டேஸ்ட் கடை நாகூர் மாமா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 9, 2018
பார்வையிட்டோர்: 15,637 
 
 

‘பீட்சா,kfc, மெக்டொனால்ட்ஸ்,பேர்கர் அது இதுனு நவ நாகரீக கார்ப்பரேட் உணவு கவர்ச்சி மோகங்கள் வந்தாலும்கூட எங்க ஊரு டேஸ்ட் கடைகளில் கிடைக்கும் சுவைகளை அடித்திட , ஒருபோதும் அவர்களால் முடியாது!.

அதிலும் நாகூர் மாமாவின் “கசாப்பா புரட்சி”! டேஸ்ட் கடையில் இளைஞர் பட்டாளத்தை பார்த்தோம்னா! அனர்த்த நிவாரணம் பெறுவதற்கு வந்ததுபோல் முட்டி, மோதியபடி நிரம்பியிருப்பார்கள்.

சுமார் பதினைந்து வருடத்திற்கு முன்னர் நாகூர் மாமாவின் டேஸ்ட்டுக்கு அடிமையாகிப்போன , நானும் என் நண்பனும் தினமும் ஊர் சுற்றிவிட்டு – மாலை நேரங்களில் தவறாமல் மாமாவின் கடையில் சென்று சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொண்டோம்.

உழைத்து – களைத்து மாதத்தில் சில நாட்களில் கடைக்கு லீவும் விட்டுவிடுவார் மாமா.

டேஸ்ட் கடைக்கு வந்து கடை மூடிக்கிடப்பதை பார்த்து ‘டேஸ்ட் கிழங்கும், கறி பாவத்தும், சூப்பும் சாப்பிட முடியவில்லையே..!’ என்று நானும்,நண்பனும் நாகூர் மாமவை வண்டை வண்டையாக திட்டிய சுவாரசியமும் உண்டு.

நானும் நண்பனும் காசு புரட்டி மாறி மாறி மாமாவுக்கு தினமும் மொய் எழுதி வந்தோம்.

ஒருநாள் மாலை வழமைபோல் நண்பன் என்னைத் தேடி வந்தான். “என்ன போலாமா? ” என்று கேட்டான் “அதுக்கென்ன கெழம்பினா போச்சு ” என்றேன். சைக்கிளை எடுத்து, என்னையும் ஏற்றிக்கொண்டு பெடலை வெகு வேகமாக மிதிக்க தொடங்கினான் நண்பன்.

கடையை சென்றடைந்ததும் நண்பன் பசியோடும், குஷியோடும் “நீயே ஓடர் பண்ணு” என்றான்.

நானும் “மாப்புள காசுதானே!’ என்று எல்லா ஐட்டத்துக்கும் ஓடர் கொடுத்துவிட்டு ரெண்டுபேரும் மூக்கு முட்ட கட்டினோம்.

சாப்பிட்டு முடிந்ததும் நான் வெளியேறும் முன்பே நண்பன் என்னை ஓவர் டேக் பண்ணி வெளியேறி சென்றது மின்னல் வெட்டி மறைந்தது போலிருந்தது .

“டேய் காசு கொடுத்தியா?” என சத்தம் போட்டு அவனை கூப்பிட்டேன்.

சாக் அடித்தவன்போல் திரும்பியவன், அருகில் வந்து “உங்கிட்ட காசு இருக்குன்னுதானாடா நானும் வந்தேன் ” என டீசன்டா ஒரு குண்டைத் தூக்கி போட்டான்.

ஆளாளுக்கு காசு கொண்டு வந்ததாக நினைத்து அறியாமல், புரியாமல் மொத்திவிட்டு அரசியல்வாதிகள்போல் விவாதம் பண்ணிக்கொண்டு ‘இப்ப எப்படிடா எஸ்கேப்பாகுறது!’ என யோசிக்கும்போதே நாகூர் மாமாவின் சி.சி.டி கண்காணிப்பு கேமராவாக பணியாற்றிய பணியாளர் ஒருத்தனின் கண்ணுக்கு எங்களது ரகளை பட்டுவிட்டது.

கோடாரியோடு வந்த அவன் “என்ன கொள்ளி கொத்துரீங்களா! ?” என நக்கலாக கேட்டான். நம்மாலும் கொஞ்சமும் அசாராமல் கோடாரியை வாங்கிக்கொண்டான்.

இதை கவனித்துக்கொண்டிருந்த, நாகூர் மாமா இருவரையும் கூப்பிட்டு, அவரது வீட்டோ பவர் முழுவதையும் யூஸ் பண்ணி!”நாளைக்கு வரும்போதும் செட்டில் பன்னுங்க இப்ப கெழம்புங்க மருமகன் ” என முதலாளி வர்க்கத்துக்கே பிதாமகனாக இருந்து, அப்பாவியனா எங்கள் இருவரையும் கடனாளியாக ஜாமினில் அனுப்பி வைத்தார் .

இந்த துயரமான சம்பவம் ஏற்பட்டு பல நாட்களாக, ‘ நாகூர் மாமாவின்’ கடைப்பக்கம் போவதை இருவரும் நிறுத்திக்கொண்டோம். கடனின் தவனை நாள்வேறு காலாவதியான முக்கியமான காரணத்தால் உதிரிக் கடைகளை நாடிச் சென்றோம் .

ஆனாலும் ,நாகூர் மாமாவின் கைப்பக்குவம் அங்கெல்லாம் கிடைக்கவில்லை என இருவரும்
பேசிக்கொள்ளும்போதெல்லாம் கொடூரமாக அந்த கடன் அடிக்கடி வேடன்தாங்கள் பறவைகள் போன்று தலையை சுற்றி வலம் வந்துகொண்டிருந்தது.

இப்படியே சில மாதங்கள் கடந்தபோது நானும் வெளிநாடு சென்றுவிட,
நண்பனுக்கும் உள்ளூரிலே அரசாங்க வேலை ஒன்றும் கிடைக்க இருவரும் பிரிந்துவிட்டோம்.

சில வருடங்கள் கழித்து நான் நாட்டுக்கு திரும்பி வந்தேன். ஊரில் எல்லாமே மாறிப்போயிருந்தது. நாகூர் மாமாவின் கடையும் வேறு பகுதியில் சிப்ட்டாகியிருந்தது.

நண்பன் என்னை சந்திக்க வந்தான் “என்ன போலாமா ?” என்றான் “நாகூர் மாமா பழைய உடண்படிக்கை எல்லாவற்றையும் மறு பரிசீலனைக்கு கொண்டுவருவாரா?… ம் மறந்துருப்பார் ” என இருவரும் பேசிக்கொண்டு அவரது கடைக்கே கெழம்பினோம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரும் காஞ்ச கம்பை மாடு மேஞ்சதுபோல் செம கட்டு காட்டுவதை அடிக்கடி மாமா ரசித்து பார்த்துக்கொண்டார்.

மாமாவின் வியூக பார்வையால், நண்பன் கோடாரியையும், கொள்ளியையும் ஞாபகபடுத்தினான்.

மாமாவின் எக்ணோமிக் டெவலப்பால் ‘கேஸ் சிலிண்டர்’ என் கண்களுக்கு தென்பட்டபோது ஒரு வித நிம்மதியாக இருந்தது.

அத்தோடு கடன்கார கம்னாட்டிங்க நாங்கதான் என்பதை மாமாவுக்கு நினைவில் இல்லை என்பதை அவரது உபசரிப்பினூடா புரிந்துகொண்டோம்.

சாப்பிட்டதுக்கு காசை கொடுத்துவிட்டு இருவரும் வெளியே வரும்போது “மருமகன் மீதிக் காசு ” என்று கூப்பிட்டார் நாகூர் மாமா.

‘பழைய பாக்கியைத்தான் கேட்கின்றார்!’ என நண்பன் ஒரு பக்கம் குழப்பத்துடன் “ஹி…ஹி…” என்றே இளித்தபடி பைத்தியம் பிடித்தவன்போல் நின்றான்.

“மீதி காசை அப்பவே கொடுத்திட்டீங்க மாமா” என்றேன் .

நான் மீதியை உண்மையில் வாங்காமல், “வாங்கிக்கொண்டேன்” என கூறியதை நம்பி குழப்பத்தில் தலையை சொறிந்தபடி கல்லாவில் காசை போட்டுவிட்டு மீண்டும் கணக்கு பார்க்கத் தொடங்கினார், மாமா.

நீண்டகாலமாக இருந்த கடனை அவர் அறியாதாவாறே செலுத்திய சந்தோஷத்தில் பைக்கை ஸ்டார்ட் பண்ணினேன்.

மறுபடியும் “மருமகன்” என்று கூப்பிட்டார் நாகூர் மாமா.

எங்களுடைய மோடட்டார் பைக் நாகூர் மாமாவின் கடையின் எல்லையிலிருந்து தாண்டி வேகமாக சென்றுகொண்டிருந்தது .

என்ன போலாமா!!!?…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *