குடும்பாளுமன்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 26, 2022
பார்வையிட்டோர்: 6,942 
 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கனகசபை – ஆண் கட்சித் தலைவர்
சிவக்கொழுந்து – (கனகசபையின் மனைவி) – பெண் கட்சித் தலைவி
நடராசன், சிவகுரு, மயில்வாகனம், இரத்தினம் – கனகசபை தம்பதிகளின் ஆண் மக்கள்
கமலா, விமலா – கனகசபை தம்பதிகளின் பெண் பிள்ளைகள்
காந்தா – நடராசனின் மனைவி
வேலாயுதம் – வேலைக்காரப் பையன்
வள்ளிப்பாட்டி – கனகசபையின் தாயார்
கட்சி நிலை – ஆண் கட்சி 6, பெண் கட்சி 5

நண்பகல் உணவுக்குப்பின் கனகசபை வீட்டின் நடுக் கூடத்தில் குடும்பாளுமன்ற வாராந்தக் கூட்டம் வழக் கம்போல் ஆரம்பமாகியது. முதல் நிகழ்ச்சியான கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் தங்கள் கேள்விகளை சபையில் சமர்ப்பித்தனர்.

ஆண் கட்சி உறுப்பினர் சிவகுரு, தலைவரிடம் கேட்ட கேள்வியாவது: (அ) இந்த வீட்டில் அம்மாவுக்கும் அண் ணிக்குமிடையில் அடிக்கடி ‘மாமியார் – மருமகள்’ யுத்தம் நடப்பதை கனம் அப்பா அறிவாரா? (ஆ) அப்படி அறிவாரானால் யுத்தத்தை நிறுத்த அவர் ஏதாவது நடவடிக்கைகள் எடுப்பாரா? (இ) ‘ஆம்’ என்றால் என்ன நடவடிக்கை ? (ஈ) ‘இல்லை’ என்றால் ஏன்?

கனகசபை சிவகுருவின் கேள்விக்குப் பதிலளிக்கையில்: (அ) மாமியார் – மருமகள் யுத்தம் ஏனைய குடும்பங்களைப் போல் இங்கும் அடிக்கடி நடைபெறுவதை ஏற்கனவேயும் பல உறுப்பினர்கள் எனது கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் (ஆ) இது போன்ற யுத்தங்கள் உலக இயற்கைதான் என்றாலும் இங்கு அவை மேலும் நடைபெறாதிருக்க ஏற்ற நடவடிக்கை எடுக்க எண்ணியுள்ளேன். (இ) யுத்தங்கள் எதற்காக ஏற்படுகின்றன? எப்படி ஏற்படுகின்றன? ‘மாமி – மருமகள்’ இவர்களில் யுத்தத்துக்கு மூலகாரணம் யார்? என்பவைகளை எல்லாம் ஆராய்ந்து எனக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்குமாறு இரத்தினம், விமலா, வேலாயும் ஆகியோர்களைக் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை நியமிக்கிறேன். இக்குழுவின் அறிக்கையைக் கொண்டு யுத்தத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் எனவும் நினைக்கிறேன். (ஈ) மேற்படி ஆ, ஆ, இ, கேள்விகளுக்கான பதில்களின்பின் இக்கேள்விக்கு அவசியமில்லை’ என்றார்.

மயில்வாகனம் தலைவரைக் கேட்ட கேள்வியாவது: (அ) அம்மாவுக்கும் அக்காமார்களுக்கும் ஏராளமான சிநே கிதிகள் இருப்பதையும் அவர்கள் எல்லாரும் அடிக்கடி இங்கு படையெடுப்பதையும் கனம் அப்பா அறிவாரா? (ஆ) அவர்களின் படையெடுப்பால் இங்கு காப்பி, தேநீர், சோடா, வெற்றிலை போன்ற பொருட்களுக்குத் தினமும் ஏராளமாகப் பணம் செலவாவதையும் அவர் உணருவாரா? (இ) அநாவசியச் செலவுகளைக் குறைத்துச் சிக்கனமாகவாழ வேண்டும் என அறிவுறுத்திவரும் அவர் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?

கனகசபை, மயில்வாகனத்தின் மேற்படி கேள்விக்கு அளித்த பதிலாவது: (அ) பெண் கட்சித் தலைவிக்கும் பெண் கட்சி உறுப்பினர்களுக்கும் பல சிநேகிதிகள் இருப்பதையும் அவர்கள் எல்லாரும் இங்கு அடிக்கடி பட்டாளமாகப் படை எடுப்பதையும் நானும் அறிவேன் (ஆ) அதனால் இங்கு அநா வசியச் செலவுகள் ஏற்படுவதை நானும் அவதானித்துள் ளேன் (இ) இவைகளைத் தடுக்கும் முதல் நடவடிக்கையாக வீட்டிலேயே எந்நேரமும் அடைந்து கிடக்கவேண்டும். எனப் பெண் கட்சி உறுப்பினர்களுக்கு இதுவரை விதித் திருந்த தடையை இதோ இப்பொழுதே நீக்கிவிடுகிறேன் . (பெண் கட்சியினரிடையே பலத்த ஆரவாரம்) சிநேகிதி களது வீடுகளுக்கு பெண்கட்சி உறுப்பினர்களைப் போவதற்கு அனுமதி அளிப்பதன் மூலம் இனிமேல் இங்கு அவர்களது வருகை கணிசமான அளவில் குறையும் என எதிர்பார்க் கிறேன். அத்துடன் கைச்செலவுக்கென இதுவரை பெண் கட்சித் தலைவியிடம் கொடுத்து வந்த பணத்தையும் பாதி யாகக் குறைக்க முடிவு செய்துள்ளேன். (ஆண் கட்சியின ரிடையே மகிழ்ச்சி ஆரவாரம்)

இதையடுத்து கமலாவும் விமலாவும் கேள்விகள் கேட் பதற்காக வீராவேசத்தோடு ஒரே சமயத்தில் எழுந்தனர். இந்த நேரத்தில் ஆண் கட்சி உறுப்பினர்கள் ஒரே குரலில் ‘கேள்வி நேரம்’ முடிந்து விட்டதெனக் கூச்சலிட்டனர்.

கமலா: இது வெறும் ஓரவஞ்சனை-கையாலாகாத்தனம்!

விமலா: வெட்கம்! வெட்கம்!

கேள்வி நேரத்தை அடுத்து உறுப்பினர்கள் சிலரின் தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. இந்த நேரத்தில் கனகசபை சிறிது தூங்கி வழிகிறார்.

சிவக்கொழுந்து: கனம் குடும்பத் தலைவர் கூட்டத் தொடரின் அரைவாசி நேரத்தில் தூங்கி மூஞ்சியாக காணப் படுகிறார்.

மயில்வாகனம்: எதிர்க்கட்சித் தலைவி தலைவரை இப்படி அவமானப்படுத்தலாமா?

ஆண்கட்சி உறுப்பினர்கள்: (ஒரே குரலில்) கூடாது கூடாது! அவர் அந்த வார்த்தையைத் திரும்பப் பெற வேண்டும்.

சிவக்கொழுந்து: இதோ திரும்பப் பெறுகின்றேன். (புன்னகை பூத்தவாறு) கனம் குடும்பத் தலைவர் கூட்டத் தொடரின் அரைவாசி நேரத்தில் தூங்கு மூஞ்சியாக இருக் கவில்லை !

தீர்மானங்களில் முதலாவதாக மயில்வாகனம், குடும் பாளுமன்றக் கூட்டம் ஒவ்வொரு வாரமும் கூட்டப்பட வேண்டும் என்ற குடுபாளுமன்ற அமைப்பு விதியினை, ஒவ் வொரு மாதமும் என மாற்றி அமைக்கவேண்டும் என்றார். இதையிட்டு அவர் பேசுகையில் ஒவ்வொரு வாரமும் கூட்டம் நடைபெறுவதால் ஒவ்வொரு வாரமுமே அப்பா அண்ணா ஆகியோர்களது பகல் தூக்கம் பாதிக்கப்படுவதாகவும், வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய அந்தப் பாக்கியத்தை இழந்து விடுவதால் அவர்களது உடல் நலனும் உள நலனும் ஒருங்கே பாதிக்கப்பட்டுவிடும் எனத் தாம் அஞ்சுவதாகவும் கூறினார்.

இதனை வழிமொழிந்து பேசிய இரத்தினம், ஒவ்வொரு வாரமும் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டி இருப்பதால் தம்மால் இரண்டு முப்பது பகல் காட்சிக்குப் போகமுடியாமல் இருப்பதாகவும், இரவுக் காட்சிகளுக்குப் போகலாம் என்றாலோ இதனால் தமது படிப்புப் பாழாகிவிடுமே எனப் பயப்படுவதாகவும் கூறினார்.

தீர்மானம் இறுதியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது ஆதரவாக ஆறு வாக்குகளும் ஏதிராக ஐந்து வாக்குகளும் பெற்று நிறைவேறியது.

சிவக்கொழுந்து: ஒழுங்குப் பிரச்சினை ஒன்றைக் கொண்டு வர விரும்புகிறேன். வேலாயுதம் வாக்களிப்பில் கலந்து கொண்டது சட்டப்படி செல்லுபடியாகாது.

நடராசன்: தவறு! வேலாயுதம் வேலைக்காரனாக இருந் தாலும் பலகாலமாக அவன் எங்கள் குடும்பத்தின் சுக துக்கங்களில் பங்கேற்கும் ஒருவனாக – குடும்பத்தின் ஓர் அங் கமாக இருந்து வருகிறான். எனவே அவன் சபை நிகழ்ச்சி களிலோ வாக்களிப்பிலோ கலந்து கொள்வது தவறாகாது.

[ஆண் கட்சியினரிடையே பலத்த கையொலி]

காந்தா: நாம் அடுத்த வீட்டுப் பெண்களையும் அடுத்த கூட்டத்துக்கு கூட்டி வரலாமா?

சிவகுரு: அப்படியானால் நாமும் அடுத்த வீட்டு ஆண்களை கூட்டி வருவோம்!

[சபையில் பலத்த சிரிப்பு]

ஒப்பனைப் பொருட்களுக்காக ஒதுக்கப்படும் பணம் அதி கரிக்கப்பட வேண்டும் என்றும், மேற்படி பொருட்களை வாங்கும் அதிகாரம் ஆண் கட்சியிடம் இருந்து பெண் கட் சிக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் கோரும் தீர்மானம் ஒன்றை பெண் கட்சித் தலைவி கொண்டு வந்தார். இத் தீர்மானத்தின் மீது அவர் பேசுகையில் பெண்களுக்கெனத் தினம் தினம் எத்தனையோ அலங்காரப் பொருட்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. ஆனால் அவைகளை வாங்குவதற் கென இந்தக் குடும்பத்தில் ஒதுக்கப்படும் பணத்தை நினைக் கும்போது யானைப் பசிக்குச் சோளப்பொரி’ கொடுத்த கதைதான் எமக்கு ஞாபகத்துக்கு வருகிறது. இந்தப் பத் தாம் பசலி வழக்கம் நீக்கப்பட்டு அதிக பணம் இத்தேவைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும். அத்துடன் அந்தப் பணத்தைச் செலவிடும் அதிகாரமும் ஆண்களிடம் இருக்கக் கூடாது. பெண்களுக்கு. என்னென்ன அலங்காரப் பொருட்கள் தேவை, அவைகளின் சிறப்பு யாவை, அவசியம் என்ன என்பவைகளெல்லாம் கேவலம் ஆண்களுக்குத் தெரிய நியாயமில்லை. ‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்பது பழ மொழியன்றோ!’ என்றார்.

தலைவி தொடர்ந்து பேசுகையில் கடந்த ஒரு மாத கால மாக அநியாயக்காரர்களிடம் அதிகாரம் சிக்கியிருக்கும் காரணத்தால் கியுடெக்ஸ், ஐடெக்ஸ், லிப்ஸ்டிக்ஸ் புட்டிகள் யாவும் காலியாக இருக்கும் அவல நிலையினை எடுத்து. விளக்கினார்.

இத்தீர்மானத்தை வழிமொழிந்து பேசிய காந்தா அவர் கள் ஒப்பனைப் பொருட்களின் அவசியத்தை இன்னொரு கோணத்திலிருந்து எடுத்துக் கூறிவிட்டு, ‘இரக்கப் போனாலும் சிறக்கப் போ’ என்ற பழமொழியையும் நினைவூட்டினார்.

தலைவர்: மதிப்புக்குரிய வெண்கட்சி நண்பர்கள் இரக் கப் போக வேண்டியதில்லை. அதெல்லாம் எமது குடும்பக் கௌரவத்துக்கும் அழகில்லை.

சிவகுரு: அவர்கள் வேண்டுமானால் ஐடெக்ஸ், கியு டெக்ஸ், லிப்ஸ்டிக்ஸ் போன்றவைகளை பக்கத்து வீடுகளில் இரக்கலாம் அல்லவா?

(சபையில் சிரிப்பு)

தலைவர்: ஆம்! தாராளமாக……! (சபையில் மீண்டும் சிரிப்பு)

இரத்தினம்: சண்டைக்காரர்கள் சபையில் ஒற்றுமையாகத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள்.

கமலா: எமக்குள் ஆயிரம் வேற்றுமைகள் இருக்கலாம்! நாங்கள் எமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும் பொது விரோதிகளைச் ‘சாடும் போது ஒற்றுமையாகவே நிற்போம்!

இத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது ஆதரவாக நாலு வாக்குகளும் எதிராக ஏழு வாக்குகளும் பெற்றுத் தோல்வியடைந்தது. பெண் கட்சி உறுப்பினர் களில் ஒருவரான வள்ளிப்பாட்டி ஆண் கட்சியுடன் சேர்ந்து வாக்களித்தது . இங்கு குறிப்பிடத்தக்கது.

சிவக்கொழுந்து: (வள்ளிப் பாட்டியை நோக்கி) கூட இருந்தே குழிபறித்த மோசக்காரி!

கமலா: பெண் இனத் துரோகி!

விமலா: காக்கை வள்ளி!

(வள்ளிப் பரட்டி சபையைவிட்டு வெளிநடப்புச் செய்கிறாள்)

சிவக்கொழுந்து: இச்சபையில் இன்று நான் பெண் கட்சி சார்பில் அதிகம் பேசவேண்டி இருக்கிறது. இங்கு வரவர ஆண் கட்சியினரின் அட்டகாசமும் அதிகாரமும் அளவுக்கு மீறிக் கொண்டு போகிறது. பெண் கட்சியின ராகிய எமது குரல் இங்கு மதிக்கப்படுவதில்லை. ஆண் கட்சியினராகிய உங்களுக்குப் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் நீங்கள் நினைத்ததை நினைத்தவாறு சாதித்து வருகின்றீர்கள். எமது நியாயமான கோரிக்கைகள் கூட இங்கு மதிக்கப்படுவதில்லை.

நாங்கள் எது சொன்னாலும் எது செய்தாலும் அதெல்லாம் தவறானவை – தேவையற்றவை என்கிறீர்கள். நீங் களோ எது சொன்னாலும் எது செய்தாலும் அது தான் சரியாகிறது – சட்டமுமாகிறது! உங்களுக்குப் பெரும்பான்மை பலம் இருக்கலாம். ஆனால் அதற்காக எங்களது நியாயமான கோரிக்கைகளையுமா நீங்கள் புறக்கணிக்க வேண்டும்?

மற்றவர்கள் இருக்கட்டும்! இந்தத் தலைவருக்குத்தான் புத்தி எங்கே போய்விட்டது? யார் யாருக்கு எது எது தேவை, எது எது தேவையில்லை, யார் சொல்லுவது நியாயம் , யார் சொல்லுவது அநியாயம் என்பவைகளை’ யெல்லாம் சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்கும் அறிவு அவருக்கு வேண்டாமா? ம்… அவரைச் சொல்லி என்ன பயன்! அவ ருக்குத்தான் மண்டையில் ஒன்றுமே இல்லையே…

தலைவர்: என்ன சொன்னாய்? யாரைப் பார்த்து அப்படிச் சொன்னாய்?

(சபையில் கூச்சலும் குழப்ப நிலையும் உருவாகிறது)

சிவக்கொழுந்து: நான் தலைவரது வெளி மண்டையைக் குறித்துத்தான் அவ்வாறு சொன்னேன்.

தலைவர்: (வெறுப்போடு) சரி! சரி! பேசவேண்டிய தெல்லாம் பேசியாகிவிட்டது தானே!

சிவக்கொழுந்து: இல்லை! இன்னும் இருக்கிறது . (தொடர்ந்து பேசுதல்) நாம் எது கேட்டாலும் அது அநா வசியம் என்கிறீர்கள். நீங்கள் மட்டும் உங்களுக்குத் வேவை யானது. எல்லாவற்றையுமே அத்தியாவசியமானது என் கிறீர்கள். இந்தச் சபையில் நான் ஒன்றை மட்டும் உறுதி யாகவும் – இறுதியாகவும் சொல்ல விரும்புகிறேன். சன நாயகத்தின் பெயரால் உங்கள் சர்வாதிகாரந்தான் இக்கு நடக்குமென்றால் – ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் இன் னொரு கண்ணுக்குச் சுண்ணாம்பும் என்ற நிலைதான் இங்கு தொடர்ந்தும் இருக்குமென்றால் நாம் இந்தக் கூட்டங் களில் கலந்து கொள்வதிலே ஒருவித பயனும் இருக்கப் போவதில்லை. அது மட்டுமல்ல…

இந்த நேரத்தில் சபையில் கோரமின்மை நிலவுவதை உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டினார், தலைவரால் வெளியே சென்றுவிட்ட உறுப்பினர்களை எவ்வளவு முயன்றும் திருப்பி அழைக்க முடியாமல் போகவே அவர் ‘கூட்டம் இத்துடன் முடிவடைந்தது’ என அறிவித்து விட்டார்.

– பெண்ணே! நீ பெரியவள்தான்! (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: ஆனி 1971, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *