திருடனைப் பிடித்த வினோதம்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 8,764 
 
 

கும்பகோணம் கலாசாலையில் நான் வேலை பார்த்து வந்த காலத்தில் அநேகமாக மற்ற‌ எல்லா ஆசிரியர்களோடும் மனங்கலந்து பழகுவேன். ஒவ்வொருவரிடத்திலும் உள்ள விசேஷ குணங்களைக் கண்டு இன்புறுவேன்.

சிலரிடத்தில் எனக்கு மிக்க மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டன. அத்தகையவர்களில் ஆர்.வி. ஸ்ரீநிவாசையர் ஒருவர்.

கூரிய அறிவு, இடைவிடாத படிப்பு, நேர்மையான குணம், உபகாரசிந்தை என்பவை ஸ்ரீநிவாசையரிடத்தில் குடி கொண்டிருந்தன. அவர் நினைத்தாரானால் மற்றவர்களால் முடியாத காரியத்தை முயன்று சாதித்து விடுவார். கணிதத்தில் அவர் மிக்க புகழ் பெற்ற‌வர். அதனால் ‘யூக்ளிட் ஸ்ரீநிவாசையர்’ என்றும் அவரைச் சொல்வதுண்டு.

காலேஜில் எந்த உபாத்தியாயரேனும் வராமற்போனால் அவருடைய பாடத்தைச் சிறிதும் சிரமமில்லாமல் நடத்துவார். அவருக்குத் தன் காடு, பிறன் காடு என்ற வேற்றுமை இல்லை.

சிறிய மனஸ்தாபங்களையெல்லாம் பெரியவையாகச் செய்துகொண்டு தாமும் கஷ்டத்துக் குள்ளாகிப் பிறரையும் கலங்கச் செய்யும் சிலரைப் போன்றவர் அல்லர் அவர். அவருடைய கம்பீரமான குணம் சிறு சிறு குற்றங்களிற் கவனத்தைச் செலுத்த விடுவதில்லை. அவருடன் பழகின‌வர்கள் எப்போதும் அவ‌ருடன் பழகிக்கொண்டே இருக்க விரும்புவார்கள். தமக்குப் பிற்காலத்தில் உதவுமே என்று பொருளைச் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் உப‌காரம் செய்யும் இயல்பு அவரிடம் இருந்தது.

ஸ்ரீநிவாசையர் சில காலம் கும்பகோணம் கலாசாலையில் உபாத்தியாயராக இருந்தார்; பிறகு சென்னை இராசதானிக் கலாசாலைக்கு வந்தார். அப்பாற் சிலகாலம் ‘ரெவினியூ போர்டாபீஸி’ல் வேலை பார்த்து வந்து கடைசியில் பத்திரப்பதிவிலாகாவில் தலைமை ஸ்தானத்தை வகித்தார். எல்லா இடங்களிலும் அவருடைய மேதை பிரகாசித்துக்கொண்டு வந்தது.

சற்றேற‌க் குறைய நாற்பது வருஷங்களுக்கு முன் அவர் சென்னையில் இருந்தார். அப்பொழுது மயிலாப்பூரில் தெற்கு மாடவீதியில் மேலைக் கோடியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்து வந்தார். அவருடைய வீட்டில் எப்பொழுதும் விருந்தினர்களுடைய கூட்டத்தைக் காணலாம்.

ஸ்ரீநிவாசையருடன் படித்தவரும் அவருடைய நண்பரும் கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக இருந்தவருமாகிய ஒருவர் சென்னைக்கு ஒரு சமயம் வந்திருந்தார். அவர் ஸ்ரீநிவாசையர் வீட்டிலேயே தங்கினார்.

அக்காலத்தில் மயிலாப்பூரில் இப்பொழுதுள்ள மாதிரி அவ்வளவு அதிகமான வீடுகள் இல்லை. திருட்டுப் பயம் அதிகமாக இருந்தது. அடிக்கடி வீடுகளில் திருட்டுப் போகும். ஸ்ரீநிவாசையருடைய வீட்டில் தங்கியிருந்த ஆசிரியர் இந்த விஷயத்தைக் கேள்வியுற்றார். அங்கே தங்கியிருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும், “இன்றைக்கு இன்ன பண்டம் களவுபோய் விட்டது”, “இன்றைக்கு அந்த வீட்டில் துணிகள் களவு போயின” என்று பலர் கூறுவதைக் கேட்டார். அவருக்கு, ‘இவ்வளவு மனிதர்கள் இங்கே வசிக்கிறார்கள்; இவர்கள் இந்தத் திருடர்களைப் பிடித்துச் சரியானபடி தண்டிக்கும் வீரமில்லாமல் இப்படிக் கதை பேசுவதோடு நிற்கிறார்களே!’ என்ற எண்ணம் அடிக்கடி உண்டாயிற்று.

அந்த ஆசிரியர் தேக வன்மையோடு மனோதைரியமும் உடையவர். ஒருநாள் யாரோ ஒருவர் ஓரிடத்தில் நிகழ்ந்த திருட்டைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். உடனிருந்தவர்கள் திருட்டுப்போன வீட்டினருக்கு நேர்ந்த நஷ்டத்தைப் பற்றி இரங்கினார்கள். அந்த ஆசிரியரோ சிறிதேனும் இரங்கவில்லை; அவருக்கு கோபந்தான் உண்டாயிற்று; “இவர்கள் திருடனைப் பிடிக்கத் தைரியம் சிறிதுமில்லாதவர்கள்; ஆண்பிள்ளைகளென்று சொல்லிகொள்கிறார்களே” என்று பல்லைக் கடித்தார். அவருடைய கை அவரையறியாமலே மீசையை முறுக்கியது. ‘நம்மிடம் மாத்திரம் ஒரு திருடன் அகப்பட வேண்டும்;

அப்பொழுது தெரியும் அவன் படும்பாடு’ என்று நினைத்தார். தம் கையை இறுக்கிப் பிடித்துப் பல்லை மீண்டும் கடித்தார். அவர், ஒரு திருடன் வருவதுபோலவும் அவனைப் பிடித்து இறுக்கி நசுக்குவதுபோலவும் மனத்திலே கற்பனைசெய்து கொண்டார்.

ஸ்ரீநிவாசையர் தம் வீட்டு மேல்மாடியில் கீற்றுக்கொட்டகையொன்று போட்டிருந்தார். விருந்தினர்கள் அங்கே படுத்துத் தூங்குவது வழக்கம். கொட்டகைக்குத் தென்பக்கம் தனியே ஓரிடத்தில் மணல் பரப்பித் தட்டிகள் வைத்துத் தடுக்கப்பட்டிருந்தது. இரவில் கீழே இறங்கிவரும் அவசியமின்றி எல்லாச் சௌகரியங்களையும் மேலே அமைத்திருந்தார். மேற்கூறிய ஆசிரியரும் அக்கொட்டகையிலே இராத்திரி வேளைகளில் படுத்துவந்தார்.

ஒருநாள் அவ்வாசிரியர் அங்கே படுத்துக் கொண்டிருந்தபோது அவருடைய ஞாபகம் முழுவதும் திருட்டுக்கதைகளிலேயே இருந்தது. தம்முடைய வீரத்தைக் காட்ட வேண்டுமென்ற ஆவல் அவருக்கு மிதமிஞ்சி இருந்தது. அதனால் அவருக்குத் தூக்கம் வரவில்லை; விழித்துக்கொண்டே யிருந்தார்.

நடுராத்திரி வேளை. அப்பொழுது ஏதோ சத்தம்கேட்டது. யாரோ ஓர் ஆள் சந்தடி செய்யாமல் அந்தக் கொட்டகைக்கு வெளியே நடப்பது தெரிந்தது; ‘சரி,இன்று அகப்பட்டுக் கொண்டான் திருடன். இவனை லேசில் விடக்கூடாது’ என்று ஆசிரியர் உறுதி செய்துகொண்டார். படுக்கையில் படுத்தபடியே மூச்சுக்கூட விடாமல் அந்த உருவத்தைக் கவனித்தார். அவர் தேகம் பதறியது. உடம்பு வேர்த்தது. கைகள் உடனே சென்று பற்ற வேண்டுமென்பதுபோலத் தினவெடுத்தன.

அவர் கண்ட ஆள் தட்டி உள்ள இடத்திற்கு மெல்லச் சென்றான். அப்பொழுது ஆசிரியவீரர் சத்தம் செய்யாமல் எழுந்தார். ஓசைப் படாமல் நடந்தார். அந்த ஆள் தட்டி உள்ள‌ இடத்திற்குள் சென்று உட்கார்ந்தான். அவன் உட்கார்ந்தானோ இல்லையோ உடனே ஆசிரியர் ஒரே தாவலாகத் தாவி அவன் முதுகுப்புறமாகச் சென்று இரண்டு கைகளாலும் அவனை இறுகப் பற்றிக்கொண்டார். பிடிபட்ட ஆள் உளற‌ ஆரம்பித்தான். “திருட்டுப் பயலே, அகப்பட்டுக் கொண்டாயா? எல்லாரையும் ஏமாற்றுவதுபோல் என்னையும் ஏமாற்றலா மென்றா பார்த்தாய்? இந்தத் துடைநடுங்கிகள் ஒரு திருடனையாவது பிடிக்கும் சாமர்த்திய மில்லாதவர்களென்று உங்கள் கூட்டத்தாருக்கு ந‌ன்றாகத் தெரிதிருக்கிறது. அதுதான் இப்படி உங்கள் விளையாடல்களைத் தடையில்லாமல் நடத்திக்கொண்டு போகிறீர்கள். இன்றைக்கு அக‌ப்பட்டுக் கொண்டாய்” என்று அவர் வீரம் பேசத்தொடங்கினார்.

பிடிபட்ட மனிதன் என்ன என்னவோ கூறினான். அவை ஆசிரியர் காதில் விழவில்லை.

இந்தக் கலவரத்தில் அங்கே படுத்திருந்த சிலர் எழுந்து வந்தார்கள். கீழேயிருந்து விள‌க்குகளோடு சிலர் வந்துவிட்டார்கள். அவர்களைக் கண்டவுடன் ஆசிரியர், “பார்த்தீர்களா? இந்தப் பயலைக் கட்டுங்கள். நானும் இவ்வளவு நாள் பார்த்தேன். இன்றைக்கு அகப்பட்டுக் கொண்டான்’ என்று பலமாகக் கூவினார்.

வந்தவர்கள் விளக்கைக் கொண்டு வந்து ஆசிரியர் பிடிக்குள் அகப்பட்ட மனிதனைப் பார்த்தார்கள். உடனே அவர்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அப்பொழுது ஸ்ரீநிவாசையரும் கீழிருந்து மேலே வந்தார்.

“இவன் எங்கள் வீட்டுச் சமையற்காரனல்லவா? இவனையா திருடனென்று பிடித்தீர்கள்?” என்று ஒருவர் விஷயத்தை வெளிப்படுத்தினார்.

“நான் இவனை இவர்களுக்கு ஏதாவது வேண்டி யிருந்தால் கவனித்துக் கொள்வதற்காக இங்கே படுத்துக்கொள்ளச் சொல்லியிருந்தேன். இவன் எங்கே இவர் கையில் அகப்பட்டான்!” என்றார் ஸ்ரீநிவாசையர்.

“கீழே எல்லோரும் போஜனம் செய்த பிறகு நான் சாமான்களையெல்லாம் ஒழுங்காக எடுத்து வைத்தேன். நாளைக்குச் சீக்கிரம் சமையலாக வேண்டுமென்று எஜமான் சொல்லியிருந்தபடியால் காய் கறியை இன்றைக்கே நறுக்கி வைத்துவிடலாமென்று நறுக்கினதில் பன்னிரண்டு மணியாகிவிட்டது. அப்பால் இங்கே வந்தேன். அந்தப் பக்கம் போனேன். அவ்வளவுதான்: திடீரென்று யாரோ என்னை இறுகப் பிடித்து தெரி்ந்தது. யாராவது திருடனோ என்று நான் பயந்து விட்டேன்; இந்த ஆலமரத்திலுள்ள பிசாசுதானோ வென்ற பயம் வேறு வந்துவிட்டது” என்று சமையற்காரன் சொன்னான். எல்லோரும் வயிறுகுலுங்கச்சிரித்தார்கள். அக்காலத்தில் அவ்வீட்டுக் கருகிலிருந்த ஆலமரமொன்றில் பேய் ஒன்று இருப்பதாகப் பெண்களும் வேறு சிலரும் பயந்து கொண்டிருந்தனர்.

ஆசிரிய வீரர் என்ன செய்வார் பாவம்? பேசாமற் போய்ப் படுத்துக் கொண்டார். அது முதல் திருட்டைப் பற்றிய பேச்சு அவர் இருக்கும்போது எங்கே நடந்தாலும் அங்கே இராமல் அவர் எழுந்து சென்று விடுவார்!”

நன்றி: ஆனந்த விகடன் – தீபாவளி மலர் 1938 – https://s-pasupathy.blogspot.com

Print Friendly, PDF & Email

1 thought on “திருடனைப் பிடித்த வினோதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *