கங்கைக் கரைத் தோட்டம்…

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 11,281 
 
 

பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்வதற்கு 23-மணி 56 நிமிடம் 4.095 வினாடி ஆகுமென்று எல்லாக் கலைக் களஞ்சியங்களும் கதறுவதைச் சீதாப்பாட்டி நன்கு அறிவாள். ஆனாலும் தபால்காரன் கொடுத்துச் சென்ற கடிதத்தைப் பிரித்ததும் கலைக் களஞ்சியங்களின் ஆய்வு அத்தனையும் பொய்யோ என்று அவள் அஞ்சினாள். பூமி ஒரு மணிக்கு இருபத்து மூன்றாயிரம் தடவை சுற்றுகிறது என்று நம்பினாள்.

தலை கிர்ரென்று சுற்றப் பிரித்த கடிதத்துடன் பொத்தென்று சாய்வு நாற்காலியில் வீழ்ந்துவிட்டாள். பழங்கவிஞர்கள் இருப்பார்களேயானால், சீதாப்பாட்டி விழுந்ததைப் பார்த்து ‘அஞ்சா நெஞ்சினள், அப்புவின் மாது, பொத்தென வந்ததோர் போஸ்ட்டினைக் கண்டு, தொப்பென விழுந்தாளரோ!’ என்று பாடியிருப்பார்கள். (அரோ அசை.)

”கடிதத்தில் இருந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் குளோரோபாரத்தில் தோய்த்து எழுதப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிடில் அவ்வளவு விரைவில் சீதாப்பாட்டிக்கு மயக்கம் வருமா?’ என்று சிலர் ஐயமுறலாம்.

‘அந்தரங்கம்’ ஸ்ட்ரிக்ட்லி பர்சனல்’ என்ற அபாய அறிவிப்புக்களோடு கூடிய அந்தக் கடிதம் அப்புசாமியின் ஜிப்பாப் பையிலிருந்து கீழே தற்செயலாக விழந்ததால் சீதாப்பாட்டிக்குத் தெரிந்தது. ‘இவருக்கு யார் ‘பெர்ஸனல்’, அதுவும் ‘ஸ்ட்ரிக்ட்லி பெர்ஸனல்’, எழுதப்போகிறார்கள் என்று பிரித்துப் பார்த்தால் கடிதம் இப்படி இருந்தது.

உயிருக்கு உயிரான என் இனியவரே,

உங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன். அப்பப்பா! நீங்கள் பொல்லாத குறும்புக்கார மனிதர். அந்த லெட்டர் மட்டும் என் அப்பாகிட்டே கிடைத்திருந்தால் அவ்வளவு தான். உங்களுக்கு இரவெல்லாம் தூக்கம் வராததற்கு என்னைக் குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். நீங்களாவது பகலில் சாமர்த்தியமாகத் தூங்கி விடுவீர்களோ என்னவோ? எனக்கு இருபத்துநாலுமணி நேரமும் உங்கள் நினைவே தான். உங்கள் மாதிரி அழகாக எனக்குக் கடிதம் எழுதத் தெரியவில்லை. நிஜம்மாக நான் அவ்வளவு அழகாகவா இருக்கிறேன்? சும்மாவாவது நீங்கள் புகழ்கிறீர்கள். உண்மையில் நீங்கள்தான் கொள்ளை அழகு. எனக்கு நிம்மதியாகக் கடிதம் எழுதவே முடியதில்லை. பயந்து பயந்து எழுதுகிறதனால், மனசிலே கோடிகோடியாய்ப் புதைந்திருக்கிற எண்ணங்களையெல்லாம் தங்களுக்குச் சமர்ப்பிக்க முடியவில்லை. என் உயிர் நீங்கள். என் உணர்வு நீங்கள். ஒரு நாள் உங்களைப் பார்க்காவிட்டால் நான் சித்திரவதைப்படுகிறேன். ஆமாம், முந்தாநாள் ஜில்லென்று ஜிப்பா போட்டுக்கொண்டு எங்கே போனீர்கள்? உங்கள் இவளிடம் அதெல்லாம் சொல்லிக் கொள்கிறதில்லையா?

தங்கள் அன்புக்கு

ஏங்கும் ஏழை

மீனாட்சி.

மயக்கம் தெளிந்து எழுந்த சீதாப்பாட்டி பற்களைக் கடித்தாள். ஆனாலும் அடுத்த கணம் அமைதியுடன் பிரச்சினையை ஆராயலானாள். ‘அவசரப்பட்டுக் கணவனது கற்பைச் சந்தேகித்துவிடக் கூடாது’ என்று எண்ணியவளாகக் கடிதத்தின் முகவரியை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தாள்!

திரு. அப்புசாமி, 23, பவசாமி தெரு, கீழ்ப்பாக்கம்.

ஸிலோன் ரேடியோ சந்தர்ப்பம் தெரியாமல் பாட்த் துவங்கியது. ‘கங்கைக்கரைத் தோட்டம்….கன்னியர்கள் கூட்டம்….கண்ணன் நடுவினிலே ஓ…ஓ’

காதுகளைப் பொத்திக்கொண்டாள் சீதாப்பாட்டி. ஆனால் அதற்குள் சுறுசுறுப்பாக அவள் மனத்திரையில் ‘சென்ஸாரு’க்குத் தப்பியது போன்ற ஒரு காட்சி தோன்றிவிட்டது. சுற்றிலும் இளம் பெண்கள் கும்மி அடிக்க, அப்புசாமி உலகை மறந்து, முக்கியமாகச் சீதாப்பாட்டியை மறந்து அந்தக் கன்னியர்கள் கூட்டத்தில் நின்றிருந்தார்.

ரேடியோவைப் பாய்ந்து சென்று அணைத்தாள். கடிதத்தை மீண்டும் பார்த்தாள். ‘கடிதம் எழுதிய அந்த மீனாட்சி என்பவள் யார்? புரொப்யூமா-கீலர் ஊழலைவிடக் கேவலமாக இருக்கிறதே?’ என்று பலவாறாகச் சீதாப்பாட்டி மனம் குமைந்தாள். அடுத்து இரண்டு மூன்று நாள் பொறுத்துப் பார்ப்பது என்று கவனமாக அப்பு¡மியின் நடவடிக்கைகளைக் கவனிக்கலானாள். இடிமேல் இடிதான் சீதாப்பாட்டிக்கு. தினம் தவறாமல் அப்புசாமிக்கு அந்தரங்கக் கடிதம் வருவதும், அவர் தபால்காரணைத் தெரு முனையிலேயே எதிர்கொண்டழைத்துக் கடிதத்தை வாங்கிச் சொருகிக் கொள்வதும் நடைபெற்றது. முன்னைப்போல அஜாக்கிரதையாக ஜிப்பாப் பையிலும் அப்புசாமி அவைகளைப் போட்டு வைப்பதில்லை.

அப்புசாமியின் வாயைக் கிளறி அவரை வகையாக மடக்க வேண்டும் என்று சீதாப்பாட்டி அன்றொரு நாள் பேச்சுக்குப் பிடித்தாள். அப்புசாமி அவங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு வெளியே அப்போது கிளம்பிக்கொண்டிருந்தார்.

“என்ன ப்ரொப்யூமா சார்? எவ்வளவு தூரம்?” என்றாள் சீதாப்பாட்டி.

அப்புசாமி, “என்ன, என்ன சொன்னாய்” செளக்கியமா சார் என்றா கேட்டாய்?” என்றார்.

“ஹெள இஸ் யுவர் கீலர்!” என்றாள் சீதாப்பாட்டி .

அப்புசாமி அசட்டுச் சிரிப்புடன், காலர் வைத்த சட்டையெல்லாம் நான் போட்டுக்கொண்டால் நன்றாகுமா, இந்த வயசான காலத்தில்?” என்றார்.

“ரியலி? அந்த மாதிரி விவஸ்தை கூட உண்டா உங்களுக்கு?” என்றவள், “உங்களுக்கா வயதாகிவிட்டது? டோனிகர்ட்டஸ் மாதிரி இருக்கிறீர்கள்?” என்றாள்.

“எனக்கு இப்போது உன்னோடு சண்டையடிக்க நேரமில்லை. ஓர் இடத்துக்கு அவசரமாகப் போக வேண்டும்.” என்று கைத்தடியை வீசிக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.

சீதாப்பாட்டி அவரை அறியாமல் பின்தொடர்ந்து சென்றாள். நாலு தெருதள்ளி அப்புசாமி மல்லிகைப் பந்தல் வீட்டு வாசலில் நின்றார். சுற்றுமுற்றும் பார்த்தவர், கதவை லொட்டு லொட்டு என்று தட்டினார். கதவு மின்னல்  வேகத்தில் திறந்து மூடப்பட்டது. அப்புசாமி அந்த வீட்டுக்குள் மறைந்தார்.

அன்று இரவு எட்டு மணிக்குச் சாப்பிட வந்து இலையில் அமர்ந்த அப்புசாமிக்கு, சுண்டைக்காய்க் கூட்டு, பாகற்காய் கறி, வேப்பம்பூ ரசம் (வெல்லம் போடாதது) இப்படிப் பரிமாறினாள் சீதாப்பாட்டி.

அப்புசாமி, “என்ன இன்றைக்கு எல்லாம் ஒரே கசப்பு?” என்றார்.

சீதாப்பாட்டி அமைதியாக “டேஸ்ட் டிபர்ஸ்!” என்றாள்.

அப்புசாமி, “என்ன முணுமுணுக்கிறாய்? எனக்குக்கூட நீ பயப்படுகிறாயா என்ன?” என்றார்.

“உங்களுக்குப் பயப்படவில்லை. ஆனால் டாம், டிக் அண்ட் ஹாரிக்குப் பயப்படுகிறேன். பயப்பட வைத்துவிட்டீர்கள்?” என்றாள் சீதாப்பாட்டி.

“நீ சொல்வது ஒன்றும் புரியவில்லையே?” என்றார் அப்புசாமி.

“டைம் வரும்போது புரிய வைக்கிறேன்.”

அன்று இரவு அப்புசாமி நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டதும் சீதாப்பாட்டி மெதுவே எழுந்தாள். அடுத்த அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள். மேஜை விளக்கைப் போட்டுக் கொண்டாள். ஒரு கால் காகிதத்தை எடுத்தாள். பேனாவைத் திறந்தாள். ஏராளமான கால் காகிதங்களை எழுதித் கிழித்தபின் கடிதம் ஒன்று எழுதிவைத்தாள். சாதாரணக் கடிதமா? காதல் கடிதம் சீதாப்பாட்டி தன் ஆயுளில் எழுதும் முதல் கடிதம்? கடிதத்தை எழுதி முடித்த பிறகு சீதாப்பாட்டிக்கு உடம்பு வியர்த்துக் கொட்டியது. ‘அம்மாடி! லெள லெட்டர் எழுதுவது என்பது நாட் அன் ஈஸி ஜோக் போலிருக்கிறதே’ என்று எண்ணிக் கொண்டாள். கடிதத்தை உறையில் போட்டு, மேலே, திரு. அப்புசாமி, 23, பவசாமி தெரு, கீழ்ப்பாக்கம்’ என்று எழுதினாள். வாசல் கதவை ஓசைப்படாமல் திறந்துகொண்டு தெருக்கோடிக்குச் சென்று அங்கிருந்த தபால் பெட்டியில் அந்தக் கணமே போஸ்ட் செய்துவிட்டுத்தான் தூங்கினாள்.

ஞாயிறுதினம். மாலை நேரம். மணி ஆறரை. பூந்தமல்லிப் பெருஞ்சாலையில் பச்சைப் பசேலென விளங்கிய நேரு பூங்காவில் தூரத்தே ஓடும் மின்சார வண்டிகளைப் பார்க்கும் பாவனையாக, முகத்தைப் பூங்காவின் நுழைவாசலுக்குக் காட்டாத நிலையில் ஒரு சிமிட்டிப் பெஞ்சில் ஒரு பெண்மணி ஆவலே உருவாக உட்கார்ந்திருந்தாள் வெய்யிலில். பகலெல்லாம் காய்ந்த சிமிட்டிப் பெஞ்சியின் உஷ்ணத்தையும் பொறுத்துக்கொண்டு அந்த சரிகைப் புடவை மாது அமர்ந்திருந்தாள்.

ஏதோ சமஸ்தானத்தின் ராணியாக விளங்கினவளைப் போன்ற கம்பீரமான மிடுக்கு அந்தத் தோற்றத்தில் இருந்தது. உயர்குலப் பெண்கள் தங்கள் சவரித்தலையைக் காண்பிப்பது உலக மரவு அல்லவன்றோ? அந்த மரபுக்கேற்ப பின்னம் தலையை அந்த மாது போர்த்தியிருந்தாள்.

நேரம் சென்று கொண்டேயிருந்தது. இருள் மெதுவே மெதுவே கவிந்து கொண்டிருந்தது. பூங்காவில் ஜன சந்தடி ஒடுங்கிவிட்டது. முக்காலே மூன்று வீசம் பேர்கள் எழுந்துபோய் விட்டாகள். இன்னமும் அந்த மாது மட்டும் எழவில்லை. சற்றைக்கொரு தரம் நாசூக்காகப் பூங்காத நுழை வாயிலைப் பார்ப்பதும் திரும்பிக் கொள்வதுமாக இருந்தாள்.

இப்படிப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி திடுமென்று தன் அருகே ஒலித்த இருமலினால் தூக்கி வாரிப்போடத் திரும்பினாள். இருமியவன் ஓர் இளம் வாலிபன். இருபத்திரண்டுக்கும் உட்பட்ட பிராயத்தினன். அவன் சிமிட்டிப் பெஞ்சு மாதுக்குச் சில கஜதூரம் தள்ளி மரியாதையுடம் நின்றான். பிறகு “பெரியம்மா! தாங்கள் யார்? ஏன் நெடுநேரமாக இங்கேயே உட்கார்ந்து கிடக்கிறீர்கள்? இருட்டிவிட்டதே பயமில்லையா உங்களுக்கு?” என்றான்.

அவனை ஏறிட்டுப்பார்த்த மாது, “மைன்ட் யுவர் பிஸினஸ்!” என்றாள் கோபமாக.

வாலிபன் உடனே, “ஓ! ஸாரி. நான் நல்லதற்குச் சொன்னேன். மன்னியுங்கள். ஒரு சின்ன உதவி தாங்கள் எனக்குச் செய்வீர்களா? உங்களை என் மகன் மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். இதே இடத்தில் என்னை ஒரு நபர் சந்திப்பதாக இருந்தார். நீங்கள் இருக்கவும் அந்த நபர் பயந்து வரவில்லை. நான் காத்திருந்ததும் வீணாகிவிட்டது. தயவு செய்து இனிமேலாவது இந்த மாதிரி காதலர்களுக்கு இடைஞ்சலாக, பூங்கா, கடற்கரை இதுமாதிரி இடங்களில் இடித்துவைத்த பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து விடாதீர்கள். அதற்குக் கோவில் குளம் இருக்கிறது. அங்கே போக வேண்டும் தெரிந்ததா?” என்றான்.

அந்த மாது-சீதாப்பாட்டிதான்-பரபரப்பும் அதிர்ச்சியும் அடைந்தவளாக, “நீங்கள் நீங்கள் சந்திப்பதாக இருந்த நபர் பெயர்…”

“மீனாட்சி! நான் போன பிறகு வந்தாலும் சொல்லுங்கள். இவ்வளவு நேரம் வீரராகவன் வீணே காத்திருந்து மனமுடைந்து சென்றான் என்று கூறுங்கள்…” சீதாப்பாட்டிக்குத் தலை சுற்றியது.

‘நான் என் கணவர் அப்புசாமியை இங்கே வரவழைத்து அவர் மானத்தை வாங்க வேண்டுமென்று அவருக்கு வழக்கமாகக் கடிதம் எழுதும் மீனாட்சி எழுதியதுபோல் ராத்திரி யெல்லாம் சிரமப்பட்டுக் கடிதம் எழுதினால் எவனோ ஒரு வாலிபன் வந்ததுடன் எனக்கும் ‘அட்வைஸ்’ செய்து விட்டுப் போய் விட்டானே, ‘கிழவி நீ! கோயில் போ, குளம் போ’ என்று!

‘கணவர் ஏன் வரவில்லை? கணவருக்கு எழுதின கடிதம் இவனுக்கு எப்படிக் கிடைத்தது? நான் எழுதின கடிதம் என் மூக்கையே உடைத்து விட்டதே!’ என்று பலவாறான சிந்தனையுடன் மனம் நொந்து சீதாப்பாட்டி நடக்கவும் திராணியற்றவளாக மெதுவே நடந்து வீட்டை அடைந்தாள்.

வீட்டில் மாடி அறையிலிருந்து கலகலப்பான சிரிப்பும் பேச்சும் அரட்டையும் அவளை அதிர்ச்சி கொள்ளச் செய்தது. அப்புசாமி அஷ்டாவதானியும் அல்ல. விகடக்காரரும் அல்ல. ஒரே நேரத்தில் இத்தனை பேச்சுக்கள், சிரிப்புகள், அதுவும் ஆண் மாதிரி பெண் மாதிரி அவரால் எப்படிப் பேச இயலும்? ஆகவே அப்புசாமி தவிர யாரோ அன்னியர்கள் வந்திருக்கிறார்கள்?

சீதாப்பாட்டி மாடியை அடைந்தாள். அப்புசாமி நடுநாற்காலியில் நடுநாயமகாக விளங்க, அவர் எதிரே ஒரு யுவதியும், பூங்காவில் சீதாப்பாட்டிக்குப் புத்திமதி அருளிய வாலிபனும் அமர்ந்திருந்தார்கள்.

“ஓ! நீங்கள்…நீங்கள் மிஸஸ் தாத்தாவா! ரொம்ப மன்னித்துக் கொள்ளுங்கள் பாட்டி…பார்க்கில் ஏதேதோ….” என்று வாலிபன் மன்னிப்புக் கோரினான்.

அப்புசாமியும் அசடு சொட்ட, “ஹிஹி இவர்கள், இவர்கள்…” என்று தடுமாறினார்.

சீதாப்பாட்டி, “ப்ளீஸ்! தடுமாறாமல் சொல்லி முடியுங்கள். அயம் டெட்டயர்ட்!” என்று சோபாவில் உட்கார்ந்தாள்.

“என்னை நீ கண்டிக்கக் கூடாது. திட்டக் கூடாது. அப்படியானால் சொல்கிறேன்,” என்ற அப்புசாமி கூறினார்:

“சுமார் ஒரு மாதத்துக்கு முன், நான் ஹைரோடு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தேன். திடீரென்று என்னமோ ஐஸ்கிரீம் ஆசை வந்துவிட்டது. ஓட்டலில் நுழைந்தேன். ‘குடும்பத்தினர் மட்டும்’ என்ற ரூமில்தான் இடமிருந்தது. பரவாயில்லையென்று நுழைந்து விட்டேன். உள்ளே இந்த இளசுகள் இரண்டும் பாவம் ஒரே டம்ளரில் பாதம்கீர் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. என்னைப் பார்த்ததும் பேயைப் பார்த்ததுபோல் அலறிப் போய்விட்டார்கள். காரணம், இநத்ப் பயலின் அப்பாவை எனக்குத் தெரியும். நாலாம் தெருவிலிருக்கிறாரே சேஷசாயி! அவர்தான். ‘தாத்தா! ப்ளீஸ்! வீட்டில் சொல்லிவிடாதீர்கள். எங்கள் காதல் அவ்வளவுதான்’ என்று பையன் அங்கேயே என்னிடம் சரணாகதி ஆகிவிட்டான். நான் குழந்தைகளுக்கு அபயம் அளித்தேன். ‘நானே கல்யாணத்துக்குக்கூட ஏற்பாடு செய்கிறேன், கவலைப்படாதீர்கள். என்னால் முடிந்த உதவியும் உங்களுக்குச் செய்திறேன். தாராளமாகக் கேளுங்கள்,’ என்றேன். கடிதத் போக்குவரத்துக்குத்தான் பெரும் பாடாயிருக்கிறது?’ என்றார்கள். நான் யோசனை சொன்னேன். ‘ஏன் பயந்து சாக வேண்டும். என் பெயருக்குக் கடிதத்தைப் போடுங்கள் இரண்டு பேரும். நான் தபால்காரன் வேலை செய்கிறேன்’ என்று ஒரு வேடிக்கைக்குச் சொன்னேன். நிஜமாகவே போட ஆரம்பித்து விட்டார்கள். நானும் அவர்களுக்குப் பட்டுவாடா செய்து வந்தேன். முதல் கடிதம் ஒன்று மட்டும் நான் எங்கேயோ கோட்டை விட்டுவிட்டேன். அப்புறம் கடைசியாக ஒரு தரம்…அவள் எழுதவேயில்லை என்கிறாள்; இவன் எழுதினால், பார் என்கிறான். அது ஒரு தகராறு. அதைத் தீர்த்துக் கொண்டிருக்கிறேன். நீயும் காதலர்களை ஆசீர்வாதம் செய்…”

“பெஸ்ட் விஷஸ்!” என்று சீதாப்பாட்டி ஆசீர்வதித்தாள். நிம்மதியாக, “உங்கள் இரண்டு பேர் கல்யாணம் நடக்க நானும் என்னால் ஆனதைச் செய்கிறேன்.” என்றாள் மகிழ்ச்சியோடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *