கல்யாண வைபோகம்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 19, 2023
பார்வையிட்டோர்: 13,245 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘பிரம்மச்சர்யம்னா’ என்ன அர்த்தம்? ஒருத்தன் பிரம்மச்சாரியா இருந்தா அது பிரம்மாவுக்கே ஆச் சர்யம்- அதுதான் பிரம்மச்சர்யம்!’

திருமணத்தைப் பற்றி பலபேர் பலவிதமாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அவற்றுள் மிகப் பிரசித்தி பெற்ற ஒரு வாசகம் இது: ‘திருமணம் என்பது ஒரு விசித்திரமான சிறைக் கூடம். வெளியில் உள்ளவர்கள் அதன் உள்ளே செல்லத் துடிப்பார்கள். உள்ளே சென்றவர்கள் வெளியே வந்து விடத் தவிப்பார்கள்!’

“உள்ளே சென்று தவிப்பவர்கள், வெளியில் உள்ளவர்களைப் பார்த்து ஏங்குகிறார்கள். நம்மைப் போல் அவதிப்படாமல் கவலை இல்லாத மனிதர்களாகத் திரிகிறார்களே என்று பொறாமைப்படுகிறார்கள். இந்தப் பொறாமை காரணமாகத் திட்டமிட்டு விரிக்கும் சூழ்ச்சி வலைதான் திருமணம். மணமகள் என்னும் கவர்ச்சியான இரைக்கு மயங்கி இவர்களும் வலையில் மாட்டிக் கொள்கிறார்கள்?” என்று எங்கள் வட்டார மேதை ஒருவர் விளக்கமாக அடிக்கடி கூறுவதுண்டு.

எப்படியும், யாராலாகிலும்… திருமணம் என்னும் ஆபத்திலிருந்து எவருமே தப்பமுடிவதில்லை!

“பிரம்மச்சர்யம்’னா என்ன அர்த்தம்? ஒருத்தன் பிரம்மச்சாரியா இருந்தா அது பிரம்மாவுக்கே ஆச் சர்யம்-அதுதான் பிரம்மச்சர்யம் ” என்பது ஒரு நாடக ஆசிரியரின் பேச்சு. சரியான பேச்சு!

உலகம் பலவி தம்; கல்யாணம் பற்பலவிதம்!

நம் முன்னோர் சொல்லிவைத்த முறைகளும் உள்ளன. நமக்கு முன்னால் இருப்பவர்கள் சொல்கிற வகைகளும் உள்ளன. இவற்றில் ஒரு ரகம்தான் ‘இரண்டு மாலை ஒரு சொற்பொழிவாளர் திருமணம்!”

இந்த ரகக் கல்யாணத்தைப் பற்றி நம் சமுதாயத் தில் குறிப்பிட்ட ஒரு பிரிவைச் சேர்ந்த மேதாவிகள் மட்டுமே பேசுகிறார்கள் என்பது ஊர் அறிந்த ரகசியம்!

மற்றப் பிரிவினர்களுக்குத் தேவைப்படாத சீர்திருத்தமும் பகுத்தறிவும் இவர்களுக்கு மட்டும் தேவைப்படுவது ஏன் என்பது இவர்களூக்கே புரியாத விஷயம்!

சிக்கனம் கருதி ஏற்படுத்தப்பட்ட சில திருமண வகைகள் காலப்போக்கில் ‘மகத்தான மாறுதல்’ பெற்று ஊதாரித்தனமான செலவுகளை இழுத்து வைப்பதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க யாருக்குமே நேரமில்லை!

அது அப்படியென்றால், ஒரே திருமணத்துக்கு இரட்டை அழைப்பிதழ், இரட்டை விருந்து என்றெல் லாம் விந்தைமிக்க ஏற்பாடுகள் இப்போது நடை முறைக்கு வந்திருக்கின்றன!

‘தமிழ் எங்கள் உயிர்’ என்று சொல்லிக் கொள்கிற ஒரு சீர்திருத்தச் செம்மலின் மன்றல் அழைப்பிதழ்’ எனக்குக் கிடைத்தது.

அதிலே நட்சத்திரமில்லை, ராசியில்லை, லக்கின மில்லை. சுபயோக சுபவேளை கூட இல்லை. வரவேற்பாளர், பெற்றோர் ஆகியோரின் பெயர்களுடன் ஜாதியைச் சுட்டிக்காட்டும் ‘வால்கள்’ எதுவுமேயில்லை.

நிகழும் திருவள்ளுவர் ஆண்டு’ என்று தொடங்கி, இன்ன தேதியில், இத்தனை மணியிலிருந்து இத்தனை மணிக்குள்… என்றெல்லாம் நல்ல தமிழில் அழகாகக் குறிப்பிட்டிருந்தது.

சீர்திருத்தக்காரர் என்றால்…சும்மாவா?

ஆகா! இதுமாதிரியன்றோ பகுத்தறிவாளர்களின் திருமண அழைப்பிதழ் இருக்கவேண்டும் என்று நான் மனதாரப் பாராட்டிய வேளையில்…அதே திருமணத்துக்காக அச்சிட்டிருந்த மற்றோர் அழைப்பிதழைத் தற்செயலாகக் காண நேர்ந்தது.

என்னத்தைச் சொல்ல… ஆகாதவை கூடாதவை எது எதைக் கூறுகிறார்களோ அவை அத்தனையும் இதிலே லட்சணமாக அச்சிடப்பட்டிருந்தன!

இது, சீர்திருத்தத்தனம் என்பதைச் சிறுபிள்ளைத்தனம் என்று கருதும் உற்றார் உறவினர்களையும் பெரிய மனிதர்களையும் அழைப்பதற்காக ஏற்பாடு செய்யப் படடதாம்!

இப்படி இரட்டை வேடம் தாங்கிச் சினிமாவில் நடிப்பவர்களுக்கு மட்டுமல்ல. வாழ்க்கையில் நடிப்பவர்களுக்கும் நல்ல மதிப்புக் கிடைக்கத்தான் செய் கிறது! என்ன சமுதாயம்!

இரட்டை விருந்து எப்படி யென்றால், கல்யாணத் துக்கு வருகிறவர்களுக்குக் கல்யாணம் நடைபெறும் இடத்திலேயே கல்யாணச் சாப்பாடு போடுவார்கள். இது முதல் விருந்து.

கல்யாணத்துக்கு வராதவர்களுக்கு இரவில் தனியாக வேறோரிடத்தில் ஒரு விருந்து நடக்கும் இந்த விருந்து மேனாட்டுப் பாணியில் அமைந்திருக்கும். இதிலே கலந்து கொள்கிறவர்களும் மேலே உள்ளவர் களாய்த்தானிருப்பார்கள் பொதுவாக, மேலதிகாரிகளின் தலையில் ‘ஐஸ்’ வைத்துப் பதவி உயர்வு பெறுவதற்காகவே இவ்விருந்து நடப்பதாகவும் சிலபேர் சொல்கிறார்கள்! இதிலும் உண்மையிருக்கலாம்!

ஆக, இந்தக் காலத்தில் நடைபெறும் திருமணங் களுக்கு எது அடிப்படை என்பது ஆராய்ச்சிக்கு உரிய தொரு விவகாரம்.

இப்போதெல்லாம் திருமணம் எப்படி நடை பெற்றது என்று யாருமே கவலைப்படுவதில்லை. எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என்று எவருமே விசாரிப்ப தில்லை. ‘கல்யாண சமையல் சாதம்’ பற்றிக்கூட ஒரு வரும் விமரிசனம் பேசுவதில்லை.

ஒரு திருமணம் முடிந்ததும் ஒவ்வொருவரும் அக்கறையோடு விசாரிப்பது இப்படித்தான்:

“பெண் வீட்டாருக்கு மூவாயிரம் வெள்ளிக்குக் குறையாமல் வருமானம் கிடைத்திருக்குமா?”

“மாப்பிள்ளை வீட்டாரின் சார்பில் அதிகம்பேர் வந்திருந்தார்களாமே? அப்ப, அவர்களுக்குத்தான் வருமானம் அதிகமாயிருக்கும்?”

இப்படிப்பட்ட பேச்சுக்கள் காதில் விழும்போது, வருமானத்துக்காகத்தான் திருமணம் செய்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

புனிதமான சடங்கு என்று திருமணத்தைப்பற்றிச் சொல்கிறார்கள். ஆனால், அங்கே மேஜையும் நாற்கா லியும் நோட்டுப் புத்தகமுமாக உட்கார்ந்துகொண்டு வரவு கணக்கு விவரம் எழுதத் தொடங்கும்போது புனிதமாவது, வெங்காயமாவது!

கல்யாணத்துக்கு உறவினர்கள் நிறைய வந்தார் களா என்பது முக்கியமல்ல. ‘உறைகள்’ நிறைய வந்தனவா என்பதுதான் முக்கியமாம்!

காலம் கெட்டுப்போச்சு என்பது உண்மையான சங்கதி தானோ?

அதுகிடக்கட்டும் நான் சொல்லவந்த கதைக்கு வருவோம். சமீபத்தில் நாங்கள் ஒரு கல்யாணத்துக்கு விஜயம் புரிந்த கதை இது!

தென்றல் மண்டபம்’ என்னும் பிரபலமான ஓரிடத்தில் காலை பதினொரு மணிக்குத் திருமணம்.

மாப்பிள்ளை வீட்டார் எங்களுக்கு மிகவும் நெருக்க மானவர்கள். ஆகவே “குடும்பத்தோடு கொஞ்சம் முன் கூட்டியே வந்துவிடுங்கள். வேலை நிரம்ப இருக்கு. நீங்க வந்து உதவி செய்யணும்” என்று கேட்டுக் கொண்டார் மாப்பிள்ளையின் அப்பாவான மதனகோபால்!

அதன்படி நாங்கள் ஒருமணி நேரத்துக்கு முன்பே அதாவது பத்துமணிக்கே தென்றல் மண்டபம் போய்ச் சேர்ந்தோம்.

நாங்கள் உள்ளே செல்லும்போது பலபேர் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்-கல்யாணம் முடிந்து, கல்யாணச் சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு!

குறித்த நேரத்தில் குறித்த காரியத்தை முடிப்பதில் தவறாதவர்கள் என்று வெள்ளைக்காரர்களைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவார்கள்.

இப்போது வெள்ளைக்காரர்களை மிஞ்சவேண்டும் என்பதற்காகக் குறித்த நேரத்துக்கு முன்னமேயே நம்மவர்கள் காரியத்தை நடத்தத் தொடங்கி விட்டார்களே என்று ஆச்சரியத்தில் மூழ்கிப் போனேன்!

அப்போது ‘வாங்க வாங்க’ என்று ஒருவர் பிரமாத மாக வரவேற்றார். ஆகா! கல்யாணம் முடிந்தாலும் தடபுடலான வரவேற்பு முடியவில்லையே!

சந்தனம் மணத்தது, மலர்க்கொத்து சட்டைப் பையில் வந்து உட்கார்ந்தது!

மணமக்கள் எங்கே என்று தேடின என் கண்கள். அதைப் புரிந்துகொண்டதுபோல் ஒருவர், “இப்பத் தான் எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள்” என்று கூறினார்.

ஓகோ சரிதான். அதனால் தான் நமக்கு நெருக்கமான மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த ஒருவரையும் இங்குக் காணவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

மற்றொருவர் பரபரப்போடு என்னை நெருங்கி என் கையைப் பிடித்துக்கொண்டு விருந்து நடந்து முடிந் திருந்த இடத்துக்கு அழைத்துச் சென்று, உட்காரச் சொல்லிவிட்டு, எங்கோ ஓடிப்போய் ஒரு போத்தல் ஆரஞ்சுச் சுவை நீர் கொண்டுவந்து நீட்டி, ‘சாப்பிடுங்கள்’ என்றார்.

சாப்பிடுவதற்கு ஒன்றையும் காணோமே என்று தடுமாறினேன். உடனே அந்த ஆசாமி என் காதருகில் குனிந்து “இட்டலி, தோசை, உப்புமா எல்லாம் இப்பத்தான் சரியாப்போச்சுங்க. கடையிலே ‘ஓடர்’ பண்ணினது. அவன் கணக்காகக் கொண்டாந்திருந்தான். எதிர்பார்த்ததுக்கு மேலே கூட்டம் வந்திருச்சு, சமாளிக்க முடியலே. என்ன செய்யறது? தண்ணியைச் சாப்பிடுங்க!” என்றார் அவர்.

‘தண்ணீரைச் சாப்பிட முடியாது. குடிக்கலாம்’ என்று ஒரு சிரிப்பு வெடியைப் போட்டுவிட்டு. அவரும் சிரிப்பார் என்று எதிர்பார்த்தேன். அவருக்குச் சிரிப்பு வரவில்லை.

“வெள்ளி வைச்சுக் குடுக்கணும்’னா அதோ அங்கே அவருகிட்டே குடுங்க, உங்க பேரை எழுதிக்கொள் வாரு” என்றார் காரியத்தில் கண்ணாக!

பந்தியில் ஒன்றுமில்லாவிட்டாலும் பண வசூலில் குறியாய்த்தானிருக்கிறார்கள்!

பெண்கள் கூடியிருந்த பக்கமாகச் சென்ற என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஆரஞ்சாவது கிடைத்ததோ என்னமோ என்று யோசித்துக் கொண்டே திரும்பியபோது, “அடடே. நீங்க இங்கேயா இருக்கிறீங்க? வாங்க வாங்க…” என்று அங்கு வந்து சேர்ந்தார் மதனகோபால்.

திடுக்கிட்டுப் போனேன். ‘மன்னிக்கணும் கல்யாணம் நடப்பதற்கு முன்பே வந்து உங்களுக்கு ஒத்தாசை செய்யணும்’னு எவ்வளவோ பிரயாசைப்பட்டேன். முடியவில்லை. குடும்பத்தோடு கிளம்பினால் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படவாமுடிகிறது? ம்… நல்லவிதமாகக் கல்யாணம் முடிந்ததை அறிந்து சந்தோஷம்…’ என்று நான் சொல்லிக் கொண்டே போக, அவர் முகம் ஏதோ ஓர் உண்மையைக் கண்டு பிடித்தாற்போல் பிரகாசமாகி வந்தது.

“என்ன சொல்லுறீங்க? நம்ப பையன் கல்யாணம் சரியாய்ப் பதினொரு மணிக்குத்தான் நடக்கும். இங்கே காலையிலே ஒன்பது மணிக்கு ஒரு கல்யாணம் நடந்ததே-அதை நம்ப வீட்டுக் கல்யாணம்’னு நினைச்சுக் கிட்டுப் பேசுறீங்க போலிருக்கு……..?” என்றாரே பார்க்கலாம்.

‘அப்படியா?’ என்று அப்பாவித்தனமாகக் கேட் கும்போது என் முகம் காட்டிய அசடுவழியும் பாவத்தை எந்த நடிகர் திலகத்தாலும் காட்ட முடியாது போங்கள்?

எனக்கு ஆரஞ்சு சுவைநீர் வழங்கிய ஆசாமி கிடு கிடு வென்று அங்கிருந்து நழுவியதையும் கவனித்துக் கொண்டே மதனகோபாலுடன் கல்யாண அலுவல்களில் இறங்கினேன்!

– மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email
சிங்கை பெர்னாட்ஷா சே.வெ.சண்முகம் சே.வெ.சண்முகம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெய்வாசலில் 1933ல் பிறந்தார். 1951ல் சிங்கப்பூருக்கு வந்த இவர், துறைமுகத்தில் பணியாற்றினார். 1961ல் கிடங்குப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்று 1991ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1949ல் எழுதத் தொடங்கிய இவரது முதல் சிறுகதை “வேறு வழியில்லையா?” மதுரையிலிருந்து வெளியாகும் “நேதாஜி” இதழில் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து இவர், சிறுகதைகள், தொடர்கதைகள், குட்டிக்கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், மேடை நாடகங்கள், வானொலி…மேலும் படிக்க...

1 thought on “கல்யாண வைபோகம்!

  1. நண்பர் அண்ணா கண்ணன் 9841120975 அவர்கள் ரெயின்போ rainbowfm என்ற பெயரில் கதை சொல்ல ஓரு யூ டூயூப் நடத்தறார்….

    உங்க கதைகளை அதில் சொல்லலாமா அனுமதி பெறனுமா ?

    கதாசிரியர் பதிப்பகத்தாரிடம் குரல் வழி கதைகளை பதிவு செய்ய

    பதில் தருக

    அன்புடன்

    கோயமுத்தூர் பாலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *