ஓம் ஹண்ட்ரடாயின நமஹ!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 51,143 
 
 

எனது கிராமத்தில் ‘ஐயம்மார்’ எனப்படும் இனம் அறவே இல்லாத காலம் அது. பள்ளிக்கூடம் நடத்தி வந்த எங்கள் வீடு ஒன்றுதான் ‘அய்யிர் வூடு’.

ஒரு தினம் ஜவ்வு மிட்டாய் தாத்தா அப்பாவிடம் தயங்கித் தயங்கி ஏதோ கேட்டார்.

உலக்கை மாதிரி தடிமனாக இருக்கும் ஒரு நீளத் தடியில், வண்ண வண்ண நிறத்தில் ஜவ்வு மிட்டாய் சுற்றப்பட்டிருக்கும்.

தடியில் அங்கங்கே சலங்கை கட்டியிருப்பார். மிட்டாய் தாத்தா அவற்றை சிலுங் சிலுங்கென்று ஆட்டியபடி பாடவும் பாடுவார். ஒரு பைசா கொடுத்தால் மிட்டாய்த் தடியிலுள்ள ஜவ்வு மிட்டாயை லாகவமாக இழுத்து நொடியில் ஒரு கைக்கடியாரமாகவோ, தேளாகவோ, பூவாகவோ பின்னி அதைக் காசு கொடுத்த சிறுவனின் மணிக்கட்டில் அழகாகக் கட்டிவிடுவார்.

சிறுவன் மணி பார்க்கிறதென்றால் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். தின்னறது என்றால் கடித்துத் தின்னலாம். நக்கி நக்கி மற்றப் பையன்களுக்குப் பொறாமை ஏத்தலாம்.

அந்த மிட்டாய்க் கிழவர் என் அப்பாவிடம் “சாமி! நீங்க மாட்டேன்னு சொல்லக்கூடாது. சும்மனாச்சிக்கும் நுழைஞ்சிட்டு வந்திங்கன்னாக்கூடப் போதும்,” என்று திரும்பத் திரும்பக் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பா தன் மறுப்பைக் கூறிக்கொண்டிருந்தார். “பழனிப்பா, அத்தனை தூரமெல்லாம் என்னாலே வரமுடியாதுடா. உடம்பும் சரியில்லே” என்றார்.

மிட்டாய்க்காரக் கிழவர், “ஒங்க பள்ளூடத்து வாசல்லேயே இத்தனை வருசமா மிட்டாயி வித்துக்கிட்டிருக்கேன். வந்துதான் பாரேன், நான் கட்டின வூட்டை. நீ உள்ளே வந்து தண்ணி தொளிச்சியானா எனக்கு நல்லாருக்கும்.”

அப்பா சங்கடப்பட்டார். ஜவ்வு மிட்டாய்க்காரர் வேறு ஒரு வேண்டுகோளை வைத்தார். “நீ வராட்டி போகுது. உங்க பசங்கள்ள யாரையாச்சும் அனுப்பேன்.”

அப்பா தயங்கியவாறு, “பயங்களையா? ஒண்ணும் தெரியாதுடா அவனுகளுக்கு,” என்றார்.

“பரவாயில்லை சாமி. உள்ளே வந்து தண்ணி தொளிச்சாப் போதும்.”

அப்பா என் அண்ணனை அனுப்பி வைத்தார். அவன் மூணாங்கிளாஸ் படித்துக் கொண்டிருந்தான். எட்டு வயசு.

அப்பா அவனை மிட்டாய்க்காரத் தாத்தாவுடன் அனுப்பியதில் அவனுக்கு மிகப் பெருமை. “ஜாக்கிரதையாகப் போய்விட்டு, ஜாக்கிரதையாக வா,” என்று சொல்லி அனுப்பினார்.

மகா கர்வத்தோடு என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிட்டண்ணன் மிட்டாய்த் தாத்தாவுடன் அவரது கிராமத்துக்கு வெய்யிலில் நடந்தே போனான்.

எனக்கு மகாப் பொறாமை. “கிட்டண்ணா, நானும் வரேண்டா,” என்றேன்.

அவன், “உனக்கெல்லாம் ஒண்ணும் தெரியாது,” என்று அலட்சியப் படுத்திவிட்டுப் புறப்பட்டான்.

ஜவ்வு மிட்டாய்த் தாத்தாவின் வீட்டில் ஏக மரியாதை அவனுக்கு. “வாங்க குட்டி அய்யிரே” என்று உபசாரம்.

அண்ணன், “நான் என்ன பண்ணணும்?” என்றான்.

மிட்டாய்த் தாத்தா, “தண்ணி தொளியுங்க குட்டி அய்யிரே!” என்று சொல்லி, ஒரு செம்பு தண்ணீரில் ஒரு மாவிலைக் கொத்தைப் போட்டு அவனிடம் பய பக்தியாகத் தந்தார்.

அண்ணன் தண்ணி தெளித்தான். மிட்டாய்த் தாத்தா, “அய்யிரே! எதுனா மந்திரம் சொல்லித் தண்ணி தொளியிங்கோ… ஊமையனாட்டம் தொளிக்கிறியே” என்றார்.

அண்ணனுக்கு ரோஷமாயிருந்தது. ஆனால் எந்த மந்திரமும் தெரியாது.

ஆனால் குறுக்கு வழியிலே சட்டெனறு அவன் மூளை வேலை செய்தது. மந்திரம் தயார். “ஓம் ஹண்ட்ரடாயின நமஹ, ஓம் டூ ஹண்ட்ரடாயின நமஹ, ஓம் த்ரீ ஹண்ட்ரடாயின நமஹ.” அவனுக்குத் தெரிந்த அளவு ‘நைன்ட்டி நைன் ஹண்ட்ரடாயின நமஹ’ வரை சொல்லிக்கொண்டே மாவிலையால் புது வீட்டுக்குள் தண்ணீர் தெளித்து முடித்தான் கிட்டண்ணா.

கற்பூரம் ஏற்றி முடித்தான். பிறகு புறப்படத் தயாரானான். “இருங்க சாமி! தட்சிணை வாங்கிக்கலையே,” என்று ஒரு தாம்பாளத்தில் ஐந்து ரூபாய்ப் பணம், தேங்காய் மூடிகள், ஒரு டஜன் பழம், வெற்றிலை பாக்கு வைத்து எல்லாவற்றையும் ஒரு பையில் போட்டு கிட்டண்ணாவிடம் கொடுத்து அனுப்பினார்.

வீட்டுக்கு வந்த கிட்டண்ணா பெருமையாக “மந்திரமெல்லாம் கூடச் சொன்னேன்,” என்றான்.

அப்பா ஆச்சரியத்துடன், “மந்திரமா?” என்றார்.

சிரித்தவாறு கிட்டண்ணா, “ஆமாம் ஒன் ஹண்ட்ரடாயின நமஹ, டூ ஹண்ட்ரடாயின நமஹ என்று நைன்ட்டி நைன் ஹண்ட்ரடாயின வரை சொல்லித் தண்ணீர் தெளித்தேன். ஐந்து ரூபாகூடக் கொடுத்தார்” என்றான்.

“அந்த ரூபாய் எங்கே?” என்றார் அப்பா.

“இதோ” என்று பெருமையுடன் காட்டினான். அடுத்த நிமிஷம் அப்பா தன் பெரிய கையைச் சுழற்றி அவன் கன்னத்தில் பளார் என்று ஓர் அறை விட்டார்.

“கழுதை! தெரியலேன்னா தெரியலேன்னு சொல்லாம, அந்தத் தாத்தாவை ஏமாற்றிட்டு வந்து பெருமையாகச் சொல்லிக்கிறியா? எல்லாத்தையும் கொண்டு போய் மிட்டாய்த் தாத்தாகிட்டே கொடுத்துட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு வா… போ.” என்றார். அண்ணன் கன்னம் பழுத்துப் போயிற்று.

வெளியே ஏகப்பட்ட வெய்யில். “டேய்! சுந்து, நீயும் வர்ரியாடா,” என்றான் பரிதாபமாக.

பாவமாயிருந்தது. கூடவே போனேன். அனாவசியமாப் பொறமைப்பட்டோமே அண்ணனைப் பார்த்து என்று நினைத்துக் கொண்டேன்.

“ஏண்டா, ஹண்ட்ரடாயின நமஹ” என்று இப்பக்கூடக் கேலி பண்ணுவேன் டாக்டர் அண்ணாவை – அதாவது கிட்டண்ணாவை.

அந்தக் காலத்தில் தமிழகத்தில் பெரும்பாலானோர் இப்படித்தான் அய்யர் வந்துதான் புது வீட்டில் கிரகப்பிரவேசம் செய்யவேண்டும் என்று நினைத்து அய்யர்களை வீட்டு விசேஷங்களுக்கு வற்புறுத்தி அழைப்பார்கள்.

பின்னாலில் பெரியார் தயவால் இப்படிப்பட்ட வழக்கங்கள் குறைந்து போயின.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *