கிராமத்தில் மழையும், மின்வெட்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 7,061 
 

சட சட என்று ஆரம்பித்த பெரும் தூறல், சில நொடிகளில் மண் தரையை நீர்த் தரையாய் மாற்றியது. நீரின் ப‌ள‌ப‌ள‌ப்பில் நில‌ம் மின்னிய‌து.

“ஏலேய், சின்னச்சாமி … தூத்த பெரிசா ஆரம்பிச்சிருச்சு, ஆட்டப் புடிச்சி கட்டுடா” என்று குர‌ல் விடுத்து, அங்குமிங்கும் திரிந்த கோழிகளை, ஒன்று திரட்டி கூடையிட்டு மூடினாள் கருப்பாயி.

கொல்லையில், நான்கு கல்தூண்களின் மேலே, வைக்கப் படப்பின் கீழ், ஆடுகளைக் கட்டினான் சின்னச்சாமி. ஆடுகள் சிலுப்பிக் கொண்டன.

“இந்தா, கோழி கூடைய‌ அப்ப‌டியே ந‌க‌ர்த்தி, வைக்க‌ப் ப‌ட‌ப்பு கீழ‌ வையி”

“எலேய் … எலேய் .. அங்க‌ பாரு, அந்த‌ சீம‌க் கன்னுக்குட்டி வெளிய‌ திரியுது. புடிச்சு கொட்டாயில‌ அடை.”

“ஏ ஆத்தா, உன‌க்கு கையி காலு ந‌ல்லாத் தானே இருக்கு. எல்லாம் நீ பாக்கலாம்ல‌. ஏன் என்னை போட்டு ப‌டுத்த‌றே. நாளைக்கு வேற‌ என‌க்கு பரிச்ச‌ இருக்கு” என்று ம‌ழையை விட‌ ச‌ட‌ச‌ட‌வென‌ விழுந்தான் பாட்டியிட‌ம்.

“பொல்லாத படிப்பு படிச்சு, நாட்டக் காக்கப் போறாரு தொர. மொதல்ல வீட்டப் பாருடா … அப்புறம் நாட்டப் பார்க்கலாம்” என்று திட்டுவ‌து போல‌ பாவ‌னை செய்தாள் கிழ‌வி.

“ப‌டிப்பு ப‌டிச்சு தான் நாட்ட‌க் காக்க‌ முடியமா என்ன‌ ?!! காம‌ராஜ‌ர் கால‌த்தில‌ இருந்து, இன்னிக்கு வ‌ரைக்கும் யாரு ப‌டிச்சுப்புட்டு நாட்ட‌க் காக்குறாக‌, ஏதோ அன்னிக்காவ‌து ம‌னுச‌த்த‌ன்மை கொஞ்ச‌ம் இருந்துச்சு, இன்னிக்கு அதுவுமில்ல சுத்த‌மா இல்ல‌. இதெல்லாம் நீ சொல்லித் தான எனக்கே தெரியும். நீ என்ன‌டானா …”

“ச‌ரி, ச‌ரி நின்னு பேசிக்கிட்டு இருக்காம‌, கன்னுக்குட்டிய‌ப் பாரு” என்று பேர‌னை விர‌ட்டினாள்.

அங்கிருந்து கன்று பல அடிகள் தள்ளி இருக்க, வைக்கோல் பிரித்து சிலவற்றை அள்ளி, தலைக்கு மேல் வைத்துக் கொண்டு, ஓட்ட‌மாய், ஹேய் ஹேய், உள்ளே போ, போ என்று க‌த்தி ஓ(ட்)டினான்.

மழையை ரசித்த கன்று, கொட்டாயினுள் செல்ல மறுத்து, கேள்விக் குறி போல வாலை வைத்துக் கொண்டு, அங்கும் இங்கும் துள்ளிக் குதித்து ஓடியது.

‘இப்படியே போனால் இன்னும் சில நேரத்தில் இருட்டி விடும், எப்படி பரிட்சைக்குப் படிப்பது’ என்று மனம் கேள்வியில் நனைய, உடல் மழையில் மொத்தமாய் நனைந்து போனது.

‘இந்த‌க் கிழ‌வியோட‌ பெரிய‌ ரோத‌னையாப் போச்சு, ஒரு நா தானே, வெளிச்சத்தில‌ ப‌டிக்க‌ விடுதா. ராத்திரில‌ விள‌க்கு வைக்க‌ ம‌ண்ணெண்ணை கூட‌ இல்லை, ரேஷ‌ன்ல‌யே ஒழுங்கா த‌ர‌மாட்டேன்கிறான், கேட்டா எங்க‌ளுக்கே ஒழுங்கா வ‌ர்ற‌தில்லைங்க‌றான். பாஸ் மார்க்காவது வாங்கணுமே !’ என‌ச் சிந்த‌னையில் ந‌னைந்தான் சின்ன‌ச்சாமி.

வீட்டின் முன், வேலியோடு இருந்த பின்ன‌ல் க‌த‌வை திற‌ந்து உள்ளே நுழைந்தார் ம‌ருத‌ப்ப‌ன். அவ‌ர் வ‌ய‌தோடு ஒத்த‌ சைக்கிளை, கூரையின் கீழ் நிறுத்தி, ‘எலேய் சின்ன‌ச்சாமி, இந்தா பரிச்சைக்கு படிக்கணும்னியே ” என்று தான் வேலை செய்யும் மில்லில் இருந்து, சில லிட்டர் க‌ட‌னாய் வாங்கிய‌ ம‌ண்ணெண்ணை த‌க‌ர‌த்தை ம‌க‌னிட‌ம் நீட்டினார்.

த‌லையில் இருந்த‌ கோணியை எடுத்து வேலியில் மாட்டினார். ‘ஆத்தா, சோற‌ப் போடு ப‌சிக்குது’ என்று வானொலியைத் த‌ட்டினார். ‘செய்திக‌ள் வாசிப்ப‌து …’ என்று கர கரவென ஆர‌ம்பித்த‌து வானொலி.

என்றும் போல் வெளியில் இல்லாம‌ல், இன்று ம‌ண்ணெண்ணை விள‌க்கொளியில் வீட்டினுள் உண‌வை முடித்தார். ப‌டிக்கும் ம‌க‌னை சில‌ நொடிக‌ள் பார்த்து ம‌கிழ்ந்தார். ம‌க‌னின் முக‌ம் பிர‌காச‌மாய்த் தெரிந்த‌து அவ‌ருக்கு.

வானொலிச் செய்தியின் இடையே, “தமிழகத்தில் தொடரும் கன மழையால், மேலும் மின்வெட்டு தொடரும் என அரசு தெரிவித்துள்ளது” என்ற‌ செய்தி இவ‌ர்களை(போன்றவர்களை) சிறிதும் பாதிக்க‌வில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *