பதினாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கிருபா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு…….

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *