ஐயாயிரம் + ஐநூறு = ஏழரை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 61,605 
 
 

நாளைக்கு மீட்டிங்கில் பேச வேண்டும்.எதைப்பற்றிப் பேசுவது என்று தெரியவில்லை. நகம், பல் மற்றும் பக்கோடாவைக் கடித்தவாறு யோசித்துக் கொண்டிருந்தேன்.யோசிக்க விடாமல் பக்கத்து வீட்டுக்குப் புதுசாய்க் குடி வரப்போகிற குடும்பத்தின் உடைமைகள் லாரியில் வந்திறங்கிய சத்தம்.

சாமான்கள் இறங்க ஆரம்பித்தவுடனேயே ஜன்னல் பக்கத்திலிருந்து பார்த்தவாறு பக்கவாத்தியம்போல் கமென்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்தாள் என் பெண்டாட்டி.

ஐயாயிரம்மூன்று கட்டில்கள், இரண்டு ஃப்ரிஜ்கள் என்று ஏகப்பட்ட பொருட்களாம். மூன்று பேர் காரில் இறங்கியதற்கு இத்தனை சாமான்கள் அதிகமாம். குட்டி யானை போதுமாம். வாசலில் பெல் அடித்ததோ, நான் ரன்னிங் காமென்ட்ரியிலிருந்து தப்பித்தேனோ. “என்னங்க… உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க…”வியப்பாயிருந்தது.பின்னே? இப்படி “யாரோ” வெல்லாம் தேடி வர விட்ருவாளா? வந்தவுடனே மூன்று பிறவிச் சரித்திரத்தைத் தெரிந்துகொண்டல்லா என் வரைக்கும் விஷயம் வரும்?

“ஆரம்பி… வந்தவர் எந்த ஊரில் பிறந்தார்? மனைவியின் சொந்த ஊர் எது? உடன் பிறப்புகள்? என்ன படிச்சிருக்கார்? பிடித்தம் போக எவ்ளோ சம்பளம்?”“போங்க உங்களுக்கு எப்பவும் கேலிதான்…” என்று மற்ற கதைகளில் வரும் மனைவிகள் நாணப்படுவார்கள்.

நான் தாலி கட்டிய அபயா உங்க ஊகத்துக்கு அப்….பாற்பட்டவள்.சதி வியூகம் சைஸுக்குக் குரலைத் தாழ்த்திக்கொண்டாள். “இதபாருங்க… நான் சொல்றதை கவனமாய்க் கேளுங்க…”“நான் என்றைக்கு கவனமில்…”

“ஷ்ஷு.. தபாருங்க… நீங்கதான் ஜோசியர் ஜபர்தஸ்த்லிங்கம்…”

“அபயா நான் எழுத்தாளர் பைரவன்…”

“க்கும். நாளைக்கு எவன் வீட்டு ஹாலிலோ நடக்கும் மீட்டிங்ல பேசறதுக்காக ஒட்டடையைப் பார்த்துக்கிட்டு இன்ஸ்பிரேஷன் தேடறீங்க… ‘தட்னாம்பாரு கையை’ன்னு நாளைக்கு வந்து ரோஜாமாலையை உதுத்துக்கிட்டு சொல்லப்போறீங்க…”

“அபயா…”“இதபாருங்க… இதுவரைக்கும் எழுதியதில் என்ன சம்பாரிச்சிருப்பீங்க?”நான் பதில் சொல்லவில்லை. ரிஸ்க்காகிவிடும். இதுவரை நான் என்னென்ன தொகைகள் சொன்னேன் என்று எனக்கே நினைவில்லை. அவள் நடமாடும் கம்ப்யூட்டர். ஏகப்பட்ட மெமரி. ஒவ்வொரு முறை ஒவ்வொரு பதில் சொன்னால் நாளைக்குப் புத்தூர்க் கட்டுதான்.

“ஆக, நீங்க இனிமேல் ஜோசியர்…”

“என்னடீ சொல்ற நீ?” எனக்கு வயிற்றில் புளிக்காய்ச்சல் கிண்டியது.

“ஆமாங்க. உங்களைத் தேடிக்கிட்டு ஒருத்தர் வந்திருக்காரு…”

“நிஜத்தைச் சொல்லுடீ… என்னைத் தேடிக்கிட்டா ஜோசியர் வீட்டைத் தேடிக்கிட்டா?”

“இதபாருங்க. நீங்களும் பிரபலம் இல்லை. அந்த ஜோசியரும் பிரபலமில்லை. அதனால…’’

“வந்த அறிவாளி வாசல்ல போர்ட் பார்க்கலையா?”

“பார்த்துட்டார். எழுத்தாளர் பைரவன் என்பவர் உங்கண்ணா…”

“அடிப்…”

“வாங்க… உங்களுக்கு ஜோசியம் கொஞ்சம் தெரியும்னு எனக்குத் தெரியும். நீங்க அந்த புக்ஸ் படிக்கறதை கவனிச்சிருக்கிறேன்…”

இறைவா. எப்படிப் புரிய வைப்பேன்? ஏதாவது ஒரு நட்சத்திரத்தின் பெயரை அடுத்த கதையில் நாயகிக்கு வைக்கலாம் என்று தாத்தாவின் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அவ்ளோதான். அதற்கு இவ்ளோ பெரிய தண்டனையா?

என் பதிலுக்கெல்லாம் காத்திருக்கும் சொத்தையான ரகம் இல்லை அவள்.“ஒரு ஜாதகத்துக்கு ஐநூறு ரூபாய்னு சொல்லிட்டேங்க. ரொம்ப சீப்புன்னு சந்தோஷப்படறாரு…’’ஹாலுக்குள் போனாள். மஞ்சள் தண்ணீர் தெளித்து மாலை போடாத குறையாய்த் தொடர்ந்தேன்.

“இதோ வராருங்க ஜோசியரு…” என்று புலிகேசிக்குக் கட்டியம் கூறுவது போல் சொல்லியவள் புலிக்கண்களாலேயே ஒரு பாராகிராஃப் பேசிவிட்டு நகர்ந்தாள்.

பலி ஆடு மாதிரி, போய் உட்கார்ந்தேன்.“என் பிள்ளைக்குக் கல்யாணமாகி ஆறு வருஷமாச்சுங்க. இதுவரை ஒரு புழு பூச்சிகூட இல்லை…’’

“கவலைப்படாதீங்க. இவர் இருக்காரு. உங்க பிரச்னை தீர்ந்துடும்…” இரட்டை அர்த்த வசனம் மாதிரிச்சொன்னவள் என்னைப் பார்த்தாள்.

இந்த டயலாக் நான் பேசவேண்டியதாம்.

புழு, பூச்சி வருவதற்கு நான் என்ன கால் கிலோ கத்திரிக்காயா வாங்கிக் கொடுக்க முடியும்?!

“ஜாதகத்தை எடுத்துப் பாருங்க…” என் மனைவி அவசரப்படுத்தினாள்.எடுத்துப் பார்த்தேன். கைகள் நடுங்கின. கட்டங்களெல்லாம் வட்டங்களாகத் தெரிந்தன.ஒரு கட்டத்தில் குறுக்காக அடித்திருந்தார்கள். ஏதோ கான்ஸல் செய்திருக்கிறார்கள் போலும் என்று நினைத்தேன். அதில் ‘ல’ என்று போட்டிருந்தது. லதா என்று கிரகம் ஏதும் உள்ளதா என்ன?

அவள் ஏதோ கண் காமிக்கிறாள். நான் என்ன என்பது போல் கண்களாலேயே கேட்டேன். நான் பரதநாட்டியமெல்லாம் கற்காதவன். அமெச்சூராகக் கண்களை பதிலுக்கு உயர்த்தி ராஜேந்திரகுமார்த்தனமாக ஙே என்று விழித்தேன்.நான் தேறாத கேஸ் என்று அவள் தெரிந்துகொண்டு பதினேழு வருஷங்களாகின்றன. இது அவளே அடிக்கடி சொல்லும் பெருமித வாக்கியம்.

டிபன்ஸ் தரப்பில் விளையாடத் தீர்மானித்தவள்போல் “அவர் ஜாதகத்தைத் தலைகீழாக வைச்சுப் பார்க்கறாரேன்னு சந்தேகப்படாதீங்க. பல்வேறு கோணத்தில் அலசறாரு…’’ என்றாள்சுத்தம். இதைத்தான் கண்களால் சொல்லிக்கொண்டிருந்தாளா?

“ஜாதகம் என்னங்க சொல்லுது?”

“இருங்க இருங்க. அது என்ன சொல்லுதுங்கறதெல்லாம் இவரை மாதிரி ஜோசியருங்களுக்குத்தான் காதில் விழும்…” எனக்கு இப்போது இருண்டதெல்லாம் பேய். ஒருவேளை நான் ஹியரிங் எயிட் போட்டிருப்பதை சூசகமாகச் சொல்கிறாளோ?

நான் பேசமாட்டேன் என்று புரிந்ததால் அவளே தொடர்ந்தாள்: “அந்த பாஷையை உங்களுக்கு மொழி பெயர்த்துச் சொல்றதுக்குத்தான் இவரை மாதிரி ஜோசியருங்கல்லாம் இருக்காங்க…” என்றவாறு முழியைப் பெயர்ப்பதுபோல் எனக்கு மட்டும் புரியும்படி பல்கடித்து முழித்தாள்.

அது எந்த பாஷையில் என்ன சொல்லியதோ ஏதோ… நான் சட்டென்று ஜாதகத்தை வைத்துவிட்டு எழுந்து உள்ளே போனேன்.

“என்னங்க?” கல்லூரி மாணவியின் பின்னால் ஓடும் இளைஞன் போல் ஓடி வந்து கேட்டாள்.மேனகையைப் பார்த்த விஸ்வாமித்திரர் போஸில் திரும்பிக்கொண்டேன். “நான் மாட்டேன்டீ… உன்னால் ஆனதைப் பார்த்துக்கோ. நேற்றுதான் போலி டாக்டர்களைக் கைது செய்தாங்க…”

“அவங்களுக்கு சர்ட்டிபிகேட்டெல்லாம் வேணும். இதுக்கு எதுவும் வேணாங்க…”ஒரு பத்து நிமிஷம் கோர்ட் சீன் மாதிரி வாதம்… பிரதிவாதம்… பித்தம் எல்லாம் நடந்தது.அவள் சட்டென்று ஹாலுக்குள் சென்றாள்.

“கண்டிப்பா குழந்தை குட்டி பிறக்குமாம்…’’ என்றாள்க்கும். கங்காருவா என்ன குட்டி பிறப்பதற்கு? மனசுக்குள் உறுமினேன். மனசுக்குள் மட்டும்தான் முடியும் என்னால். உரக்க உறுமினால் இரை தேடத் தெருத்தெருவாய் அலைய வேண்டியதுதான்.‘‘உங்களை ‘ஹ’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கற டாக்டர் கிட்ட போகச்சொன்னார்…’’அடி கேடி. சாத்தியம் இல்லாத எழுத்தைச் சொல்லியிருக்கிறாளே. ஓ… நான் சொன்னபடி நீ செய்யாததால்தான் குழந்தை பிறக்கவில்லை என்று வாதிட வசதியாய் இருக்கும் என்றா?ஆனால், வந்தவர் துள்ளினார்.

“டாக்டர் ஹசீனா கிட்டதாங்க போயிக்கிட்டிருக்கா…”கதை என் கையை மீறிப் போய்க்கொண்டிருந்தது. இன்னும் என் சார்பில் ஏதாவது பேசுவதற்குள் நான் பாய்ந்து உண்மையைச் சொல்லிவிட்டால் என்ன? அதிகபட்சம் இரண்டு நாள் சாப்பாடு கிடைக்காது. அவ்ளோதானே?

ம்ஹூம். மீறியேவிட்டது.“உங்ககிட்ட எப்டி நேராச் சொல்றதுன்னு தயங்கறாருங்க. சில பரிகாரங்க செய்யணுமாம். ஹோமம் செய்யணும். அதை உங்க வீட்ல வெச்சு செஞ்சா வீரியம் அதிகம். அவரே வேறு இடத்தில் செய்துடறாராம். அதுக்குத் தனியா ஐயாயிம் ரூபாய் குடுக்கச் சொன்னாரு…”

”அவ்ளோதானா…’’ என்று ஆச்சர்யப்பட்டார் அந்த முட்டாள் மனிதர். இவள் அந்தக் காசுக்கு ஓமம்கூட வாங்க மாட்டாள்.

இப்படி ஆச்சர்யமெல்லாம் படுவார் என்று தெரிந்திருந்தால் அவள் பத்தாயிரமாய்க் கேட்டிருப்பாள் என்று என் பெண்டாட்டி முகத்தைப் பார்த்தபோது தோன்றியது.“எதுக்கும் இருக்கட்டும்னு ஐயாயிரம் கொண்டு வந்திருக்கேங்க. கொடுத்துடறேன். அரும்பாடு பட்டு உங்க அட்ரசைக் கண்டுபிடிச்சு வந்திருக்கேன்…” அவர் பர்சைத் திறக்கையில்…

மூன்று பேர் அடங்கிய அந்தக் குடும்பம் என்ட்ரி கொடுத்தது.“வணக்கங்க… நான் ஜோசியர் ஜபர்தஸ்த்லிங்கம். நாங்க பக்கத்து வீட்டுக்குப் புதுசாய்க் குடி வந்திருக்கோம். கிளாட் டு மீட் யூ… யாராச்சும் எங்க வீட்டைத் தேடிக்கிட்டு வந்தால் அவங்களுக்குச் சொல்ல வசதியா இருக்குமேன்னு அறிமுகப்படுத்திக்க வந்தேன்…” என்றார்.முதலில் ஜோசியர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதா அல்லது அவரைத் தேடி வந்தவர் காலில் விழுவதா என்று புரியாமல் நான் மறுபடியும் ‘ஙே’!

– 22 Nov 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *