கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 16,350 
 
 

ஓர் ஏழை; ஏழையென்றால் ஏழை அப்படிப்பட்ட ஏழை. சட்டைதான் டெரிலின் சட்டை யாகவே அணிவானே ஒழிய, ஒரு வேளை கஞ்சிக்குக்கூடக் கஷ்டப் படும் ஏழை. அவனிடம் ஒரு விசேஷம்… சேர்ந்தாற்போல் எவ் வளவு நாள் பட்டினி கிடந்தாலும் சரி, எத்தனை முரடர்களையும் ஒண்டி ஆளாக அடித்து நொறுக்கி விடுவான்.

அந்தக் கதாநாயகன், கதாநாயகியைக் காதலிக்கிறான். அவள் பணக்காரி, பணக்காரி, அப்படிப் பட்ட பணக்காரி. பணக்காரியே ஒழிய, உள்ளம் இளகிய உள்ளம். ஏழைகளைக் கண்டால் போதும், உடனே காதலித்துவிடும். அவள் அப்பாவோ பணத் திமிர், சாதி வெறி, கர்வம், ஆடம்பரம், அகம் பாவம் இவை எல்லாவற்றுக்கும் இருப்பிடம். ‘தன் பெண் படித்துப் பட்டம் பெற்றவளாக இருந்தால் என்ன… கட்டை வண்டிக்கார னைக் காதலிக்கட்டுமே’ என்று சும்மா இராமல், காதலுக்கு முட் டுக்கட்டை போட்டுவிட்டார்.

அந்தக் கதாநாயகிக்கும் கதா நாயகனுக்கும் காதல் ஏற்பட்டதே ஒரு சுவையான நிகழ்ச்சி! அவள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந் தாள். எதிரே இவன் கட்டை வண்டி. ஒரு மோதல்… உடனே காதல்! அவள் அவனைப் பார்த்து, ”ஏய்… ஃபூல்!” என்றாள். அவன் உடனே, ”ஏய் கேர்ள்!” என்றான். இது மவுன்ட்ரோடில் நடக்கிறது. உடனே கதாநாயகி பி.சுசீலா குர லில், ”ஏய் ஃபூல்… ஏய் ஏய் ஏய்… ஃபூல்!” என்று பாடுகிறாள். கதா நாயகன் டி.எம்.எஸ். குரலில், ”ஏய் கேர்ள்… ஏய் ஏய் ஏய் கேர்ள்” என்று பாடுகிறான்.

‘ஓய் ஓய்… ஒண்ணாம் நம்பர் இடியட்! ஓ…ய்ய்யா!’ – அவள்.

‘டோய் டோய்… ரெண்டுங் கெட்டான் ரெடிமேட்! டோய்யா!’ – அவன்.

மெரீனா பீச்சிலிருந்து ஊட்டிக் குப் போய்த் திரும்பி மறுபடி மவுன்ட்ரோடுக்கே வந்து பாட்டை முடித்துக்கொண்டு, தெய்விகக் காதலர்களாகிவிட்டார்கள்.

கதாநாயகனும் கதாநாயகியும் இரண்டாவது டூயட் பாடுவதற்காக, ரகசியமான இடமாக இருக்கட் டுமே என்று மைசூர் பிருந்தாவனத் துக்குப் போய், பல்லவியை ஆரம் பித்து, அப்படியே சாத்தனூர் அணைக்கட்டில் வந்து சரணத் தைப் பாடும்போது, கதாநாயகியின் பொல்லாத அப்பா ஒரு செடிக்குப் பின்னாலிருந்து பார்த்துவிட்டார்!

அவர் எதற்காகச் சாத்தனூர் அணைக்கட்டுக்கு வந்தார் தெரி யுமா? கள்ளக் கடத்தல் வியாபாரம் செய்ய! தன் வீட்டில் கள்ளக் கடத்தல் வியாபாரம் செய்தால் யாராவது பார்த்துவிடுவார்களே என்று பயந்து, அதை சாத்தனூர் அணைக்கட்டிலாவது, பார்க்கிலா வதுதான் வைத்துக்கொள்வார்.

வீட்டுக்கு வந்த பிறகு, மகளை கண்டபடி திட்டி, இனிமேல் வீட்டை விட்டு வெளியே போகவே கூடாது என்று கூறிவிட்டார். வீட்டில் வேலைக்காரன் இருக்கி றானே, அவன் சும்மா இருப் பானா? அவன் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் உதவுவது என்று தீர்மானித்துவிட்டான். அவனுக்கு அதுதானே வேலை? ஏனென்றால், அவன் கதாநாயகனுக்கு நண்பன். அவன்தான் காமெடியன்.

அவன் உதவியோடு சில பல ரீல்களுக்குப் பிறகு, கடைசியில் போலீஸ் வந்து வில்லனைக் கைது செய்தது. உடனே வில்லன் மனம் திருந்தி, ”நான் திருந்திட்டேன். என் மகளை நீயே கல்யாணம் செய்து கொள்” என்று சொல்ல, ”நீங்கள் நினைத்ததுபோல் நான் கட்டை வண்டிக்காரன் அல்ல. படித்துப் பட்டம் பெற்ற இன்ஜி னீயர். பொழுதுபோக்குக்காகக் கட்டை வண்டி இழுத்தேன். அவ்வ ளவுதான்” என்று உண்மையை விளக்கினான் கதாநாயகன்.

கதாநாயகிக்கும் கதாநாயகனுக் கும் விமரிசையாகக் கல்யாணம் நடந்தது. கதாநாயகன் தன் தாயார் படத்தின் முன்னால் நின்று கை கூப்பி வணங்கி, ”தாயே! எல்லாம் உன்னால்தான் நடந்தது. எங்களை ஆசீர்வாதம் பண்ணம்மா!” என்று கேட்டான். தாயார் படத்தின் மீதிருந்த மாலையிலிருந்து, ஒரு ரோஜா இதழ் கதாநாயகன் தலையிலும், இன்னொரு ரோஜா இதழ் கதாநாயகி தலையிலும் விழுந்தது. அவன் சொன்னான்… ”தாயே தெய்வம்!”

உடனே அவர்கள் இருவரும் காஷ்மீருக்குப் போக, அவள் ”ஏய் ஏய் ஏய்… ஃபூல்!” என்று பாட, அவன் ”ஏய் ஏய் ஏய்… கேர்ள்’!’ என்று அவளைத் துரத்தினான்.

– ‘சோ’ விகடனில் 1970-இல் எழுதிய ஐந்தாம் நவரச(!)க் கதை (சினிமாக் கதை).

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *