மாப்பிள்ளைத் தேர்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2023
பார்வையிட்டோர்: 931 
 

(2001 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஏன் பிறந்தாய் மகளே’ என்று பிறப்பித்த காலத்தில் நினைக்காது போனாலும், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படி அமைச்சர் முதல் ஆண்டிவரை நினைக்கும் இந்தக் காலக்கட்டத்தில், இதோ இதே நாளில், குட்டாம்பட்டியில் வாழும் ராமலிங்கம் மட்டும், இன்னொரு பெண்ணையும் பெறாமல் போனோமே என்று வருத்தப்பட்டார்.

அவரது பறட்டைத் தலையில், தேய்ப்பதற்காக சதைக் குவளை மாதிரியான அவர் கையில் தேங்காய் எண்ணெய் பாட்டிவைச் சாய்த்துக் கவிழ்த்த தேனம்மா அருகில் நிற்பதையோ, அவர்கையில் எண்ணெய் ஊத்தியதையோ கவனிக்காமல், மனிதர் குத்துக் கல்லாய் நின்றார். இன்னொரு நாளாக இருந்தால், கையில் அதிகமாகப் பெருக்கெடுத்த எண்ணெயைப் பார்த்துவிட்டு, ‘இவ்வளவு எண்ணெய் தேய்த்தால் உருப்பட்டாப் போல்தான்’ என்று மனைவியை கத்தி முடித்திருப்பார்.

ஆனால் இப்போதோ, துண்டை எடுத்து விசிறியாக்கிய படியே நின்றார். தேனம்மா, தனது தலையில் எண்ணெய் தடவி விடுவதையோ அப்படித் தடவியதில் அவரது முள் முடியில் அவளது கை சிக்கிக் கொண்டு, முடியை இழுத்த இழுப்பில் ஏற்பட்ட வலி யையோ, உணராமல் நின்றபடியே நின்றார்.

ராமலிங்கம், எந்த மனிதனுக்கும், தன்னைப்போல் அவனா, இவனா என்ற பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டார். இந்த பிரச்சினைக்கு தீர்வாக இரட்டை அதிர்ஷ்டங்கள் வந்தாலும், அவருக்கு அவை, துரதிருஷடங்களாக தெரிந்தன.

அவரது ஒரே மகள் மலரைக் கேட்டு இரண்டு இடங்களில் இருந்து ஆள் அனுப்பி விட்டார்கள். அரசியலைப் பொறுத்த வரையில் ஒரு குடும்பம் கதர் வேட்டி. இன்னொன்று கரைவேட்டி, அதைப் பற்றி அவருக்குக் கவலையில்லை. பண பலத்திலோ ஆள் பலத்திலோ ஒன்றுக்கொன்று குறைந்ததில்லை. அதோடு ஒரே பங்காளிக் குடும்பம். இவரோட அம்மாவும், தேனம்மாவும் பிறந்த குடும்பம்.

முதல் வீட்டு பிள்ளையாண்டான் முத்துவேலுவும், இன்னொரு வீட்டுப் பிள்ளையாண்டான் பழனிச்சாமியும், ஒரே தராசில் இருந்த தட்டுக்கள் மாதிரி. முத்துவேல் உரக்கடை வைத்திருக்கிறான். கூடமாட விவசாயக் கருவிகளை கமிஷனுக்கு வாடகைக்கு விடுகிறான்.

பழனிச்சாமியும் லேகப்பட்டவன் அல்ல. பெரிய பலசரக்குக் கடையாக வைத்து இருக்கிறான். அதுவும் பெரிய பங்களா மாதிரி கடை பொண்டாட்டியைத் தவிர எல்லாம் வாங்கலாம்.

இவனுக்கு மோட்டார் பைக் வாகனம். அவனுக்கு ஸ்கூட்டரே ஆசனம். ஆள் பார்வை என்று எடுத்துக் கொண்டால்கடட, முத்துவேல் புலி, பழனிச்சாமி சிங்கம். இவனுக்குத் துாக்கலான பல்; ஆனால் உருண்டையான முகம்; அவனுக்கு துாக்கலான முகம்; ஆனால் அழகான பல்வரிசை பழக்கவழக்கத்தைவைத்துப்பார்த்தால், இருவருமே சிகரெட் பிடிப்பவர்கள்;கள்ளச் சாராயத்தை மட்டும் குடிக்காதவர்கள். குணம் என்று வைத்தால், இருவருமே தங்கக்கம்பிகள். இவரை எதிரில் பார்த்தாலே போதும். முத்துவேல் ‘மாமா என்று சொல்வியபடியே வேட்டியை இறக்கிப் போட்டுச் சிரிப்பான். பழனிச்சாமி சிரித்தபடியே’மாமா என்று மேல் துண்டை, தோளில் இருந்து கையில் இறக்கிக் கொள்வான்.

இப்போது இந்த இரண்டுபேருமே பேண்ட், சர்ட்போடுவதால் மடக்கி வைத்த சட்டையைத்தான் நிமிட்டி விடுகிறார்கள்.

இவன்களில் எவனை மகள் மலருக்குத் தேர்ந்தெடுப்பது என்பது அவருக்குப் பிரச்சனையாகிவிட்டது. இவர், தனது குலதெய்வமான கடலைமாடனிடம் பூப்போட்டுப் பார்த்தார். அந்த மாடன் முத்துவேலுக்கு வெள்ளைப் பூவைக் காட்டி, பழனிச்சாமிக்கு, டேஞ்சர் நிறப் பூவைக் காட்டிவிட்டான். அதே சமயம், மனைவி தேனம்மா தனக்குப் பிடித்த காளியம்மாளிடம் சீட்டு எழுதிப் போட்டாள்.அந்த ஆத்தாளோ,பழனிச்சாமிக்கு ஆமாம்போட்டு,முத்து வேலுக்கு சீல் போடுகிறாள். போதாக்குறைக்கு, கடந்த நான்கு நாட்களாக இரண்டுபயல்களுமே அவரையே பெண்ணாகநினைத்து அவர் போகுமிடமெல்லாம் அவரை சைட் அடிக்கிறார்கள்.

ராமலிங்கத்திற்குக் கோபம் கோபமாக வந்தது. வீட்டின் மூன்று வாசல்களைத் தாண்டி படிகளுக்குக் கதவு போல் உள்ள கொல்லைப்புற கிணற்றுச் சுவரில் சாய்ந்து நிற்கும் மலர், எதையுமே கண்டுக்காதுபோல், வலது கையால் இடது கைக்குச் சொடக்குப் போட்டுக் கொண்டிருந்தாள். அந்தப் பயல்கள் சொக்கிப்போகும் அளவுக்கு அவளிடம் என்ன இருக்கிறது என்று அவருக்குப் புரியவில்லை. அப்புறம், ஒரு தந்தைக்கு, மகளின் அழகு தெரியாது என்பதை ஒப்புக் கொண்டது போல் முகத்தைத் திருப்பினார்.

ஆனாலும், மலர், அம்மாவைப் போல் இரண்டு கன்னத்து எலும்புகளும் துருத்தி நிற்க’இருமுகம் காட்டாமல், தன்னைப் போல் வட்டமுகம் கொண்டதில் மகிழ்ந்துபோனார். அதே சமயம் தன்னைப் போல் சப்பிப்போன உடம்பில்லாமல், அம்மாவைப்போல் அழுத்தமான உடல்வாகுகொண்டதில் அவருக்கு ஒரு பூரிப்பு, ஆனாலும் சரியான பேக்குராண்டு இரண்டு பேரில் எவன் பிடிக்குது என்று சாடைமாடையாகச் சொல்லலாம். சொன்னால் தானே. இரண்டு பேரையுமே கட்டிக்கத் தயார் என்பது மாதிரி பார்த்தால் எப்படி!

ராமலிங்கத்தின் தலையில் எண்ணெய் தேய்த்து முடித்துவிட்ட தேனம்மா, தனது புறங்கையால், அவரது கையில் எண்ணெய் பிசிறைத் தடவி விட்டபடியே சொன்னாள்:

“உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? மேலத்தெரு ராக்கம்மா கல்யாணம் ஆன இந்த ஒரு வாரத்துல ஒரு நாளுகூடப் புருஷனைத் தொட விடலையாம். கேட்டால், சிகரெட் பிடிக்க தெரியாதவனெல்லாம் ஒரு ஆம்பிளையான்னு கேட்கிறாளாம். நம்ம பொண்னு கத்தப் பட்டிக்காடு.”

ராமலிங்கத்திற்குக் கோபம் வந்தது. கிணற்றுச் சுவரில், இன்னும் சாய்ந்தபடியே இப்போது வலதுகைக்கு இடதுகையால் சொடுக்கு போட்டுக் கொண்டிருந்த மகளை, திட்டுவதற்குச் சாக்குபோக்கு பார்த்தார்.

“ஏழா மலரு. இங்க வா.”

“வாரேன்பா…”

மலர், இடுப்பில் சொருகிய சேலையை பாதம்வரை படர்த்திவிட்டு, தந்தையின் பக்கம் ஓடோடிவந்தாள்.அப்பா எதற்காக கூப்பிடுகிறார் என்பது தனக்குத்’தண்ணீர்பட்டயாடு என்பதுபோல் அடுக்களைப் பக்கம் ஓடினாள். நான்கைந்து தம்ளர்களில் நல்ல டம்பளர் ஒன்றை எடுத்து, யானைக்குள் துழாவப் போனாள். பிறகு, அந்தடம்ளரை அப்படியேவைத்துவிட்டு, கண்ணாம்புகரைபட்ட, தன் கையைக் கழுவிவிட்டு, ஒரு செம்யை எடுத்து நீர் மொண்டாள். அப்பாவுக்காக அவ்வளவு கத்தம். இவ்வளவுக்கும் அண்ணன் தண்ணீர் கேட்டால் தான் குடித்து வைத்த எச்சில் தண்ணிரைக் கொடுப்பவள்தான்.

செம்பை நீட்டிய மகளிடம் அப்பாகத்தினார்.

“இந்தா. என் தலையிலே ஊத்து. அப்பவாவது பித்தம் தெளியட்டும்.”

மலர், கவலைப்படவில்லை. கண்ணிர் மல்க வில்லை, லேசாகச் சிரித்துக் கொண்டாள். “தண்ணீர் வரவர உப்புக் கரிக்குதுப்பா, இனிமே தெருக்குழாயிலதான் குடிக்கத் தண்ணீர் பிடிக்கனும்,” என்று சொல்லிவிட்டு, சர்வசாதாரணமாகப் போய்விட்டாள்.

கண்ணை மூடியபடியே, வாய் வழியாக மூச்சுவிட்ட ராமலிங்கம்,வீட்டுக்கு வெளியே,தெருவில் கேட்டபேச்சுச்சத்தத்தைக் கேட்டு நிமிர்ந்தார். அது தேனம்மாவுக்குச் சாதா சத்தமாகவும், இவருக்கு அசரீரி குரலாகவும் ஒலித்திருக்க வேண்டும். சத்தம் இதுதான்.

“தீமிதி விழா இல்லாத திரெளபதியம்மன் கொடையா?”

அந்தத் தெருப் பேச்சு, ராமலிங்கத்திற்கு திருப்பேச்சாய் ஒலித்தது. மார்பை நிமிர்த்தி, தலையைத் துக்கித் தன்னையே எக்காளமாகப் பார்த்துக் கொண்டார். மனைவியிடம் முகம் கொடுத்து, அதே சமயம், மகளிடம் பேசுவதுபோல் பேசினார்.

“ரெண்டு பயலையும் தீ மிதிக்க வைக்கப் போறேன். எவன் தேறுறானோ அவனுக்கே நம்ம மலரு”

தேனம்மா,விவரம்கேட்பதற்கு முன்பே,ராமலிங்கம் நடையைக் கட்டினார். நிறத்தாலும், குணத்தாலும் பழுத்துப்போன அரைக்கை சட்டை ஒட்டைகளுக்குள் இன்னும் இரண்டு கைகளைத் திணிக்கலாம். அந்தத் தொளதொளப்புச் சட்டையோடு, வடக்குத் தெருவைத் தாண்டி, அது சங்கமமாகும் வண்டிப்பாதையில் நடந்து, அந்தப் பாதை அஸ்தமித்த அல்லது விஸ்வரூபம் எடுத்த கப்பிச்சாலையில் நடந்தார். இருபுறமும் உள்ள சிற்றுண்டி, சைக்கிள், பலசரக்கு, பெட்டிக்கடைகளை ஒப்புக்குகூடப் பார்க்காமல், முத்துவேலின் உரக்கடை முன்னால் போய் நின்றார். அந்தக் கடையில் வேக வைத்த இரும்புக்கு மேக்கப் போட்டதுபோல், பல்வேறு வகையான கருவிகள், கடையின் பின்பக்கச் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார். அவரைப் பார்த்ததும், அவர்பக்கத்தில் மலரே நிற்பதுபோலபாவித்துக்கொண்டு, முத்துவேல். ஒடிவந்தான்.

“மாமா! உப்புத் தண்ணீரை நல்லாதண்ணியாமாத்துறதுக்கு ஒரு மிஷின் வந்திருக்கு வாங்கிக்கிறிங்களா?”

ராமலிங்கத்தின் நெற்றி, நரம்புக் கோடுகளாயின. ‘என் வீட்டு கிணத்துல உப்புத் தண்ணி இருக்குது இவனுக்கு எப்படித் தெரியும்? இதற்கு பேர்தான் ராசியோ. பொருத்தமோ.

ராமலிங்கம் மகிழ்ந்து போனார். அவன் வைத்திருக்கும் டிராக்டரை வாடகைக்கு எடுக்க வந்தவர், அதைவிடச் சிறப்பான பரீட்சை நடத்தப்போவதில் மகிழ்ந்துபோனார்.இதற்குள் முத்துவேல் ராக்கெட் மாதிரி இருந்த அந்தக் கருவியைக் கொண்டு வந்து, அதன் மத்தியில் இருக்கும் பஞ்க மாதிரியான பகுதி எப்படி நீரில் இருந்து இரும்புச் சத்தையும், உப்பையும் அப்புறப்படுத்துகிறது என்று விளக்கினான். ராமலிங்கம் கேட்டார்.

“எவ்வளவு மாப்பிள்ளை விலை?”

“விலை என்ன மாமா விலை? எடுத்துட்டுப் போங்க!”

“தாய் பிள்ளையா இருந்தாலும், வாய் வயிறு வேற இல்லயா?”

“பிறத்தியாருக்குக் கொடுக்கது மூவாயிரம் ரூபாய். உங்களுக்குக் கொடுக்கிறதுல எனக்குக் கமிஷன் வேண்டாம். இரண்டாயிரத்து ஐநூறா கொடுத்திருங்க… நானே உங்கள் வீட்டுக் கிணத்துல மாட்டித் தாரேன்”.

ராமலிங்கம் ஆறு நூறுருபாய் நோட்டுக்களை உள்பாக்கெட்டிலிருந்து அங்கிருந்தபடியே, எண்ணி எடுத்தார்.பிறகு அவனிடம் நீட்டினார். அவன் அதை ஒரு கையில் கருட்டாக்கிக் கொண்டு, மறுகையால் பில் போட்டான். ராமலிங்கம் பாணம் தொடுத்தார்.

“இது அட்வான்ஸ். ஐநூறு ரூபாயையும் எண்ணிப் பார்த்துட்டு பில் போடுங்க மாப்பிள்ளை.”

முத்துவேல், அவசர அவசரமாக எண்ணிட்டு, பில்லைத் தொடர்ந்தான். எழுதியபடியே சொன்னான்: “சரியாக இருக்குது மாமா ”

ராமலிங்கத்திற்கு என்னவோபோல் இருந்தது. திரும்பிப் பார்க்காமலேயே ரசீதை வாங்கிக் கொண்டு நடந்தார். அப்போது முத்துவேல் வேர்க்க விறுவிறுக்க அவர் பக்கம் ஓடி வந்தான்.

“என்ன மாமா இது? கூட நூறுரூபாய் அதிகமாகக் கொடுத்துட்டீங்களே. இப்படியா கொடுக்கது? இந்தாங்க மிச்ச ரூபா.”

“அடடே அப்படியா சரி, அட்வான்சை அறுநூறு ரூபாயா வைச்சுக்கங்க”

“வேண்டாம் மாமா. பில்லு போட்டாச்சு. கணக்குப் பிசகக் கூடாது. அது வியாபாரத்திற்கு நல்லதல்ல.”

முத்துவேல், தமது எதிர்கால மாமனாரிடம் நல்லபேர் வாங்கி விட்ட பெருமிதத்தில், ஒரு சிரிப்பைச் சிந்தினான். அவரும் பதிலுக்குச் சிரித்துவிட்டு பரீட்சைப் பயணத்தைத் தொடர்ந்தார்.

அந்தக் கடையில் இருந்து, மேற்கொண்டு வடக்குப் பக்கமாய்த் திரும்பி, ஒரு முட்டுத் தெருவுக்கு வந்தார். இரண்டு மூலைகளையும் அடைத்த பெரிய கடை. கழுகு இறகை விரித்தது மாதிரி, இருபக்கமும் நீண்ட கிளைக்கடைகள். ஒன்றில் மஞ்சள், மசாலா, எண்ணெய், சோள, கம்பு மூட்டைகள். கடையில் ஒரே கூட்டம். பக்கத்தில் ஒர் ஒயின் கடை மூடியிருந்தது. அதன் பக்கம் நான்கைந்து ‘முக வெட்டுக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்த பழனிச்சாமி, ராமலிங்கத்தைப் பார்த்ததும் வேட்டியை இழுத்துப் போட்டுக் கொண்டு, அவர் முன்னால் வந்து நின்று தோப்புக் கரணம் போடப் போவதுபோல் குனிந்து கேட்டான்.

“ஒங்களுக்கு ஆயுக நூறு மாமா. இந்தப் பலசரக்குக் கடை வைக்கும்போதுகூட, உங்க கையால இரண்டாயிரம் ரூபாய் வாங்கித்தான் வைச்சேன். ஒங்க ராசி. இன்னைக்கு இது ஒரு லட்சத்துல நிக்குது.”

ராமலிங்கம் திடுக்கிட்டார். பயல், வட்டிக்குக் கொடுத்ததை சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறானோ. ஆனாலும் பழனிச்சாமி பேச்சைத் தொடர்ந்தான்.

“இப்பவும் உங்க கையால ஐநூறோ, ஆயிரமோ கொடுங்க மாமா. சாயங்காலமா கொடுத்துடுறேன். இந்த ஒயின் கடையை நடத்துன டவுன்காரங்க கட்டுப்படி ஆகல்லைன்னு என்கிட்ட விற்க வாராங்க.”

ராமலிங்கம் லேசாய் யோசித்தார். பிறகு உள்பையில் கைவைத்து, அங்கேயே நோட்டுக்களை எண்ணி, ஆறுநூறு ரூபாய் நோட்டுக்களை வெளியே கொண்டு வந்தார். அவற்றைச் சுருட்டி மடக்கி பழனிச்சாமியிடம் நீட்டினார்.

“இந்தாங்க மாப்பிள்ளை! ஐநூறு ரூபாய். எண்ணிப் பார்த்து விட்டு அட்வான்ஸ் கொடுங்க.”

பழனிச்சாமி அந்த நோட்டுக்களை பயபக்தியோடு எண்ணினான். இரண்டு தடவை எண்ணினான். மூன்றாவது தடவை லேசாய்த் திரும்பி நின்று எண்ணினான். பிறகு கடைப்பயலை அதட்டியபடியே, அந்தச் சாக்கில் கடைக்குள் ஏறினான். ஏறிய வேகத்திலேயே இறங்கினான். அருகே வந்த ‘முக வெட்டுக்களில் கண்வெட்டுக்காரனிடம் ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை நீட்டினான். நீட்டியபடியே மங்களம் பாடினான்.

“மாமாவோட கைராசியிலே, இந்த ஒயின் ஷாப் கொஞ்ச நாளிலே நானே ஒயின் தயாரிக்கிற அளவுக்குப் பெரிசாய் ஆயிடும். இல்லையா மாமா?”

ராமலிங்கம், தலையை ஆட்டுகிறார். அவன், பேசுகிறான்.

“சாயங்காலமா நீங்க கொடுத்த ஐநூறு ரூபாயையும், வீட்டுல வந்து தாரேன் மாமா.”

“உங்க பணம் வேறே என் பணம் வேறயா மாப்பிள்ளை? என் பணம்தான் ஒங்ககிட்டே நிக்கட்டுமே.”

ராமலிங்கம் திரும்பித் திரும்பி நடந்தார். அப்படியும் பழனிச்சாமி, முத்துவேலைப்போல் ஒரு நூறுரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு பின்னால் ஓடிவரவில்லை.

ராமலிங்கத்திற்கு யார் மாப்பிள்ளை என்று இப்போது முடிவு எடுப்பதில் சிரமம் ஏற்படவில்லை. ‘

கமிஷன்கார முத்துவேல், உப்புச்சப்பில்லாத பயல். கணக்கு தவறக்கூடாதாம். ஒரு நூறு ரூபா நோட்டு-அதுவும் உழைக்காம வந்த பணம், அவனுக்குப் பெரிசா தெரியலன்னா என்ன பயல்? அவனுக்கு மலரைக் கொடுத்தால், கல்யாண வீட்டுலேயே ஒப்பாளி வைக்க வேண்டியதுதான்.’

‘ஆனால் இந்த பழனிச்சாமியோ. சமர்த்தன். இந்திரசித். அந்த நூறு ரூபாய் நோட்டை, கல்லாப் பெட்டியிலே கள்ளத் தனமா எவ்வளவு லாகவமாகப் போட்டான்! சம்பாதிக்கணுமுன்னா இப்படில்லா சம்பாதிக்கணும். அதோடு ஒயின் கடை வைக்கப் போறான். அந்தச் சாக்குல கள்ளச் சாராயத்த பாட்டிலுல ஏத்தப் போறான். இதனாலேயே, கொஞ்சநாளுல தலைவரா ஆயிடுவான். கல்யாணத்துல நகையோடுறமோ, நட்டு போடுறமோ, ஒரு சூட்கேஸை சீதனமாக் கொடுத்திடணும்.!

வாலிபம் போனாலும், வயோதிகம் வராத ராமலிங்கம், பழனிச்சாமியின் தந்தையிடம் ஒப்புதல் கொடுக்கத் திசைமாறி நடந்தார்.

– தலைப்பாகை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, திருவரசு புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *