கதாநாயகன் தேர்வு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 30,226 
 
 

செல்லாத்தா தேநீர் விடுதி. கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்தார் உரிமையாளர்; தேநீர் ஆற்றிக் கொண்டிருந்தார் மாஸ்டர். அவரின் அருகில் தட்டுக்களில் சுடச்சுட ஆமைவடை, உளுந்து வடை, சமோசாக்கள் குவிந்திருந்தன.
மேஜை இழுப்பறையைத் திறந்து, ஒரு சீட்டை எடுத்தார் உரிமையாளர். அதில், “கிளவுட் பைவ் புரொடக்ஷன்ஸ்’ கடன் பாக்கி, 1,328 ரூபாய் என போடப்பட்டிருந்தது.
கடையின் எடுபிடியாக புதியவன் ஒருவன் சேர்ந்திருந்தான். அவனை, அழைத்தார் உரிமையாளர் …
கதாநாயகன் தேர்வு!“”கொடுக்காப்புள்ளி தானே உன் பேரு?”
“”ஆமா!”
“”எதிர்த்த கட்டடத்ல சினிமா கம்பெனி ஒண்ணு இருக்கு. இந்த சீட்டை காண்பிச்சு, 1,328 ரூபாய் வாங்கிட்டு வா. நேரா போய் டைரக்டர் பையன்கிட்ட கேக்காதே. புரொடக்ஷன் மேனேஜர் கிட்ட போய் கேளு.”
“”புரொடக்ஷன் மேனேஜரு பாக்க எப்படி இருப்பாரு?”
“”மலை முழுங்கி மகாதேவன் மாதிரி இருப்பான். பணத்தை வசூல் பண்ணிட்டு, அப்படியே ஓடிப் போயிடாம, திரும்பி வந்திடு ராசா!”
கொடுக்காப்புள்ளி நடந்தான். பட்டாப்பட்டி டவுசர் அணிந்து, அதன் மேல் பூப்போட்ட கைலி உடுத்தி இருந்தான். மேலே ஆடுபுலி ஆட்டம் ரஜினிகாந்த் படம் போட்ட பனியன், கழுத்தில் தாயத்து.
சினிமா கம்பெனி வாசலில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் கூடியிருந்தனர். சிலர் கைகளில், அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பங்கள். சிலர் கைகளில், அவர்களே நடித்து விடியோ போனில் எடுக்கப்பட்ட, ஐந்து நிமிட துண்டுப் படங்கள். சிலர் கைகளில் பிலிம் இன்ஸ்டிடியூட் கொடுத்த சான்றிதழ்கள். சிக்ஸ் பேக், எய்ட் பேக் ஆளுமையில் சிலர் இருந்தனர்.
சிலர், டைரக்டரிடம் பேசிக் காட்ட, பிரபல சினிமாக்களின் வசனங்களை உருப்போட்டு பேசி பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர், தங்களின் பெயர்களை சினிமாவுக்கு ஏற்ற மாதிரி மாற்றி வைத்திருந்தனர்.
அங்குமிங்கும் பராக்கு பார்த்தபடி, தத்திதத்தி வந்தான் கொடுக்காப்புள்ளி. புரொடக்ஷன் மேனேஜரை தேடியபடி நடந்தவன், ஒரு குளிர்பதன மூட்டப்பட்ட அறைக்குள் போனான். தரை மெத்தையில் உருளை தலையணைகள். குறுந்தாடி கொண்ட டைரக்டர், ப்ரடரிக் ராமோன் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்.
வெளிநாட்டு படங்களின் கருவை திருடி யார், யார் எப்படியெப்படி எல்லாம் படம் எடுக்கின்றனர் என்பதைப் பற்றி, உதவி இயக்குனர்களிடம் விவாதித்து கொண்டிருந்தார் அவர்.
“”சார்…” இழுத்தான் கொடுக்கப்புள்ளி.
“”யாருய்யா நீ குறுக்கே?” கத்தினார் டைரக்டர்.
தலையைச் சொறிந்து பரிதாபமாய், “சந்தைக்கு போகணும்… ஆத்தா வையும்; காசக்குடு…’ பாவனை காட்டினான் கொடுக். துள்ளி எழுந்தார் ராமோன்.
“”ஆஹா… என்ன ஒரு எக்ஸ்பிரஷன்! சூப்பர்!”
“”டீடீ… சிட்சிட்… காகா… வாவாங்…”
“”மாடுலேஷன்ல அசத்திட்டடா நீ. “டீடீ’ பாத்ததும் என் நெஞ்சுக்குள்ள, “தீதீ’ – “சிட் சிட்!’ ஆனாலும், தலை மேல ஒரு போன்சாய் ஆலங்கட்டி மழை. “காகா’ காதலுக்கு காதல் மேல் காதல் வந்ததடி. “வாவாங்’ – நீயும், நானும் வாழ்வாங்கு வாழ்வோம்டி கொய்னா.”
“”நா… சொ… வ… வே…”
“”பேசாதே… உன் சுருக் சுருக் டயலாக்கை எல்லாம் நீட்நீட்டி புரிஞ்சிக்க எனக்கு சினிமா அறிவு பத்தாது. உன் பெயர் என்னப்பா?” கொஞ்சினார்.
“”கொடுக்கப்புள்ளி!”
“”சிங்கம் புலி இருக்கும் போது, கொடுக்காப்புள்ளி இருக்கக் கூடாதா என்ன? எந்த ஊரு நீ?”
“”மேலூர் பக்கத்துல ஒரு கிராமம்!”
“”மதுரைக்கு, 100 கி.மீ., ரேடியசுல எங்கிருந்தாலும், “மதுரக்காரன்’ன்னு சொல்லிக்கலாம். என்ன படிச்சிருக்க?”
“”ரெண்டாம் கிளாஸ், நாலு வருடம் படிச்சேன்!”
“”சபாஷ்டா தங்கக்குட்டி… டிகிரி கிகிரி படிச்சிருந்தா டிஸ்குவாலிபிகேஷன் ஆய்ருப்படா!” எழுந்தார்; நடந்தார். பல கோணங்களில் கொடுக்காப்புள்ளியை ஆராய்ந்தார். இரு கைகளை நீட்டி, கேமரா ஆங்கிள் பார்த்தார்.
“”அஞ்சடி நாலங்குலம் உயரம் இருப்ப. என் படம், “ஹிட்’ ஆயிட்டா, அடுத்தடுத்த படங்கள்ல ஹீல்ஸ் போட்டுக்கலாம். நிறம், யானைக் கறுப்பு. சிவப்பு கிவப்பா இருந்திருந்தா, “போடா’ன்னு விரட்டி விட்ருப்பேன். தலைமுடி எண்ணெய் பிசுக்கோடு வகிடு இல்லாமல் பம்பையாய், செம்பட்டை பிடிச்சுப் போய் திரிதிரியா தொங்குது. “விக்’ தேவை இருக்காது. முகத்தில் தாடி, மீசையும் புதர் போல் மண்டி கிடக்குது. மீசையிலும், தாடியிலும் சில முந்திரிக் கொட்டை ரோமங்கள் துருத்திக் கொண்டுள்ளன. சபாஷ்… கடைசியா எப்ப முடிவெட்டின, ஷேவ் பண்ணின கொடுக்?”
“”தலை முடியை மதுரவீரன் சாமிக்கு நேர்ந்து விட்டிருக்கேன். ஷேவ் பண்றதுக்கு கைல காசும் இல்லை; பிடிக்கவும் பிடிக்காது.”
“”ஈன்னு பல்லைக் காட்டு!”
“”என்னய்யா பல்லெல்லாம் காவிப்புடிச்சு மஞ்ச மஞ்சேர்ன்னு கிடக்கு? தினம் பல் விளக்குவியா, இல்லையா?”
“”நினைச்சிக்கிட்டா உமி கருக்கு வைத்து பல் விளக்குவேன்; இல்லேன்னா நாட்கணக்குல பல்லு விளக்காம இருப்பேன்!”
“”பான்பராக்?”
“”தினம் அஞ்சு பாக்கெட்!”
“”பீடி, சிகரட்?”
“”கரீம் பீடி பிடிப்பேன். அப்பப்ப சுலைமான் புகையிலை வாய்ல போட்டு அதக்குவேன்!”
“”இவனை அழுக்காக்க மூணு மாசம் தேவையில்லை; ரெடியாவே இருக்கான்!” உதவி டைரக்டர்.
“”உனக்கு வயசென்ன ஆகுது?”
“”முப்பத்தி நான்கு சார்!”
“”இவன் யூத்தும் இல்லை, முழுக் கிழவனும் இல்லை. தமிழ் ஹீரோ இவனை மாதிரிதான் இருக்கணும். அது சரி… ஏன்ய்யா உனக்கு புள்ளதாச்சி வயிறு மாதிரி இருக்கு?” டைலரிங் டேப் எடுத்து வந்து, இடுப்பு சுற்றளவை அளந்து பார்த்தார். “”நாற்பத்தி ரெண்டு இஞ்ச் வயிறு. இதென்ன பியர் தொப்பையா?”
“”இல்லீங்க… தொட்டுக்க கருவாடு இருந்தா, ஒரு சட்டி சோறு தின்பேன்!”
“”ஆகா… தெய்வமே! தினமும் குளிப்பியா?”
“” வாரம் ஒரு தடவை போனா போகுதுன்னு குளிப்பேன்.”
“”அதான் உன் மேல இம்மாம் கப்பு அடிக்குது. எங்க கொஞ்ச தூரம் போயிட்டு என்னை நோக்கி நடந்து வா… பார்ப்போம்!”
வாத்து நடை நடந்து வந்தான்.
“”சிம்ப்ளி சூப்பர்… உன் நாற்றம் புடிச்ச கேவலமான பனியனைக் கழற்று!”
நாணியபடி கழற்றினான்.
பெண்களுக்கு இருப்பது போல் மார்பு பகுதி இருந்தது.
“”கணக்குச் சீட்டை… பாக்கிப் பணம்…”
“”பொது அறிவுக் கேள்வி. அன்னா ஹசாரே யார்?”
“”அன்னா அறிஞர் அண்ணாங்க. “அசாரே’ன்னா கண்ணாமூச்சி ரேரே காதமூச்சி ரேரே நல்ல முட்டையை தின்னுட்டு, ஊளை முட்டையை கொண்டுவான்னு அர்த்ததமாயிருக்கும்.”
“”சமச்சீர் கல்வி தேவையா?”
“”அத்தாச்சி அம்மாச்சிகளுக்கே படிப்பு தேவைப்படாதப்ப, சம்மாச்சிக்கு படிப்பு எதுக்குங்க?”
“”வாரே வா வா… என் அறியாமை புதையலே… நான் எடுக்கப் போற படத்தோட கதை சொல்றேன்… டைட்டில்: யானைக்காடு! நீ ஹீரோ. ஒண்ணாங்கிளாஸ் கூட படிக்காதவன், பொறுக்கி, தடிமாடு, தெண்டச்சோறு, அழுக்கு மூட்டை . உன் வேலை, காட்டு யானைகளை வேலை செய்ய பழக்குறதுதான். நீ, +2 படிக்கிற பொண்ணை, “லவ்’ பண்ற. அவளோ, உன்னை, போடா படிக்காத பொறம்போக்குன்னு திட்டிடுறா. உனக்கு கோபம் வந்து, ஒண்ணாங்கிளாசிலிருந்து, 11ம் கிளாஸ் டீச்சர் வரை கொலை பண்ற. க்ளைமேக்ஸ்ல, +2 டீச்சரை கொலை பண்ணப் போறப்ப, போலீஸ்காரன் கிட்ட மாட்டிக்கிற. “எதுக்குடா இந்த கொலை வெறி?’ன்னு போலீஸ் கேக்குறான். “இந்த பள்ளிக் கூடங்களும், டீச்சர்களும் இருக்கறதுனாலதானே காதலுக்கு, கல்வி வில்லனா தலை தூக்குது. அதனால, டீச்சர்களா பாத்து கொன்னேன்…’ன்னு நீ சொல்ற.
“”நீ சீரியல் கில்லர் தான்… பட்… உன் நியாயம் பிடிச்சிருக்குன்னு கீழே குதிச்சு தற்கொலை பண்ணிக்கிறான் போலீஸ்காரன். அவன் ஏன் தற்கொலை பண்ணணும்ன்னு யாருக்கும் கேக்க தோணும். காதல் தூதுவனா இருந்து, காதலை சேர்த்து வச்சான் ஏ.சி., கைது பண்ண வேண்டிய அல்லது என்கவுன்டர் பண்ண வேண்டிய சைக்கோவை தப்பவிட்ட அசிஸ்டென்ட் கமிஷனர் நிலைல நின்னு தற்கொலை பண்ணிக்கிறான் அதே ஏ.சி.,
“”இந்த படத்துல நடிக்கறதுக்கு உனக்கு நேஷனல் அவார்டு கிடைக்கும். உலகின் எல்லா திரைப்பட விழாக்களில் கலந்து, நம்ம படம் தங்கமயில், தங்க குரங்கு விருதுகள் பெறும்!”
“”நிறுத்துங்க சார்… என்னை பேச விடாம, நீங்களே பேசிக்கிட்டே போறீங்களே… நான் எதிர்த்த டீக்கடைல இருந்து, கடன் பாக்கியை வசூல் பண்ண வந்த எடுபிடி ஆசாமி!”
ஒரு நொடி ஸ்தம்பித்த ராமோன், கவுண்டமணி ஸ்டைலில் சிரித்தார்… “”தமிழ் சினிமால இதெல்லாம் சகஜமப்பா. சினிமாவுக்கு என் பெயர், ப்ரடரிக் ராமோன்; என் நிஜப் பெயர் வடசேரி ராமன். மாத்தி வச்சு உருப்படலையா நான்? அப்ப சொன்ன வார்த்தையைத்தான் இப்பவும் சொல்றேன்… என் படத்துக்கு நீதான் ஹீரோ. அடுத்த அஞ்சு வருஷத்துல நீ எதிர்க்கட்சி தலைவர்; பத்து வருஷத்துல முதல்வர். இந்தா, ரெண்டாயிரம் ரூபாய். டீக்கடைக்கு குடுத்திடு. இந்தா ஒரு லட்ச ரூபாய்க்கான செக்; பவுன்ஸ் ஆகாது. மீதி ஒன்பது லட்ச ரூபாய், படம் ரீலீஸ் அப்ப தர்றேன்.”
“”எனக்கு சினிமா பத்தி ஒண்ணும் தெரியாதே!”
“”ஒரு படத்துல நடிச்சவுடனே, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்குக்கும், ஜேம்ஸ் கேமரூனுக்கும் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுவ!”
“”எனக்கு நடிக்கவே தெரியாதே!”
“”நீ மக்கு மாதிரி நின்னா போதும். நீ ஆயிரம் பீலிங்சை ஒளிச்சு மறைச்சிக்கிட்டு வெறுமை முகம் காட்டுவதாக தமிழ் ரசிகர்கள் பாராட்டுவர். என்னை ரொம்ப கெஞ்ச வைக்காதே!”
“”சரி… நடிக்கிறேன் சார்!”
“” ஐயோ… என்னை ஆட்கொண்ட தெய்வமே…” கொடுக்காபுள்ளியை கட்டிக் கொண்டார் ராமோன்.
ராமோன் காதுகளில், “”ஒரு சின்ன ரிக்கோசுடு!”
“”என்ன?”
“”ஹீரோயினா அமலா பால், ஆவின் பாலெல்லாம் வேண்டாம். கேட்ரினா கைப்பை போட்டா தேவல. கைப்பை பாத்தா மூடு வரும்; மூடு வந்தா சிறப்பா நடிச்சு, ஆசுகாரு வாங்கித் தருவோம்ல…”
யானைக்காடு படம் சூப்பர் சூப்பர் ஹிட்!
தனியார், “டிவி’ சானலில், ஏழெட்டு இயக்குனர்கள் கூடி ஜால்ரா கும்மியடித்தனர்.
திருவாய் மலர்ந்தான் கொடுக்காபுள்ளி. “”நான், 20 வருடமாய் கூத்துப்பட்டறை நடிகன். தமிழ் சினிமாவை, உலக சினிமா தரத்துக்கு உயர்த்துவேன். இந்த படத்தில் நடிப்பதற்காக, 30 கிலோ எடை கூட்டினேன். ஒரு வருடம் யானைகளுடன் சேர்ந்தே படுத்துக் கிடந்தேன்.”
“”உங்க நடிப்பு மார்லன் பிராண்டோ, மெல் கிப்ஸன், லியானார்டோ கேப்ரிகோ, ஜான் டுட்டுரோ ஜானி டெப் (மனப்பாடம் பண்ணி வச்ச மீதி பேரெல்லாம் மறந்து போச்சே) நடிப்பை எல்லாம் தூக்கி சாப்ட்டுருச்சு,” என்றார் டைரக்டர்.
“”ஆமா ஆமா ஆமாம்!” என்றனர் மற்ற டைரக்டர்கள்.
தமிழ் சினிமா, தலைவிரி கோலமாய் நடுதெருவில் நின்று கதறி அழுதது!

– டிசம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *