நேற்றிரவு தண்ணி அடித்து விட்டு பட்டினப்பாக்கம் டூ மந்தைவெளி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டு இருந்தான் டமாரு. ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகதான் வாந்தி எடுத்திருந்தான். மாவா போட்டிருந்ததால் அது கடைவாயில் ஒழுகி சட்டையை கறையாக்கி இருந்தது. ஏர்டெல் ஆபீஸை தாண்டியதுமே கொஞ்சம் இடதுபுறம் திரும்ப வேண்டி இருந்தது. மப்பு அதிகமானதால் க்ளர்ச்சுக்கு பதிலாக ப்ரேக்கையும், ப்ரேக்குக்கு பதிலாக ஹார்னும் அடித்து தலைகுப்புற விழுந்தான்.
அப்படியே ஓரக்கண்ணால் ரோட்டைப் பார்த்தான். பட்லிஸ் ஏதாவது பார்த்துவிட்டால் மானம் போய்விடும் என்ற பயம் வந்தது. ‘கபாலீஸ்வரா’ என்று போதையில் பினாத்திவிட்டு, தள்ளாடியபடியே எழுந்து, வண்டியை எட்டி உதைத்துவிட்டு தூக்கினான். மணி எட்டேமுக்காலை தாண்டி இருந்ததால் ரோட்டில் பட்லிஸ் நடமாட்டம் இல்லை. காய்கறி விற்றுக்கொண்டிருந்த சப்பை பட்லிஸ் மட்டும் அவனை சைட் அடித்தது. டமாரும் பதிலுக்கு திருப்பி சைட் அடித்தபோது அவன் அட்டு முகத்தை வெளிச்சத்தில் பார்த்த பட்லிஸ் தூவென காறி உமிழ்ந்தது. அவனது பேண்ட் பாக்கெட்டில் வாட்டர் கலந்து வைத்திருந்த குவார்ட்டர் பாட்டில் ஒன்று சாலையில் கிடந்தது.
எடுத்துக்கொண்டு திரும்பும்போது வேகமாக ஒரு தெருநாய் அவனை நோக்கி கொலைவெறியோடு ஓடிவருவதை பார்த்தான்.
நாய் ஓடிவந்த வேகத்தைப் பார்த்த டமாருக்கு, அது அவனது கிட்னியையே கவ்வி விடுமோ என்ற பயத்தை கொடுத்தது. எப்போதும் நாயை அடிக்க பாக்கெட்டில் கல் வைத்திருப்பது டமாருவின் பழக்கம். அன்று கல் ஸ்டாக் இல்லை. போதையில் வாய் குழற முண்டகக் கண்ணியம்மா என்று பினாத்திக்கொண்டே அருகில் இருந்த கல்லை எடுத்தான். கல்லை கண்டதும் நாயை காணோம். போதை சுத்தமாக இறங்கிவிட அருகிலிருந்த ஒயின்ஷாப்புக்கு மீண்டும் வண்டியை விட்டான் டமாரு.
பின்பு வண்டி ஓட்டும்போதுதான் எங்கெங்கு எல்லாம் அடிபட்டு இருக்கும் என்பதை உணரதொடங்கினான். கிண்ணியிலும், முட்டியிலும் லேசாக வலித்தது. போதை லைட்டாக இருந்தது. தனியாக சென்று கொண்டிருந்ததால் பாக்கெட்டில் அமுக்கி வைத்திருந்த மாவா பாக்கெட்டை பிரித்து வாயில் போட்டான். பேச்சு துணைக்கு யாரும் இல்லாததால் ‘நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்று வாத்தியார் பாட்டை என்று முணுமுணுக்க தொடங்கினான். கொஞ்சமாக போதை ஏறியது.
“தண்ணி அடிச்சதால தான் கீழே விழுந்தேன்னு சொல்ல வரல. ஆனா தண்ணி அடிச்சா கீழே விழுந்துடுவேனோன்னு பயமாயிருக்கு” என்று அலைபாயுதே மாதவன் மாதிரி பினாத்த ஆரம்பித்தான். டமாரு காண்டாக இருக்கிற நேரங்களில அவனையும் மீறின ஒரு சக்தி, ஒரு தாகம் டாஸ்மாக்குக்கு அவனை அழைத்து செல்கிறது. ஒரு பீரோ, விஸ்கியோ அடித்து அந்த சக்தியை, அந்த தாகத்தை அந்த நேரத்துக்கு தணிக்கிறான்.
டமாரு எப்போதுமே இப்படித்தான். அவனைப் பொறுத்தவரை எப்போதும் டாஸ்மாக் திறந்திருக்கிறதா, மூடியிருக்கிறதா என்று ஒருநாளும் குழம்பியதில்லை. காந்தி ஜெயந்தி அன்றைக்கு கூட ஸ்டாக் வாங்கிவைத்து ரெடியாக இருப்பான். அதுக்காக அன்றைக்கும் ஒயின்ஷாப் ப்ளாக்கில் திறந்திருந்தால் அங்கும் ஒரு குவார்ட்டர் வாங்காமல் இருந்தது இல்லை. ஓசியில் யாராவது சரக்கு வாங்கி கொடுக்க கூப்பிட்டாலும் சரி, கூப்பிடாவிட்டாலும் சரி டமாரே அவர்களோடு போவது உண்டு. டமாரு விஸ்கிதான் சாப்பிடுவான், அதற்காக பீர் அடிப்பவர்களை பார்த்து போதை ஏறுமா என்று ஒருநாளும் அவன் கேட்டது இல்லை. ஒரு கட்டிங் வாங்கி மிக்ஸ் பண்ணி கொள்ளுங்கள் என்று சொல்வதும் இல்லை.
அவனுக்கு தோன்றினால் எப்போதாவது ஜோதி தியேட்டருக்கோ, போரூர் பானு தியேட்டருக்கோ தியேட்டருக்கோ அல்லது சாந்தி தியேட்டருக்கு பக்கத்தில் இருக்கும் காபரே கிளப்புக்கோ செல்வதுண்டு. சரக்கடித்தால் தான் போதை என்ற எண்ணம் வந்தால் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள திருசூலம் டாஸ்மாக், கடல் ஓரத்தில் அமைந்திருக்கும் முனியம்மா சுண்டக்கஞ்சி ஷாப் போன்ற வித விதமான லொகேஷன்களுக்கு ஊறுகாயோடு சென்று விடுவான்.
சரக்குக்கு சைட் டிஷ் வாங்குவதை விட பக்கத்தில் குடிக்கும் குடிகாரர்களிடமிருந்து பொடிமாஸ்ஸோ, இரத்த வறுவலையோ ஆட்டையை போடுவது டமாரின் வழக்கம். ஆனால் பதிலுக்கு ஊறுகாய் கொடுத்து விடுவான். டாஸ்மாக்குக்கு சரக்கடிக்க போவது தப்பா இல்லையா என்று அவனை கேட்டால் தப்பில்லை என்றே சொல்லுவான். ஆனால் மிலிட்டரி சரக்கு வாங்கி வேறு ஒரு பாரில் போய் அந்த கடை சரக்கு வாங்காமல் உட்கார்ந்து அடித்தாலோ, அல்லது சரக்கடிக்காமல் பாரில் உட்கார்ந்து சைட் டிஷ் மட்டும் சாப்பிட்டாலோ அதை கண்டிக்கும் முதல் ஆளும் டமார்தான்.
”ரெண்டு ரவுண்ட் உள்ளப்போனா சுத்தியிருக்குறவன் பேசுற பேச்சுலேர்ந்து, உட்கார்ந்திருக்கிற இடம் வரைக்கும் எதுவுமே விளங்கப்போறதில்லை. இதுல என்ன கருமத்துக்கு ‘நான் த்ரீ ஸ்டார் பார்லதான் குடிப்பேன்’னு சிலபேர் வீராப்பா இருக்கானுங்கன்னு தெரியலை. அதே சரக்கு… அதே பாட்டில்… விலை மட்டும் மூணு மடங்கு. அட மடப்பயலுகளா… நானாவது போதையேத்திக்கிட்டு என்னை மறக்குறேன். இவனுங்க போதையேத்தப் போகும்போதே உலகத்தை மறந்து போறானுங்களே.. காசை கரியாக்காதீங்கடா கசுமாளங்களா”
”சரக்கு அடிச்சா போதை வரும். இன்னும் எவ்வளவு அடிச்சாலும் ப்ளாட் ஆகமாட்டோம்ங்குற தன்னம்பிக்கை வரும். அடக்கம் வரும். இங்க்லீஸ் வரும்”
”இந்த ஊரு உலகமே உன்னை சந்தோஷமா இருக்க விடாம அமுக்குது. எவனுக்காச்சும் உன்னோட சந்தோஷத்தைப்பத்தி கவலை இருக்கா. எல்லாரும் அடுத்தவனை ஏறிமிதிச்சுக்கிட்டு ‘போடா ங்கொய்யால’னு போறான். அப்புறம் என்னை ……த்துக்கு நீ உலகத்தைப்பத்தி கவலைப்படனும். தவிர உன்னை சந்தோஷமா இருக்கவிடாம செய்யிறதுதானே ஊரு, உலகத்தோட நோக்கம். நீயும் அழுதுகிட்டே இருந்தியன்னா அந்த நோக்கம் நிறைவேறிடும்ல… ஆகக்கூடி நான் சொல்ல வர்றது என்னன்னா, வாழ்க்கையைக் கொண்டாடு தலைவா. டாஸ்மாக் வாழ்க”
இதெல்லாம் டமாருவின் போதை நேரத்து தத்துவ தரிசனங்கள். தற்சமயம் டமாருவை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி, பச்சை போர்டு கடை, (அனிதா பார் எதிரில்) கடை எண் 887, திருவல்லிக்கேணி ஹை ரோடு.
– அக்டோபர் 2009