பாவத்தின் தண்டனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2022
பார்வையிட்டோர்: 2,448 
 

சென்னை மத்திய ரயில் நிலையத்தில் கூட்டம் அலை மோதியது. தமிழ்நாடு எக்ஸ்பிரசில் இருந்து ஒரு ராணுவ வீரர் இறங்கினார். பெட்டி படுக்கையோடு இறங்கி வேறு பிளாட்பாரத்திற்கு சென்றார். ஓராண்டுக்குப்பின் தாய் மண்ணை மிதித்த மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது.

பார்த்திபன் – ஒரு ஆஸ்துமா நோயாளி. பதினைந்து ஆண்டுகளாக தரைப்படை போர் வீரனாக காஷ்மீர் எல்லையிலும், சிக்கிம் எல்லையிலும் பணியாற்றியவன், கடுமையான குளிராலும், மூச்சுத் திணரலாலும், அவதிப்பட்ட பார்த்திபனை, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கொச்சிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளான். மருத்துவ அடிப்படையில் அவன் “சி” வகுப்பு ஆஸ்துமா நோயாளி.

எர்ணாகுளம் செல்லும் ரயிலில் ஏற வேறு பிளாட்பாரத்தில் வந்து உட்கார்ந்தான். தமிழ் நாளிதழ் வாங்கி ஆர்வமுடன் படித்தான். பார்த்திபனுக்கு சொந்த ஊர் பரமகுடி. அங்கு அவனது வயதான தாய், தந்தை, மனைவி, மகன், மகள் இருக்கிறார்கள். ஒரு காணி நிலம் உண்டு. சாப்பாட்டுக்கு நெல் கிடைக்கும். மாதா மாதம் இவன் அனுப்பும் பணத்தை எதிர்பார்க்கும் குடும்பம். மகன் ஐ.டி.ஐயிலும் மகள் எட்டாம் வகுப்பிலும் படிக்கிறார்கள்.

எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் வந்தது. உரிய இடத்தைத் தேடி அமர்ந்தான். சிற்றுண்டி வாங்கி வைத்துக்கொண்டான். கொச்சி பயிற்சி நிலையத்தில் ஸ்டோர்மேன் வேலையோ டெஸ்பார்ச் வேலையோ கொடுப்பார்கள் என்று சிக்கிமில் கர்னல் சொல்லி அனுப்பினார். தாய்மொழி தமிழாக இருந்தாலும் இந்தியில் சரளமாக பேசுவான். இன்னும் ஐந்து ஆண்டுகள். எப்படியாவது தள்ளிவிட்டால் பென்ஷன் கிடைக்கும். இந்த மாறுதல் கோரியதால் இன்னும் ஓர் ஆண்டுக்கு லீவில் போக முடியாது.

வரும் ஆண்டிலாவது அப்பாவுக்கு கண் ஆபரேஷன் செய்யனும். கண் சரியா தெரியலேப்பான்னு போன லீவிலேயே சொன்னார். அம்மா யாரிடமும் சொல்லாமல் இலவச கண் சிகிச்சை முகாம் வந்தபோது கண்ணை உறித்து… கண்ணாடி பொறுத்திக்கொண்டு வந்துவிட்டார். கண் நன்றாகத் தெரிகிறதாம். அப்பா அங்கு போக பயப்படுகிறார்… என்று எண்ணியபடி சென்றான்.

காலை புலர… இரயில் கொச்சியில் நின்றது. கொச்சி இராணுவ அலுவலகம் சென்று ரிப்போர்ட் செய்தான். பார்த்திபன் புதிதாக வந்தவர்களின் ஸ்டாப் அணிவகுப்பில் கலந்து கொண்டான். புதியவர்களிடம் கமேண்டிங் ஆபிசர் அன்பாகப் பேசினார். பார்த்திபனுக்கு ஆறுதலாக இருந்தது. அவரிடம் பார்த்திபன்.

“ஐயா… நான் ஆஸ்துமா நோயாளிங்க…” என்றான்.

அதற்கென்ன? என்றார் அலுவலர்.

“பளுவான வேலை ஏதும் செய்யக்கூடாது”

“ஓ… அப்படியா… அதற்கு வேலையை ராஜினாமா செய்துட்டு வீட்டுக்குப் போயிடு… இல்லன்னா… அன்பிட்ன்னு நீக்கிட வேண்டியதுதான்…”

“ஏழை குடும்பங்க… என் சம்பளத்தை நம்பி ஐந்து பேர்கள் ஊரில் இருக்கிறார்கள்… ஐயா… கருணை காட்டுங்க…” என்று சொல்லியபடி சிக்கிமில் கொடுத்த மருத்துவ சான்றிதழைக் கொடுத்தான்.

அதை அலட்சியமாக வாங்கிப் பார்த்துவிட்டு, “சரி… சரி… பளு இல்லாத வேலையா தர்றேன் போதுமா?” என்றார் அங்கிருந்த சுபேதார் மேஜர்.

இவர்கள் உரையாடலை கவனித்த கர்னல் ஆபீசர், மேஜர், “இவனை என் ஆர்டர்லியாக போட்டு நாளை காலை எட்டு மணிக்கு என் பங்களாகவுக்கு அனுப்பி வை” என்று சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறி காற்றாய் பறந்தார்.

பார்த்திபன் திடுக்கிட்டான். “ஆர்டர்லி” வேலையா? இது நாள் வரை அவன் ஆர்டர்லி வேலை பார்த்ததில்லை. தன்மானமுள்ள எந்த படைவீரனும் விரும்பாத வேலை ஆர்டர்லி வேலை. தன்மானமுள்ள எவனும் செய்ய அருவருக்கும் வேலை அது.

எத்தனையோ துயரங்களும், துன்பங்களும் இருந்தும் கூட தன்மானமில்லாத வேலையை அவன் செய்ய நேர்ந்ததில்லை.

ஐயா… இந்த வேலை… வேண்டாங்க… என்று சொல்ல அவன் உதடுகள் துடித்தன. கர்னல் அவர்களின் தோற்றம் அவனைக் கேட்க இயலாமற் செய்துவிட்டது. அவன் பணியில் சேர்ந்த அன்றே… கர்னல் மிகவும் கண்டிப்பானவர்… ஈவு இரக்கமற்றவர்… என்று கேள்விப்பட்டிருக்கிறான். முதல் நாளே அவரிடம் கெட்ட பெயர் எடுக்கக்கூடாது என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.

முறையான முறையில் தன் வேண்டுகோளை விண்ணப்பமாக கர்னல் அவர்களுக்கு அனுப்பலாம் என்று அவன் முடிவு செய்தான்.

அன்று மாலை ரோல்காலின் போது பார்த்திபன் தன் கோரிக்கை மனுவுடன் சுபேதார் மேஜரைத் காணச் சென்றான். மேஜர் தன் புருவத்தை உயர்த்தி, “என்ன” என்றார்.

“ஐயா இந்த ஆர்டர்லி வேலை வேண்டாங்க…”

“ஓகோ வேறு என்ன வேலை வேண்டும்? உம். உதவி கேப்டன் லீவில் இருக்கிறார்…. அவர் வேலையை உனக்குத் தரட்டுமா?” என்று கோபமாகவும் கிண்டலாகவும் கேட்டார்.

அமைதியாக நின்றிருந்தான் பார்த்திபன்.

“உம் … சொல்… எனக்கு தலைக்குமேல் வேலை இருக்கிறது.”

இதைக் கேட்ட சுபேதர் மேஜர், கோபமாக எழுந்து நின்று, “போடா… என் முன் நிற்காதே…. நாளை காலையில் கர்னல் ஐயா பங்களாவிற்குப் போய் ரிப்போர்ட் செய்… உம்… போ…”

பார்த்திபன் வேறு வழி இல்லாமல் வருத்தமுடன் திரும்பினான். அவன் இதுவரை ஆர்டர்லி வேலை செய்ததில்லை. ஆனால் வேலை செய்தவர்கள் எவ்வளவு துன்பப்பட்டார்கள் என்பதை சிக்கிமில் கேள்விப்பட்டிருக்கிறான்.

அவனுடைய துயரங்களை செவிமடுத்துக் கேட்க இவ்வுலகில் எவருமில்லை. கடுமையான குளிராக இருந்தாலும் சிக்கிமிலேயே தொடர்ந்து வேலை செய்திருக்கலாம். இங்கு வந்து மாட்டிக்கொண்டோமே என்று பார்த்திபன் கண்கள் பனித்தன.

இராணுவம் என்பது ஒரு பெரிய உலகம். மனிதர்களும் மிருகங்களும், புழுக்களும் வாழ்கின்ற ஓர் உலகம். சிப்பாய் அந்த உலகத்தின் வெறும் ஒரு புழு தான். ஒரு சிப்பாய் வேறு என்னதான் செய்ய முடியும்? கட்டளைக்குப் பணியத்தானே வேண்டும். பார்த்திபனுக்குப் பரிந்து பேச யார் உள்ளார்கள்?

“உனக்கிடும் கட்டளைப்படி நட – அவை சரியா? தவறா?” என்று யோசிக்க வேண்டியதில்லை… என்றும் சிக்கிமில் வங்காள கர்னல் கூறியது அவனுக்கு நினைவுக்கு வந்தது. தன் அறைக்கு வந்தான். தான் சிக்கிமில் இருந்து கொச்சிக்கு மாறுதல் அடைந்ததையும், பிள்ளைகள் படிப்பு பற்றியும் அப்பா, அம்மா நலன் பற்றியும் மனைவிக்கு கடிதம் எழுதினான். தன் துன்பங்களை எழுத அவனுக்கு மனம் துணியவில்லை.

அமைதியின்றி அன்று இரவு கழிந்தது.

மறுநாள் காலை தனக்கு இடப்பட்ட கட்டளையின்படி சிப்பாய் பார்த்திபன் தன் சீருடை அணிந்து கர்னல் பங்களாவிற்குச் சென்றான். அழகான பங்களா. எதிரில் தோட்டம். பின்பக்கம் வேலைக்காரர்களுக்கான சிறு கொட்டகை தென்பட்டன.

கார்ஷெட். சாம்பல் நிறமான பெரிய நாய் ஒன்று சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. இவனைப் பார்த்ததும் எழுந்து குலைத்தது. அங்கிருந்த ஒரு அலுவலர் “என்ன வேண்டும்…?” “யார் நீ?” என்று கேட்டார்.

தன் நியமனக் கடிதத்தை அவரிடம் நீட்டினான். அதன் பிறகு தன்னை கர்னல் வீட்டு ஆர்டலியாக ரிப்போர்ட் செய்து கொண்டான்.

பின்னால் தோட்டம் இருக்கிறது. போய் தண்ணீர் பாய்ச்சு. அங்கே ரப்பர் குழாய் இருக்கிறது… போ… என்று பணித்தார். அங்கிருந்த பூச்செடிகளுக்கும், காய்கறி, கீரைச் செடிகளுக்கும் சில மூலிகைச் செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான்.

ஒரு மணி நேரம் கழித்து கர்னல் மனைவி கூப்பிடுவதாக ஒரு வேலைக்காரன் வந்து சொன்னான். உடனே அங்கு சென்றான்.

“நீ தான் புது ஆர்டர்லியா?” என்று கேட்டாள் கர்னல் மனைவி.

“ஆமாம் மேடம்”

“உன் பெயர் என்ன”

“பார்த்திபன்”

“ஓ … மதறாஸ்காரனா… சரி… கடைக்குப் போய் ஆட்டு இறைச்சி அரைக்கிலோ, வஞ்சிர மீன் அரைக்கிலோ வாங்கிக் கொண்டு சீக்கிரம் வா… அப்படியே சுத்தம் செய்துகொண்டு வா…” என்று கூறிவிட்டு ரூபாயும் கூடையையும் கொடுத்தாள்.

அவள் தோற்றம் ஒரு முரட்டுப் பெண்ணை நினைவுப்படுத்தியது.

அங்கிருந்த சைக்கிளை எடுத்துப்போகுமாறு அங்கிருந்த அலுவலர் சொல்லவே சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றான். கூட்டம் அதிகமாக இருந்ததால் காலதாமதமாகியது. இறைச்சியும் மீனும் வாங்கி பக்குவமாக வெட்டி, ஆய்ந்து எடுத்துவர நேரமாகிவிட்டது.

வீட்டில் அழைப்பு மணியை அழுத்தினான்.

வெளியே வந்த கர்னல் மனைவி, “முட்டாள்… இதற்கு இவ்வளவு நேரமா? முன்பு இருந்த கிழவனே தேவலை… நீ கடைக்குப்போய் ஒரு மணி நேரம் ஆகிறது… எப்போ சமைச்சு எப்போ சாப்பிடறது… முழியைப் பாரு…” என்று பார்த்திபனை திட்டிவிட்டு கூடையையும், மீதி சில்லரையையும் அவனிடமிருந்து வாங்கிக்கொண்டு திரும்பியவள்,

“ஏய்… இங்கே வா… பின்பக்ககேட்டைத் திறந்து அங்குள்ள துணிகளைத் துவைத்து மாடியில் காய வை…. துணிக்கு கிளிப்போடு… உம்… போ… ஏன் நிற்கிறாய்…”.

பார்த்திபன் பின்பக்கம் அமைதியாகச் சென்றான்…

அங்கு கர்னலின் இரண்டு பெண் குழந்தைகளின் பள்ளி சீருடைகளும், கர்னல் பேண்ட், சண்டைகளும், கர்னல் மனைவி சேலைகள் இரண்டும் சோப்புத்தூள் நீரில் போடப்பட்டிருந்தது. எல்லாத் துணிகளையும் துவைத்து, நீலமிட்டு மாடியில் காயவைத்துவிட்டு, துவைத்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தான்.

அப்போது ஒரு பணியாள் வந்து, “தோட்டத்தில் பூண்டு, வேண்டாத புல்கள் நீக்கச் சொன்னார்கள்” என்று சொல்லிவிட்டு மண் வெட்டியைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.

அப்போது ஜீப்பில் இருந்து கர்னல் இறங்கினார்.

வேண்டாத புல் பூண்டுகளையும், சில செடிகளையும் பார்த்திபன் நீக்கிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கர்னல்,

“டேய் முண்டம் அறிவிருக்கிறதா? உனக்கு சிறியாநங்கைச் செடியையும், கரிசலாங்கண்ணிச் செடியையும் ஏண்டா இப்படி சீவி போட்டே… ராஸ்கேல்…” என்று கோபமாகத் திட்டினார்.

செய்வதறியாமல் திகைத்தான் பார்த்திபன்.

“போடா… அந்த பக்கம் போடா… அங்கிருக்கிற பூண்டுகளைக் கொத்திப் போடு… மூலிகைச் செடிகளையெல்லாம் வெட்டிப் போட்டுட்டேயடா… அம்மா பார்த்தாங்கன்னா உன்னை திட்டுவாங்க… போ… போ…” என்றார் கர்னல்.

அவனுக்குத் தாங்க முடியாத துயரம் உண்டாயிற்று. துயரப்படுவதால் என்ன பயன்? எல்லாமே சகிக்க வேண்டியதுதான் என்று எண்ணியபடி பூண்டுகளை வெட்டிக் கொண்டிருந்தான்.

மறுநாள் காலை பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் பூட்சுகளையும், கர்னல் பூட்சுகளையும் கர்னல் மனைவியில் செருப்புகளையும் சுத்தம் செய்து பாலீஷ் போடும் வேலை. கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. துக்கம் நெஞ்சை அடைத்தது. வேலையை செய்து முடித்தான். பெருமூச்சு வெளிப்பட்டது.

மூன்று மாதங்கள் கடந்தன.

குளிக்கும் அறையையும், கக்கூசையும் சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தான். இடுப்பு எலும்பு விண் விண் என்று வலித்தது.

“ஏய்… பார்த்திபன்…” என்று கர்னல் மனைவியின் குரல் கேட்டு திரும்பினான்.

“அந்தத் துணிகளைத் துவைத்துப்போடு…” என்றாள். அங்கிருந்த துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் அருகில் கர்னல் மனைவியின் உள்ளாடை ஒன்று வந்து வீழ்ந்தது. பார்த்திபன் திரும்பிப் பார்த்தான். கர்னல் மனைவி நின்று கொண்டிருந்தாள்.

“என்ன பார்க்கிறாய்… அந்த பாவாடையையும் தோய்த்து காய வை…” என்றாள்.

பார்த்திபனுக்கு உடல் சிலித்தது… உடல் கூனிக் குறுகியது.

“என்னால் இதைத் துவைக்க முடியாது…” என்றான் பார்த்திபன்.

“கழுதை… எருமை மாடே… அதைத் துவைத்தால் உன் கை தேய்ந்து போய்விடுமா?”

“முடியாது உன் உள்ளாடையெல்லாம் என்னால் தோய்க்க முடியாது?”

அவன் எழுந்து போகும்போது… சற்று கரை வழுக்கியது…

“நீ தேய்த்த லட்சணத்தைப் பார்… ரொம்ப திமிர் உனக்கு”

அங்கே ஒரு கணமும் நிற்காமல் தன் யூனிட் லைனிற்கு வந்தான். அங்கு சுபேதார் மேஜர் ஒரு வார இதழை புரட்டிக் கொண்டிருந்தார்.

என்ன?! என்று கேட்பது போல் நிமிர்ந்து பார்த்தார்.

“ஐயா என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் கர்னல் வீட்டு ஆர்டர்லி வேலையை என்னால் செய்ய முடியாது ஐயா…” என்று மிகவும் பணிவுடன் கூறினான்.

“என்னடா பார்த்திபன்… என்ன நடந்தது சொல்.”

“அய்யா, கர்னல் ஐயா துணிகள், குழந்தைகள் துணிகள், கர்னல் மனைவி சேலைகள் கூட அலசிப் போட்டேன். பூட்ஸ் செருப்புகளுக்கு பாலிஷ்கூட போட்டேன். தோட்ட வேலையும் செய்தேன். ஆனால் ஐயா கர்னல் மனைவியோட உள்பாவாடையை என்னால் தோய்க்க முடியாது. நீங்கள் எல்லோரும் சேர்ந்து தூக்கிப் போட்டாலும் சரி” என்றான் பார்த்திபன்.

தன்மானக் குமுறலின் வெடிப்பாக வெடித்தது.

செய்வதறியாமல் மேஜர் அமர்ந்திருந்தார்.

“சரி… சரி… உணர்ச்சி வசப்படாதே… நீ உன் பராக்சுக்குப் போ மாலையில் வா… யோசித்துச் சொல்கிறேன்.” என்றார் மேஜர். இனி கர்னல் வீட்டிற்குப் போவதில்லை என்ற முடிவுடன் தன் பராக்சுக்குச் சென்று கட்டிலில் படுத்து வாய்விட்டு அழுதான். சிலர் அவனை வந்து தேற்றினார்கள். உடம்பு அனலாய் கொதித்தது. இரண்டு நாட்கள் விடுப்புக்கு விண்ணப்பித்தான்.

கேம்ப் போயிருந்த கர்னல் வீடு திரும்பியதும் கர்னல் மனைவி, ஆர்டர்லி தன்னை அவமானப்படுத்திவிட்டதாக புலம்பினான். சமயம் வரும்போது அவனை பழிவாங்க வேண்டும் என்றாள் அவள். மறுகணமே கர்னல் சுபேதார் மேஜரைக் கூப்பிட்டு, “பார்த்திபனை நாளையிலிருந்து ஆர்டர்லி வேலைக்கு இங்கு அனுப்ப வேண்டாம்” என்றார் கர்னல்..

இரண்டு நாட்கள் கழித்து சுபேதார் முன் ரிப்போர்ட் செய்தான்.

“உன்னை மெயின்கேட் வாயிற்காப்போனாக நியமிக்கப்பட்டு உள்ளது. போய் வேலையைப் பார்…” என்றார்.

“வேலை எளிதான வேலை. இராணுவ ஜீப், லாரி, கார் வந்தால் திறந்துவிட வேண்டும். பிறகு மூடிவிட வேண்டும். மற்ற காரோ, ஜீப்போ, லாரியோ வந்தார் திறக்கக் கூடாது. ஆனால் தினமும் பெரிய பெரிய அதிகாரிகள் போவதும், வருவதுமான வழி அது… ”

“தூய்மையான சீருடையுடன் ஆர்.பி. என்ற பாட்ஜைக் கட்டிக்கொண்டு அந்த வழியாக வந்து போகிற ஆபிசர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும். அதுவும் கர்னல் போன்ற அதிகாரிகள் வந்தால் மிடுக்கா சல்யூட் அடிக்க வேண்டும். கவனக்குறைவாக இருக்கக் கூடாது. சிறு சுழல் கேட் வழியாக வெளியார் புகுவதையும் அனுமதிக்கக்கூடாது. மிகவும் பொறுப்பான வேலை. இரவு பகல் மாறி மாறி பணியாற்ற வேண்டும்…” என்று சுபேதார் நீண்ட அறிவுரை கூறினார்.

பணியில் சேர்ந்த அன்று மதியம் கர்னல் அவ்வழியே சென்றார். பார்த்திபன் மிடுக்காக நின்று சல்யூட் அடித்தான். அவர் தனக்குள் சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

வீட்டுக்குச் சென்ற கர்னலை அவர் மனைவி “அந்த மடையனுக்குத் தண்டனை கொடுத்து விட்டீர்களா?” என்றாள். “அவன் இப்பொழுது உள்ள டூயூட்டி தவற இடமுண்டு… அப்போது தான் பிடிக்க வேண்டும்… சரியான நேரம் வரட்டும்… அவன் வயிற்றில் அடிக்க வேண்டும்…” என்றார் கர்னல்.

பார்த்திபன் தன் பணியினை ஒழுங்காகச் செய்ததால் யாரிடமும் எந்த ஏச்சும் பேச்சும் வாங்கவில்லை. ஒரு மாதம் முடிந்தது. வீட்டிற்கு டி.டி. எடுத்து அனுப்பிவிட்டு அறைக்கு வந்தான்.

மகள் வான்மதி பெரியவளாகிவிட்டதையும், பசுமாடு கன்று ஈன்றுள்ளதையும் மனைவி எழுதி இருந்தாள். காலையிலிருந்தே தலைவலியாக இருந்தது படுத்து எழுந்து மாலை 6 மணிக்கு டுயூட்டியில் சேர்ந்தான் பார்த்திபன்.

அப்போது கர்னல் மனைவி, தன் பெண்களுடன் ஜீப்பில் வந்ததை பார்த்திபன் கவனிக்கவில்லை. ஓட்டுனர் இரண்டு முறை ஒலி எழுப்பிய பிறகு கேட் திறக்கப்படவில்லை. மூன்றாம் முறையாக ஒலி எழுப்பிய பிறகு அவசர அவசரமாக ஓடி வந்து திறந்தான்.

மகள் வயது வந்த செய்தியும் பணம் அனுப்பியது சடங்கு செய்ய போதுமா? என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்த பார்த்திபன் முதலில் கவனிக்கவில்லை. ஜீப் கேட்டைத் தாண்டிச் சென்றபோது ஏதோ முணுமுணுத்தபடி கர்னல் மனைவி சென்றாள். இதை கர்னலிடம் அவள் சொல்லி விடுவாளோ என்று பார்த்திபன் பயந்தான்.

அவன் எண்ணியபடியே கர்னல் மனைவி இரவு கர்னல் வந்ததும் நடந்ததைக் கூறினாள். “அவன் என்னை வேண்டுமென்றே மதிக்கவில்லை. அலட்சியமாக இருந்தான்” . என்று தாம் தீம் என்று குதித்தாள். “விடியட்டும் கேட்கிறேன்” என்று சாதாரணமாகச் சொன்னார் கர்னல். ஆனால் கர்னல் மனைவி தன் உணர்வை தன் கணவர் புரிந்து கொள்ளவில்லை என்று மிகவும் கோபப்பட்டாள். அன்றிரவே படுக்கைப் புரட்சி செய்தாள். கர்னலுக்கு பார்த்திபன் மேல் கோபம் வந்தது.

எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தும் இப்படி கர்னல் மனைவி வரும்போது கேட் திறக்காமல் இருந்து விட்டோமே! என்று வருந்தியபடி இருந்தான். மூன்று நாட்கள் கழிந்தது. பகல் ஒரு மணியளவில் கர்னல் உணவிற்காக வீட்டிற்குப் போகும் நேரம் என்பதால் பார்த்திபன் எச்சரிக்கையாய் நின்றிருந்தான். அப்போது எங்கேயோ இரண்டு முறை துப்பாக்கிச்சுடும் ஒலி கேட்டது. திரும்பிப்பார்த்தான். அந்த சிறு இடைவெளியில் கர்னல் கார் வந்து விட்டது. ஓடிப்போய் கதவைத் திறந்தான். ஆனால் கர்னலுக்கு சல்யூட் அடிக்க மறந்துவிட்டான்.

மெயின் கேட்டைத் தாண்டி வந்த ஜீப் மீண்டும் பின்புறமாகவே வந்து நின்றது. உடனே பார்த்திபன் தட்டுத் தடுமாறி மிடுக்காக சல்யூட் அடித்தான்.

“ஜீப்பை உன் பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தினால்தான் நீ எனக்கு சல்யூட் அடிப்பாயோ” என்று கர்ஜித்தார் கர்னல். பார்த்திபன் நாக்கு செயலிழந்து நின்றது. ஒலி வெளியே வரவில்லை உடலில் சிறு நடுக்கம் ஏற்பட்டது.

“முதலில் நான் போன போது நீ என்ன பிணமாக நின்று கொண்டிருந்தாய்…” உம் என்றார் கர்னல்.

“மன்னிக்க வேண்டும் சார்… துப்பாக்கி சத்தம் கேட்டது. அதான்”.

“ஓகோ… அப்படியா?… காஷ்மீர், சிக்கிம் பார்டரில் இருந்து வந்தவன் துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் தடுமு‘றிவிட்டே.. உன்னையெல்லாம் வார் நடக்கிற இடத்துக்கு அனுப்பினால் என்னடா செய்வாய்… பிளடி ராஸ்கேல்… ஸ்டுபிட்…” என்றார் கோபமான.

கேட் அருகே கர்னல் ஜீப் நிற்பதைக் கண்டு சுபேதார் மேஜர் திடுக்கிட்டு ஓடிவந்தான்.

“என்ன மேஜர்! இந்த ரெஜிமெட்டின் ஒழுங்கு முறை லட்சணத்தைப் பார்த்தாயா? ஒரு கர்னலுக்கு ஒரு சாதாரண சிப்பாய் சல்யூட் கூட அடிப்பதில்லை” என்றார் கர்னல்.

பார்த்திபன் ஏதோ சொல்ல வாயெடுத்தான்.

“அடிமுட்டாளே… உளராதே!” என்று மேஜர் பார்த்திபனை அடிக்க கை ஓங்கினான்.

பார்த்திபன் கர்னலை நேருக்குநேர் முறைப்பாகப் பார்த்தான்.

“என்னடா முறைக்கிறாய்… மேஜர் நாளை காலை இவனை என் முன்னால் மார்ச் செய்யவை…” என்று கூறிவிட்டு கர்னல் ஜீப்பில் வேகமாகச் சென்றுவிட்டார்.

கர்னல் ஜீப் சென்றபிறகு மேஜர் பார்த்திபனை கண்டபடி திட்டினான். தன் விதியை எண்ணி பார்த்திபனை மௌனமானான். கண்களில் கண்ணீர் பெறுகியது.

மறுநாள் ஜெனரல் மார்ச் நடைபெற்றது. கர்னல் உரை, அன்று பார்த்திபனை சுற்றியே வந்தது. “ஒரு சிப்பாய் எங்கோ வெடிக்கும் துப்பாக்கி சத்தத்திற்கு தன் கவனத்தை சிதறவிடுகிறான். இப்படி யாரோ ஒரு தீவிரவாதி இவன் இப்படி கவனமில்லாமல் இருக்கும்போது நுழைந்துவிட்டால் நிலைமை என்ன ஆகும்.”

தன்னைத்தான் இப்படி மறைமுகமாக குறிப்பிட்டு சொல்கிறார் என்று சாதாரணமாக எண்ணினான். அன்று மாலை பார்த்திபன் பணியில் ஒழுங்கீனமாக இருந்ததால் பதினைந்து நாட்களுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு ஆணை வழங்கப்பெற்றது.

இராணுவத்தில் பதினைந்து நாட்கள் கடுங்காவல் தண்டனை என்றால் பதினைந்து நாட்களுக்கு ஊதியம் கிடையாது. கடுமையான வேலை வாங்கப்படும். அந்த வேலையில் மலம் அள்ளும் தோட்டி வேலையும் அடங்கும்.

பார்த்திபனுக்கு இரத்தம் கொதித்தது. எரிமலைபோல் பொங்கி வழிந்தது. கர்னலையும் அவன் மனைவியையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திவிட்டுத் தானும் மாய்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆத்திரம் கொண்டான். மிகவும் சாதாரணக் குற்றத்திற்காக இப்படி வயிற்றில் அடித்துவிட்டானே என்று மனம் குமுறியது. ஆனால் கண்முன் வயதான பெற்றோரும் மனைவி மக்களும் நிழலாட கண்களில் கண்ணீர் பெறுகியது.

மறுநாளே பார்த்திபன் இராணுவச் சிறையில் அடைக்கப்பட்டான். அவனுக்கு மலம் அள்ளும் வேலை பணிக்கப்பட்டது. நரக வேதனையை அனுபவித்தான். இந்த மாதம் பாதி சம்பளமே கிடைக்கும் என்று எண்ணியபடி சிறையில் படுத்திருந்தான்.

கர்னல் தன் அன்பு மனைவியிடம் “பார்த்திபனுக்கு கடுமையான தண்டனை கொடுத்துவிட்டேன்… பதினைந்து நாட்களுக்கு சம்பளம் பிடித்தம். வேலை என்ன தெரியுமா? மலம் அள்ளும் வேலை. நம் வீட்டுக்கு வருவான்” என்று எக்காளமாய் சிரித்தான் கர்னல். கர்னல் மனைவி மிகவும் மகிழ்ந்தாள்.

உடனே கணவனிடம் “இதை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்… சினிமாவுக்குப் போகலாம்… சாப்பாடு வெளியில்… போகலாமா?” என்றாள் கர்னல் மனைவி.

“பாட்டல் இருக்கா…”

“ஓ… இருக்கே…”

இருவருமே நன்றாகக் குடித்துவிட்டு எர்ணாக்குளம் கிளம்பினார்கள். ஜீப்பை கர்னல் ஓட்டிக்கொண்டு வந்தான். அவன் அருகில் கர்னல் மனைவி. குழந்தைகள் வீட்டிலேயே கார்டூன்பார்க்க நின்றுவிட்டார்கள்.

விடியற்காலை எங்கும் பரபரப்பாகக் காணப்பட்டது. பார்த்திபன் அலுவலக கக்கூசைக் கழுவிக் கொண்டிருந்தான். ஒரு சிப்பாய் ஓடிவந்து.

“பார்த்திபா… விஷயம் தெரியுமா? கர்னலும், கர்னல் மனைவியும் ஜீப்பில் போகும்போது இரும்பு பாலத்தில் எதிரில் வந்த லாரி மேல் மோதி பலத்த காயங்களுடன் இராணுவ மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளார்களாம்… காலையில் தான் தெரியுமாம்…”

பார்த்திபனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“என்னப்பா சொல்கிறாய்… நம்ம கர்னலா” என்றார் பார்த்திபன்.

“ஆமாம் பார்த்திபா… போன வருஷம் என்னையும் இப்படித்தான் பழிவாங்கினான். இந்த ஆண்டு நீ. பாவத்துக்குத் தண்டனை கிடைத்து விட்டது…”

மற்றொரு சிப்பாய் வந்தான்.

“தெரியுமா … கர்னலின் வலது கை துண்டித்து எடுத்துவிட்டார்களாம்… கர்னல் மனைவிக்கு இன்னும் சுய நினைவு வரலையாம். அவனால் பழிவாங்கப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா? பார்த்திபா நம்ம ரெஜிமென்ட் பூரா இதே பேச்சுதான் பாவத்தின் தண்டனையை இறைவன் உடனே கொடுத்துவிட்டானே” என்றான்.

பார்த்திபன் அப்படியே உறைந்துபோனான்.

நன்றி: உப்புநீர்ப் புன்னகை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *