ஓடிப்போனக் கடவுள்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 14, 2014
பார்வையிட்டோர்: 27,524 
 
 

நான் எப்படி இங்கு வந்தேன் என்பது இன்னும் விளங்கவில்லை.இது ஒரு பெரிய கோவில். மிக உயர்ந்த மதில் சுவர்கள். நிச்சயம் ஏதோ ஒரு மிகப்பெரிய அரசனால் கட்டப்பட்ட கோவிலென்பது திண்ணம். சிற்றரசர்கள் பெரியக் கோவில்களை உருவாக்கியதில்லை.பிரகாரம் முழுக்க ஏதேதோ குட்டிக் கடவுள்களின் சிதிலமடைந்த சிலைகள். அனைத்தையும் கடந்து நான் மூல ஸ்தானத்தை நோக்கி சென்றேன்.

மூலமே என் நோக்கு
வெருச்சோடிக் கிடந்த கோவில்
காணவில்லை கடவுள்;

இது என்ன கோவில் என்பது விளங்கவில்லை. கற்பக்ரஹத்தில் மூலவர் சிலையை காணவில்லை. நிலையில் கடவுளின் பெயர் எழுதி இருக்கிறதா என்பதை உற்று நோக்கினேன். கும் இருட்டு. சட்டைப் பையில் இருந்த லைட்டரை எடுத்து பற்ற வைத்தேன். உள்ளே கடவுள் இல்லை என்பது உறுதியானதும் அப்படியே சிகரட்டையும் பற்ற வைத்தேன்.

சுருள் சுருளாய்
பறந்தன
புகைகள்.

நிலை வாசற்ப்படியில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது

“பன்னாரி அம்மன் துணை “

ஏதோ சிந்தனையோடு திரும்பினேன். சிகரெட் வெளிச்சத்தில் தெரிந்தார் நந்தி பகவான்.

‘நிச்சயம் இது அம்மன் கோவிலன்று. அம்மன் கோவிலில் எப்படி வரும் நந்தி’ மீண்டும் நிலைக் கதவை நோக்கினேன்.

“பன்னாரி அம்மன் துணை
சென்னை “

இது நிச்சயம் சென்னை இல்லை. நேற்று இரவு நான் திருச்சியில் உறங்கியது வரை ஞாபகம் இருக்கிறது. விழித்துப் பார்த்தல் இங்கு நின்றுக் கொண்டிருக்கிறேன். குழப்பத்துடன் அரை நொடி மீண்டும் அந்த நிலையை நோக்க, விளங்கியது அனைத்தும் தெளிவாக.

“பன்னாரி அம்மன் துணை
உபயம்:
சாந்தா பச்கியசாமி- சென்னை “

வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள இயலவில்லை. அடக்கவும் நான் முயற்சிக்கவில்லை. இவ்வளவு பெரிய கோவிலை கட்டிய மன்னனே ஒரு சிறு கல்வெட்டில்தான் தன் பெயரை செதுக்கிக் கொள்கிறான். ஆனால் ஒரு சிறு நிலைக் கதவைக் செய்துக் கொடுத்துவிட்டு தன் பெயர், தான் வணங்கும் கடவுளின் பெயர், தன் ஊரின் பெயர் என செதுக்கிக் கொள்ளும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதை பார்க்க மனம் தாளாமல்தான் கடவுள் மறைந்துவிட்டரோ என்றென்னும்போது வந்து சேர்ந்தார் கோவிலின் குருக்கள். அவர் முகத்தில் நிலவிய தேஜஸ் என்னை அறியாமலேயே என் சிகரட்டை தரையில் போட்டு மிதிக்க வைத்தது.

குருக்கள், “வாடா அம்பி. உனக்காகத்தான் காத்திண்டிருந்தேன் ” என்னை நன்கறிந்தவர் போல் அவர் பேசத் தொடங்கினார்.

“நீ வருவ, இந்த கோவிலை உன் பொறுப்பில் விட்டுட்டு போய்விடலாமென்றுதான் இத்தனைநாள் காத்திண்டிருந்தேன்” எனக்கு ஒன்னும் விளங்கவில்லையெனினும் அவரை மறுத்துப் பேச நா எழவில்லை.

“சாமி…மூலவர் எங்க !” பதற்றத்தோடு வினவினேன் நான்.

“நோக்கு தெரியாதா…! தமிழ்ல மந்திரம் ஓதுரேனு நாலு சிவனடியார்கள் வந்தா…சுவாமி ஓஓஓஓஓடிட்டார் !” என்றார் ஒரு நமட்டு சிரிப்பை வெளிப் படுத்தியவாறே.

எனக்கு நறுக்கென்றிருந்தது.

“ஐயரே! சொல்றேன்னு கோபப் படாதீங்க. நான் பெரியார்வாதி தான். ஆனால் பிராமணர்கள எதிர்ப்பவன் கிடையாது.இருந்தாலும் நீங்கள் பேசுறது கொஞ்சம் திமிராதான் இருக்கு”

மீண்டும் வெளிப் பட்டது நமட்டு சிரிப்பு.

சற்று ஆக்ரோசமாகவே கத்தினேன்.” என்ன…ஐயரே! என்ன திமிர் உனக்கு. இது தமிழ்நாடு, தமிழர் பூமி. இங்கு தமிழ் மொழியில் அர்ச்சனை செய்வது தானே நியாயம்.கடவுள் இருக்காரோ இல்லையோ. ஆனால் மக்களுக்கு புரியாத மொழியில் எதுக்கு அர்ச்சனை !”

இப்போது கம்பீரமாக பேசினார் குருக்கள், “அடே அம்பி! நான் எங்கடா சொன்னேன் தமிழ்ல அர்ச்சனை வேண்டாம்னுட்டு ? எங்கவாளே பல பேர் அர்த்தம் தெரியாமதான் மந்திரம் ஓதுறா…தமிழ்ல தான் ஒதனும்னா அர்த்தம் புரிஞ்சு தமிழ்லயே ஓதிட்டுபோறோம்..அதை விடுத்து எங்களை விரோதி மாதிரி நடத்தினா…. ?”

அவர் பேச்சில் நியாயம் இருப்பதாக நான் உணர்ந்ததை அவர் அறிந்துக் கொண்டார் போலும். “இதோ இப்ப நான் பாடுறேன் கேளு “

“கருநட்ட கண்டனை அண்ட…” உருக உருக பாடினார் தேவாரத்தை…நானும் அதில் மயங்கி நின்றேன் சில மணி நேரங்கள்.

கடவுள் இருக்கார் இல்லார் என்பது பல நேரங்களில் தேவையற்ற விவாதம். அவர் இருக்காரோ இல்லையோ, ஆனால் அவர் மீது பாடல்கள் பாடிய பலரும் வெறும் கடவுள் தொண்டர்களன்று. அவர்கள் தமிழ் தொண்டர்கள். எத்தனை ஆயிரம் அருமையான தமிழ் பாடல்களை பாடியுள்ளனர். நாத்திகம் பேசுபவர் கடவுளை வெறுத்துக் கொள்ளட்டும். ஆனால் தமிழ் மொழியை வெறுப்பது தமிழ் இலக்கியத்தை அழிக்க முயற்சிப்பது மடத்தனம்.

இன்னும் எத்தனை அருமையான சமணப் பாடல்கள் தமிழிலுண்டு.சைவ சமையம் தழுவிய பலரும் எத்தனை அருமையான சமணத் தமிழ் பாடல்களை அழித்து விட்டனர்..!

இன்னும் இன்று நாத்திகம் பேசும் மாமனிதர்கள் பலர் எத்துனை அருமையான தமிழ் பக்தி இலக்கியங்களை அழிக்கவும் ஒழிக்கவும் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றனர்.

நக சுத்திக்கு பயந்து
கையையே வெட்டிக் கொள்கிறது
ஒரு கூட்டம்…

அவர் பாடிய பன்னிரு திருமுறைகளை கேட்க கேட்க உருகியது என் மனம். பெருங்கியது கண்ணீர்.

எம்மொழியாம் செம்மொழி தமிழ்மொழி,
பாரில் அதற்க்கு நிகர் வேறெந்த மொழி !

கண்ணீரை துடைத்தவாறே வினவினேன்,”மூலவர், ஓடிடார்னு சொன்னீங்களே! கேலியோ !”

” இல்லடா..நிஜமாதான் …

சிவாச்சாரியார்கள் நான்கு பேர் கை கோர்த்து வந்தார்கள். ஒருத்தர் சொன்னார் ‘இறைவா..திருசிற்றம்பழம்…’

எல்லாருக்கும் ‘ழ’ தான் தடுமாறும். இவருக்கு ‘ல’ வே தடுமாறுது. எனக்கு அதை பார்த்ததும் சிரிப்ப அடக்க முடியலை. நானும் உங்க கூட சேர்ந்த பாடட்டுமானு கேட்டேன்.

‘ஏய்! பிராமணா வெளிய போடா’னு நாலு பேரும் எண்ணத் துரத்திட்டா. நானும் வெளிய நின்று வேடிக்கைப் பார்த்தேன்.

இரண்டாம் சிவாச்சாரியார் சிவனை நோக்கி பாடினார் “பாழ் அபிசேகம் செய்யவா ! என் மன்னா “

‘என்னது பாழ் அபிசேகமா ! அடியாரே அது பால் அபிசேகம்’னு நான் சொன்னேன். அவர் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் ‘பாழ்’ என்றார். சிவனே என்று கிடந்த சிவன் கண்ணில் தாரை தாரையா கண்ணீர் வர ஆரமிச்சிடுத்து. இருக்காதா பின்ன !

தமிழை கொலை செய்தால் பொறுத்துக் கொள்வானோ வெள்ளையங்கிரி நாதன்.

ஆனால் அதை பார்த்த அந்த மூன்றாவது சிவாச்சாரியார் சொன்னார் ‘ஐயகோ ! இறைவன் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் ‘ அதைக் கேட்டதும் மூலவர் சிலையிலிருந்து இன்னும் அதிகமாக வழிந்தது, கண்ணீர். இன்னும் கொஞ்சம் போயிருந்தா ஆண்டவன் ரத்தக் கண்ணீரே வடித்திருப்பார்.அந்த நேரம் பார்த்து அந்த நாலாவது சிவாச்சாரியார் சொன்னார் …..”

பேச்சை நிறுத்திவிட்டு சிரித்தார் குருக்கள். கபடமற்ற சிரிப்பு. அவர் சிரித்து முடிக்கும் வரை காத்திருந்தேன் நான். சிரித்துவிட்டு, மீண்டும் பேச்சை தொடர்ந்தார்…

“அந்த நாலாவது மனிதர் பாவம். இறைவன் மீது பாசம் ரொம்ப அதிகம் வச்சுட்டார். தன்னை தானே திருநாவுகரசரென்று நினைத்துக் கொண்டு இறைவனை ஆட்கொண்டருள வேண்டினார்…ஆனால்…(மீண்டும் சிரித்தார் குருக்கள்)…ஆனால் அவர் வேண்டியது வேறு…’இறைவா நீ என்னைக் கொல்வாயாக…கொல்லா விடில் நான் உன்னை கொல்வேனாக…இறைவா நீ என்னைக் கொல்வாயாக…கொல்லா விடில் நான் உன்னை கொல்வேனாக…’ தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்டு பாடிக் கொண்டே இருந்தார். நானும் வெளியே இருந்து, ‘அது ‘ள்’ அடியாரே ‘ல்’ அன்று’னு சொல்லிக்கொண்டே இருந்தேன். அவர் என் பக்கம் செவி சாய்க்காமல் தொடர்ந்து ஆனந்தக் கூத்தாடினார்.’இறைவா நீ என்னைக் கொல்வாயாக…கொல்லா விடில் நான் உன்னை கொல்வேனாக…’

திடிர்னு இடி இடிக்கிற மாதிரி சத்தம். இந்த கோவிலே ஆட்டம் கண்டுடுத்து. நான் தடுக்கி கீழ விழுந்து மயங்கிட்டேன்.எனக்கு என்ன நடந்தது என்றே புரியல. சில நிமிடம் கழித்து நினைவு வந்தது. நான் வேகமா கற்ப கிரகம் நோக்கி ஓடினேன். அங்க கடவுள் இல்லை.

ஆனால் நான்கு சிவனடியார்களும் கண்ணைத் திறக்காமலேயே கண்ணீர் வழிய பாடிக்கொண்டிருந்தர்கள். ‘இறைவா நீ என்னைக் கொல்வாயாக…கொல்லா விடில் நான் உன்னை கொல்வேனாக…’

வெகு தொலைவில் கடவுள் ஓடிக் கொண்டிருந்தார்,கதறியவாறே,.’அய்யோ.. என்னை கொலை பண்ணுறாங்க..அய்யோ என்னை கொலை பண்ணுறாங்க’….”

2 thoughts on “ஓடிப்போனக் கடவுள்

  1. ஹ்ஹாஹ்ஹா சிரிப்பும் வேடிக்கையாக இருந்தது . ஆனால்இதன் உள்ளர்த்தங்கள் மிகவும் அருமை . …

  2. அருமையான கதை. மெய்மறந்து சிரித்தேன் :-D. ஒரு பிரதி எடுத்து முகநூலில் பதிவிட்டேன். நல்ல வரவேற்பு இருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *