தக தக தக… தங்கப் பானை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 14,587 
 
 

கேட்டை, மூட்டை, செவ்வாய் ஆகிய மூன்றின் கலவையான என் அருமை மனைவி கமலாவின் அருமைத் தம்பி தொச்சு & ஒரு நிமிஷம்… இந்த கே.மூ.செ அடைமொழி என் அருமை மனைவியைக் குறிக்காது; அவளின் தம்பி தொச்சுவைக் குறிக்கும்! & என் வீட்டுக்கு வந்தபோது என் இடது கண், இடது தோள், இடது காது, இடது கை, இடது பக்கம் இருக்கும் இதயம் என எல்லாமே ஆயிரம் வாலா சரவெடியாய் படபடத்தன!

கமலாவை நான் கல்யாணம் பண்ணிக்கொண்டபோது, சீதனமாக நிறையக் கொடுத்தார்கள். அவற்றோடு இலவச இணைப்பாக தொச்சு வையும் சேர்த்துக் கொடுத்துவிட்டார்கள். அவன் பின்னாளில் அங்கச்சியைக் கலியாணம் செய்துகொண்டு தனியாகப் போய்விட்டாலும், அவ்வப்போது வந்து தன் தொப்பை, கைப்பை இரண்டையும் நிரப்பிக்கொள்வான். தாய்ப்பாசமே உருவான என் மாமியாரும், சகோதர பாசத்தை உருக்கி வடிவமைக்கப்பட்ட என் மனைவி கமலாவும் தொச்சு வரவேற்பு கமிட்டி என்ற நிரந்தர அமைப்பை நிறுவி, அவனுக்கு ராஜோபசாரங்கள் செய்வது பற்றி விவரமாகக் கூறினால், அது அபசாரம் ஆகிவிடும்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். ‘‘தொச்சு, என்னப்பா சமாசாரம்?’’ என்று கேட்டேன்.

‘‘தொச்சுவா? வா… வா!’’ என்று மதுரைமணியின் ‘கந்தா வா… வா’ பாணியில் கமலாவும் மாமியாரும் அவனை வரவேற்றார்கள்.

‘‘அத்திம்பேர்… ஒரு பிரமாதமான ஐடியாவோட வந்திருக்கேன்!’’

‘‘ஓஹோ… ஐடியா ஓட, நீ மட்டும் தனியா வந்திருக்கியா?’’ என்றேன் குதர்க்கமாக.

‘‘கொன்னுட்டீங்க அத்திம்பேர்! எப்படித்தான் சட் சட்னு இப்படிப் புகுந்து விளையாடறீங்களோ!’’

‘பெரிதாக அஸ்திவாரம் போடு கிறான்; சுதாரி!’ என்று உள்ளுணர்வு சொல்லியது. அதன் காரணமாக, வயிற்றில் புளி கரைத்தது. இப்படி புளி கரைக்கும் உணர்வு, பின்னால் என் பணம் கரையப்போகிறது என்பதற்கான அறிகுறி!

‘‘வீட்டுக்கு வந்தவனை ‘வாடா, உட்காரு! ஒரு கப் காபி சாப்பிடறியா?’ என்று கேட்க வேண்டாம்… இப்படி மட்டம் தட்டிப் பேசாமல் இருக்கலாம்’’ என்று நொடித்தாள் கமலா.

‘‘காபிக்கு என்ன அவசரம் அத்திம் பேர்? உங்களுக்குத் ‘தங்கப் பானை’ தெரியும்தானே?’’

‘‘தங்கைப் பானை, அக்கா பானை… ஒரு எழவும் தெரியாது!’’ என்றேன்.

‘‘சொல்லுடா… டி.வி. நிகழ்ச்சி ‘தங்கப் பானை’தானே, நம்ம ஜிகினாஸ்ரீ நடத்தற நிகழ்ச்சிதானேடா? இப்ப என்ன அதுக்கு?’’ என்றாள் கமலா.

‘‘அதேதான்! அதுக்கு எழுதிப் போட் டேன். வருகிற வாரம் வரச்சொல்லி இருக்காங்க. அத்திம்பேர், நீ, அங்கச்சி மூணு பேரும் போயிட்டு வாங்க..!’’

‘‘நான் எதுக்கு? இதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க போய் பரிசு, பணம் எல்லாம் ஜெயிச்சுண்டு வாங்க..!’’ என்றேன்.

‘‘அப்படியே இவர்கிட்ட கொண்டு வந்து கொடுத்தால், அக்காவுக்குப் பொங்கல், தீபாவளி, மதர்ஸ் டே, சிஸ்டர்ஸ் டே, காபி டேன்னு பாத்துப் பாத்து அனுப்புவார். குழந்தை வேலை மெனக்கெட்டுப் பதிவு பண்ணிட்டு வந்து கூப்பிடறானே… ஆயிரம் பிகு!’’

‘‘விடுக்கா..! அத்திம்பேர் வர லைன்னா டிஸ்டர்ப் பண்ணாதே! நீ, அங்கச்சி, நான் மூணு பேரும் போக லாம். நீதான் லீடர்!’’

‘‘சரிடா! பரிசு கிடைச்சா சந்தோஷம். இல்லாட்டாலும் டி.வி&யில நாம வந்ததே சந்தோஷம்னு இருந்துட்டா போச்சு..!’’

‘‘ஆனா, ஒரே ஒரு பிரச்னைக்கா!’’

‘‘என்னது?’’

‘‘டி.வி. ஷோவுக்கு வர்ற ரெண்டு பெண்களும் ஒரே மாதிரி புடவை கட்டிண்டு வரணுமாம்…’’

இதைத் தொடர்ந்து என்னென்ன வசனங்கள் வரும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, வருமுன் காப்போனாக, ‘‘அதுக்கென்ன… இரண்டு புடவை வாங்கிட்டா போச்சு!’’ என்றேன்.

கமலா முகத்தில் ஆயிரம் வாட் பிரகாசம்! தொச்சுவின் முகத்தில் பத்தாயிரம் வாட் பிரகாசம்! என் மாமி யார் முகத்திலோ, அரசியல் கட்சியின் மாநாட்டுப் பந்தல் போல் ஒளி வெள்ளம்!

‘‘வாங்கறது வாங்கறோம், பட்டுப் புடவையாவே வாங்கிடலாம்! டி.வி. ஷோவுக்கு எடுப்பா இருக்கும். சரி, தொச்சு… பரிசு கிடைத்தால், முதல் பரிசாக எவ்வளவு கிடைக்கும்?’’

‘‘டீமுக்கு ஒரு லட்சம்! நம்ம நிகழ்ச்சி 100&வது நிகழ்ச்சியாம். அதனால பரிசு இன்னும் அதிகமாகக்கூட இருக்கும் கிறாங்க! சரி அக்கா, அங்கச்சியை எப்ப வரச்சொல்லட்டும்? புடவை வாங்கணுமே?’’ என்று கேட்டான் தொச்சு. சந்தடி சாக்கில் கந்தகப் பொடி மன்னன்!

‘‘மத்தியானமே வரச் சொல்லேண்டா..!’’

புடவைக் கடையில் கமலாவும் அங்கச்சியும் ஒரே மாதிரி இரண்டு பட்டுப் புடவை வாங்குவதற்குள் படுத்திய பாட்டை விவரிக்கலாம் என்றால், மூன்று மெகா சீரியல்களை ஒரே சமயத்தில் பார்ப்பது போன்று அழுகை அழுகையாக வருகிறது. ஆகவே தவிர்க்கிறேன்.

அல்லி டி.வி&யில் ‘தங்கப் பானை’ நிகழ்ச்சி ஆரம்பம்.

ஒரு சைஸ் சின்ன அளவு ஜீன்ஸ், இரண்டு சைஸ் சின்ன அளவு பனியன் அணிந்து வந்த கள்ளூரி மானவி… சட், கல்லூரி மாணவி… காம்பியர் பண்ண வந்தாள்.

‘‘அள்ளி டி.வி. ஏராளமான பரிசுகளை அல்லித் தருகிற தங்கப்பானை நிகழ்ச்சி. வரவேற்கிறோம், இந்த 100&வது நிகழ்ச்சியில் களந்து கொல்ல…’’ என்று தொடங்கி, போட்டியாளர்களை அறிமுகம் செய்யத் துவங்கினாள்.

என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. கமலாவும், அங்கச்சியும் உடன்பிறவாச் சகோதரிகள் மாதிரி மேக்&அப்பில் ஜொலித்தார்கள்.

நிகழ்ச்சி தொடங்கியது. உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு மூன்றையும் மூன்று தட்டுகளில் வைத்துப் பெயரைக் கேட்டாள் ஜிகினாஸ்ரீ. எதிரணி பாவம், ஃபாஸ்ட் ஃபுட்டின் அடிமைகள் போல! விழிவிழியென்று விழித்தார்கள். தொச்சு, சாப்பாட்டின் அடிமை. அவன் சட்டென்று சரியாகச் சொல்ல, அங்கச்சி கதவிடுக்கில் மாட்டிக் கொண்ட எலி மாதிரி கீச்சுக்குரலில் கத்திச் சிரித்தாள். ஒவ்வொரு ரவுண் டுக்கும் பாயின்ட்டுகள் ஏறிக்கொண்டே போய், இறுதியில், கமலா டீம் வெற்றி பெற்றதாக ஜிகினாஸ்ரீ அறிவிக்க, ஒரே ஆரவாரம்… கைத்தட்டல்!

என் மாமியாரை அவர் இஷ்டப்படி செய்யவிட்டிருந்தால் மாவிலைத் தோரணம், இலைக் கோலம், பந்தல், வாழை மரம், மேளதாளம், பூரண கும்பம் என விஸ்தாரமாக ஏற்பாடு செய்திருப்பாள், கமலா அண்ட் கோ&வை வரவேற்க!

வழக்கத்தைவிட அட்டகாசமான அலட்டலுடன் தொச்சு, ‘‘அத்திம்பேர்… பாத்தீங்களா, எதிர் டீமை சுருட்டிட் டோம்’’ என்றான்.

‘சுருட்டறது உனக்குக் கைவந்த கலைதானேடா!’ என வாய் வரை வந்து விட்டது. ‘‘பார்த்தேன்… ஊதித் தள்ளிட் டீங்களே! சரி, பரிசு எப்போ கிடைக்கு மாம்?’’ என்றேன்.

‘‘அதில் ஒரு சின்ன பிரச்னை, அத்திம்பேர்! பரிசுத் தொகையை டெல்லி யில்தான் கொடுப்பாங்களாம். நேரே போய் வாங்கிக்கணும்!’’

‘‘தொச்சுவுக்குப் பரிசு வாங்கின சந்தோஷத்தைவிட டெல்லி போய் வரணுமே, செலவாகுமே என்று ஒரே கவலை’’ என்றாள் கமலா.

‘‘சரி, சரி… எதுக்கு மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்கிறே? டிக்கெட் நான் வாங்கிக் கொடுக்கறேன்!’’

‘‘அதுக்கு ஏன் அலுத்துக்கறேள்? பரிசுப் பணத்தை நானா தலைமேல் வெச்சுக் கட்டிக்கப்போறேன்?’’ என்று முகத்தைச் சுழித்தாள் கமலா.

‘‘அத்திம்பேர்… சௌக்கியமாக வந்து சேர்ந்துட்டோம். ஜன்பத் ஓட்டல்லதான் ரூம் போட்டிருக் கோம். சௌகரியமா இருக்கு. ஷாப்பிங் போகும்போது உங்களுக்கும் ஏதாவது வாங்கிண்டு வர்றோம். என்ன வேணும்னு கேக்கச் சொல்றா அக்கா!’’

‘‘வேறென்ன வேணும்… கடன் தான் வேணும்!’’ என்றேன்.

தொச்சு ‘ஓ’வென்று சிரித்து, ‘‘அத்திம்பேர், நகைச்சுவைல உங்களை யாரும் அடிச்சுக்க முடியாது!’’ என்று ஒரு ஐஸ்&பெர்க்கையே என் தலை மேல் வைத்தான்.

அப்போது கமலா அவனிடமிருந்து போனை வாங்கி, ‘‘பாருங்கோ… விழாவில் ஒரே மாதிரி புடவை கட்டிண் டால் நல்லா இருக்கும்னு சொல்றா. அதனால எங்களுக்கு ஒரே மாதிரி ரெண்டு பனாரஸ் பட்டுப் புடவை வாங்கிக்கறோம். என்ன, காதுல விழுந்ததா?’’ என்று கேட்டாள்.

நான்தான் விழுந்தேன் சோபாவில்!

கால்டாக்ஸி கொள்ளாமல் சாமான்களை (டெல்லி பர்ச்சேஸ்!) அடைத்துக்கொண்டு கமலா டீம் என் வீட்டு வாசலில் வந்து இறங்கியது.

‘‘அத்திம்பேர், 500 ரூபாயாக இருக்கு. கால்டாக்ஸிக்குப் பணம் கொடுத்துடுங்கோ!’’ என்ற தொச்சு, சாமான்களை எல்லாம் இறக்கிக் கூடத்தில் பரப்பிவிட்டு, சோபாவில் சரிந்து ‘உஸ்’ஸென்று பெருமூச்சு விட்டான்.

‘‘தொச்சு… பரிசாகக் கொடுத்த செக் எங்கே? காட்டு, பார்க்கலாம்!’’ என்றேன்.

‘‘விழாவில் வெற்றுக் கவர்தான் கொடுத்தாங்க. அப்புறம், ஒரு லட்சம் ‘கேஷ்’ கொடுத்தாங்க!’’

‘‘சரி, அதைத்தான் காட்டேன்!’’

‘‘அடாடா..! ஒரு மனுஷன் இப்படியா பணத்துக்கு றெக்கை கட்டிண்டு பறப்பான்? போன இடத்தில் நாலு சாமான் வாங்கி இருப்பாங்களே, அதுக்குப் பணம் தேவைப்பட்டி ருக்காதான்னு யோசிக்க வேணாமா? பாருங்கோ, எவ்வளவு சாமான் வாங் கிண்டு வந்திருக்கோம். அக்காவும் அங்கச்சியும் கோல்டன் ஜுவல்லரிக்குள் போகும்போதே எனக்கு ‘பக்’குனு இருந்தது. கடையா அது?! மூணு ஜோடி வளையலே 60,000 ஆயிடுத்து!’’

‘‘மூணாவது ஜோடி யாருக்கு?’’

‘‘உங்க அக்காவுக்கு! கேள்வியைப் பாரு..! என் அம்மான்னு ஒருத்தி இருக்கிறது எப்படித் தெரியும் உங்க கண்ணுக்கு?’’

‘‘அப்புறம் அத்திம்பேர்… டாக்ஸி, ஓட்டல் பில், பனாரஸ் பட்டுப் புடவை, டிஜிட்டல் கேமரா அது இதுன்னு…’’

‘‘பூராத்தையும் காலி பண்ணி யாச்சா?’’

‘‘பூரா இல்லை அத்திம்பேர்! கால் டாக்ஸிக்காக 500 ரூபாய் மிச்சப் படுத்திண்டு வந்தேனே!’’

‘‘அடடா! உன் சாமர்த்தியமே, சாமர்த்தியம் தொச்சு!’’

‘‘அப்புறம் ஒரு சின்ன விஷயம், அத்திம்பேர்! அல்லி டி.வி. சார்பா ஒரு முதியோர் இல்லம் அட்ரஸ் கொடுத்து, அதுக்கு 10,000 ரூபா டொனேஷன் அனுப்பும்படி சொல்லி இருக்காங்க. மறக்காம அனுப்பிடுங்கோ! நம்மளை மதிச்சு இவ்வளவு தூரம் கூப்பிட்டுப் பரிசு கொடுத்தவங்க சொன்னபடி செய்யறதுதான் நமக்கு மரியாதை! அப்போ, நானும் அங்கச்சியும் கிளம்பறோம்’’ என்று அவர்களுக்கான சாமான்களை பேக் செய்துகொண்டு புறப்பட்டார்கள்.

பானை பிடித்தவள் பாக்கியசாலி தான்! ஆனால், பானை பிடித்தவளைப் பிடித்தவன்? வேணாம், சொல்ல மாட்டேன். எதுக்கு வம்பு?

வெளியான தேதி: 29 நவம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *