கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 3, 2021
பார்வையிட்டோர்: 10,873 
 

வழக்கம் போல் லீலா இறைவனிடம், என்னைய ஏன் மனுஷ பிறவியா படைச்சீங்க. அதுவும் பொண்ணா எதுக்கு படைச்சீங்க. இந்த வீட்ல என் தம்பிக்கு இருக்குற ஃபிரீடம் கூட எனக்கு இல்ல. ஐ ஹாவ் நோ ஃபிரீடம்.

அப்பாவோ, மொபைல் யூஸ் பண்றதுக்கு ரெஸ்ட்ரிக்க்ஷன், ஃப்ரெண்ட்ஸ் கூட ஷாப்பிங் போறதுக்கு ரெஸ்ட்ரிக்க்ஷன், பைக்ல லாங் டிஸ்டன்ஸ் டிராவல் பண்றதுக்கு ரெஸ்ட்ரிக்க்ஷன்… இப்டி சொல்லிட்டே போகலாம்.

இதுல அம்மா வேற அப்பப்ப அத செய் இத செய், அத செய்யாத இத செய்யாதேன்னு டார்ச்சர். அய்யோ ச்சா…. என்ன லைஃப் இது. இங்க பாருங்க காட்(GOD), நீங்க என்ன செய்வீங்களோ அதெல்லாம் எனக்கு தெரியாது. அடுத்த ஜென்மம் ன்னு எனக்கு ஒன்னு இருந்தா தயவு செஞ்சு அதுல மனுஷியா மட்டும் என்னைய படைச்சுராதீங்க… ப்ளீஸ் என்று லீலா இறைவனிடம் வேண்டினாள்.

அப்போது லீலாவின் எதிரில் ஒரு குரல் எழும்பியது. ஏய் லீலா ! கண்களை திறந்து என்னை பார் என்றது அந்த குரல். லீலாவும் அந்த குரலை கேட்டவுடன் சட்டென்று கண்களை திறந்து பார்த்தாள்.

லீலாவிற்கு ஷாக் !

இறைவன் லீலாவின் முன் காட்சி அளித்தார்.

ஓ காட் ! நீங்களா……. என்றாள் லீலா ஆச்சர்யத்துடன்.

ஆம் நான்தான். நானேதான். உன்னை படைத்தவன். இவ்வுலகைப் படைத்தவன். எல்லா உயிர்களையும் படைத்தவன். படைப்பவன்….

ஓ வாட் எ சர்ப்ரைஸ் ! நான் புலம்பியது மேலோகத்தில் இருந்த உங்களுக்கு கேட்ருச்சா ?

ஆம் மகளே கேட்டது. நீ புலம்பியதும் கேட்டது. என் படைப்பை நீ குற்றம் கூறினாயே அதுவும் எனக்கு கேட்டது. யார் யாருக்கு எந்த பிறவியில் எந்த உருவத்தை கொடுக்க வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும். போனால் போகட்டும் என்று உங்களை (அதாவது மனிதர்களை) அழகான உடல் அமைப்பை கொண்ட மானிடப் பிறவியாக படைத்தால் நீங்கள் என்னையே குற்றம் கூறுகிறீர்களா…. யோசிக்க மூளையும், சிந்திக்க ஆறறிவையும் கொண்டு உங்களை படைத்தால் நீங்களோ,

மதம் என்ற ஒன்றை உருவாக்கி அதை வைத்து சண்டையிட்டீர்கள். சாதி என்ற ஒன்றை உருவாக்கி அதையும் வைத்து சண்டையிட்டீர்கள். நிறத்தை வைத்து சண்டையிட்டீர்கள். பணத்தை வைத்து சண்டையிட்டீர்கள். இப்போது உங்களை படைத்த என்னையே வைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இத்தனை ஆட்டங்கள் ஆடும் உங்களை பாவம் பார்த்து போனால் போகட்டும் என்று மனிதனாக படைத்ததற்கு யாராவது எனக்கு நன்றி கூறியது உண்டா ? நன்றி கூறியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். குற்றம் சொல்வதற்கு மட்டும் கூட்டம் கூட்டமாக வந்துவிடுவீர்கள்,

என்னை ஏன் ஆணாக படைத்தாய்….

என்னை ஏன் பெண்ணாக படைத்தாய்…

என்னை ஏன் ஏழையாக படைத்தாய்….

என்னை ஏன் கருப்பாக படைத்தாய்… என்று நீங்கள் என்னை குற்றம் கூறுவதை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். வர வர மனிதர்களின் தொல்லையை என்னால் தாங்க முடியவில்லை. இதில் நீ வேற ….

ஏதோ ஆங்கில வார்த்தையை சொல்லி என்னிடம் வேண்டினாயே. என்ன அது ?

ஏதோ ரெஸ்ட்ட் என்று ?

ஓ அதுவா… ரெஸ்ட்ரிக்க்ஷன் சுவாமி.

அப்படியென்றால் ?

அப்படியென்றால்… கட்டுப்பாடுகள் சுவாமி.

கட்டுப்பாடுகள். கட்டுப்பாடுகள் என்பது உங்களின் பாதுகாப்பிற்குத் தானே. பின்ன என்ன. உன் பெற்றோர்கள் உன்னை பாதுகாக்க தானே ஆசை படுகிறார்கள். அவர்கள் மீது ஏன் குற்றம் சொல்கிறாய் ?

என்ன சுவாமி… என் பேரன்ட்ஸ்கு சப்போர்ட் பண்றீங்க ? நான் வேண்டுனது நடக்குமா ? நடக்காதா ?

அதற்கென்ன மகளே ! உன் ஆசையை தாராளமாக நிறைவேற்றுகிறேன். அடுத்த ஜென்மத்தில் அல்ல. இந்த ஜென்மத்திலேயே. அதுவும் இந்த நொடியே என்று சொல்லி இறைவன் தன் விரல்களால் லீலாவின் கண் முன்னே சொட்ட் என்ற இசை வருமாறு சொடுக்கிட்டார்.

லீலா, என்ன சுவாமி சொடக்கு போட்ட உடனே மலை போல பெரிய உருவமா ஆயிட்டீங்க?

மகளே நான் மலையென உயரவில்லை. நீதான் துகளென சுருங்கிவிட்டாய்.

என்ன சொல்றீங்க சுவாமி ?

ஆம் ! சென்று கண்ணாடியில் உன் உருவத்தை பார்…

லீலா கண்ணாடியை நோக்கி தன் கால்களை நகர்த்த முயற்சி செய்தாள். அப்போது இறைவன் லீலாவிடம், மகளே உனக்கு தான் நான் பறக்கும் சக்தியை தந்துவிட்டேனே. பின்னே எதற்கு நடந்து செல்கிறாய். ஆங்கிலத்தில் பறப்பதற்கு ஃப்ளை தானே. ஃப்ளை மகளே ஃப்ளை என்றார் இறைவன். லீலாவும் தன் உடலை அங்கும் இங்கும் அசைத்து மெல்ல பறக்க ஆரம்பித்தாள்.

ஓ வாவ் ! சூப்பர் … என்னால பறக்க முடியுது. ஜாலி ஜாலி என்று ஆரவாரம் செய்து கொண்டே கண்ணாடி முன்பு நின்றாள்.

ஷாக் !

ஆஆஆஅஆ …… கொசு………

அய்யோ சுவாமி ! என்னைய எதுக்கு இப்டி கொசுவா மாத்துனீங்க ?

நீதானே மகளே என்னிடம் வேண்டினாய், எனக்கு மனித பிறவி வேண்டாம் என்று. பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது என்னுடைய வழக்கம்.

ஐயோ சுவாமி நான் கேட்டது அடுத்த ஜென்மத்துல. இந்த ஜென்மத்துல இல்ல. என்னைய மறுபடியும் பொண்ணா மாத்திடுங்க ப்ளீஸ்… ப்ளீஸ்…

இதோ பார் மகளே ! அப்படியெல்லாம் அடிக்கடி உருவத்தை மாற்ற முடியாது. சிறிது காலம் கொசுவாக வாழ்ந்து பார். அப்போதுதான் மற்ற ஜீவராசிகளின் கஷ்டம் என்னவென்று உனக்கு புரியும்.

அய்யோ சுவாமி ப்ளீஸ்……

ஸ்ஸ்ஸ்……… அமைதி. உன்னைப் போலவே ஒரு ஆண் மகனுக்கும் மனித பிறவி பிடிக்கவில்லையாம். நான் சென்று அவனை ஈசலாக மாற்றிவிட்டு வருகிறேன். பத்திரமாக இரு……

இறைவன் லீலாவின் கண்களை விட்டு மறைந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *