இதைப் படித்துவிட்டு இது உண்மையில் நடந்ததா என்று கேட்கப்போகும் நண்பர்களுக்கு நான் இப்போதே சொல்லிக்கொள்ள விரும்புவது – ‘எனக்குத் தெரியாது!’
நான் வெங்கடேஷ். VRI என்று சொன்னால் என் முகநூல் நட்பு வட்டத்தில் புருவம் உயர்த்தி ‘அவனா?’ என்று ஒரு விதமாக சிரிப்பார்கள். நான் மோசம் என்று இல்லை. உண்மையில் நான் நல்லவன்.
கவிதை கதைகள் எழுதுவது, வில்லங்கமான போஸ்டுகள் போடுவது, இடக்கு மடக்கானா கமெண்ட்கள் போடுவது என் பாணி. இதனால் என் மேல் பலருக்கு வெறுப்பு உண்டு என்பது எனக்குத் தெரியும். அதையும் மீறி என் இனிய சுபாவத்தை அறிந்த நண்பர்களும் உண்டு.
நான் இரண்டு மூன்று க்ரூப்புகளில் மெம்பெர். அதில் ஒன்றில் நான் அட்மின். அதில் எங்கள் கம்யூநிட்டியைச் சார்ந்த ஒரு க்ரூப்பில் தான் நான் அதிகம் காணப்படுவேன். அதில் நிறைய மெம்பர்கள். அதன் அட்மின் எங்கே என்று யாருக்கும் தெரியாது. அதனால் அங்கே மெம்பர்கள் அனைவரும் அட்மின்கள் தாம்!
ஒரு விடுமுறை நாளில் நான் லேட்டாகத் தூங்கி எழுந்தேன். எழுந்ததும் ஒரு சிறுகதையின் கரு உதித்தது. ஒரு நல்ல கதையாக வரும் போலத் தோன்றியது. சரி என்று காலைக் கடன்களை முடித்த பின் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து அதை எழுதினேன். அதைப் படித்தும் பார்த்தேன். திருப்தியாக இருந்தது. சரி அதை என் பேவரிட் க்ரூப்பில் பதியலாம் என்று முகநூலைத் திறந்து என் க்ரூப்பில் நுழைந்தேன் நிறைய notifications. பொறுமையாக ஒவ்வொன்றும் படித்தேன். இறுதியில் ஒரு பதிவுக்கு பலர் கமென்ட் போட்டு இருந்தார்கள். அதில் ஒருவர் என் பெயரை வேறு tag செய்திருந்தார்! என்னதான் அமர்க்களம் போய் பார்க்கலாம் என்று போனால் எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
CRV என்ற பெயரில் ஒரு மெம்பெர் பதிந்திருந்த சிறுகதை ஒன்றுக்கான கமெண்ட்டுகள் தான் அவை. ஆஹா ஓஹோ என்று நிறைய பேர் பாராட்டி இருந்தனர். என்னை tag செய்திருந்தவர் “VRI! இதைப் படியும் அய்யா! உமக்கு ரொம்ப பிடிக்கும். உம்மைப் போலவே எழுதியிருக்கார்” என்று சொல்லியிருந்தார்.
எனக்குள் ஒரு curiosity. சரியென்று படிக்க ஆரம்பித்ததும் திகைத்தேன்! நான் சற்று முன் எழுதி வைத்திருந்த அதே கதை!
அதே கதாபாத்திரங்கள் அதே பெயர்கள் அதே சம்பவங்கள்! ஆனால் போஸ்ட் செய்திருந்தது CRV! உடனே அவர் profileக்கு போனேன். புது மெம்பெர் போல இருந்தது. முக நூலில் ஐந்து மணி நேரம் முன்னர் தான் இணைந்திருந்தார். வேறு உபயோகமான தகவல்கள் இல்லை. ஆனால் ஒரு மொபைல் நம்பர் தந்திருந்தது. சரி அதில் காண்டாக்ட் செய்து பார்க்கலாம் என்று அதை என் மொபைலில் பதித்துக் கொண்டேன்.
அந்த சமயம் அங்கே வந்த என் மனைவி “ என்ன காலைலேயே கம்ப்யூட்டரா? கொஞ்சம் போய் இந்த லிஸ்ட்ல உள்ள ஐட்டம் வாங்கிகிட்டு வாங்க” என்று விரட்டினாள். சரியென்று வெளியே கிளம்பினேன். மறக்காமல் மொபைலை எடுத்துக் கொண்டேன்.
கடையில் சாமான் வாங்கிகொண்டு வருகையில் அந்த நம்பருக்கு போன் செய்தேன். சிறிது நேரம் கழித்து மறுமுனையில் “யாரு?” என்று எனக்கு ரொம்ப பரிச்சயமானது போன்ற குரல். “நான் தான் VRI!. இன்னைக்கு நீங்க போஸ்ட் செஞ்சிருந்த என்னோடக் கதையப் பத்திக கேக்கத் தான் போன் செஞ்சேன். நீங்க யாரு? உங்களுக்கு என் கதை எப்படிக் கெடச்சது? இன்னைக்குத் தானே நானே யோசிச்சேன்?” என்று கேள்விகளாகக் கேட்டேன்.
“VR! வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம்” என்று அந்தத் தடியன் கொடுத்த அட்ரஸ் என் அட்ரஸ்! ஸாயிராம்! என்ன சோதனை! என்று ஓட்டமும் நடையுமாக நான் வீடு நோக்கிச் சென்றேன். வழியில் என் இன்னொரு முக நூல் நண்பரைப் பார்த்தேன். மனுஷனுக்கு என்ன பிரச்சனையோ, என் ஹலோவைக் கண்டும் காணாதது போல சென்று விட்டார். சரி அவரை அப்புறம் கவனிப்போம் என்று வீட்டை அடைந்து காலிங் பெல் அழுத்தினேன்.
கதவை திறந்தது என் மனைவி அல்ல. என்னைப் போலவே தோற்றமளித்த இன்னொரு மனிதன்! என் உடல் சில்லிட்டது.
“ஏய்! யார் நீ?” என்று சப்தம் போட்டேன்.
“கத்தாதீங்க VR! நான் தான் CRV. உள்ள வாங்க உட்கார்ந்து பேசலாம்.” என்று அவன் வீடு போல சொன்னான்! என்ன தைரியம்!
சரி என்ன தான் நடக்கிறது பார்க்கலாம் என்று உள்ளே சென்றேன். என் பேவரிட் நாற்காலியில் உட்காரப் போனபோது “அது என்னோட பேவரிட் சேர்” என்று தடுத்தான்.
எனக்கு திடீரென்று சுஜாதாவின் ‘நில்லுங்கள் ராஜாவே’ நினைவுக்கு வந்தது.
“சரி யார் நீ? சொல்லு!” என்று அதட்டினேன்.
அவன் சொல்ல ஆரம்பித்தான்.
முக நூல் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ள மெம்பர்களின் சொந்த தகவல்களை வைத்து எதுவும் செய்ய முடியுமா என்று ஒரு எண்ணம் அமெரிக்காவில் உதித்ததாம். அந்த எண்ணத்தின் முடிவாக ஒரு ஆராய்ச்சி உலகம் முழுக்க பல இடங்களில் நடக்கிறதாம். அந்த ஆராய்ச்சியை சென்னையில் சில மாணவர்கள் செய்து வருகிறார்களாம். அதில் ஒருவன் Additive manufacturing or 3D printing முறையில் ஒரு சாத்தியக்கூறை ஆராய்ந்தபோது, ஒரு எதிர்பாராத விளைவு நிகழ்ந்ததாம்.
அது தான் Fake ID அல்லது க்ளோனிங். ஒரு மெம்பெர் தகல்வல்கள் அவர் போட்டோ உட்பட கணினியில் பதிந்தால் 3d பிரிண்டிங் முறையில் அவரைப் போலவே இன்னொரு மனிதரை உருவாக்க முடிந்ததாம். இப்படிப்பட்ட முறையில் random basisல் நடந்த செலக்ஷனில் என் பெயரும் வந்ததாம்.
அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் நேற்று நடந்த ஒரு தீ விபத்தில் எல்லாப் பொருள்களும் எரிந்து விட்டதாம். உருவாக்கப் பட்ட Fake IDகளை என்ன செய்வது என்று அறியாமல் அந்த மாணவர்கள் வெளியே விட்டு விட்டார்களாம்.
எனக்கு நான் கனவு காண்கிறேனா என்று ஒரு சந்தேகம் வந்தது. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். இல்லை நிஜம் தான்.
“இப்ப வர்ற வழில ஒரு நண்பரைப் பாத்தே இல்ல? அவர் உன்னப் பாத்து acknowledge பண்ணாரா? பண்ணியிருக்க மாட்டார். ஏன்னா அவர் உன் நண்பரோட Fake ID. உன் நண்பர் இப்ப பெங்களூர்ல இருக்கார்” என்றான் CRV.
“சரி, என்னவோ ஏதோ, நீ இங்கேயிருந்து போய்விடு” என்று சொன்னதும் அவன் ஏதோ ஹாஸ்யத்தைக் கேட்டது போல் சிரித்தான்.
“ நீ தான் போகணும். I am here to say.” என்று சொல்லிக்கொண்டே என்னை அடிப்பது போல நெருங்கி வந்தான். நான் மயங்கினேன்.
“என்னங்க! என்ன ஆச்சு உங்களுக்கு? கொஞ்சம் வெயில்ல போயிட்டு வந்தாக் கூட உடம்புக்கு ஆகலேனா எப்படி?” என்ற என் மனைவியின் குரல் கேட்டு கண் விழித்தேன்.
உடனே சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லாம் பழைய படியே இருந்தது. குறிப்பாக CRV இல்லை.
அப்பாடி எல்லாம் ஒரு கனவு போல இருக்கு என்று நிம்மதியுடன் எழுந்து உட்கார்ந்தேன். “கொஞ்சம் காப்பி கொடேன்!” என்று மனைவியிடம் கேட்டு விட்டு என் ரூமுக்குச் சென்று கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன்.
முகநூலில் என் க்ரூப் பக்கம் தான் திறந்திருந்தது. ‘அந்த’ கதையைத் தேடித் பார்த்தேன். கிடைக்கவில்லை. கனவு என்று ஊர்ஜிதமானது.
என்ன மடத்தனம் என்று என்னையே திட்டிக் கொண்டேன்.
சரி நான் எழுதிய கதையை பதியலாம் என்று எண்ணி வேலையில் இறங்கினேன். கதையை போஸ்ட் செய்து விட்டு மனைவி தந்த காப்பியைக் குடித்தேன்.
அதற்குள் ஒரு PM வந்தது. என் அருமை நண்பர் ஒருவரிடமிருந்து.
“என்ன சார்! காலைல தான் இந்தக் கதையப் போட்டீங்க! திரும்பவும் போட்டுருக்கீங்களே! எனிவேஸ், சூப்பர் கதை! keep it up” என்றிருந்தது அந்த மெசேஜில்.
நான் திரும்பவும் மயங்கினேன்.
– நவம்பர் 2013