கல்யாண வீட்டில் சகல பேர்களும் செல்போன் வைத்துக் கொண்டு இருந்தார்கள். கல்யா ணப் பெண், மாப்பிள்ளைப் பையன், நடத்திவைக்கிற சாஸ்திரிகள், தலைமை நாகஸ்வரக்காரர், ஜால்ரா இளைஞன், சத்திரத்து வாட்ச்மேன்… பட்டியல் நீளம்! அழுதுகொண்டு இருந்த ஒரு ஆறு மாசக் குழந்தையின் கையில் அதன் அம்மா செல்லைக் கொடுத்ததும், அதன் அழுகை நின்றுவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
கல்யாண வீட்டில் ‘சீர் வரிசையைப் பார்க்கிறது’ என்று ஒரு வழக்கம் உண்டல்லவா? அப்படி, விலை உயர்ந்த வெள்ளிப் பாத்திரங்களிலிருந்து டவுன் கந்தசாமி கோயில் தெரு வெண்கலக் கடாய் வரை அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்த எனக்கு ஒரே அதிர்ச்சி! ஒரு பெரிய வெள்ளித் தட்டு நிறைய, விதம்விதமான பிராண்ட்களில் மொபைல் போன்கள்! இந்த லட்சணத்தில், நானும் ஒரு செல்போன் வாங்கிக்கொண்டு போயிருந்தேன், மாப்பிள்ளைப் பையனுக்குப் பரிசளிக்க!
இந்த செல் மகா சமுத்திரத்தில், இந்த ஏழையின் செல் அம்பலம் ஏறுமா?
‘‘இப்ப என்னடா பண்ணலாம்?’’ என்றேன், நண்பன் நாராயணனிடம்.
‘‘என்ன கெட்டுப் போச்சு? பணமா மொய் எழுதிட்டு, இதை நீயே வெச்சுக்கோயேன்’’ என்றான்.
‘‘இதை வெச்சிட்டு நான் என்ன பண்றது? ஏற்கெனவே என்கிட்ட மூணு இருக்கு!’‘
நாங்கள் இருவரும் கல்யாண சத்திரத்து வாசலில் ஓர் ஓரமாக பேசிக்கொண்டு இருந்தோம். திடீரென்று ‘‘ஷாமியோவ்!’’ என்ற குரல் மிக அருகில் கேட்டது.
எச்சில் இலை சேகரிக்க வந்த வயசான நரிக்குறவக் கிழவி ஒருத்தி, தன் காவிப் பல் சிரிப்புடன் ஒரு கும்பிடு போட்டாள். நான் சில்லறை தேடினேன்.
‘‘சில்லறை வேண்டாங்கோ… ஷெல்லுபோன் பத்திப் பேசிட்டிருந்தீங்களே… இந்த ஏழைக்குக் கொடுத்திடுங்க ஷாமியோவ்! பொழச்சிப் போறேன்’’ என்றாள்.
ஆஹா… கடையேழு வள்ளல்கள் லிஸ்ட்டில் என் பெயரைச் சேர்க்க அந்த நரிக்குறவியம்மையார் முயற்சி செய்கிறார் என்று தெரிந்தது. ‘நரிக்குறவி அம்மையாருக்கு செல் தந்த நன்னஞ்சேரி நாணுவய்யன் பரம்பரை’ என்று என் எதிர்கால சந்ததியினருக்குப் பட்டம் வராவிட்டால் போகிறது என்று உடனடியாக அந்த இடத்தை காலி செய்தோம். அவள் எங்களைப் பின்தொடர்ந்து வந்து, ‘‘ஷாமியோவ்! நீ ஒண்ணும் சொம்மாத் தரவேணாம். பணத்துக்குதான் கேக்கறேன். ஒரு வெலை சொல்லு ஷாமி!’’ என்றாள்.
‘‘என்னம்மா, விளையாடறியா? நான் எதையும் விக்கிறதா இல்லை. போ போ!’’
‘‘ஏன் ஷாமி வெரட்டறே? நான் பிச்சே போடுன்னு கேட்கலே. ஒரு வெலை வெச்சுக் குடுங்கறேன்! நாங்கெல்லாம் ஏழே ஷாமி! எட்டு நூறு வெச்சுக்கோ!’’ என்றபடி தன் தொப்பையைத் துழாவி, ரூபாய் நோட்டுக்கள் சிலதை எடுத்தே விட்டாள்.
நாராயணன் சத்தமாகச் சொன்னான்… ‘‘பலே! பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறிப் பீடு நடை போடுகிறது என்று ஆட்சியிலுள்ள தலைவர்கள் அடிக்கடி சொல்றாங்களே, அது நெஜம்தான் போலிருக்கு!’’
நாங்கள் வேகமாக அப்பால் நகர, அந்தக் கிழவியும் எங்களைப் பின்தொடர்ந்து வந்தாள். சத்திரத்து வாட்ச்மேன் ஒரு அதட்டல் போட்டதால், அவள் வாசலோடு நின்றாள். நாங்கள் தப்பினோம். இருந்தும், ‘‘ஏண்டா நாராயணா, அவள் இன்னமும் வெளியே நின்றுகொண்டு இருப் பாளோனு எனக்கு பயமா இருக்குடா’’ என்றேன்.
‘‘அப்போ ஒரு காரியம் பண்ணு. மடியில் கனமிருந் தால்தானே வழியில் பயம்? நம்ம ஒரிஜினல் பிளான்படி, அதைக் கல்யாணப் பைய னுக்கே பரிசாத் தந்துடு!’’ என்றான்.
பரிசளிப்பு கியூவில் நின்றிருந்தபோது, என் பார்வை அனிச்சையாக சத்திரத்து வாசல் பக்கம் செல்ல, அங்கே அந்தக் காவிப் பல் நரிக்குறவி அம்மையார் எனக்கா கவோ, இலைக்காகவோ காத்து நிற்பது தெரிந்தது.
– பெப்ரவரி 2006