இரண்டு நாளாக சீதாப்பாட்டி கழகத்துக்குப் போகவில்லை. காலை வாக்கிங் கிடையாது. ஈ-மெயில்களை ஓபன் பண்ணவில்லை. சினேகிதக் கிழவிகள்கூட யாரும் வரவில்லை. பகலிலேயே மேஜை விளக்கைப் போட்டுக்கொண்டு ஒய்யாரமாகப் படுத்தபடி அவளுக்குப் பிரியமான ரீடர்ஸ் டைஜஸ்ட்டைப் படிப்பாளே, ஊஹ¥ம்… தபாலில் வந்த உறை பிரிக்கப்படாமல் டீபாய் மீது கிடந்தது.
சமையல் என்ற பெயரில் எதையாவது அலட்சியமாகச் செய்து வைப்பாளே, அதுவும் இல்லை.
பா.மு.க. நடத்தும் ‘எமர்ஜென்ஸி மீல்ஸ்’ பிரிவிலிருந்து காரியர் சாப்பாட்டை யாரோ கொண்டு வந்தார்கள்.
டெங்கு காய்ச்சல் வந்ததுபோல் பாட்டி முடங்கிக் கிடந்தாள்.
“ஏண்டி கிழவி, என்னாச்சுடி உனக்கு? ஒடம்புக்கு என்ன நோக்காடு, ரெண்டு நாளா என்னைக்கூட ஒரு திட்டும் திட்டாம இருக்கே?” என்றார் அப்புசாமி.
வெறுப்புப் பார்வையும், பெருமூச்சையும் வீசிவிட்டு, அவரது முகத்தையே பார்க்க விரும்பாதவளாக வேறு பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள் சீதாப்பாட்டி.
“ஏதாவது ஜுரமா? டாக்டர் வெங்கடேசனுக்கு போன் செய்யட்டுமா?”
“லீவ் மீ ப்ளீஸ்… உங்களைப் பார்க்காமல் இருந்தாலே என் உடம்பு குணமாகிவிடும்.”
“ஹ¥ம்! இந்தக் கொழுப்பு மட்டும் உன்னைவிட்டுப் போகாதே. நீ இருந்தா இரு, செத்தால் சாவு. இன்னாவோ டல் அடிச்சுக் கிடக்கறயேன்னு விசாரிச்சால் அலட்டிக்கிறியே…”
சீதாப்பாட்டியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. போர்வைக் குள்ளிருந்த அவள் தன் மனசுக்குள், ‘இ·ப் காட் பி வித் அஸ் ஹ¥ வில் பி அகய்ன்ஸ்ட் அஸ்’ என்று வின்செண்ட் பீலின் தன்னம்பிக்கைப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்: ‘கம் வாட் மே. ஹி வில் நாட் லெட்மி டெளன்.’
சுவாமி அலமாரியில் (அகல்யா சந்தானம் தனக்கு யாரோ கொடுத்ததாகக் கொடுத்த) ‘கீதா சாரம்’ வரிகளை நினைத்துக் கொண்டாள்.
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை நீ இழந்தாய்? எதற்காக அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய். அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக்கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாயோ, அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது.’
அப்புசாமி இறுதி எச்சரிக்கைபோல, “மாத்திரை கீத்திரை ஏதாவது வேணும்னா இப்பவே சொல்லிடு. யாத்திரை போனவுட்டு, மாத்திரை வாங்கித் தராம பூட்டானேன்னு நினைச்சிகினு சுத்தப்போறே…”
“கெட் லாஸ்ட்… எனக்கு என்னைப் பார்த்துக்கத் தெரியும்…” துப்பட்டியை வீசிவிட்டு பாட்டி வள்ளென்று விழுந்தாள்.
அப்புசாமி வெளியேறினார், சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தபடி.
கிழவிக்குப் பெரீசா ஏதோ நடந்திருக்குது. அவளுக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களுக்குத் தேர்தலிலே எதுனாப் புட்டுகிட்டிருக்கலாம்.
பா.மு.க.விலே அவளுக்கு ஏதாவது முக்குடைப்பு ஏற்பட்டிருக்கலாம்.
உள்ளபடிக்கே ஒடம்பு கிடம்பு, ஹார்ட் அட்டாக், ப்ளட் கான்ஸர் அப்படி இப்படின்னு டாக்டர் ரகசியமா எதுனா சொல்லியிருப்பாரோ?
இல்லே, வெறும் ஜலதோஷமாக்கூட இருக்கலாம். என்ன நோக்காடா இருந்தாலும் வாயை விட்டுச் சொல்லித் தொலைக்கலாமில்லியா. சே! சே! சே!
என்கிட்டே சொல்லிக்கிறது அவளுக்குக் கெளரவக் குறைச்சல். அதாவது நான் ஒரு முட்டாள், மண்டு, மக்கு, உதவாக்கரை, மூடம்… சொன்னால் புரியாது. புரிஞ்சுகிட்டாலும் உதவத் தெரியாது. ஆயிரம் குறுக்குக் கேள்வி கேட்டுப் புரிஞ்சுகொள்ளப் பார்ப்பேன். அது அவளுக்கு எரிச்சலாயிடும். அதைவிட இதுகிட்டே எதுவும் சொல்லாதிருக்கிறதே மேல்னு நினைக்கிறாள். இதுக்குப் பேர்தான்அகம்பாவம், அகங்காரம், தமிர்த்தனம், சண்டித்தனம்.
கிர்ரீச்!
ஸ்கூட்டர் அலறியது. நல்ல காலம், அவர்மீது ஸ்கூட்டர் ஏறவில்லை. ஸ்கூட்டர் மீதும் அவர் ஏறவில்லை.
அதிர்ச்சியிலிருந்து மீண்டு, தான் உயிரோடு இருப்பது உறுதியானதும், “அறிவிருக்குதாய்யா ஒனக்கு?” என்று ஸ்கூட்டர்காரர் மீது பாய்ந்தார். என்ன ஆச்சரியம், ஸ்கூட்டர்காரர், பெண்ணாகி விட்டார்.
“அங்க்கிள்! நீங்களா? அய்யய்யோ… வெரி வெரி ஸாரி மாமா.”
அப்புசாமி “ஹி! ஹி!” என்றார். ஸ்கூட்டரில் அவரை மோத வந்தது அகல்யா சந்தானம். பா.மு. கழகக் காரியதரிசியும் மனைவிக்கு மிகவும் வேண்டப்பட்ட தோழியுமான அகல்யா சந்தானம்.
“என் உசிரை வாங்கறதுன்னு கிளம்பினியாக்கும்? உன் பிரண்ட் சீதேக்கிழவி ஒருத்தி போதுமே அதுக்கு. நீ வேற உதவி செய்யணுமா?” என்றார் எரிச்சல் கலந்த சிரிப்புடன்.
“ரொம்ப ரொம்ப ஸாரி மாமா! பிரசிடெண்ட்ஜி வீட்டிலேதானே இருக்கிறாங்க? எப்படி இருக்காங்க? ரொம்ப அப்ஸெட்டாகி இருக்காங்களா? அவங்களுக்கு ஒரு நல்ல சேதி சொல்லத்தான் ஓடறேன்.”
‘ஏதோ விஷயம் இருக்கிறது. தெரிந்து கொள்ளாமல் விட்டுவிடக் கூடாது’ என்று அவர் மூளை சுறுசுறுப்பானது. “ஹம்மா! இடுப்பை ஒடிச்சுட்டியேடிம்மா படக்குனு!” என்றவாறு இடுப்பைப் பிடித்துக்கொண்டு வலியால் துடிப்பது போலச் சிறிது நடித்தார்: “அப்படி… அப்படி கொஞ்சம் நிழலிலே உட்கார்ந்துட்டுப் போறேன். அய்யோ! இடுப்பு! மனுஷனுக்கு இடுப்பு ஒடிஞ்சுட்டா அப்புறம் என்ன இருக்கு?”
“மாமா, மாமா… ஸாரி மாமா… ஐயோ நாம முதலிலே நர்ஸிங் ஹோம் எதுக்காவது போயாகணும்… ஸாரி மாமா… ஸாரி… ஸாரி… ஐயோ பிரசிடெண்ட்ஜிக்கு நான் என்ன பதில் சொல்வேன்.”
“என்ன சார் கல்ட்டா? ஆஸிடெண்ட்டா?” என்று ஒரு டிராபிக் போலீஸ்காரர் விசாரிக்க வந்தார்.
அப்புசாமி பெருந்தன்மையாக, “ஒண்ணுமில்லே சார். என் சொந்தக்காரங்கதான். பின்னாலே ஒட்கார்ந்து வந்தவன் தொபுகடீர்னு விழுந்துட்டேன்! ஹஹ! நல்ல டமாஸ்! நீங்க போங்க.
பாவம்…”
டிராபிக் கடுப்புடன். “கவர்மெண்ட்டு ரோடுலே கீழே வுழறது ஒனக்கு டமாஸாய்யா… சரி, சரி, கூட்டம் போடாதே. நவுரு… நவுரு… பீப்… பீப்… போங்கய்யா. இங்கென்ன டான்ஸா ஆடறாங்க” என்றவாறு நகர்ந்தார்.
“மாமா! சோடா வாங்கிட்டு வந்துடறேன்.” அகல்யா பதறினாள்.
“ஒண்ணும் வேண்டாம். நீ பதறாதேம்மா. எனக்கு ஒண்ணுமில்லே. என் கவலையெல்லாம் அவளுக்கு ஒண்ணும் ஆகக் கூடாதுன்னுதான்… அவளுக்கு என்னவோ நல்ல சேதின்னியே… என்னது?” வாயைப் பிடுங்கினார், தன் இடுப்பைத் தடவிக்கொண்டு.
“இருபது பர்சண்ட் கிடைச்சிடும். நான் கேட்டுண்டே வந்துட்டேன். பிரசிடெண்ட்ஜிக்குப் போதாத வேளையிலும் ஒரு நல்ல வேளை.”
“ஹ¥ம்… அவளுக்கு எப்பவுமே நல்ல வேளைதான். போதாத வேளையெல்லாம் எனக்குத்தான்.”
“மாமா! ஏற்கனவே பிரசிடெண்ட்ஜி நொந்து போயிருக்காங்க. மூணரை லட்சம் ஆச்சே! நல்லவேளை தடால்னு இழுத்து மூடிடலை. நான் அந்த ஆபீஸ் போயிட்டுத்தான் வரேன். திறந்துதான் இருக்கு. போலீசான போலீஸ். உள்ளே யாரையும் விடலை. மானேஜிங் டைரக்டரே வெளியே வந்து எல்லார்கிட்டேயும் பேசினார். மெச்சூர் ஆன தொகைகளுக்கு உடனே இருபது பர்சண்ட் கொடுத்துடறாங்களாம். மீதியை மாசா மாசம்னு ஒரு வருஷத்துலே தந்துடறாங்களாம். எழுதியே தரத் தயாராக இருக்காங்க… முழுசும் போச்சுன்னு பிரசிடெண்ட்ஜி இடிஞ்சி போயிட்டார். ஏதோ கொஞ்சமாவது வருதே இப்போ…”
“ஓகோ… அப்படியா சமாச்சாரம்! ஹஹஹ!” என்று சிரித்தார் அப்புசாமி: “என் இடுப்பு வலியெல்லாம் பறந்துட்டுதுடியம்மா! நான் போய் ஓட்டல்லே உடனடியா ரெண்டு, மூணு ஸ்வீட் சாப்பிடணும்.”
சற்று முன் இடுப்பில் அடிபட்டவர் போலிருந்த அப்புசாமி சுறுசுறுப்பாக எழுந்து விறுவிறுப்பாக நடந்து, ஏறக்குறைய ஒலிம்பிக் வேக நடையாளர் மாதிரி, ஓடாத குறையாக, உற்சாகத்துடன் புறப்பட்டது அகல்யாவுக்கு ஆச்சரியமாயிருந்தது.
“மாமா! நர்ஸிங்ஹோம்?” என்று கூறினி¡ள்.
“நர்ஸிங் ஹோம் இல்லே… ஈஸ்வரி லஞ்ச் ஹோம்தான். நீ போய்க்கோ. எனக்கு ஒரு உடம்பும் இல்லே…” அப்புசாமி பதில் கத்து ஒன்று கத்திவிட்டுத் தலை மறைந்தார்.
யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல, நிதி நிறுவனங்களில் ஓகோ என்று புகழோடு இருந்த ஒரு ·பைனான்ஸ் கம்பெனி தடாலென்று ஆட்டம் கண்டது. ஆயிரம் யோசனைகளுக்கு அப்புறம்தான் சீதாப்பாட்டி அதில் பணம் போட்டிருந்தாள். அதனுடைய டைரக்டர்களின் பட்டியலில் இல்லாத பெரிய மனிதர்களோ, தொழிலதிபர்களோ அனேகமாக இல்லை. சீதாப்பாட்டியின் விரல் நுனிகளுக்கு அவர்களுடைய டெலிபோன் எண்கள் மனப்பாடம்.
அப்படி இருந்தும் எல்லாரும் அமுக்கி வாசித்து விட்டார்கள். இருநூறு, முன்னூறு ரூபாய் வட்டிகள் கூடத் திரும்பி வருவதாக அவள் காதுக்குச் சங்கதி எட்டி, அவசரமாகத் தன் பணத்தை வட்டி நஷ்டமானாலும் பரவாயில்லை என்று முன்கூட்டியே எடுக்க விரைந்தால் – போர்டு அதுபற்றி நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக அவளிடம் அமைதியாக எம்.டி. கூறினார். “மேடம், உங்க பணத்துக்கு நான் பர்சனலாக காரண்டி. கவலைப்படாதீங்க” என்று அவர் சொன்னாரே தவிர ஒரு மாசமே ஓடிவிட்டது. கடைசியாக இரு தினம் முன்பு கிடைத்த தகவல்படி அவரும் ஓடிவிட்டார். முழுசாக மூன்றரை லட்சம் ரூபாய். பணம் போனதைவிட, தானும், சராசரி மனிதரைப் போல ஏமாந்து விட்டோமே என்பதுதான் அவள் மனசை மிகவும் வாட்டியது. எத்தனை பேர் அவளை கன்ஸல்ட் செய்வார்கள். தங்கள் பணத்தை எதில் முதலீடு செய்யலாம் என்று.
இப்போது குறி சொன்ன பல்லி கதவிடுக்கில் சிக்கிக்கொண்ட கதையாயிற்று.
அப்புசாமி இரவு வீடு திரும்பும்போது சில பல பார்சல்களுடனும், ஒரு பெரிய பூப்பொட்டலத்துடனும் உற்சாகமாக பீடாவை மென்றுகொண்டும் வந்தார். பீடா மட்டுமா வாயில்? ‘வராக நதிக்கரையோரம்’ பாட்டு. பாட்டு மட்டுமா, நடனமும்.
சீதாப்பாட்டி அப்போதுதான் மனசைத் தட்டி கொட்டி சமாதானப்படுத்திக் கொண்டு எழுந்திருந்தாள். ஒரு மினி வாக் காம்பவுண்டுக்குள்ளேயாவது போகலாமே என்று.
அப்புசாமி பூப்பொட்டலத்தை மனைவி மீது குறும்பாக வீசிப் போட்டார்: “சீதே! இன்னிக்குத்தாண்டி என் மனசுக்கு மஜா!”
சீதாப்பாட்டி பலவீனமாக அவரை ஏறிட்டுப் பார்த்தாள். உடம்பு சரியில்லாத அல்சேஷென் பார்க்கிற மாதிரி இருந்தது அவள் பார்வை.
“பார்த்தியா? இதெல்லாம் ஸ்வீட்ஸ்! சாப்பிடும்மே சாப்பிடு! ஒரு கிலோ வாங்கி வந்துட்டேன். அதோ அந்த பாக்கெட்டு ஐஸ்க்ரீம். கபகபன்னு முழுங்கு. நான் ஓட்டலிலேயே ரெண்டு கப் அடிச்சுட்டேன். சீதேக்குட்டி! சீக்கிரம் தலையை வாரி – ஓகோ, வாருகிற அளவுக்கு அங்கே ஒண்ணுமில்லையோ – சரி… சரி… அந்த சுண்டைக்காயை ஸ்டைலா முடிஞ்சிகிட்டு, பூவை வெச்சிகிட்டு, புறப்படு! நீயும், நானும் சேர்ந்தாப்பலே சினிமா பார்த்து எத்தினி யுகம் ஆகுது!”
சீதாப்பாட்டிக்கு முதலில் புரியவில்லை. வழக்கமான கிறுக்குத் தனத்தோடு ஏதோ உளறுகிறார் போலிருக்கிறது என்றுதான் நினைத்தாள். இதெல்லாம் வாங்க இவருக்கு ஏது பணம்? பீரோவை லூட் அடித்து விட்டாரா என்று அவசரமாக கீ பொசிஷனை செக்கப் செய்தாள். சாவிக்கொத்து அவளது இடுப்பிலேயேதான் இருந்தது. யார்கிட்டயோ கடன் வாங்கி இதெல்லாம் வாங்கி வந்திருக்கிறார். என்ன விசேஷமோ, குழப்பமோ… “எதற்கு இந்த செலிப்ரேஷன்? கொண்டாட்டம்?”
“சீதே! ரெண்டு தினுசுக் கொண்டாட்டம் இருக்கு. எலெக்ஷன்லே ஜெயிச்ச கட்சியும் படபடன்னு ராத்திரி பன்னெண்டு மணிக்குப் பட்டாசு வெடிப்பாங்க. தோற்ற கட்சிகூட வெடிப்பாங்க. தன்னைப் போலவே இன்னொரு கட்சியும் தோற்றுடுச்சீன்னாலும் வெடிப்பாங்க. நான் இப்போ அந்த ரகக் கொண்டாட்டம்தான் கொண்டாடறேன். மூணரை லட்சம் தாரவாந்து பூட்டுதானே?”
சீதாப்பாட்டி திடுக்கிட்டாள்: ‘ஓ, இவருக்குத் தெரிந்துட்டுதா?’ ஆனாலும் சமாளித்துக்கொண்டு, “என்ன பேத்தறீங்க? மூணுரையா, லட்சமா? ஐ கான்ட் அண்டர் ஸ்டாண்ட்” என்றாள்.
“உன் அகல்யா சந்தானம் எல்லாத்தையும் புட்டு வெச்சுட்டாள். அடியே கியவி, சிலதைச் சில காலம் சிலபேர் கிட்டேயிருந்து மறைக்க முடியும். ஆனால் பலதைப் பலகாலம் பலபேர்கிட்டேயிருந்து மறைக்க முடியாது… புரியுதா?”
சீதாப்பாட்டி பல்லைக் கடித்துக் கொண்டாள்: “நான் கொஞ்சம்கூட எக்ஸ்பெக்ட் பண்ணலை. ஆனால்… வந்து… வந்து… எம்.டி. பர்சனலா கியாரண்டி தந்திருக்கார். கழகப் பணம்னு சொல்லி வெச்சேன். கழகத்துமேலே எப்பவும் அவருக்கு ஒரு ஸா·ப்ட் கார்னர் உண்டு.”
“சா·ப்ட் கார்னரோ, பாரீஸ் கார்னரோ, லஸ் கார்னரோ… உன் நெற்றியிலே நல்லாக் குழைச்சுப் போட்டுட்டாங்க. உன் திமிருக்கு வேணும்டி… நல்லா வேணும். ஷேவ் பண்ணிக்க நான் அஞ்சு ரூபாய் காசு கேட்டாத் தரமாட்டே. இப்போ நல்லா வழிச்சுகிட்டுப் போயிட்டுது!”
சீதாப்பாட்டி பல்லைக் கடித்துக் கொண்டாள் : ‘வாழ்க்கையிலே இடறி விழும்போது பார்ட்னராயிருப்பவர் கைதூக்கி விடணும். ஆறுதல் சொல்லணும். ஆனால் இவர் வேணும் குட்டிக்கு வேணும் சொல்லி ஸ்வீட் சாப்பிடறார். ஹ¥ இஸ் ஹி டு க்ரிடிஸைஸ் மி.’
“இன்னாடி! என் பணம்! நான் எப்படி வேணும்னாலும் செலவு செய்வேன்னு சொல்றியா? பெரிய மெஜாரிட்டியிலே ஆளும் கட்சி இருந்தாக்கூட, எதிர்க்கட்கிகாரன் கேள்வி கேட்கத்தான் கேட்பான். அவனுக்குப் பதில் சொல்லித்தான் ஆகணும். அதுதாண்டி நீதி ஆட்சி! கேட்கிறேனில்லே… சொல்லு… என்னைக் கேட்காம ஏண்டி அவ்வளவு பணத்தைக் கொண்டு அதிலே போட்டே?”
சீதாப்பாட்டிக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. ஏதாவது அமைச்சராக இருந்தால், “இந்த விபத்துக்குப் பொறுப்பேற்று இதோ ராஜினாமா செய்கிறேன்” என்று ராஜினாமாக் கடிதம் அனுப்பிவிடலாம். (மேலிடமும், அதெல்லாம் ஏத்துக்க முடியாது. இவ்வளவு திறமையான உங்களை இழக்க முடியாது. உங்க இடத்திலே வேறு யாராவது இருந்திருந்தால் இன்னும் பத்து விபத்து நடந்திருக்கும். ஆகவே நீங்கள் இருக்கத்தான் வேணும் என்று சொல்லி இருக்கும்!)
“தப்புதான்!” என்றாள் சீதாப்பாட்டி வேறு வழியில்லாமல் : ‘சே! என்ன ஒரு ஹ¤மிலியேஷன்! இவர்கிட்டே போய்ப் பேச்ச வாங்கற மாதிரி.’ “ஆனால் ஹி ஹாஸ் அஷ்யூர்ட் மி…”
“கத வுடாதேமே. அந்த ஆளுதான் என்னவோ தீவுக்கு ஓடிட்டான்னு பேப்பர்லே போட்டிருக்குதே… மூணரை லட்சத்தைத் தொலைச்சிட்டியேடி. பொறுப்புள்ள பொம்பிளையா நீ! தான் செய்யறது எல்லாமே சரின்னு கெருவம். அகம்பாவம். திமிர். ஒருத்தரை கலந்து ஆலோசிக்கிறதில்லை. கால்தூசி மாத்திரம்! என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டிருந்தியானால், ‘அடியே, நம்ம தெருவுலேயே பசவப்பா சீட்டு இருக்குது. அதிலே கொஞ்சம் போடு, அப்புறம் நம்ம ரசகுண்டு வேலை செய்யற ஓட்டல்காரருக்கு ஒரு லட்சம் வேணும்னு கெடந்து தவிக்கிறாராம். மாசம் பத்தாயிரமாத் திருப்பிடுவாரு, நானும் போய் ஓசியிலே நாஷ்டா தின்னுக்கலாமாம். இப்படியெல்லாம் நல்ல நல்ல எடத்தை வுட்டுட்டு… உங்க அப்பன் வூட்டு பணமாடி? அது இந்த வூட்டுப் பணம். மூணரை லட்சம்! அடேயப்பா! எத்தினி மசால் தோசை, எத்தினி பிளேட் வடை சாம்பார். அய்யோ… எப்பிடித்தான் மாரடைச்சு நீ சாவாமல் இருக்கியோ…”
சீதாப்பாட்டி கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டாள்.
“இந்த மாய்மாலமெல்லாம் வேணாம்.” அப்புசாமி கத்தினார். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு நன்றாக ஓட்டு ஓட்டென்று ஓட்டிவிடத் திட்டமிட்டுத்தான் சண்டையைத் துவக்கினார்: “இங்கே பாருடி! ஒரு பாலம் இடிஞ்சு விழுந்தால், தேசிய நஷ்டம்கிற மாதிரி, இந்த மூணரை லட்ச ரூபாய், நம்ம வீட்டுக்கு ஏற்பட்ட பொது நஷ்டம்! நீதான் இதுக்குப் பொறுப்பு. வாய் கிழியுதே மீதிக்கெல்லாம். இதுக்கு இன்னாடி சொல்றே! சரி வுடு! எனக்கு நீ ஒண்ணியும் தரவேண்டாம். எதுனா ஒரு அநாதை விடுதிக்காவது இந்தப் பணத்தைக் குடுத்திருக்கலாமில்லே. இல்லியா ஒரு நூறு ஜோடிக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிருக்க… வேணாம் வேணாம்… கல்யாணம் பண்ணி வைக்க வேணாம். அப்புறம் சீமந்தம் பண்ணி வை, பிரசவம் பண்ணி வைன்னு தகராறு வரும்… சரி. ஒரு ஆஸ்பத்திரிக்குக் குடுத்திருக்கலாம்.”
சீதாப்பாட்டிக்கு என்ன பதில் சொல்வதென்று கொஞ்ச நேரத்துக்குத் தெரியவில்லை. மனைவியைத் தோற்ற மகாபாரத தருமர் மாதிரி இடிந்து போய் விட்டாள்.
“ஐ டு அக்செப்ட்…” என்று முணுமுணுத்தாள், அவருக்குச் சமாதானம் சொல்வதுபோல.
“ஹ¥ம்… திமிருடி! புருஷன் என்னைப் போலச் சாதுவா அமைஞ்சிட்டால் பொண்டாட்டிக்காரிங்களக்கு இளக்காரம். புருஷன் பாதி அசடாயிருந்தால் இவுங்க ஒண்ணரை அசடு பண்ணிடுவாளுங்க. அவன் லட்சக்கணக்கில்
சம்பாதிக்கிறவனாயிருந்தாக்கூட என்ன சொல்லிப்பாளுங்க ‘அவருக்கு என்னத்தைத் தெரியும். பணம் சம்பாதிக்கிற மிஷினு! வேறு எதுக்கு லாயக்கு?’ அப்படீம்பாங்க. அவன் சம்பாதிக்கிற பணத்திலே ஆயிரத்திலே ஒரு பங்கு சம்பாதிக்க யோக்கியதை இல்லாதவங்க, அவன் பணத்தை வாரி வாரிச் செலவு செய்துவிட்டு, அவனைப் புழு மாதிரி மதிக்கிறது. நேரம் கழிச்சு வந்தால் அவனே சோறு எடுத்துப் போட்டுகிட்டுச் சாப்பிடணும். ஒருநாள், ஒரே ஒருநாள் நீ எனக்கு ராத்திரியிலே சோறு பரிமாறி இருக்கிறியாடி? புருஷனை மதிக்கலைன்னா, இப்படித்தான் புட்டுக்கினு போகும்… மகா மேதாவின்னு நினைப்பு! தூத்!”
அப்புசாமி அருகிலிருந்த டீப்பாயை எட்டி உதைத்துவிட்டு வெளியேறினார். வெளியிலே கோபம். உள்ளுக்குள்ளே பரம சந்தோஷம். கிழவியை நல்லா வுடு வுடுன்னு வுட்டாச்சு! ஆசைதீர அவளைத் திட்டியாச்சு! எதிராளி இஷ்டிராங்கா இருந்தால், அவன் எடறி வுழறப்போதான் மேலே வுழுந்து அமுக்கணும்… ஹஹஹ!
சீதாப்பாட்டி “ஆட்டோ!” என்று கூவினாள். வாசலுக்கு வந்து, கேட் அருகிலிருந்த அப்புசாமி, “ஏன், காருக்கென்ன ஆச்சு?” என்றார்.
“நான் லாஸ்ட் ஒன் வீக்கா ஆட்டோவிலேதான் போறேன். வர்ரேன். நாளையிலிருந்து பஸ்!” என்றாள்.
“என்னாச்சு?” என்றார்: “கார் கெட்டுத் தொலைஞ்சிடுச்சா?”
சீதாப்பாட்டி சோகமாகச் சிரித்தாள் : “பட்ஜெட் உதைக்கிறது. கட்டுப்படியாகலை. ஐ ஹாவ் லாஸ்ட் எவ்ரிதிங்… காரை எடுத்தால் பெட்ரோல் போட்டாகணுமே. பைசா இல்லை சார், பைசா இல்லை.”
“என்னாம்மே, இன்னாவோ ரீல் வுடறே” என்றார் அப்புசாமி.
“ரியலி!” என்றாள் சீதாப்பாட்டி : நான் ரைஸ்கூட இப்போ டிபார்ட்மெண்ட் ஸ்டோர்லே வாங்கறதில்லே. ரேஷன் ரைஸ்தான். உங்களுக்குத் தெரியுமோ? செர்வண்ட் மெய்டை நிறுத்தியாச்சு. நாளையிலிருந்து நான்தான் கிச்சன் பாத்திரம் தேய்க்கப் போறேன். வீடு பெருக்கப் போறேன்.”
“ஏண்டி கெயவி! நெஜமாவே இவ்வளவு பேஜாராவா ஆயிடுச்சி நம்ம பொருளாதார நிலை?” என்றார் அப்புசாமி சீதாப்பாட்டி கூறியதை நம்பமுடியாதவராக…
“அவ்வையார் பாட்டி என்ன சொன்னார். ‘ஆறிடு மேடும் மடுவும் போலாம் செல்வம்’னு சொல்லலையா? பணம்கறது ஆறு ஏற்படுத்துகிற மேடு மாதிரியும், பள்ளம் மாதிரியும்… என்ன மாதிரி உதாரணம் பார்த்தீங்களா! ஹெள நைஸ்… இன்னும் சில வாரத்திலே நம்ம பொசிஷன் பாவர்ட்டி லைனை – ஐ மீன் வறுமைக் கோட்டை டச் பண்ணினாக்கூட நோ வொண்டர்!”
“சீதேய்! இன்னாடி சொல்றே?”
“ஐ’ ம் நாட் எக்ஸாஜரேட்டிங்,” என்றாள் சீதாப்பாட்டி : “·பிக்ஸட் டெபாசிட்லே வருகிற இன்ட்டரெஸ்ட் பணத்தை வெச்சுகிட்டுத்தான் நம்ம வண்டி இத்தனை நாள் ஓடிகிட்டிருந்தது. இப்போ லம்ப்பா ஒரு அமெளண்ட் போயிட்டதாலே பெரிய ஸெட்பேக்…”
சீதாப்பாட்டி குரலைத் தாழ்த்திக் கொண்டாள். கணவனின் கையை எதிர்பாராத விதமாகப் பற்றிக் கொண்டாள்.
அப்புசாமிக்கு நினைவு தெரிந்து சீதாப்பாட்டி அவரது கையை அவ்வளவு நேரம், அவ்வளவு இறுக்கிப் பிடித்துக் கொண்டதில்லை: ‘ஒரு முப்பது நாற்பது வருஷத்துக்கு மின்னாடி இப்படிப் பிடிச்சிருந்தியானா… இன்னாமா இருந்திருக்கும்… பரவாயில்லை… இத்தனை வயசு கழிச்சுப் பிடித்தாலும் கிளுகிளுப்புக்குக் குறைச்சலில்லே…’ என்று நினைத்துக் கொண்டார்.
சீதாப்பாட்டியின் தொண்டை கரகரத்தது: “நான் பெரிய ப்ளண்டர்தான் பண்ணிட்டேன். நீங்க ஹெல்ப் பண்ணினாத்தான் இந்த மெஸ்ஸிலிருந்து நாம வெளியே வர முடியும். ஹெல்ப் பண்றேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க…”
“சீதே! நான் என்னடி பண்ணுறது! வீடு பெருக்கச் சொன்னே. பெருக்கிக்கிட்டிருக்கேன்.”
“நான் டிஷ்ஷஸையெல்லாம் வாஷ் பண்றேனே… துணிகளை நானே துவைக்கறேன். பஸ்ஸிலே போகப்போறேன். எகனாமிக் டிரைவ் இன் ஈச்அண்ட்எவ்ரி பாஸிபிள்வே. ஆனாலும் நீங்க மனசு வெச்சா நம்ம குடும்ப கெளரவத்தைக் காப்பாத்தலாம்.”
மனைவியின் கையை அப்புசாமி தடவிக் கொடுத்தார்: ‘நல்லாப் பட்டு மாதிரிதான் இருக்குது… கெழவி சரியான வாடாத ரோஜாய்யா…’ என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.
“நான் அந்த ·பைனான்ஸ் கம்பெனிக்குத் தினமும் போய் அரிச்சு எடுத்துஅவுங்களைச் சம்மதிக்க வெச்சுட்டேன். நீங்கதான் ஓ.கே. சொல்லணும்…”
“நானா?… எதுக்கு ஓகே சொல்லணும்?” என்றார்.
சீதாப்பாட்டி சொன்னாள்: “நான் அந்த எம்.டி.யோட பிரதரைப் பார்த்து காச்ச மூச்சுனு கத்தினதிலே அரண்டு போயிட்டாரு. எனக்கு இன்ட்டரெஸ்ட்டும் போச்சு… முதலும் போச்சு… எப்படி நான் இந்த ஓல்ட் ஏஜிலே குடும்பம் நடத்தறதுன்னு ஒரு புடி புடிச்சேனா? அப்புறம் கேட்டுட்டேன். ‘நீங்க வட்டி தராட்டாப் போகுது. எங்க வீட்டுக்காரருக்கு உங்க கம்பெனியிலே ஒரு வேலை போட்டுக் குடுங்க. மாசம் நாலாயிரமோ ஐயாயிரமோ குடுத்தாலும் போதும்’ அப்படீன்னேன். ‘சரி’ன்னு ஒப்புக்கொண்டுட்டார்கள்.”
“இன்னாமே! அவுங்களே டுபாக்கோல் ஆயிட்டாங்க! எனக்கு எப்படி வேலை தருவாங்க?” என்றார் அப்புசாமி.
“கம்பெனியை அவர்கள் ஷட் டெளன் பண்ணலையே. திறந்துதான் இருக்கு. இட் இஸ் ·பங்ஷனிங். ஏ.ஸி. இருக்கு. இருபத்தெட்டு ·பேன் சுத்தறது. எவ்ரி திங் இஸ் ஓகே. எக்ஸப்டிங் ரீ·பண்ட் ஆ·ப் மணி. கம்பெனி அஸெட்ஸ் எங்கெங்கே இருக்கு, எது எதிலே இன்வெஸ்ட் பண்ணியிருக்காங்கன்னு பெரிய லிஸ்ட்டே போட்டு ஒட்டியிருக்காங்களே. பழைய ஸ்டா·ப் சரியா வேலை செய்யலைனு பலபேரை அனுப்பிச்சிட்டாங்க… உங்களுக்கு ஸிக்ஸ் தெளஸண்ட் தரச் சம்மதிச்சாச்சு.” என்று பாட்டி விவரித்து முடித்தாள்.
“நாஷ்டா?” என்றார் அப்புசாமி: “அவுங்களே மத்தியான்னம் வாங்கித் தந்துடணும். கண்டிஷனை ஒப்புக்கிட்டா நான் ரெடி!”
‘நாட் ஒன்லி நாஷ்டா… எவ்ரி ·போர் அவர்ஸ¤க்கு ஒரு காபி ஆர் டீ.”
“அடேங்கப்பா! இதுக்கு மேலே எனக்கு இன்னாடி வேணும்? நாளைக்கு எத்தினி மணிக்கு அய்யா கிளம்பணும், சொல்லு.”
கதகளி ஆட்டக்காரருக்கு மேக்கப் செய்வது போல சீதாப்பாட்டி அப்புசாமிக்குப் பிரமாதமாக மேக்கப் செய்தாள். புது சட்டை.
“திஸ் இஸ் பீட்டர் இங்லண்ட்!” என்று சட்டையின் பெருமையை சீதாப்பாட்டி சொன்னாள்: “ரொம்ப காஸ்ட்லி. முதல் முதல் கெளரவமான ஒரு வேலைக்குப் போகிறீர்களே…”
“சீதே! இத்தனை வருஷம் நாம குடித்தனம் பண்ணினது குடித்தனமில்லே. இனிமேல்தான் நம்ம குடித்தனம் ஆரம்பம்.”
“என் கண்ணும் இப்பத்தான் திறந்தது” என்று ஆமோதித்தாள் சீதாப்பாட்டி: “நீங்க வண்டி இழுத்துப் பத்து ரூபா சம்பாதிச்சுட்டு வந்தாலும் அதுதான் எனக்குத் திருப்தி. ஹண்ட்ரட் பர்சண்ட் ஹவுஸ் ஒய்·பாக இனிமேல் தான் இருக்கப் போறேன்.
“சீதே! நான் போய்ட்டு வர்ரேன். எவர் சில்வர் டப்பாவிலே ஆபீஸ் போறவங்களுக்குப் பொண்டாட்டிமாருங்க கட்டித் தருவாங்களே, அது மாதிரி ஒரு டப்பா தரக்கூடாதா?” என்றார் கெஞ்சலாக…
“நான் ரெடியா வெச்சிருக்கேனே…” என்று சீதாப்பாட்டி கணவனுக்கு ஒரு எவர்சில்வர் டப்பாவை அழகான பையில் போட்டுத் தந்தாள்.
“டாடா! சீரியோ! பைய்! எல்லாம் சொல்லு. நான் தெரு முனை திரும்பற வரைக்கும் உன்னைப் பார்த்துக் கொண்டே போவேன். அதுவரைக்கும் நீ வாசல்படியிலே நின்னுட்டிருக்கணும்.”
“அதைவிட எனக்கு என்ன சந்தோஷம்?” என்று பாட்டி சம்மதித்தாள். தெருமுனை திரும்பும் வரை கையாட்டிக் கொண்டே நின்றாள்.
பைனான்ஸ் கம்பெனிக்குள் அப்புசாமி கம்பீரமாக ராகுகாலம் முதலான சகல காலங்களும் பார்த்துக் கொண்டு நுழைந்தார்:
“வாங்கோ சார்… வாங்கோ வாங்கோ…” என்று ஏகப்பட்ட மரியாதையுடன் அவரைத் தனி அறையில் டைரக்டர் உட்கார வைத்தார்.
மேஜைமீது வண்ண வண்ணமாக ஏழெட்டு போன். ஒரு டெலிவிஷன். ஒரு ரெ·ப்ரிஜிரேட்டர்.
அப்புசாமி ·ப்ரிஜ்ஜைத் திறந்தார். இரண்டு கூல்டிரிங் பாட்டில்களை எடுத்து மேஜைமீது வைத்துக் கொண்டார்.
ஒன்றைத் திறந்து உறிஞ்சத் தொடங்கிய போது, ஆபீஸ் பையன் வந்து, “புது சார், யாரோ கஸ்டமர் வந்திருக்காங்க” என்றான்.
அப்புசாமி, “எனக்கு என்ன பேர் சொன்னே?” என்று சிரித்தார்: “புது சாரா? ஹஹ! புத்திசாலிப் பையனாக இருக்கியே! புதுமையான பேரா வெச்சிருக்கே… சரி… யாரோ வந்திருக்காங்கன்னு சொன்னியே. கொஞ்சம் இருக்கச் சொல்லு. இதை முடிச்சிடறேன்” என்று வேகமாக குளிர் பானத்தை உறிஞ்சத் தொடங்கினார்.
இன்னும் ஓர் அங்குல உயரத்துக்கு கூல்டிரிங்க் இருக்கும் போது தடாலென்று எதிர்பாராத விதமாக ஒரு முரட்டுக்கரம் அதைப் பிடுங்கிக் கீழே போட்டு உடைத்தது.
ஒரு கரம், இரண்டு கரம், ஏழெட்டு கரம், பத்துப் பதினைந்து கரம்… திமுதிமுவென்று ஏராளமான பேர் அவரது அறைக்குள் நுழைந்து நிரம்பினர்.
சிலர் ஓடிப்போய் ·ப்ரிஜ்ஜைத் தூக்கினார்கள். சிலர் டெலிவிஷன் பெட்டியைத் தூக்கினார்கள். சிலர் டெலிபோனை. ஒரு முரடன் அப்புசாமியைத் தூக்கிக் கீழே கடாசிவிட்டு நாற்காலியைத் தூக்கிக் கொண்டான். அப்புசாமிக்கு ஒன்றும் புரியவில்லை : “டேய்! டேய்! ரெளடிப் பசங்களா! எந்தப் பேட்டை ரெளடிங்கடா நீங்க… ஏன் இதையெல்லாம் தூக்கிட்டுப் போறீங்க. நான்… நான் புது சார்டா… உங்களை சும்மா வுட மாட்டேன்…”
“நீ வுடாதே! பொறுக்கி நாயே! நான் வுடறேண்டா ஒன் மூஞ்சியிலே!”
ஒரு முரடன் அப்புசாமியின் முகத்தைப் பார்த்து ஒரு குத்து விட்டான். மூக்கோ என்னவோ கழன்று கீழே தெறித்து விழுந்தது. நல்ல வேளை, மூக்கு இல்லை. பஞ்ச்சிங் மிஷின்தான்.
“போலீஸ்! போலீஸ்!” என்று அப்புசாமி கத்தினார்.
ஒரு தடியன் அப்புசாமியை அலக்காகத் தூக்கி தட்டாமாலை சுற்றிக் கீழே போட்டான்: “முப்பது லட்சத்தைச் சுருட்டிகிட்டு நாமம் போட்டது நீங்கள்தான். போலீஸைக் கூப்பிடறீங்களா போலீஸை…”
அப்புசாமியை எந்தச் சலவைத் தூளும் போடாமலேயே துவைத்து உலர்த்தி விட்டு முரட்டுக் கோஷ்டி வெளியேறியது.
ஆபீஸ் பையன் சாவதானமாக வந்து அறையைச் சுத்தம் செய்துவிட்டு அப்புசாமியையும் சுத்தம் செய்து சுவரோரமாக உட்கார வைத்தான் : “இப்படித்தான் புது சார்! கஸ்டமருங் தடால் தடால்னு படையெடுத்துத் தாக்கு வாங்க… ஆபீஸையும் ஒரேடியா மூட மாட்டேங்கறாங்க. வர்ர கஸ்டமுரங்களை சமாளிக்க முடியலை. ஸ்டா·ப்காரங்க ஆபீசுக்கே வர்ரதில்லை. நீங்க புதுசு போலிருக்கு.”
அப்புசாமி நொறுங்கி பொடிப் பொடியானவராக ஈனக் குரலில் ஆபீஸ் பையனிடம், “டேய்! ஒரு காபியாவது வாங்கிட்டு வா,” என்றார்.
“சார்! வெளியே தலைகாட்டினால் என்னைக் கொன்னே போட்டுடுவாங்க. பட்டினியே கிடந்துடுங்க” என்றான்.
அப்புசாமிக்கு அன்பு மனைவி சீதே கட்டிக் கொடுத்த தயிர் சாதம் நினைவுக்கு வந்தது.
எவர்சில்வர் டப்பாவை எடுத்துத் திறந்தார்.
உள்ளே ஒரு துண்டுக் காகிதம் மட்டுமே,
‘பிரிய கணவரே,
சாப்பிட்டீங்களா? ஐ மீன், கஸ்டமர்கள் வழங்கிய அன்பு அடிகளை!
யாராவது துன்பத்தில் இருக்கும்போது அதை மேலும் கிளறுகிற மாதிரி அவர்களிடம் பேசக்கூடாது. அவர்களுடைய ·பீலிங்ஸை ஹர்ட் பண்ணுகிற மாதிரி அப்போது பேசுவதில் ஒரு ப்ளெஷர் காண்பது மகா டிப்ளோரபிள். நான் சிபாரிசு செய்த வேலை நன்றாயிருக்கிறதா என்பதை வீட்டுக்கு வந்து சொல்லுங்கள். ஐ வில் பி வெய்ட்டிங் ·பர் யூ அட் த டோர் ஸ்டெப்ஸ்…
-யுவர்ஸ் லவிங் ஒய்·ப்,
சீதே.’
‘அடியே சீதே! படுபாவி! நான் உதை படணும்கறதுக்காகவே இந்த வேலையைச் சிபாரிசு செய்தாயா? சாப்பாட்டுக்கே லாட்டிரி என்கிற மாதிரியெல்லாம் நீ பேசியது நாடகமா?’ என்று பொருமினார்.
“புது சார்!” என்றான் ஆபீஸ் பையன் : “அடுத்த கோஷ்டி வரதுக்குள்ள கிளம்பிடுங்க சார்! நாளைக்கும் ஆபீஸ் வருவீங்களா சார்? எந்த வேலைக்குப் போனாலும் முதல் நாள் பார்த்துட்டு, மறுநாளும் போனாத்தான் ராசியென்பார்கள். உங்க சவுகரியம் எப்படி?”
“ரெண்டாம் நாள் வந்தால நல்லதுதான். மொத நாள் வேலையிலேயே ஒருத்தன் செத்துட்டான்னு வெச்சுக்கோ, அவனாலே ரெண்டாம் நாள் எப்படிடா ராஜா வர முடியும்…” என்றார் பலவீனமாக.
Ayioo sirippu thaanga mudiyala…