சர்வாதிகாரி ஹிட்லர் எழுதியதாகச் சொல்லப்பட்ட உலகெங்கும் பரபரப்பு உண்டாக்கிய – ரகசிய டயரிகள் கடைசியில் போலி என்று நிரூபிக்கப்பட்டது உங்களுக்குத் தெரிந்ததே…
ஆதாரம்: சர்வதேச செய்திப் பத்திரிகைகள்.
இதிகாச, புராண, சரித்திர பிரபலஸ்தர்களின் பர்சனல் டயரிகளை நான் படித்துப் பார்த்தது உங்களுக்குத் தெரியாததோ!
ஆதாரம்: விடியற்காலையில் நான் கண்ட கனவு.
“மடையா! மாற்றான் தோட்டத்து டயரிகளைப் படிப்பது மானம் கெட்ட செயல்” என்னைத் தூற்றாதீர்கள்.
இதிகாச புராண சரித்திரப் புள்ளிகள் எனது அதிகாலை சொப்பனத்தில், வரிசையாக க்யூவில் நின்று ஒவ்வொருவராக வந்து தங்கள் டயரிகளைக் கொடுத்துவிட்டுச் சென்றால் நான் என்ன செய்ய?
க்யூவின் முதலில் ‘காட்ராய் டெனிம்’ கால் சராயும் இம்போர்ட்டட் சிங்கப்பூர் பனியனும் அணிந்து கொண்டு நாகரிகமாக நின்றவர் தன்னை ‘ஆதாம்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.
வழக்கமாக இலை தழைகளால் முடிந்தவரை மறைத்துக்கொண்டு வரும் ஆதாம், இப்படி நாகரிகமாக வந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. வழியில் பர்மா பஜாரில் வாங்கினாராம்.
ஆதாம் கொடுத்த டயரி ஈடன் தோட்டத்து ஆப்பிள் மர இலைகளால் தயாரிக்கப்பட்டிருந்தது. பேச்சுத் துணை என்று பார்த்தால் ஆதாமுக்கு பாவம், அந்தக் காலத்தில் ஏவாளை விட்டால் வேறு எவரும் கிடையாததால் டயரியின் எல்லாப் பக்கங்களிலும் ஏவாளைப் பற்றியே எழுதவேண்டிய நிர்ப்பந்தம்…. ஏவாளைச் சந்தித்தது, அவளோடு பேசியது, பழகியது என்று டயரியின் முதல் நூறு பக்கங்கள் சுவாரஸ்யமில்லாமல் வளவளவென்றிருந்தது.
அதற்குப் பிறகு வந்த அறுபது பக்கங்கள் அடல்ட்ஸ் ஒன்லி … (‘நேற்றிரவு ஏன் திடீர்னு கேனத்தனமா சிரிச்சீங்க?’ என்று மறுநாள் என் மனைவியின் கேள்வி…) இப்படிச் சுவையாக ஆரம்பித்த ஆதாமின் டயரியில் நூத்தி எண்பத்தெட்டாவது பக்கத்திலிருந்து சோகம் தட்ட ஆரம்பித்தது. நூத்தி எண்பத்தெட்டாவது பக்கத்தில், தான் ஏவாளை யானை, சிங்கம், குதிரை சாட்சியாகத் திருமணம் செய்து கொண்ட குறிப்பு!
இதிலிருந்து ஆதாம் வாசகங்களைப் படிக்கிறேன், கேளுங்கள் …
பக்கம் – 204: “நமக்கென்று பிறந்த வீடு என்று தனியாக ஒன்று கிடையாதுடி என்று எவ்வளவு முறை சொன்னாலும் இந்த ஏவாளுக்கு ஏனோ புரியவில்லை. என்னிடம் கோபித்துக்கொண்டு ‘இப்பவே பிறந்த வீட்டுக்குப் போகிறேன்’ என்று அழிச்சாட்டியம் செய்கிறாள் ஏவாள்.”
பக்கம் – 350: எவ்வளவுதான் சிரமப்பட்டு வேட்டையாடி உணவுக்கு விலங்குகளைக் கொண்டுவந்தாலும் இந்த ஏவாளுக்குத் திருப்தி என்பதே இல்லை. உங்களைப்போய் நான் வேட்டைக்கு அனுப்புறேனே… என் தலைவிதி – இப்படி நான் எது செய்தாலும் ஏவால் ஏதாவது ‘நொள்ளை சொள்ளை’ கூறுகிறாள்.
என்னிடம் டயரிகளைக் கொடுத்த ஆதாமைப் பார்த்தேன்…… கணவன் மனைவி தகராறு கற்காலத்திலும் உண்டு என்பதை அவனது வாடிய முகம் தெளிவுபடுத்தியது … மாமியார் வேறு இருந்திருந்தால் ஏவாளுக்கும் அவளுக்கும் யுத்தம் வேறு நடந்திருக்கும்…. இவர்களைச் சமாதானப்படுத்தவே நேரம் இல்லாமல் போய் ஆதாமுக்கு டயரி எழுதவே நேரம் கிடைத்திருக்காது!
ஆதாமுக்குப் பிறகு க்யூவில் அட்டகாசமாக வந்தவர் விஸ்வாமித்திரர்…
“பாலகா…. சிறிது நேரம் தவம் செய்யப் போகிறேன் டயரியைப் படித்து முடித்துவிட்டு எனது தவத்தைக் கலைத்து என்னை எழுப்பு” என்று கூறிவிட்டு டயரியை என்னிடம் ஒப்படைத்துவிட்டு கௌசிகர் கண்களை மூடினார்… என்ன அவஸ்தை இது…..
விஸ்வாமித்திரரின் தவத்தை நான் எப்படிக் கலைப்பது… க்யூவில் ஹிட்லர் மேனகை வேறு இல்லையே என்று எண்ணியவாறு டயரியைப் படிக்க ஆரம்பித்தேன்… ஹரிச்சந்திரன், தசரதர், ராமர், திரிசங்கு, துஷ்யந்தன் என்று வெவ்வேறு யுகங்களில் வாழ்ந்த புள்ளிகளோடு பழகியவராதலால் விஸ்வாமித்திரரின் டயரி நிறைய பக்கங்களோடு என்சைக்ளோபீடியா’ போல கனமாக இருந்தது.
டயரியின் அட்டையில் வசிட்டரின் கையாலேயே பிரம்மரிஷி என்றும் எழுதி வாங்கி (ஸ்டாம்ப் பேப்பர் ஒன்றுதான் இல்லை) ஒட்டியிருக்கிறார்.
ராமருக்கும் சீதைக்கும் திருமணம் செய்து வைத்த தன்னை வேடிக்கையாக விஸ்வாமித்திரர் டயரியின் ஒரு பக்கத்தில் “அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்காக இன்று இந்த பிரம்மரிஷி மாரேஜ் ப்ரோக்கராக மாறினேன்” என்று ஒரு குறிப்பும் இருந்தது.
பத்து பக்கங்கள் தள்ளி ஒரு இடத்தில், கமண்டலத்தில் ஓட்டை இருப்பதால் தண்ணீர் பிடித்து வைக்க முடியவில்லை. இதனால் நீர் தெளித்து நிறைவேற்றப்பட வேண்டிய சாப விமோசனங்கள் கடந்த ஒரு வாரத்தில் ஏகமாகக் குவிந்து விட்டது. கமண்டலத்தைப் பத்த வைத்து சரி செய்து கொள்ள வேண்டும். இப்படி விஸ்வாமித்திரர் இன்னொரு பக்கத்தில் தான் தவம் செய்யும் போது மேனகையிடம் மயங்கி விழுவதைத் தவிர்ப்பதற்காகக் கையாண்ட உபாயங்களைப் பற்றியும் எழுதியுள்ளார்.
கண்களை மூடியதோடல்லாமல் ஒரு துணியையும் இறுகச் சுற்றிக்கொண்டிருக்க வேண்டும்…. இப்படி!
அடுத்தபடியாக க்யூவில் பாஞ்சால மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் டயரியைக் கொடுத்துவிட்டு இடி இடியென நகைத்தார்.
“ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு தான் எப்பொழுதும் ஒரு ஃபார்மாலிடிக்காக இப்படி வீரச் சிரிப்பு சிரிப்பது வழக்கம் என்றார். டயரியில் பாதி இடங்களில் கத்தி கபடா கேடயம் என்று யுத்த தளவாடங்கள் சம்பந்தமாகவே எழுதப்பட்டு இருந்தது. வெள்ளையர்களின் பீரங்கி சத்தத்தால் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் சரியாகக் காது கேட்க முடியாமல் தவித்த ஊமைத்துரை எங்கே செவிட்டுத் துரையாக மாறிவிடுவானோ என்று கவலையோடு ஒரு குறிப்பையும் எழுதியிருந்தார்.
“அடிக்கடி அனாவசியத்துக்கு எல்லாம் எனக்கு மீசை துடிக்கிறது… அதனால் அயர்ச்சி ஏற்படுகிறது… அரசாங்க வைத்தியரிடம் இது பற்றி ஆலோசிக்கவேண்டும்…” என்று எழுதப்பட்ட ஒரு பக்கத்தின் அடியில் பின்குறிப்பு என்று போட்டு, பறங்கியரைப் பார்த்தால் மட்டுமே தினவெடுக்க வேண்டிய தோள்கள் பழக்க தோஷத்தால் காரணமில்லாமல் மனைவியைப் பார்க்கும் போது கூடத் தினவெடுக்கிறது….. ஏன்… ஏன்… ஏன்?’ என்று எழுதப்பட்டிருந்தது….
எழுதுவதற்குச் சுவையாக எதுவும் இல்லாத சில நாட்களில் கட்டபொம்மன் எட்டப்பனை ஆசைதீர பக்கம் பக்கமாக, “தடியா! கடங்காரா, முண்டமே, எட்டப்பா, குட்டப்பா, மட்டப்பா….” என்று திட்டித் தீர்த்துள்ளார்.
கட்டபொம்மனுக்குப் பின்னால் வந்தவரைப் பார்த்து நான் அரண்டுவிட்டேன். பத்து தலை சிலோன் ராவணன், “உங்கள் வீட்டு டி.வி-யில் எனது நாட்டின் ரூபவாகினி தெரிகிறதா?” என்று கிண்டலாகக் கேட்டபடி லங்கேஸ்வரன் டயரியைக் கொடுத்தார். “என்ன, சிவப்பு மசியில் எழுதப்பட்டிருக்கிறதே?” என்று நான் கேட்டதற்கு ராவணன், “தேவர்கள் ரத்தத்தில் எழுத்தாணியைத் தோய்த்து எழுதினேன்” என்று அசுரத்தனமாகக் கூறினார். நாமெல்லாம் பத்து தலை ராவணன் என்று புகழ்ச்சியாகப் பேசப்படும் அவருக்கு, பெரிய உபத்திரவமே அந்த பத்து தலைகள் தான் என்பது டயரியைப் படித்ததும் புரிந்தது.
தினமும் இரவில் படுக்கச் செல்லும்போது ஒவ்வொரு தலையிலும் உள்ள கிரீடத்தைக் கழற்றி வைத்துவிட்டுப் படுப்பதற்குள் பொழுது விடிந்துவிடுகிறது என்று பல பக்கங்களில் லங்கேஸ்வரன் புலம்பியிருந்தார்…. ஒரு நாள் மறதியில் பத்து தலையில் உள்ள கிரீடங்களில் ஒன்றைக் கழற்ற மறந்து ராவணன் தூங்கிவிட்டாராம். அசதியில் சற்றுப் புரண்டு படுத்த சமயம் அந்த கிரீடம் அருகில் உறங்கிக் கொண்டிருந்த மண்டோதரியின் தலையில் காயத்தை உண்டாக்கி மனைமாட்சியில் பிளவு ஏற்படும் அளவுக்கு ராவணனைப் பாதித்து விட்டதாம்.
ஒரு பக்கத்தில் லங்கேஸ்வரன் “சரியாகப் பழுது பார்க்காமல் து புஷ்பக விமானத்தைக் கொடுத்து இந்த ராஸ்கல் மாரீசன் (ராவணனின் மாயஜால் மெக்கானிக்) கழுத்தை அறுக்கிறான். சீதையைக் கடத்தி வரும்போது புஷ்பக விமானத்தை இலங்கை தளத்தில் இறக்குவதற்குள் (கிராஷ் லேண்டிங்) போதும் போதும் என்றாகிவிட்டது” – குறித்து வைத்துள்ளார்.
டயரி திடீரென்று முடிந்திருந்தது! பின்னால் வந்த தம்பூரா நாரதரின் டயரியை டயரி என்பதைவிட இம்போஸிஷன் நோட் என்று சொல்லலாம். எல்லா பக்கங்களிலும் நாராயணா நாராயணா என்று முத்து முத்தாக எழுதியிருந்தார்.
ஆறாவதாக மகேந்திர பல்லவன் வெறும் கையோடு வந்தார். “டயரி எங்கே சுவாமி?” என்று கேட்டவுடன் பல்லவர் கையைத் தட்ட, ஒரு பெரிய ரெட்டை மாட்டு வண்டி வந்தது. வண்டியில் சதுர சதுரமாகப் பாறாங்கற்கள். பல்லவர் தம் புத்தியை இதிலும் காட்டிவிட்டார் பாறாங்கற்களில் செதுக்கிய டயரி (அதுவும் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய மொழியில்) அதைப் படிக்கச் சோம்பல்பட்டு ஏழாவது மனிதரைக் கவனிக்கச் செல்வதற்குள் எட்டாவதாக வந்த என் மனைவி காதைப் பிடித்து என்னை எழுப்பி உட்கார வைத்தாள்!
பிரசுரகர்த்தாக்களே! முந்துங்கள்….மெய்யாலுமே மேலே சொல்லப்பட்ட டயரிகளுக்கு முன் பணமாக ஒரு தொகையை எனது விலாசத்துக்கு அனுப்பிவிடுங்கள்…டயரிகளைப் புத்தகமாக வெளியிடுவதற்கான உலக உரிமையை உங்களுக்குத் தருகிறேன்…!
– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்