ஏப்ரல் சுவாமிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 16, 2022
பார்வையிட்டோர்: 4,344 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பள்ளிக்கூட நாட்களில் ஏப்ரல் ஒண்ணாம் தேதி வந்துவிட்டால் போதும். என்னமோ அறுவடைக்கு அரிவாளோடு தயாராகும் விவசாயி போல வீட்டை விட்டு ஏப்ரல் ஃபூல் ஏவுகணைகளோடு கிளம்பும் கிச்சா, தவழும் குழந்தையில் ஆரம்பித்து தள்ளாடும் தொண்டுக் கிழங்கள் வரை தராதரம் பார்க்காமல் கண்ணில் பட்ட இலக்குகளைக் குறிபார்த்து, அதில் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பவர்களின் முதுகில் ஆவேசமாக இங்க்கை உதறித் தெளித்து அவர்களது டெரிலின் சட்டையைத் தெப்பமாக்குவான்.

அதேபோல் கைக்கு எட்டும் அளவுக்கு வசதியாக அருகில் வந்து ஈஷியபடி புறமுதுகுக் காட்டுபவர்களுக்கு இங்க் தெளித்தலோடு சேர்த்து இலவச இணைப்பாக ‘ஏப்ரல் ஃபூல்’ என்று பொறிக்கப்பட்ட பாதி உருளைக் கிழங்கால் ரகசிய ரப்பர் ஸ்டாம்ப் குத்தி, ஏப்ரல் முதல் தேதியைக் கொண்டாடுவான்.

இந்த ஏப்ரல் ஃபூல் ஆட்டத்தை அங்கீகரிப்பதோடு நில்லாமல், அதற்கு அனுசரணையாக எச்சுமிப் பாட்டி மெனக்கெட்டு, அழியாத தேர்தல் மசி டெக்னிக்கில், கண் சிமிட்டும் ஊதாப்பூ. கத்திரிப் பிஞ்சு ரசம், கனகாம்பரச் சாறு போன்றவற்றோடு சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி இங்க் தயாரித்துக் கொடுப்பாள். தனது தாத்தா கொடுத்த பன்னீர் சொம்பு சைஸ் ஃபவுண்ட்டன் பேனாவில் அந்த இங்க்கைத் தளும்பத் தளும்பப் போட்டு நிரப்பிக் கொள்வான் கிச்சா. ஒரு காலத்தில் கிச்சாவால் இங்க் ஸ்நானம் செய்யப்பட்டவர்கள் சிலர், இன்றும் அதற்கு அடையாளமாகப் பின்கழுத்து, புறங்கை போன்ற பகுதிகளில் மேப்பில் தெரியும் இலங்கை, லட்சத்தீவுகள் வடிவங்களில் நீலநிற மச்சங்களோடு திருவல்லிக்கேணியில் நடமாடுவதைப் பார்க்கலாம். பால் பாயிண்ட் பேனா கண்டுபிடிக்கப்பட்டதே கிச்சாவின் இந்த ஏப்ரல் தாக்குதலைத் தடை செய்வதற்காகத்தான் என்று பாதிக்கப்பட்டவர்கள் பேசிக்கொள்ளும் அளவுக்குக் கிச்சா அவர்களது எல்லா கலர் சொக்காய்களையும் நீலநிற யூனிஃபார்ம்களாக்கி இருக்கிறான். இவ்வளவு ஏன், ஒருமுறை சென்னைக்கு விஜயம் செய்த எலிசபெத் ராணி பீச் வழியாக காரில் வேகமாகப் பவனி செல்லும்போது, வேடிக்கை பார்ப்பது போல பாவ்லா காட்டி, பளிச்சென்று கில்லாடி வேலையாக வேகமாக செக்யூரிட்டிக்குக் கூடத் தெரியாமல் தனது பேனாவை உதறி, மகாராணியின் ஸ்கர்ட்டில் ஒரு சின்ன நீலப்புள்ளியைத் தெளித்து, எலிசபெத் ராணியையே ஏப்ரல் ஃபூலாக்கியிருக்கிறான் கிச்சா!

மேலும் கிச்சாவின் உருளைக்கிழங்கு ‘அ.ஊ. எஸீல்’ அதிரடித் தாக்குதலுக்குப் பயந்து எப்படியோ கஷ்டப்பட்டு கழுத்தைத் திருப்பி முதுகில் ஒரு கண் வைத்துப் பார்த்தபடி கறாராகச் செல்லும் முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்களை, எச்சுமிப் பாட்டி கூப்பிட்டுத் திண்ணையில் உபசாரமாக அமரவைத்து, பேச்சுக் கொடுத்து அவர்களைப் பலவீனமாக்கும் சமயத்தில், ஒளிந்து கொண்டிருந்த தூண் மறைவிலிருந்து நரசிம்மாவதார வேகத்தில் கிச்சா ஓடிவந்து ‘ஏப்ரல் ஃபூல்’ என்று ‘வெற்றிவேல் வீரவேல் பாவனையில் உரக்கக் கத்தியபடி, அவர்களுக்கு முதுகில் வாயுப் பிடிப்பு ஏற்படும் அளவுக்கு உருளைக்கிழங்கு ரப்பர் ஸ்டாம்ப்பால் ஓங்கி கும்மாங்குத்துக் குத்திவிட்டு ஓடிவிடுவான்.

இப்படி பள்ளி நாட்களில் ஏப்ரல் ஒண்ணாம் தேதியை இங்க், உருளைக்கிழங்கு என்று ஸ்மால் ஸ்கேலில் கொண்டாடிய கிச்சா, இப்போதும் அந்த வக்கிரப் பழக்கத்தை விடவில்லை.

கடைசியாக சென்ற ஆண்டு ஏப்ரலில் கிச்சாவின் இந்த ‘ஏ.எஃப்.’ விளையாட்டு வினையில் முடிந்தது.

இந்தியாவில் இன்று முட்டாளாகும் வாய்ப்பு பல வழிகளில் சுலபமாகக் கிடைத்தாலும், சாமியார்களிடம் பலி ஆடு போல மக்கள் ஏமாறுவதைக் கண்டுகொண்ட கிச்சா, போன வருட ஏப்ரல் முதல் தேதிக்குப் போலிச்சாமியார் வேடம் போட்டு சென்னை மாநகரத்தையே தன் வீட்டுக்கு வரவழைத்து விபூதி பிரசாதப் பொட்டலத்தில் ஏப்ரல் ஃபூல் எழுதிக் கொடுத்து அவர்களை முட்டாளாக்க முடிவு செய்தான்.

சாமியார் அந்தஸ்தைப் பெறுவதற்காக ஜனவரி மாதத்திலேயே ஆயத்தங்களை ஆரம்பித்த கிச்சா, அந்த மாதம் முழுவதும் கலைந்த தலை, கிழிந்த வேட்டியோடு ‘காயமே இது பொய்யடா’ பார்வையோடு ஒரு கோர்வை இல்லாத தாறுமாறான பேச்சோடு திரிய ஆரம்பித்தான். வேளைகெட்ட வேளைகளில் கோயில், கண்ணம்மாபேட்டை மயானபூமி போன்ற இடங்களில் கஷ்டத்தைப் பார்க்காமல் கண்ணை மூடி நிஷ்டையில் அமர்ந்து ஜபம் செய்வது போல நடித்துத் திருவல்லிக்கேணிவாசிகளிடம் தனது இமேஜை வளர்த்துக் கொள்ளப் படாதபாடு பட்டான்.

கோயில் சக்கரத்தாழ்வார் சந்நிதியில் கும்பலான சமயத்தில் டிஸ்கோ வெறியில் சாமியாடிவிட்டுப் பிறகு சாந்தமாக அமர்ந்து,

‘பகுநந்தமுகுந்தன பாஷ்பயூர யதாயதா கிருஷ்ணாய மோகினி பக்தவத்சலாய பேரி ஸேவித பாகிமாம்…’ என்று வாய்க்கு வந்ததைக் கண்களில் தாரைதாரையாக நீர்பெருகக் கூறிவிட்டு, வேடிக்கை பார்ப்பவர்களை விகல்பமில்லாமல் பார்த்து, ‘ஒண்ணுமில்லை குழந்தைகளா, பெருமாளோட சித்த நேரம் சமஸ்கிருதத்துல சம்பாஷிச்சேன்’ என்று கூறி, பிப்ரவரியிலேயே தன் ஏப்ரல் இமேஜுக்குப் பூர்வாங்கமாகப் பீடிகைகள் போட்டான். இதன் பலனாக, ‘சந்தேகமில்லாமல் இவன் சித்தபுருஷன்தான்’ என்று திடமாகப் பலர் அங்கீகரித்து காலில் விழுந்து கும்பிட்டுக் கற்பூரம் காட்டினார்கள்.

உச்சகட்டமாக நாடகக் குழுவைச் சேர்ந்த மயிலாப்பூர் குட்டை கோபியை ஆபீஸுக்கு லீவு போடச் சொல்லி, பாலயோகி மேக்கப்பில் நான்கு நாட்கள் திருவல்லிக்கேணியில் நடமாட விட்டான். சாதாரணமாகவே ஓரளவுக்குக் குருவாயூர் கிருஷ்ணரைப் போலத் திவ்ய தேஜஸில் இருக்கும் குட்டை கோபி, பாலயோகி வேடத்தில் ஜொலித்துப் பலரைப் பக்தர்களாக வசீகரித்தான். ஏற்கெனவே கிச்சாவால் ஒரு வாரம் ரிகர்சல் கொடுக்கப்பட்ட குட்டை பாலயோகி கோபி, கிச்சா காட்டிய சிலர் வீடுகளில் எதேச்சையாக நுழைந்து அவர்களிடம், ‘நீ இன்னார், உனக்கு இங்கெல்லாம் மச்சம் உண்டு, உனக்கு பிரமோஷன் கிடைக்கும், ஓடிப்போன உன் மகன் உடனே வருவான்…’ என்று அவர்களது பர்சனல் விஷயங்களைப் பிட்டுப்பிட்டு வைக்க, எல்லோரும் பிரமித்துப் போனார்கள்.

மூன்றாவது நாளன்று சந்தடியான மார்க்கெட்டில் பாலயோகி கோபி தடாலென்று அங்கு வந்த கிச்சாவின் காலில் விழுந்து, சொல்லிக் கொடுத்தபடி, ‘கிச்சாஜி, என்னை ஷமிக்கனும். என்னோட அகந்தை அகன்றது. மன்னிக்கணும். நீங்க இருக்கிற இடத்துல இந்த அல்பயோகி நான் வந்தது மகா பாவம். இந்தாங்கோ…’ என்று கூறிவிட்டுத் தன் கையில் இருந்த தண்டம், கமண்டலத்தைக் கிச்சாவிடம் ஒப்படைத்து விட்டு, ‘கிச்சாஜி, நான் வந்த காரியம் முடிஞ்சுடுத்து…’ என்று இருபொருள்படப் பேசிவிட்டு ஓடினான். மகானைப் பார்ப்பது போல, மார்க்கெட்டே கிச்சாவைப் பார்த்தது. பாலயோகியே பாராட்டிய கிச்சாவை ‘கிச்சாஜி’ என்று பவ்யமாக அழைத்து, அந்தஸ்து அளித்தார்கள்.

மார்ச் மாதக் கடைசியில் ‘கிச்சாஜி’ ஆன கிச்சா, தன் வீட்டுத் திண்ணையில் இன்னமும் உறுமல் லேசாகக் கேட்கும் அளவுக்கு முழுத் தலையோடு அப்படியே பதப்படுத்தப்பட்ட, பக்தர் தந்த ஒரு பிரமாண்டமான புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்து, ஏப்ரல் முதல் தேதி தரிசனத்துக்குத் தயாரானான்.

முதல் தேதி. கும்பலை மெய்சிலிர்க்க வைக்கத் தனது நண்பன் மாஜிக் மகாதேவனின் டிரெய்னிங்படி, தொளதொள ஜிப்பா, கையில் ஒளித்து வைக்கப்பட்ட விபூதி, குங்குமப் பொட்டலங்களை அந்தரத்தில் எடுப்பது போல வரவழைத்துத் தந்து, வீட்டுக்குப் போய்ப் பிரித்தால் தாங்கள் முட்டாளானதைப் புரிந்து கொள்ள, பொட்டலத்தில் ‘ஏப்ரல் ஃபூல்’ வாசகத்தை எழுதி வைத்தான்.

அங்கேயே பிரித்த ஒரு சிலர் ‘ஏப்ரல் ஃபூல்’ வாசகத்தை ‘அஹம் பிரம்மாஸ்மி’ போன்ற கிச்சாஜி ஸ்டைல் மகா வாக்கியமாக எடுத்துக்கொண்டு, கிச்சா எதிரிலேயே பத்மாசனத்தில் அமர்ந்து, அவனை எழுந்திருக்கவிடாமல் செய்து பகல் முழுவதும் பரவசமாக ஜபித்தார்கள். அதில் ஒரு சிலருக்கு ‘ஏப்ரல் ஃபூல்’ ஜபத்தினால் நிஷ்டை கூடி ஜோதி தெரிய ஆரம்பித்தது.

குழந்தை பிறக்காத குறையைக் கூறி ஒப்பாரி வைத்து கிச்சா காதில் ரகசியமாக அழுத தம்பதியின் தலைவேதனை தாங்காமல் ‘தீர்க்க கர்ப்பிணி பவ’ என கிச்சா ஆசீர்வதிக்க, வேண்டிக் கொண்ட அந்தப் பெண்மணி அந்தக் கணமே அங்கே வாந்தியெடுக்க, கிச்சாஜியின் மகிமையைக் கண்டு கும்பல் ஆரவாரம் செய்தது. ஒரு கட்டத்தில் விபூதிப் பொட்டலம் ‘ஸ்டக் அப்’ ஆகி மாட்டிக்கொண்டு கிச்சா திண்டாட அதற்குள் விபூதி கேட்டு வந்தவர் ‘சாமீ, மன்னிச்சுடுங்க. உங்களை நம்பாம சோதனை பண்ண வந்தேன். அதைச் சூசகமா புரிஞ்சுண்டு விபூதி தராம என்னை ஓரங்கட்டிட்டீங்களே…’ என்று கிச்சாவின் பாதத்தில் முட்டி அழுதபடி விரல் நகங்களைப் பேர்த்தெடுக்க ஆரம்பிக்க, வேதனை தாங்காமல் கிச்சா கையை வேகமாக ஆட்ட, ஓட்டை டையான டெலிபோன் பூத்திலிருந்து தட்டினால் கொட்டும் சில்லறை போல பொட்டலம் பொட்டலமாக விபூதி கொட்டியது.

‘சாமி மன்னிச்சுட்டா…’ என்று சந்தோஷத்தில் ஊளையிட்டபடி, சதிர்தேங்காய் பொறுக்குவது போல விபூதிப் பொட்டலங்களை எடுக்க நான்… நீ… என்று கிச்சா மீது கும்பல் விழுந்து புரண்டு அவனைத் துவம்சம் செய்தது.

‘இந்த வேஷம் ஏப்ரல் ஃபூலாக்க நான் ஆடிய நாடகம்’ என்று பல தடவை சொல்ல முயன்ற கிச்சாவை, கும்பல் பேசவிடாமல் ‘ஏப்ரல் சுவாமிஜி’ என்று புதிய நாமகரணம் செய்து அழைக்க ஆரம்பித்துவிட்டது.

ஆரம்ப அதிர்ஷ்டமாக, முதல் இரண்டு நாட்கள் கிச்சா உளறிக் கொட்டியதெல்லாம் உண்மையாகப் பலித்ததால், சாமியார் கோலத்தைத் தொடர வேண்டிய துர்ப்பாக்கியம் அவனுக்கு ஏற்பட்டது.

எவ்வளவு மறுத்தும் காதில் போட்டுக் கொள்ளாமல் பக்தர்கள் தாங்கள் வேண்டிக் கொண்ட பிரார்த்தனையை நிறைவேற்றும் வெறியில் கிச்சாவை அமர வைத்து ஆசை தீர பால், தயிர், பஞ்சாமிர்தம் என்று குடம் குடமாக அபிஷேகம் செய்ததில், பத்தே நாட்களில் கிச்சாவின் தலைமுடி ப்ளீச் செய்யப்பட்ட துடைப்பக்கட்டை போல கலர் கலராக விறைத்து நின்றது.

‘சாமிக்குப் பசியே கிடையாது’ என்று பக்தர்களே முடிவு செய்து, கிச்சாவைக் கொலைப் பட்டினியாக நிற்க வைத்து, காபிக்குப் பதிலாகத் துளசி தீர்த்தமும் சாம்பார், ரசம், மோர் சாப்பாட்டுக்குப் பதிலாக அவல், பொரி மாவு, பச்சையாக அகத்திக்கீரை என்ற மெனுவை வலுக்கட்டாயமாகத் தந்து கிச்சாவை நாலே நாளில் கிழிந்த பாயாக்கினார்கள்.

தினமும் இரவு இரண்டு இரண்டரை மணிக்குத் தரிசனம் முடிந்து கிச்சாவைத் தூங்க அனுமதிக்கும் பக்தகோடிகள், அவன் முதல் கொட்டாவி விட்டு முடிப்பதற்குள் அவன் பெயரில் லோக்கல் தமிழ்ப் புலவர் எழுதிய சுப்ரபாதத்தைக் கர்ணகடூரமான குரலில் பாடி . எழுப்பிப் பிராணனை வாங்கினார்கள். நாள் ஆக ஆக, வாசலில் கட்டை கட்டி க்யூவில் விடும் அளவுக்குக் கும்பல் ஏற, கிச்சா பொதுச் சொத்தானான்.

இதற்குள் காசி, பத்ரிநாத் என்று இரண்டு மாத யாத்திரை போய்த் திரும்பிய எச்சுமிப் பாட்டியோ இந்தக் கூத்தையெல்லாம் பார்த்துவிட்டு முதலில் கோபப்பட்டாலும் வாசலில் பக்தர் ஒருவர் வைத்த உண்டியலில் குவியும் சில்லறை வேகத்தைப் பார்த்துப் பூரித்துப் போய், உட்கார்ந்த இடத்தில் சம்பாதிக்கும் பேரனை மனசுக்குள் வாழ்த்தி விட்டு, மற்றவர்களுக்காக அவளும் அவனை ‘மகான்’ என்றே அழைக்க ஆரம்பித்தாள்.

பக்தர்களின் இம்சை தாங்காமல் உயிர் போகும் நிலையில் ஒரு நாள் இரவு எச்சுமிப் பாட்டிக்கு மட்டும் சொல்லிவிட்டுத் தப்பியோடி வந்து, என் வீட்டில் பத்துப் பதினைந்து நாட்கள் தலைமறைவாக இருந்தான் கிச்சா. பிறகு ஓரளவு தைரியம் வரவழைத்துக் கொண்டு, தாடி மீசையை வழித்துவிட்டு படு ஸ்டைலாக – அடையாளம் தெரியாத அளவுக்கு டிரஸ் செய்து கொண்டு திருவல்லிக்கேணிக்குப் போன கிச்சா, அங்கு சுவர்களில் ஒட்டிய பழைய போஸ்டர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

போஸ்டரில்… தனது கிச்சாஜி கோலத்துப் படம். கும்பலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் உண்டியல் கெலெக்ஷனைப் பராமரிப்பதற்காகவும் எச்சுமிப் பாட்டி வேலைக்கு அமர்த்திய சேப்பாக்கம் ஜபமணி, ‘மகா சமாதிக்காக வடக்கே சென்றுவிட்ட கிச்சாஜி இனி வரமாட்டார் என்பதை வருத்தத்துடன் பக்தகோடிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்ஙனம்…’ என்று தன் பெயரைப் போட்டு, மேற்கொண்டு தகவல்களுக்குத் தண்டையார்பேட்டை அட்ரஸ் ஒன்று தந்திருந்தான்.

ஆவலோடு தண்டையார்பேட்டைக்குப் போன கிச்சா, அங்கு ஒரு ஓட்டு வீட்டுத் திண்ணையில் ‘ஜூனியர் கிச்சாஜி சுபமணிஜி’ என்று போர்டு போட்டுக் கொண்டு பக்த நூறு’ களுக்கு விபூதி, குங்குமம் தந்து, அவர்களை ‘மே (May)’ முட்டாளாக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, இந்த மக்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று புரியாமல், முதல்முறையாக அவனையும் அறியாமல் மகரிஷி கணக்கில் சிரிப்பைச் சிரித்தான்.

– மிஸ்டர் கிச்சா, முதற் பாதிப்பு: 2004, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *